மாற்று மென் பொருள்கள்.



நாம் பயன்படுத்தும் பல மென்பொருள்கள் தனியுரிமை மென்பொருள்கள்கள்தான் .
அவை கட்டணம் செலுத்தி பயன்படுத்தவேண்டியவை என்றாலும் நாம் அந்த விபரம் தெரியாமல்  அவற்றை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் . 

நாம் மட்டும் அல்ல உலகில் பலர் அப்படித்தான் அந்த மென்பொருட்களை அந்த நிறுவனம் சொல்கிறபடி திருட்டுத்தனமாகத்தான் பாவிக்கிறார்கள்.

ஒரு மென்பொருளை நீங்கள் கட்டணம் செலுத்தி வாங்கினால் அதனை அவர்கள் நிர்ணயித்துள்ள விதிகளின்படியே பயன்படுத்தவேண்டும். 

ஒரு கணினியில் மட்டுமே மென்பொருள் நிறுவப்பட வேண்டும் (பல கணினிகளில் நிறுவ பேக்கேஜ் கட்டண முறைகளும் உண்டு). மென்பொருளை பயன்படுத்துவதற்கு மட்டுமே இக்கட்டணம் பொருந்தும், மென்பொருளின் வடிவமைப்பு நிரலில் உங்கள் விருப்பம்போல் மாற்றங்களை மேற்கொள்ள முடியாது. நீங்கள் வாங்கிய பதிப்பிற்கு அப்டேட்கள் இலவசமாக வழங்கப்படலாம்.

ஆனால், புதிய பதிப்பு வெளியானால் அதை பெரும்பாலும் கட்டணம் செலுத்தித்தான் பெற வேண்டும். உங்கள் தேவை முடிந்த பிறகு, மற்றொரு நபருக்கு அதனை விற்க முடியாது எனப் பல விதிமுறைகள் உள்ளன.நம்முடைய அன்றாடப் பயன்பாட்டில் உள்ள விண்டோஸ் இயங்குதளமும், மைக்ரோசாப்ட் ஆபிஸ், அடோப் பிடிஎப் ரீடர், கூகுள் குரோம், ஜிமெயில் உள்ளிட்ட சேவைகள் எனப் பலவும் தனியுரிமை கொள்கை சார்ந்தவையே. 

இது போன்ற தனியுரிமை கொள்கையை எதிர்த்து உருவானதுதான் பொதுவுரிமை என்றும், திறமூல மென்பொருள்கள் என்றும் அழைக்கப்படும் ஓப்பன் சோர்ஸ் முறையாகும்.

ஓப்பன்சோர்ஸ் மென்பொருளை ஃபிரீ சாப்ட்வேர் (இலவசம்)என்றும் குறிப்பிடுவர். 

இதற்கு பொருள் கட்டணமில்லாதது என்பதல்ல, சுதந்திரமானது என்பதுதான்.உங்கள் தேவைக்கேற்ப வளைந்து கொடுக்கக் கூடிய, காப்புரிமை சிக்கல்கள் இல்லாத, எவரும் தேவைக்கேற்ப மாற்றி மறு விற்பனை செய்யக் கூடியது.
எத்தனை கணினிகளில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், பிரதியெடுத்து மற்றவருக்கு கொடுக்கலாம் என இன்னும் பல சுதந்திரமான வசதிகள் உண்டு. பெரும்பாலும் இலவசமாகக் கிடைக்கிறது.

கட்டணமின்றி இலவசமாகக் கிடைக்கும் மென்பொருள்களை ஓப்பன்சோர்ஸ் என்று கூறமுடியாது. அவை தனியுரிமை கொள்கை அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகவும் இருக்கலாம். உதாரணமாக, கூகுள் பிக்காசா, சிகிளீனர், அடோப் ரீடர் ஓப்பன்சோர்ஸ் முறையில் இன்று நூற்றுக்கணக்கான மென்பொருள்கள் உள்ளன. 

அலுவலகப் பயன்பாடு மட்டுமல்லாமல் கலைத்துறை, பொறியியல் துறை, மென்பொருள் துறை என பல துறைகளுக்கான தனித்துவமான மாற்று மென்பொருள்கள் இன்று வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஓப்பன்சோர்ஸ் முறைக்கு உதாரணமாக உபுண்டு லினக்ஸ் இயங்குதளம், லிபரே ஆபிஸ், ஓப்பன் ஆபிஸ், விஎல்சி மீடியா பிளேயர், அடாசிட்டி, ஃபயர்பாக்ஸ் பிரௌசர் ஆகிய மென்பொருள்களையும் இணையத்தில் புகழ்பெற்ற விக்கிபீடியா, வேர்ட்பிரஸ் தளங்களையும் குறிப்பிடலாம்.
மாற்று மென்பொருள்கள்

விண்டோஸ் இயங்குதளத்திற்கு மாற்றாக உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் உபுண்டு லினக்ஸ் http://www.ubuntu.com/ பயன்படுத்தலாம். 

மேலும், ஓப்பன் சூஸ், ஃபெடோரா, ரெட்ஹேட், லினக்ஸ் மின்ட், டெபியான் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

அலுவலகப் பயன்பாட்டில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் மைக்ரோசாப்ட் ஆஃபீஸ் தொகுப்பிற்கு மாற்றாக லிபரே ஆஃபீஸ் http://www.libreoffice.org/, ஓப்பன் ஆஃபீஸ்http://www.openoffice.org/ தொகுப்புகளைப் பயன்படுத்தலாம். 

அடோப் போட்டோஷாப் எடிட்டிங் மென்பொருளுக்கு மாற்றாக ஜிம்ப் http://www.gimp.org/, 
கோரல்டிரா, அடோப் இல்லஸ்ட்ரேட்டர் மென்பொருள்களுக்கு மாற்றாக இன்க்ஸ்கேப் http://www.inkscape.org/
அடோப் பிடிஎப் ரைட்டர் மென்பொருளுக்கு மாற்றாக பிடிஎப் கிரியேட்டர் (http://en.pdfforge.org/pdfcreator) பயன்படுத்தலாம்.

மாயா அனிமேஷன் மென்பொரு ளுக்கு மாற்றாக பிளென்டர் http://www.blender.org/ அடோப் பிரிமியர், ஏவிட் மீடியா கம்போஷர் போன்ற வீடியோ எடிட்டிங் மென்பொருள்களுக்கு மாற்றாக சினிரெல்லா http://www.heroinewarrior.com/cinelerra.php,,
ஓப்பன்ஷாட் வீடியோ எடிட்டர் http://www.openshotvideo.com/ ஏவிட்மக்ஸ் http://avidemux.sourceforge.net/ ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
அடோப் டிரீம்வீவர் இணையதள வடிவமைப்பு மென்பொருளுக்கு மாற்றாக கம்போஸர் http://kompozer.net/ புளூஃபிஸ் http://bluefish.openoffice.nl/, சீமன்கி http://www.seamon- key-project.org/
ஆட்டோகேட் மென்பொருளுக்கு மாற்றாக பிஆர்எல்கேட் http://brlcad.org/ ஃபிரீகேட் http://www.freecadweb.org/, ஆர்கிமெடெஸ் http://www.archimedes.org.br/
இன்டிசைன், பேஜ்மேக்கர், குவார்க் எக்ஸ்பிரஸ், மைக்ரோசாப்ட் பப்ளிசர் போன்ற பக்க வடிவமைப்பு மென்பொருள்களுக்கு மாற்றாக ஸ்கிரிபஸ் http://www.scribus.net/canvas/Scribus, மிக்டெக்ஸ் http://miktex.org/ ஆகிய மென்பொருள்களைப் பயன்படுத்தலாம்.

இங்கு கொடுக்கப்பட்டவை மிகச்சிலதான். உங்கள் தேவைக்கேற்ற மாற்று மென்பொருளை சோர்ஸ்போர்ஜ் https://sourceforge.net/ ஓப்பன்சோர்ஸ் இணையதளத்தில் தேடிப்பெறலாம்.

தனியுரிமை மென்பொருள்களின் உரிமக் கொள்கைகளும், கட்டணங்களும் மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. பெருவணிக நிறுவனங்களின் கூட்டுக் கொள்ளையும், கொள்கையும் தாக்குப்பிடிக்க முடியாத சூழலில் மக்கள் ஓப்பன்சோர்ஸ் நோக்கி வருவது தவிர்க்கமுடியாதது.
எதிர்வரும் காலத்தில் மாற்று என்பது அறிவியலிலும் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாதது.
                                                                                                                      -கண்ணன்,ராஜேன்திரன்(தீக்கதிர்)
=======================================================================================
இன்று,
ஆகஸ்டு-10.

  • இந்திய அணுசக்தி கழகம் ஜவஹர்லால் நேருவால் துவக்கி வைக்கப்பட்டது(1948)
  • மெகலன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது(1990)
  • மிசெளரி, அமெரிக்காவின் 24வது மாநிலமாக இணைந்தது .(1821)

 “முரசொலி”க்கு இன்று  பவள விழா !




பொன்விழா மலரினை நான் வெளியிட்டு உரை யாற்றியதைப் போலவே, 10-8-2017 அன்று முரசொலி பவள விழா நடைபெறும்.

“முரசொலி” பற்றி நான் எத்தனையோ கடிதங்கள் எழுதியிருக்கிறேன்; இதழ்களைத் தொடங்கும் பலர், அந்த இதழ்களின் வெள்ளிவிழா, பொன்விழா போன்றவைகளில் பங்கேற்பது உண்டு. ஆனால் “முரசொலி”யின் பவள விழா ஆண்டிலே, அந்த இதழைத் தொடங்கிய நானும் கலந்து கொண்டு பங்கேற்பதுதான் எத்தனை பெருமைக்கும் மகிழ்ச்சிக்கும் தனிச் சிறப்புக்கும் உரியது? 
1942ஆம் ஆண்டு அகல் விளக்காக ஏற்றி வைக்கப்பட்டு, இன்று ஆகாயத்துக் கதிர் விளக்காக ஒளிவீசிடும் “முரசொலி”யின் நிறுவனர் என்ற நிலையில் இந்த நாளில் என்றும் நீங்காச் சில நினைவுகள்! நான் என்னுடைய வாழ்க்கையில் சந்திக்க நேர்ந்ததைப் போலவே, நான் தொடங்கியதாலோ என்னவோ; முரசொலியும் பல சோதனை, வேதனைகளைக் கடந்து வந்திருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் அது சந்தித்த வழக்குகள் எத்தனையோ?

நெருக்கடி காலத்தில், முரசொலி சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். முரசொலியில் நான் எழுதுவதற்கு தணிக்கை முறையைத் திணித்தார்கள். அது கண்டு மகிழ்ந்த சில எரிச்சல் ஏடுகள், “கருணாநிதியின் ஆட்டம் நீண்ட நாள் நீடிக்காது; முரசொலி, விரைவிலேயே அடங்கும்; அல்லது அடக்கப்படும்” என்றெல்லாம் எழுதின. “முரசொலி, நான் பெற்ற குழந்தை! அது என் கண்ணெதிரே வீர மரணம் அடையுமேயானால் நான் புறநானூற்றுத் தாய் போல மகிழ்ச்சி அடைவேனே அல்லாமல் ஆற்றாது அழுது புலம்பிட மாட்டேன். மாற்றார் ஏடுகள் எழுதியுள்ளது போல முரசொலி அடக்கப்படும் நாள் எனக்குத் திருநாள்; ஆம் - தியாகத் திருநாள்!” என்று முரசொலியிலேயே எழுதியிருந்தேன்.

தணிக்கையின் கெடுபிடியை எதிர்த்து நீதி மன்றத்திலே முரசொலியின் சார்பிலேயே வழக்கு தொடரப்பட்டு, தணிக்கைக்கு ஓர் இடைக்காலத் தடை பெறப்பட்டது. அந்த இடைக்காலத் தடை இருந்த ஒரு மாத காலத்தில் முரசொலியில் சுதந்திரமாக என்னுடைய எழுதுகோல் சுழன்றது. பிறகு ஆட்சியாளர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்ட காரணத்தால் அந்தச் சுதந்திரம் மீண்டும் பறிக்கப்பட்டது.

1976ஆம் ஆண்டு தி.மு.கழக ஆட்சி கலைக்கப்பட்ட இரண்டொரு நாட்களில் பிப்ரவரி 3ஆம் நாள் - அதுதான் அண்ணா நினைவு நாள் - அண்ணா நினைவிடம் சென்று மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல் என்று முரசொலியில் ஒரு பட்டியலை வெளியிட்டு, அந்தத் திரை மறைவில், மிசாவில் கைதானோர் யார் யார் என்பதை நாட்டுக்கு அப்போது அறிவித்தேன்.

நெருக்கடி நிலையை எதிர்த்து தி.மு.கழகம் நிறைவேற்றிய தீர்மானங்களை முரசொலி வெளியிட்ட போது, “சர்வாதிகாரியாகிறார் இந்திரா காந்தி” எனும் ஒரு கேலிச் சித்திரம் வெளியிட்டு, அந்தக் கார்ட்டூனை “நியூஸ் வீக்” என்ற பத்திரிகை வெளியிட்டதால், முரசொலி ஏட்டின் பெயர் உலகம் முழுவதும் பரவியது. இதன் காரணமாக அப்போது முரசொலி ஆசிரியராக இருந்த தம்பி முரசொலி மாறன் சிறையில் பெரும் பாதிப்புக்கெல்லாம் ஆளாயினார்.
சென்சார் நெருக்கடிகளை எண்ணி, முரசொலியில் அரசியல் கலப்பற்ற இலக்கியக் கடிதங்கள் எழுதினேன். அந்த இலக்கியக் கடிதங்களின் வாயிலாக நான் காட்டிய குறிப்புக்களை உள்ளடக்கத்தை கழக உடன்பிறப்புக்கள் வெளியே இருந்தவர்களும், சிறையில் இருந்தவர்களும் புரிந்து கொண்டார்கள். “வெண்டைக்காய் வழவழப்பாய் இருக்கும்” - “விளக்கெண்ணெய் சூட்டைத் தணிக்கும்” - என்பன போன்ற தலைப்பில் எனது கடிதங்கள் வெளிவந்தன. இலக்கியக் கடிதங்கள் மூலம் அரசியலை நுழைக்கிறேன் என்று சென்சார் அதிகாரிகளுக்குக் கழகத்தின் எதிரிகள் தெரிவிக்கவே, “இனி கருணாநிதி என்ற பெயரால் கட்டுரைகளோ - கலைஞர் கடிதங்களோ முரசொலியில் வெளிவரக் கூடாது” என்று தணிக்கைத் துறை தடை செய்தது. அதன் பிறகுதான் “கரிகாலன் பதில்கள்” என்ற ஒரு புதிய பகுதி, முரசொலியில் தொடங்கப்பட்டது. அதிலும்கூட இருபது கேள்விகளுக்குப் பதில் எழுதியிருந்தால் ஐந்தாறு கேள்விகள்தான் தணிக்கை அதிகாரிகளால் அனுமதிக்கப்படும்.

தணிக்கை அதிகாரியால் அப்போது வெட்டப்பட்ட ஒரு கேள்வி - பதிலைப் பற்றிய விவரம் இதோ:-

கேள்வி :- இன்னமும் மக்களிடையே ஒரு சாரார் பேய், பூதம், பிசாசுகள் இருப்பதாக நம்புகிறார்களே, அதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில் :- பேய், பூதம், பிசாசு என்று கூறுவது கற்பனை! ஏற்றுக் கொள்வது மூட நம்பிக்கை! பேய், பிசாசுகள் இல்லை என்பது பற்றி பகுத்தறிவுச் செம்மல் மா. சிங்காரவேலர் எழுதியுள்ள நூலை வாங்கிப் படிக்கவும்.

இந்தக் கேள்வி பதிலை வெளியிட அனுமதி மறுக்கப்பட்டது. தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஏன் அனுமதி மறுத்தீர்கள் என்று கேட்டேன். “நீங்கள் பேய், பிசாசு, பூதம் என்று எழுதும்போது அது மறைமுகமாக இந்திரா காந்தியைக் குறிக்கின்றது என்று நாங்கள் கருதுகிறோம்” என்று கூறினார்கள்.

3-6-1976 அன்று எனது பிறந்த நாளையொட்டி, “என் அன்னையை விட அதிக அன்பை அண்ணா என் மீது பொழிந்தார்” என்று நான் “முரசொலி”யில் எழுதிய வாசகத்தை சிகப்பு மையினால் கோடிட்டு அடித்து விட்டார்கள் சென்சார் அதிகாரிகள். அதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு காரணம் கேட்டேன். அவர் காரணம் கூற மறுத்து விட்டார். அதனை எதிர்த்து அண்ணா சாலையில் போராட்டம் நடத்தி, கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டேன்.
ஒரு நாள் “முரசொலி” அலுவலகத்தில் அமர்ந்து காலை பத்து மணி அளவில் எழுதிக் கொண்டிருக்கிறேன். வருமான வரித் துறையினர் கூட்டமாக உள்ளே நுழைந்தனர். “சார், இந்த ஆபீசை சோதனையிடப் போகிறோம்” என்றனர். “நான் எழுதிக் கொண்டிருப்பதால், உங்களுக்கு ஒன்றும் தொந்தரவு இருக்காதே?” என்று அவர்களைப் பார்த்துக் கேட்டு விட்டு, நான் “முரசொலி”க்கு எழுதுவதில் கவனம் செலுத்தினேன். எனக்கு எதிரிலேயே தொலைபேசித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. என்னைச் சுற்றி நாற்காலிகளில் சிலர் உட்கார்ந்து கொண்டனர். சிலர் அறையில் இருந்த பொருள்களை உருட்டினர். சிலர், என் மேசையைத் திறந்து அதில் இருந்த தாள்களைப் புரட்டினர். மதியம் ஒரு மணி அளவில் எனது எழுத்து வேலைகளை முடித்து விட்டு சோதனையிட்டுக் கொண்டிருந்த அதிகாரிகளிடம் சொல்லிவிட்டு நான் புறப்பட்டேன். அன்றிரவு இரண்டு மணி வரையில் முரசொலி அலுவலகம் சோதனையிடப்பட்டு, சின்னா பின்னமாக்கப் பட்டது.


இன்னும் சொல்லப்போனால், 1960ஆம் ஆண்டுகளிலேயே தி.மு. கழகம் கடுமையான தாக்குதல்களுக்கு ஆளாகி வந்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தமிழரசு கழகம், நாம் தமிழர் இயக்கம் என அரசியல் கட்சிகளும், தினத்தந்தி, நவமணி, தினச்செய்தி, சுதேசமித்திரன், தினமணி, இந்து, மெயில் போன்ற புகழ் மிக்க ஏடுகளும் தி.மு. கழகத்தை, அதன் கொள்கைகளை, அதன் தலைவர்களை மிகக் கடுமையாகத் தாக்கி வந்தன. அப்போது இத்தனை கட்சிகளுக்கும், நாளேடுகளுக்கும் பதில் அளிக்கும் நாளேடாக “முரசொலி” விளங்கியது.

1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது முரசொலி ஆற்றிய பணி, 1967, பொதுத் தேர்தலில் ஆட்சியை மாற்றி, தி.மு. கழகம் வெற்றி வாகை சூடக் காரணமாக அமைந்தது. அதற்குப் பிறகு தி.மு.கழகம் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், கழகத்தின் அரசியல் சாதனைகளை மக்களுக்குக் கொண்டு செல்லும் அரியதொரு வாகனமாக “முரசொலி” பயன்பட்டது என்று சொன்னால் அது தவறல்ல.

இந்திரா காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான இளந் தலைவர் ராஜீவ் காந்தி அவர்கள், 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதியன்று இரவு திருப்பெரும்புதூர் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது, மனித குண்டு ஒன்று அவரை நெருங்கி வெடித்த போது, அந்த இடத்திலேயே அவர் பலியானார். 1948இல் அண்ணல் உத்தமர் காந்தியும், 1984இல் அன்னை இந்திரா காந்தியும் படுகொலை செய்யப்பட்ட போது, இந்தியா அனுபவித்த வேதனையை மீண்டும் அனுபவித்தது. அந்தக் கொடிய சம்பவத்தில் ராஜீவ் காந்தியைத் தவிர 9 காவல் துறை அதிகாரிகளும், பொதுமக்கள் ஏழு பேரும், மனித குண்டாக வந்த தாணுவும் சேர்ந்து 17 பேர் பலி ஆனார்கள். நான் விடுத்த இரங்கல் செய்தியில், “ஒரு நீண்ட எதிர்காலத்திற்குரிய வரும், இந்திய அரசியலில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றிருந்தவருமான ராஜீவ் காந்திக்கு ஏற்பட்ட இந்தக் கொடுமையான முடிவு யாராலும் தாங்கிக் கொள்ள முடியாததாகும். ஒரு ஜனநாயக நாட்டில் இத்தகைய வன்முறை நடவடிக்கைகள் அந்த நாட்டிற்கே இழிவு சேர்ப்பதாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும் காங்கிரஸ் இயக்கத்தின் நண்பர்களுக்கும் தி.மு. கழகச் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தேன்.

இடி விழுந்தாற்போல அதிர்ச்சியூட்டும் இச்செய்தி உடனடியாக டெல்லிக்கு அவரது குடும்பத்திற்குத் தெரிவிக்கப்பட்டு, 22ந்தேதி காலையில் திருமதி சோனியா காந்தியும், அவரது குடும்பத்தினரும் சென்னை வந்தார்கள். அந்தத் தேர்தலில் ராஜீவ் காந்தி, தி.மு. கழக அணியின் எதிர் அணியில் போட்டியிட்ட காரணத்தினால், ராஜீவ் காந்தியின் மறைவினால் வேதனைக்காளான அந்தக் கட்சித் தொண்டர்களைத் தூண்டி விட்டு, அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு கழகத்தினரின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் புகுந்து தாக்குதல் நடத்தினர். பல இடங்களில் தீ வைத்தனர். கழகத்தினருக்குச் சொந்தமான கார்கள், இரு சக்கர வண்டிகள் எல்லாம் கொளுத்தப்பட்டன. 
அப்படித் தாக்குதல்களுக்கு ஆளான இடங்களில் ஒன்றாக “முரசொலி” அலுவலகம் ஆயிற்று. முரசொலி அலுவலகத்தில் பெரும்பாலான பகுதிகள் கொளுத்தப்பட்டன. நீண்ட காலத்து முரசொலி கோப்புகள் எல்லாம் தீயில் கருகிச் சாம்பலாயின. 
அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் கொளுத்தப்பட்டன. அப்போது முரசொலி அலுவலகத்தைக் கவனித்துக் கொண்டிருந்த தம்பி கலாநிதி மாறன், செய்தியைக் கேள்விப்பட்டு, அவசரத்திற்கு என்னுடைய உதவியாளரின் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு முரசொலி அலுவலகத்திற்குச் சென்ற போது, அவரால் உள்ளேயே நுழைய முடியவில்லை. அவர் சென்ற ஸ்கூட்டர் அவர் கண் முன்னாலேயே கொளுத்தப்பட்டது. 
முரசொலி இதழைத் தொடர்ந்து அச்சிட்டு வழங்க முடியாத அளவுக்கு அங்குள்ள இயந்திரங்கள் நாசமாக்கப்பட்டன. இப்படி “முரசொலி” நெருப்பாற்றில் நீந்திய நிகழ்வுகள் எத்தனையோ! பல முறை புடம் போட்டால் பத்தரை மாற்றுப் பொன் என்பதற்கொப்ப ஒவ்வொரு முறையும் புதுப் பொலிவுடன் வெளி வந்தது “முரசொலி”.

“முரசொலி”யின் 75 ஆண்டுகால வளர்ச்சியில், இடையிடையே சில தொய்வுகள் உண்டு. ஆனால் என் தலை என்றைக்கும் யாரிடமும் தொங்கியதில்லை! 
நிமிர்ந்து நின்று நான் முரசு கொட்டியதற்கு மட்டுமல்லாமல்; நேர்த்தியான முறையில் இன்று முரசொலி நடைபோடுவதற்குப் பெரிதும் பாடுபட்ட மறைந்த தம்பி முரசொலிமாறன், சட்டப்பேரவையில் கூண்டிலே நிறுத்தப்படுவது வரை சோதனையைச் சந்தித்த இன்றைய முரசொலி ஆசிரியர் தம்பி முரசொலி செல்வம், எனக்கு ஈடுகொடுத்து அலுவலகத்திலே பணியாற்றியவர்கள், பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள், இன்றைக்கும் “முரசொலி” சந்தாவை ஊருக்கு ஊர் பெருக்குவதற்காகப் பாடுபடும் தம்பி மு.க.ஸ்டாலின், “முரசொலி”யை போர் வாளாகவும், கேடயமாகவும் ஏந்திக் கொண்டு கழகம் நடத்தும் என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகள் ஆகியோர்தான் காரணம். “முரசொலி” சந்தித்த ஒரு சில சோதனைகளை மட்டும் இன்றைய கடிதத்தில் ஞாபகப்படுத்தியிருக்கிறேன்.

முரசொலி இதழ் இந்த அளவுக்கு தி.மு. கழகத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டுள்ளது. எத்தனையோ சோதனைகளையெல்லாம் கடந்து சுடர் முகம் தூக்கி வந்திருக்கிறது. 
முரசொலி, கல்லிலும் முள்ளிலும் கடும் பயணம் செய்தது! 
முரசொலி, காட்டாறுகள் பலவற்றைக் கடந்து வந்தது!
 முரசொலி, கடும் விலங்குக் கூட்டத்தை வென்று வந்தது! 
முரசொலி, தமிழகத்தின் அரசியல் களத்தில் அன்றும், இன்றும், என்றும் ஒலித்து வருவது! 
இந்த முரசொலியின் 75வது பிறந்த நாளில் எனது அன்பு உடன்பிறப்புகளாம், அதன் வாசகர்கள் அனைவருக்கும், முரசொலியின் நிறுவனர் என்ற முறையில் உளம் நிறைந்த வாழ்த்துகள்!
=======================================================================================
 பஞ்சு அருணாச்சலம்.


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம்  காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். ( வயது 75).

திரைப்பட தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர், வசனகர்த்தா என பல முகம் கொண்டவர் பஞ்சு அருணாச்சலம். 
காரைக்குடி அருகே சிறுகூடல் பட்டியில் 18 ஜூன் 1941ல் பிறந்தார். 
கவியரசு கண்ணதாசனிடம் காப்பி ரைட்டராகவும், அவரது உதவியாளராகவும் பணியாற்றிய பஞ்சு, படிப்படியாக திரையுலகில் முன்னேறினார். இவரது முதல்பாடல் 'நானும் மனிதன்தான்' என்ற பாடல் 1960 இல் வெளியானது. கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நடத்திய "தென்றல்" என்ற பத்திரிக்கையில் "அருணன்" என்ற பெயரில் இவர் எழுதிய சில கதைகள் பிரசுரமாயின.

தனது அன்னக்கிளி படத்தின் மூலம் இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார். கமல் ,ரஜினி,சிவகுமார்,ஜெட்சங்கர் என  முன்னணி கதாநாயகர்களை வைத்து தனது பி.ஏ.ஆர்ட் புரொடக்சன்ஸ் மூலம் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர். 

இவர் கதை வசனம் எழுதி தயாரித்த கமல்ஹாசன் நடித்த கல்யானராமன் இவரது தயாரிப்பில் சாதனை படைத்த வெள்ளி விழாப்படம். அதைத்தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து இந்தியில் படம் தயாரிக்க திட்டமிட்டார்.ஆனால் கமல்ஹாசனோ  பட வெற்றியினால் வந்த பணத்தை வைத்து முதலில் சொந்தமாக வீடு வாங்க வற்புறுத்தி சொந்த வீடு வாங்க வைத்தார்.

இளையராஜா மகன்கள் கார்த்திக்ராஜாவையும், யுவன்சங்கர்ராஜாவையும் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியதும் பஞ்சு அருணாச்சலம்தான். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே தனது திரைப்பட தயாரிப்பு தொழிலை நிறுத்திவிட்டார். இவரது மகன் பஞ்சு சுப்பு இப்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
பஞ்சு அருணாசலம் தற்போது தனது வாழ்க்கை அனுபவங்களை ஆனந்த விகடனில் தொடராக எழுதி வந்தார்.

இது என்ன தமிழ்த்திரையுலகில் இலையுதிர் காலமா?

முந்தா நாள் வியட்நாம் வீடு சுந்தரம், நேற்று ஜோதிலட்சுமி ,இன்று பஞ்சு அருணாசலம்.
=============================================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?