ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

அரசியல்வாதி விநாயகர்?


அரசியல்வாதி என்று விநாயகரைக் குறிப்பிடுகிறேன். இது உங்களை ஆச்சரியப்படுத்தும். ஞானப்பழத்துக்காக உண்மையாக உலகத்தைச் சுற்றாமல் அம்மை-அப்பன்தான் உலகம் என்று சுற்றி அப்பவே அரசியல் செய்த அரசியல்வாதி அவர்!
சரி நேரடியாக விடயத்திற்கு வருகிறேன். 

இந்து மக்கள் எத்தனையோ பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள்.

 ஐயப்பனுக்கு மாலைப்போட்டு சபரிமலைக்கு யாத்திரை செல்வது, பழனி முருகனுக்கு யாத்திரை செல்வது, ஆடிமாத திருவிழாவுக்கு ஊர் முழுக்க சவுண்ட் சர்வீஸ் போட்டு கூழ் ஊற்றுவது, பொங்கல் பண்டிகை என்று எத்தனையோ பண்டிகைகள் எந்த வித மதக்கலவரமும் நடக்காமல் அமைதியாக இந்துக்கள் கொண்டாடும் போது, 

விநாயகர் சதுர்த்தி திருவிழா மட்டும் ஏன் இந்து -முஸ்லீம் மதப்பிரச்சனையோடு கொண்டாடப்படுகிறது?கலவரம் உண்டாக்கப்படுகிறது? 

3நாட்கள் கழித்து கடலில் விநாயகர் சிலைகளை கரைக்கக் கொண்டு செல்லும் ஊர்வலங்களுக்கு பலத்த போலிஸ் பாதுகாப்பும் மசூதிகளுக்கு பலத்த போலிஸ் பாதுகாப்பும் ஏன் தேவைப்படுகிறது?

வெறெந்தப் பண்டிகைக்கும் இந்த மாதிரியான போலிஸ் பாதுகாப்போ, அல்லது இந்துக்களின் ஊர்வலத்தின் போது மசூதிகளுக்கு போலிஸ் பாதுகாப்போ கொடுக்கப்படுகிறதா என்று சிந்தித்துப் பாருங்கள்.


யார் இந்த விநாயகர்?
சிவன், முருகன் போன்று பண்டைய தமிழர் வணங்கிய தொன்மை வழிபாட்டு கடவுளா விநாயகர்? 
கி.பி 6 நூற்றாண்டிற்கு பிறகே பல்லவர்களால் வாதாபி என்னும் ஊரிலிருந்து கொண்டு வந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட கடவுள்தான் விநாயகர். 
பண்டைய தமிழ் இலக்கியத்தில் இந்திரன், முருகன், சிவன் என்று குறிப்பிடப்பட்டதைப் போல் விநாயகர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து பாருங்கள். ஒருகாலத்தில் இந்த மனிதர் உயிர் வாழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிற சிவன், முருகன் போன்ற நம்பத்தகுந்த சராசரித் தோற்றமுடையதா விநாயகர் உருவம்? 
எப்படி யானை தலை மனித உடம்போடு இப்படிப்பட்ட ஓர் உயிரனம் இருந்திருக்க முடியும் என்று சிந்தித்துப் பாருங்கள்.
பூணூல் அணியாத சிவன், பூணூல் அணியாமல் கோவணம் மட்டுமே ஆடையாய் அணிந்த முருகன், ஆனால் இவர்கள் குடும்பத்தில் பூணூல் அணிந்த விநாயகர்? 
உருவத்திலும் பண்பாட்டிற்கும் தொடர்பற்ற விநாயகர் எப்படி தமிழர் வாழ்வில் புகுந்தார்? 
விலங்குகளின் தோலை மனிதன் ஆடையாய் அணிந்த காலங்களில் புலித்தோலை ஆடையாய் அணிந்து சிவன் வாழ்ந்திருக்கலாம் என்பதையும், பஞ்சை கண்டறிந்த ஆரம்ப காலத்தில் கோவணத்தை மட்டுமே ஆண்கள் அணிந்த காலத்தில் முருகன் வாழ்ந்திருக்கலாம் என்பதையும் வரலாற்றை அறிவியல் கண்ணோட்டத்தில் படித்தால் புரிந்து கொள்ளலாம். சிவன் முருகன் குடும்பத்தில் புகுத்தப்பட்ட விநாயகர் நம் குடும்பத்திலும் புகுந்து நம்மால் வணங்கப்படுகிறார்.
விநாயகர் சிலை ஊர்வலம் ஏன் – பக்தியா? 
அரசியலா?
திலகர் வெள்ளையர்களுக்கு எதிராக இந்துக்களை ஒற்றுமைப்படுத்த கொண்டுவரப்பட்டதே இந்த விநாயகர் சதுர்த்தி பேரணி. 
பிறகு இந்து மதவாத அமைப்புகள் இவ்விழாவை இந்துக்களை இஸ்லாமியருக்கு எதிராக படை திரட்டும் ஒரு பண்டிகையாக கையாண்டனர். 
அப்படித்தான் இன்றும் தொடர்கின்றனர்.
உங்கள் தெரு முனைகளில் 15,000 முதல் 20,000 மதிப்புள்ள சிலைகளை நீங்கள் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்க வேண்டுமா? 
அவர்களைத் தொடர்புகொண்டால் அவர்களே இலவசமாக வைத்து தருவார்கள்.
காரணம் அந்த சிலையை நீங்கள் அவர்கள் சொல்லும் தேதியில் அவர்களின் சிலை அணிவகுப்பு பேரணியில் கொண்டு செல்லவேண்டும். அந்த பேரணிக்கான அனுமதி வாங்கும் முறையை காவல் துறையில் உள்ள உங்கள் நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
மசூதிகள் இருக்கும் சாலைகளில் தெருக்களில் தான் பேரணி செல்ல வேண்டும் என்று பிடிவாதத்துடன் இருப்பார்கள். மசூதி வழியே செல்லும் போது கோஷங்கள் போட வேண்டாமா?
நீங்கள் விநாயகர் சதுர்த்தி பேரணியில் இஸ்லாமியருக்கு எதிரான கோஷம் போடும்போது பள்ளிக்கூடத்திலோ கல்லூரியிலோ மத வேறுபாடுகள் அற்று சக நண்பர்களாய் இருந்த இஸ்லாமிய நண்பர்கள் எதிரில் வந்தால் உங்கள் உணர்வு என்னவாக இருக்கும்? 
மதவேறுபாடுகளற்று பழகிய நம் நண்பர்களை எதிரிகளாய் கற்பித்து விநாயகர் சதுர்த்தி திருவிழா பிளவுபடுத்துகிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டாமா?
தனிநபர் வழிபாட்டு உரிமை என்பது வேறு.
உங்கள் வீட்டில் வணங்குகிறீர்களே அது தான் வழிபாட்டு உரிமை. 
ஆனால் அந்த வழிபாட்டை அரசியல் பேரணியாய் மாற்றி மற்ற மதத்தினருக்கு எதிரான கோஷங்களை எழுப்பி நடத்தப்படுவது தனிநபர் வழிபாட்டு உரிமை அல்ல. அது மதவாத அரசியல். அது வன்மம்!நீங்கள் உங்கள் தெருவில் வணங்கும் சிலையை வைத்து சில 
இந்து மத அமைப்புகள் தங்கள் அரசியல் லாபத்திற்கு இப்படி மடைமாற்றுவது உங்களுக்கு இப்போதாவது புரிகிறதா?
இனியாவது இதைப் புரிந்து கொண்டு உங்கள் பக்தியை இன்னொருவர் அரசியல் லாபத்திற்கு பயன்படுத்துவதை உணருங்கள்.. 
இப்போது சொல்லுங்கள் விநாயகர் ஒரு மதவாத அரசியல்வாதியா, இல்லையா?
-வேந்தன்,
நன்றி:தீக்கதிர்.
===============================================================================================
ன்று,

செப்டம்பர்-11.

  • அர்ஜெண்டினா ஆசிரியர் தினம்
  • லத்தீன் அமெரிக்கா ஆசிரியர் தினம்
  • தமிழக கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் நினைவு தினம்(1921)
  • நியூயார்க் உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள் விமானங்கள் மூலம் தகர்க்கப்பட்ட தினம்(2001)

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் பயங்கரவாதத்தின் கோர தாண்டவத்தை உலகம் உணர்ந்தது. 
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் கம்பீரமாக இருந்த உயரமான இரட்டை கோபுரங்கள், அல்-குவைதா பயங்கரவாதிகளால் தரைமட்டமாக்கப்பட்டன.


கடந்த 2001 செப்.,11 காலை 8:46 மணிக்கு, அல்-குவைதா பயங்கரவாதிகள் 19பேர்,அமெரிக்காவுக்கு சொந்தமான, நான்கு பயணிகள் விமானங்களை கடத்தினர்.முதல் இரண்டு விமானங் களை தாழ்வாக பறக்க வைத்து நியூயார்க் உலக வர்த்தக மையத்தின், இரட்டை கோபுர கட்டடங்களின் மீது அடுத்தடுத்து மோத செய்தனர். 

மோதிய 1 மணி 42 நிமிடத்துக்குள், தலா 110 மாடிகள் கொண்ட இரண்டு கட்டடங்களும் தரைமட்டமாகின. அருகில் இருந்த 10 கட்டடங்களும் பாதிப்புக்குஉள்ளாகின. விமானங்களில் இருந்த பயணிகள் 147 பேரும், வணிக மைய கட்டடத்தில் இருந்த 2,606 பேரும் பலியாகினர்.

மூன்றாவது விமானத்தை எர்லிங்டன் என்ற இடத்தில் உள்ள அந்நாட்டின் ராணுவ தலைமையகமான, பென்டகன் மீது மோதச் செய்தனர். இதில் விமானத்தில் இருந்த 59 பேரும், பென்டகனில் இருந்த 125 ராணுவ வீரர்களும் இறந்தனர்.

நான்காவது விமானத்தை கடத்திய பயங்கரவாதிகளுக்கும், அதில் இருந்த பயணிகளுக்கும் சண்டை நடந்தது. முடிவில் இதுவும் சாங்ஸ்வில் என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகி 
தீப்பற்றி சாம்பலானது; இதில் 40 பேர் பலியாகினர். 

இச்சம்பவத்தால் அமெரிக்கா மட்டுமல்ல, உலகமே அதிர்ந்தது.இந்த தாக்குதலுக்கு ஒசாமா 
பின்லேடன் தலைமையிலான அல்-குவைதா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. 
இதையடுத்து பின்லேடனையும், அல்-குவைதா பயங்கரவாத அமைப்பையும் அடியோடு 
ஒழித்துக்கட்ட, 'பயங்கரவாதிகள் மீது போர்' என்ற நடவடிக்கையை அமெரிக்கா துவக்கியது. 
ஆப்கானிஸ்தானில் பதுக்கியிருந்த ஒசாமா மற்றும் அல்-குவைதா பயங்கரவாதிகள் மீது, அமெரிக்கா, நேட்டோ படையினர் தாக்குதல் தொடுத்தனர்.உருக்குலைந்த இரட்டை கோபுர இடிபாடுகள் 2002 மே மாதம் முற்றிலும் அகற்றப்பட்டன. பெ ன்டகன் ஓராண்டுக்குள் சீரமைக்கப்பட்டது. இதன் பின்தான், உலக நாடுகள் பலவும் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை நிறைவேற்றின.


கடந்த 2001 தாக்குதலுக்கு பின், அமெரிக்காவில் எந்த பயங்கரவாத தாக்குதலும் நடக்கவில்லை. இது பயங்கரவாதத்துக்கு எதிராக அந்நாட்டின் தீவிர நடவடிக்கையை காட்டுகிறது.ஒன்பது ஆண்டுகளாக நடந்த தீவிர தேடுதல் வேட்டையின் முடிவில் 2011 மே 2ல் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் உள்ள பங்களாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்காக அமெரிக்கா பல ஆயிரம் கோடி ரூபாயை செலவிட்டது.

அந்நாடு அக்காலகட்டத்தில் பொருளாதார சிக்கலில் சிக்கியதற்கு இதுவும் ஒரு காரணம் என கூறப்பட்டது. ஈராக், ஆப்கன், பாகிஸ்தான் என மூன்று நாடுகளில் நடந்த பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்கா ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகள், பொதுமக்கள் உட்பட 
2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இரட்டை கோபுரம் இருந்த இடத்தில், ஒரு வர்த்தக மைய கட்டடம் கட்டப்பட்டு 2014 நவ., 3ல் திறக்கப்பட்டது. மேலும் 'நேஷனல் 
செப்., 11 'மெமோரியல் அண்ட் மியூசியம்' என்ற நினைவு மையம் திறக்கப்பட்டது. இது தவிர 
பென்டகன் மற்றும் சாங்ஸ்வில் பகுதியிலும் நினைவு மையம் திறக்கப்பட்டுள்ளது.
========================================================================================