ஞாயிறு, 19 ஜூன், 2016

"சமஸ்கிருதம்" செத்துப்போன கதை !

அறுதிப் பெரும்பான்மையுடன்ஆட்சியைக் கைப்பற்றியுள்ள இந்துத்துவம் எதிர்பார்த்ததுபோல கல்வித் துறைக்குள் ஊடுருவுவதிலிருந்து தன் வேலையைத் தொடங்கியுள்ளது. 
அவர்கள் எதையும்  சிந்தித்துச் செயல்படுபவர்கள். ஆட்சி அதிகாரத்தை அவர்கள் இரு வழிகளில் பயன்படுத்துவர். 
1. உடனடிப்பயன் விளைவிக்கக் கூடிய பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள். இதன் மூலம் பின்னாளில் நாட்டுக்குஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள் . 
2. தொலை நோக்கில் என்றென்றும் தமக்குப் பயனளிக்கத் தக்க வகையில்,  கிடைத்திருக்கும் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திப் 
பெரும்பான்மைச் சமூகத்தை இந்துத்துவக் கருத்தியலுக்குஆட்படுத்துவர்.

ஆட்சி அதிகாரத்தில்இல்லாதபோதும் இந்தத் தொலை நோக்குப் பணிகளை சொந்த பலத்தில் நின்றும் மேலை நாடுகளில்பணி செய்யும் உயர்சாதி இந்துத்துவ சக்திகளின் துணை கொண்டும் சற்றே அடக்கி, ஆனால் உறுதியுடன்தொடர்வர். இந்தியாவெங்கும் அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை அவர்கள்செயல்படுத்துவது குறிப்பிடத் தக்கது. 
போன்ஸாலே இராணுவப் பள்ளி மூலம் பயிற்சி அளித்துஇராணுவத்திற்குள் ஊடுருவுவது, இந்தியாவெங்கிலும் உள்ள பழங்குடி மக்களை இலக்காக்கைச்செயல்படுவதுஹிட்லர், முசோலினிமுதலானோரின் 'பலில்லா', 'அவான்கார்டி' முதலான நிறுவனங்களை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படும் இந்துத்துவ அமைப்புகள்  ..... என அவர்களின் வேலைகள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடரும்.

கல்வித்துறையை அவர்களின் முக்கிய ஆயுதங்களில் ஒன்றாகப் பயன்படுத்துவர்.1950ல் உருவாக்கப்பட்ட இந்துமகா சபையின் "குறிக்கோள்களில்" ஒன்று,"இந்து ராஷ்டிரத்திற்குப் பொருத்தமான கல்வித் திட்டத்தை உருவாக்குவதற்கான கல்விவாரியம்" ஒன்றை அமைப்பது.
இந்தக் கல்வித்திட்டத்தின் முக்கிய அம்சம் வைதீக மதிப்பீடுகளைப் புத்துருவாக்குவது. வேத மொழியாகியசமஸ்கிருதத்துக்கு உயிரூட்டி அதன் மூலம் இந்துக்களை ஒருங்கிணைப்பது. 
அவர்களைப் பொருத்தமட்டில் "இந்திய ஒருமைப்பாடு" என்பது இந்துக்களை இணைப்பதுதான், அதுவும் கூடஉயர்சாதி மதிப்பீடுகளைக் (வைதீக மதிப்பீடுகள் என்பன வேறென்ன) கொண்டு அதன் கீழ் அடித்தளஇந்துக்களை இணைப்பதுதான். இது எத்தனை காரிய சாத்தியமற்ற அபத்தம் என்பதை இறுதியில் பார்ப்போம்.

இந்துக்கள் என்போர் தம்மமளவில் ஒரு 'தேசமாகவும்' (Nation), 'ஜாதி' (race) ஆகவும் மட்டுமின்றி ஒரு பொதுவான'சமஸ்கிருதி' (sanskriti) பண்பாட்டிற்கும் உரியவர்கள் என்றார் சாவர்கர். இந்தப் பண்பாடுசமஸ்கிருத மொழி  மூலமாகவே காப்பாற்றப் படுகிறது,"
இந்து இனத்தின் தாய் மொழி சமஸ்கிருதம்தான்" என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். "இந்தியப் பண்பாடு எனநாம் எதைச் சொல்கிறோமோ அவை அனைத்தும் சமஸ்கிருதத்திலேயே பொதிந்துள்ளது" என்றார் பாரதீயஜன சங் கட்சியைத் தோற்றுவித்த ஷ்யாமா பிரசாத் முகர்ஜி. "சமஸ்கிருதம்தான் ஒரே அனைத்திந்தியமொழி, பார்ப்பனர்களே ஒரே அனைத்திந்திய சாதி, அவர்களே இந்தியப் பண்பாட்டைக் காத்து வருபவர்கள்"என்றார் அருண்ஷோரி.

சமஸ்கிருதத்தைஇப்போது அவர்கள் முன்னெடுப்பதன் பின்னணி இதுவே. "இந்து இனம்" என்பதும்,"இந்தியப் பண்பாடு" என்பதும் அறிவுக்குப் பொருந்தாத அபத்தங்கள். இங்கு தனித்துவம் மிக்க பல இந்தியப் 'பண்பாடுகள்' தான் உண்டு. 
பார்ப்பனர்கள் பொத்திப் பொத்திப் பாதுகாத்துவந்த ."இந்தியப் பண்பாடு" என்பது தீண்டாமை, சாதி வேற்றுமை முதலான அடியோடுஅழித்தொழிக்கப்பட வேண்டிய கொடுமைகள்தான்.

இந்த அடிப்படையிலேயேஅவர்கள் சென்ற முறை ஆட்சிக்கு வந்தபோது (1998 - 2004) சமஸ்கிருத ஆண்டு, சமஸ்கிருத வாரம்ஆகியவற்றைக் கொண்டாடினர்; 
2000 பிரதிநிதிகள் பங்கேற்ற 'உலக' அளவிலான சமஸ்கிருத மாநாடொன்றை நடத்தினர்;, சமஸ்கிருத மொழி, வேதக் கல்வி, ஜோதிடம் முதலியவற்றைப் பள்ளிக் கல்வி முதல்பல்கலைக் கழகங்கள் வரை பாடத் திட்டத்தில் புகுத்த முயற்சித்தனர். "
சமஸ்கிருதம்பேசும் இயக்கம்" (Speack Sanskrit Movement), தொலைக்காட்சிகள் மூலம் சமஸ்கிருதபாடம் நடத்துவது என்றெல்லாம் தொடங்கினர். 
இவற்றை விரிக்க இங்கு இடமில்லை.

இதன் தொடர்ச்சியாகத்தான்இன்று "மொழிகளின் தாய்" எனக் கூறி CBSE பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடஆணையிடப் பட்டுள்ளது. 
இன்று இந்திய மொழிகளின்தாய் என்பதிலிருந்து அனைத்து மொழிகளின் தாய் என்கிற 'ரேஞ்சு'க்கு அவர்கள் கிளம்பியுள்ளனர்.இதன் பின்னணி சுவாரசியமானது. 
மத்திய ஆசிய ஆரியர்களோடு இங்கு வந்த பூர்வ சமஸ்கிருதம்அய்ரோப்பிய மொழிக் குடும்பத்திற்கு உரியது என 1786ல் வில்லியம் ஜோன்ஸ் நிறுவினார்.இத்தாலி, ஃப்ரென்ச், ஜெர்மன் போன்ற மொழிகளின் சகோதர மொழி அது என்பது இன்று மொழி இயல்அடிப்படையில் உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அறிவியல் உணமை. அங்கும் கூட அது தய்மொழிஅல்ல, சகோதர மொழிதான். 1
816லும், 1856லும் ஃப்ரான்சிஸ் எல்லிஸ் ஒயிட் மற்றும் ராபர்ட்கால்டுவெல் ஆகியோர் இந்தியத் துணைக் கண்டத்தில் பயிலப்படும் முக்கிய மொழிகள் குறைந்தது இரு வேறு ஒன்றுக்கொன்று தொடர்பற்ற மொழிக் குடும்பங்களைச் சார்ந்தன என நிறுவினர். தமிழ்முதலான தென்னிந்திய மொழிகள் ப்ராஹூய் முதலான சிந்து வெளியை ஒட்டிய பகுதியில் பயிலப்படும் மொழி முதலியன திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை.. 
இன்றைய சமஸ்கிருதம். இந்தி,போஜ்புரி, மைதிலி முதலானவை இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட 'இந்தோ ஆரிய' மொழிக்குடும்பத்திற்கு உரியவை என்பது இன்று நிறுவப்பட்ட உண்மை.

திராவிட மொழிகளேசமஸ்கிருதத்தைக் காட்டிலும் இந்திய மண்ணுக்கு உரியவை என்பதை இந்துத்துவவாதிகளால் செரிக்க இயலவில்லை. 
வழக்கமான பார்ப்பன யுக்தியை அவர்கள் மேற்கொண்டனர். சமஸ்கிருதம் தோன்றிய இடமே இந்தியாதான், 
ஆரியர்களே இந்தியாவின் பூர்வ குடிகள், சிந்து வெளி நாகரிகமே ஆரியருடையதுதான்என்று ஒரு 'மெகா' கதையை அவிழ்த்து விட்டனர். அதற்கு அவர்கள் காட்டிய "ஆதாரங்கள்"எல்லாம் அப்பட்டமான 'ஃப்ராடு' வேலைகள் என்பதை மிஷேல் விட்செல், ஸ்டீவ் ஃபார்மர் என்கிறஇரு மொழி இயல் மற்றும் இந்தியவியல் வல்லுனர்கள் அடித்து நிறுவிய பின் (பார்க்க;:எனது'ஆரியக் கூத்து' நூல்) இப்போது சற்று அடங்கியுள்ளனர். 

 இருந்தாலும் அவ்வப்போது இப்படி நாம் அசந்த நேரங்களில்"மொழிகளின் தாய்" என்றெல்லாம் நூல் விட்டுப் பார்ப்பார்கள்.

இந்திய அரசியல்சட்டத்தைப் பொருத்த மட்டில் எட்டாவது பட்டியலில் காணப்படும் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் 
சமஸ்கிருதமும் ஒன்று அவ்வளவே. தவிர செம்மொழிகளாக அறிவிக்கப்பட்ட மொழிகளில் அதுவும்ஒன்று. வேறு எந்தச் சிறப்பும் அதற்குக் கிடையாது. 
சொல்லப் போனால் அவற்றில் இன்று முற்றிலும் வழக்கொழிந்த மொழி இது.

சமஸ்கிருதம் ஒருசெம்மொழி, இலக்கிய வளங்கள் நிறைந்த மொழி எனச் சொல்லிக் கொள்வதில் நமக்கு மறுப்பில்லை. அது உண்மையும் கூட. 
அதற்கு சிறப்பு நிலை கொடுக்க முயற்சிப்பது, தமிழ் உள்ளிட்ட தொன்மையும், வளமும், தனித்துவமும், இம்மண்ணுக்குக் கூடுதல் நெருக்கமும் உள்ள மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி என்பது, அதன்'வளர்ச்சி'க்கு சிறப்பு நிதி ஒதுக்குவது என்பதற்கெல்லாம் அரசியல் சட்டத்தில் இடமில்லை என்பதோடு அது தமிழ் முதலான மொழிகளை இழிவுபடுத்துவதும் ஆகும். 

செம்மொழி மாநாட்டில்பேசிய மொழி இயல் வல்லுனர்கள் பலரும் தமிழைச் சிந்து வெளிப் பண்பாட்டுடன் இணைத்துப் பார்ப்பதற்கான ஆதாரங்கள் சமீப காலத்தில் அதிகரித்துள்ளதை ஏற்றுக் கொணடனர், அந்த வகையில் சமஸ்கிருதத்தைக் காட்டிலும் தொன்மை மிக்க மொழி தமிழ் என்பது இன்று உறுதியாகிக் கொண்டுள்ளது. 
தவிரவும் பிராகிருதம், பாலி முதலான இதே அளவு தொன்மை மிக்க இந்தோ ஆரிய மொழிகள் மக்கள்மொழிகளாக இருந்தவை; இலக்கிய வளம் மிக்கவை; பவுத்த, சமண அளவையியல் நூற்களைத்  தன்னகத்தே ஏராளமாகக் கொண்டவை. சமஸ்கிருதத்திற்குஎந்த வகையிலும் குறையாதவை.

சடங்கு மொழியாகவும்,காவிய மொழியாகவும் உருப் பெற்ற சமஸ்கிருதம் பின்னாளில் வழக்கொழிந்து போனது எனச் சொல்வதைக் காட்டிலும் அது எந்நாளுமே பெரிய அளவில் மக்கள் மொழியாக இருந்ததில்லை என்பதே உண்மை. 
கி.மு 6ம் நூற்றாண்டில் உருவான அவைதீக மதங்களான சமணமும் பவுத்தமும் பாலி, பிராகிருதம்முதலான மக்கள் மொழிகளையே தங்களின் ஆக்கங்களுக்குப் பயன்படுத்தின. எனினும் ஒரு அரசவைமொழியாகவும் தத்துவ விவாதங்களுக்கான மொழியாகவும் சமஸ்கிருதம் தொடர்ந்த போது கி.பி3,4 ம் நூற்றாண்டுகளில் இந்த மதங்களின் அளவை நூல்களும் சமஸ்கிருதத்தில் எழுதப்படும்நிலை உருவாகியது. எனினும் அடுத்து உருவான அரசியல் பண்பாடு பெரிய அளவில் மக்கள் தொடர்பைப்பேண வேண்டியதாக இருந்தது. 
கல்வெட்டுக்கள் முதலியன மக்கள் மொழிகளில் (vernacularlanguages) வெளியிடப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 
தர்க்க, அளவை விவாதங்களும் கூடஉள்ளூர்மொழிகளில் செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்குரிய வகையில் வீரசோழியம் முதலிய புதிய இலக்கண நூல்களும் உருவாயின. இது போன்ற செயல்பாடுகளுக்கான ஒரு trans local /trans cultural மொழி என்கிற நிலையை சமஸ்கிருதம் இழந்தது. உள்ளூர் மொழிகள் ஓங்கும் நிலைஏற்பட்டது. 
பாரதம், இராமாயணம் முதலியனவும் இனி உள்ளூர் மொழிகளில்தான் எழுதப்பட வேண்டும்என்கிற நிலை உருவானது. இலக்கிய உருவாக்கம் என்பதும் இனி அரசவை மற்றும் புலமையாளர்களின் குழுமம் என்பவற்றைத் தாண்டிச் செல்லும் நிலை இந்தியாவெங்கும் உருவானது.


சமஸ்கிருதம் செத்துப்போன கதை இதுதான்,

இனி அதை உயிர்ப்பிக்கும்முயற்சி போன்ற முட்டாள்தனம் ஏதுமில்லை. 
சனாதனத்தைத் திருப்பி உயிர்ப்பிக்கும் முயற்சி கேலிக் கூத்தாக முடிவதுதான் இயற்கை, அதுதான் இப்போது நடந்து கொண்டுள்ளது. 
அரை இந்துத்துவக்கட்சியான காங்கிரஸ் ஆட்சியிலும் எட்டாவது ஷெட்யூல் மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதத்தை'உயிர்ப்பிக்க' 1947 தொடங்கி எடுத்த முயற்சிகளெல்லாம் நகைச்சுவயாகத்தானே முடிந்தன. 
சமஸ்கிருதம் பேசும் பயிற்சி, 'ஆகாஷ்வாணி'களில்சமஸ்கிருதத்தில் செய்தி வாசித்தல், பள்ளிகளில் சமஸ்கிருதப் போட்டிகள் நடத்துதல் என்பதெல்லாம்என்ன பயனை விளைவித்தன? 
புதிய சமஸ்கிருத இலக்கியங்களுக்கு சாகித்ய அகாதமி  அளித்த பரிசுகளில் முதல் ஐந்து சமஸ்கிருதம் குறித்துஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதப்பட்ட நூல்களுக்குத்தானே கொடுக்கப்பட்டன. 
இது விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டவுடன் 'சித்திர காவ்யா' என்றொரு நூலுக்குப் பரிசளித்தனர். அது சுத்தானந்தபாரதியின் 'பாரத மகாசக்தி காவிய'த்திற்கு  தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் பரிசளித்ததுபோலக் கேலிக் கூத்தாகியது. 
தமிழில் வேறு பல புதிய இலக்கியங்கள் இருந்தும் இப்படிச் செத்தொழிந்த ஒரு வடிவத்தில் எழுதப்பட்ட ஒரு "காவியத்திற்குக்" கொடுத்ததால் அது கேலிக் கூத்தாகியது. 
சமஸ்கிருதத்திலோ கொடுக்க வேறு நூலே இல்லாமல் இப்படி ஒரு சவத்திற்கு விருதளித்து வெடிக்கைப் பொருளானார்கள்.

1857ல் குஜராத்திக்கவிஞர் தல்பத்ராம் தாஹ்யாபாய் இயற்றிய ஒரு கவிதையை ஷெல்டன் பொல்லாக் மேற்கோள் காட்டுவார். சமஸ்கிருதத்தின் மரணத்தை அறிவித்த அந்த முதல் பதிவு:

"போஜ மன்னன்பார்ப்பனர்களுக்கு அளித்த விருந்துகளும் பெருநிதிக் குவியங்கள் எல்லாமும் தேவ பாஷையின்சாவைக் கண்டு அதற்கு இறுதிச் சடங்குகளுக்காக அவன் அளித்தவை தான்...

ஆடம்பரமாக அமர்ந்திருந்தபாஜிராவ் அந்தஇழவுச் சடங்குகளைச் செய்தான். இன்றும் கூட  வழி  வழிவரும் ஆட்சியாளர்கள் ஆண்டு தோறும் அதற்குத் திவசம் செய்யத் தவறுவதில்லை.."

பதினான்காம் நூற்றாண்டுக்குப் பின் மன்னர்கள் ஜெய்னுல் ஆப்தீன் (காஷ்மீர்), கிருஷ்ணதேவ ராயர் (விஜயநகரம்), அக்பர் உள்ளிட்ட முகலாய மன்னர்கள், ஜெய்சிங் (ராஜஸ்தான்) கிருஷ்ணராஜ உடையார் (மைசூர்). தஞ்சை மராட்டிய மன்னர்கள் முதலானோர் சமஸ்கிருதத்தை உயிர்ப்பித்துப் புதிய இக்கியங்கள் ஆக்க மேற்கொண்ட முயற்சிகளைத்தான் தல்பத்ராம் இப்படிச் சொல்கிறார். முகலாயர்களின் நடவடிக்கைகளால்தான் சமஸ்கிருதம் அழிந்தது எனச் சொல்வது அபத்தம் என்கிறார் The Language of god in the World of Men எனும் முக்கிய நூலின் ஆசிரியர் ஷெல்டன் பொல்லாக்.

இந்த வரிசையில்தான் இப்போது  பா.ஜ.க அரசும்  சமஸ்கிருதத்திற்கு திவசம் செய்யக் கிளம்பியுள்ளது.
                                                                                                                                  

                                                                            -அ.மார்க்ஸ்


குறிப்பு : இந்தி அதிக்கத்தைத் தமிழர்கள் எதிர்த்தது போக இன்றுவட இந்தியர்கள் எதிர்க்கத் தொடங்கி விட்டனர், மைதிலி, போஜ்புரி, பாகதி, ஹர்யான்வி, சடிஸ்கரி, சந்தாலி, பிரஜ்பாஷா இப்படியான பல மக்கள் மொழிகளை நசுக்கி உருவாக்கப்பட்டஇந்தி எனும்'ராஷ்டிர பாஷா' வுக்கு எதிராக இன்று இம்மொழியினர் தம் தனித்துவங்களுக்குக்குரல் கொடுக்கத் துவங்கிவிட்டனர். 
ஏற்கனவே மைதிலி,சந்தாலி முதலியன எட்டாவது ஷெட்யூலில்சேர்க்கப்பட்டு விட்டன. இப்போது போஜ்புரியும் சேர்க்கப்பட வேண்டும் என அம் மொழி பேசுவோரால்கோரிக்கை எழுப்பப் படுகிறது. சென்ற காங்கிரஸ் ஆட்சியில் அக்கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதாக வாக்களிக்கப்பட்டது. 
பிஹாரில் மட்டும் மைதிலி, போஜ்புரி, மாகதி. பஜ்ஜிகா, அங்கிகா என ஐந்து மொழிகள் பேசப்படுகின்றன். சட்டிஸ்கர் மாநிலமும் இணைந்திருந்த போது சந்தாலி, சட்டிஸ்கரிமுதலான மொழிகளும் அங்கு பேசப்பட்டன.  (நாம் எல்லாவற்றையும் இந்தி என நினைத்துக் கொண்டிருப்பது தவறு. )இந் நிலையில்தான் இன்று இந்தியைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி இம் மொழிகளை முற்றாக அழிக்க பா.ஜ.க அரசு முயற்சிக்கிறது.
                                                                                                            (கருஞ்சட்டைத் தமிழர், ஆகஸ்ட் 2014)
===================================================================================================
இன்று,
ஜூன் -19.

  • ஹங்கேரி விடுதலை தினம்
  • குவைத், அரபு ஐக்கிய ராஜ்யத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது(1961)
  • வாஷிங்டனில் முதல் முறையாக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது(1910)
===================================================================================================