திங்கள், 27 ஜூன், 2016

நம்மையும் காயப்படுத்தி விடும்!ரொம்பவும் கவலையாக இருக்கிறது.

தமிழ் நாட்டின் முகநூல் மக்களை பற்றி எண்ணினால்.
சமூக வலைத்தளங்கள் மூலம் சிலநாடுகளில் அரசியல் மாற்றங்கள் எல்லாம் நிகழ்ந்துள்ளது.பல ஆக்கப்பூர்வமான செயல்கள் நடந்துள்ளன.தேவையான ரத்தப் பிரிவை பரவவிட்டு பல உயிர்களை காத்திருக்கிறார்கள்.

படிக்க முடிந்து கல்விக்கட்டணம் கட்ட முடியாத மாணவர்களுக்கு நிதி பிரித்து படிக்க வைத்துள்ளார்கள்.

அரசியல் கட்சிகளின் இன்றைய முக்கிய பிரசார களமாகவும் முகநூல்,டுவிட்டர் உள்ளது.அதில் இயங்காத அரசியல் தலைவர்களே  இல்லை எனலாம். நேரடியாக இல்லாவிட்டாலும் ஆள்வைத்து அரசியல் செய்ப்பவர்கள் உண்டு.


ஆனால் அவ்வாறு நல்லவை நடக்கும் சமுக வலைத்தளங்களில் சாதி,மத வெறியை தூண்டும், சண்டைகளை உருவாக்கும் பணிகளும் சிலரால் நடக்கிறது.இவை திட்டமிட்டே செய்யப்படுகிற செயலாகவே தெரிகிறது.

இவர்களில் பலர் தங்கள் பெயர்களிலேயே சாதியை துணையாக்கி உள்ளார்கள்.
இவைகளை விடக் கொடுமை இன்றைய கொடூர கொலையான சுவாதி கொலையை இவர்கள் கையாளும் விதம்.

இக்கொலையை நேரில் பார்த்தவர்கள்  போலவே அப்போது கும்மிடிப்பூன்டியில்  கொய்யாப்பழத்தைக் கடித்துக்கொண்டிருந்தவன் இடுகை போடுகிறான்.மனைவிக்கு மதுக்கூரில் காய்கறி நறுக்கி கொடுத்தவனும் இடுகை இடுகிறான்.

கொலைக்கான காரணம் ,அப்பெண்ணின் குண,நலன் வரை சுக்கு வேறு ஆணி வேறாக பிரித்து கற்பனையில் மேய்கிறார்கள்.

இதனால் வர்களுக்கு கிடைப்பது சில லைக்குகள்.
ஆனால் அப்பெண்ணின் பெற்றோர்,உறவினருக்கு தீரா மனக்கவலை.அப்பெண்ணின் பெயருக்கு களங்கம்.கிடைக்கும் சில லைக்குக்காக இப்படி மனம்போன போக்கில் கிறுக்குவது என்ன வகையான மனநோய்?

அரசியல் தலைவர்களை விமர்சிப்பதும் ,தங்களுக்கு  முன்,பின் தெரியாபெண்ணை பற்றி விமர்சிப்பதும் ஒன்றாகி விடாது.

காலையில் வீட்டிலிருந்து மகிழ்வுடன் பணிக்கு பெற்றோரிடம் கூ றிக் கொண்டு ரெயில் நிலையம் வந்து எதிர்கால கனவுகளுடன் காத்திருக்கும் ஒரு இளம் பெண்ணை ஒருதலைக் காதலில் ஒருவன் கொலை செய்தான் என்றால் எவ்வளவு பெரிய சோகம்,பாவம்.

அப்பெண்ணுக்காக கண்ணீர் சிந்தி எழுத வேண்டாம்.கண்டதை எழுதாமல் இருக்கலாம் அல்லவா?
பொதுவாகவே இறந்தவர்கள் கொடுமையாளர்களாக இருந்தால் கூட அவரின் சிறிய நன்மை செயலை மட்டும் பேசி அவரை வழியனுப்புவதுதான் பொதுவான நம் சமுக  செயல்பாடு.

அப்படியிருக்கையில் நாம் பழகி,பேசி ஏன் பார்த்தும் கூட இராத ,கொலையான நேரம் வரை அப்படி ஒருவர் உலகில் இருப்பதையே அறியாத நாம் அவரை பற்றி,குணத்தைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் அறிக்கை எழுதுவது எவ்வகை நியாயம்?
இதில் சிலர் அது கவுரவக் கொலை ,அவர் இன்ன சாதி .கொன்றவன் இன்ன சாதி .அந்த சாதி தலைவருக்கு கண்டனம்.இந்த சாதி அதனால்தான் ஊடகங்கள் இதை பெரிது படுத்துகின்றன என்பதுவரை போய்விட்டனர்.

இவர்களை பார்த்தால் சிரிப்பாகவும்,பாவமாகவும் இருந்தாலும்.
இவர்கள் முகநூல் செய்கைகள்,இடுகைகளால் உண்டாகும் பாதிப்பை எண்ணினால் பயமாக இருக்கிறது.
முகநூல் பலஇடங்களில் மாற்றத்தை உண்டாக்கிய,உண்டாக்கக் கூடிய  கருவி.அதை தவறாக கையாண்டால்?

சுவாதி பலவித எதிர்கால கனவுகளுடன் வாழ்க்கையை துவக்கும் படிகளில் இருப்பவர்.கனவுகளுடன் வந்தவரை கருமாதிக்கு அனுப்பியவன் உண்மையில் நல்லவனாக இருக்க மாட்டான்.இருக்க முடியாது.
சுவாதியை காதலித்து அதனால் ஏற்பட்ட பட்டு கொலையாக இருந்தாலும் கூட அதை தவிர்த்திருக்கலாம்.கொலையினால் அவன் சிறைக்கு சென்று தான் வாழ்க்கையையும் இழப்பத்தை  தவிர என்ன காணப்போகிறான்?

காதல் என்பது இருபக்கமும் மனதளவில் உண்டாக்கக்கூடியது.ஒருபக்கம் மட்டும் வந்தால் அதற்கு காதல் என்று பெயரிட முடியாது.சுவாதியை விட்டால் உலகில் வேறு பெண்கிடைப்பது அவ்வளவு கடினமா?
உண்மையில் அவரை அவன் காதலித்திருந்தால் அக்காதல் தோல்வியடைந்தால்அவர் நினைவால்  மனம்வருந்தி அழைவானே தவிர சிதைக்க எண்ண  மாட்டான்.

இனி சுவாதி கொலைக்கு காரணத்தை கண்டு பிடிக்க வேண்டியது காவல் துறையின் பணி.அக்கொலை பற்றி உங்களுக்கு உருப்படியான தகவல்கள் தெரிந்தால் காவல்துறையிடம் சொல்லுங்கள்.இல்லாவிட்டால் வேறு பணிகளைப்பாருங்கள்.
உங்கள் கற்பனைகளை கட்டவிழ்த்து உண்மைபோல்  காட்டாதீர்கள்.

நாலுபேர் நாலு விதமாக பேசுவைத்து என்பது இயற்கை மனித குணம்.
ஆனால்  அதை முகநூலில் இடுகையாக இடாதீர்கள்.
அதை லட்சக்கணக்கில் பார்க்கிறார்கள் .
இதை சுவாதி கொலைக்காக மட்டும் சொல்ல வில்லை .

சாதியை சொல்லி மோதிக்கொள்கிறவர்கள் தான் முக்கியமாக கண்டு கொள்ள வேண்டும்.
சாதியினால் தமிழ்  நாட்டில் உள்ள அனைவருமே பயன் பெற்றதில்லை.

அதை வைத்து பிழைப்பு அரசியல் நடத்துகிறவர்களைத்தவிர.

அதனால்தான் தமிழ் நாட்டில் சாதி மோதல்கள் மின்னல் நேரத்துக்கே வந்து இடித்து செல்கிறது.

 அதை விட அவலம் நாம் தமிழர் கடசியினர் என்று சொல்லிக்கொள்ளும் சிலரின் இடுகைகள்.

அவர்கள் இடுகையை அவர் சைமன் அனுதாபி என்று தெரியாமல் போய் ஏதாவது பதில் கொடுத்து விட்டால் அடுத்து முகம் சுழிக்க வைக்கும் வசவு வார்த்தைகள்.வந்தேறி பட்டங்கள் நமக்கு கிடைக்கும்.

இன்று வேடிக்கை அல்லது சுவாரசியத்துக்காக நீங்கள் இடும் இடுகையை மற்றவர்கள் எதிர்காலத்தில் நம் வாழ்வில் நிகழும் நிகழ்வுக்காக இட்டு வேடிக்கை காட்டும் அளவுக்கு வந்து விடலாம்.

சமுக வலைத்தளங்கள் கூர்மையான ஆயுதம் எதிரியை மட்டும் அல்ல நம் கையையும் காயப்படுத்தி விடும்.
=======================================================================================
இன்று,
ஜூன்-27.

உலகின் முதல் அணுகரு ஆற்றல் உற்பத்தி மையம் மாஸ்கோவில் திறக்கப்பட்டது(1954)

உ லகின் முதலாவது ஏ.டி.எம்., லண்டனில் அமைக்கப்பட்டது(1967)


கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது(1998)


சிபூட்டி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது(1977)

========================================================================================