தெருத் தெருவாக வரக் காரணம்?
தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், தமிழகம் முழுவதும், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அ.தி.மு.க., தரப்பில், ஜெயலலிதா முதல், குண்டு கல்யாணம் வரையில், அ.தி.மு.க.,வுக்காக தீவிர பிரசாரத்தில் இருந்தாலும், கட்சியின் ஒரே மக்களைக் கூட்டும் பிரசாரகர் என்றால், அது ஜெயலலிதா மட்டும்தான்.
அடுத்த நிலைகளில் பிரசாரம் செய்வதற்கு யாருமே இல்லாததால், துவக்கம் தொட்டு, அ.தி.மு.க., தேர்தல் பிரசார களத்தில், தடுமாறித்தான் வருகிறது.
ஆனால், தி.மு.க., தரப்பிலோ, கட்சியின் தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின், மகளிர் அணி செயலர் கனிமொழி என, ஆளாளுக்கு தமிழகம் முழுவதும் பிரசாரத்துக்காக சென்று வருகின்றனர். கணிசமான மக்கள் கூட்டத்தையும் காட்டுகின்றனர்.
ஜெயலலிதா கூட்டம் போல் காசு கொடுத்து ஸ்டாலின்,கருணாநிதி கூட்டங்களுக்கு மக்கள் கூட்டப்படுவதில்லை விளம்பரங்களால் மட்டும் கூடுகிற கூட்டம் என்ற உளவுத்துறை செய்தியே ஜெயலலிதாவை அசைத்து விட்டது.
இந்த பிரசாரம் பெரிதாக எடுபட்டு இருக்கிறது என, தேர்தல் கள நிலவரம் குறித்து முதல்வருக்கு அறிக்கை கொடுத்த உளவுத் துறையினர் சொன்னபோது கூட, 'பிரசாரம் மட்டுமே, வெற்றியை தீர்மானிப்பதில்லை.
தேர்தல் அறிக்கையில் சொல்லப்படும் விஷயங்கள் தான், வெற்றியை தீர்மானிக்கும். அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியான பின், களத்தில் தி.மு.க., இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்' என சொல்லி, தான் மட்டுமே உச்சி வெயில் நேரத்தை மாற்றாமல் பிரசாரக் களத்துக்கு, ஹெலிகாப்டர் மூலம் சென்று திரும்பிக் கொண்டிருந்தார்.அக்கூட்டங்களில் 6 பேர்கள் மரணம் என்பதும் அவருக்கு மனதில் பயத்தை உண்டாக்கி விட்டது.
அதிமுக தேர்தல் அறிக்கை எப்போது வரும் என்ற எல்லாருடைய கிண்டல்கள் ,எதிர்பார்ப்புகளுக்கு இடையே மே 5ம் தேதி பெருந்துறையில், தேர்தல் பிரசாரத்துக்கிடையே அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஜெயலலிதா.
தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்ட போதே, மக்களிடம் பெரிய அளவிலான மக்கள் மத்தியில் திமுக தேர்தல் அறிக்கைக்கு கிடைத்த மாதிரியான 'ரியாக் ஷன்' எதுவும் இல்லை என்பதை, ஜெயலலிதா உணர்ந்து கொண்டார்.
இருந்தபோதும், உழைக்கும் மகளிருக்கு ஐம்பது சதவீத மானியத்தில், டூவீலர் வழங்கப்படும் என்ற விஷயத்தை மக்கள் மத்தியில் பெரிதாக கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக, அந்த விஷயத்தையே தன் பிரசாரங்களில் அழுத்தம் கொடுத்து பேசினார். ஆனால் அது பெரிதாக எடுபடவில்லை.
படித்து பட்டதாரியான ஏழைப் பெண்களுக்கு, திருமண உதவித் தொகையுடன், ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும் என்ற அறிவிப்பும், பெண்கள் மத்தியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைத்தார். ஆனால், அதுவும் பெரிதாக எடுபடவில்லை.
ஜெயலலிதா குழம்பியிருந்த சூழ்நிலையில்தான் மத்திய உளவுத்துறை தமிழக சட்டசபை தேர்தல் நிலவரம் குறித்து தனது தலைமைக்கு அளித்துள்ள அறிக்கை விவரங்கள், ஜெயலலிதா கைக்கு சில தரகர்கள் மூலம் கிடைத்தது .
அதில் சொல்லப்பட்டுள்ள விவரங்கள் அதிமுகவுக்கும் ,ஜெயலலிதாவுக்கும் அதிர்ச்சிகரமான செய்திகளாக இருந்தன.தமிழக உளவுத்துறை செய்திகள் தன்னை கோபம் கொள்ளாமல் ,திருப்தி படுத்தும் வகையில் மட்டுமே தயாரிக்கப் படுகிறது என்ற உண்மையும் ஜெயலலிதாவுக்கு புரிந்தது.
"தோல்வியை தவிர்த்தாக வேண்டும்; அதற்கான யோசனைகள் எனக்கு வேண்டும்" என, கட்சியின் மூத்த தலைவர்களுக்கு உத்தரவிட்டார்.
சென்னையில் வீதி வீதியாக சென்று, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட வேண்டும் என யோசனை தெரிவிக்கப்பட்டது.வேறு வழியின்றி அதை ஏற்று, ஜெயலலிதாவின் சுற்றுப் பயணத் திட்டம் மாற்றப்பட்டது. முதலில் அறிவித்த திட்டப்படி, நேற்று ஜெயலலிதாவுக்கு வழக்கமான ஓய்வு தான்.
ஆனால் உளவுத்துறை அறிக்கையால், நேற்று சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் தெருத்தெருவாக வேனில் சென்று வாக்கு சேகரித்தார்.வெள்ளம் புரட்டிப் போட்ட போது கூட வராமல் பிரதமர் வருகிறார் என்பதற்காக முதல் நாள் 1/2 மணி நேரம் மட்டும் ஹெலிகாப்டரில் சுற்றி வெள்ளத்தை பார்வையிட்டவரை மணிக்கணக்கில் சென்னைத் தெருக்களில் வாக்குக்காக சுற்றவைத்தது மக்களின் கோபம் தான்.
"தனது தோல்வியை தவிர்க்க இன்று தெருத்தெருவாக வருபவர்.வென்றபின்னர் இப்படி வருவாரா?கொடநாடு தானே செல்வார்?"
என்ற பேச்சுக்கள் நேற்று ஜெயலலிதா வேன் பிரச்சாரத்துக்குப் பின் பரவலாக மக்களிடம் பேசப்படும் பொருளாக இருந்தது.
இது மக்கள் மனதில் அவருக்கு வாக்களிக்கும் படியான மாற்றத்தை உண்டாக்குமா என்று கணிக்க முடியாத நிலையைத்தான் தந்தது.வாக்காளர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.
ஆனால் கையை நீட்டி காசு வாங்கினால்தான் நாணயமாக வாங்கியவர்களுக்கு தங்கள் வாக்குகளை விற்று விடுகிறார்கள் என்பதையும் தெளிவாக்கியுள்ளது.
வழக்கம் போல் அதிமுகவினர் பலஇடங்களில் காவல்துறையினர்,தேர்தல் கண்காணிப்பு படையினர் பாதுகாப்புடன் வாக்களர்களுக்கு பணத்தை கொடுத்தாலும்.அதை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளாமல் ஒத்துழைத்தாலும் திமுக,போன்ற எதிர் கட்சியினர் முன்பை விட விழிப்புடன் அவ்வப்போது பணம் கொடுப்பவர்களை ஆதாரங்களுடன் பிடித்துக்கொடுப்பதால் 2014 தேர்தல் போல் பணத்தை எல்லா இடங்களிலும் வழங்க முடியாமல் அதிமுகவினர் முழிக்கின்றனாராம்.
பிரவீன் குமார் போன்று இந்தமுறை 144 சட்டம் போட வாய்ய்பில்லை.சட்டம் போட்டால் உடனே உச்ச நீதி மன்றத்திலேயே தடை வாங்கவும் திமுக எல்லாவகையிலான முன்னேற்பாடுகளுடன் உள்ளதாம்.
இது தவிரவும் நிறைய தகவல்களை மத்திய உளவுத் துறையினர், தங்கள் அறிக்கையில் சுட்டிக் காட்டி உள்ளனர்.
அவற்றில் ஜெயலலிதாவை சிந்திக்க வைத்தவைகளில் சில:
1. ஜெயலலிதா மட்டும் மேடையில், 20 டன் 'ஏசி'களுக்கு நடுவில் இருக்க, வேட்பாளர்கள் தனி மேடையில் அமர வைக்கப்பட்டது, மக்களிடம் எதிர்மறை எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது
2. ஜெயலலிதா பிரசாரம் மக்களை கவருவதற்கு பதில், எதிர்ப்பையே சம்பாதித்துள்ளது
3. அ.தி.மு.க., அரசின் தவறுகளை சுட்டிக் காட்டி, தி.மு.க., சார்பில், தனியார் ஏஜன்சி மூலம் தயார் செய்யப்பட்ட, விளம்பரப் படங்கள், மக்களை கவர்ந்தன.
[அதைப் போல்தான் பாஜகவும் உளவுத்துறை ஆலோசனைப்படி தனது விளம்பரங்களை வடிவமைத்துள்ளது]
4 அரசு செய்தி மக்கள் தொடர்பு துறை, ஆளும் கட்சி 'டிவி' ஆகியவற்றின் வீடியோ கிளிப்பிங்குகளை வெட்டி தயார் செய்யப்பட்ட, விளம்பரப் படங்கள் மக்களை எட்டவில்லை
5. சென்னையை பொறுத்தவரையில், வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்க்க ஜெயலலிதா வரவில்லை என்ற குறை உள்ளது. தேர்தல் நேரத்திலும் வரவில்லை என்றால், கோபம் பல மடங்காகி, தேர்தலில் அது எதிரொலிக்கும்.
6.மின் மிகை மாநிலம் என்று ஜெயலலிதா சொல்லிக் கொண்டே இருந்தாலும் தமிழம் முழுக்க மின் தடை அடிக்கடி உண்டாகி மக்களை கடுப்படிக்கிறது.
உச்சக் கட்டமாக ஜெயலலிதா பிரச்சாரம் செய்யும் இடத்திலேயே மின் வெட்டு வந்து இருளில் அவரது வேன் சென்றது.
இப்படி உளவுத் துறையினர் அடுக்கி உள்ள பல்வேறு தகவல்களையும், முடிந்த வரை சரி செய்ய வேண்டும் என்ற முனைப்பில் ஜெயலலிதா இறங்கி உள்ளார்.
ஜெயலலிதாவின் இந்த தேர்தலின் கடைசி கட்ட முயற்சிக்கு எப்படிப்பட்ட பலன் இருக்கும் என்பதை, தேர்தல் முடிவுகள் மூலம்தான் மக்கள் உணர்த்துவார்கள் .
நாமும் அதை அறிந்து கொள்ள மே -19 வரை காத்திருக்கத்தான் செய்ய வேண்டும் .
---------------------------------------------------------------------------------------------------------
2011 சட்டசபை தேர்தலில் தமிழ் நாடு தேர்தல் ஆணையம் 35.53 கோடி ரூபாய் கைப்பற்றியது .
2014 மக்களவைத் தேர்தலில், 25.05 கோடி ரூபாய் சிக்கியது.
2016 இம்முறை தமிழகத்தில் இதுவரை 100 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனை அளவு .
தமிழகத் தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு ஆதரவின்றி செயல் பட்டிருந்தால் தொகை இன்னமும் உச்சத்தை எட்டியிருக்கும்.
ஆனால் பணம் தேர்தல் அதிகாரிகள் வாகனங்களிலேயே கடத்தப்பட்ட கொடுமையால் தமிழகம் கின்னஸ் சாதனை படிக்க இயலவில்லை.
கோவையில் பணம்கடத்தியதற்கு பயன் பட்டதாக இரு அரசுஅதிகாரிகள் வாகனங்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளது.அந்த இரு பெண் அதிகாரிகள் மீது இதுவரை விசாரணையோ எந்தவித நடவடிக்கையோ இல்லை.பிடி பட்டவர்கள் இருவர் இன்னமும் கடத்திக்கொண்டிருப்பவர்கள் நூற்றுக்கணக்கில்.இதில் காவல் துறை வான்கனங்கள், ஆம்புலன்ஸ்கள்,108 வாகனங்கள்,பால் வண்டிகள்,மணல் லாரிகள்.இருசக்கர வாகனங்கள் ,தற்போது ஜெயலலிதா ஆம்புலன்ஸ் பைக்குகள் என வரிசை கட்டி உள்ளன.
.========================================================================================
இன்று,மே-12.
- உலக செவிலியர் தினம்
- நவீன தாதியியல் முறையை உருவாக்கிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம்(1820)
- சோவியத் ஒன்றியம், பெர்லின் மீதான முற்றுகையை நிறுத்தியது(1949)
- வட ஆப்ரிக்காவில் துனீசியா, பிரான்சின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது(1881)