சோதனை மேல் சோதனை!


கரூரில் அமைச்சர் நத்தம் நண்பர் வீடு, குடோனில் ரூ.5 கோடி பணம் சிக்கிய இரண்டாவது நாளில் மேலும் ஒரு அதிரடி சோதனை நடந்துள்ளது.  
சென்னையில் அமைச்சர் வைத்திலிங்கம் நண்பர் வீட்டில் நேற்று நடந்த திடீர் சோதனையில் மேலும் 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  இதுவரை இல்லாத அளவுக்கு வருமான வரி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய பறக்குபடை கூட்டாக பல மணி நேரம் துருவித்துருவி  சோதனை செய்தது. அடுத்தடுத்து அமைச்சர்களின் நண்பர்கள் வீடுகளில் சோதனை நடப்பதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. 
தமிழகத்திற்கு வரும் மே 16ம்  தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தலில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இதற்காக மாவட்டந்தோறும் அதிகாரிகள் தலைமையில் மூன்று பறக்கும்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடந்து வருகிறது. இதுதவிர வெளிமாநில  தேர்தல் பார்வையாளர்களும் தமிழக தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
தேர்தல் ஆணையம் என்னதான் விழிப்புடன் செயல்பட்டாலும்,  ஆளுங்கட்சியின் அத்துமீறலால் தமிழகத்தில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் சர்வசாதாரணமாக பணப்பட்டுவாடா செய்வதாக எதிர்கட்சியினர்  குற்றம்சாட்டி வருகின்றனர்.
கோடிகோடியாக: அதிமுகவினர் தாங்கள் நடத்தும் பொதுக் கூட்டங்களில் வெளிப்படையாகவே பணப்பட்டுவாடா செய்யும் செய்திகள் ஊடகங்களில்  வெளியாகின. இந்த சூழலில் ஏற்கனவே பல்வேறு இடங்களிலும் வருமானவரித்துறையினர், தேர்தல் அதிகாரிகள் நடத்திய அதிரடி ரெய்டில்  கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. 
இதில் உச்சகட்டமாக கரூரில் கடந்த 22ம் தேதி பறக்கும் படையினர் நடத்திய ரெய்டில் அதிமுக அமைச்சர்  நத்தம் விஸ்வநாதனின் ஆதரவாளர் அன்புநாதன் குடோனில் இருந்து ரூ.5 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. நாட்டிலேயே தேர்தல் சமயத்தில் பறிமுதல்  செய்யப்பட்ட பணத்தில் இதுதான் அதிகம். மேலும் இதுவரை 15 நாளில் ரூ.500 கோடி வரை பணம் பரிமாற்றம் நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 
இந்த நடவடிக்கை நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர்களை வளைக்க அதிமுக மேற்கொள்ளும்  நடவடிக்கைகளை கடுமையாக கண்காணித்து தடுக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தன.

மேலும் அதிமுகவினரின் பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேமுதிக தலைவர்  விஜயகாந்த், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மதிமுக பொது செயலாளர்  வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி  தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். 

 இந்த பரபரப்பான சூழ்நிலையில்  சென்னையில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக முக்கிய புள்ளி ஒருவரின் வீட்டில் நேற்று ரூ.5 கோடி பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய்குமார். 
இவர் அதிமுகவில் தஞ்சாவூர் மாவட்ட எம்ஜிஆர் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளார்.
 அமைச்சர்  வைத்திலிங்கத்தின் நெருங்கிய ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. இவரது மகன் விஜய் கிருஷ்ணசாமி தனது தாயுடன் எழும்பூர் எத்திராஜ் சாலையில் 16  அடுக்குமாடி கொண்ட தனியார் அபார்ட்மென்டில் வசித்து வருகிறார். இவரது  வீட்டில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக பல கோடி  ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
இதையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ்  லக்கானி உத்தரவின்பேரில், எழும்பூர் தேர்தல் நடத்தும் அதிகாரி சங்கீதா, உதவி அதிகாரி முரளி, வெளிமாநில தேர்தல் பார்வையாளர் சுனீல் உள்ளிட்ட  உயர் அதிகாரிகள் பலர் நேற்று மாலை 3.30 மணியளவில் விஜய்கிருஷ்ணசாமி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி வளைத்தனர். 
சம்பவ இடத்தில்  20க்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர். 16 மாடி கொண்ட ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பை தேர்தல் அதிகாரிகள் திடீனெ சுற்றி  வளைத்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. 
மணிக்கணக்கில்: விஜய்கிருஷ்ணசாமி குடியிருப்பின் 2வது மாடியில் வசிக்கிறார். அவரது வீட்டிற்குள் சென்ற அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை  மேற்கொண்டனர். மாலை 3.30 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 10 மணி வரை நீடித்தது. முதலில் லட்சக்கணக்கில் தான் பணம்  பதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. 
ஆனால் சோதனை செய்ததில் உள்ளே கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் பணம் இருந்ததால்  அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பணம் எண்ணும் எந்திரமும் கொண்டுவரப்பட்டது. இறுதியில் 5 கோடி பதுக்கி வைத்திருந்தது  கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்து வருமானவரித்துறை உதவி இயக்குனர் சஞ்சய்காந்தி சம்பவ இடத்திற்கு விரைந்தார். 
 விஜய்கிருஷ்ணசாமியிடம், பதுக்கப்பட்டிருந்த பணம் குறித்து அதிகாரிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். தேர்தல் நேரத்தில் இவ்வளவு பணத்தை  மொத்தமாக ஏன் பதுக்கி வைத்துள்ளீர்கள், இந்த பணம் எந்த வகையில் உங்கள் கைக்கு வந்தது, கட்சியில் உள்ளதால் வாக்காளர்களுக்கு பணம்  பட்டுவாடா செய்ய திட்டமிட்டுள்ளீர்களா என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர். 
மேலும் பணத்துக்கான ஆவணங்கள் குறித்தும் அதிகாரிகள் கேள்வி  எழுப்பினர். 

அப்போது, விஜய் கிருஷ்ணசாமி இந்த பணம் தனது உறவினர் ஒருவருக்கு சொந்தமானது என்று தெரிவித்தார். இருப்பினும் அதற்கான ஆவணங்கள்  எதையும் அவர் காட்டவில்லை. இதையடுத்து, அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். 

இந்த தகவலை உறுதி செய்வதற்காக எழும்பூர் தேர்தல் அதிகாரி  சங்கீதாவிற்கு போன் செய்தபோது, அவரது போன் நேற்று முழுவதும் சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்த விசாரணையின் போது விஜயகுமாரும் சம்பவ  இடத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் அதிமுக மூலம் வாக்காளர்களுக்காக கொண்டு வரப்பட்டது என்று  உறுதியாகியுள்ளது. 
இன்னும் கோடிகள்: அதிமுக முக்கிய புள்ளி பணம் பதுக்கியது தொடர்பாக தகவல் அறிந்த பத்திரிகையாளர்கள் ஏராளமானோர் சம்பவ  இடத்தில் குவிந்தனர். 
ஆனால் அதிகாரிகள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் உள்ளே என்ன நடக்கிறது என்று அறிவதில் குழப்பம்  ஏற்பட்டது. மேலும் அதிகாரிகள் தரப்பில் 5 கோடி என்று கூறப்பட்டாலும், மேலு பல கோடி ரூபாய் பதுக்கி வைத்திருக்கலாம் என்றும், முழு  விசாரணைக்குப்பின் அதுகுறித்து தகவல் கிடைக்கும் என்றும் தெரிகிறது.
அதிகாரிகள் சோதனை நடத்திய அந்த அடுக்குமாடி கட்டிடம் மிகவும் விலையுயர்ந்தது. பல கோடி மதிப்புள்ள அந்த கட்டிடத்தில் விஜய்கிருஷ்ணசாமி  ஆடம்பரமாக வாழ்ந்து வந்திருக்கிறார். 
கரூரில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர் வீட்டில் 5 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது  சென்னையில் மேலும் ஒரு அமைச்சரின் ஆதரவாளர் வீட்டில் 5 கோடி பணம் சிக்கியிருப்பது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.  
விஜய்கிருஷ்ணசாமி சொந்த ஊர்  தஞ்சாவூர் மாவட்டம் ஆவாரம்பட்டி. இவரது தம்பி சிவக்குமார்  காவல்துறை ஆய்வாளராக இருந்துள்ளார். அப்போது  இருவரும் சேர்ந்து பல இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி மோசடி செய்ததாக  புகார் எழுந்தது. 
இதுதொடர்பாக இருவர்  மீதும் சில வழக்குகள் கூட நிலுவையில்  உள்ளதாகவும் தெரிகிறது. இந்த பிரச்னை காரணமாக சிவக்குமார் இன்ஸ்பெக்டர் பதவியை ராஜினாமா  செய்துவிட்டார்.
அதிமுகவின்  பணப்பதுக்கல் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறும்போது, அதிமுகவினர் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற  பல கோடி பதுக்கி வைத்துள்ளனர் என்று தெரிவித்தார். 
அதை நிரூபிக்கும் வகையில் தற்போது சென்னை மாவட்டத்தில் 5 கோடி பிடிபட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது. அதிமுக நிர்வாகிகளின் வீடுகளில் ெதாடர்ந்து கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இதுவரை அதிமுகவின்  அத்து மீறல்களைஅனுமதித்து கண்டு கொள்ளாமல் இருந்த தேர்தல் ஆணையம் திடீரென அதிமுக பிரமுகர்களை ஓட ,ஓட விரட்டி சோதனையிடுவது ஏன்?என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 இந்த சோதனைகள் எல்லாம் கடைசி வரை அதிமுகவுடன் கூட்டணி வைக்க அலைந்து ஜெயலலிதா விரட்டியதால் கோபம் கொண்ட பாஜக மேலிட தாக்குதல்கள் என்று சொல்லப்படுகிறது.

பாஜக ஆதரவை கண்டு கொள்ளாமல் மேல்சபையில் அதிமுக ஆதரவுதான் அதற்கு தேவை என்று ஜெயலலிதா நடந்து கொண்ட முறையும்,மத்திய பாஜக அமைச்சர்களை மரியாதைக்குறைவாக நடத்தியதால் உண்டான கோபம் ,பெங்களுரு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த ஜெயலலிதாவை அருண்ஜெட்லி மூலம் வெளியே கொண்டு வந்தது குமாரசாமி மூலம் அவரை குற்றமற்றவர் என்று சொல்லவைத்தும் செய்நன்றி இல்லாமல் ஜெயலலிதா இருப்பதும் மோடிக்கு கோபத்தை உண்டாக்கியதாம்.மோடியை விட அதிக கோபம் அமீத் ஷாவிற்குத்தானாம்.

அதனால் தேர்தல் நேரத்தில் வாக்களர்களுக்கு கொடுக்கவைத்திருக்கும்  பணத்தை முடக்கி  விட்டால் ஜெயலலிதா கட்சி வெற்றி  வாய்ப்பை கணிசமாக பறித்து  விடும் என்ற கணக்கில்தான் பாஜக மோடி மத்திய அரசு தனது வருமான வரித்துறை,தேர்தல் ஆணையம் மூலம் இந்த பயமுறுத்தும் தாக்குதலை துவக்கி உள்ளது.

என்றே வடக்கு காற்று மூலம் செய்திகள் வருகின்றன.

=======================================================================================
இன்று,
ஏப்ரல்-25.
 மார்க்கோனி
புதுமைப்பித்தன் பிறந்த தினம்(1906)

  • சர்வதேச மலேரிய விழிப்புணர்வு தினம்

  • போர்ச்சுகல் விடுதலை தினம்(1974)

  • வானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி பிறந்த தினம்(1874)

  • அமெரிக்கா, ஸ்பெயின் மீது போரை அறிவித்தது(1898)
புதுமைப்பித்தன் 
கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலி யூரில் (1906) பிறந்தார். 

இயற் பெயர் சொ.விருத்தாசலம். தந்தை தாசில்தார். அவர் ஓய்வு பெற்றதும் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு குடும்பம் குடியேறியது.

தொடக்கக் கல்வியை செஞ்சி, கள்ளக்குறிச்சி, திண்டிவனத்தில் பயின்றார். நெல்லை இந்துக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். உலக இலக்கியங்களை தேடித் தேடி வாசித்தார். இவரது முதல் படைப்பான ‘குலாப்ஜான் காதல்’ 1933 இல் வெளிவந்தது.

இவரை பத்திரிகை உலகுக்கு அழைத்து வந்தவர் வ.ராமசாமி. சென்னையில் 1934-ல் குடியேறினார். ‘ஊழியன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். ‘மணிக்கொடி’ இதழில் இவரது படைப்புகள் பிரசுரமாகின. 

அதில் வெளியான இவரது முதல் சிறுகதை ‘ஆத்தங்கரைப் பிள்ளையார்.’
‘மணிக்கொடி’, ‘கலைமகள்’, ‘ஜோதி, ‘சுதந்திரச் சங்கு’, ‘ஊழியன்’, ‘தமிழ்மணி’ உள்ளிட்ட பல இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளிவந்தன. ‘புதுமைப்பித்தனின் கதைகள்’ என்ற தொகுப்பு 1940இல் வெளியானது. ‘கிராம ஊழியன்’, ‘சிவாஜி’ போன்ற சிற்றிதழ்களில் பணம் பெற்றுக்கொள்ளாமல் எழுதினார். 
எழுத்துப் பணியில் 15 ஆண்டுகளுக்கும் குறைவாகவே ஈடுபட்டார். அதற்குள் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், எண்ணற்ற மொழிபெயர்ப்புகள், புத்தக விமர்சனங்கள் எழுதினார்.

சென்னை, தஞ்சாவூர் அல்லாத பிற வட்டார வழக்கு தமிழில் எழுதிய முதல் எழுத்தாளர் இவர். இவரது கதாபாத்திரங்கள் பெரும்பாலும் நெல்லைத் தமிழ் பேசின. 

மாக்சிம் கார்க்கி, எர்னஸ்ட் டோலர், ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற படைப்பாளிகளின் 50-க்கும் மேற்பட்ட படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்தார்.

இவர் சிறந்த இலக்கிய விமர்சகரும்கூட. சொ.வி., ரசமட்டம், மாத்ரு, கூத்தன், நந்தன், கபாலி, சுக்ராச்சாரி, இரவல் விசிறிமடிப்பு ஆகிய புனைபெயர்களில் எழுதினார். இலக்கியத்தின் பல துறைகளிலும் எழுதினாலும், சிறுகதைகள்தான் இவருக்கு தனியிடம் பெற்றுத் தந்தன. 

‘காஞ்சனை’, ‘நாசகாரக் கும்பல்’, ‘மனித யந்திரம்’, ‘பொன்ன கரம்’, ‘இது மிஷின் யுகம்’, ‘சாபவிமோசனம்’, ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’, ‘ஒருநாள் கழிந்தது’, ‘சிற்பியின் நரகம்’, ‘செல்லம் மாள்’ முதலான அற்புதமான படைப்புகள் சாகாவரம் பெற்றவை.

திரைப்படத் துறையிலும் ஆர்வம் செலுத்தினார். ‘அவ்வை’, ‘காமவல்லி’ ஆகிய படங்களில் பணிபுரிந்தார். சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, திரைப்படம் தயாரிக்க முயன்றார். 
அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.

கூர்மையான சமூக விமர்சனம், அபாரமான அங்கதம், கதை வடிவங்களில் பரிசோதனை, வேகமான நடை, ஆழம், துல்லியமான சித்தரிப்புகள், வலுவான பாத்திரப் படைப்புகள் ஆகியவை இவரது தனி முத்திரைகள்.

‘ராஜமுக்தி’ படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுத 1947-ல் புனே சென்றிருந்தபோது, காசநோயால் பாதிக்கப்பட்டார். ஊர் திரும்பிய பிறகும் உடல்நிலை தேறவில்லை. 

மிகக் குறுகிய காலமே படைப்புலகில் இருந்தாலும் தமிழ் இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த புதுமைப்பித்தன் 42-வது வயதில் (1948) மறைந்தார். 

இவரது படைப்புகள் 2002 இல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
========================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?