சில்லறைக்கடனை அடித்து பிடுங்க பெருங் கடன்காரன்?

இந்தியாவில் ஏழை மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன் மொத்தம் 72ஆயிரம் கோடிகள்.இவற்றை வசூலிக்க  சோம்பேறித்தன பட்ட வங்கிகள் பாதியை தள்ளுபடி செய்து மீதியை கட்டினால்  போதும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு குத்தகைக்கு கொடுத்துள்ளது.
எந்த ரிலையன்ஸ் நிறுவனம் தெரியுமா?
இந்திய வங்கிகளில் 1லட்சத்து 70 ஆயிரம் கோடிகளை  கடன் வாங்கி விட்டு இன்று வரை வட்டி கூட செலுத்தாத உத்தம வில்லன் அம்பானி கம்பெனி.
ஸ்டேட் வங்கி தனது கல்விக் கடனை 55 சதவீத தள்ளுபடியில் ரிலையன்சுக்கு விற்ற செய்தி நாளிதழ்களில் கண்கள் சென்றடையாத மூலை முடுக்குகளில் அச்சாகி ஓய்ந்து விட்டது. அதை படித்து மக்கள் குமுறி விடக்  கூடாது .ஆனால் மக்களுக்கு அறிவித்தோம் என்ற சடங்குக்காத்தான் கண்ணுக்கே தெரியாத ஒரு பத்தி செய்தி.
அது தொடர்பான வேறு செய்திகள் ஏதும் கிடைக்குமா என்று தேடிய போது complaintboard.in என்கிற இணையதளத்தில் மேற்கண்ட அபயக் குரலை காண முடிந்தது. 
அதே இணையதளத்தில் பாதிக்கப்பட்ட பல்வேறு மாணவர்கள், இளைஞர்கள் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தியிருந்ததையும் வாசிக்க முடிந்தது.
பாதிக்கப்பட்ட இளைஞர்கள் பெரும்பாலும் வங்கி நடைமுறைகள் குறித்தோ, நுகர்வோர் பாதுகாப்பு குறித்தோ அறியாத அப்பாவிகள். பெரும்பாலானோர் முதல் தலைமுறை பட்டதாரிகள். மாதத் தவணை, வட்டி போன்றவை எவ்வாறு கணக்கிடப்படுகின்றது, 
அசலுக்கும் வட்டிக்கும் உள்ள இடைவெளி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது, திருப்பிச் செலுத்துவதற்கான விதிமுறைகள், அப்படித் திருப்பிச் செலுத்தாவிட்டால் என்ன நேரும் என்பவையெல்லாம் இவர்கள் அறியாதவை. 
எப்படியும் கடன் வாங்கி பட்டம் பெற்று விட வேண்டும் – படித்த உடனே சில பத்தாயிரம் சம்பளத்தில் வேலை கிடைத்து விடும் – பின், மாதாந்திரம் கடனைத் திருப்பிச் செலுத்தி விட வேண்டும் என்பதே இவர்களின் குறைந்தபட்ச திட்டம்.
ஆனால் உண்மை நிலை என்ன?
கல்விக் கடனைப் பொறுத்தவரை நாடெங்கும் வங்கிகளால் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த கடனில் 40 சதவீத கடன்கள் தமிழகம் மற்றும் கேரள மாநில மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. 
இதில் தமிழகத்தில் அதிகபட்சமாக சுமார் பத்து லட்சம் மாணவர்கள் 17,000 கோடிகளுக்கு மேல் கடன் பெற்றுள்ளனர். கேரளத்தில் 9,865 கோடி மதிப்பிலான கல்விக் கடன் நிலுவையில் உள்ளன. 
நிலுவையில் உள்ள இத்தொகையில், தமிழகத்தில் 1,875.56 கோடிகளும் கேரளத்தில் 1,038 கோடிகளும் வாராக் கடன்கள் என குறிக்கப்பட்டுள்ளன.
கேரள மாநிலத்தில் கடந்தாண்டு மட்டும் கடனைத் திரும்பக் கேட்டு ரிலையன்சின் ரவுடிகள் தொல்லை கொடுத்ததால், நான்கு செவிலியர்களும் 17 பெற்றோர்களும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
கேரள மாநிலத்தில் கடந்தாண்டு மட்டும் கடனைத் திரும்பக் கேட்டு ரிலையன்சின் ரவுடிகள் தொல்லை கொடுத்ததால், நான்கு செவிலியர்களும் 17 பெற்றோர்களும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் புற்றீசல் போல பெருகியுள்ள பொறியியல் கல்வித் தொழிற்சாலைகளின் ஆள் பிடிக்கும் ஏஜெண்டுகளே வங்கிகளிடம் கல்விக் கடன் பெறும் வழிமுறைகளையும் சொல்லிக் கொடுத்து விடுகின்றனர். 
நான்கிலிருந்து ஐந்து லட்சங்கள் வரை கடனாகப் பெறும் மாணவர் ஒருவர், அதை ஐந்தாண்டு காலத்திற்குள் திருப்பிச் செலுத்த மாதத் தவணையாக சுமார் ஒன்பதாயிரம் ரூபாய்களைத் திருப்பிச் செலுத்தியாக வேண்டும். பொறியியல் படித்த அனைவருக்கும் படித்தவுடன் வேலை கிடைப்பதில்லை. அவ்வாறு கிடைத்தாலும் சென்னை பெங்களூரு போன்ற வெளியூர்களில் சொற்ப சம்பளத்திற்கே கிடைக்கின்றன.
அந்த சம்பளமும் உணவு, வீட்டு வாடகை போன்ற இவர்களது சொந்த வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே போதுமானதாக இல்லாத நிலையில் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்துவது இயலாமல் போகிறது. இந்நிலையில் திரும்பி வராது எனத் தாம் தீர்மானித்த சுமார் 875 கோடி மதிப்பிலான கடன்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அதன் 45 சதவீத மதிப்பிலான விலைக்கு (55 சதவீத தள்ளுபடியில்) கைமாற்றி விட்டுள்ளது ஸ்டேட் வங்கி. 
இந்த 45 சதவீதத்திலும் சுமார் பத்து சதவீதம் பணமாக வழங்கியுள்ள ரிலையன்ஸ், எஞ்சிய தொகைக்கு பதினைந்து ஆண்டுகள் கழித்து பணமாக மாற்றிக் கொள்ளத் தக்க வகையிலான உத்திரவாத பத்திரங்களை வழங்கியுள்ளது.
ரிலையன்சின் கடந்த கால யோக்கியதையைக் கணக்கில் கொண்டால், கொடுத்துள்ள உத்திரவாதப் பத்திரங்களை கழிவறைக் காகிதமாகக் கூட மதிக்க முடியாது. இது ஒருபக்கமிருக்க, இந்தாண்டின் துவக்கத்திலிருந்தே நாடெங்கும் ரவுடிகளை பணிக்கமர்த்தத் துவங்கிய ரியலைன்ஸ், அவர்களைக் கொண்டு மாணவர்களையும் பெற்றோரையும் மிரட்டத் துவங்கியுள்ளது. சென்ற ஆண்டு திருவாங்கூர் ஸ்டேட் வங்கியின் கல்விக் கடனை இதே விதமாக விலைக்கு வாங்கிய ரிலையன்ஸ், கேரள மாணவர்களையும் அவர்களது குடும்பத்தாரையும் ரவுடிகளைக் கொண்டு மிரட்டியது அம்மாநிலத்தில் பெரும் அரசியல் அதிர்வுகளைக் கிளப்பியது. கேரள மாநிலத்தில் கடந்தாண்டு மட்டும் கடனைத் திரும்பக் கேட்டு ரிலையன்சின் ரவுடிகள் தொல்லை கொடுத்ததால், நான்கு செவிலியர்களும் 17 பெற்றோர்களும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஏழை மாணவர்களையும், பெற்றோரையும் கடன் நிலுவைக்காக கசக்கிப் பிழியும் ரிலையன்சின் யோக்கியதை
கடந்தாண்டு இறுதியில் க்ரெடிட் சூசி (Credit Suisse) என்கிற சுவிஸ் நாட்டைச் சேர்ந்த வணிக தர நிர்ணய நிறுவனம் இந்தியாவின் கார்ப்பரேட் கடனாளிகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
லான்கோ, ஜேய்பி, ஜி.எம்.ஆர், அதானி மற்றும் வேதாந்தா உள்ளிட்ட கார்ப்பரேட் கடனாளிகளின் பட்டியலில் பிரதானமாக இடம் பிடித்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். 
இந்தியாவின் வழங்கப்பட்டு, நிலுவையில் உள்ள கார்ப்பரேட் கடன்களில் சுமார் 27 சதவீதத்தையும் இந்திய வங்கிகள் வழங்கிய ஒட்டுமொத்த கடன்களில் 12 சதவீதத்தையும் வெறும் பத்து கார்ப்பரேட் முதலைகள் மாத்திரமே வாயில் போட்டுக் கொண்டுள்ளனர். 
கடந்த எட்டாண்டுகளில் இந்நிறுவனங்களின் கடன்கள் மட்டும் ஏழு மடங்காக உயர்ந்துள்ளது (700 சதவீதம்!).
ஒரு வளரும் நாடாக, நமது வங்கிகளை சில்லறை கடன் சந்தையை நோக்கித் திருப்பி விட்டோமென்றால், யார் தான் பெரும் திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பார்கள்?
ஒரு வளரும் நாடாக, நமது வங்கிகளை சில்லறை கடன் சந்தையை நோக்கித் திருப்பி விட்டோமென்றால், யார் தான் பெரும் திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பார்கள்? – அருந்ததி பட்டாச்சார்யா
பட்டியலில் ரிலையன்ஸ் உள்ளிட்டு முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ள கார்ப்பரேட்டுகள் திருப்பிச் செலுத்தாத கடனின் மதிப்பு மட்டும் 7.33 லட்சம் கோடிகள். 
மற்ற தரகு முதலைகள் அடித்துள்ள தேட்டைகளையும் சேர்த்த ஒட்டுமொத்த மதிப்பின் விவரங்கள் நமக்குத் தெரியாது. 
ஆனால், பெரும்பாலான தரகு முதலாளிகள் தமது நிறுவனங்களின் சந்தை மதிப்பை விட பல மடங்கு அதிகமான அளவுக்கு கடன்களை வாங்கிக் குவித்துள்ளனர். 
இதனால், பொதுத்துறை வங்கிகளின் உண்மையான சந்தை மதிப்பை விட ஒன்றரை மடங்கு அதிக மதிப்பிலான கடன்கள் நிலுவையில் உள்ளன.
கார்ப்பரேட் தரகு முதலாளிகள் பல லட்சம் கோடி மதிப்பிலான கடன்களை வாங்கிக் கொண்டு வங்கிகளுக்கு நாமம் போடும் அதே வேளையில், சிறு கடன்களை வாங்கும் நடுத்தர வர்க்க நுகர்வோரின் கடன்கள் முறையாக திருப்பிச் செலுத்தப்பட்டு வருகின்றன என்கிறார் நிதித்துறை நிபுணர் சித்தார்த் புரோகித். 
2014ம் ஆண்டுக் கணக்கின் படி நுகர்வோர் கடன்கள் சுமார் 20 சதவீத அளவுக்கு வளர்ந்திருந்தது. இதன் விளைவாக தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சிஐ வங்கியும் ஆக்சிஸ் வங்கியும், தமது வங்கிகள் கார்ப்பரேட் கடன்களை விட நுகர்வோர் வாங்கும் சிறு கடன்களுக்கே முக்கியத்துவம் அளித்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளன.
தனியார் வங்கிகள் தொடர்ந்து கார்ப்பரேட் கடன்களில் இருந்து தமது கவனத்தை தனிநபர் நுகர்வோர் கடன்களின் பக்கம் திருப்புவதை ஸ்டேட் வங்கியின் சேர்மேன் அருந்ததி பட்டாச்சார்யா கண்டித்துள்ளார்.
லான்கோ, ஜேய்பி, ஜி.எம்.ஆர், அதானி மற்றும் வேதாந்தா உள்ளிட்ட கார்ப்பரேட் கடங்காரர்களின் பட்டியலில் பிரதானமாக இடம் பிடித்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.
லான்கோ, ஜேய்பி, ஜி.எம்.ஆர், அதானி மற்றும் வேதாந்தா உள்ளிட்ட கார்ப்பரேட் கடங்காரர்களின் பட்டியலில் பிரதானமாக இடம் பிடித்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.
”ஒரு வளரும் நாடாக, நமது வங்கிகளை சில்லறை கடன் சந்தையை நோக்கித் திருப்பி விட்டோமென்றால், யார் தான் பெரும் திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பார்கள்? 
ஒரு தேசமாக நாம் எங்கே இருக்கிறோமோ அங்கேயே எந்தவிதமான உள்கட்டமைப்பு வசதிகளும் இன்றி தேங்கி நிற்கப் போகிறோமா?” 
என்று அருந்ததி பட்டாச்சார்யா காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த அறச்சீற்றத்தின் உட்பொருள், யார் தான் இனிமேல் அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் வாரி வழங்குவது என்ற கவலை தான்.
தற்போது ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தான் பதவி நீட்டிப்புப் கோரப் போவதில்லை என்று அறிவித்துள்ள நிலையில், அடுத்த ரிசர்வ் வங்கி கவர்னராக தகுதியுள்ளவர்களின் பட்டியலில் அருந்ததி பட்டாச்சார்யாவின் பெயரும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஒருபக்கம் பொதுத்துறை வங்கிகள், இன்சுரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் ஓய்வூதிய நிதியம் போன்ற அமைப்புகளிடம் இருப்பில் உள்ள பல லட்சம் கோடி மக்களின் சேமிப்புப் பணத்தை தரகு முதலாளிகளுக்குத் திருப்பி விடும் அரசு, அது தான் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு உகந்தது என்று தோசையை திருப்பிப் போடுகிறது. 
இவ்வாறு மக்கள் பணத்தை திட்டமிட்டு தரகு முதலைகளின் காலில் காணிக்கையாக்குகிறது ஆளும் கும்பல். இன்னொரு பக்கம் வேலை கிடைக்காததால் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதிக்கும் நடுத்தர வர்க்க மற்றும் ஏழை மாணவர்களின் மேல் ரவுடிகளை ஏவி விட்டு தாக்குதல் தொடுக்கின்றனர்.
இந்நாட்டின் வங்கி, இன்சுரன்சு உள்ளிட்ட நிதி அமைப்புகள் யாருடைய நலன்களுக்குச் சேவை செய்வதற்காக  உள்ளன என்பதற்கு இதை விட வேறு சான்றுகள் தேவையில்லை. பொதுத்துறை நிறுவனங்கள் இது வரை போலியாகவேனும் அணிந்து கொண்டிருந்த “மக்கள் சேவை” என்கிற முகமூடியைக் கழற்றி எறிந்து விட்டு  முதலாளிகளின் அடிவருடிகளாக தம்மை வெளிப்படையாகவே அறிவித்துக் கொண்டு விட்டன. இந்நிலையில் பொதுத்துறை வங்களின் நடவடிக்கைகளை மக்கள் தீர்மானிக்காமல் தீர்வில்லை. முதலாளிகளின் கடனை வசூல் செய்யும் போராட்டங்களும், மக்களுக்கு கடன் வழங்க வைக்கும் போராட்டங்களும் ஒருங்கே நடக்க வேண்டும்.
                                                                                                                                                 – தமிழரசன்.
நன்றி:வினவு.
=======================================================================================
இன்று,
ஜூலை-08.
  • வாஸ்கோ ட காமா, இந்தியாவிற்கான முதல் நேரடிப் பயணத்தை துவக்கினார்(1497)
  • வால் ஸ்ட்ரீட் ஜர்னல், முதலாவது இதழ் வெளியானது(1889)
  • தோழர் ஜோதி பாசு பிறந்த தினம்(1914)
  • ம.பொ.சி., புலவர் குழந்தை ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன(2006)
  • இந்தியாவின் 11வது பிரதமர் சந்திரசேகர் இறந்த தினம்(2007)

தோழர் ஜோதி பாசு

1914ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி ஜோதி கிரண் பாசுவாக கல்கத்தாவின் நடுத்தர வர்க்க பெங்காலி குடும்பத்தில் பிறந்தார் ஜோதிபாசு. 
அவருடைய தந்தை நிஷிகாந்த் பாசு. 
இவர் ஒரு டாக்டர். இவரது சொந்த ஊர் கிழக்கு வங்காளத்தில்
 (இப்போதைய வங்கதேசம்) உள்ள பர்தி கிராமமாகும். 

பாசுவின் தாயார் ஹேமலதா பாசு. 1920ம் ஆண்டு கொல்கத்தாவின் தர்மதாலா என்ற பகுதியில் இருந்த லோரிட்டோ பள்ளியில் பள்ளிப் படிப்பை தொடங்கினார் பாசு. பள்ளியில் பாசு சேர்க்கப்பட்டபோது அவரது பெயரை ஜோதிபாசு என்று சுருக்கி சேர்த்தார் பாசுவின் தந்தை. 

கொல்கத்தா இந்துக் கல்லூரியில் (பிரசிடென்சி கல்லூரி) ஆங்கிலத்தில் பட்டப்படிப்பை முடித்தார் பாசு. 1935ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்த பின்னர் சட்டம் லண்டன் சென்றார். 
அப்போது இங்கிலாந்தில் கம்யூனிசம் குறித்தும், கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகள், இயக்கங்கள் குறித்தும் அறிய வந்தது பாசுவுக்கு. கம்யூனிசக் கொள்கை அவரை வெகுவாக ஈர்த்தது. பிரபல கம்யூனிஸ சித்தாந்தியும், எழுத்தாளருமான ரஜினி பால்மே தத்தின் எழுத்துக்களால் வசீகரிக்கப்பட்டார் பாசு. 1940ம் ஆண்டு தனது படிப்பை முடித்து பாரிஸ்டர் ஆனார் ஜோதிபாசு. 

படிப்பு முடிந்ததும் இந்தியா திரும்பினார். 1944ம் ஆண்டு தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கினார். 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக ஈடுபட்ட அவரை ரயில்வே தொழிலாளர்களுக்கான போராட்டங்களில் கட்சி ஈடுபடுத்தியது. பிஎன் ரயில்வே தொழிலாளர் யூனியனும், பிடி ரயில் பாதை தொழிலாளர் யூனியனும் ஒன்றாக இணைக்கப்பட்டபோது அதன் பொதுச் செயலாளரானார் ஜோதிபாசு. லண்டனில் சட்டம் பயின்று கொண்டிருந்தபோதே அரசியல் ஆர்வமும் அவருக்குள் அதிகரித்து விட்டது. காரணம், இந்தியாவில் அப்போது நடந்து வந்த சுதந்திரப் போராட்டம். 

லண்டனில் இருந்தபடி செயல்பட்டு வந்த இந்தியா லீக் மற்றும் லண்டன் மஜ்லிஸ் ஆகியவற்றில் இணைந்து அவர் செயல்பட்டார். வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களின் அமைப்புகள் இவை. ஜவஹர்லால் நேரு 1938ம் ஆண்டு லண்டன் வந்தபோது அவரை வரவேற்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பு பாசுவிடம் வழங்கப்பட்டது. 

அதேபோல சுபாஷ் சந்திரபோஸ் இங்கிலாந்து வந்தபோதும் பாசுவிடம் வரவேற்பு ஏற்பாட்டுக்கான பொறுப்பு வந்து சேர்ந்தது. லண்டன் மஜ்ஸில் உறுப்பினராக, லண்டனுக்கு வந்த இந்திய அரசியல் தலைவர்களை, தொழிலாளர் கட்சித் தலைவர்களுடன் அறிமுகப்படுத்தி வைத்த பெருமைக்குரியவராக திகழ்ந்தார். 

இங்கிலாந்தில் பாசுவுக்குக் கிடைத்த நண்பரும், கம்யூனிஸ்ட் தலைவருமான பூபேஷ் குப்தா மூலம் இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியுடன் பரிச்சயமும், அறிமுகமும் ஏற்பட்டது பாசுவுக்கு. 

அக்கட்சியில் சேர ஆர்வம் காட்டினார் பாசு. ஆனால் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதித்திருப்பதால் இப்போது சேர வேண்டாம் என இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான ஹாரி போலிட் பாசுவை அறிவுறுத்தினார். 
அப்படி சேர்ந்தால் அவர் இந்தியா திரும்புவதில் சிக்கல் ஏற்படலாம் என்பது ஹாரியின் கவலை. இதனால் கட்சியில் சேராமலேயே படிப்பை முடித்து விட்டு நாடு திரும்பினார் பாசு. நாடு திரும்பியதும் தனது எதிர்காலத் திட்டத்தை பெற்றோரிடம் விவரித்தார். அரசியலில் தீவிரமாக இறங்கப் போவதாக அவர் கூறினார். அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்தியாவில் வெள்ளைக்கார அரசு தடை விதித்திருந்தது. இருப்பினும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார் பாசு. பின்னர் அவர் கட்சியிலும் இணைந்தார். 

1946ம் ஆண்டு வங்காள சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் பாசு. ரயில்வே தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார். 

மேற்கு வங்க மாநில முதல்வராக பிதன் சந்திர ராய் (பி.சி.ராய்) இருந்தபோது, நீண்ட காலத்திற்கு எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார் பாசு. எம்.எல்.ஏவாகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் பாசு செயல்பட்ட விதம், அவரது பேச்சுத் திறமை ஆகியவற்றால் கவரப்பட்டார் டாக்டர் பி.சி.ராய். 
தனது கட்சியின் கொள்கைக்கும், பாசுவின் கட்சிக்கும் இடையே பெரும் வித்தியாசங்கள் இருந்தபோதும் இளம் தலைவரான பாசு மீது அதிக பாசமும், மதிப்பும் வந்தது ராய்க்கு. 
மாநில அரசுக்கு எதிராக அப்போது அடுக்கடுக்காக நடந்து வந்த போராட்டங்களை தலைமையேற்று நடத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை வலுப்படுத்தி வந்தார் ஜோதிபாசு. 

ரயில்வே தொழிலாளர்கள் மத்தியில் மட்டுமே பெரும் ஆதரவுடன் திகழ்ந்து வந்த பாசுவுக்கு இந்தப் போராட்டங்களால், இளைஞர்கள், மாணவர்கள் மத்தியிலும் பேராதரவு பெருகியது. 
அந்த சமயத்தில், ஊதிய உயர்வு கோரி ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தை தலைமையேற்று நடத்தினார் ஜோதிபாசு. இந்தப் போராட்டம் மேற்கு வங்க வரலாற்றில் மிகப் பெரிய அளவிலான போராட்டமாக கருதப்படுகிறது. தனது தொடர் போராட்டங்களால் மேற்கு வங்க அரசின் தூக்கத்தை கெடுத்தார் ஜோதிபாசு. இன்று என்ன போராட்டமோ என்று அரசு பயந்து நடுங்கும் அளவுக்கு வீறு கொண்ட தலைவராக விளங்கினார் பாசு. 
1964ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உடைந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிறந்தது. அதன் முதல் பொலிட்பீரோவில் ஒன்பது பேர் இடம் பெற்றனர். 
அவர்களில் பாசுவும் ஒருவர். 

1967 மற்றும் 69 ஆகிய ஆண்டுகளில் துணை முதல்வராக பொறுப்பு வகித்தார் பாசு. 1972ம் ஆண்டு காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. சித்தார்த்த சங்கர் ரே முதல்வரானார். அவரிடம் போட்டியிட்டு பாராநகர் தொகுதியில் தோல்வி அடைந்தார் பாசு. 

ஆனால் வரலாறு காணாத மோசடியால் தான் தோற்கடிக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார் பாசு. இதையடுத்து சட்டசபையை புறக்கணிப்பதாக சிபிஎம் அறிவித்தது. அதன்படி 1977ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறும் வரை சட்டசபையை அக்கட்சி புறக்கணித்தது. 

1977ல் நடந்த தேர்தலில் சிபிஎம் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. 
ஜூன் 21ம் தேதி முதல்வராகப் பொறுப்பேற்றார் பாசு. 

அன்று முதல் 2000மாவது ஆண்டு நவம்பர் 6ம் தேதி வரை தொடர்ந்து 23 ஆண்டுகள் முதல்வர் பதவியில் நீடித்தார் பாசு. இந்தியாவிலேயே அதிக ஆண்டுகள், நீண்ட காலம் முதல்வர் பதவியை வகித்த ஒரே முதல்வர் பாசுதான். 
1996ம் ஆண்டு இவரைத் தேடி பிரதமர் பதவி வந்தது. ஐக்கிய முன்னணி அரசின் தலைவராக, பிரதமர் பதவியை ஏற்குமாறு கூட்டணிக் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. 
ஆனால் சிபிஎம். பொலி்ட்பீரோ இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய தவறான முடிவை எடுத்தது.பிரதமர் பதவியை நிராகரித்தது. 

அரசிசயல் பங்கு பெறுவதில்லை என்ற முடிவை எடுத்திருப்பதால் ஜோதிபாசுவை பிரதமர் பதவியில் அமர்த்த முடியாது என்று அது கூறி விட்டது. 
இதனால் தேவெ கெளடா பிரதமர் பதவியில் அமர்ந்தார். 2000மாவது ஆண்டு உடல் நிலையைக் கருத்தில் கொண்டு முதல்வர் பதவியிலிருந்து விலகினார் ஜோதிபாசு. 
 புத்ததேவ் பட்டச்சார்யா முதல்வரானார். 

2005ம் ஆண்டு டெல்லியில் நடந்த சிபிஎம்மின் 18வது காங்கிரஸ் கூட்டத்தில் பொலிட்பீரோ உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜோதிபாசு. 

2006ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி தனக்கு ஓய்வு தருமாறு சிபிஎம்முக்குக் கோரிக்கை வைத்தார் பாசு. ஆனால் கட்சி அதை நிராகரித்து விட்டது. 

2008ம் ஆண்டு நடைபெறும் காங்கிரஸ் கூட்டம் வரை பாசு கட்சிக்குத் தேவை என்று பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறி விட்டார். 

அதன்படி 2008ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த சிபிஎம் காங்கிரஸில் பாசுவின் பெயர் பொலிட்பீரோ உறுப்பினர் பொறுப்பில் சேர்க்கப்படவில்லை. மாபெரும் கம்யூனிசத் தலைவராக, அசைக்க முடியாத இரும்பு மனிதராக விளங்கியவர் ஜோதி பாசு. 

அவர் செயல் திறனுடன் இருந்தவரை மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு மிகப் பெரிய பலத்துடன் திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 புத்ததேவ் பட்டச்சார்யாஅரசு எடுத்த தவறான முடிவுகளால் மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் செள்வாக்கை இழந்தது.

கடந்த இரண்டு முறையும் ஆட் சியமைக்க முடியாமல் தோல்வியை தழுவியுள்ளது.
=======================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?