அதிமுகவுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உ(க)ள்ள உறவு
தேர்தல் பணிகள் தொடங்கிய நாளிலிருந்து தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒரு தலைப் பட்சமாகவே இருந்ததையும், ஆளுங்கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டதைப் போலச் செயல்பட்டதையும் தமிழகமே நேரிலே கண்டது.
தேர்தல் ஆணையத்திடம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எத்தனை முறை தான் புகார் மனுக்களைத் தருவது? பணப்பட்டுவாடா பற்றி நாளேடுகளில் செய்திகள் வராத நாள் உண்டா? அமைச்சர்களைப் பற்றி எத்தனையோ புகார்கள்!
பொது மக்கள் திரண்டு நின்று, சில அமைச்சர்களைத் தொகுதிக்குள்ளேயே வரவிடாமல் தடுத்து விரட்டியடித்தார்கள் என்று எத்தனை செய்திகள் வெளிவந்தன?
அதையெல்லாம் மீறி அந்த அமைச்சர்கள் அந்தத் தொகுதிகளில் பின்னர் எப்படி வெற்றி பெற்றார்கள்? மூன்று அமைச்சர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்ட கரூர் அன்புநாதன் பிரச்சினை என்ன? துபாயில் ஓட்டல் என்றும், வெளிநாடுகளில் ஏராளமான சொத்துகள் என்றும், கோடிக்கணக்கான ரூபாய் முதலீடுகள் என்று பேசப்பட்ட பெரிய ஊழல் எவ்வாறு மூடி மறைக்கப்பட்டது?
570 கோடி ரூபாய் திருப்பூரில் பிடிபட்டதையே வங்கியின் பணம் என்று டெல்லியிலிருந்தே கூறி விட்டார்களே?
சிறுதாவூரில் முதலமைச்சர் ஜெயலலிதா பங்களாவில் இருந்த கன்டெய்னர்கள் புகைப்படமாக எடுத்து பார்ப்போர் அதிர்ச்சி அடையும் அளவுக்கு வெளியிடப்படவில்லையா?
நாட்டின் வருமான வரி மற்றும் அமலாக்கத் துறைச் சட்டங்களுக்கெதிரான இந்த நிகழ்வுகள் என்ன ஆயிற்று?
===============================================================தேர்தல் பணிகள் தொடங்கியதில் இருந்தே தேர்தல் கமிஷன் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டது. அவர்கள் ஆளும் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து செயல்பட்டார்கள். ஆளும் கட்சியின் பண பலமும், தேர்தல் கமிஷனின் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகளும் தி.மு.க.வை தோல்வி அடைய செய்துவிட்டன.===============================================================
இந்தியாவில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு தேர்தல் ஆணையமே தமிழகத்தில் நுhறு கோடி ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்தார்களே; சட்டத்திற்குப் புறம்பான இந்தச் சம்பவங்களில் சட்டப்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன?
ஒரு சில ஊடகங்களும், நாளேடுகளும் நடுநிலை தவறி, ஆளுங்கட்சியின் ஊதுகுழல்களாக மாறி, தி.மு.க. வின் மீது வெறுப்புப் பிரச்சாரத்தை ஏவி விட்டு, பத்திரிகா தர்மத்தைக் காப்பாற்றுவதைப் போலப் பகல் வேடம் போட்டார்களே!
இவ்வளவையும் மீறி, அனைத்து வகை ஆயுதப் பிரயோகங்களையும் எதிர்த்துப் போராடி தி.மு.கழகம் தற்போது பெற்ற வாக்குகளை விட அதிகமாகப் பெறுவதற்கான வழிவகைகள் உள்ளனவா?
இருந்தால் சொல்லுங்கள், ஏற்றுக் கொள்கிறேன்!
வாக்காளர் பட்டியலில் இலட்சக்கணக்கான போலி வாக்காளர்கள் உள்ளிட்ட ஏராளமான தவறுகள் இருக்கின்றன என்று எத்தனை முறை புகார் மனுக்கள் தரப்பட்டன?
கடைசியாக தேர்தலுக்கு முன்பு தரப்பட்ட வாக்காளர் பட்டியலை இப்போது வேண்டுமானாலும், “தி இந்து” இதழே எடுத்துப் பார்த்துக் கொள்ளட்டும்.
என்னுடைய திருவாரூர் தொகுதியில் மட்டும் 11,036 போலி வாக்காளர்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு, தேர்தல் ஆணையரிடமே அதன் நகல்கள் தரப்பட்டன.
மற்ற தொகுதிகளை எடுத்துக் கொண்டால், ஆவடியில் 19,723
- கொளத்தூரில் 5,588 -
திருப்போரூரில் 13,404 -
பாலக்கோட்டில் 20,199 -
வானூரில் 10,768 -
விக்ரவாண்டியில் 11,592
- கள்ளக் குறிச்சியில் 21,247
- அவினாசியில் 23,270 -
திருப்பூர் (வடக்கு)
- 24,286 -
திருப்பூர் தெற்கு 12,024 -
பல்லடத்தில் 28,805 -
உடுமலைப்பேட்டையில் 14,243 -
குன்னம் 21,231 -
சோளிங்கர் 22,227 -
பெரம்பலுர் 25,105 -
காங்கேயம் 23,956 -
கலசப்பாக்கம் 20,098 என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
இவ்வளவு போலி வாக்காளர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் இருந்தார்கள். இதையெல்லாம் மீறித் தான் தி.மு. கழக அணி 100 வாக்குகளுக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் இரண்டு தொகுதிகளிலும், 1000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் 8 இடங்களிலும், 5000 வாக்குகள் வித்தியாசத்தில் 21 இடங்களிலும், 10000 வாக்குகள் வித்தியாசத்தில் 22 இடங்களிலும் என்று 53 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. தி.மு. கழகமும், அ.தி.மு.க. வும் இந்தத் தேர்தலில் நேரடியாக போட்டியிட்ட 172 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் 89 இடங்களிலும், அ.தி.மு.க. 83 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
“இந்து” இதழிலேயே என்று 20-5-2016 அன்று உண்மை நிலையைப் படம் பிடித்து காட்டியிருந்தீர்களே?
இன்னும் சொல்லப் போனால், உங்களுடைய 25ஆம் தேதிய இதழில், ஆளும் அதிமுக ஆட்சி அமைப்பதற்குத் தேவையான சாதாரண பெரும்பான்மையை சமீபத்தில் நடந்து முடிந்த தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தலில் பெற்றுள்ள போதிலும், தொகுதி வாரியாக நடத்தப்பட்ட ஆய்வில், அதிமுக வேட்பாளர்களில் இரண்டு பேர், மொத்தம் பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்குக்குக் குறைவான வாக்குகளைப் பெற்று டெபாசிட் தொகையைப் பறி கொடுத்துள்ளனர் என்றும், இதற்கு நேர் மாறாக தி.மு. கழகத்தால் நிறுத்தப்பட்டுள்ள 176 வேட்பாளர்களும் தங்கள் டெபாசிட் தொகையைத் திரும்ப பெற்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது என்றும் எழுத வில்லையா?
நீங்களே உங்கள் கேள்வியில் கேட்டிருப்பது போல, குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்து விட்டது உண்மை தான்.
ஆளுங்கட்சியின் இராட்சசப் பணநாயகமும், தேர்தல் ஆணையத்தின் நயவஞ்சகச் செயல்பாடுகளுமே தி.மு.க. வின் வெற்றி வாய்ப்பைத் தட்டிப் பறிக்க முக்கியமான காரணம்!
தி.மு. கழகத்தைப் பொறுத்தவரை எந்தச் சவாலையும் சாமர்த்தியமாக எதிர்கொள்ளும்; இப்போது தி.மு. கழகத்தை விட சவால்களைச் சந்திக்க வேண்டியவர்கள் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. வினர் தான்.
ஆளுங்கட்சி 32 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது உண்மை என்ற போதிலும், அங்கே வெற்றி பெற்ற அ.தி.மு.க. உறுப்பினர்கள் 131 பேர் தான்.
அதிலும் ஒருவர் இறந்தது போக மீதி 130 பேர் தான். அதாவது தனிப் பெரும்பான்மைக்கு வேண்டிய 118 பேரை விட 12 பேர் தான் அங்கே அதிகம்.
எனவே அவர்களை எங்கும் அலை பாய விடாமல் பிடித்து வைத்திருக்க வேண்டிய சவால் அ.தி.மு.க. வுக்குத் தான் உண்டு.
சர்க்கஸில் கம்பியில் நடப்பதைப் போன்ற நிலை அவர்களுக்கு!
எங்களைப் பொறுத்தவரையில் 2011ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பிறகு வெறும் 23 இடங்களில் தான் தி.மு. கழகம் வெற்றி பெற்று, பிரதான எதிர்க் கட்சியாகக் கூட வர முடியாத நிலையிலே இருந்தோம்.
தற்போது தி.மு. கழகம் மட்டும் 89 உறுப்பினர்களைக் கொண்டு பேரவையிலே இடம் பெற்றுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி, கழக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளை ஆளுங்கட்சி எப்படி எதிர் கொள்ளப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்!
தமிழகச் சட்டப் பேரவையின் வரலாற்றில், தி.மு. கழகம் 1971-ல் 184 உறுப்பினர்களுடன் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ஆளுங்கட்சியாக இருந்திருக்கிறது;
இப்போது 89 உறுப்பினர்களுடன் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய எதிர்க் கட்சியாகவும் உருவெடுத்திருக்கிறது.
ஆளுங் கட்சியாகவும், எதிர்க் கட்சியாகவும் தி.மு. கழகம் ஏற்படுத்தியிருக்கும் சரித்திரச் சான்றுகளை யாராலும் மறைத்து விட முடியாது!
ஆளுங்கட்சியின் அரட்டல், உருட்டல், பயமுறுத்தல், பாய்ச்சல், பொய் வழக்குகளைப் போடுதல் போன்ற ஜனநாயக விரோதச் செயல்முறைகளைத் தொடர்ந்து பார்த்து வெறுப்பு அரசியலைப் புரிந்து கொண்டிருப்பதால், அதற்கெல்லாம் பயப்படாத அடியாக, நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இருக்க வேண்டுமென்று குறிப்பிட்டேன்.
தி.மு. கழகத்திற்கு துரோகம் விளைத்தவர்கள், தற்போது விளைவிக்க நினைப்பவர்கள் ஆகியோருக்கு துணை போகக் கூடாது என்பதற்காக, துரோகம் விளைவிப்பவர்களுக்கு துணை போகாத அடியாக இருக்க வேண்டுமென்று குறிப்பிட்டேன்.
என்னுடைய உடன்பிறப்புகளுக்கு நான் கூறியதன் பொருள் நன்றாகவே விளங்கும். உள்கட்சி பிரச்சினையால் ஒருசில இடங்களில் கழக உறுப்பினர்கள் வெற்றி வாய்ப்பை இழந்தது உண்மை தான். அதுபற்றி செயற்குழுவில் சிலர் பேசத் தான் செய்தார்கள்.
அவ்வாறு கட்சிக்கு, கட்சியின் உறுப்பினர்களுக்குத் துரோகம் செய்தவர்கள் பற்றி கழகத் தலைமை நன்றாகப் புரிந்து கொள்ள இந்தச் செயற்குழு பெரிதும் உதவியாய் அமைந்தது. எதிரிகளைக் கூட மன்னித்து விடலாம்; துரோகிகளை மன்னிக்க முடியுமா?
தி.மு. கழகம், மேற்கு பகுதியில் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் இந்தத் தேர்தலில் மட்டுமல்ல; கடந்த சில தேர்தல்களில் பின் தங்கி யிருப்பது உண்மை தான்!
ஆனால் தேர்தலுக்கு முன்பு வந்த கருத்துக் கணிப்பு கள் இந்தத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் தி.மு. கழகக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றே அறிவித்திருந்தது.
மேற்கு மண்டலம் பெருந்தொழில்கள், சிறு மற்றும் குறுந்தொழில்களைச் சார்ந்துள்ள மண்டலமாகும். மின்வெட்டு, அ.தி.மு.க. அரசின் தொழில் நேயமற்ற அணுகுமுறை ஆகியவற்றினால், மேற்கு மண்டலத் தொழில்கள் சிதைந்து, முதலீடுகள் நோய்வாய்ப்பட்டு, தொழிலாளர்கள் வாழ்வாதாரம் தேடி அண்டை மாநிலங்களுக்குப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதைக் காரணமாகச் சொல்லப்பட்டது.
அந்தக் கணிப்பையும் மீறி இந்த முறை அங்கே தி.மு.கழகம் பெருமளவில் வெற்றி பெற முடியாமல் போனதற்குக் காரணம் “கன்டெய்னர்கள்” தானோ என்ற சந்தேகமும் உள்ளது.
இத்தகைய கொடுமைகளிலிருந்து கொங்கு மண்டலத்தை மீட்டெடுக்க கழகம் உடனடியாக ஆக்க பூர்வமானதும், ஆரோக்கியமானதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதைக் கழகத் தலைமை நன்றாகவே புரிந்து கொண்டுள்ளது.
தேர்தல் தள்ளி வைக்கப்படாமல் அந்த இரண்டு இடங்களிலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாளில் நடைபெற்றிருக்குமானால், இரண்டு இடங்களிலுமே தி.மு.கழகம் வெற்றி பெற்றிருக்கும்.
இருந்தாலும், தற்போது அங்கே தேர்தல் தள்ளி வைக்கப் பட்டதால் கழகத்தின் வெற்றி வாய்ப்பு குன்றிப் போய் விடாது என்றே நினைக்கிறேன்.
172 இடங்களில் போட்டியிட்ட தி.மு.கழகம் 89 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இது 51.74 சதவிகிதம்.
தி.மு. கழகக் கூட்டணிக் கட்சிகள் 60 இடங்களில் போட்டி யிட்டு 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது 15 சதவிகிதம்தான்.
இதற்குக் காரணமாக கூட்டணி கட்சிகளை நான் சிறிதும் குறை கூறவிரும்பவில்லை.
அந்தத் தொகுதிகளில் தி.மு. கழக உறுப்பினர்கள் அவர்களை வெற்றி பெறச் செய்கின்ற அளவுக்கு அவர்களுடன் இணைந்து முழு மூச்சோடு உழைக்கவில்லையோ என்று தான் கருதுகிறேன்.
அதிமுக அரசு பதவியேற்பு விழாவின் போது எதிர்க்கட்சித் தலைவரான முக. ஸ்டாலினுக்கும் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் உரிய மரியாதை கொடுத்து இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை .
முன்பொரு முறை, ஜெயலலிதா பதவியேற்பு நிகழ்ச்சிக்குக் கழகத்தின் சார்பில் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் சென்றிருந்த போதும் உரிய மரியாதை கொடுத்து இருக்கை ஒதுக்கீடு செய்யப் படவில்லை.
ஒவ்வொரு முறையும் தவறு நிகழ்வதும், அதற்கு நொண்டிச் சமாதானம் சொல்வதும் வாடிக்கையாகி விட்டது என்பதை மறந்து விட முடியாது.
எனினும் இந்த முறை, தமிழகத்தின் நலன்களுக்காக தி.மு.க. வுடன் இணைந்து செயல்பட இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தின் நலன் களுக்காகவும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும் ஜெயலலிதா வோடு மட்டுமல்ல; யாருடனும் இணைந்து பணியாற்றத் தி.மு.கழகம் தயங்கியதில்லை என்பதை அதன் கடந்த கால வரலாறு எடுத்துக்காட்டும்.
தி.மு.கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் “தி இந்து” ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டி.
=========================================================================================
இன்று,
மே-28.
=========================================================================================
இன்று,
மே-28.
- ஆர்மீனியா குடியரசு தினம்
- பிலிப்பைன்ஸ் கொடி நாள்
- நேபாள குடியரசு தினம்
- கிரீசில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது(1952)
- என்.டி.ராமா ராவ் பிறந்த நாள் (19230
என்.டி.ராமா ராவ்
கிருஷ்ணர், ராமர் என்றால், திரைப்படம் பார்க்கும் மக்களின் மனதில் நிற்பவர்,
'நன்டமுரி தாரக ராமா ராவ்' என்ற, என்.டி.ராமா ராவ்!
ஆந்திர மாநிலம், நிம்மகுரு என்ற கிராமத்தில் 1923 - மே 28 பிறந்தார்;
திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் கொண்டு, 1947ல், மன தேசம் என்ற படத்தில், சிறு வேடத்தில் நடித்தார். பின், பல்லேடுரி பில்ல படத்தில் கதாநாயகனாக நடித்தார்;
தொடர்ந்து, பாதாள பைரவி, மல்லேஸ்வரி, சந்திரஹாரம் என, சூப்பர் ஹிட் படங்களில் நடித்து, தன் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தினார்.
40 ஆண்டுகளில், 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
திரைப்படம் கொடுத்த புகழை தக்கவைத்து தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆர் பெற்ற அரசியல் வெற்றியை கண்டு தெலுங்கு தேசம் கட்சியைத் துவங்கினார்.
அவரை ராமர்,கிருஷ்ணரின் அவதாரமாகவே பார்த்து மயங்கிப்போயிருந்த ஆந்திரமக்களின் அமோக ஆதரவை பெற்று 1983 முதல், 1994 வரை, மூன்று முறை ஆந்திர முதல்வராக இருந்தார் .
சிறந்த நடிகருக்கான, பிலிம் பேர் விருதை, 10 முறையும்; தேசிய விருது, பத்மஸ்ரீ விருதையும் வென்றுள்ளார். மாரடைப்பு காரணமாக, 1996 ஜன., 18ம் தேதி இறந்தார். என்.டி.ராமா ராவ் பிறந்த தினம் இன்று!
உலகத்தையே வெப்பத்தால் வாட்டி வதைத்து வந்த எல் நினோ முடிவடைந்துள்ள நிலையில், ஜூன் மாதத்தில் குளிர் தரும் லா நினோ துவங்க உள்ளது.
இதனால் இந்தியாவில் மழை அளவு வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிக வெப்பம் இருக்கும் காலத்தை எல் நினோ எனவும், குளிர் மற்றும் மழை நிலவும் காலத்தை லா நினா எனவும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டு அழைக்கின்றனர்.
அந்த வகையில் தற்போதைய நிலரப்படி, கடந்த 2 ஆண்டுகளாக நிலவிய கடும் வெப்பமே, 20 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்டுள்ள வலிமையான எல் நினோவாக கருதப்படுகிறது.
இதற்கு முன் 1982 மற்றும் 1997 ம் ஆண்டுகளில் ஏற்பட்டதே கடுமையான எல் நினோ காலமாக கருதப்பட்டது.
எல் நினோவின் காரணமாகவே பல பகுதிகளில் கடுமையான வறட்சியும், பல பகுதிகளில் மழையால் பெரு வெள்ளமும் ஏற்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் எல் நினோ தீவிரமடைந்ததன் காரணமாகவோ சென்னையில் 3 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை ஒரே சமயத்தில் பெய்து பெரு வெள்ளம் ஏற்பட்டது.
உலகை வெப்பத்தால் வாட்டிய எல் நினோ காலநிலை முடிவடைந்து விட்டதாக இரு நாட்களுக்கு முன் ஆஸ்திரேலிய வானிலை மையம் அறிவித்திருந்தது.
இதனையடுத்து ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் லா நினா காலநிலை துவங்க உள்ளது.
கடந்த ஒரு மாதமாக வாட்டி வதைத்து வந்த அக்னி நட்சத்திர காலமும் நாளையும் முடிவடைகிறது.
இதனால் உலக அளவில் காலநிலையில் பெரும் மாறுபாடு ஏற்பட உள்ளது.
எல் நினோ அபரிமிதமாக இருந்ததாலேயே கடந்த 2 ஆண்டுகளாக வழக்கமான தென் மேற்கு பருவநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது துவங்க உள்ள லா நினோவால் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் நல்ல பருவமழை ஏற்படும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
அதிக மழையும், அதனால் வெள்ளப் பெருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும்.
வழக்கமான மழை காலத்துடன் லா நினோவும் இணைவதால் மழை அளவு வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதே சமயம் லா நினோவால் இந்தியாவில் பருவமழை காலம் முன் கூட்டியே துவங்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.