சனி, 24 செப்டம்பர், 2016

நரி பரியான கதை?


மேக் இன் இந்தியா! இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வரும்போது இந்தியாவை முன்னேற்றுவதற்கு மேக் இன் இந்தியா என்று கோஷத்தை வைத்து வெளிநாட்டு மூலதனத்தை கூவிகூவி அழைத்தார்.
குறைந்த ஊதியத்திற்கு எங்களது ஊரில் ஏராளமான இளைஞர்கள் உள்ளனர்;தொழிலாளர் சட்டங்கள் எதுவும் உங்களது லாபத்திற்கு குறுக்கே வராது என்றார்.
அதற்கு ஏற்றவகையில் அனைத்து உள்கட்டமைப்புகளையும் கார்ப்பரேட் முதலாளிக்கு சாதகமாக மாற்றினார்.அதில் ஒன்றுதொழிற்சாலைக்கு தேவையான மின்சாரம். 
24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும் என்றார். உடன் அனைத்து மக்களுக்கும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.தேர்தல் காலத்தில், மின்சார உற்பத்திக்குநிலக்கரி இல்லாமல் அனல் மின்நிலையங்களில் 38 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு மின்சாரஉற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
எனவேஅனல் மின்நிலையங்கள் அதன் முழு நிறுவுதிறனை முழுமையாக இயக்கிட தேவையான நிலக்கரி உற்பத்தியை அதிகமாக்கிடவும் நடவடிக்கை எடுத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றார். நிலக்கரி இறக்குமதி அறவே நிறுத்தப்படும் என்று வாய்கிழிய பேசப்பட்டது.ஆட்சிக்கு மோடி வந்ததும் தனியாருக்கு நிலக்கரிச் சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டன. இரண்டு ஆண்டுகள் தனது ஆட்சிக்காலம் முடிந்தவுடன் 2000 ஆம் ஆண்டில் இருந்த மின்சாரத்தின் அளவைவிட இரண்டு மடங்கு மின்சார உற்பத்தி ஆகிவிட்டது என்று விளம்பரப்படுத்தப்பட்டது.
மின்சாரம் கிடைக்காத 18 ஆயிரம் கிராமங்களில் 7 ஆயிரம் மின்சார கிராமங்கள் தொகுப்புடன் இணைக்கப்பட்டு விட்டது.2022 இல் அனைவருக்கும் மின்சாரம் கிடைத்துவிடும் என்று தம்பட்டம் அடித்தார்கள். ஆனால்நிலைமை மாறவில்லை.
வழக்கம்போல் நிலக்கரியும் 21 கோடி மெட்ரிக் டன் இறக்குமதி செய்யப்பட்டது.
இறக்குமதி குறையவில்லை.மேக் இன் இந்தியாவின் விளம்பரத்தை அளிக்கும்போது எங்களது நாடு உலகஅளவில் மின்உற்பத்தியில் மற்றும் நுகர்வோரில் 5 வது இடத்தை பிடித்துள்ளது.எங்களது நாட்டில் நிலக்கரி பூமிக்கடியில் வெட்டி எடுக்கப்பட வேண்டியது 135 பில்லியன் டன்உள்ளது.எரிவாயு 1355 பில்லியன் கனமீட்டர் உள்ளது.மின்துறையில் 100 சதவீத முதலீட்டை ஏற்கின்றோம் என்றெல்லாம் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அடுத்ததாக 2022 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் மின்சாரம் கிடைத்துவிடும் என்று ஆருடம் கூறினார்கள்.எல்லாம் சரிதான்.ஆட்சிக்கு வரும்போது அனைவரும் கொடுக்கும் வாக்குறுதிதான் என்றாலும் நரியையே பரியாக்கிய கதையாக விளம்பரத்தின் மூலம் மக்களை நம்பவைத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.ஆனால் நடப்பது என்ன?
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 284 ஆயிரம் மெகாவாட் ஆக இருந்த மின்உற்பத்தி நிறுவுதிறன் இரண்டுஆண்டுகளுக்கு பின்னர் மோடி ஆட்சியில் 304 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்ந்துள்ளது. அவ்வளவே.
2012-17 ஆம் ஆண்டுகளின் இலக்கான 84ஆயிரம் மெகாவாட் இல் 2015 வரையில் 78.74 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் முடிக்கப்பட்டுள்ளது.இந்தக்கணக்கில் பார்த்தால் மத்திய அரசின் பொறுப்பில் 76.247 ஆயிரம் மெகாவாட்,மாநில அரசு பொறுப்பில் 1019.06 ஆயிரம்மெகாவாட், தனியார் பொறுப்பில் 1266.08 மெகாவாட், மின்சாரம். சதவீதக் கணக்கில் பார்த்தால் மத்திய பொறுப்பில் 25.02 சதவீதம் மாநில தொகுப்பு 33.44 சதவீதம், தனியார் பொறுப்பில் 41.54 சதவீதம் என்றளவில் உள்ளது.
இந்திய நாட்டின் மின்சாரத் தேவை ஆண்டுதோறும் 8 சதவீதம் வளர்ச்சி என்றால் உண்மைநிலவரம் என்ன ?
கடந்த எட்டு ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே 8 சதவீத வளர்ச்சிமின்துறையில் இருந்துள்ளது.இதர ஆண்டுகளில் 4 முதல் 6 சதவீத வளர்ச்சி மட்டுமேயாகும்.இந்தியாவின் வளர்ச்சிக்கு ஏற்றமுறையில் மின்உற்பத்தி அதிகப்படுத்திடவேண்டும் என்றுமுடிவெடுக்கப்பட்டது.
நிலக்கரி போன்ற புதை எரிபொருள் பயன்படுத்துவது குறைக்கப்படுவதற்கு மாற்றாக புதுப்பிக்கத்தக்க சக்திஉருவாக்கிட திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் காலத்தில் 175 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் காற்றாலை, சூரியசக்தி மூலம் தயாரிக்கப்படும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.அடுத்த 2022 ஆம்ஆண்டிற்குள் 6 லட்சம் மெகாவாட் மின்உற்பத்தி அடைந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம்.
ஆனால் நிலைமைகள் எதை காட்டுகின்றது.தற்போது உற்பத்தி ஆகும் மின்சாரத்தையே உள்வாங்கும் திறன் நுகர்வோரிடம் இல்லை.மின்சாரம் கிடைக்காமல் மக்கள் இன்னும்இந்தியாவில் 30 கோடி அளவில் உள்ளனர் என்று நமது பிரதமரே கூறுகின்றார்.
நிலைமை இப்படி இருக்கும்போது மத்தியஅரசானது அடுத்து மூன்று ஆண்டுகளுக்கு மின்திட்டங்களை அமைப்பதின் வேகத்தை தாமதப்படுத்துங்கள் என்று முடிவெடுத்துள்ளது தான் இதில் உள்ள முக்கியவிஷயம்.
ஏன் இந்த நிலைக்கு அரசு வந்தது?
மின்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரம் 216 பைசாவிற்கு 400 கோடி யூனிட் மின்சாரம் விற்கப்பட்டுள்ளது.இன்னும் இதன் விலை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.
சந்தையில் இப்படி விலை குறைந்து இருந்தாலும் தமிழ்நாடு மின்சாரவாரியம் என்னவோ ஒரு யூனிட் மின்சாரம் ரூ.8 க்கு மேல்தான் விலை கொடுத்து 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தினம்தோறும் வாங்கிக்கொண்டு இருக்கின்றது.குஜராத் மாநிலத்திலும் கூட அம்மாநில மின்வாரியம் தனது வருமானத்தில் 60 சதவீத மின்சாரத்தை அதானி குழுமத்திடமிருந்து அதிக விலைகொடுத்து வாங்கிக் கொண்டு வருகின்றது.
அதானி குழுமம் கொழுக்க குஜராத் மாநிலமின்வாரியத்தின் சேவை இது. இருந்தாலும் தனியார் மின்உற்பத்தி நிலையங்கள் தங்களது நிறுவு திறனில் 60 சதவீதத்திற்கு மேல் உற்பத்தி செய்வதில்லை.காரணம் மின்சாரத்தை வாங்குவதற்கு ஆளில்லை.
அரசு கொடுத்த புள்ளிவிபரப்படி 175 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யவேண்டும் என்றால் அதில் 30 ஆயிரம் மெகாவாட் மின்நிலையங்களில் மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் போட யாரும் முன்வரவில்லை.இந்திய தொழிற்சாலைகளில் மின்நுகர்வுகுறைந்துள்ளது.
தமிழகத்தை எடுத்துக்கொண்டால் தொழிற்சாலைகளின் மின்நுகர்வு மொத்த விநியோகத்தில் 38 சதவீதமாக இருந்தது 2014 இல் 26.4 சதவீதமாக குறைந்துவிட்டது.
அதே சமயத்தில் வீடுகளுக்கு பயன்படுத்தும் மின்சாரம் 34 சதவீதமாக உயர்ந்து விட்டது.அகில இந்திய அளவிலும் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் 7.8 சதவீதம் உயர்ந்துள்ளது என்று எரிசக்திதுறை நிறுவனம் தெரிவித்துள்ளது.இதற்கு முன்னால் மானியத்தின் மூலம்வீடுகளுக்கு அளிக்கப்படும் மின்சாரத்தின் விலை ஈடுகட்டப்படும்.
அதாவது தொழிற்சாலைகளுக்கு அளிக்கப்படும் மின்சாரத்தின் விலை கூடுதலாக்கப்பட்டு வீடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வந்தது.அதை ரத்து செய்யவேண்டும் என்பதே மின்சாரச் சட்டத்தின்நோக்கங்களில் ஒன்றாகும். தொழிற்சாலைகளின் மின்தேவை குறைந்து போனதால் அரசின் நோக்கம் அமலாகும் நிலைஉள்ளது. 
தொழிற்சாலைகளில் மின்தேவை குறைந்ததற்கு காரணம் உற்பத்தித் துறைகளில் ஏற்பட்ட தேக்கமே ஆகும்.மத்திய அரசுபுள்ளிவிபரங்களைத் தயாரித்து அனைத்துத்துறைகளிலும் 7சதவீத வளர்ச்சி அடைந்துவிடுவோம் என்று மார்த்தட்டிக்கொண்டிருக்கின்றது.
குறைந்த அளவில் மின்கட்டணம் இருப்பதால் கூடுதல் செலவு மின்விநியோக கழகங்களுக்கு ஏற்படுகின்றது. உற்பத்தியாகும் மின்சாரத்தை வாங்குவதற்கு வீட்டு மின்நுகர்வோர்களால் முடிவதில்லை.
மின் இழப்பும் அதிகமாகவாய்ப்புள்ளது.விநியோக கழகங்களின் மின்விநியோகம் பலசிக்கல்களுக்கு ஆளாகின்றது.காரணம் போதுமான மின்தொடர் கட்டமைப்பு மின்விநியோகப்பகுதிகளில் இல்லை.அதற்கும் மேல் மின்விநியோக கழகங்களின் நிதிநிலைமைகள் திருப்திகரமாக இல்லை.
இந்தக்காரணங்களினால் உற்பத்தியான மின்சாரத்தை வாங்குவதற்கு ஏற்பாடு இல்லாமல் மின்நிலையங்கள் தனது உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன. அதிலும் குறிப்பாகலாபத்தையே குறிக்கோளாக கொண்ட தனியார் மின்நிலையங்கள் தான் உற்பத்தியை குறைத்துக்கொண்டன.இப்பொழுது இந்தியாவின் மின்வழங்கலுக்கும் தேவைக்கும் ஆன சதவீதம் 2.1 சதவீதம் மட்டுமே ஆகும்.
ஆனால் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் மின்சாரம் என்பது ஒரு நாளைக்கு 4 முதல் 7 மணிநேரம் கிடைப்பதில்லை. 
தில்லிக்கு அருகில் உள்ள உத்தரப்பிரதேசத்தில் மின்சார பற்றாக்குறை அதிகமாக உள்ளது.இந்தியாவில் மின்சாரம் தேவைப்படுவோர் இருந்தாலும் மின்உற்பத்தி நிறுத்தம் செய்யப்படுகின்றது.
இது ஒரு வகையான தேக்கமே ஆகும். பிரிக்ஸ் நாடுகளிலேயே இந்தியாவில் மின்நுகர்வு குறைவாக இருந்தாலும் முரண்பாடான நிலை உள்ளது. 
ஆனால் தற்போது இந்தியா மிகை மின் நாடாக மாறிவிட்டது.கொல்கத்தாவில் மின்விளக்கை 1879 இல் அறிமுகப்படுத்திய பிலிப்ஸ் கம்பெனி முதன் முதலில் இந்தியாவிற்கு மின்சாரத்தை கொண்டுவந்தது. வளர்ச்சியில் தேவை இருந்தும் இந்தியாவில் மின்உற்பத்தி அதிகமாக உள்ளதுபோல் ஒரு தோற்றம். இந்தியாவின் 137 ஆண்டு வரலாற்றில் ஒரு சாதனை.
தமிழகத்தில் மின்தேவையை சமாளிக்க வெளியிலிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கி மிகை மின்மாநிலம் ஆகிவிட்டது என்று தமிழக அரசு விளம்பரப்படுத்துகின்றது.
இந்தியாவில் தேவைகள் இருந்தாலும் தொழில் வளர்ச்சிக்கு உண்டான மின்சாரம்போதுமான உற்பத்தி இல்லை.மின்சாரம் இல்லாமல் வெற்று விளம்பரங்கள் மூலம் தொழிற்சாலைகளை கொண்டுவரமுடியாது.ஒரு கோடிப்பேர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியாது.
இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் மின்சாரத்தை பயன்படுத்தும் அளவிற்கு மின்சாரக்கொள்கையை உருவாக்கவேண்டும்.தற்போது இருக்கும் மின்கொள்கை முதலாளிகளின் லாபத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டது.
கிராமங்களை புறக்கணிக்கக் கூடியது.
மத்திய அரசு உதய்திட்டத்தை கொண்டு வருவது கூட முதலாளிகளின் நலன் காக்கத்தான்.
மக்களின் நலன் காக்க அல்ல.
                                                                                                                                -கே.விஜயன்,
========================================================================================================================================

ன்று,
செப்டம்பர்-24.
  • கம்போடியா அரசியலமைப்பு தினம்
  • முகமது நபி, மெக்காவில் இருந்து மதினாவிற்கு இடம்பெயர்ந்தார்(622)
  • இலங்கை வங்கி அமைக்கப்பட்டது(1840)

==========================================================================================

கார்ப்பரேட் கொலைக் கரங்களில் மருத்துவக் கல்வி?

                                                                                                                                                                                                       -சேது
கடந்த ஆகஸ்ட்டில் பாஜக அரசுநியமித்த மத்திய திட்ட அமைப்பான நிதி அயோக் இந்திய மருத்துவச் சட்டம் 1956 ஐ திருத்திடுவதற்கான தொடக்க நிலை அறிக்கை ஒன்றை முன் வைத்தது. 
அந்த அறிக்கையில் இந்திய மருத்துவக் கவுன்சிலை மாற்றப்போவதாக கூறப்பட்டிருந்தது. இறுதிசெய்யப்படாத நிலையிலேயே அந்த தொடக்கநிலை அறிக்கையானது பொது மக்களின் பார்வைக்கும் சுற்றுக்கும் விடப்பட்டது.நிதி ஆயோக்கின் அறிக்கை மோடி அரசின்இந்த விபரீதமான முடிவை முன் வைத்துள்ளது அனைவருக்கும் கடும் அதிர்ச்சி அளித்துள்ளது.
ஏற்கனவே சுகாதாரம் மற்றும் குடும்பநலம் குறித்து ஆய்வு செய்து நாடாளுமன்ற நிலைக்குழு அளித்த அறிக்கையில் மருத்துவக் கல்வி மற்றும் இந்திய மருத்துவத்தின் தரம் சீரழிந்து போனதற்கு காரணம் தனியார்களும் கார்ப்பரேட்டுகளும் நுழைந்ததுதான் என்று கடுமையாக எண்ணற்ற மறுக்கமுடியாத ஆதரங்களுடன் அம்பலப்படுத்தியிருந்தது. இந்த பின்னணியில்தான் நிதிஆயோக்கின் அயோக்கியதனமான அறிக்கையை பார்க்க வேண்டும். 
கார்ப்பரேட் கொலைகாரர்களால்தான் மருத்துவக் கல்வி சீரழிந்துபோனது என்று அறியப்பட்டிருந்தும் பிரச்சனைக்குத் தீர்வாக அதே கார்ப்பரேட் கொலைகாரர்களின் கரங்களில் மருத்துவக் கல்வியை ஒப்படைப்பதை முன் வைத்துள்ளது . 
இந்தவிபரீதமான மற்றும் அபாயகரமான அறிக்கையை முழுமையாகப் புரிந்து கொள்ள மருத்துவக் கல்வியில் எப்படி தனியார்கள் படிப்படியாக நுழைந்தனர் என்ற வரலாறையும் இன்றைய நிலையையும் புரிந்து கொள்ள வேண்டும்.

1980கள் வரை இந்தியாவில் மொத்தம் 112 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன.
 அவற்றில் 100 அரசு மருத்துவக் கல்லூரிகள் மொத்தம் 12 தனியார் கல்லூரிகள்தான் இருந்தன. 90 விழுக்காடு இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளின் வசம் இருந்தன. அன்றைக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளை நடத்தியவர்கள் உண்மையான தொண்டு நிறுவனங்கள், கிருத்துவ மிஷினரிகள் மற்றும் மருத்துவத்தை தொண்டாக பாவித்த அறக்கட்டளைகள்.1980 வரை மருத்துவம் என்பது லாபம் தரும் தொழிலாகக் கருதப்படவில்லை. 
தற்போதைய நிலைமை எப்படி ஏற்பட்டது? 
எப்படி புற்று நோயாக தனியார்கள் உருவெடுத்தனர்?
தற்போது இந்தியாவில் மொத்தம் உள்ள 426 மருத்துவக் கல்லூரிகளில் 221 மருத்துவக் கல்லூரிகளை தனியார்கள் நடத்துகின்றன. 
1980களில் எம்பிபிஎஸ் எனப்படும் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் 18,340ஆக இருந்தன. தற்போது அவை 53,330 ஆக அதிகரித்துள்ளன. 
இவற்றில் பாதியளவில், 24,690 இடங்களை தனியார் கரங்களில் வைத்துள்ளன. இவ்வாறு 1980லிருந்து 2016 வரைஅரசு மருத்துவக் கல்லூரிகளில் 16,570 இடங்களிலிருந்து 27,490 இடங்களாக அதிகரித்துள்ளன. (66விழுக்காடு அதிகமாகியுள்ளது) அதே சமயத்தில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 1970 லிருந்து 24,690 ஆக அதிகரித்துள்ளது. (14 விழுக்காடு அதிகரிப்பு ). இந்தவிபரங்கள் கடந்த 2001லிருந்து 2010 வரைதான் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மிக அதிகமாக அதிகரித்துள்ளதை காட்டுகிறது.
2010திற்கு பின்னர் தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிகரிப்பதில் சற்று குறைந்து மிதமான எண்ணிக்கையில் உருவாகத் தொடங்கின. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்வியும் அதிலிருந்து உருவான மருத்துவர்களின் சிகிச்சையும் தரமானதாக இல்லை என்று பரவலாக குற்றச்சாட்டு எழுந்ததே இதற்கு காரணம். 
கார்ப்பரேட் மற்றும் தனியார்மருத்துவமனைகளில் கிட்னி, கண்கள் மற்றும் உடல் உறுப்புகள் திருட்டும்; அதுமிகப்பெரிய மாபியா கும்பலினால் சர்வதேசஅளவில் சந்தையாக்கப்படுவதும் ஊடகங்களில் பரவலாக இடம் பெற்றன. இதுகுறித்து மத்திய அரசு பல சட்டங்களை இயற்றியது.இருப்பினும் இன்று வரை உறுப்புத் திருட்டையோ அவை சந்தையில் விற்கப்படுவதையோ தடுக்க முடியவில்லை. 
இதற்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கையிலிருந்தே முறைகேடுகள் மிக அதிகமான நன்கொடை மற்றும் அனைத்துவிதமான ஊழல்கள் என தொடங்குவது எந்த அறநெறியும் ஒழுக்கங்களும் இல்லாத, சேவை நோக்கமில்லாத லாபத்தை மட்டுமே மையமான நோக்கமாகக்கொண்ட மருத்துவர்களை உற்பத்தி செய்வதில் முடிகிறது. 
ரூ.50 லட்சங்களிலிருந்து 1 கோடி வரை விலை கொடுத்து மருத்துவக் கல்லூரியில் இடம் பிடிக்கும் ஒரு மேட்டுக்குடி மாணவருக்கு சேவை செய்யும் மனநிலை வருவதற்கு வாய்ப்பே இல்லை . 
போட்ட முதலை திருப்பி எடுக்கும் லாபம் கொழிக்கும் உயிர்க் கொல்லி தொழிலாகவே மாறி வருவதும் இதனால்தான்.

இந்த முறைகேடுகள் குறித்து ராய்ட்டர் என்ற செய்தி நிறுவனம் 2015ல் மேற்கொண்ட புலனாய்வு அறிக்கையே தற்போதைய தனியார் மருத்துவக் கல்வியின் நிலையை படம் பிடித்துக் காட்டுகிறது.
அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:இந்தியாவிலுள்ள 6 மருத்துவக் கல்லூரிகளில் 1 மருத்துவக் கல்லூரி மீது அரசின் ஆவணங்களின்படியும் நீதிமன்றங்களிலுள்ள உத்தரவுகளின்படியும் பல குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளன. 
இந்தியாவிலுள்ள மருத்துவக் கம்பெனிகள் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தகுதி பெற்ற மருத்துவர்களை அனுப்பிஅந்த கல்லூரிகளில் பேராசிரியர்கள் போன்றுநடிக்க வைக்கின்றனர். அந்த தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இந்திய மருத்துவக் கவுன்சில் மேற்பார்வையிட வரும்போதெல்லாம் இந்த மோசடி நடத்தி அவர்கள் தப்பித்துக் கொள்கின்றனர். 
அதேபோன்று அந்த தனியார் மருத்துவக் கல்லூரிகள் நடத்தும் மருத்துவமனைகளில் ஏராளமான நோயாளிகள் இருப்பது போன்றும் அவர்களிடையே அந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பயிற்சி பெறுவது, அனுபவம் பெறுவது போன்றும் அவ்வப்போது ஆரோக்கியமான நபர்களை பிடித்து வந்து நோயாளிகளாக நடிக்க வைக்கின்றனர். இது தொடர்ந்து நடைபெறும் மோசடிகளாக உள்ளன.

கடந்த 2010லிருந்து 2015 வரை குறைந்தது 69 மருத்துவக் கல்லூரிகள் மீது நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகள் மற்றும் மாணவர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அவர்களை அனுமதித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 
இது போன்ற குற்றச்சாட்டுகள்தனியார் மருத்துவக் கல்லூரிகளை மூடுவதற்குப் போதுமான காரணங்களாகும். ஆனால் இந்திய மருத்துவக் கவுன்சிலை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து இந்த முறைகேடுகளை வெளி வராமல் சரிக் கட்டிவிடுவதால் இந்த கல்லூரிகள் எந்த இடையூறுமின்றி தொடர்ந்து நடைபெறுகின்றன. 
இவ்வளவு முறைகேடுகளை தனியார் மருத்துவக் கல்லூரிகள் புரிந்திருந்தாலும் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ சிகிச்சையின் தரம் சீரழிந்து போயிருந்தாலும் மீண்டும் அவர்களிடமே மருத்துவக் கல்வியை ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக அரசின்நிதி அயோக்கின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
நிதி ஆயோக்கின் பரிந்துரையில். தற்போதைய நிலையில் லாப நோக்கில் அல்லாத கல்லூரிகளை மட்டுமே அனுமதிக்கும் நடைமுறை உள்ளது. 
ஆனால், இந்த நடைமுறை இருந்தும் லாப நோக்கிலான தனியார் கல்லூரிகள் சட்டவிரோதமான முறையில் அனுமதி பெறுவதையோ அல்லதுசெயல்படுவதையோ தடுக்க முடியவில்லையாம். அதனால் கூடுதலான மருத்துவக் கல்லூரிகளை திறந்திட அவற்றை அனுமதிப்பதில் தவறில்லையாம் . 
எனவே கார்ப்பரேட்களுக்கு மருத்துவக் கல்வியை தடை செய்வதில் எந்த பயனும் இல்லையாம். இப்படி சுற்றி வளைத்து கார்ப்பரேட்டுகளிடம் மருத்துவக் கல்வி தாரை வார்க்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் உள்ள பொது வளங்களான நீர் விவசாய நிலங்கள் தொடங்கி சேவைத்துறைகளான வங்கி, கல்வி, தொலைத்தொடர்பு துறை உள்ளிட்ட அனைத்தையும் லாப நோக்கத்திற்காக மட்டும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பது தாராளவாதக் கொள்கைகளின் தாரக மந்திரமாகும். 
இதில் நிதி ஆயோக்கின் அறிக்கையால் உயிர்காக்கும் மருத்துவக் கல்வியும் பறி போக உள்ளது. உலகம் முழுவதும் உள்ளகார்ப்பரேட் மருத்துவமனைகள் பெரு முதலாளிகளினால் நடத்தப்படும் மருத்துவமனைகளுக்கு வாருங்கள். 
மருத்துவக் கல்லூரிகளில் முதலீடு செய்யுங்கள். 
சந்தையில் மருத்துவக் கல்வியின் மூலம் லாபத்தை அள்ளுங்கள் என்று பகிரங்கமான அழைப்பு விடுக்கிறது.
என்ன செய்யப் போகிறோம்?
(தகவல் ஆதாரம் : ஆகஸ்ட் 29 தேதியிட்ட பீப்பிள்ஸ் டெமாக்கிரசியில் சென் குப்தா எழுதிய கட்டுரை)