செவ்வாய், 26 ஜூலை, 2016

ஊக்க மருந்து மல்யுத்தமும்-கபாலிடா காலிடா நிலவரமும்.ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கங்களைக் குவிக்காததற்கு காரணம் இந்தியாதான்.இங்குதான் விளையாட்டுத்துறையில் அரசியல் கொடி கட்டி பறக்கிறது.லலித் மோடி,சீனிவாசன் ,டால்மியா என்று அதற்கு தலைமை தாங்குபவர்கள் தங்கள் ஆதரவாளர்களை,தங்களுக்கு பிடித்தவர்களையே தேர்வு செய்வதாலும் திறமை மிக்க விளையாட்டு வீரர்கள்,பயிற்சியாளர்களை ஓரங்கட்டுவதாலுமே அகில உலகில் விளையாட்டுத்துறை பதக்கங்கள் இந்தியாவுக்கு கனவாகவே போய்விடுகிறது.
ஹாக்கியில் பதக்கங்களை குவித்த இந்தியா இன்று  காணாமல் போய் விட்டது.
அதன் திறமை மிக்க பயிற்சியாளர் தனபால் பிள்ளை குறுகிய அரசியலில் ஒதுக்கப்பட்டு காணாமல் போனதால் இப்படி ஒரு நிலை.

2016 ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி  பிரேசிலின் ரியோவில் ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. 
பல நாடுகளிலிருந்தும் 10,500க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்தியாவிலிருந்து  இருந்து 57 வகையான விளையாட்டு பிரிவில் 56 ஆண்கள், 47 பெண்கள் என 103 பேர் பங்கேற்க உள்ளனர்.
இந்த எண்ணிக்கை இதுவரை கலந்து கொண்ட வீரர்களை  விட அதிகம். 
இப்போது இந்த ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களைத்தான் பிரசனி.
கடந்த 2015 ம் ஆண்டு,  உலக  சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற  கோட்டாவில், ரியோ ஒலிம்பிக்கில் 74 கிலோ எடைப்பிரிவில் நார்சிங் யாதவ் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டிருந்தார்.  
இருப்பினும், 2008 (வெண்கலம்), 2012 (வெள்ளி) என, இரு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற தனக்குத் தான் இந்த வாய்ப்பை தர வேண்டும் என வீரர் சுஷில் குமார், போர்க்கொடி துாக்கினார். இருவருக்கும் மோதல் நடத்தி, இதில் வெல்பவரை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப வேண்டும் என கேட்டு வருகிறார். 
ஒலிம்பிக்கில் நார்சிங் பங்கேற்பதை எதிர்த்து சுசில்குமார் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். 
இந்தியா முழுவதும் பிரபலமான மல்யுத்த வீரர் என்பதால், சுசில்குமாருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில்  'சப்போர்ட் 4 சுஷில் ' என்ற 'ஹேஸ்டேக்' கூட உருவாக்கப்பட்டது. 

ஆனால் வழக்கில் நார்சிங்கிற்கு ஆதரவாக தீர்ப்பளிக்கப்பட்டது. '' இந்திய மல்யுத்த சங்கம், கோட்டா முறையை பின்பற்றி வரும் வேளையில், சுஷில்குமாரின் கோரிக்கை நியாயமற்றது''  என நீதிமன்றம் தீர்ப்பளிக்க, சுஷில்குமாருக்கு பின்னடைவு ஏற்பட்டது. 

பல்கேரியாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய மல்யுத்தக்குழுவினர், 
நாடு திரும்பியதும் கடந்த ஜுன் 25 ம் தேதி டெல்லியில் ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. 
தேசிய ஊக்க மருந்து கட்டுப்பாடு முகமையில் நடந்த இந்த சோதனையில், நார்சிங்கின் ரத்த மாதிரியில் ஸ்டீராய்டு என்ற ஊக்கமருந்து கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் '' நான் எந்த தவறையும் செய்யவில்லை. குற்றமற்றவன்'' என நார்சிங் தெரிவித்துள்ளார்.
தற்போது ஊக்க மருந்து விவகாரத்தால், அவர் தடையை சந்திக்க நேரிடும்.
பொதுவாக Methandienone ஸ்டீராய்ட்,  ஊசி வழியாகவோ அல்லது மாத்திரை வழியாகவோ,  சாப்பிடும் உணவு அல்லது குடிக்கும் பானங்கள்  மூலமாகவோ சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமலேயே கலந்து விடலாம். அது போலவே தனக்கு தெரியாமலேயே  உணவிலோ அல்லது குளிர்பானங்களிலோ கூட அது கலந்திருக்கலாம் என நார்சிங் சந்தேகம் கிளப்பியிருக்கிறார்.
'' கடந்த 15 ஆண்டுகளாக ஃப்ரீஸ்டைல் பிரிவில் மல்யுத்த வீரனாக களமிறங்கியிருக்கிறேன். 30 முறைக்கும் மேல் ஊக்க மருந்து சோதனை எனக்கு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு முறை கூட பாசிடிவ் ரிசல்ட் வந்ததில்லை '' என்றும் நார்சிங்  மேலும் கூறியுள்ளார். 

மல்யுத்தப் போட்டிகள், எடைப் பிரிவின் கீழ் நடப்பவை. போட்டித் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர், ஸ்டீராய்டு உடலில் கலந்ததால் அது உடல் எடையை அதிகரித்து விடும். இதனால் குறிப்பிட்ட எடைப் பிரிவில் போட்டியிட முடியாத நிலை கூட ஏற்படலாம். உடலில் ஸ்டீராய்ட் கலந்தால் 4 முதல் 18 வாரங்கள் வரை ரத்த, சிறுநீர் மாதிரிகளில்  இருப்பது தெரியும். அதனால் ஸ்டீராய்டு பயன்படுத்தப்பட்டால் வீரர்கள் தப்பிப்பது கஷ்டமே.
நவீன காலகட்டத்தில் வீரர்களுக்கு அடிக்கடி ஊக்கமருந்து சோதனை நடத்தப்படுவதால், 'பிடிபட்டுவிடுவோம் ' என்ற அச்சம் இல்லாமல் இருக்காது. அதனால் ஸ்டீராய்டு பயன்படுத்துவது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம். இது போன்ற விஷயம் நார்சிங்கிற்கு நிச்சயமாக தெரியாமல் இருக்காது. அதனால் இந்த விவகாரத்தை வேறு ஒரு கோணத்தில் அணுக வேண்டியது இருக்கிறது.
இந்திய ரெஸ்லிங் சங்கம்,  இந்த விவகாரத்தில்  நார்சிங்கிற்கு பின்னால் நிற்பது அவருக்கு சற்று ஆறுதல். ஆனாலும், தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க அவர் கடுமையாக போராட வேண்டியது இருக்கும். வீடியோ ஆதாரமோ அல்லது வேறு நேரடி சாட்சியமோ இருந்தால்தான் நார்சிங்கின் கருத்து ஏற்றுக் கொள்ளப்படும். 
சோனிப்பேட்டில் அமைந்துள்ள இந்திய விளையாட்டு ஆணைய மைய வளாகத்தில்,  நர்சிங் யாதவின் அறை  நண்பராக இருந்த சந்தீப் துல்சி என்ற மல்யுத்த வீரரும் 'நடா' நடத்திய ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்துள்ளதாக திங்கள்கிழமை மதியம் தகவல் வெளியானது. இது இந்தியாவுக்கு பெரிய அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இருவர் உட்கொண்ட ஊக்கமருந்தும் ஒரே வகையைச் சார்ந்தது என்று மருத்துவப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் உதவி செயலாளர் வினோத் தோமர் , "இருவரது ரத்த மாதிரிகளிலும் ஒரே வகையான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதுவே சந்தேகத்தை உண்டாக்குகிறது." என்று தெரிவித்தார்.
இது குறித்து விளக்கம் அளித்த துளசி யாதவ், நானும் நர் சிங்கும் அறை நண்பர்கள். யாரோ வேண்டுமென்றே எங்கள் சாப்பாட்டில்  தடைசெய்யபட்ட ஊக்க மருந்தை கலந்து வைத்திருக்க லாம் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். 

ஏற்கனவே ஒலிம்பிக்கில் இரு வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்த சுஷில் குமாருக்குப் பதிலாக,  74 கிலோ எடைப் பிரிவில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பினை நார்சிங் பெற்றார். சுஷில்குமார் தனிப்பட்ட முறையில் தகுதிச் சுற்றுகளில் பங்கேற்றார். ஆனால் கடைசியாக நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றவர் என்ற அடிப்படையில்,  நார்சிங் யாதவிற்கு இந்திய மல்யுத்த சங்கம் முன்னுரிமை அளித்தது. 

இதற்கு முன் , இந்திய மல்யுத்த வீரர்கள் கோட்டா அடிப்படையில்தான் பங்கேற்றுள்ளனர். சுஷில் குமார் கூட 2004, 2008, 20012 என மூன்று ஒலிம்பிக்கில்  கோட்டா அடிப்படையில்தான் பங்கேற்றார். அதனால் இந்த விஷயத்தில் உரிமை கோருவது நியாயம் இல்லையென சுஷிலுக்கேத்   தெரியும். ஆனாலும் இரண்டு ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக சுஷில்குமார் வெண்கலம் வென்றவர். தற்போது ஊக்கமருந்து விவகாரத்தில் யாதவ் சிக்கியதும் சுசில்குமார் தனது ட்விட்டர் தளத்தில்,  ''மரியாதை தேடி வரவேண்டும் தேடி போய் பெறக் கூடாது '' என நேற்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.  அத்துடன் நிற்கவில்லை. இன்று ட்விட்டரில், 20 வினாடிகள் ஓடக் கூடிய வீடியோ ஒன்றையும் சுஷில்குமார் வெளியிட்டுள்ளார்.  அதில், ''ரெஸ்லிங்கில் இதுபோன்ற சம்பவங்களை காண்பது அதிர்ச்சியாக இருக்கிறது. 
எனது வாழ்க்கையை ரெஸ்லிங்கிற்காக அர்ப்பணித்துள்ளேன். நாட்டுக்காக 3வது பதக்கத்தை வெல்வதே எனது குறிக்கோளாக இருந்தது. ஆனால் கடந்த ஒரு மாத காலமாக பயிற்சியில் இருந்து ஒதுங்கியிருக்கிறேன். எனக்குப் பதிலாக ஒலிம்பிக்கில் பங்கேற்பவர்கள் பதக்கம் வென்று வருவார்கள் என நம்புகிறேன்''  என்று கூறியுள்ளார். 
ஆனால் உலக விளையாட்டுப் போட்டிகளில்,ஒலிம்பிக்குகளில் அதிக கோப்பைகலை வெல்ல ரஷ்ய அரசே தனது விளையாட்டு வீரார்கல் ஊக்க மருந்து உட் கொள்ள ஊக்கம்  அளித்துள்ளது.
இதற்காக இம்முறை ரஷ்யாவை சேர்ந்த 68 விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள தடை விதிக்கப் படும் என்று எதிர் பார்க்கப்பட்டது.
ஆனால் ஒலிம்பிக் குழு அமைத்த விசாரனைக்குழு ரஷ்ய வீரார்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்படாது என்றும்,அவர்கள் போட்டி காலங்களில் ஊக்கமருந்து அருந்தாமல் அது தொடர்பான  சோதனைகளில்  கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவித்து விட்டது.
இந்த ஊக்கமருந்து விவகாரம் இருக்கையில் இந்த நர்சிங் யாதவ் பிரச்சினை  புதிய கோணத்தில் திரும்பியுள்ளது. 
சுஷில் குமாருக்கு ‘தொல்லையாக’ இருப்பதாக கூறி  நரசிங் யாதவுக்கு  கொலை மிரட்டல் வந்துள்ளது. 

 சோனேபேட் பயிற்சி மையத்தில் வைத்து நரசிங் யாதவ் தாக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அரியானா சி.ஐ.டி., போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த இரு நாட்களாக நரசிங் யாதவ் சென்று வரும் இடங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
தவிர, பயிற்சி மையத்தை சுற்றிலும் போலீசார் அவ்வப்போது ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இதனால் நரசிங் யாதவுக்கு மட்டும் பயிற்சி முகாமை மாற்ற முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அநேகமாக மும்பை கண்டிவிலி மையத்துக்கு இது மாற்றப்படலாம்.
 இதுகுறித்து நரசிங் யாதவ் கூறுகையில்,‘‘ பாதுகாப்புடன் இருக்குமாறு போலீசார் ‘அட்வைஸ்’ செய்தது உண்மை தான். என்னைப் பொறுத்தவரையில் யாரும் வேண்டுமென்றே தாக்குவர் என்று எண்ணவில்லை. நாங்கள் சகோதரர்கள் போலத்தான் பழகி வருகிறேன். 
இதுகுறித்து எனக்கு கவலையில்லை,’’ என்கிறார் நரசிங்.  
=========================================================================================
இன்று,
ஜுலை-26.

  • கார்கில் நினைவு தினம்
  • மாலத்தீவு விடுதலை தினம்(1965)
  • உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜார்ஜ் பெர்னாட் ஷா பிறந்த தினம்(1856)
  • உலகின் முதலாவது பயணிகள் ரயில் சேவை தெற்கு லண்டனில் ஆரம்பமாகியது(1803)
  • நியூயார்க், அமெரிக்காவின் 11வது மாநிலமாக இணைந்தது(1788)
=========================================================================================
கபாலிடா  காலிடா
Yuva Krishna,  ஐச் சேர்த்துள்ளார்.

உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். வைரமுத்துவை நொந்துக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை.
’கபாலி’, படுதோல்வி அடைந்திருக்கிறது. ‘லிங்கா’வைக் காட்டிலும். சந்தேகம் இருப்பவர்கள் இங்கே இணைத்திருக்கும் ஸ்க்ரீன்ஷாட்டை பாருங்கள். 
இன்றைய நிலவரம் இதுதான். உதயம் காம்ப்ளக்ஸில் கடுப்பாகி போய் ’ஜுராசிக் பார்க் 3டி’, ‘தில்லுக்கு துட்டு’ எல்லாம் ரீரிலீஸ் செய்துவிட்டார்கள். ஆனானப்பட்ட லிங்காவையே நான்கு ஸ்க்ரீன்களிலும் ஒரு வாரத்துக்கு ஓட்டியவர்கள் அவர்கள். நம்புங்கள். உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள். சூப்பர் ஸ்டாரின் படம் காற்றாடிக் கொண்டுதான் இருக்கிறது.
கமல் ரசிகர்கள் தங்கள் வணிகத் தோல்வியை எப்போதுமே கம்பீரமாக ஏற்றுக் கொள்பவர்கள். இத்தனைக்கும் கமல் வலுவான content கொடுத்த ‘ஹேராம்’, ‘ஆளவந்தான்’, ‘அன்பே சிவம்’, ‘உத்தம வில்லன்’ கொடுத்தபோதெல்லாம் கூட. hypocritical தன்மை கொண்ட ரஜினி ரசிகர்களிடம் அந்த பண்பினை எதிர்ப்பார்க்க முடியாது. 
‘கோச்சடையான்’ கூட அவர்களுக்கு மகத்தான வெற்றிப்படமே. சந்தானம் வென்றாலும் கூட அந்த வெற்றியை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை கமல் ரசிகர்களுக்கு உண்டு. விஜய்யோ, அஜித்தோ லேசான ஹிட் கொடுத்தாலும்கூட ரஜினி ரசிகர்கள் உடனடியாக பதறிப்போய், ‘படையப்பாடா’ என்று உரும ஆரம்பித்து விடுவார்கள்.
கபாலியை முன்னிட்டு கமலையும், ரஜினியையும் நடிப்பில் ஒப்பிட்டு ஒரு தரைடிக்கெட்டு ரஜினி ரசிகர் எழுதியிருந்த ஃபேஸ்புக் ஸ்டேட்டஸை காணமுடிந்தது. 
கமலுக்கு, ரஜினி மட்டுமல்ல. இந்திய அளவிலேயே இன்றுவரை யாரும் நடிப்பில் போட்டியில்லை. 
சிவாஜி எப்படி அவரது சமகாலத்தின் நடிப்புலக டானோ, அதுபோலதான் கமலும். அவர் காலத்தில் அவர்தான் பெஸ்ட். இன்று இந்தி சினிமாவின் சிறந்த நடிகர்களாக புகழப்படும் பலரும்கூட தங்களுக்கு கமல்தான் ரெஃபரன்ஸ் என்று சொல்கிறார்கள்.
மில்லெனியம் பிறந்த கடந்த பதினாறாண்டுகளில் எடுத்துக் கொண்டால் கூட கமல் கொடுத்த படங்கள், ‘ஹேராம்’, ‘தெனாலி’, ’ஆளவந்தான்’, ‘பம்மல் கே.சம்பந்தம்’, ‘பஞ்சதந்திரம்’, ‘அன்பே சிவம்’, ‘விருமாண்டி’, ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘தசாவதாரம்’, ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘மன்மதன் அம்பு’, ‘விஸ்வரூபம்’, ‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’, ‘தூங்காவனம்’ ஆகிய படங்கள். 
இந்தப் பட்டியலையே பார்த்தாலும் கூட ஒரு படத்தின் கேரக்டர் இன்னொரு படத்தில் பிரதிபலிக்க வாய்ப்பேயில்லாத versatile தன்மை கொண்ட மாபெரும் கலைஞன் அவர்.
ரஜினியின் படங்களை எடுத்துக் கொண்டால், ‘பாபா’, ‘சந்திரமுகி’, ‘சிவாஜி’, ‘குசேலன்’, ‘எந்திரன்’, ’கோச்சடையான்’, ‘லிங்கா’, ‘கபாலி’ அவ்வளவுதான். இதில் ‘எந்திரன்’ மட்டுமே மாறுபட்ட கேரக்டரில் ரஜினி நடித்த படம். 
அதுவும்கூட கமலுக்காக எழுதப்பட்ட ஸ்க்ரிப்ட். மற்றபடி இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் படங்களில் நடிப்பில் என்ன பெரிய வித்தியாசத்தை ரஜினியால் காட்ட முடிந்திருக்கிறது?
கமலின் படங்களோடு ரஜினி மட்டுமல்ல. வேறெந்த நடிகரும் போட்டியிடமுடியாது என்பதுதான் உண்மை. கமலுடைய தோல்வியடைந்த படங்களின் சாதனைத் தரத்தை மற்றவர்கள் எட்ட முடிந்தாலே கூட அது அதிசயம்தான். 
ரஞ்சித் இயக்கிய ரஜினி படத்தை விமர்சித்தாலேயே அது ஜாதிவெறி ஆகிறது என்றால், பிறப்பால் பார்ப்பனர் என்றாலும் தன்னை பெரியார் திடலில் தவழும் குழந்தை என்று அறிவித்தபிறகும் கமலின் சாதனைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதும்கூட ஜாதிவெறிதான். 
தலித்திய ஆதரவு என்பது ஒரு சினிமாவை முரட்டுத்தனமாக கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதில் இல்லை.
ரஜினி ரசிகர்களை விட்டுத் தள்ளுவோம். கபாலியை ஃபேஸ்புக்கில் கொண்டாடும் அறிவுஜீவிகள்? அவர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் பெரிய வேறுபாடு எதுவுமில்லை என்பதை நிரூபிக்கிறார்கள். அவ்வளவுதான். தங்களையே இந்தளவுக்கு ஏன் தமிழ் அறிவுஜீவிகள் மட்டும் தரம் தாழ்த்திக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. 

இவர்கள் இதற்கு முன்பாக கொண்டாடித் தீர்த்த ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’யெல்லாம் கூட படுதோல்விப் படங்கள்தான். இவர்கள் எடுத்தியம்பும் குறியீடுகளை வெள்ளித்திரையில் தேடித்தேடி சாமானியன் சலித்ததுதான் மிச்சம். 
இப்போது இவர்கள் ‘கபாலி’யின் குறியீடுகளாக பட்டியலிட்டுக் கொண்டிருப்பதற்கும் அதேதான் கதி.
ரஜினி, தன்னை கமலுக்கு போட்டியான நடிகர் என்று கருதிய காலமெல்லாம் ‘கை கொடுக்கும் கை’ காலத்தோடு போயாச்சு. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் நமக்கு கொடுத்துக் கொண்டிருந்தது unlimited entertainment. ’கபாலி’யில் அது கம்ப்ளீட்டாக மிஸ்ஸிங். 
அவ்வளவுதான்.
ரஜினி, ஷங்கரின் ‘2,0’ படத்திலும், ரஞ்சித் அடுத்து சூர்யாவை வைத்து இயக்கவிருக்கிற படத்திலும் தங்களுடைய பழைய சிறப்புகளை மீண்டும் அடைவார்கள் என்று நம்பி வாழ்த்துவோம். டாட்.