தடம் பதியா தேடல் !



இணையத்தில் தேடுகையில் நம் தேடல்கள் பதிவு செய்யப்படாமல் இருக்க, அனைத்து பிரவுசர்களும் “தனித்தேடல் வழியினைக்” கொண்டுள்ளன. 
இந்த தேடல் நிலையில், நம் தேடல்கள் குறித்த தகவல்கள் பதியப்படுவதில்லை என்பதால், இந்த “தேடல் பதியாத பிரவுசிங் நிலை” என்று அழைக்கப்படுகிறது. இது Private Browsing (Firefox மற்றும் Safari) மற்றும் Incognito Mode (Chrome) என அழைக்கப்படுகிறது. 
பெரும்பாலும், இந்த வழியினை பாலியியல் தளங்களைப் பார்ப்பவர்கள், தாங்கள் இத்தகைய தளங்களைப் பார்ப்பதனை மற்றவர்கள் அறிந்து கொள்ளாமல் இருக்க, இந்த தனிநபர் முகமூடியைப் பயன்படுத்துகின்றனர். இதனைப் பயன்படுத்துகையில், தற்காலிக பிரவுசர் நேரம் கிடைக்கிறது. இந்த நேரத்தில், எந்த குக்கிகள் பைலும் பிரவுசரால் பதிவு செய்யப்பட மாட்டாது. 
இந்த தேடல் சார்ந்த டேட்டா அனைத்தும், தேடல் காலம் முடிந்தவுடன் அழிக்கப்பட்டுவிடும். இதனால், Private Mode / Incognito Browsing என்றாலே பேசத் தயங்குகின்றனர். 
ஆனால், இந்த வழி இன்னும் சில நல்ல பயன்பாட்டிற்கும் உதவுகிறது. அவற்றை இங்கு பார்க்கலாம்.

பெரும்பாலான இணைய தளங்கள், ஒரே ஓர் அக்கவுண்ட்டில் மட்டுமே நம்மை நுழையவிடும். ஒரே நபர் பல அக்கவுண்ட்களில் நுழைய முடியாது. 
இந்த சிக்கலைத் தீர்க்க, தேடல் பதியாத பிரவுசிங் நிலை தீர்வு தருகிறது. முதலில், வழக்கமான பிரவுசரில் உங்கள் அக்கவுண்ட்டில் குறிப்பிட்ட இணைய தளத்தில் நுழையலாம். பின்னர், தேடல் பதியா பிரவுசிங் நிலையைத் திறந்து, அதில் அந்த தளத்தில், அதே அக்கவுண்ட்டில் நுழைந்து இன்னொரு விண்டோவினைத் திறந்து இயங்கலாம். 
அல்லது உங்களுக்கு இன்னொரு அக்கவுண்ட் இருந்தால், அதன் வழியாகவும் நுழையலாம். இதன் மூலம் இரு அக்கவுண்ட்டில், ஒரே தளத்தில் நம்மால் இயங்க முடியும். 
உங்களுடைய பிரவுசர் குக்கி பைல்களின் டேட்டா, இரண்டாவதாகத் திறக்கும் விண்டோவினால், பகிர்ந்து கொள்ள முடியாததால், இது சாத்தியமாகிறது. தேடல் பதியா நிலை விண்டோ மூடப்படுகையில், அது சார்ந்த அனைத்து டேட்டாவும் நீக்கப்படும். 

சில இணைய தளங்கள், குறிப்பாக நாளிதழ்கள், தாங்கள் இணைய தளத்தில் வெளியிடும் கட்டுரைகள் அனைத்தையும் இலவசமாகப் படிக்க அனுமதிக்காது. 
குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் போனால், கட்டணம் செலுத்தி உறுப்பினராகப் பதிந்து கொள்ளும்படி கேட்கும்.
எத்தனை கட்டுரைகளை நீங்கள் விரித்துப் படிக்கிறீர்கள் என்பது, பிரவுசர் அமைத்திடும் குக்கி பைல்களில் பதிந்து வைக்கப்படும் டேட்டா ஆக இருக்கும். 
நீங்கள் இலவச எண்ணிக்கையை அடைந்துவிட்டால், குறிப்பிட்ட இணைய தளம் மேற்கொண்டு இலவசமாகக் கட்டுரைகளைப் படிக்க அனுமதிக்காவிட்டால், உடனே தேடல் பதியாத பிரவுசிங் நிலையைத் தேர்ந்தெடுத்து, அதே கட்டுரைகள் கொண்ட இணைய தளத்தினைத் திறந்து பயன்படுத்தவும். 
ஏற்கனவே படித்த கட்டுரைகளின் எண்ணிக்கை குறித்த டேட்டா, இந்த நிலைத் தேடலுக்குக் கிடைக்காது என்பதால், நீங்கள் தொடர்ந்து கட்டுரைகளைப் படிக்கலாம். 
இந்த செயல்பாட்டினை, அந்த இணைய தளத்திலிருந்தவாறே கூட மேற்கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, குரோம் பிரவுசரில், எந்த ஓர் இணைய தளத்திற்கான லிங்க்கிலும் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் “Open in Incognito Window” என்பதைத் தேர்ந்தெடுத்து, குறிப்பிட்ட இணைய தளத்தினை, தேடல் பதியாத பிரவுசர் நிலையில் திறக்கலாம். இந்த நிலையிலும் வரையறை செய்யப்பட்ட அளவிற்குக் கட்டுரைகளைப் படித்துவிட்டால், மேலும் படிக்க, குறிப்பிட்ட விண்டோவினை மூடிவிட்டு, மீண்டும் ஒரு தேடல் பதியா நிலையில் விண்டோ ஒன்றைத் திறந்து அந்த தளம் சென்று படிக்கலாம்.
இருப்பினும், கட்டணம் செலுத்தி படிக்கச் சொல்லும் பத்திரிக்கை தளங்களில், வாடிக்கையாளராகப் பதிவு செய்து படிப்பதே நல்லது. இது போன்ற குறுக்கு வழிகள் என்றைக்கும் உதவாது.

பல நேரங்களில், நம் உறவினர்கள் அல்லது நண்பர்களின் இல்லங்களில், அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில், உங்கள் அக்கவுண்ட் மூலம் சில செயல்பாடுகளை மேற்கொள்ள முயற்சி செய்வீர்கள். எடுத்துக் காட்டாக, உங்களுக்கான ஜிமெயில் அல்லது பேஸ்புக் அக்கவுண்ட் திறந்து செயல்பட விரும்பலாம். 
நீங்கள் வழக்கமான முறையில், இந்த அக்கவுண்ட்களைத் திறந்து பயன்படுத்தினால், வேலை முடிந்த பின்னர், சரியாக, முறையாக, அவற்றினை மூடி (Log out/ Sign Off) செய்திட வேண்டும். 
செய்யத் தவறினால், உங்கள் அக்கவுண்ட் திறந்தபடியே அவர்களின் கம்ப்யூட்டரில் இருக்கும். யார் வேண்டுமானாலும், அதனைப் பயன்படுத்தி உங்கள் டேட்டாவினைத் தெரிந்து கொள்ளலாம். 
இதற்குப் பதிலாக, தேடல் பதியாத பிரவுசர் நிலையில், உங்கள் தனி அக்கவுண்ட் மூலம் தளங்களைப் பயன்படுத்தினால், அந்த விண்டோவினை மூடிய உடனேயே, உங்கள் அக்கவுண்ட் மூடப்பட்டுவிடும். டேட்டா மற்றவர்களுக்குக் கிடைக்காது. 
அவர்கள் கம்ப்யூட்டரில் உங்கள் அக்கவுண்ட் மூடப்பட்டுவிட்டது என உறுதியாக நம்பலாம். அது மட்டுமின்றி, நீங்கள் எந்த இணைய தளங்களுக்குச் சென்றீர்கள் என்பதுவும் மற்றவர்களுக்குத் தெரியாது.

கூகுள் தேடல் சாதனம், நம் தேடல்களை வகுத்து நம் தேடல்களைப் புரிந்து கொண்டு, அடுத்த அடுத்த தேடல்களில் அவற்றிற்கேற்ப தளங்களின் முகவரிகளை, வழக்கம் போல, சிறிய முன் அறிமுகத்துடன் காட்டுகிறது. 
அதே தேடல்களை, நீங்கள் பயன்படுத்தாத கம்ப்யூட்டர்களில் மேற்கொண்டால் வேறுவகையான பட்டியல் கிடைக்கும். அடடா, இவை ஏன் நமக்குக் காட்டப்படவில்லை என நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். எடுத்துக் காட்டாக, நீங்கள் உங்கள் பெயர் அல்லது நிறுவனப் பெயரினை தேடல் கட்டத்தில் இட்டு பார்க்கையில், கூகுள் உங்களைப் பற்றியும் உங்கள் நிறுவனம் பற்றியும் உங்கள் கம்ப்யூட்டர் செயல்பாடுகள் மூலம் அறிந்து, அவற்றை முதல் நிலையில் காட்டும். 
ஆனால், உங்கள் நோக்கம், எந்தவித சார்பும் இன்றி, உங்கள் நிறுவனப் பெயர் எப்படிக் காட்டப்படுகிறது என்பதைக் காண விருப்பப்படலாம். இது பிறர் அக்கவுண்ட்டில் நுழைந்து தேடினால் மட்டுமே கிடைக்கும். நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் கிடைக்காது. 
இந்த கூகுள் வடிகட்டும் நிலையிலிருந்து தப்பித்து, புதிய தேடல்களுக்கென காட்டப்படும் அனைத்தையும் பார்க்க, தேடல் பதியாத பிரவுசர் நிலை பயன்படுகிறது. இந்த நிலையில் செல்கையில், எந்தவிதமான வடிகட்டலும் இன்றி, கூகுள் தேடலின் மொத்த முடிவுகள் காட்டப்படுகின்றன. இந்த நிலையிலும், கூகுள் புதிய குக்கி பைல்களை அமைத்து வைத்துக் கொள்ளும். உங்கள் தேடல் நிலை புதிதாக இருப்பதால், எந்த தளமும் வடி கட்டப்படாமல் காட்டப்படும். 

இது போன்ற தேடல் முடிவுகள், கூகுள் தேடல் தளம் மட்டுமின்றி, மற்ற பிரவுசர்களிலும், 'தடம் பதியா நிலை' யின் மூலம் கிடைக்கும். 

தேடல் முடிவுகள் மட்டுமின்றி, 'தடம் பதியா நிலை' யில், இணைய தளம் ஒன்று பொதுமக்களுக்கு எவ்வாறு காட்டப்படுகிறது என்பதையும் காணலாம். இந்நிலை, பேஸ்புக், கூகுள் ப்ளஸ் மற்றும் பிற சமூக இணையதளங்களில் உதவிடுகிறது. 

பல நேரங்களில் நாம் நம் தேடல்களை மற்றவர்களுக்குத் தெரியாமல், ரகசியமாக வைத்திருக்க விரும்புவோம். நம் கம்ப்யூட்டர் மற்றும் அதைப் பயன்படுத்துவோர் மட்டுமின்றி, இணையத்தில் இயங்கும் இணைய தளங்களிலிருந்தும் தேடல் வகை டேட்டாவினை மறைக்க விரும்புவோம். 

எடுத்துக் காட்டாக, குறிப்பிட்ட ஒரு பொருளை வர்த்தக இணைய தளங்கள் மூலமாக வாங்குவதற்காக, அது குறித்து இணையதளங்களில் ஆய்வு செய்திட நீங்கள் விரும்பலாம். 

நீங்கள் அந்தப் பொருள் குறித்து, அமேஸான் வர்த்தக இணைய தளத்தில் தேடினால், உங்கள் தேடலை அமேஸான் நினைவில் கொள்ளும். அதன் பின்னர், அமேஸான், நீங்கள் வேறு வேலையாக அதனை அணுகினாலும், நீங்கள் ஏற்கனவே தேடிய அந்த பொருள் குறித்து நினைவூட்டும் விளம்பரங்களையும் தகவல்களையும் தந்து கொண்டே இருக்கும். 

வேறு இணைய தளங்களில் பொதுவான செயல்பாடுகளுக்குச் சென்றாலும், அமேஸான் தரும் விளம்பரங்கள் உங்களைத் துரத்திக் கொண்டே இருக்கும். 
இது நடக்க வேண்டாம், உங்களை விளம்பரங்கள் துரத்த வேண்டாம் என எண்ணினால், பொருள் குறித்த தேடலை, தேடல் பதியா நிலை மூலம் தேடினால், அமேஸானுக்கு நீங்கள் யாரென்று தெரியாது. 

எனவே, உங்களைத் துரத்தும் விளம்பரங்களை அனுப்ப முடியாது. மேலே தரப்பட்ட சில செயல்பாடுகளை மட்டுமின்றி, இன்னும் வேறு ரகசியம் காக்கப்பட வேண்டிய செயல்பாடுகளையும், 'தடம் பதியா நிலை' மூலம் மேற்கொள்ளலாம். 

ஒரு பிரவுசரில், முற்றிலும் புதியவராக நீங்கள் இணையத் தேடலை மேற்கொள்ள வேண்டும் என்றால், இந்த 'தடம் பதியா நிலை' உங்களுக்கு நிச்சயம் உதவும். 
                                                                                                                                              நன்றி:தினமலர்.
=====================================================================================
இன்று,
மே-08.
  • உலக செஞ்சிலுவை தினம்
  • தென்கொரியா பெற்றோர் தினம்
  • செஞ்சிலுவை சங்கத்தை நிறுவிய ஹென்றி டியூனாண்ட் பிறந்த தினம்(1828)
 ரெட் கிராஸ் சொசைட்டி’ எனப்படும் செஞ்சிலுவைச் சங்கம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு சர்வதேச மனிதநேய அமைப்பு. 
அதை கவுரவிக்கும் விதமாகவும், அதன் தன்னலமற்ற சேவை பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடம் ஏற்படுத்தி, அதன் மகத்தான சேவையை விரிவுபடுத்தும் நோக்கத்துடனும் மே 8-ம் தேதியை ‘சர்வதேச செஞ்சிலுவை தினம்’ ஆக இவ்வுலகம் நினைவுகூர்ந்து கொண்டாடி மகிழ்கிறது.
உலக மக்களிடையே மருத்துவம், துயர் துடைப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தன்னலமற்ற இந்த செஞ்சிலுவை சங்கத்தை உருவாக்கிய ஹென்றி டுனன்ட்டின் (Henry Dunant) அடிப்படை நோக்கமே, ‘இவ்வுலகில் ஜாதி, மத, இன பேதமின்றி மக்கள் அனைவருக்கும் தன்னலமற்ற சேவையை வழங்க வேண்டும்’ என்பதாகும். 
அதன்படி இன்றுவரை செஞ்சிலுவை சங்கம் தனது சேவையை செவ்வனே ஆற்றிவருகிறது.
செஞ்சிலுவை சங்கம் உருவான வரலாறு:
ஜெனீவாவில் மக்களிடம் அன்பும் கருணையும் குடிகொண்டிருந்த வர்த்தகர் குடும்பமொன்றில், 1828-ம் ஆண்டு, மே மாதம் 8-ம் தேதி ஹென்றி டுனன்ட் பிறந்தார். தனது பெற்றோரிடமிருந்து கற்ற மனிதநேய அனுபவங்கள் காரணமாக, சிறுபிராயத்தில் இருந்தே பல்வேறு சமூக சேவைகளில் ஆர்வமிக்கவராக விளங்கினார். மற்றவர்கள் படும் வேதனைகளைக் கண்டு வேதனையுற்றார். 
தங்கள் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் கைதிகள் அனுபவிக்கும் கடும் தண்டனைகளுக்காக மனவேதனை அடைந்தார். அங்குள்ள சிறைக் கூடங்களுக்குச் சென்று கைதிகளுக்கு ஆறுதல் கூறி வந்தார்.
பின்னர், தனது இளமை பருவத்தில் வங்கித் தொழிலில் ஈடுபட்டு வாழ்க்கையில் முன்னேறினார். 1859-ம் ஆண்டு, ஜூன் 25-ல் அவர் வட இத்தாலிக்கு வியாபார விஷயமாகச் சென்றபோது, அங்கு சோல்பரினோ யுத்தம் நடைபெற்றிருந்தது.
அங்கு ஆஸ்திரியா, பிரான்ஸ் மற்றும் இத்தாலிய படைகளை சேர்ந்த 3 லட்சம் பேர் 16 மாதங்கள் போரிட்டதன் விளைவாக, சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போர்க்களத்தில் குற்றுயிராய்க் கிடந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து எத்தரப்பினரும் அக்கறை காட்டவில்லை. டுனன்ட், அந்த ஊர் மக்களின் உதவியுடன், போரில் காயம் பட்டோருக்கு எத்தகைய பேதங்களுமின்றி மருத்துவ சிகிச்சை அளித்தார்.
1863-ல் போர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட மருத்துவ தொண்டர்களை தனியே அடையாளம் காட்டுவதற்காக, வெள்ளைப் பின்னணியில் செஞ்சிலுவை சின்னம் தேர்வு செய்யப்பட்டது.
1864-ல் ஐவர் அடங்கிய குழுவொன்றினால் ஜெனீவாவில் செஞ்சிலுவை சங்க மாநாடு இடம்பெற்றது. இம்மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச மனிதாபிமான சட்டங்களே, ஜெனீவா சாசனத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
‘ஒவ்வொரு நாட்டிலும் உள்நாட்டு போர், சுனாமி மற்றும் பல்வேறு இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னலம் கருதாமல் அனைத்து வகையிலும் உதவ வேண்டும்’ என்பதே செஞ்சிலுவை சங்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
1910-ம் ஆண்டு, அக்டோபர் 30-ல் உயிர் நீத்த ஹென்றி டுனன்ட்டின் பிறந்த நாளான மே 8-ம் தேதி, 1948-ம் ஆண்டிலிருந்து தன்னலமற்ற சேவையாற்றும் செஞ்சிலுவை சங்கத்தின் சிறப்பு நாளாக அங்கீகரிக்கப்பட்டது.
1983-ம் ஆண்டு 9 நாடுகளுடன் உருவாக்கப்பட்ட செஞ்சிலுவை சங்க அமைப்பு, இன்று 194 நாடுகளை அங்கத்தினர்களாகக் கொண்டு, உலகம் முழுவதும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தனது அடிப்படை குறிக்கோளை விட்டு விலகாமல் மனித சேவை ஆற்றி வருகிறது.
பரந்துபட்ட இவ்வுலகில் யுத்தம் மற்றும் இயற்கை பேரழிவுகளால் பாதிப்படையும் மக்களுக்கு மனிதாபிமான நோக்கில் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் முகமாக செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கம் ஆகியன சர்வதேச ரீதியில் அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய தன்னலமற்ற சேவை செய்து வருகிறது.
இந்த அமைப்பில் இதுவரை சுமார் 97 லட்சம் தன்னார்வலர்கள் இணைந்து சேவை ஆற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காலப்போக்கில் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கம் என்பவை பெயரில் வித்தியாசத்தைக் காட்டி நின்றாலும் கூட, அவை இரண்டும் ஒரே நோக்கத்தையே முன்னெடுத்து செல்கின்றன.
குறிப்பாக ஈரான், ஈராக், பாகிஸ்தான், ஏமன் உள்ளிட்ட பல்வேறு அரபு நாடுகளில் சிலுவை எனும் குறியீட்டுக்கும் வார்த்தைப் பதத்துக்கும் பதிலாக, பிறை எனும் குறியீடும் வார்த்தைப் பதமும் செம்பிறை சங்கத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது உலக நாடுகளில் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கம், தனது தன்னலமற்ற சேவையால் 178 தேசிய கிளைகளுடன் மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.சர்வதேச அளவில் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கம் - மனிதாபிமானம், பாரபட்சமின்மை, நடுநிலைமை, சுதந்திரத் தன்மை, தொண்டு புரிதல்,மனிதர்களிடையே ஒற்றுமை, சர்வ வியாபகத் தன்மை என்ற 7 முக்கிய கோட்பாடுகளை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.
உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை தினத்தின் பிரதான கருப்பொருளே - இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் யுத்தங்களினாலும், சுனாமி உள்ளிட்ட பல்வேறு இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு இன, மத, மொழி பேதமின்றி உதவி செய்வதும், முரண்பாடுகள் மிக்க பல்வேறு தரப்பினரிடையே நடுநிலை வகித்து, அங்கு சமாதானத்தைக் கொண்டு வருவதற்கு உதவுவதுமாகும்.
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஸ்தாபகரான ஹென்றி டுனன்ட் பிறந்த தினமான மே மாதம் 8-ம் தேதிதான் ஒவ்வொரு ஆண்டும் உலக செஞ்சிலுவை சங்க தினமாக கொண்டாடப்படுகிறது .
======================================================================================




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?