1,40,000 கோடி ரூபாய் கடனுக்குள் எப்படித் தள்ளப்பட்டது?
பார் புகழும்’ இப்பரத கண்டத்தில் ஊழலுக்கு எதிராக சவுண்டுவிடுவதுதான் இப்பொழுது அரசியல் பேஷனாக இருக்கிறது.
யாரிடமும் கைநீட்டி இலஞ்சம் வாங்காதவன்தான் ஆளத் தகுதி வாய்ந்தவன்” என அறிவிக்கும் அளவிற்கு நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் இலஞ்சம், ஊழல் குறித்த பாமரத்தனமான கருத்துகள் முளைவிட்டு வருகின்றன.
அப்படிபட்டதொரு நிலையில், தலையாரி முதல் தலைமைச் செயலர் வரை, கவுன்சிலர் தொடங்கி கலெக்டர், அமைச்சர்கள் ஈறாக, அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழல் கொள்ளையில் ஈடுபடும் அரசு மற்றும் பொது ஊழியர்களைப் பாதுகாக்கும் அரசாணையொன்றை கடந்த பிப்ரவரியில் வெளியிட்டு, நல்லவர்களையெல்லாம்” திடுக்கிட வைத்திருக்கிறது அம்மா அரசு.
வரலாற்றில் இதற்கு முன்பாக இப்படிபட்டதொரு அரசாணை எங்காவது, எப்பொழுதாவது வெளியாகியிருக்கிறதா எனக் கூறுமளவிற்கு கட்டுரையாளருக்கு வரலாற்று ஞானம் கிடையாது. அதேசமயம், சொத்துக் குவிப்பு வழக்கால் தான் அனுபவிக்க நேர்ந்த ‘துயரங்கள்’, தன்னையொத்த மற்ற கொள்ளையர்களுக்கும் வந்துவிடக் கூடாது என்ற பரந்த எண்ணத்தில் இந்த ஊழல் பாதுகாப்பு அரசாணையை அம்மா கொண்டுவந்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு.
யாரிடமும் கைநீட்டி இலஞ்சம் வாங்காதவன்தான் ஆளத் தகுதி வாய்ந்தவன்” என அறிவிக்கும் அளவிற்கு நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் இலஞ்சம், ஊழல் குறித்த பாமரத்தனமான கருத்துகள் முளைவிட்டு வருகின்றன.
அப்படிபட்டதொரு நிலையில், தலையாரி முதல் தலைமைச் செயலர் வரை, கவுன்சிலர் தொடங்கி கலெக்டர், அமைச்சர்கள் ஈறாக, அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழல் கொள்ளையில் ஈடுபடும் அரசு மற்றும் பொது ஊழியர்களைப் பாதுகாக்கும் அரசாணையொன்றை கடந்த பிப்ரவரியில் வெளியிட்டு, நல்லவர்களையெல்லாம்” திடுக்கிட வைத்திருக்கிறது அம்மா அரசு.
வரலாற்றில் இதற்கு முன்பாக இப்படிபட்டதொரு அரசாணை எங்காவது, எப்பொழுதாவது வெளியாகியிருக்கிறதா எனக் கூறுமளவிற்கு கட்டுரையாளருக்கு வரலாற்று ஞானம் கிடையாது. அதேசமயம், சொத்துக் குவிப்பு வழக்கால் தான் அனுபவிக்க நேர்ந்த ‘துயரங்கள்’, தன்னையொத்த மற்ற கொள்ளையர்களுக்கும் வந்துவிடக் கூடாது என்ற பரந்த எண்ணத்தில் இந்த ஊழல் பாதுகாப்பு அரசாணையை அம்மா கொண்டுவந்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு.
பார்ப்பன ஜெயா 2011-இல் மீண்டும் ஆட்சியைப் பிடித்ததில் ஆ.ராசா, கனிமொழிக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட 2ஜி வழக்கிற்கு முக்கியப் பங்குண்டு.
ஜெயா-சசி கும்பலால் மிரட்டி வளைத்துப் போடப்பட்ட பீனிக்ஸ் மாலில் அமைந்துள்ள லக்ஸ் திரையரங்கின் உட்புறத் தோற்றம். |
கருணாநிதியின் குடும்ப ஆட்சியையும், ஊழல் ஆட்சியையும் ஒழித்துக் கட்டக்கூடிய உத்தமியாக ஜெயாவைத் தமிழக மக்கள் முன் நிறுத்தி, அச்சட்டசபை தேர்தலில் வெற்றியை வாரிச் சுருட்டியது தமிழகப் பார்ப்பனக் கும்பல்.
தி.மு.க. பதவிக்கு வந்தால், ஆட்சியை நடத்திச் செல்லும் போக்கில் ஊழல், கொள்ளையில் ஈடுபடுவார்கள் என்றால், ஜெயாவோ தனது ஆட்சியே கொள்ளை தான், அதிகார முறைகேடுகளின் மூட்டைதான் என வாழ்ந்து காட்டி வருபவர். அதோடு, அடித்த கொள்ளையைப் பார்த்துக் கொள்” எனப் பகிரங்கப்படுத்தவும் தயங்காதவர்.
1991-96 ஆட்சியில் நடந்த வளர்ப்பு மகன் திருமணம், 2001-06 ஆட்சியின் பொழுது மிடாஸ் சாராய ஆலைக்குத் திறப்பு விழா நடத்தியது, இப்பொழுது சென்னை-வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் உள்ள 11 திரைகளைக் கொண்ட லக்ஸ் திரையரங்கை வளைத்துப் போட்டது என ஜெயா-சசி கும்பல் பகிரங்கமாக நடத்தியிருக்கும் கொள்ளைக்கும், அதன் வழியாகக் குவித்து வைத்துள்ள சொத்துக்களுக்கும் உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
லக்ஸ் திரையரங்கை ஜாஸ் சினிமாஸ் என்ற நிறுவனம் வாங்கியிருக்கிறது; அந்த நிறுவனத்தின் பூர்வாசிரம நாமம் ஹாட் வீல்ஸ் இஞ்ஜினியரிங் பிரைவெட் லிமிடெட். ஹாட் வீல்ஸ் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிறுவனங்களுள் ஒன்று.
ஜெயா-சசி கும்பல் வாங்கிக் குவித்த இலஞ்சப் பணத்தைப் புழக்கத்தில் விடுவதற்காக அவர்களால் தொடங்கப்பட்ட லெட்டர் பேடு நிறுவனம்தான் ஹாட் வீல்ஸ்; அதன் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்” என்று நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்திருந்தார்.
ஆள் மாறாட்டம் போல பெயர் மாறாட்டம் செய்யப்பட்டுள்ள ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் கூட்டத்தில் சசிகலாவும் இளவரசியும் கலந்து கொண்டிருப்பதும்; அந்நிறுவனத்தின் தலைவராக இளவரசியும், அந்நிறுவனத்தின் இயக்குநர்களாக இளவரசியின் மருமகன் கார்த்திகேயனும், சசிகலாவின் மருமகன் சிவகுமாரும் நியமிக்கப்பட்டிருப்பதும்; இந்த மருமகன்கள் இருவரும் ஜெயா-சசிக்குச் சொந்தமான மிடாஸ் சாராய ஆலையிலும் இயக்குநர்களாக இருப்பதும் சந்தேகத்திற்கு இடமில்லாதவாறு வெளிவந்துள்ளன.
லக்ஸ் திரையரங்கம் வெறும் ஒரு கோடி, இரண்டு கோடி ரூபாய் பெறுமானமுள்ள அந்தக் காலத்து சினிமா கொட்டகை அல்ல. அந்த அதிநவீனமான திரையரங்குகளின் மதிப்பு 600 முதல் 1,000 கோடி ரூபாய் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.
தான் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெற்று வருவதாகக் கூறி வருபவர், ஜெயா. சசியோ, அந்த ஒரு ரூபாய் சம்பளக்காரியை அண்டிப் பிழைப்பவர். இப்படிபட்ட பின்னணி கொண்டவர்கள் 1,000 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட திரையரங்கை வாங்குவது எப்படி சாத்தியமானது என்பது தீவிரமான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று.
ஆனால், அம்மா மீதான விசுவாசம் காரணமாகவோ அல்லது
அம்மாவைச் சந்தேகித்தால் என்ன வழக்குப் பாயுமோ என்ற அச்சம் காரணமாகவோ தமிழக ஊடகங்களும், நாணயஸ்தர்களும் இப்பிரச்சினையைக் காணாதவாறு கண்ணை மூடிக்கொண்டார்கள்; அல்லது தி.மு.க. மட்டும் யோக்கியமா எனக் கேட்டுத் தங்களின் நடுநிலை தவறாத் தன்மையைப் பறைசாற்றிக் கொண்டார்கள்.
ஜெயா-சசி கும்பல் அத்திரையரங்கை விலைக்கு வாங்கியதுகூட வர்த்தக நாணயத்தோடு நடைபெறவில்லை. வணிக வரித்துறை மற்றும் போலீசைக் கொண்டு அத்திரையரங்கு நிறுவன முதலாளிகளை மிரட்டி, கட்டப் பஞ்சாயத்து முறையில் இச்சொத்து எழுதி வாங்கப்பட்டிருக்கிறது.
இது போலவே, சென்னை வடபழனியில் அமைந்துள்ள விஜயா ஃபோரம் மாலில் கட்டப்பட்ட திரையரங்குகள் செயல்படுவதற்கான உரிமம் வழங்குவதிலும் சிக்கல்களை ஏற்படுத்தி, அதனையும் வளைத்துப் போட முயன்றது ஜெயா-சசி கும்பல்.
ஆனால், லக்ஸ் திரையரங்கம் சுருட்டப்பட்டது வெளியே வந்ததைத் தொடர்ந்து தற்காலிகமாகப் பின்வாங்கிக் கொண்டது.
1991-96 கால ஆட்சியில் (கொடநாடு) எஸ்டேட்டுகளும், (பையனூர், சிறுதாவூர்) பங்களாக்களும், நிலங்களும் வளைத்துப் போடப்பட்டன என்றால், இந்த மூன்றாவது அத்தியாயத்தில் தமிழகமெங்கும் திரையரங்குகள் குறி வைக்கப்படுகின்றன.
சொத்துக் குவிப்பு வழக்கு உச்சநீதி மன்ற விசாரணையில் இருந்துவரும் நிலையில், அது குறித்தெல்லாம் சிறிதும் அச்சமின்றி மேலும்மேலும் சொத்துக்குவிப்பு நடந்து வருகிறது என்பது ஜெயா கும்பல்
நீதிமன்றங்களைச் சோளக்காட்டு பொம்மை அளவிற்குக்கூட கருதவில்லை எனக் காட்டுகிறது.
‘‘இந்த ஆட்சி 40 பர்செண்ட் ஆட்சி” எனப் பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள் பகிரங்கமாக சுமத்திய குற்றச்சாட்டின் வழியாகவோ, உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமியின் தற்கொலை வழியாகவோ, ஆவின் பால் கலப்பட ஊழல் வழியாகவோ, லக்ஸ் திரையரங்கம் வழியாகவோ, அ.தி.மு.க. ஆட்சியில் 25 துறைகளில் நடந்த ஊழல்கள் குறித்து கவர்னரிடம் கொடுக்கப்பட்ட பட்டியல் வழியாகவோ அம்மா ஆட்சியின்‘ஒப்பிலா’த் தன்மையைப் புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கும் பொட்டில் அடித்தாற் போல புரிய வைத்தது வெள்ள நிவாரணத்தில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்.
அப்படி அம்பலமான பிறகும்கூட அம்மாவின் ஊழல் திருவிளையாடல் நிற்கவேயில்லை. என்னை உங்களால் என்ன செய்துவிட முடியும் என்ற அகங்காரத்தோடு, அகப்பட்டதையெல்லாம் திருடிக்கொண்டு ஓடும் கன்னக்கோல் கொள்ளையர்களைவிடக் கேவலமாக, ஆட்சியின் இறுதிக் கட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த எட்டு பல்கலைக்கழகங்கள் கடந்த சில மாதங்களாகவே தலையில்லாத முண்டங்களாக, அதாவது துணை வேந்தர்கள் இன்றி இயங்கி வந்தன. இதற்குக் காரணம் அப்பதவிகள் 6 கோடி ரூபாய்க்கு மேல் விலை பேசப்படுவதாகவும், பேரம் இன்னும் படியாததால்தான் துணை வேந்தர்கள் அறிவிக்கப்படவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்தன.
இந்நிலையில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைகளின்படித் துணை வேந்தர்களை நியமிக்க உத்தரவிடக் கோரி கல்வியாளர் அனந்த கிருஷ்ணன் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இவ்வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், அதனை முந்திக்கொண்டு நான்கு பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமிக்கப்பட்ட அறிவிப்புகள் கவர்னர் மாளிகையிலிருந்து இரவு நேரத்தில் வெளியிடப்பட்டன.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள கே.பாஸ்கரின் குறிப்பிடத்தக்க தகுதி, அவர் தமிழக ஆளுநர் ரோசய்யாவுக்கு நெருக்கமானவர் என்பதுதான்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள தங்கசாமி, ஓ.பன்னீர் செல்வத்தின் நெருங்கிய உறவினர்.
ஒரு கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்படுவதற்குக்கூடத் தகுதியில்லாதவர் எனக் கூறப்படும் வள்ளி, அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
10 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதியைக் கடாசிவிட்டு, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பேராசிரியர் முருகன் நியமிக்கப்பட்டிருக்கிறார். நியமிக்கப்பட்டவர்களின் கல்வி மற்றும் பணித் தகுதியே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது.
இந்த நியமனங்கள் ஒருபுறமிருக்க, அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் 112 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கு, பதவி ஒன்றுக்கு ரூ.35 இலட்சம் என நிர்ணயிக்கப்பட்டு வசூல் வேட்டை தொடங்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ் சுமத்தியுள்ளன. காசு கொடுத்தவனுக்கு சீட்டு என்பதை உறுதி செய்வதற்காகவே, அப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்விலும், நேர்முகத் தேர்விலும் முறைகேடான மாற்றங் களை அ.தி.மு.க. அரசு செய்திருக்கிறது.
மேலும், சுகாதாரத் துறையில் 1,200 பணியிடங்களையும், செய்தித் துறையில் மக்கள் தொடர்பு அலுவலர்களை யும், கால்நடைத் துறையில் காலி பணியிடங் களையும் நேரடியாக நியமிப் பது என்ற போர்வையில் வசூலுக்கான வாசல் திறந்துவிடப்பட்டிருப்பதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
கரை வேட்டி கட்டாத அ.தி.மு.க. தொண்டர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் |
இந்த முறைகேடுகள், அதிகார அத்துமீறல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வண்ணம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தனது விசுவாசிகள், கட்சிக்காரர்கள் என 11 பேரை ஒரே சமயத்தில் உறுப்பினர்களாக்கி, அத்தன்னாட்சி பெற்ற அரசு நிறுவனத்தை அ.தி.மு.க.வின் கிளையாக்கிவிட்டார், ஜெயா.
முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் மீது ஜெயா போட்ட ஹெராயின் வழக்கில் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டவரும், சுதாகரனின் உறவினருமான ஓய்வு பெற்ற நீதிபதி ராமமூர்த்தி;
தமிழக அரசின் தலைமை வழக்குரைஞராக இருந்து பின்னர் டி.என்.பி.எஸ்.சி. தலைவராக நியமிக்கப்பட்ட நவநீதகிருஷ்ணணுக்குக் கைத்தடியாக இருந்தவரும், சொத்துக் குவிப்பு வழக்கை கவனித்து வந்தவருமான வழக்குரைஞர் முத்துராஜ், கரை வேட்டி கட்டாத அ.தி.மு.க. தொண்டர் எனப் பெயரெடுத்த செய்தித் துறையின் செயலராக இருந்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள முக்கியமான விசுவாசிகள்.
கடந்த ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் எந்தளவிற்குச் சீரழிக்கப்பட்டிருக்கிறது என்பதை இடைக்கால நிதிநிலை அறிக்கையும், மின்சார வாரியத்தில் ஏற்பட்டுள்ள நட்டமும் எடுத்துக் காட்டுகின்றன.
அ.தி.மு.க. பதவியேற்றபொழுது ஏறத்தாழ ஒரு இலட்சம் கோடியாக இருந்த தமிழக அரசின் கடன், இந்த ஐந்தாண்டுகளில் மேலும் 1,47,000 கோடி ரூபாய் அதிகரித்து, 2,47,031 கோடி ரூபாயை எட்டியிருக்கிறது. இத்துணைக்கும் கடந்த ஐந்தாண்டுகளில் அ.தி.மு.க. அரசு எந்தவொரு உற்பத்தித் திட்டத்திலும் முதலீடே செய்யவில்லை; மேலும், வரி உயர்வு, பேருந்து மற்றும் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகிய பொருளாதாரத் தாக்குதல்களின் மூலம் மக்களிடமிருந்து 1,57,000 கோடி ரூபாய் பிடுங்கிக் கொண்டிருக்கிறது.
இதன் பிறகும் தமிழக அரசின் கடன் சுமை அதிகரித்திருக்கிறதென்றால், பிடுங்கப்பட்ட வரிப் பணமும், வாங்கப்பட்ட கடனும் கரைந்து போனதற்குக் காரணம் ஜெயா-சசி கும்பல் அடித்திருக்கும் கமிசன் மற்றும் கொள்ளை.
இந்தப் பகற்கொள்ளைக்குப் பலியான துறைகளுள் முதன்மையானது தமிழக மின்சார வாரியம். தமிழகத்தை மிகைமின் மாநிலமாக மாற்றிவிட்டேன் என்ற ஜெயாவின் மோசடியான சுயதம்பட்ட அறிவிப்பின் பின்னே வாரியம் மொட்டையடிக்கப்பட்டு, கடனாளி நிறுவனமாக மாற்றப்பட்டிருப்பது மறைக்கப்பட்டிருக்கிறது.
கமிசன் அடிப்பதற்காகவே தனியாரிடமிருந்து அதிக விலையில் மின்கொள்முதல் செய்யும் ஒப்பந்தங்கள் பல்வேறு விதிமுறைகளை மீறிப் போடப்பட்டு, மின் வாரியம் படுகுழியில் தள்ளப்பட்டிருக்கிறது.
எடுத்துக்காட்டாக, சூரிய ஒளி மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ.5.84 என்ற விலையில் வாங்க வேண்டும் என மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியிருப்பதற்கு மாறாக, அதானி குழுமத்திட மிருந்து யூனிட் ஒன்றுக்கு ரூ.7.01 விலையில் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைச்சரிவைத் தொடர்ந்து ஃகுஏகு எனப்படும் எரி பொருளைக் கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்கள் ஒரு யூனிட் மின் சாரத்தை ரூ.4.27-க்கு விற்க முன்வந்துள்ள நிலையில், அதனைப் புறக்கணித்துவிட்டு இந்த எரி பொருளைப் பயன்படுத்தும் தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை நிலைக் கட்டணத்துடன் சேர்த்து ரூ.6.55-க்கு விலைக்கு வாங்கி வருகிறது, மின்சார வாரியம்.
தனியார் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு அதிக விலை கொடுப்பதற்காக, அவர்களிடமிருந்து ஒரு மெகாவாட்டுக்கு ரூ.15 இலட்சம் கையூட்டுப் பெறப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
சுருக்கமாகச் சொன்னால், மின்சார வாரியத்தை தனது கொள்ளைக்கான காமதேனுவாகக் கருதி நடத்தியிருக்கிறது, ஜெயா-சசி கும்பல்.
திட்டத்தில் கமிசன் அடிப்பதல்ல, கமிசனுக்காகவே திட்டங்கள் என்பதுதான் அம்மா ஆட்சியின் கொள்கை. கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்திய சகாயம் குழுவில் இடம் பெற்றிருந்த மதுவை மாவட்ட வேளாண் இயக்குநர் ஜெய சிங் ஞானதுரை, தான் ஓய்வு பெற்றுச் சென்ற நாளில் ஆற்றிய உரையில், வேளாண்துறை அமைச்சர் அக்ரி.
கிருஷ்ண மூர்த்தி கடந்த 26.01.2015 அன்று இரவு என்னை செல்பேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார். விவசாயிகளுக்கு வழங்குவதற்கான நுண்ணூட்டச் சத்துக்கள் தமிழக அரசின் வேளாண் துறையில் கிலோ ரூ. 60 என்ற விலையில் கிடைக்கிறது.
ஆனால், இதே நுண்ணூட்டச்சத்து உரத்தை தனியாரிட மிருந்து கிலோ ரூ.120 என்ற விலையில் வாங்கும்படி அவர் என்னைக் கட்டாயப்படுத்தினார். அதற்கான உத்தரவில் நான் கையெழுத்திடவில்லை என்றால் எனதுபணியிடமாற்ற ஆணையில் கையெழுத்திடப் போவதாக மிரட்டினார். என்னை சென்னைக்கு இடமாற்றம் செய்வதற்கான ஆணையையும் அவர் படித்துக்காட்டினார்.
அதன் பின் பிப்ரவரி முதல் வாரத்தில் அமைச்சரின்உதவியாளர்என்னைதொடர்புகொண்டு அமைச்சர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி என்னிடம் பேச விரும்புவதாக தெரிவித்தார். ஆனால், நான் பேச மறுத்துவிட்டேன்” என நடந்ததைக் கூறியிருக்கிறார்.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்; தமிழகம் கடந்த ஐந்தாண்டுகளில் 1,40,000 கோடி ரூபாய் கடனுக்குள் எப்படித் தள்ளப்பட்டது என்பதை இந்த உரை நமக்குப் புரிய வைக்கிறது.
தமிழக மக்களின் மீது இந்த ஐந்தாண்டுகளில் ஏற்றப்பட்டுள்ள 1,40,000 கோடி ரூபாய் கடன் போயஸ் தோட்டத்தில் ரொக்கமாகவும், சொத்துப் பத்திரங்களாகவும் பதுக்கப்பட்டுள்ளன. இந்தச் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதான் தமிழக மக்கள் முன்னுள்ள, செய்து முடிக்க வேண்டிய மாபெரும் கடமையாகும்.
அதற்குச் சட்டமன்றத் தேர்தலும், நீதிமன்றங்களும் பயன்படாது என்பதை ஜெயா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் போக்கிலிருந்தே யாரும் புரிந்து கொள்ள முடியும்.
– குப்பன்
புதிய ஜனநாயகம் இதழில் ,
=========================================================================================