ஞாயிறு, 31 ஜூலை, 2016

தேர்தல் சீர்திருத்தங்கள் ,விகிதாச்சார பிரதிநிதித்துவம்.

நடந்து முடிந்துள்ள ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் நமது நாட்டின் தேர்தல்களில் பணநாயகம் ஆற்றும் முக்கியப் பங்கை மீண்டும் வெளிச்சப்படுத்தியுள்ளன. 
பெரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட ஒரு நாட்டில், அந்த ஏற்றத்தாழ்வுகளை தொடர்ந்து அதிகப்படுத்தும் முதலாளித்துவ அமைப்பின்கீழ் செயல்படும் நாட்டில், தேர்தல்கள் எப்பொழுதுமே ஜனநாயகத்தை பொறுத்தவரையில் குறைபாடுகள் நிறைந்ததாகத்தான் இருக்க முடியும். 
பணபலத்தின் பங்கை முழுமையாக தடுப்பது என்பது இத்தகைய சூழலில் மிகவும் கடினமானது தான். எனினும், நமது தேர்தல் செயல்முறைகளிலும் விதிமுறைகளிலும் பெரும் மாற்றங்கள் செய்தால் சற்று கூடுதல் ஜனநாயகத் தன்மை கொண்ட தேர்தல்களை நோக்கி நகர முடியும். 
தேர்தலில் பணநாயகத்தை கட்டுப்படுத்துவதற்கு தேர்தல் செலவுகள் பொது நிதியில் இருந்து மட்டுமே, தக்க நெறிமுறைகளின் கீழ், அனைத்துக்கட்சிகளாலும் மேற்கொள்ளப்படவேண்டும், கார்ப்பரேட் நிதி தேர்தலில் பங்கு பெறக்கூடாது போன்ற அம்சங்கள் அஜெண்டாவில் வரவேண்டும். 
இன்னும் பல விஷயங்கள் தேர்தல் சீர்திருத்தம் என்ற பேசுபொருளில் விவாதிக்கப்படவேண்டும். இவற்றில் முக்கியமான ஒரு விஷயம் விகிதாச்சார பிரதிநிதித்துவம் என்பதாகும். இக்கட்டுரையில் இந்தியநாட்டின் சூழலில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் பற்றி நாம் சற்று விரிவாக காண்போம்.

அமலில் உள்ள தேர்வு முறை
தேர்தல்விதிகளின்படி ஒரு தொகுதியில் எந்த வேட்பாளர் அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பெற்றுள்ளாரோ, அவர் வெற்றி பெறுவதாக கருதப்படுவார்.
 “தொகுதியில் அதிக வாக்கு பெற்றால் வெற்றி” என்ற இந்த ஏற்பாட்டில் வெற்றிபெறும் வேட்பாளர் தொகுதியில் போடப்பட்ட மொத்த வாக்குகளில் பெரும்பான்மை (பாதிக்கும் மேல்) வாக்கு பெற வேண்டும் என்பது அவசியம் இல்லை. 
எடுத்துக்காட்டாக, ஒரு தொகுதியில் ஆறு வேட்பாளர்கள் இருப்பதாக வைத்துக்கொண்டால், போடப்பட்ட செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒருபங்கை விட ஒரு வாக்கு அதிகம் ஒரு வேட்பாளர் வாங்கினால் கூட, மற்ற வேட்பாளர்கள் பெறும் வாக்குகள் சரிசமமாய் சிதறிவிட்டால், அவர் வெற்றிபெற்றுவிடலாம். மொத்த செல்லுபடியான வாக்குகளில் பத்தில் ஒரு பங்கு பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்ற நிகழ்வும் நமது நாட்டில் உள்ளது. 
இதன் ஒரு முக்கியமான பொருள், தொகுதியில் இதர வேட்பாளர்களுக்கு போடப்படும் (தொகுதியின்) பெரும்பான்மை வாக்குகள் தொகுதி தேர்தல் முடிவை நிர்ணயிப்பதில்லை என்பதாகும். வாக்காளர்கள், தாங்கள் வாக்களித்த வேட்பாளர்கள் தோற்றுவிட்டால், தங்கள் வாக்குக்கு எந்த பயனும் இல்லை என்ற உணர்வை சந்திக்க வேண்டியுள்ளது. 
வெற்றி பெறாத வேட்பாளர்களுக்கு போடப்பட்ட வாக்குகள் அனைத்தும் “வீணாய்ப் போய் விட்ட வாக்குகள்” என்ற கருத்து வலுவாக முன்வருகிறது. ஒட்டுமொத்த வாக்காளர்களின் விருப்பங்களுக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் இடையில் பெருத்த இடைவெளி வந்துவிடுகிறது. 
இருமுனைப்போட்டி என்றால் 50சதவீத செல்லுபடி வாக்குகளுக்கு ஒரு வாக்கு குறைவாகப் பெறுபவர் தோற்று விடுகிறார். இது பெரும்பாலான தொகுதிகளில் நிகழும்பொழுது, கிட்டத்தட்ட சரிபாதி வாக்குகளுக்கு பின்னால் உள்ள விருப்பங்களை/கருத்துக்களை தேர்தல் முடிந்தபின், சம்பந்தப்பட்ட அவையில் (மக்களவை, மாநில சட்டப் பேரவை, ...) பிரதிபலிக்க இயலாத நிலை ஏற்படுகிறது. 
1999 இல் நீதியரசர் ஜீவன் ரெட்டி அவர்களின் தலைமையில் தயாரிக்கப்பட்ட, தேர்தல் விதிகளில் சீர்திருத்தம் பற்றிய இந்திய சட்டக் கமிஷனின் 170ஆவது அறிக்கை இப்பிரச்சனையை தெளிவாக முன்வைத்தது. இன்னொரு முக்கிய விஷயத்தையும் அறிக்கை கூறியது. 
அது என்னவெனில், மாநில அளவிலோ, நாடு தழுவிய அளவிலோ, கட்சிகள் பெறும் வாக்குகளுக்கும் அவை பெறும் இடங்களுக்கும் பெறும் சமன் இருப்பதில்லை என்பதாகும். 
எடுத்துக்காட்டாக, “32சதவீதம் வாக்குகள் பெறும் ஒரு கட்சி மக்களவையில் 70சதவீத இடங்களை பெறுகிறது, 29சதவீத வாக்குகள் பெறும் இன்னொரு கட்சிக்கு 25சதவீத இடங்களே கிடைக்கிறது ” என்று அவ்வறிக்கை சுட்டிக்காட்டியது. இப்பொழுதுகூட, கடந்த மக்களவை தேர்தலில் போடப்பட்ட வாக்குகளில் 31சதவீதம் மட்டுமே பெற்ற பாஜக மக்களவையில் பெரும்பான்மை இடங்களை பெற்றுள்ளதை நாம் அறிவோம். 
இதேபோல், 2009 மக்களவை தேர்தலில், ஆந்திர மாநிலத்தில், போடப்பட்ட வாக்குகளில் நாற்பது சதவிகிதம் தான் காங்கிரஸ் கட்சி பெற்றது. ஆனால் இடங்களில் 80சதவீத பெற்றது. 
பீகார் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 38சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று, 80சதவீத இடங்களை தட்டிச்சென்றது. சத்தீஸ்கர் மாநிலத்தில், பாஜக பெற்ற வாக்குகள் நாற்பத்தி ஐந்து சதவிகிதம், ஆனால் பெற்றது 91 சதவிகித இடங்கள். 
மேற்கு வங்கத்தில் 2011 சட்டப்பேரவை தேர்தலில், திரிணாமுல் வாக்கு சதவிகிதம் 38.9சதவீதம் இடங்கள் 184; மார்க்சிஸ்ட் கட்சி பெற்ற வாக்கு சதவிகிதம் 30.1சதவீதம் பெற்ற இடங்கள் 40 மட்டுமே. 2014, 2016 தேர்தல்களிலும் இது தொடர்கிறது. 
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
 இம்முறை இந்தியாவிலும், பிரிட்டன், அமெரிக்கா, கனடா மற்றும் பல முன்னாள் பிரிட்டிஷ் காலனி நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது. 
அடிப்படையான ஒரு நியாயத்தை இந்த முறை மறுக்கிறது. 
பல நேரங்களில் கட்சிகள் பெறும் வாக்கு சதவிகிதத்திற்கும் அவை பெறும் இடங்களின் விகிதத்திற்கும் பெருத்த இடைவெளி உள்ளது. இந்த முறைக்கு மாற்றாக விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை ஜீவன் ரெட்டி அறிக்கை முன்வைக்கிறது.

விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை

விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை, வாக்கு விகிதங்களுக்கும் இடங்களின் விகிதங்களுக்கும் உள்ள இடைவெளியை பெரிதும் குறைக்க முற்படுகிறது. இதில் பல வகைகள் உண்டு. 
ஆனால் இதன் பொதுவான தன்மை அரசியல் கட்சிகள் மூலமாகவே பெரும்பாலும் தேர்தல் அரசியல் நிகழும் நாடுகளில் விகிதாச்சாரக் கோட்பாட்டை முன்வைத்து ஒரு கட்சி பெறும் வாக்கு விகிதத்திற்கும் அது பெறும் இடங்கள் விகிதத்திற்கும் உள்ள இடைவெளியை இயன்ற அளவு குறைப்பது தான். இந்த விஷயத்தில் சட்டக் கமிஷனின் 170ஆவது அறிக்கை ஒரு முக்கியமான, குறிப்பிட்ட ஆலோசனையை முன்வைக்கிறது. 
“வீணாகும்” வாக்குகளை குறைக்கவும், நியாயமான முடிவுகளை அடையவும் உகந்த வகையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை தான் வழி என்று தெளிவுபடுத்திவிட்டு, உடனடியாக இந்த முறையை நாம் இந்தியாவில் அமலாக்க முடியாது என்ற கருத்தையும் சட்டக்கமிஷன் ஏற்கிறது. 
ஆகவே, மக்களவை தேர்தல் தொடர்பாக அது ஒரு மாற்று ஆலோசனையை முன்வைத்துள்ளது. இதன்படி, தற்போது உள்ள மக்களவை தொகுதிகளுக்கு தற்போது உள்ள முறையே நீடிக்கும். ஆனால், இதனுடன் 25சதவீதம் கூடுதல் இடங்கள் சேர்க்கப்பட்டு, அவை, அகில இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பெற்றுள்ள வாக்கு விகித அடிப்படையில் அந்தந்த கட்சிக்கு ஒதுக்கப்படும். 
அதாவது, இந்த 25சதவீதம் இடங்களை பொறுத்தவரையில், நாடு முழுவதும் ஒரு தொகுதி என்று கணக்கிடப்பட்டு, விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும். 
கட்சிகளுக்கு இவ்வாறு அவற்றின் வாக்கு விகித அடிப்படையில் ஒதுக்கப்படும் இந்த இடங்கள் ஒவ்வொரு கட்சியும் அளிக்கும் பெயர்ப் பட்டியலில் இருந்து வரிசைப்படி உள்ள நபர்கள் கொண்டு நிரப்பப்படும்.


அரசியல் கட்சிகளின் நிலைபாடு

சட்டக்கமிஷன் அதன் முன்மொழிவுகளை விவாதிக்க நடத்திய கருத்தரங்கங்களில், இரு ‘தேசிய’ கட்சிகளான காங்கிரசும், பாஜகவும் விகிதாச்சார முறையை நோக்கிச் செல்வதற்கான இந்த துவக்க முன்மொழிவுகளையே எதிர்த்தனர். 
இதற்கு மாறாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, மற்றும் சிரோமணி அகாலிதளம் ஆகிய கட்சிகள் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தையும், ஒரு பகுதி பட்டியல் மூலம் இடங்கள் நிறைவு செய்யப்படுவதையும் வரவேற்றனர். 
தற்பொழுது உள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்தி, இவ்வாறு பெறப்படும் இடங்களை விகிதாச்சாரம் மற்றும் பகுதி பட்டியல் முறையில் நிறைவு செய்ய வேண்டும் என்று இக்கட்சிகள் கோரின. இருபெரும் ஆளும் வர்க்கக் கட்சிகளான காங்கிரசும் பாஜகவும் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை எதிர்த்து பல வாதங்களை முன்வைத்தன. 
ஒரு வாதம் இதனால் கட்சிகளின் எண்ணிக்கை பெருகிவிடும் என்பதாகும். இது தர்க்க ரீதியாக எந்த அடித்தளமும் இல்லாத வாதம். மேலும், மொழி, இனம், மதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் மிகுந்த பன்முகத்தன்மை கொண்ட நமது பெரிய நாட்டில் பல்வேறு வேறுபாடுகளுக்கும் இடம் தரும் வகையில் அரசியல் அமைப்பில் பல கட்சிகளுக்கும் சக்திகளுக்கும் இடம் இருக்கவேண்டிய அவசியத்தையே மறுதலிக்கின்றது ஆளும் வர்க்கக் கட்சிகளின் இந்த அணுகுமுறை. 
அவர்கள் விரும்பும் இருதுருவ அணுகுமுறை நமது நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரானதாகும். இன்றும் கூட, பாஜக ஒருபுறம் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க பல மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் சிலவற்றுடன் தேர்தல் வியூகங்களை அமைத்துக் கொண்டாலும், இது தேர்தல் தந்திரத்தின் பகுதி தான். ஆளும் வர்க்கக் கட்சிகள் பன்முகத்தன்மையை மறுத்து நாடு முழுவதையும் ஒன்றுபடுத்தப்பட்ட ஒரே முதலாளித்துவ சந்தையின் கீழ் கொண்டு வரவே விரும்புகின்றன.
 காங்கிரசும் இதே நோக்குடன் தான் பொருள் மற்றும் சேவை வரிஎன்பதை தனது ஆட்சிகாலத்தில் கொண்டு வந்தது. எனவே பலதுருவ அரசியலுக்கு இடம் அளிக்கும் விகிதாச்சார தேர்தல் விதிமுறைகளை ஏற்க இப்பெரும் கட்சிகள் தயாராக இல்லை. 
எனவே இவர்கள் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை எதிர்க்கின்றனர். ஏற்றத்தாழ்வுகளும் பன்முகத்தன்மையும் நிறைந்த நம் நாட்டில், இவற்றை எல்லாம் கணக்கில் கொள்ளும் வகையில் நாடாளுமன்றத்தில் பல கட்சிகளும் சக்திகளும் இடம் பெறுவது அவசியம். 
அதற்கு உகந்தது, விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை தான். 
இந்த விவாதத்தில் பாஜக, காங்கிரசுக்கு ஒருபடி மேலே சென்று, விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை சாதீய மற்றும் வகுப்புவாத சக்திகளை ஊக்குவிக்கும் என்றும் வாதிட்டது!

பிற நாடுகளின் அனுபவம்.
உலகில் பல நாடுகளில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை உள்ளது. இம்முறை எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரி இல்லை. நாடுகளின் வரலாற்றுப் பின்னணி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைப் பொறுத்து இவை நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. 
ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இம்முறை நீண்ட காலமாக இருந்துவருகிறது. இதனால் இம்முறையின் செயல்பாட்டுச் சிக்கல்கள் பற்றியும் வலிமை பற்றியும் ஏராளமான அனுபவம் கிடைத்துள்ளது. விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை அமலாக்கிவரும் பல நாடுகளிலும் பெரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. 
அதேபோல் மொழி, இன மற்றும் பகுதிசார் வேறுபாடுகளும் உள்ளன. விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறைகள் இந்த நாடுகளில் பெருமளவிற்கு மக்கள் நம்பிக்கையைப் பெற்றுச் செயல்பட்டு வருகின்றன. இந்த முறையிலும் சிக்கல்கள் வரும் என்பதும், முழுக்க முழுக்க விகிதாச்சார அடிப்படையில் மட்டுமே அமைந்தால் சில பிரச்சனைகள் வரலாம் என்பது கள அனுபவம். 
அவற்றை சில பல யுக்திகள் மூலம் எதிர்கொள்ள முடிந்துள்ளது என்பதும் அனுபவம். இந்திய அரசியல் கட்சிகளில் இடதுசாரி கட்சிகள் – குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சி – நீண்ட காலமாக FPTP இருந்து விகிதாச்சார பிரதிநிதித்துவ முறைக்கு மாறவேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளன. 
இதில் கட்சிகள் முன்வைக்கின்ற பட்டியலின் அடிப்படையில் விகிதாச்சார அமைப்பில் ஒரு கட்சி பெறும் இடங்கள் நிறைவு செய்யப்படவேண்டும் என்றும் அதே சமயம், நடப்பில் உள்ள FPTP முறையும் ஒரு எல்லைக்குட்பட்டு, ஒரு குறிப்பிட்ட காலம் வரை தொடரலாம் என்றும் யதார்த்தத்தை கணக்கில் கொண்டு அவை கூறிவருகின்றன. 
மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கைகளில் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

சர்வரோக நிவாரணி அல்ல!

தேர்தல் முறையில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் அழித்தொழிக்கும் அற்புத மருந்து அல்ல! ஒரு முக்கிய அம்சத்தை அது கவனத்தில் கொள்கிறது. 
அனைத்து வாக்காளர்களின் விருப்பங்களும் முடிந்த அளவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் பிரதிபலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. 
சிறு கட்சிகளுக்கும் விளிம்பு நிலை மக்களுக்கும் பிரதிநிதித்துவம் பெறும் வாய்ப்புகளை இம்முறை அதிகரிக்கிறது. பன்முகத்தன்மையை அங்கீகரிக்கும் வகையில் சில கூடுதல் மாற்றங்கள் தேவையாகலாம். அதேபோல், யதார்த்தத்தை கணக்கில் கொண்டு, எண்ணற்ற கட்சிகள் களத்தில் என்ற நிலை ஏற்படுவதை தவிர்க்கவும் சில ஏற்பாடுகள் தேவையாகலாம்.
மேலும் பிரதிநிதித்துவ முறை பற்றிய விவாதம், தேர்தல் சீர்திருத்தம் என்ற விரிவான அஜெண்டாவின் ஒரு பகுதி தான். நமது நாட்டின் தேர்தல் அமைப்பில், முறைகளில் வேறு பல முக்கிய அம்சங்களை அவசர அவசியமாக எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 
நிலவும் முதலாளித்துவ அமைப்பில் பண பலமும் ஆளும் வர்க்கங்களின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக-பண்பாட்டு மேலாதிக்கமும் ஒரு நியாயமான தேர்தல் என்பதையே கனவாக ஆக்கியுள்ளன. இதற்கு மத்தியில், குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளும் உழைக்கும் மக்களின் போராட்டங்களால் கிடைத்தவை தான் என்பதையும், இவற்றிற்கும் சட்டப்பேரவைகள், மக்களவை மற்றும் இதர தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளுக்கும் ஆபத்து ஆளும் வர்க்கங்களிடமிருந்து எப்பொழுதும் வந்துகொண்டே இருக்கும் என்பதையும் கணக்கில் கொண்டு நாம் தேர்தல் களத்தில் எதிர்நீச்சல் போட்டு வருகிறோம். 
அதில், ஓரளவாவது முன்னேற்றம் காண, நாம் சில கோரிக்கைகளை முன்வைத்து இயக்கங்களை நடத்த வேண்டியுள்ளது.

நன்கொடை, ஊடகங்கள்

இவற்றில் ஒரு முக்கியக் கோரிக்கை கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பதை தடை செய்ய வேண்டும் என்பதாகும். 
தேர்தல்களில் பணபலம் ஆற்றிவரும் பங்கை குறைப்பதற்கு இது மிகவும் அவசியம். இதையொட்டி வருவது, தேர்தல் செலவுகளை பொது நிதியில் இருந்து தான் மேற்கொள்ள வேண்டும் என்ற நெறிமுறை. இதற்கான நிதி ஏற்பாட்டை செல்வந்தர்கள் மீதும் கார்ப்பரேட்டுகள் மீதும் தக்க முறையில் வரி விதித்து அரசு செய்ய வேண்டும். ஒரு தொகுதியில் வேட்பாளராலும் அவர் சார்பாகவும் செலவிடப்படும் அதிகபட்ச தொகைக்கு கறாரான அளவு நிர்ணயிக்கப்பட்டு சீராக அமலாக்கப்படவேண்டும். 
இப்பொழுது இது ஏட்டளவில் இருந்தாலும் அமலாவதில்லை. ஊடகங்கள் தேர்தல் நேரங்களில் செயல்படும் முறைகள் – காசு கொடுத்தால் தான் செய்தி போடுவோம் என்று செயல்படும் நடைமுறை, கருத்துக் கணிப்பு என்றபெயரில் செய்யப்படும் கருத்துத் திணிப்பு, ஆய்வு வழிமுறைகளில் வெளிப்படைத் தன்மையில்லாமல் நெறியற்ற முறையில் கருத்துக் கணிப்பு என்ற பெயரில் பணம் வாங்கிக்கொண்டு அதை கொடுத்தவர்களுக்கு சாதகமான மதிப்பீடுகளை ஆதாரப் பூர்வ செய்திகள் போல் வெளியிடும் நடைமுறை, இன்ன பிற – கேள்விக்கு உட்படுத்தப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.அரசியல் களத்திலும் தேர்தல் களத்திலும் குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் சூழலில் இவற்றை எதிர்த்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டிய அவசியம் உள்ளது. 
வெங்கடேஷ் ஆத்ரேயா 
அதே சமயம் இதன் பெயரில் அரசியலில் எதிர்க்கட்சிகளை செயலிழக்கச் செய்யும் வகையில் பொய் வழக்குகள் சுமத்துவது போன்ற நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்தி தடுக்க வேண்டியுள்ளது. 
இந்த விஷயங்கள் தொடர்பாக தேர்தல் விதி முறைகளிலும் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அரசு அமைப்புகளின் செயல்பாட்டிலும் மாற்றங்கள் தேவையாக உள்ளன. அண்மையில் நடந்துமுடிந்துள்ள சட்டப்பேரவை தேர்தல்களில் –குறிப்பாக தமிழகத்தில் – நமது தேர்தல் முறைகளில் உள்ள கேடுகளையும் பலவீனங்களையும் கண்கூடாக காண முடிந்தது.
இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், FTTP ஏற்பாட்டில் உள்ள பெரும் பலவீனங்களை களைவதும் அவசியமாகிறது. அதன் முதல் படி தான் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை விளக்கி மக்கள் மத்தியில் கருத்து உருவாக்கும் முயற்சியாகும். 
இந்தப்பணியை நாம் மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பான விவாதங்களை துவக்க வேண்டும்.நமது நாட்டில் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதம் எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதற்கு பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு 1999 லேயே விகிதாச்சார பிரதிநிதித்துவம் பற்றிய கருத்துச் செறிவுள்ள அறிக்கையை இந்திய சட்ட ஆணையம் முன்வைத்தும் அதன் மீது பொது வெளியில் உருப்படியான விவாதம் எதுவும் நிகழாது இருப்பதே சான்றாக உள்ளது. 
ஆளும் வர்க்கங்கள் இத்தகைய சீர்திருத்தத்தை விரும்பவில்லை என்பதும் இதில் இருந்து தெரிகிறது. நாம் தான் இதை முன்னெடுத்துச்செல்ல வேண்டும்.
                                                                                                                        -வெங்கடேஷ் ஆத்ரேயா 
நன்றி:தீக்கதிர் .
======================================================================================
இன்று,
ஜூலை-31
  •  விடுதலை போராட்ட  தீரன் சின்னமலை இறந்த தினம்(1805)
  • உலகின் முதலாவது குறுகிய அகல ரயில்பாதை ஆஸ்திரேலியாவில் அமைக்கப்பட்டது(1865)
  • சந்திரனின் முதல் மிக அருகிலான படங்களை ரேஞ்சர் 7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது(1964)
  • ஜார்ஜியா ஐ.நா.,வில் இணைந்தது(1992)
======================================================================================