ம.ந.கூ+ கே .ந.கூ ,ஒரு சித்தாந்த நெருக்கடி.???

CPI மற்றும் CPI(M) தோழர்களுக்கு இப்படி ஒரு சித்தாந்த நெருக்கடி இதற்கு முன் எப்போதும் வந்ததில்லை. 
அவர்கள் சீனாவை ஆதரிப்பதா..?
 ரஷ்யாவை ஆதரிப்பதா...? 
என்று தங்களுக்குள் குடுமிச்சண்டை போட்டு பிரிந்த போதுகூட இவ்வளவு குழப்பத்தில் இருந்ததாகத் தெரியவில்லை.
 ஆனால் இன்று மிகவும் குழப்பத்திலும், வருத்தத்திலும் உள்ளனர். திராவிட அரசியலுக்கு மாற்றாக ஒரு வலுவான அரசியல் அணியைத் தமிழகத்தில் உருவாக்காமல் விடமாட்டோம் என கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கிய இரண்டு கட்சித் தோழர்களும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தையும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தையும் கூடவே அண்ணன் திருமாவையும் இணைத்து ஓர் உலகப் புகழ்பெற்ற கூட்டணியை உருவாக்கிக் காட்டிவிட்டார்கள்.
ஆரம்பத்தில் ஐவர் அணியாக இருந்து, அதில் இருந்து மனிதநேய மக்கள் கட்சி நைசாக கழன்று கொள்ள, இப்போது மீண்டும் அது ஐவர் அணியாக பரிணமித்துள்ளது. 
நடந்து முடிந்த இந்த பெரும் புரட்சிக்குப் பின்னால் தோழர்களின் செயல்தந்திரம், போர்த்தந்திரம் எல்லாம் ராஜதந்திரமாக நமக்கு காட்சியளிக்கின்றது. ஆனால் கூட்டணி போட்ட சில நாட்களிலேயே தங்களுக்குள் பிரச்சினை வரும் என்று இயக்கவியல் பொருள் முதல்வாதத்தால் காலை மாலை என இரண்டு வேளையும் சித்தாந்தக் குளியல் செய்யும் நம்ம தோழர்கள் எதிர்பார்க்கவில்லை. 
நாகப்பதனி பெரிய சாதியா, இல்லை நாகபதனி பெரிய சாதியா என புலிகேசி பட ஸ்டைலில் மக்கள் நலக்கூட்டணி என்று அழைப்பதா... இல்லை விஜயகாந்த் அணி என்று அழைப்பதா என பெரும் சித்தாந்தக் குழப்பத்தில் தோழர்கள் சிக்கித் தவிக்கின்றார்கள். 
திரும்ப ஒரு முறை மார்க்ஸையும், ஏங்கல்சையும், லெனினையும், மாவோவையும் புரட்டிப் பார்க்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 
ஆனால் கட்சியில் உள்ள நல்லக்கண்ணு, ஜி.ராமகிருஷ்ணன் போன்ற மார்க்சிய அறிஞர்கள் மக்கள் நலக் கூட்டணி என்றுதான் அழைப்போம் என மார்க்ஸ்-ஏங்கல்சை மேற்கோள் காட்டி உறுதியாக சொல்லிவிட்டனர்.
நம்ம அண்ணன் திருமா சற்று தயங்கி அம்பேத்கார் அப்படி எதுவும் சொல்லவில்லை, எனவே எனக்கு விஜயகாந்த் அணி என அழைப்பதில் எந்தக் கெளரவப் பிரச்சினையும் இல்லை என சிம்பிளாக முடித்துக் கொண்டார். 
அடுத்து அந்தக் கூட்டணியில் இருக்கும் வைகோ அவர்கள், இந்திய அரசியலில் மட்டும் அல்லாமல் தமிழக அரசியலிலும் பழம் தின்று கொட்டையை மட்டும் போட்டவர் அல்ல... 
அதையும் தின்று விட்டையையும் போட்டவர். அவர் தற்போது விஜயகாந்த் சேர்ந்த மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போய் இருக்கின்றார். விஜயகாந்த் கூட்டணி என்று அல்ல, பிரேமலதா நலக் கூட்டணி என்று சொன்னால் கூட அவர் கவலைப்பட மாட்டார்.
மாற்று அணி என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் இவர்கள் எந்த வகையில் தற்போது இருக்கும் சீரழிவு அரசியல் கலாச்சாரத்துக்கு மாற்று என்று தான் நமக்குத் தெரியவில்லை. 
ஒரு கட்சியின் கடந்த கால செயல்பாடுகளில் இருந்துதான் அவர்களை நாம் மதிப்பிட முடியும். அப்படி இந்தக் கூட்டணியில் இருக்கும் ஒவ்வொருவரின் கடந்த கால செயல்பாடுகளையும் பரிசீலித்தோம் என்றால் இது ஒரு சரியான கூட்டணிதான் என்பது புலப்படும். 
எந்த வகையில் என்றால் இவர்கள் அனைவருக்கும் ஓர் ஓற்றுமை உள்ளது. அது, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எவ்வளவு கீழ்த்தரமாக வேண்டும் என்றாலும் இறங்கிச் செல்வது.
ம.தி.மு.கவை எடுத்துக்கொண்டால் அந்தக் கட்சியின் தலைவர் வைகோ அவர்கள் ஒரு கடைந்தெடுத்த பிழைப்புவாதி என்பதும், விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக தன்னை பொடாவில் தள்ளிய ஜெயாவிடமே திரும்பப் போய் கூட்டணி வைத்த மானஸ்தர் என்பதும் அனைவருக்கும் தெரியும்.
 மேலும் பாஜகவுடன் பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்து பெரியாரின் கொள்கைகளுக்கு வலிமை சேர்ந்த மாவீரர் என்பதும் , கூடுதலாக சுபாஸ் சந்திர போஸ் உயிரோடு இருப்பதைப் பற்றி அறிந்த, அதை நிரூபிக்கத் தகுதிவாய்ந்த ஒரே இந்தியன் என்பதும் இவரது அரசியலில் நேர்மையையும், பொதுவாழ்வில் தூய்மையையும், இலட்சியத்தில் உறுதியையும் காட்டும்.
விடுதலைச் சிறுத்தைகள் தொல்.திருமாவை எடுத்துக்கொண்டால் அம்பேத்காருக்குப் பின் இந்திய அளவில் அவரது கருத்துக்களை வலுவாக ஓங்கி ஒலிப்பவர் என்ற பெருமையைப் பெற்றவர். 
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் ஞானக்கண்களைப் பெற்றவர்களுக்கு மத்தியில் ராமதாசின் சிரிப்பில் அம்பேத்காரைப் பார்த்தவர். வாடிவாசலில் ‘அடங்க மறு’க்கும் ஜல்லிக்கட்டு மாடுகள் கொல்லப்படுதைப் பார்த்து துடித்துபோகும் அகிம்சைவாதி. 
கொள்கையை விட்டுக் கொடுத்தால் தான் சீட்டு கிடைக்கும் என்றால் எனக்கு கொள்கை தான் முக்கியம் என ‘திருப்பி அடி’க்கும் கருஞ் சிறுத்தை!.
நம்ம தோழர்களைப் பற்றி நாம் சொல்வே தேவையில்லை. அவர்களது வளர்ச்சியைப் பார்த்து ஆலமரமே வெட்கப்பட்டுக் கிடக்கின்றது. தமிழ்நாட்டில் ஒரு தளப்பிரதேசத்தையும் அதற்குத் தலைமை தாங்க ஒரு கார்ல் மார்க்சையும் உருவாக்கத் துடிக்கும் அவர்களது முயற்சி இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. 
‘புரட்சித்’ தலைவரை வைத்து அகில இந்திய அளவில் புரட்சியைக் கொண்டுவரும் அவர்களது முயற்சி வெற்றி பெறுவதற்குள் அவர் மண்டையைப் போட்டுவிட, அடுத்து ‘புரட்சி’த் தலைவியை வைத்து பட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தைக் கொண்டுவந்தே தீரவேண்டும் என களத்தில் இறங்க... அந்த முயற்சியும் அந்நிய சக்திகளால் சீர்குலைக்கப்பட்டது.
 இப்போது கடைசி கட்டமாக கைவசம் புரட்சியை நிறைவேற்ற இருக்கும் ஒரே தலைவரான ‘புரட்சி’க் கலைஞரை தங்களது அளப்பறிய உழைப்பால் தங்களுடன் இணைத்துக் கொண்டுள்ளனர். சிவகாசியில் ஆர்டர் கொடுத்த துப்பாக்கிகள் தோழர்களின் கைகளில் கிடைத்தவுடன் தமிழ்நாட்டில் கேப்டன் தலைமையில் ஒரு பெரும் ஆயுதப்போராட்டம் நடத்தி முடிக்கப்படும். 
தமிழ்நாடு ஒரு விடுதலைப் பிரதேசமாக கேப்டன் தலைமையில் அறிவிக்கப்படும்.
தே.மு.தி.கவைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் ‘தள்ளாடிக்’ கொண்டிருக்கும் தமிழ்நாட்டைக் காப்பாற்ற வந்த ஒரே கட்சி. மேலும் அந்தக் கட்சியின் தலைவர் இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த 'குடிமகன்'களில் ஒருவர். நீங்கதான் கீங் என்று யாராவது சொன்னால் மகிழ்ச்சியில் கட்டிய வேட்டியைக் கூட கழற்றி கொடுத்துவிடுவார். பல கட்சிகளின் கொள்கை அறிக்கைகளை வாங்கி அதை அழகாக வெட்டி தன்னுடைய கழிப்பறையில் தொங்கவிட்டுள்ளார். 
அதில் அவருக்கு மிகவும் பிடித்தது, தோழர்கள் கொடுத்த கொள்கை அறிக்கைதானம். 
இன்னும் நிறைய மாஸ்கோ வெளியீடுகள் தோழர்கள் கைவசம் உள்ளதாக யாரோ கேப்டனிடம் சொல்லிவிட, வரும்போதெல்லாம் கொள்கையறிக்கை கொண்டுவரவில்லையா என கேட்டு நச்சரிக்கின்றாராம் கேப்டன். 
தமிழக மக்களுக்காக அவரும், அவரது மனைவியும், அவரது மைத்துனரும் நடத்திய போராட்டங்கள் பற்றி ஜி.ராமகிருஷ்ணன் எழுதிய புத்தகம் விரைவில் பாரதி புத்தகாலய வெளியீடாக வெளிவர இருக்கின்றதாம்.
இப்படி பல ஒற்றுமைகளைத் தங்களுக்குள் கொண்டுள்ள இவர்கள் கேவலம் ஒரு பெயருக்காக அடித்துக் கொள்வது வாக்காளர்களை அதிருப்தியடையச் செய்துவிடும்.
 பின்னால் இது ஓட்டுவங்கியைப் பெரிய அளவில் பாதிக்க வாய்ப்பிருக்கின்றது. 
பெயரில் போய் என்ன இருக்கின்றது? 
அம்மணம் என்றாலும், நிர்வாணம் என்றாலும் ஒன்றுதானே தோழர்களே!
உங்கள் நிலையும் இப்போது அதுதானே தோழர்களே!!
                                                                                                                                                                                                     - செ.கார்கி
நன்றி:கீற்று.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?