திங்கள், 4 ஜனவரி, 2016

இந்தியாவில் கல்லா கட்டும் கூகுள்,பேஸ்புக்

வளர்ந்து வரும் நாடுகளில், இணைய இணைப்பு கிடைக்காத மக்களுக்கு, அவர்களின் வாழ்வியல் நடைமுறைக்கான சில சேவைகளை, இலவசமாகத் தரும் திட்டத்தினை, பேஸ்புக் நிறுவனம் Internet.org என்ற பெயரில் அமல்படுத்தி வருகிறது. 

இந்தியாவில், இதன் பெயரை அண்மையில் Free Basics என மாற்றியது. 

வளரும் நாடுகளில் இயங்கும் மொபைல் சேவை நிறுவனங்களைத் தன்னுடன் இணைந்து செயல்படுமாறு, பேஸ்புக் அழைத்து வருகிறது. 

அந்த வகையில், இந்தியாவில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் மொபைல் சேவை வாடிக்கையாளர்கள், இலவசமாக இந்த சேவையைப் பெற்று வருகின்றனர். 


தற்போது, இந்திய அரசின், தொலை தொடர்பு விவகாரங்களைக் கண்காணிக்கும் ட்ராய் என்னும் அமைப்பு (Telecom Regulatory Authority of India (TRAI)), இந்த திட்டத்தினைப் பின்பற்ற ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளது. சென்ற டிசம்பர் 23ல் இது அறிவிக்கப்பட்டுள்ளது. 

”அனைவருக்கும் சமமான இணைய சேவை” என்னும் அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது என தெற்காசிய நாடுகளில், பரவலாக, பேஸ்புக் திட்டத்திற்கு எதிர்ப்பு வந்ததால், இந்த தடையினை ட்ராய் விதித்துள்ளது. Free Basics திட்டமானது, நல்லெண்ண நோக்குடன் இலவசமாக மக்களுக்கு வழங்கப்படும் சேவைத் திட்டமே என்று கூறி வரும் பேஸ்புக் நிறுவனம், இந்தியப் பயனாளர்களை, ட்ராய் அமைப்பிற்கு, இந்த திட்டத்திற்கு ஆதரவாக செய்தி அனுப்பும்படி பலவகையான விளம்பரங்கள் வழியாகக் கேட்டுக் கொண்டுள்ளது.
 இந்தியாவில், கூகுள் தேடல் வேகம் அதிகரிக்கப்படும். குறிப்பாக, மிக மெதுவாகச் செயல்படும் இணைய இணைப்பிலும் இது சாத்தியமாகும். 
இணைய தளங்கள் தேடலின் வழியாக, கூகுள் தேக்கி வைத்துக் கொண்டிருக்கும் முடிவுகள் மூலம், இணையப் பக்கங்கள் சில நொடிகளில், நம் தேடலுக்கான விடைகளைத் தருவது உறுதி செய்யப்படும். இந்தியாவில், இணையம் தேடுபவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் 2ஜி அலைவரிசை இணைப்பினையே பயன்படுத்தி வருகின்றனர். 3ஜி அலைவரிசையிலும், 2ஜி வேக இணைப்பே இருப்பதாகக் கூறுகின்றனர். 
இந்த இரு வகையினர் குறைகளைத் தீர்க்கும் வகையில், புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்தியாவில், 100 ரயில்வே நிலையங்களில், மக்கள் பயன்படுத்த இலவசமாக வை பி இணைப்பு வழங்கும் திட்டத்தினை கூகுள் அமல்படுத்த இருக்கிறது. 
ஜனவரி முதல் மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு, பின்னர் மற்ற நிலையங்களில் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்படும். இதற்கென, கூகுள், இந்திய அரசின் Railtel நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே அமைத்துள்ள பைபர் ஆப்டிக் நெட்வொர்க் வலைப்பின்னல் இதற்கெனப் பயன்படுத்தப்படும். 
தினந்தோறும் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளுக்காக, ட்ரெய்ன்களில் பயணம் மேற்கொள்ளும் வர்த்தகர்களுக்கு, இந்த இலவச வை பி பேருதவியாக இருக்கும்.

கூகுள் நிறுவனத்தின், ஸ்மார்ட் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்ட் இயக்கத்தில், உடனடி மொழி பெயர்ப்பு வசதிக்கான செயலி செயல்படுத்தப்படும். 
இந்த திட்டமும் 2016ல் நடைமுறைக்கு வரும். ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில், ஐகான் ஒன்றைத் தட்டி, மக்கள் தாங்கள் விரும்பும் இந்திய மொழியில் டெக்ஸ்ட் அமைக்க முடியும். பயனாளர்கள், இதற்காகத் தாங்கள் பயன்படுத்தும் செயலிகளை விட்டு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. 
தொடக்கத்தில் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் இடையே இயங்கும் இந்த செயலி, படிப்படியாக மற்ற இந்திய மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

 யு ட்யூப் பயனாளர்கள், இனி விடியோ ஒன்றை இடையே நிறுத்திப் பின்னர் பயன்படுத்தலாம். 
குறிப்பிட்ட யு ட்யூப் பைல், அதற்கான தேக்ககத்தில் தேக்கி வைக்கப்படும். இதற்கென கூகுள் 'pause to buffer' என்னும் திட்டத்தினைத் தரும். 
இந்தியாவிலிருந்து யு ட்யூப் தளத்தில் ஏற்றப்படும் பைல்கள் தற்போது இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதாகவும், பயனாளர்கள் யு ட்யூப் தளத்தினைப் பயன்படுத்தும் நேரம் 150% அதிகரித்துள்ளதாகவும், கூகுள் அறிவித்துள்ளது. 
இது மற்ற நாடுகளின் பயன் நேர சராசரியைக் காட்டிலும் மிக அதிகமானது.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நகரில், கூகுள் நிறுவனத்தின் புதிய பெரிய அலுவலகம் ஒன்று அமைய இருக்கிறது. பொறியியல் மற்றும் வர்த்தக நிர்வாக மேலாண்மை படித்தவர்கள் பலருக்கு இங்கு வேலை வாய்ப்புகள் தரப்படும். 

இந்தியாவில் இயங்கும் 30 பல்கலைக் கழகங்களில் படிக்கும் பொறியியல் மாணவர்களில், 20 லட்சம் பேருக்கு, மூன்று ஆண்டுகளில், ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான புரோகிராம் எழுதுவதில் பயிற்சி தரப்படும். இ த்திட்டம் இந்தியாவின் National Skill Development Corporation of India என்னும் அமைப்புடன் செயல்படுத்தப்படும்.

கூகுள் மேப்ஸ், இந்தியாவைப் பொறுத்தவரை, இணைய இணைப்பின்றியே கிடைக்கும். வழி காட்டலில், ஒவ்வொரு திருப்பமும் கவனத்தில் கொள்ளப்படும்.
 கூகுள் மேப்ஸ் செயலியில், இந்தியா அதன் உள்ளூர் வழி காட்டலில் மூன்றாவது இடத்தைக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 ரூ. 7,999 விலையில், கேண்டி பார் அளவிலான ஸ்டிக் கம்ப்யூட்டர் Asus Chromebit என்ற பெயரில் வெளியிடப்படும்.
 இதன் மூலம், பழைய கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துபவர்கள், குறைந்த செலவில், புதிய கம்ப்யூட்டருக்கு மாறிக் கொள்ள இயலும். 

 கொள்கை அளவில், இந்திய அரசு, கூகுள் நிறுவனம் தன் லூன் இணைய திட்டத்தினைச் செயல்படுத்த அனுமதி அளித்துள்ளது. '
Project Loon' என அழைக்கப்படும் இந்த திட்டம் விரைவில் சோதனை அளவில் மேற்கொள்ளப்படும். வெற்றியாக இயங்குவது உறுதி செய்யப்பட்டவுடன், இது செயல்படுத்தப்படும். இதன் மூலம் இணைப்பினைப் பெற முடியாமல் இருக்கும் கிராமங்களுக்கு, விண்ணில் பறக்கும் பலூன்கள் வழியாக, இணைய இணைப்பு வழங்கப்படும். 
இந்திய அரசின் நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் இணைந்து இது செயல்படுத்தப்படும். 
 ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், அதன் அடுத்த அடுத்த பதிப்புகளை, இனிப்பு மிட்டாய் பெயர்கள் கொண்டு அழைத்து வருகிறது. கப் கேக், டோநட், எக்ளெர், ப்ரையோ, ஜிஞ்சர் ப்ரெட், ஹனி கோம்ப், ஐஸ்கிரீம் சாண்ட்விச், ஜெல்லி பீன், கிட்கேட், லாலிபாப், மார்ஷ்மலாய் எனப் பெயர்களைச் சூட்டியது. அடுத்த பெயர், இந்தியாவில் சுவைக்கப்படும் ஒரு இனிப்பான உணவுப் பொருளின் பெயராக இருக்கும் , ஆங்கில எழுத்து P எனில், அது தென்னிந்திய “பாயசம்” ஆகக் கூட இருக்கலாம் என்று குறிப்பிட்டார். 
என்ன பெயர் வரப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
இவை, கூகுள் நிறுவனத் தலைவர், சுந்தர் பிச்சை தனது இந்திய வருகையின் போது தெரிவித்தவை.
பேஸ் புக்கும், கூகுளும்  வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் இந்தியாவை தங்கள் தொழிலை வளர்க்க தூண்டில் போட்டு வருகின்றனர்.யார்  எவ்வளவு தூரம் வெற்றி பெறப்போகிறார்களோ ?
===========================================================================================

இன்று,
ஜனவரி-04.
கண் பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் எழுத்தினை உருவாக்கிய லூயி பிரெயில் 
பிறந்த தினம் இன்று


சிறுவனாக அப்பாவின் பட்டறையில் விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது ஊசி குத்தி ஒரு 
கண்பார்வை போனது ; 
கொடுமையாக மற்றொரு  கண்ணிலும் பார்வை பரிவுக்கண் நோய் தாக்கப்பட்டு 
போனது . 

மனம் தளர்ந்து போகாமல் இசையை கற்றார் இவர் ; இவரின் ஆர்கன் இசை
ஒலிக்காத தேவாலயங்களே இல்லை என்கிற அளவுக்கு தேறினார் .

பிரெஞ்சு படைகள் இரவில் செய்திகளை புள்ளிகளை கொண்டு பரிமாறிக்கொள்ளும் முறையை
பற்றி கேள்விப்பட்டார் அதையே சில புத்தகங்களை வாசிக்க பயன்படுத்த ஆரம்பித்தார் .
ஆறு புள்ளிகளை கொண்டு தடவி வாசிக்கிற முறையில் தன் கண்ணை குத்திய
ஊசியைக்கொண்டே முறையை உருவாக்கினார் . 

அவர் உயிருடன் இருக்கும் வரை இம்முறை
அமலுக்கு வரவில்லை .அவர் காசநோயால் இறந்து இரண்டு வருடங்கள் கழித்தே அம்முறை
அமலுக்கு வந்தது .


===========================================================================================