8 கன்டெய்னர் பணம் எங்கிருந்து வந்தது?

 பணத்தை அள்ளிக்கொண்டு போன கண்டெய்னர்கள் 8 ஆனால் பிடிபட்டது 3 மட்டும்தான்.3லும் 570 கோடிகள் என்பது மிகக் குறைவு.எல்லாக்கட்சியினர்,நியாயமான அதிகாரிகள் ,வருமான வரித்துறையினர் முன் வைத்து பணத்தை எண்ணினால் அதிர்ச்சி தரும் வகையில் கோடிகள் எகிறும் என்கிறார்கள் சில வங்கி அதிகாரிகளே?.காரணம் 570 கோடிகளுக்கு ஒரு லாரியே போதும் என்கிறார்கள். திருப்பூரில் 570 கோடி ரூபாய் பணத்துடன் பிடிபட்ட மூன்று கன்டெய்னர்கள் குறித்து அதிர வைக்கும் தகவல்கள் கசிந்துள்ளன. 
'பிடிபட்ட அன்றே எஸ்.பி.ஐ வங்கியின் மூத்த அதிகாரிகள் வெளியூருக்கு தப்பிச் சென்றது ஏன்?' 
என அதிர வைக்கிறார்கள் வங்கி ஊழியர்கள் சிலர். 

கோவை, ஸ்டேட் வங்கி கிளையில் இருந்து மூன்று கன்டெய்னர்களில் எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை, திருப்பூர் வடக்குத் தொகுதி தேர்தல் கண்காணிப்பு அலுவலர் விஜயகுமார் நிறுத்தி சோதனை செய்தார். அதிகாரிகள் சோதனை செய்ய வந்திருக்கிறார்கள்? 
என்று தெரிந்ததும் மூன்று லாரிகளும் வேகமாகச் சென்றுள்ளன. அந்த வாகனத்தை விரட்டிச் சென்று தடுத்து நிறுத்தினர். விசாரணையில், ' ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலின்பேரில் விஜயவாடாவில் உள்ள ஸ்டேட் வங்கி கிளைக்குப் பணம் கொண்டு செல்லப்படுவதாக' தெரிவித்துள்ளனர்.
ஆனாலும், இதுதொடர்பான ஆவணங்களை தேர்தல் அதிகாரிகளிடம் காட்டவில்லை. கன்டெய்னர் லாரியின் எண்ணும், காட்டப்பட்ட ஆவணங்களிலும் பெருமளவு வித்தியாசம் இருந்துள்ளது. அதிலும், ஒரே நேரத்தில் 570 கோடி ரூபாய் பணம் பிடிப்பட்டது, பொதுமக்களிடையே கூடுதல் சந்தேகங்களைக் கிளப்பியது. 'இது யாருடைய பணம்? 
எதற்காக மாநிலம்விட்டு மாநிலம் கடத்தப்பட்டது? 
அதிலும், தேர்தலுக்கு ஒருநாள் முன்பு இப்படி அவசரம் அவசரமாகக் கொண்டு செல்லப்படுவதன் மர்மம் என்ன? 
அதிகாரிகளைப் பார்த்ததும் கன்டெய்னரில் வந்தவர்கள் தப்பியோட முயற்சித்தது ஏன்?' என பல கேள்விகளை அரசியல் கட்சிகள் எழுப்பின. 
நேற்று இதுதொடர்பாக தி.மு.க தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ' இவ்வளவு பெரும் தொகை எங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது? 
570 கோடி ரூபாயை, மூன்று கன்டெய்னரில் கொண்டு செல்லக்கூடிய அளவுக்கு உள்ள மிகப் பெருந்தொகையை எந்த ஒரு வங்கியிலாவது வைத்திருக்க முடியுமா? 
570 கோடி ரூபாய் பணத்தை எடுத்துச் செல்ல மூன்று கன்டெய்னர்கள் தேவைப்படுமா? 
மூன்று கன்டெய்னர்களிலும் இருந்த பணம் முறையாக, அதிகாரம் பெற்ற அலுவலரால் எண்ணப்பட்டதா? 
ஒரு வங்கியிலே எவ்வளவு பணத்தை ஒரு நேரத்தில் வைத்துக் கொள்ளலாம் என்று உச்ச வரம்பு விதி இருக்கிறதா இல்லையா? 
ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு இவ்வளவு பெரும் தொகையை எடுத்துச் செல்ல என்ன காரணம்? 
அந்த வண்டியிலே எந்த உரிய ஆவணங்களும் இல்லையே? 

ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்குக் கொண்டு செல்லப்பட்ட பணம் என்றால், பறக்கும் படையினர் வண்டியை நிறுத்த முயன்ற போது நிற்காமல் சென்றதற்கு என்ன காரணம்? 
தவறான வழிகளில் சேர்ந்த பணம் என்பதால் தானே கன்டெய்னர்களை நிறுத்தாமல் கொண்டு சென்றிருக்கிறார்கள். 
வண்டியில் ஏதோ ஜெராக்ஸ் நகல்களை மட்டும் காட்டினார்களாம். 
அந்த நகல்களிலும் முரண்பாடான தகவல்கள் உள்ளனவே. உண்மை நகல்கள் எங்கே? 
இவ்வளவு பணம் எடுத்துச் சென்றால் அது உண்மையான நேர்மையான நோக்கத்திற்கான பணமாக இருந்தால், இன்சூரன்ஸ் செய்திருக்க வேண்டும்.
அப்படி எந்த இன்சூரன்ஸ் ஆவணங்களும் இல்லையாம். 
ரிசர்வ் வங்கி விதி முறைப்படி ஒரு கோடி ரூபாய் கொண்டு சென்றால், அதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு பாதுகாப்போடு செல்ல வேண்டுமென்றும், 5 கோடி ரூபாய் கொண்டு சென்றால், அதற்கு எவ்வளவு பாதுகாப்பு இருக்க வேண்டும் என்பதற்கு விதிமுறைகள் உள்ளன. விதிமுறைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன. 
இந்தப் பணத்தை பகலில் அல்லாமல் இரவில் எடுத்துச் செல்ல என்ன காரணம்?" 
எனக் கேள்வி எழுப்பிருந்தார். 

'கன்டெய்னர் மர்மம்' குறித்து வங்கி அதிகாரி ஒருவரிடம் பேசினோம். 
வெளியில் வராத பல விஷயங்களை நம்மிடம் பேசினார் அவர். " இந்த விவகாரத்தில் ஸ்டேட் வங்கி அதிகாரிகள் பலரின் தலை உருளப் போகிறது.
 ரிசர்வ் வங்கியின் பெயரைப் பயன்படுத்தி தவறு செய்திருக்கிறார்கள். 
கன்டெய்னரில் பணத்தை அனுப்பிய கையோடு, ஸ்டேட் வங்கி கிளையின் முக்கிய அதிகாரிகள் அனைவரும் வெளியூருக்குச் சென்றுவிட்டார்கள். '
 வருமான வரித்துறை வங்கியில் தீவிர விசாரணை நடத்த முயற்சிக்கிறது' எனக் கிடைத்த தகவலின்பேரில், கண்டெய்னர் மூலம் ஆந்திராவுக்குக் கொண்டு செல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். 

இதற்கு ஆந்திராவைச் சேர்ந்தவரும், தமிழகத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் நபர் ஒருவர்தான் உதவியிருக்கிறார். 'பதவியைத் தக்க வைத்ததற்கான கைமாறு' என ஒரே வரியில் சொல்லிவிடலாம். 
கன்டெய்னர் பணத்தோடு சூரி ரெட்டி என்பவர் சென்றதாகச் சொல்கிறார்கள். அவர் ஒரு சாதாரண ஊழியர். 
இவ்வளவு பெரிய தொகைக்கு அவர் ஒருவர் மட்டும்தான் பொறுப்பாளி.
 இதைவிட, இந்தப் பணம் வங்கிக்குச் சொந்தமானது அல்ல என்பதற்கு வேறு காரணம் தேவையில்லை. தேர்தல் முடிந்த பிறகு பணத்தைக் கொண்டு போயிருக்கலாம். 
வருமான வரித்துறை இந்தப் பணத்தை மோப்பம் பிடித்துவிட்டதுதான், அவசரமாகக் கடத்தி செல்லப்படுவதற்குக் காரணம்" என்றார் விரிவாக. 

சில சந்தேகங்கள்: 
1. கோவை வங்கிகளின் வரலாற்றிலேயே இவ்வளவு பணத்தை இதுவரையில் கொண்டு சென்றதில்லை. 570 கோடியை சேமித்து வைக்கும் அளவுக்கான வசதிகள் ஸ்டேட் வங்கியில் இல்லை என்பது உண்மையா? இல்லையா? 

2. பணம் அனைத்தும் மரப் பெட்டிகளில் ஏதோ பிஸ்கட் பாக்கெட்டுகளை பேக்கிங் செய்வதுபோல், அடுக்கியிருந்தது சரியா? 

3. வங்கிகளின் அதிகாரப்பூர்வ ஆவணம் இல்லாமல், லுங்கி உடையில் காவல்துறையினர் சென்றது ஏன்? 

4. பணம் பிடிபட்டு 18 மணிநேரம் கழித்து வங்கி அதிகாரிகள் உரிமை கொண்டாடியது ஏன்? 

5. கன்டெய்னர் வண்டிகளுக்கு சாதாரண பூட்டைப் போட்டு பூட்டியது சரியா? 

6. கன்டெய்னர்களுக்கு ஏன் சீல் வைக்கப்படவில்லை?  
7.பணம் பறிமுதலான அன்றே எஸ்.பி.ஐ வங்கி அதிகாரிகள் வெளியூருக்குத் தப்பிச் சென்றது ஏன்? 

8. முக்கிய அரசியல் புள்ளியின் பணத்தை ஐதராபாத்துக்கு கொண்டு செல்ல முயற்சி நடந்ததா? 

9. தமிழகத்தைச் சேர்ந்த மூத்த முக்கியப் புள்ளியின் அழுத்தத்தைத் தொடர்ந்தும் அவருக்கு ஆதரவாக மத்திய ஜெட் வேக அமைச்சர் கட்டாய வற்புறுத்தல் அறிவுறுத்தலின் பேரிலும்தான்  வங்கி அதிகாரிகள் வேறு  வழியின்றி பணத்திற்கு உரிமை கோரினார்கள் என்ற தகவல் உண்மையா? 

-என அணிவகுக்கும் சந்தேகங்களை நம்மிடம் பட்டியலிட்டார் இந்தியன் வங்கி அதிகாரி ஒருவர். மேலும் அவர், " கோவை வங்கிகளின் வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய தொகையை நாங்கள் அனுப்பியதில்லை. 
மூன்று கண்டெய்னர் பணத்தையும் சேர்த்து 570 கோடி ரூபாய் என்பதை நம்ப முடியவில்லை. 
பணத்தின் மதிப்பு கூடுதலாக இருக்கவே வாய்ப்பு அதிகம். 
ஏற்கெனவே, ஐந்து கண்டெய்னர்கள் ஆந்திர போலீஸ் பாதுகாப்புடன் சென்று சேர வேண்டிய இடத்திற்குப் போய்விட்டது என்கிறார்கள். 
கடைசி நிமிடத்தில் இருக்கும் மீதிப் பணத்தையும் கடத்த முயற்சித்து மாட்டிக் கொண்டார்கள். ரிசர்வ் வங்கி ஆளுநர் நேரடியாக விசாரணை நடத்தினால், யாருடைய ஊழல் பணம்? 
எதற்காக ஆந்திரா சென்றது? 
கடைசி நிமிடத்தில் மாநிலம் விட்டு மாநிலம் கடத்த முயற்சித்தது ஏன்?
 என்பதற்கான முழு ரகசியங்களும் அம்பலமாகும்" என்கிறார். 

அரசின் பொருளாதார நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வரும், ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிடுவாரா? 
எனக் கேள்வி எழுப்புகின்றன அரசியல் கட்சிகள். 
தேர்தல் தொடங்கிய நாளில் இருந்தே கொங்கு மண்டலத்தை குறிவைத்தே வருமான வரித்துறையினர் படையெடுத்தனர்.
 'பெரும் பணம் சிக்கிவிடக் கூடாது' என்ற அச்சத்தில் கடைசி நிமிடத்தில் கண்டெய்னரில் கடத்த உத்தரவிட்டது யார்? 
என்ற மில்லியன் டாலர் கேள்விக்கான முடிச்சை ரிசர்வ் வங்கி அவிழ்க்குமா? 
இக் கேள்விகளுக்கு கண்டிப்பாக பதில்கள் தேவை ?
பதில் தருவது யார் ?
 1. திருப்பூர் அருகே, 570 கோடி ரூபாய் பணத்துடன் பிடிபட்ட லாரிகள், டீசல் போடுவதற்காக, சர்வீஸ் சாலையில் சென்று கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், கோவையில் இருந்து, அவை பிடிபட்ட இடம் வரை, 15 பெட்ரோல் பங்க்குகள் இருந்தன. அவற்றில் டீசல் நிரப்பாதது ஏன்? 
2. மேலும், பிடிபட்ட போது, மூன்று லாரிகளிலும் டேங்க் முழுவதும் டீசல் இருந்தது. பெருமாநல்லுார் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்பப்பட்டது தெரிய வந்துள்ளது. 
இதற்கான பதில் என்ன?
3. மூன்று லாரிகளும், தேர்தல் அதிகாரிகளால், 7 கி.மீ., துாரம் துரத்தி செல்லப்பட்ட போது, மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் சென்றுள்ளதாக தெரிகிறது. இது சாதாரண வேகம் தான், மேலும் சர்வீஸ் சாலையில் இதற்கு மேல் வேகமாக செல்ல முடியாது, அப்படி இருக்கையில் தேர்தல் அதிகாரிகளால் ஏன் உடனடியாக அவற்றை நிறுத்த 
முடியவில்லை? 
4. மூன்று லாரிகளிலும் மொத்தம், 195 மரப்பெட்டிகளில் பணம் இருந்தது. முதல் லாரியில் - 60, இரண்டாவது லாரியில் - 65, மூன்றாவது லாரியில் - 70. விதிமுறைகளின்படி, ஸ்டீல் பெட்டிகளில் தான் பணம் எடுத்துச்செல்லப்பட வேண்டும். இதற்கு தீ விபத்து அபாயமும் ஒரு காரணம். 
இதை கருதி, தீயணைப்பு கருவியும் வாகனத்தில் இருக்க வேண்டும். ஆனால், மரப்பெட்டியும், தீயணைப்பு கருவி இல்லாததும் சந்தேகத்தை 
கிளப்புகின்றன. 
5. பிடிப்பட்ட லாரிகளின் பதிவு எண்கள் - ஏபி 13 எக்ஸ் 8650, ஏபி 13 எக்ஸ் 8204, ஏபி 13 எக்ஸ் 5203.
இதில், ஏபி 13 எக்ஸ் 5203 என்ற பதிவு எண் தான் ஆவணங்களில் மாறி உள்ளது. ஆவணங்களில் உள்ள பதிவு எண் என்ன என்பதை அதிகாரிகள் தெரிவிக்க மறுப்பது ஏன்?
6. மூன்று லாரிகள் மற்றும், மூன்று இன்னோவா கார்கள் பிடிப்பட்டன. மூன்று லாரிகள் பற்றிய தகவல்கள் தான் வெளி வருகின்றன. மூன்று இன்னோவா கார்களில், இரண்டு மட்டும் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு உள்ளன. மூன்றாவது எங்கே? 
மூன்றாவது காரை எடுத்துச் சென்ற, வங்கி ஊழியர் சூரி ரெட்டி என்பவர் இதுவரை சம்பவ இடத்திற்கு வரவில்லை. வேறு அதிகாரிகள் தான் வந்து செல்கின்றனர். சூரிரெட்டி உண்மையிலேயே வங்கி ஊழியரா? சூரிரெட்டியை அதிகாரிகள் தேடாதது ஏன்? இந்த, இரண்டு வண்டிகள் யாருக்கு சொந்தமானவை? அதிகாரிகள் அவை பற்றி தகவல் வெளியிட மறுப்பது ஏன்? மூன்றாவது வண்டியை அதிகாரிகள் தேடாதது ஏன்?
7. கோவை போலீசாருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதா?
8. தேர்தல் ஆணையத்திடம் முன்கூட்டியே அனுமதி பெறாதது ஏன்?
9. விசாகப்பட்டினம் வங்கி கிளைக்கு, சென்னையில் இருந்து தான் பணத்தை எடுத்து செல்வது எளிது. கோவையில் இருந்து எடுத்து செல்ல முயற்சித்தது ஏன்?
10. இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையமும், ரிசர்வ் வங்கியும் நேரிடையாக எந்த பதிலும் கூறாமல், வருமான வரி அதிகாரிகளை கை காட்டுவது ஏன்?
11. இந்த விஷயத்தில் மத்திய அமைச்சர் தலையிட்டார் என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டி உள்ளார். யார் அந்த மத்திய அமைச்சர்?
12. இந்த பணம், ஸ்டேட் வங்கிக்கு உரியது என்றாலும், அதற்கான உரிமையை கோர, 18 மணி நேரம் ஆனது ஏன் என்ற கேள்விக்கு, சனிக்கிழமை இரவு பணம் பிடிப்பட்டது. அடுத்த நாள் ஞாயிற்று கிழமை. விடுமுறை தினம் என்பதால், அரசு வங்கி அதிகாரிகளிடம் தாமதம் ஏற்பட்டது என்று காரணம் கூறப்படுகிறது. 
இவ்வளவு பணம் பிடிபட்டும் விடுமுறையை காரணம் காட்டுவது சரியா? அப்படியானால் விடுமுறையை ஒட்டி பணத்தை எடுத்துச் சென்றதற்கான காரணம் என்ன? 
13. விசாகப்பட்டினத்தில், 77 ஸ்டேட் வங்கி கிளைகள் உள்ளன. 2,500 ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. இவற்றில் பணம் வைக்க, நாள் ஒன்றுக்கு, 40 கோடி ரூபாய் தேவை என்று, விசாகப்பட்டினம் எஸ்.பி.ஐ., வங்கி கிளை மேலாளர் பூர்ண சந்திர ராவ் கூறுகிறார். வங்கி கிளைக்கு, ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் தேவை என்பதை தெரிந்து வைத்து இருக்கும் அவர், மார்ச் மாதமே கோவை வங்கி கிளையிடம் பணம் கேட்டதாக கூறுகிறார். ஆனால், அதை எடுத்துச் செல்வதற்கு ஏன் 
இவ்வளவு தாமதம்?
14. இதற்கு முன் இது போல், பெரிய தொகை கொண்டு செல்லப்பட்டதற்கு உதாரணம் உண்டா என்ற கேள்விக்கு, விசாகப்பட்டினம் எஸ்.பி.ஐ., வங்கி கிளை மேலாளர் பூர்ண சந்திர ராவ் கூறுகையில், ''கடந்த செப்டம்பரில், மைசூரில் உள்ள ரிசர்வ் வங்கியின் கரன்சி வினியோக மையத்தில் இருந்து, 1,116 கோடி ரூபாயை இங்கு கொண்டு வந்தோம்,'' என, பதில் கூறியுள்ளார். 
ஆனால், ''மாநிலம் விட்டு மாநிலத்துக்கு ரொக்கம் கொண்டு செல்லும் வழக்கம் இல்லை. ஒரு மாநிலத்தில் உள்ள வங்கி கிளைக்கு பணம் தேவை என்றால், அருகில் உள்ள அதே வங்கியின் கிளையை நாடலாம் அல்லது அந்தப் பகுதியில் உள்ள ரிசர்வ் வங்கி கிளையை நாடலாம்; இது தான் நடைமுறை,'' என்று ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
15. இந்தியாவில் பண நிர்வாகத்தின் பொறுப்பு ரிசர்வ் வங்கி உடையது. நாட்டில் எந்த இடத்திலும் பண 
தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க; 18 இடங்களில் நோட்டு அச்சகங்கள் மற்றும் நாணய உற்பத்தி மையங்கள்
● ஒரு கிளை அலுவலகம்
● நேரடி நிர்வாகத்தில், கொச்சியில், ஒரு பண காப்பகம்
● வங்கிகளின் நிர்வாகத்தில், 4,211 பண காப்பகங்கள் என, ஒரு மாபெரும் பண நிர்வாக கட்டமைப்பை ரிசர்வ் வங்கி நடத்தி வருகிறது. இதில், வங்கிகளிடம் உள்ள பண காப்பகங்கள், அந்தந்த வங்கியின் செயல்பாட்டிற்கு மிக முக்கியமானது. வங்கிகளே பண காப்பகங்களை நடத்துவதன் மூலம், தங்கள் பண தேவைகளுக்கு, ஒவ்வொரு முறையும் ரிசர்வ் வங்கியை அணுக வேண்டியதில்லை. 
தனியார் வங்கிகளுக்கு பண காப்பங்களை நடத்தும் உரிமை முதலில், 1994ல் தான் கொடுக்கப்பட்டது. இதை பெற்ற வங்கி எச்.டி.எப்.சி., 
என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த காப்பகங்களில் நடக்கும் பண பரிவர்த்தனைகள் பற்றி, ரிசர்வ் வங்கிக்கு தகவல் தெரிவிப்பது அவசியம். அப்படி தெரிவிக்காவிட்டால் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். 
இதுபற்றி, ரிசர்வ் வங்கி, 2014ல் வெளியிட்ட சுற்றறிக்கையில், 'பண காப்பகங்கள், ஒவ்வொரு நாளும் நடக்கும் அனைத்து பரிவர்த்தனைகள் பற்றியும், அன்றிரவு, 9:00 மணிக்குள், 'ஐகாம்ஸ்' மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அன்று பண காப்பகத்தில் இருந்த தொகையின் மீது அபராத வட்டி வசூலிக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
நிலை இப்படி இருக்க, எஸ்.பி.ஐ., ஒரு பண காப்பகத்தில் இருந்து மற்றொன்றுக்கு பணத்தை மாற்றியது பற்றி ரிசர்வ் வங்கிக்கு தகவல் வரவில்லை என்று, ரிசர்வ் வங்கியின் தமிழ்நாடு பிராந்திய இயக்குனர் சதக்கத்துல்லா ஞாயிறன்று காலை கூறினார். தகவல் தெரிவிக்காததற்கு காரணம் என்ன?
16. விசாகப்பட்டினம் வங்கி கிளை மேலாளர் பூர்ண சந்திர ராவ், மூன்று 
கன்டெய்னர் லாரிகளுடன், மூன்று ஜீப்களில் போலீசாரை பாதுகாப்புக்கு அனுப்பியதாக கூறுகிறார். ஆனால், திருப்பூரில், மூன்று இன்னோவா கார்கள் பிடிப்பட்டுள்ளன. ஜீப் 
என்பது இன்னோவா காராக மாறியது எப்படி?
17. இப்பிரச்னை குறித்து தனியார் வங்கிகள் கூறுவது என்ன? அவை, என்ன மாதிரியான நடைமுறைகளை 
பின்பற்றுகின்றன? இது குறித்து தனியார் வங்கியின் நிர்வாக இயக்குனர் ஒருவர் கூறியதாவது:
ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான, 570 கோடி ரூபாய் சிக்கியிருப்பது பற்றி அறிந்தேன். இதேபோல், எங்கள் வங்கிக்கு சொந்தமான, ஐந்து கோடி ரூபாய், கடந்த சட்டசபை தேர்தலின் போது வழி மறிக்கப்பட்டது; நாங்கள் அதை பின்னர் மீட்டோம். 
அதுமட்டுமின்றி, கர்நாடகாவில் இருந்து, ஆந்திராவுக்கு பல கோடி ரூபாயை கொண்டு சென்ற போது, அங்கும் தேர்தல் அதிகாரிகள் முடக்கினர். வேறு மாநிலம் என்பதால், அதை மீட்டு வருவதற்கு, மூன்று 
நாட்களுக்கு மேல் ஆனது.
இதுபோன்ற நேரங்களில், மின்னஞ்சல் பரிவர்த்தனை, பணம்
அனுப்பியதற்கான, 'வவுச்சர்' மற்றும், இன்சூரன்ஸ் செய்யப்பட்டதற்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். எவ்வளவு பணம் கொண்டு செல்கிறோம் என்பதற்கு கட்டுப்பாடு இல்லை. எனினும், வழியில் உள்ள ஒவ்வொரு கரன்சி மையத்திலும் நின்று போகவேண்டும். 
எங்கள் கரன்சி வினியோக மையத்தில் அதிகபட்சமாக, 250 கோடி ரூபாய் வரை வைத்திருக்க அனுமதி உள்ளது. அதற்கு மேல், ஒரு மையத்தில் இருந்தால், அதை வேறு மையத்திற்கு மாற்றி விடுவோம். இவ்வாறு, மாற்றும் போது தான் ஸ்டேட் வங்கியின் பணம் சிக்கியிருக்கக்கூடும். 
வார விடுமுறை நாளில் பணம் சிக்கியதும், அது அரசு வங்கி என்பதாலும், அது தொடர்பாக யார் உடனடியாக உரிமை கோருவது என்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். பணம் எடுத்துச் செல்லும் முன், உள்ளூர் போலீசிடம் நாங்கள் சொல்லிவிட்டு புறப்படுவோம்.
பொதுவாக, வங்கிகள் இவ்வாறாக பணம் அனுப்புவதை வெளியில் சொல்ல விரும்பமாட்டார்கள். அது சில நேரங்களில், வேறுவித சிக்கலுக்கு வழிவகுக்கிறது. எங்கள் பணத்தை அனுப்பும் போது, எங்கள் வாகனம் என்பதை வெளியில் இருந்து பார்த்து அறிய முடியாது. பதிவுச்சான்றை பார்த்தால் தான், அது
எங்களுக்கு சொந்தமான வாகனம் என்பது தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.இந்த நடைமுறையை, எஸ்.பி.ஐ., பின்பற்றாததற்கு காரணம் என்ன?
18. ஒரு வங்கி கிளையில் இருந்து மற்றொரு வங்கி கிளைக்கு அதிகபட்சம், ஐந்து கோடி ரூபாய் தான் கொண்டு செல்ல முடியும் என்று கூறப்படும் நிலையில், 570 கோடி ரூபாயை, ஒரே நேரத்தில் கொண்டு சென்றதற்கான காரணம் என்ன?
19. ஒவ்வொரு கிளையும், அதன் வைப்புத் தொகைக்கு ஏற்ப, 4.5 சதவீத ரொக்கத்தை வைத்துக் கொள்ளலாம். அதற்கு அதிகமான ரொக்கத்தை, ரிசர்வ் வங்கி சார்பில் வங்கிகள் நிர்வகிக்கும், 'செஸ்ட்' என, அழைக்கப்படும் பண காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும். 4.5 சதவீதத்துக்கு கீழ் ரொக்கம் குறையும் போது, இந்த பண காப்பகத்தில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த நடைமுறையில் இப்படிப்பட்ட பண பரிவர்த்தனையின் நிலை என்ன?

20. கோவை ஸ்டேட் வங்கியிலிருந்து, 570 கோடி ரூபாய் ரொக்கத்தை, ஆந்திர மாநிலம் கொண்டு செல்ல விதிகள் அனுமதிக்கிறதா?
கோவையிலிருந்து இவ்வளவு அதிகமான ரொக்கம், ஆந்திராவிற்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை. விசாகப்பட்டினம் ஸ்டேட் வங்கி கிளைக்கு ரொக்கம் தேவைப்பட்டால், அந்த மாநிலத்தில் உள்ள, அந்த வங்கியின் பண காப்பத்தை தான் நாட வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைப்படி, கோவையில் சேமிக்கப்பட்ட, 570 கோடி ரூபாய் ரொக்கத்தை, சென்னை ரிசர்வ் வங்கியின் பண பாதுகாப்பு மையத்துக்குத் தான் கொண்டு சென்றிருக்க வேண்டும். விசாகப்பட்டினத்திற்கு கொண்டு சென்றது விதிகளுக்கு புறம்பானது. வழக்கத்திலும் இதுபோன்ற நடைமுறை இல்லை.
21. ஸ்டேட் வங்கிக்கு தமிழகத்தில், 144 பண காப்பகங்கள் உள்ளன. ஆந்திர எல்லையை ஒட்டி திருத்தணியில் இருந்து சென்னை வரை வசதியான இடங்களில் இவை உள்ளன. அப்படி இருக்கையில், கோவையில் இருந்து குறிப்பாக பணம் எடுத்துச் செல்லப்
பட்டது எதற்காக? 
22. வங்கியின் பணத்தை கொண்டு செல்லும் லாரி, வழியில் எங்காவது நிறுத்தப்பட்டால், நிறுத்தப்பட்ட, 15 நிமிடத்திற்குள் வங்கியின் தகுந்த அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். 
அந்த அதிகாரி, 'டிபாசிட் இன்சூரன்ஸ் அண்ட் கிரெடிட் கேரன்டி கார்ப்பரேஷன்' என்ற நிறுவனத்திற்கு, உடனடியாக தகவல் தெரிவித்திருக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்காவிட்டால், அந்தப் பணம் வங்கியுடையது அல்ல என்று கருதப்படும் என்பது விதி. 
இந்த நடைமுறையைப் 
பின்பற்றாமல், 18 மணி நேரம், தாமதம் செய்தது ஏன்? 

                                                                                                                                     
 =================================================================================================
இன்று,
மே-17.
  • உலக தொலைத் தொடர்பு தினம்
  • அர்ஜெண்டினா ராணுவ தினம்
  • நார்வே அரசியல் நிர்ணய தினம்
  • நியூயார்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது(1792)
  • வாஸ்கோடகாமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார்(1498)
  • ==================================================================================================
      100% தேர்தல் நடத்துவது இப்படித்தானா?
    தென்காசியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் 592 வாக்காளர்கள் ஓட்டுப்போட்டனர். 
    ஆனால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் 644 ஆக பதிவானதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    தென்காசி தொகுதிக்குட்பட்ட தென்காசி பொன்னம்பலம் நடுநிலைப்பள்ளியில் 4 வாக்குப்பதிவு மையங்கள் செயல்பட்டன. 
    இதில் 56வது வாக்குப்பதிவு மையத்தில் நேற்று மாலை வரை 592 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். மாலையில் வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தல் அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள வாக்குகளை சரிபார்த்தனர். 
    அப்போது அதில் 644 வாக்குகள் பதிவானதாக காண்பித்தது. 52 வாக்குகள் கூடுதலாக காண்பித்ததால் தேர்தல் அலுவலர்கள், வேட்பாளர்கள், பூத் ஏஜென்ட்டுகள்  அதிர்ச்சியடைந்தனர்.



    இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

    2025ல் தங்கம் விலை

    வினேஷ் போகத் வென்றார்!

    முடிவுக்கு வருகிறதா?