கே.ந,கூ ட்டணி தேர்தல் அறிக்கை:ஒரு பார்வை.

மக்கள் நல அரசை வழங்குவதுடன், இந்திய நாட்டுக்கு வழி காட்டக்கூடிய வகையில், கூட்டணி அரசு செயல்படும். நேர்மையான, துாய்மையான, ஊழலற்ற ஆட்சி நிர்வாகமும், கண்காணிப்புடன் கூடிய கூட்டணி ஆட்சியும் தேவைதான். 
ஆனால், அதை மக்கள் நலக் கூட்டணியால் வழங்க முடியுமா என்பது தான் சந்தேகம். கூட்டணி தலைவர்கள், பிரசார அளவில் கூட ஒருங்கிணைந்து செயல்படாதது போல், ஆளுக்கொரு திசையில் இழுத்தால், அரசு நிர்வாகம் என்ன ஆகும்!

மற்றவர்களை விட அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ எந்த நேரம் என்ன செய்வார் என்பதை அவர் கூட்டணிக் கட்சியினரே உணர முடியவில்லையே?அடுத்து விஜயகாந்த்  குழப்பங்கள் ,அவர் மனைவி பிரேமலதா அலப்பறைகள் என்று மக்கள் நலக் கூட்டணி கே.ந,கூ ட்டணியானதிலிருந்து ஒரே தெனாலி பயம் தான் மக்களுக்கு.
* கூட்டணி அரசின் நடவடிக்கைகளுக்கும், சமூக, பொருளாதார திட்டங்களுக்கும், ஒட்டுமொத்த வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அரசுக்கு வழிகாட்டுதல் வழங்க, பல்துறை அறிஞர்கள், நிபுணர்கள் கொண்ட, 'நெறிமுறைக் குழு' அமைக்கப்படும். 
அரசின் நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும், கண்காணிப்புடன் கூடிய ஆலோசனைகளை அளிக்கவும், நெறிமுறைக் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படும். இத்திட்டம் வரவேற்கத்தக்கது. ஆனால், கட்சி சாராத, தங்களுடைய கருத்துக்களை திணிக்காத, மக்கள் நலன் விரும்பும் நிபுணர்களை நியமித்தால் தான், திட்டம் வெற்றிகரமாக செயல்படும். இல்லையெனில், பழைய குருடி கதவை திறடி சங்கதியாக தான் இந்த கூட்டணியும் இருக்கும். 


* அரசு திட்டங்களுக்காக செலவிடப்படும், மக்கள் வரிப்பணம் கொள்ளை அடிப்பது தான் எழுதப்படாத விதியாகி விட்டது. எனவே, அரசு பணிகள் அனைத்தையும் கண்காணிக்க, மக்கள் பங்கேற்புடன் கூடிய பொது கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். இது, வரவேற்கதக்கது.

குப்பையில் இருந்து மின்சாரம்


* தமிழக மின் தேவையை நிறைவு செய்ய, ஜெயங்கொண்டம் மின் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் 
பொதுவாக, புதிய மின் திட்டங்கள் என, குறிப்பிடாமல், ஒரு திட்டத்தின் பெயரை அறிவித்துள்ளதால், அதை விரைந்து நிறைவேற்ற வேண்டிய நெருக்கடி வரும். திட்டமும் செயலுக்கு வரும். 
* மக்கும் குப்பையில் இருந்து, எரிவாயு மூலம், 1,000 மெகாவாட்; மக்காத குப்பைகளை எரித்து, 2,000 மெகாவாட் அனல் மின்சாரம் தயாரிக்கலாம். 
இந்த அறிவிப்பை, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் செயல்படுத்தினால், குறைந்த செலவில் மின்சாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 
* கிராம பஞ்சாயத்துகளில், சூரிய மின் உற்பத்தி கட்டமைப்புகளை வலுப்படுத்தி, கிராமங்களில் மின் வெட்டு இல்லாத நிலையை ஏற்படுத்த, முயற்சி மேற்கொள்ளப்படும். 
இந்த அறிவிப்பு, வேறு சில கட்சியினரும் வெளியிட்ட ஒன்று. 
* நகரங்களிலும், கடற்கரையோர கிராமங்களிலும் பூமிக்கு அடியில், மின்சாரம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே செயலில் உள்ளது
* சூரிய மின் உற்பத்தியை ஊக்கப்படுத்த, தனிபர் வீடுகளில் அதற்கான கட்டமைப்பை * ருவாக்க, மானியத்துடன் வட்டி இல்லா கடன் வழங்கப்படும். இதுவும் நடைமுறையில் உள்ளது.
* மாதாமாதம் மின் கட்டணம் செலுத்தும் முறை கொண்டு வரப்படும். இன்னும் எத்தனை கட்சிகள் தான் இதை சொல்லுமோ தெரியவில்லை.

பொதுவிநியோகம்:
* விண்ணப்பித்து காத்திருக்கும் தகுதிஉள்ளவர்கள் அனைவருக்கும் புதிய ரேஷன் கார்டு தாமதம் இன்றி வழங்கப்படும். இந்த அறிவிப்பில், 'தகுதி உள்ளவர்கள்' என, குறிப்பிடப்பட்டு உள்ளதால்,உண்மையான நபர்கள் பயன் அடைய வாய்ப்பு உள்ளது.

* அனைத்து குடும்பத்திற்கும், ரேஷன் கார்டு, 'ஸ்மார்ட் கார்டு' ஆக வழங்கப்படும்.இந்த அறிவிப்பிற்கான ஆயத்த பணிகளை, தமிழக அரசு ஏற்கனவே துவங்கி விட்டது. 
* 500 ரேஷன் கார்டுகள் உள்ள குடியிருப்புகளுக்கு தனியே ஒரு ரேஷன் கடையும், 100 ரேஷன் கார்டுகள் உள்ள குடியிருப்புகளுக்கு, பகுதி நேர கடையும் திறக்கப்படும். 
இந்த அறிவிப்பு பழசு. முழு செயல்பாட்டுக்கு வரவில்லை
* எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பாக்கெட் மூலம் வழங்கப்படும். இந்த அறிவிப்பு, பா.ம.க., கூறியது. 
* சென்னையில் செயல்படும் அமுதம் அங்காடிகள் போல், அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் அமைக்கப்படும். 'அம்மா அமுதம் அங்காடி' என்ற பெயரில், தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது

* காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும், ரேஷன் கடை மூலம் மானிய விலையில் வழங்கப்படும்.
காய்கறி, பழம் விரைவில் அழுகும் என்பதுடன், ரேஷன் கடையில் ஊழியர் பற்றாக்குறை உள்ளதால், இந்த அறிவிப்பை செயல்படுத்த முடியாது.

போக்குவரத்து தொழிலாளர் நலன்
* போக்குவரத்து கழகங்களில், 2012க்கு பின் ஓய்வு பெற்றவர்களுக்கான பணப் பலன்கள் வழங்கவில்லை. ஊதிய உயர்வு ஒப்பந்த நிலுவைத் தொகை முழுமையாக வழங்கவில்லை. தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை தொடர்பான, 4,500 கோடி ரூபாயை, போக்குவரத்து கழகங்கள் செலவு செய்து விட்டன. இவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இது சாத்தியமானது தான். ஆனால், போக்குவரத்து கழகங்களின் நிதி நிலைமையை பார்க்கும்போது, உடனடியாக வழங்க முடியாது; படிப்படியாக முடியலாம்.

* தி.மு.க., - அ.தி.மு.க., ஆளுங்கட்சியாக இருக்கும் போது, 5,000க்கும் மேற்பட்டோர் எவ்வித பணியும் பார்க்காமல், ஓ.டி., என்கிற, 'ஆன் டூட்டி' பெயரால் சம்பளம் பெறுகின்றனர். இந்த நடைமுறை முற்றாக ஒழிக்கப்படும்.நல்ல அம்சம். போக்குவரத்து கழகங்களில் நஷ்டத்தில் இயங்குவதற்கும், பஸ்கள் பராமரிப்பு இன்றி இயக்கப்படுவதற்கும், இந்த ஓ.டி.,யே காரணமாக உள்ளது. முற்றிலும் ஒழிக்க வேண்டியது அவசியம்.

* தொழிலாளர்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு, வேலைப்பளு குறைக்கப்படும்.
பஸ்கள் இயக்கம், பராமரிப்பு பணியில் தேவையான மாற்றத்துடன் கூடிய செயல் திட்டம் வகுத்தால், இருக்கும் தொழிலாளர்களை கொண்டே பணியை முறைப்படுத்த முடியும்.

* ஊழியர்களின் ஊதிய உயர்வு, ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இவை புதிய கோரிக்கைகள் அல்ல.

மாற்று திறனாளிகள் நலன்
* உள்ளாட்சி,நகராட்சி,மாநகராட்சி வணிக வளாகங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு கடைகள்
* மாற்றுத் திறனாளி உதவித் தொகை, 3,000 ரூபாயாக உயர்த்தப்படும் 
* அரசு பணிகளில், 3 சதவீதம் வேலை வாய்ப்பு உறுதிப்படுத்தப்படும் ஏற்கனவே தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட பல கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* சுயதொழில் புரியும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு, கடன் உதவித்தொகை
* பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் செய்யக்கூடிய பணிகளை கண்டறிய குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரையின்படி வேலைவாய்ப்பில், 1 சதவீதம் ஒதுக்கப்படும்
* பார்க்கும் திறனற்றோர், கேட்கும் திறனற்றோருக்கு, அரசு கல்வி நிலையங்கள் மூலம் தரமான உயர்கல்வி கிடைக்க வழி செய்யப்படும்
* மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு, தங்கும் வசதியுடன் சிறப்புக் கல்விக்கான ஏற்பாடு, மாவட்டம் தோறும் உருவாக்கப்படும்
* சட்டப்படி அரசு பணிகளில், மூன்று சதவீதம் வேலை வாய்ப்பு உறுதிபடுத்தப்படும். ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ், நான்கு மணி நேரம் பணி செய்து, முழு ஊதியம் பெறுவது நிச்சயப்படுத்தப்படும்.
* கடும் ஊனமுற்ற மாற்றுத் திறனாளி பெண்களைத் திருமணம் செய்து கொள்வதை ஊக்குவிக்க, திருமணத்தை ஒட்டி, 5 லட்சம் ரூபாய் பெண்ணின் பெயரில் வைப்பு நிதியாக வைக்கப்படும். இவை எல்லாமே ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.

l மாற்றுத் திறனாளிகள் குறித்த தகவல் தளம்.
l வீடு இல்லாத மாற்றுத் திறனாளி குடும்பங்களுக்கு, அரசின் வீட்டுவசதி திட்டங்களில் முன்னுரிமை

* செயற்கை அவயங்கள், கருவிகள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் எளிதாக கிடைக்க நடவடிக்கை
எந்த கட்சியும் சொல்லாதது. அமல்படுத்துவதில் தான் சிக்கல்

* தற்போதுள்ள மாநில மாற்றுத் திறனாளிகள் ஆணையரகத்தை, சிவில் நீதிமன்ற அந்தஸ்துடன் கூடிய ஆணையமாக மாற்றி, பொருத்தமான மாற்றுத் திறனாளியை, அதன் தலைவராக நியமிக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.
* கேட்கும் திறனற்றோர், பேசும் திறனற்றோருக்காக, 100 சைகை மொழி பெயர்ப்பாளர்கள் நியமிக்கப்படுவர். சைகை மொழிக்கு அங்கீகாரம் வழங்கப்படும்

* மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களுடைய உடல்பாதிப்பிற்கேற்ப ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும்
* பார்வையற்ற மாற்று திறனாளி பராமரிப்புத் தொகை, 1,000 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தி தரப்படும் மற்ற கட்சிகள் மறந்த விஷயம். மாற்றுத் திறனாளிகளுக்கு உபயோகமாக இருக்கும்.

போக்குவரத்து துறை

* பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்களுக்கு தனி பஸ்கள் இயக்கப்படும். வரவேற்பு கிடைக்கும். மாணவர்களுக்கான மிகப் பயனுள்ள அறிவிப்பு இது.

* அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்குஇலவச பஸ் பயண அட்டை வழங்கப்படும். ஏற்கனவே திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
* அ.தி.மு.க., அரசு உயர்த்திய பஸ் கட்டணம் குறைக்கப்படும். ஆம்னி பஸ்களின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* தற்போதைய நிலையில், கட்டண குறைப்பு சாத்தியமில்லை. ஆம்னி பஸ்களை பொறுத்தவரை, அவை பயணிகள் சேவைக்கான பஸ்கள் அல்ல. இதனால், அதற்கு கட்டண நிர்ணயம் சாத்தியமில்லை.
* சாலை விபத்துகளை தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தப்படும்.
சாத்தியமில்லாதது. இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புக்கு மட்டுமே, அது பொருந்தும். விபத்து தடுப்புக்கான மாற்று வழிகள் எதையும் சொல்லாத வெற்று அறிவிப்பு இது.
* கர்ப்பிணிப் பெண்கள், உடல் உழைப்பு தொழிலாளர்கள், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, அரசு பஸ்களில் இலவச பயண அட்டை.
நோக்கம் நல்லதாக இருந்தாலும், இதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் 
இருக்கிறது. போக்குவரத்துக் கழகங்களும் நஷ்டத்தில் இயங்குவதால், இது அவசியமில்லை.
* நான்கு வழி நெடுஞ்சாலைகளில் உள்ள கட்டண வசூல் மையங்களை மூட முயற்சி மேற்கொள்ளப்படும்
நல்ல முயற்சி. ஆனால், மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது. மாநில அரசு முயற்சி, எந்தளவுக்கு பயன் அளிக்கும் என்று சொல்ல முடியாது.

* பெரு நகரங்களில் உள்ள சாலைகளில், சைக்கிள் பயணத்திற்கும், பாதசாரிகளுக்கும் தனிப்பாதைகள் அமைக்கப்படும்.
மற்ற கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்று உள்ளது.

* போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வாக, மேம்பாலங்கள் அமைக்கப்படும். பஸ்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். வாய்ப்புள்ள இடங்களில், நீர்வழி போக்குவரத்து துவக்கப்படும்.
போக்குவரத்து நெரிசலை குறைக்க, இந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டியது அவசியம். செயல்படுத்துவதும் சாத்தியம்.
* எரிபொருள் செலவு, விபத்துகளை குறைக்க, பொதுப் போக்குவரத்து முறையை ஊக்கப்படுத்த, செயல் திட்டங்கள் வகுக்கப்படும்.
வரவேற்கலாம். பொது போக்குவரத்து சேவையில் முன்னேற்றம் தேவை.
* சாலைகள் மேம்பாடு, அரசு பஸ்களின் தரத்தை பாதுகாப்பது மேற்கொள்ளப்படும்.
நல்ல நடவடிக்கை.

* சாலை பாதுகாப்புக்கான மத்திய வாரியம் அமைக்க வலியுறுத்தப்படும். நல்ல முயற்சி.
* நெடுஞ்சாலைகளில் கட்டுப்பாடற்ற சுங்கவரி வசூலிப்பு ரத்து செய்ய வலியுறுத்தப்படும்.
மக்களின் வரவேற்பை பெறும். ஆனால், வலியுறுத்தலுக்கு பலன் கிடைப்பது சந்தேகமே.

ரயில்வே துறை


* சரக்குப் போக்குவரத்துக்கு, சென்னை - குமரி தனி ரயில் பாதை அமைக்கப்படும்.
தமிழக வளர்ச்சிக்கு அவசியான திட்டம். 
* தமிழக முக்கிய ரயில் திட்டங்கள், மாநில அரசின் நிதி பங்கீடு மூலம் விரைவாக முடிக்கப்படும்.
பா.ம.க., தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற அம்சமாக இருந்தபோதிலும், இது, தமிழகத்திற்கு மிக அவசியம் என்பதால் வரவேற்கலாம்.

* தமிழகத்தில், ஒரு வழி ரயில் பாதைகள் அனைத்தும் இரட்டை பாதைகளாக மாற்றப்படும். பாதைகளும் மின்மயமாக்கப்படும்.
மத்திய ரயில்வே துறையால், இந்த பணி படிப்படியாக நடக்கிறது.

* மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மெட்ரோ ரயில் சேவை துவக்க செயல் திட்டம் வகுக்கப்படும்.
இது ஏற்கனவே, தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட தேர்தல் அறிக்கைகளில் இடம் பெற்றுள்ளது.

உயர்கல்வி
* பல்கலை துணைவேந்தர், பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் நியமனம் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்த, விதிமுறைகள் வகுக்கப்படும்.
* கல்வியாளர்களின் கவலையை போக்கும் அறிவிப்பு. ஆனால், நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல.
* தனியார் உயர்கல்வி நிறுவனங்களை சமூகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லுாரிகளும், அரசு கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்பது உறுதி செய்யப்படும்.
கேட்பதற்கு நன்றாயிருக்கும் வாக்குறுதி. சட்டரீதியாகக் கூட, இது சாத்தியமேயில்லை.
* கல்லுாரி, பல்கலைகளில் பேராசிரியர்கள், ஊழியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். கவுரவ விரிவுரையாளர்கள், பணி நிரந்தரம் செய்யப்படுவர்.
இந்த கூட்டணிக்கு இது புதுசு. ஏற்கனவே தி.மு.க.,வும், பா.ம.க.,வும் பலமுறை பாடிய பல்லவிதான்.
* மாணவர்கள் வங்கிகளில் பெற்றுள்ள கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, மாநில அரசே அவற்றை செலுத்தும்.
இதுவும், ரீ-மிக்ஸ் தான். தி.மு.க., - பா.ம.க., கடைகள் அறிவித்த அதே தள்ளுபடி.

இலவச வீடு
* சொந்த வீடு இல்லாத, அனைத்து ஏழை குடும்பங்களுக்கும், உள்ளாட்சி நிலை வேறுபாடு இன்றி, வீடு கட்ட பெருந்திட்டம் உருவாக்கப்படும்.
* ஆண்டுக்கு, ஒரு லட்சம் பசுமை வீடு கட்ட இலக்கு நிர்ணயிக்கப்படும். ஒரு வீட்டுக்கு, நான்கு லட்சம் ரூபாயாக நிதி உயர்த்தப்படும்.
மத்திய அரசு, 'அனைவருக்கும் வீடு' திட்டத்தை அறிவித்து, மாநில அரசுகளுக்கு நிதி வழங்கி வருகிறது. ஏற்கனவே உள்ள, குடிசை மாற்று வாரிய திட்டங்களின் மறு பதிப்பு.

இலவச வீட்டுமனை பட்டா


* கிராமங்கள், நகர்ப்புற பகுதிகளில், பட்டா இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும்.
* பல வகை புறம்போக்கு நிலங்களில், குடியிருப்போருக்கு, வகை மாற்றம் செய்து பட்டா வழங்கப்படும்.
முந்தைய தி.மு.க., ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டு இப்போதும், இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. புதிதாக, இதில் ஏதாவது செய்தால் சட்ட சிக்கல் ஏற்படும்.

மோட்டார் தொழில்
* சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட நகரங்களில், 'ஆட்டோ நகர்' உருவாக்கப்படும். இங்கு மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி ஆலைகள் நிறுவப்படும்.
நல்ல முயற்சி. இதன் மூலம் இன்ஜினியரிங் பட்டதாரிகள், டிப்ளமோ இன்ஜினியர்கள், ஐ.டி.ஐ., சான்றிதழ் பெற்றவர்கள் பல ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.

காவல் துறை

* கொலை, கொள்ளை, பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் கொடுமைகள், வழிப்பறி, நகை பறிப்பு நடக்காமல் இருக்க, சட்டம்- - ஒழுங்கு காக்கப்படும்.
வழக்கமான வாய்ப்பாட்டு. இதைப்பாடாத கட்சிகளே இல்லை.
* காவலர்களுக்கு சங்கம் வைக்கும் உரிமை மற்றும், எட்டு மணி நேர வேலை உறுதி செய்யப்படும்.
பின்விளைவுகளை ஆராயாத அறிவிப்பு. காவலர் எண்ணிக்கையை அதிகப்படுத்தாமல், இதை நடைமுறைப்படுத்தினால், சட்டம் - ஒழுங்கு சந்தி சிரித்துவிடும்!
* கூலிப்படையினர், ரவுடிகள், சமூக விரோதிகள் குறித்து 
மாவட்ட வாரியாக கணக்கெடுத்து, சமூக விரோத நடவடிக்கைகள் ஒடுக்கப்படும்.
இது, போலீஸ் அதிகாரிகளின் அன்றாட பணி. இதை தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது, காவல் நிர்வாகம் தொடர்பான அறியாமையின் வெளிப்பாடே.
* காவல் துறையில், காலிப்பணியிடங்கள் முழு அளவில் நிரப்பப்படும்.

கீறல் விழுந்த ரெக்கார்டு.
l மாநகராட்சி, நகராட்சி மற்றும் முக்கிய நகரங்களில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். குற்றங்கள் குறைய உதவும்.
* ஊர்க்காவல் படையினருக்கு முன்னுரிமை அடிப்படையில், காவல்துறையில் பணியாற்றும் வாய்ப்பு அளிக்கப்படும். நல்ல விஷயம்தான். முதலில் ஊர்க்காவல் படையினரை, லஞ்ச, லாவண்ய முறைகேட்டில் போலீசார் ஈடுபடுத்துவதை தடுக்க வேண்டும்.
* பெண்கள் மீதான பாலியல் புகார்களில், நடவடிக்கை எடுக்க தவறும் காவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதில் என்ன புதுமை என்பதை, ம.ந.கூ.,வினர் விளக்க வேண்டும்.
* கொலை குற்றங்கள், பாலியல் கொடுமைகள் குறித்த வழக்குகளை, நீதிமன்றங்களில் முறையாக நடத்திட தனியான காவல் பிரிவு உருவாக்கப்படும்.
வரவேற்கத்தக்கது.
* பெண் காவலர்களுக்கு பகல் நேர பணி மட்டுமே வழங்கப்படும். இரவு நேர பணி வழங்கப்பட மாட்டாது. 
சபாஷ்!

சமூக நீதி
l ராஜ்யசபா எம்.பி., தேர்தலில், இடஒதுக்கீட்டை நடை முறைப்படுத்த வலியுறுத்துவோம். ராஜ்யசபா தேர்தலில், வேட்பாளர்களை முடிவு செய்வது அரசியல் கட்சிகளே. அவர்களே இட ஒதுக்கீட்டை அவர்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கு யாரிடம் வலியுறுத்தப் போகிறார்கள் என்பது தெளிவாக இல்லை.

மணல் விற்பனை

* ஆற்று மணல், தாது மணல், கிரானைட், பாக்சைட், சுண்ணாம்புக் கல் உள்ளிட்ட, கனிமவளக் கொள்ளைகள் தடுக்கப்படும். 
* மணல் உள்ளிட்ட கனிம வள வியாபாரம், அரசு நிர்வாகத்தின் வாயிலாக, மக்கள் குழுக்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும்.
* ஏரி, குளங்களில், விவசாயிகள் சொந்த உபயோகத்துக்கு மண் எடுக்க, உடனுக்குடன் அனுமதி வழங்கப்படும்.
பிரதான கட்சிகளும், இதை கூறி உள்ளன. இருந்தாலும், 'மக்கள் குழுக்கள்' என்பதில், இடம்பெறுவது யார் என தெளிவுபடுத்தினால் நல்லது.

மக்கள் சபை

* உள்ளாட்சி நிர்வாகம் வெளிப்படை தன்மையுடன் செயல்பட, கிராமசபை கூட்டங்கள் வாயிலாக மட்டுமே திட்டங்கள், செயல்பாடுகளுக்கு ஒப்புதல் பெறப்படும்.
* நகர்ப்புற உள்ளாட்சிகளில், வார்டு அடிப்படையில், மக்கள் சபை கூட்டங்கள் நடத்தப்படும்.
*l கிராமப்புற, நகர்ப்புற கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தங்கள் இணையதளம் வாயிலாக வெளியிடப்படும். மக்கள் பங்கேற்புடன் உள்ளாட்சிகள் வாயிலாகவே திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
* உள்ளாட்சிகளில் பெண்கள், பழங்குடியினர், தலித்துக்கள் தங்கள் அதிகாரங்களை சுயேச்சையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
உள்ளாட்சி அமைப்புகளில், அரசியல் பின்னணி உள்ள நபர்களின் கட்சி ரீதியான அணுகுமுறை குறையாத வரை, இது வெத்து வேட்டாகவே இருக்கும்.

தகவல் தொழிற்நுட்பம்
* அன்னிய நாடுகளில், தங்கள் தொன்மையான அறிவு பாரம்பரியத்தை நிரூபிக்கும், தமிழ் இளைஞர்களை ஒருங்கிணைத்து, தமிழகத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுவர்.
நல்ல திட்டம். எனினும், வெளிநாட்டில் பிறந்து, வளர்ந்த மற்றும் புலம் பெயர்ந்தவர்களை எவ்வாறு ஒருங்கிணைப்பது; அவர்களை எவ்வாறு பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்பதை விளக்கி இருக்கலாம்.

* பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஐ.டி., எனும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், எட்டு மணி நேரம் வேலையை அமல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 
* இது, நடைமுறைக்கு உதவாது. இதுபோன்ற பரிந்துரைகள், நிறுவனங்களில் சுமுகச் சூழலை பாதிக்கும். 

வணிகர் நலன்

* வணிக வரித் துறையில், ஒட்டுமொத்த தீர்வுக்கான திட்டம் என, கணினி மயமாக்கியதில் *ள்ள குளறுபடிகள், சிறு வணிகர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும். இந்த நடைமுறை திரும்ப பெறப்படும்.
* பல குழப்பங்கள் உள்ளதாக, வணிகர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் உணர்வுகளை அறிந்து, வெளியிட்ட அறிவிப்பு. குழப்பங்களை நீக்கி, தெளிவு 
ஏற்படுத்த வேண்டும்..

* வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் கொண்டு வரப்படும், உணவு பொருட்களின் தரத்தை ஆராய நிபுணர் குழு அமைக்கப்படும்.
இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை. உணவு பாதுகாப்புத் துறையே செயல்படாமல் முடங்கி கிடக்கிறது.
l சாலையோர வியாபாரிகளுக்கு, அடையாள அட்டையும், வியாபார சான்றும் வழங்கப்படும். சாலையோர வியாபாரம் அங்கீகரிக்கப்பட்டு, உள்ளாட்சி, போலீஸ் துறை மூலம் தேவையான உரிமங்கள் வழங்கப்படும்.
வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.  நகரங்களில், ஆக்கிரமிப்பால் சாலைகள் குறுகிவிட்ட நிலையில், சாலையோர வியாபாரத்திற்கு அங்கீகாரம் அளிப்பது பல சிக்கல்களை ஏற்படுத்தும். இதற்காக, தனியாக இடம் ஒதுக்கி கொடுப்பது நலன் பயக்கும்.

l சுயதொழில் புரியும் சிறு வணிகர்களுக்கு, வங்கிகள் மூலம், குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். தொழில் நிறுவனங்களுக்கு இலவச காப்பீடு தரப்படும்.
பா.ம.க., - தி.மு.க., - பா.ஜ., வாக்குறுதிகள் இவை
l சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட மாட்டாது.
ஏற்கனவே, தமிழக அரசு எடுத்துள்ள முடிவுதான். அனைத்து கட்சிகளும் வாக்குறுதி அளித்துள்ளன.

பஞ்., தலைவர்களுக்கு ஊதியம்

l கிராமப் பஞ்சாயத்து தலைவர்களுக்கு, கேரளாவில் உள்ளது போன்று, மாத ஊதியம் வழங்கப்படும்.
எந்தவித அரசியல் பின்னணியும் இன்றி, பதவிக்கு வருபவர்களை ஊக்குவிக்கும். 
l மாநாடுகள், பொதுகூட்டங்கள், திருவிழாக்களுக்கு, காவல்துறை அனுமதி அளிக்கப்படும் போதே, உள்ளாட்சி நிறுவனத்துக்கு கழிவு மேலாண்மை கட்டணமும் வசூலிக்கப்படும். 
யாருக்காகவும், சமரசம் செய்து கொள்ளமல் செயல்பட்டால், இது சிறப்பான திட்டம்.

திரைப்படத்துறை

l திரைப்பட தொழிலாளர்கள், நலிவுற்ற திரைப்பட, சின்னத்திரை கலைஞர்கள் நலன் பாதுகாக்கப்படும்.
திரைப்படத்துறையை பொறுத்தவரை நடிகர், இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர் என யாராக இருந்தாலும், உச்சத்தில் இருந்தால் மட்டுமே பணமும், புகழும். வீழ்ச்சி அடைந்து விட்டால் அவ்வளவுதான். இதற்கேற்ப திட்டங்களை ஏற்படுத்தினால், திரைப்படத் துறையினர் அனைவரது நலனும் பாதுகாக்கப்படும். 


l அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் வசூலிக்கும் தியேட்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் தலையீட்டால், கட்டண கொள்ளையை தடுக்க முடியாத நிலையே நீடிக்கிறது.

l திரைப்படத் துறைக்கு விதிக்கப்படும், 30 சதவீத வரி, 15 சதவீதமாக குறைக்கப்படும்.
பாதி இலவசம் போலவே இந்த அறிவிப்பு. கோடிக்கணக்கில் புரளும் திரைப்படத்துறையில், வரி விலக்கால், அரசுக்குதான் வருவாய் இழப்பு. இதனால், மக்களுக்கு பயன் இல்லை.

l திரைத்துறையில் தனிநபர்கள் ஆதிக்கம், அரசின் தலையீடு முற்றிலுமாக ஒழிக்கப்படும். திரைத்துறையினர் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படும்.
l திருட்டு வி.சி.டி., விற்பனை தடுக்கப்படும்
பா.ம.க.,வும் இதே அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

வரி வருவாய்


l ஆண்டுக்கு, பல வகைகளில், 5,000 கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. நிலுவை வரி வசூல், புதிய வரி வருவாய், வருவாய் இழப்பை தடுப்பதால், 5,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.
ஐடியா எல்லாம், 'ஓகே' தான்; திட்டத்தில் தெளிவில்லை.
l அவசியமற்ற இலவசங்களை தவிர்ப்பதன் மூலமும், அவற்றை வினியோகிக்க, பராமரிக்க ஆகும் செலவும், 50 சதவீதம் குறையும். இதனால், ஆண்டுக்கு, 4,244 கோடி ரூபாய் சேமிக்கலாம்.
நல்ல முயற்சி தான். இதுமட்டுமின்றி, எந்த இலவசத்துக்கும் இடமளிக்காமல் இருப்பது நல்லது.
l மானியங்கள் மூலமான வருவாய் இழப்பை சரிகட்ட, போலி ரேஷன்
கார்டுகளை ஒழித்தல், ஊழல் தடுத்தல், மின் திருட்டை தடுத்தல், மின் சேமிப்பு போன்றவற்றின் மூலம், வருவாய் ஈடுசெய்யப்படும்.
சபாஷ். ஆனால், செயல்படுத்துவதில் பல்வேறு சவால்கள் எழும்.

l மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதால், ஆண்டுக்கு, 29 ஆயிரத்து, 672 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். இவற்றை, தாது மணல், கிரானைட் விற்பனையை முறைப்படுத்துவதன் ஈடுகட்ட முடியும்.
ஆஹா! அபாரம். ஆனால், இதையும் வேறு கட்சியினர் முன்பே அறிவித்துவிட்டனர். இந்த அறிவிப்பை 
வெளியிடும் முன், கனிம வளக் கொள்ளையில் தொடர்புடையதாக கூறப்படும், 'தோழருக்கு' சீட் கொடுத்ததை தவிர்த்திருக்கலாம்.

குழந்தைகள் நலன்
l 18 வயதுக்கு உட்பட்ட, அனைவரும் குழந்தைகளே என்ற வகையில், குழந்தைகளுக்கான சட்டம், விதிகளில் திருத்தம் செய்யப்படும். மாநில அளவில் குழந்தைகளுக்கான கொள்கை, செயல் திட்டம் உருவாக்கப்படும்.
இதில், பல்வேறு குளறுபடிகள் உள்ளன. தீர்வு காண்பது நல்லது.

l குழந்தை திருமணத் தடுப்பு சட்டம் உறுதியாக அமல்படுத்தப்படும். இளம் வயது திருமணங்களால் நேரிடும் பாதிப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
சட்டம் ஏற்கனவே உள்ளது. சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியம்.

l குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிக்கப்படும்
இந்த சட்டங்கள் ஏட்டளவில் தான் உள்ளன. ஏற்கனவே, தி.மு.க., - பா.ம.க., வாக்குறுதி அளித்துள்ளன.

கடன்கள் தள்ளுபடி

l கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகள் பெற்றுள்ள நிலுவைக் கடன், தவணை தவறிய அனைத்து வகை விவசாய கடன், நகைக் கடன்களும் தள்ளுபடி
செய்யப்படும்.
ஏற்கனவே கூட்டுறவு வங்கிகள், நகைக்கு கடன் தரும் அடகுக்கடைகள் போல் மாறி வருகின்றன. கடன்கள் தள்ளுபடி செய்து, மேலும் திவாலாக வழி வகுக்கும்.
l விவசாயிகள் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.
இலவசங்கள் தேவையில்லை என்பது போல், கடன் தள்ளுபடிகளும் தவிர்க்கப்பட வேண்டும். அடுத்தடுத்து, விவசாய கடன் கொடுக்க, வங்கிகள் தயங்கும் சூழல் ஏற்படும் என்பதால், இதை தவிர்க்க வேண்டும். இதை, பா.ம.க., - தி.மு.க., கட்சிகளும் அறிவித்துள்ளன. 
l மாணவர்கள் கல்விக் கடன் அனைத்தையும் அரசே ஏற்கும்; இதுவரை, மாணவர்கள் பெற்றுள்ள கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
பல்கலை வரை இலவச கல்வி என்பதும், கல்விக் கடன்களை அரசே ஏற்பதும் சரியான நடைமுறை அல்ல. கல்விக் கடன்களை தள்ளுபடி செய்வதும் சிக்கலாகும். கடன்களை அடைக்கும் வகையில், கடன் பெற்றோர் சுய தொழில் துவங்க ஊக்கம் அளிப்பதே நல்லது.


அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நலன்

l ஊதிய முரண்பாடுகள் தீர்க்கப்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாறுதல், எவ்வித முறைகேட்டிற்கும் இடமின்றி, கலந்தாய்வு அடிப்படையில்
நிறைவேற்றப்படும்.
இதே வாக்குறுதியை பல கட்சிகள் கூறியுள்ளன. 
l புதிய ஓய்வூதியத் திட்டம் முற்றாக ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்.
கடந்த முறை அ.தி.மு.க., அளித்த வாக்குறுதி; நிறைவேற்றப்படவில்லை. இம்முறை, அனைத்து கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றுள்ளது.

l ஊழியர் விரோத நடத்தை விதிகள் ரத்து செய்யப்படும்.
இது தேவையற்றது. நடத்தை விதிகள், ஊழியர்கள் ஒழுக்கத்துடன் பணியாற்ற வழிவகுக்கின்றன.


ஊழல் ஒழிப்பு

l உயர்மட்ட ஊழலை ஒழிக்க, தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் அமலாக்கப்படும். கிராம ஊராட்சி முதல், தலைமைச் செயலகம் வரை, ஊழலற்ற நேர்மையான, திறமையான நிர்வாகத்தை உறுதி செய்வோம்.
தி.மு.க., மற்றும் பா.ம.க.,வும் கூறியுள்ளன.

l நேர்மையான நிர்வாகம், விரைவான,
நிறைவான மக்கள் சேவை ஆகியவற்றை உறுதிப்படுத்த, 'சேவை பெறும் உரிமை சட்டம்' நிறைவேற்றப்படும்.
இதுவும், பிற கட்சிகள் அறிவித்ததே.

l ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட விதம் குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
இது வரவேற்கத்தக்கது. இதன் மூலம், திட்டங்களின் நிலையை, மக்கள் அறிந்து கொள்ள முடியும்.
l கடந்த கால ஆட்சிகளின், ஆடம்பர செலவு முறைகள் தவிர்க்கப்பட்டு, சிக்கன நிர்வாகம் மேற்கொள்ளப்படும்.
ஆடம்பரத்தை குறைத்தால், பெரும் தொகை மிச்சமாகும்.

சுகாதாரம்

 ஜெனிரிக் மருந்துகளை தயாரிக்க, 1990ம் ஆண்டில் மூடப்பட்ட, டி.டி.பி.எல்., - ஐ.டி,பி.எல்., போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் மீண்டும் இயங்க நடவடிக்கை.
'பிராண்டட்' மருந்து பெயர்களில், இஷ்டம்போல் விலை வைத்து, மக்களிடம் கொள்ளை நடக்கிறது. ஜெனிரிக் மருந்துதான் இதற்கு தீர்வு. யாரும் அறிவிக்காத, மூடப்பட்ட மருந்து ஆலைகள் திறப்பு விஷயத்தை கையில் எடுத்துள்ளது பாராட்டுக்குரியது.
 தொடர் சிகிச்சை தேவைப்படுவோருக்காக, ஐந்து மாவட்டங்களுக்கு, ஒரு சிறப்பு பரிந்துரை மருத்துவமனைகள் அமைக்கப்படும். இவை, சென்னை அரசு மருத்துவமனையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும். சென்னை அரசு மருத்துவமனை, உயர்தர சிகிச்சையுடன் கூடிய ஆராய்ச்சி மையமாக செயல்படும்.
தொலைநோக்குள்ள திட்டம். மேல் சிகிச்சைக்காக, மக்கள், சென்னைக்கு தான் வர வேண்டும் என்ற நிலை நீங்கும்; சென்னை அரசு மருத்துவமனையிலும், கூட்டம் குறையும். உயர் சிகிச்சைக்கு மட்டும் சென்னை வரும் நிலை என்பது மருத்துவ வசதிகள் மேம்படவும், ஆராய்ச்சிகளை மேம்படுத்தவும் வழிவகுக்கும்.
ஆயுஷ்' மருத்துவ முறை மேம்படுத்தப்படும். 
சிறப்புத் திட்டங்களுடன், இதற்காக பிரத்யேக பல்கலை அமைக்கப்படும். 
யாரும் அறிவிக்காத திட்டம். பாரம்பரிய மருத்துவத்தை மீட்டெடுக்கும் அருமையான திட்டம். வரவேற்கத்தக்கது. பல்கலை அமைப்பதால், இதுசார்ந்த கல்லுாரிகள், மருத்துவமனைகள் அதிகமாகும். 

 மாவட்டத்துக்கு, ஒரு பன்நோக்கு மருத்துவமனையுடன் கூடிய அரசு மருத்துவக் கல்லுாரி, செவிலியர் கல்லுாரிகள் துவக்கப்படும். வட்டார மருத்துவமனைகளிலும், முழு உடல் பரிசோதனை மையம் துவக்கப்படும்.
பா.ம.க., உள்ளிட்ட பல கட்சிகள் அறிவித்துள்ளன என்றாலும் பாராட்டுக்குரியதே.
 அனைத்து நெடுஞ்சாலைகளிலும் விபத்து தடுப்பு, சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும். 
குறிப்பிட்ட சாலைகளில், விபத்து மையங்கள் உள்ளன. 
 அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட்டு, உட்கட்டமைப்பு வசதிகள் மேற்படுத்தப்படும்.
பா.ஜ., - தி.மு.க., - பா.ம.க., எழுதிய, 'அதே மருந்துச் சீட்டு' தான்.
 தமிழகத்தில் சுகாதாரத் துறைக்கு, ஒட்டுமொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில், 6 சதவீதம் நிதி ஒதுக்கப்படும். சுகாதார செலவினங்களுக்கு, மத்திய அரசு தரும் நிதி, 30 சதவீதமாக உள்ளதை, 50 சதவீதமாக பெறப்படும்.
தற்போது, 0.8 சதவீதமே ஒதுக்கப்படுகிறது. மக்கள் நல்வாழ்வுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதால், சிகிச்சைக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலாம். இதற்கு, மத்திய அரசிடம் கூடுதல் நிதியைப் பெற, சுமுகமான உறவை மாநில அரசு பேண வேண்டும்.
மருத்துவ பணியாளர்கள், டாக்டர்கள், கிராமப்புற பணியில் 
ஈடுபடுவது கட்டாயம் ஆக்கப்படும்.
துணிச்சலான அறிவிப்பு. கிராமப்புறங்களில் சேவையாற்ற, டாக்டர்களுக்கு தேவையான தங்குமிடம், போக்குவரத்து வசதி, 
சிறப்பு ஊக்கத்தொகை உள்ளிட்டவற்றை வழங்குவது அவசியம்.
 நோய் தடுப்பு செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதை போக்க, கிராம சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் போதுமான அளவில் நியமிக்கப்படுவர்.
அரசின் நிதி நிலைமையை பலப்படுத்தாமல், புதிய நியமனங்கள் சாத்தியமற்றது. 
 குடும்பத்திற்கான நோய் சிகிச்சை செலவு, ஆறு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். அதற்கேற்ப, மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மாற்றி அமைக்கப்படும்.
தற்போது, மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில், உச்ச வரம்பு, 2 லட்சம் ரூபாயாக 
உள்ளதை, 6 லட்சம் ரூபாயாக மாற்றுவது, தனியார் மருத்துவமனைகளின் 
முறைகேடுகளுக்கே வழிவகுக்கும். எனவே, குறிப்பிட்ட சில நோய்களுக்கு, 6 லட்சம் ரூபாய் வரை அனுமதிக்கும் வகையில் காப்பீடு திட்டத்தில் மாற்றங்களை 
செய்யலாம்.

 தனியார் மருத்துவமனைகளில், குறிப்பிட்ட சதவீதம் ஏழை, எளிய நோயாளிகளுக்கு கட்டணமில்லாத மருத்துவ சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
காட்டு யானைக்கு கடிவாளம் போடும் முயற்சி; சாத்தியமே இல்லை. 
 தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், 'கேப்பிட்டேஷன் பீஸ்' என்ற நன்கொடை வாங்குவது தடுக்கப்படும். 
போகாத ஊருக்கு வழி.

பெருந்தொழில்கள்
 தென் மாவட்டங்களில் தொழில் தொடங்க முன்வரும் தொழில் முனைவோர் ஊக்குவிக்கப்படுவர். அரசின் சலுகைகளை அளிப்பதில், இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஏற்கனவே கேள்விப்பட்டவை. 
தமிழகத்தில் மூடப்பட்டுள்ள நோக்கியா, பாக்ஸ்கான் உள்ளிட்ட பன்னாட்டு தொழில் நிறுவனங்களை மீண்டும் 
இயங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எல்லா கட்சிகளும் இதைத்தான்சொல்கின்றன. 

 தமிழ்நாட்டில், தொழில் துவங்க முன்வரும் தொழில் முனைவோருக்கு, ஒற்றைச்சாளர முறையில், தேவையான உரிமங்கள், அரசு அனுமதிக்கு விண்ணப்பித்த ஒருமாத காலத்திற்குள் வழங்கப்படும்.
அ.தி.மு.க., அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. மேலும் சில கட்சிகளின் தேர்தல் 
அறிக்கையிலும் இது கூறப்பட்டுள்ளது.
 தென் மாவட்டத்தில், நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 
தொழிற்சாலைகள் துவங்கப்படும்.
இதுவும் பிற கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

 தொழிற்சாலைகளுக்காக கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். 10 சதவீத பங்கு, நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படும்.
புதுமையானது; வரவேற்கத்தக்கது.

பட்ஜெட்டில் சேமிப்பு
தமிழக அரசின், 2015 - 16ம் ஆண்டு பட்ஜெட்டின் படி, இலவசங்கள், மானியங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை, 59,185 கோடி ரூபாய். இது, மொத்த பட்ஜெட்டில், 40 சதவீதம். கடந்த ஐந்து ஆண்டுகளில், இலவச பொருட்கள் வினியோகிக்க, 42,441 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தேவையற்ற இலவசங்களை முறைப்படுத்துவதன் மூலம் கணிசமாக வருவாய் சேமிக்க முடியும். 
இது வரவேற்கத்தக்கது. இலவசங்களுக்கு செலவிடும் தொகையை, வளர்ச்சி திட்டங்களுக்கு செயல்படுத்தலாம்.

வேளாண்மை

l வேளாண் உற்பத்தி அடுத்த, ஐந்து ஆண்டுகளில், மூன்று மடங்கு அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்படும்.
நீர் தட்டுப்பாடு காரணமாக, இருமடங்கு உற்பத்தி, மும்மடங்கு லாபம் என்று தற்போதைய அ.தி.மு.க., அரசு அறிவித்த வாக்குறுதியை, ஐந்து ஆண்டுகளில் பூர்த்தி செய்ய முடியவில்லை.

l வேளாண் துறையில் ஆண்டுக்கு, ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
போதிய வருவாய் கிடைக்காததால், விவசாயிகள் பலரும் பிழைப்பு தேடி நகரங்களுக்கும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் செல்கின்றனர். இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த திட்டம் அமையும்.
l ஆண்டுதோறும் முத்தரப்பு கூட்டம் நடத்தப்பட்டு, கரும்பு விலை தீர்மானிக்கப்படும்.
அ.தி.மு.க., அரசு தன்னிச்சையாக கரும்பு கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ததால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். எனவே, விவசாயிகள், ஆலை அதிபர்கள், அதிகாரிகள் பங்கேற்கும் முத்தரப்பு கூட்டம் நடத்தினால், இப்பிரச்னையை சமாளிக்கலாம்.
l விவசாயிகள், தங்கள் கோரிக்கையை அரசுக்கு தெரிவிப்பதற்காக, நிரந்தரமாக மாநில விவசாயிகள் ஆணையம் அமைக்கப்படும்.
மற்ற ஆணையங்களை போல அல்லாமல், இந்த ஆணையம் இயங்கினால், உண்மையிலேயே விவசாயிகள் பிரச்னை தீரும். விவசாய பொருட்கள் உற்பத்தியும் அதிகரிக்கும்.
l வேளாண் சார்ந்த துணை தொழில்களான தேனீ வளர்ப்பு, பட்டு வளர்ப்பு, சிப்பி காளான் உற்பத்தி, தீவன பயிர் உற்பத்தி, கடல்பாசி உற்பத்தி, சிறுதானிய சாகுபடி போன்றவற்றிற்கு ஊக்கம் அளிக்கப்படும்.
என்னென்ன உதவிகளை அரசு வழங்கும் என்பதே பல விவசாயிகளுக்கு தெரியவில்லை. எனவே, இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால், விவசாயிகள் மட்டுமின்றி அவர்களை சார்ந்துள்ள பலரும் பலன் பெறுவர்.
l தரிசு நிலங்களில், மூலிகைச்செடிகள் பயிரிடுவதற்கு கடன்கள் வழங்கவும், அவற்றை சந்தைப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறுதானியங்களை போலவே, சித்த வைத்தியம் குறித்த விழிப்புணர்வு, பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. எனவே, இந்த திட்டம் செயல்படுத்தினால், விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும்.

l அனைத்து விவசாயிகளுக்கும், மின் இணைப்பு குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கப்படும்.
ஏற்கனவே இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கையில், இதே வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

l கந்துவட்டி, மீட்டர் வட்டி கொடுமைகளில் இருந்து விவசாயிகளையும், பொதுமக்களையும் காப்பாற்றும் வகையில், மக்கள் நல வங்கி துவங்கப்பட்டு, கடன் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
தேசிய வங்கிகளில் கடன் நடைமுறைகளை எளிமைப்படுத்தி, உடனுக்குடன் கடன் கிடைக்க நடவடிக்கை எடுத்தாலே போதும்.

l முந்திரி எண்ணெய் தயாரிப்பு ஆலைகள் மற்றும் முந்திரி பதப்படுத்தும் ஆலைகள் நிறுவப்படும்.
அ.தி.மு.க., அரசு, முந்திரி ஏற்றுமதி மண்டலம் என்ற பெயரில், இதற்கான முதற்கட்ட பணிகளை செய்துள்ளது.
l மீத்தேன், ஷேல் காஸ், பெட்ரோலியம் உள்ளிட்ட திட்டங்களுக்கு இடம் அளிக்காமல், காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்.
மத்திய அரசின் உதவி இல்லாமல், இந்த திட்டங்களில், மாநில அரசால் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.

                                                                                                                                       நன்றி:தினமலர்.

=========================================================================================
இன்று,
ஏப்ரல்-29.

  • புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்(1891)
  •  ஓவியர் ரவி வர்மா பிறந்த தினம்(1848)
  • சர்வதேச நடன தினம்
  • ஜப்பான் தேசிய தினம்
=========================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?