காவிரியில் அணை...?

காவிரி நீர் கேட்டுத் தமிழகத்தில் குரல் வலுக்கும் போதெல்லாம், இங்கே ஏன் இந்நாள்வரை எந்த அணையும் கட்டப்படவில்லை என்ற கேள்வியையும் சேர்த்தே எழுப்புகிறார்கள்.
“வெள்ளக் காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் காவிரித் தண்ணீரைத் தடுத்து நிறுத்த, நீங்கள் ஏன் அணை கட்டவில்லை? 
அணை கட்டியிருந்தால் இந்நேரம் எவ்வளவோ நீரைச் சேமித்திருக்கலாமே... அதைவிட்டு அண்டை மாநிலத்திடம் ஏன் கையேந்திக்கொண்டிருக்க வேண்டும்?” என்று சிலர் கேட்பது வாடிக்கையாக இருக்கிறது.
முதலில் ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும். ஆற்றின் முதல் துளி உயரமான இடத்தில் விழுகிறது. அது ஆறாகிப் பெருகிச் சேர்ந்து பள்ளமான இடத்தை நோக்கி வருகிறது. அது அடைகின்ற இறுதிப் பள்ளம் கடல்.

ஆறு உற்பத்தியாகும் இடம் மலைச் சிகரங்களாகவே இருக்கும். மலையிலிருந்து சமவெளிக்கு இறங்கும் போதுதான் அவ்வாறு அமைதியாகப் பாயும். சமவெளியில் ஆறு நகர்வதே தெரியாது. தேங்கிய நீர்ப்பரப்பாகவே தெரியும். மலையிலிருந்து இறங்கும் ஆற்றுக்குத்தான் சுற்றிலும் மேட்டு முகடுகள் வாய்க்கும். சமவெளியில் அதன் கரை மட்டுமே உயரமாக இருக்கும். 
ஆற்றுப் படுகையும் கரையை ஒட்டியுள்ள சமவெளிப் பகுதியும் ஏறத்தாழ ஒரே மட்டத்தில் இருப்பதைப் பார்க்கலாம். 
கடலுக்கு அருகில் கழிமுகப் பகுதியில் ஆற்றுப் படுகை ஆழமாகவே இராது.
அணையை எங்கே கட்ட முடியும்? 
ஆறு தோன்றும் மலைப் பகுதிகளில் அணை கட்டித் தேக்கலாம். 
அங்கேதான் அணைத்தேக்கத்துக்கு வேண்டிய கிண்ணம் போன்ற நிலப்பரப்பு காணப்படும். 

கிண்ணத்தில் நீரைத் தேக்கிக்கொள்ளலாம். மலைப் பகுதிகளில் எண்ணற்ற அணைகள் கட்டப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். 
நீலகிரி மாவட்டத்தில் சிறிதும் பெரிதுமாகப் பல அணைகள் இருக்கின்றன.

மலைகளில் அணை கட்டியது போக அடுத்துள்ள வாய்ப்பான இடம் எது? 

மலையை விட்டு இறங்கியதும் உள்ள இடுப்புப் பகுதிபோன்ற இடங்களில், ‘ட’கர வடிவத்தில் உள்ள நிலமுனையில் அணை கட்டலாம். ஆறு தோன்றிய மலையும் ஆறு பாயவிருக்கின்ற சமவெளியும் சந்திக்கும் இடம்தான் இத்தகைய இடுப்புப் பகுதி. 

மேட்டூர் அணை, பவானிசாகர் அணை, அமராவதி அணை போன்றவை அந்தந்த ஆறுகள் மலைவிட்டு இறங்கிய இடுப்புப் பகுதியில் கட்டப்பட்டுள்ளன.

உலகின் பெரும்பாலான அணைகள் இத்தகைய நிலப் பகுதிகளிலேயே கட்டப்பட்டிருக்கும். அணைக்கட்டுக்கு ஏற்ற தகுதியான இடம் இதுவே. அணையின் நோக்கமான கால்வாய்ப் பாசனப் பகுதிகளுக்கு, உயரப் பகுதிகளிலுள்ள இவ்வணைகளிலிருந்து நீரை எளிதில் நகர்த்திச் செல்லலாம்.
காவிரியைப் பொறுத்தவரையில் அணைக்கட்டுக்கு ஏற்ற வாய்ப்புள்ள நிலங்கள் கர்நாடகத்திலேயே உள்ளன. அங்குதான் மேடுபள்ளமான, மலைப்பாங்கான பகுதிகள் உள்ளன. 

அணைக்குரிய இவ்வியற்கையைக் கருத்தில் கொண்டால் கர்நாடகத்தில் கட்டப்படும் அணைகள் இரு மாநிலத்துக்குமான நீரைத் தேக்கி அனுப்புவதையே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். ஆற்றின் நீர்க்கோள் பகுதி அம்மாநிலத்தில் இருப்பதாலேயே அங்கு தேங்கும் நீர் அனைத்தும் ஒருவருக்கே சொந்தமாகிவிடாது. 

அந்த நீர்க்கோள் மொத்தமும் காவிரிப் பாசனப் பரப்புக்குப் பொதுவானது.

காவிரியில் நமக்குள்ள அணை வாய்ப்பான மேட்டூரில் ஓரளவு பெரிய அணையைக் கட்டிவிட்டோம். அதற்கே வேண்டிய நீரைக் காணோமே. 

மேட்டூர் அணை நிரம்பினால் அது தலைப்புச் செய்தியாகிறதே.

அடுத்து, ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் அணை வரையுள்ள காவிரித் தடத்தில் ஓர் அணையைக் கட்டியிருக்கலாமே என்பார்கள். அவ்வாறு கட்டுவது தடுப்பணையாகத்தான் இருக்குமேயன்றி, அங்கிருந்து நீரை வெளியெடுக்க வழியிருப்பதாகத் தெரியவில்லை. 

அங்கே தடுப்பணை போன்றதையேனும் கட்டி, மலை குடைந்து தண்ணீரை வெளியே எடுத்துவர வேண்டும்.
தடுப்பணை என்பது நீர் சேகரிக்கப் பயன்படாது. 

அது நீர் பாயும் விரைவைத் தணித்து அனுப்புவது. கரையோரத்தில், வாய்ப்பிருந்தால் ஒரு கால்வாய் வெட்டி தண்ணீரை எடுத்துச் செல்லலாம். பவானி ஆற்றில் கட்டப்பட்டுள்ள கொடிவேரி அணை இத்தகைய தடுப்பணை ஆகும். கொடிவேரிக் கரையோரத்தில் கால்வாய் வெட்டி நீரை நகர்த்துவதற்கேற்ற சமநிலம் இருப்பதால், இருபுறமும் கால்வாய்கள் வெட்டப்பட்டுள்ளன.

ஒகேனக்கல்லை அடுத்து அணை கட்ட வாய்ப்புள்ள இடத்தில் ஆற்றுக்கு இருபுறமும் உயர் மலைகளே உள்ளதால், தடுப்பணையால் எந்தப் பயனும் இல்லை என்றே கருதுகிறேன். 

அடுத்து, மேட்டூரை விட்டிறங்கும் காவிரி ஈரோடு வரை சமவெளி போன்ற பகுதியில்தான் விரைந்து இறங்குகிறது. இங்கே தடுப்பணை தேவையேயில்லை. 

ஆற்றின் முழுக் கொள்ளளவும் நீர் சென்றால் அதுவே பெரும் நீர்த்தேக்கத்தைப் போல் நிறைந்துதான் தேங்கிச் செல்லும். என்றாலும் சில இடங்களில் மின்உற்பத்திக்காகச் சிறு தடுப்புகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
பவானியிலிருந்து கொடுமுடி வரை காவிரியின் இரு கரைகளுமேகூட உயரமில்லாதவை. இதில் அணை கட்டுவதற்கு எங்கே இடமிருக்கிறது?

கொடுமுடியில்தான் இதுகாறும் தெற்காகப் பாய்ந்து வந்த காவிரி, கிழக்காகத் திரும்புகிறது. 

கிழக்கு நோக்கித் திரும்பிவிட்ட காவிரியில் தடுப்பணை கட்டுவதற்கு எங்கும் வாய்ப்பில்லை. 

ஏனென்றால், அங்கிருந்து ஆற்றின் கடல்முகம் வரைக்கும் ஆற்றுப் படுகையும் கரைக்கு இருபுறமுள்ள சமவெளியும் ஏறத்தாழ ஒரே மட்டத்தில் இருக்கின்றன.

பிரதமர் நேரு, காமராஜரிடம், “சுற்றிலும் நூறு கிலோமீட்டர் அளவுக்கு நிலத்தின் அமைப்பு சமதளமாக உள்ள பகுதி நம் நாட்டில் எங்கே இருக்கிறது சொல்லுங்கள்... அங்கே பெல் நிறுவனத்தை அமைக்க வேண்டும்...” என்று கூறினாராம். “அப்படிப்பட்ட இடம் நம் நாட்டில் திருச்சிக்கு அருகில்தான் இருக்கிறது” என்று காமராசர் கூறினாராம். 

அதன் பிறகே பெல் நிறுவனம் திருச்சிக்கு அருகில் நிறுவப்பட்டதாகச் சொல்வார்கள். அப்படியானால், அப்பகுதி நிலத்தின் சமச்சீரான அமைப்பைக் கற்பனை செய்துகொள்க.

திருச்சி மாவட்டத்தின் பல இடங்களில் காவிரிக்குக் கரையெடுத்துக் காப்பாற்றியிருக்கிறார்கள். முக்கொம்பு, கல்லணை போன்று நீரைத் தடுக்கவும் பிரிக்கவும்தான் இப்பகுதிகளில் அணைகட்ட இயலும்.

காவிரியின் கழிமுகமான தஞ்சையில் அணை கட்டும் பேச்சுக்கே இடமில்லை. எங்காவது கடலோர மாவட்டங்களில் அணை கட்டிப் பார்த்திருக்கிறீர்களா?

மழை நீர் வீணாகக் கடலில் கலக்கிறது என்றெல்லாம் ஆளாளுக்கு பேசாமல், இயற்கையை ஆராய்ந்து சொல்வதே உகந்ததாக இருக்கும். ஓர் ஆற்றின் தலைப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அணைகள் வழியாக நமக்குரிய நீர் வந்து சேர வேண்டுமே அன்றி, கால் பகுதிகளில் செய்வதற்கு உகந்தவை என்று எதுவுமில்லை.

காவிரியில் பாய வேண்டிய தண்ணீர் அதன் தலைப் பகுதியிலேயே முழுமையாக அள்ளப்பட்டுவிடுகிறது என்பதுதான் உண்மை. 

நம் அணைகள் பலவும் முழுக் கொள்ளளவை எட்டுவதற்கே பற்பல ஆண்டுகள் இடைவெளி ஏற்பட்டிருப்பதைக் கவனிக்க வேண்டும்.

கவிஞர்.மகுடேசுவரன், 

kavimagudeswaran@gmail.com
======================================================================================
ன்று,
செப்டம்பர்-14.


  • லக முதல் உதவி தினம்

  • அனைத்து நாடுகள் கலாச்சார ஒற்றுமை தினம்

  • தட்டச்சுப் பொறியின் நாடா கண்டுபிடிக்கப்பட்டது(1886)

  • ரஷ்யா அதிகாரப்பூர்வமாகக் குடியரசானது(USSR)(1917)

  • எண்ணெய் ஏற்றுமதி  நாடுகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது(1960)
======================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?