செவ்வாய், 29 நவம்பர், 2016

மோடியை நம்பும் அப்பாவிகள் கவனிக்க...

1000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற முடிவினை யாருக்கும் தெரிவிக்காமல் மிக ரகசியமாய் பிரதமர் மோடி எடுத்ததாகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு கூட தெரிவிக்காமல் முடிவெடுத்ததாகவும் அவரின் ஆதரவாளர்கள் புளங்காகிதம் அடைகிறார்கள்.

அறிவிப்பு வெளியிடுவதற்கு முதல் நாள் பாரதிய ஜனதா கட்சி தனது பணத்தை கத்தை கத்தையாக வங்கிக்கு சென்று செலுத்தியது, அறிவிப்பு வெளியிடுவதற்கு முதல் வாரம் மோடியின் கட்சியினர் நிலங்களாக வாங்கி குவித்தது, அம்பானிக்கும், அதானிக்கும் அரசின் முடிவு தெரியும் என அக்கட்சி எம்.எல்.ஏ ஒருவரே கூறியது சமூக வலைத்தளங்களில் மிகவும் அழுத்தமாக உலவியது.
இப்படி அடுக்கடுக்கான ஆதாரங்கள் இருந்தாலும், இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மையல்ல; மோடி மீதான அவதூறு தான் இது… என்று நம்புகிற அப்பாவிகள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அரசு வெளியிட்ட நிர்வாக ஆணையே, அரசின் இம்முடிவு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதை நமக்கு உணர்த்துகிறது.
நவம்பர் 8ம் தேதி வெளியிடப்பட்ட அரசின் அறிவிப்பு பின்வருமாறு தொடங்குகிறது:
‘‘Whereas, the Central Board of Directors of the Reserve Bank of India (hereinafter referred to as the Board) has recommended that bank notes of denominations of the existing series of the value of five hundred rupees and one thousand rupees (hereinafter referred to as specified bank notes)
- அதாவது ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழுமத்தின் பரிந்துரையின் பேரில்... என்று அந்த அறிவிப்பு தொடங்குகிறது... 

இந்த அறிவிப்பு சொல்கிற முக்கியமான விஷயம் என்னவென்றால் 1. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934 பிரிவு 26(2) ன் படி இயக்குநர்கள் குழுமம், மைய அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்யலாம்; அந்த முடிவினை மைய அரசாங்கம் செயல்படுத்தலாம். 2. எனவே இந்திய ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழுமத்தின் பரிந்துரையான 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அரசு அறிவிக்கிறது.

இந்த நடைமுறை சரியானது தான். 
அதில் தவறு ஒன்றும் இல்லை. 

ஆனால், இயக்குநர்கள் குழுமத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? 
யார் யார் இருக்கிறார்கள்? என்பதுதான் முக்கியம். 
ரிசர்வ் வங்கி சட்டப்பிரிவு 8ன் கீழ் இயக்குநர்கள் குழு அமைக்கப்படுகிறது. 
 இப்பிரிவின் படி 21 நபர்களை கொண்டது தான் ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழுமம். 
இந்த 21 பேரில் 4 நபர்கள் தனியார் துறையை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்கிறது அந்த சட்டப்பிரிவு. 
4 நபர்கள் யார்? 
என்று இயக்குநர்கள் பட்டியலை ஆராயும் பொழுது நமக்கு பெருத்த ஆச்சரியம்.

1. டாக்டர்.நாச்சிகேட்.எம்.மோர் – இவர் 1987 முதல் 2007 வரை ஐ.சி.ஐ.சி.ஐ யில் நிர்வாக இயக்குநராக இருந்துள்ளார். 2007 முதல் 2011 வரை ஐசிஐசிஐ பவுண்டேசனின் நிறுவன தலைவராக பணியாற்றியுள்ளார். விப்ரோ, கேர் உள்ளிட்ட நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார். தற்பொழுது பில்கேட்ஸ் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசனின் இந்திய இயக்குநராக இருக்கிறார்.

2. நடராஜன் சந்திரசேகரன் – டாடா கன்சல்டன்சியின் சி.இ.ஒ.வாகவும் நிர்வாக இயக்குநராகவும் இருந்து வருகிறார். NASSCOMன் தலைவராக பணியாற்றி யுள்ளார். இந்திய – அமெரிக்க சி.இ.ஒ அமைப்பின் உறுப்பினர். சர்வதேச சாப்ட்வேர் மற்றும் வர்த்தகத் துறையில் 28 வருட அனுபவம் உள்ளவர்.

3. பாரத் நோரோடம் டோஷி – மஹிந்த்ரா & மஹிந்த்ரா குழுமத்தின் நிர்வாக இயக்குநராக, தலைவராக பணியாற்றியுள்ளார். மும்பை சேம்பர் ஆப் காமர்ஸ்சின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

கார்ப்பரேட்டுகளோடு ஒட்டி உறவாடும் இந்த இயக்குநர்களும், மோடியும் மட்டும் சேர்ந்து யாருக்கும் சொல்லாமல் பரம ரகசியமாய் முடிவினை எடுத்துள் ளார்கள்.

அதுவும் 130 கோடி மக்களுக்காக, தேசத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே!

                                                                                                                                - அ.கோவிந்தராஜன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------

 தேசபக்தர்’களின் கவனத்துக்கு...இன்று எனக்கு விடுப்பு என்பதால் இன்று ஒருநாள் Cashless transaction ஐ (பணமில்லா பரிமாற்றம்) முயன்று பார்க்கலாம் என முடிவு செய்தேன்.தெருவில் அறுபது வயது மதிக்கத்தக்க பெண்மணிகாலையிலேயே கீரைக்கட்டுகளை சுமந்து வந்த குரல்கேட்டதும் கீரை வாங்கலாம் என முடிவெடுத்தேன். கூப்பிட்டு விலை கேட்டதும் ஒரு கட்டு பத்து ரூபாய் என்றார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரிடம் Card swiping machine (கிரடிட் கார்டு மூலம் பணத்தை தனது கணக்கில் வரவு வைத்துக் கொள்ளும் இயந்திரம்) இல்லை. Pay tm வசதியை கூடவே வைத்திருக்கவேண்டும் என்ற பொருளாதார அறிவு இல்லை. 
எனவே அவரை அனுப்பிவிட்டேன்.அதே கீரை பக்கத்து தெருவில் உள்ள Reliance fresh (ரிலையன்ஸ் பிரெஷ்) கடையில் உள்ளது. பாட்டி கொண்டு வந்த அளவுக்கு Fresh ஆக (புத்தம் புதிதாக) இல்லாவிடிலும் ஓரளவுக்கு சுமாராகவே இருந்தது. ஒரு கட்டு 20 ரூபாய் என்றனர். அவர்களிடம் Card payment (கிரடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி) வசதி இருந்தது.

ஆனால் 20 ரூபாய்க்கு Card தேய்க்கமாட்டோம். குறைந்தது 200 ரூபாய்க்கு வாங்கினால் தான் ஊயசன வாங்குவோம் என்றனர். இது என்னடா சோதனை என்று அங்கிருந்து திரும்பினேன்.வரும் வழியில் டீ குடிக்கலாம் என்றால், டீக்கடைக்காரரிடமும் ஊயசன வசதி இல்லை.
மணி 9 ஆனதும் ஒரு பெண்மணி நடத்தும் இட்லி கடைக்கு சென்றேன். ஐந்து இட்லி ஒரு வடை 30 ரூபாய் என்றார்.
ஆனால் அவரிடமும் Card வசதி இல்லை.Doveton Cafe என்றொரு பெரிய ஓட்டல் உள்ளது. அவர்களிடம் சென்றால் நீங்கள் குறைந்தது 150 ரூபாய்க்குசாப்பிட்டால் தான் Card வாங்குவோம் என்றனர்.சரி தோசை மாவு வாங்கி வீட்டுக்கு போய் தோசை சுடலாம் என்று அந்த கடைக்கு போனால் மாவு பாக்கெட்15 ரூபாய் தான்.

ஆனால் அவரிடம் Card வசதி இல்லை.ஒரு மணி நேரமாக வெயிலில் நடந்து சென்றது களைப்பாக இருந்ததால் ஒரு பெட்டி கடையில் பன்னீர் சோடா குடிக்கலாம் என்று போனால் அவரிடமும் Card வசதி இல்லை.மிகுந்த பசி தான். 
இருந்தாலும் எல்லையில் ராணுவ வீரர்கள் கஷ்டப்படும்போது ஒரு நாள் சாப்பிடாவிட்டால் என்ன, அதுவுமில்லாமல் பிரதமரே சாப்பிடாமல் தான் இருக்கிறாராம்.
நாம் சாப்பிடலாமா என்று மனதில் நினைத்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.வீட்டுக்கு வந்ததும் என் மகள் பிஸ்கெட் வேண்டுமென கேட்டாள். அவளை கடைக்கு கூட்டிப்போய் என்னிட முள்ள 50 ரூபாய்த் தாளை கொடுத்து என் Cashless சங்கல்பத்தை முடித்துக்கொண்டேன்..!
முழுதாக மூன்று மணி நேரம் கூட என்னால் என் விரதத்தை காப்பாற்ற முடியவில்லை. எனது சங்கல்பம் முக்கியமானது தான். 
ஆனால் எல்லாவற்றையும் விட என் குழந்தை எனக்கு முக்கியமானவள்..!

                                                                                                                                      - குறிஞ்சி நாதன்
------------------------------------------------------------------------------------------------------------------------
மோடி கி ஆப்பு சர்க்கார்

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஆப்புகள்

மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பிற்குப் பிறகு பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக பொது மக்கள் வங்கிகளில் நீண்ட வரிசையில் நாள் கணக்காக நின்று சிரமப்படுவதாகவும் உயிரிழப்பதாகவும் மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. ஆகவே இதை உரிய முறையில் பரிசீலித்த மத்திய அமைச்சரவை, பொது மக்களின் சிரமங்களை போக்குவதற்காக போர்க்கால நடவடிக்கையில் புதிய ‘ஆப்புகளை’, ‘ஆண்ட்ராய்ட் செயலிகளை’ உருவாக்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. அதனை அறிமுகப்படுத்தி பிரதமர் மூடி உணர்ச்சிகரமாக பேசினார்,
ஆப்பு கி கியூ நகி கே

வங்கிகளில், ஏடிஎம்களில் நாள் கணக்காக நீண்ட வரிசையில் நின்று பணம் இல்லையென திரும்பி வருவதை தவிர்க்கவே இந்த ஆப்பு.. இந்த ஆப்பில் உங்கள் பெயர், வங்கி/ஏடிஎம், வங்கிக் கணக்கு, எடுக்க வேண்டிய தொகை ஆகியவற்றை பதிவு செய்தால் சில நிமிடங்களில் நீங்கள் எந்த தேதியில் எந்த நேரத்தில் வங்கி/ஏடிஎம்க்கு சென்று பணம் பெறலாம் என்ற தகவல் வரும். அந்த குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் சென்று பணம் எடுத்துக்கொள்ளலாம். வரிசையில் நின்று செத்து சுண்ணாம்பாக வேண்டியதில்லை.
இந்த ஆப்பு பொதுமக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது. நாட்டில் 93 சதவீத மக்கள் இதன் மூலம் பயன் பெற்று வருகிறார்கள். இது பற்றி ஏர்வாடி ஏகாம்பரம் நமது செய்தியாளரிடம் கூறுகையில், ஆமாம் சார், இந்த ஆப்பில் நான் 5000 ரூபாய் எடுப்பதற்காக பதிவு செய்தேன். எனக்கு உடனே வங்கியில் இருந்து 5 வருடம், 5 மாதங்கள், 5 மணி நேரம் கழித்து வங்கியில் வந்து பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று தகவல் வந்தது. இப்ப நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன். 5 வருசம் லைனில் நிக்க வேண்டிய அவசியம் இல்ல பாருங்க’’ என்றார்.

ஆப்பு கி மரண் கே

மக்களின் உயிர்மீது இந்த அரசிற்கு மிகுந்த அக்கறை உள்ளது. வாரக்கணக்காக வங்கி வரிசையில் நிற்பவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதை அவர் குடும்பத்தார் அறிந்து கொள்ள முடியாமல் பரிதவிக்கிறார்கள்.
எனவே வங்கியில் பணம் எடுக்கச் சென்றவர் நிலைபற்றி எளிதில் அறிந்து கொள்ளவே இந்த ஆப்பு என கண்ணீர் மல்க பிரதமர் இந்த ஆப்பை அறிமுகப்படுத்தினார். இந்த ஆப்பில், வங்கிக்குச் சென்ற உங்கள் உறவினர் புகைப்படத்தை அப்லோடு செய்தால் உடனே அவர் எந்த வங்கி/ஏடிஎம்-ல் இருந்து எத்தனை கிலோமீட்டர் தொலைவில் நிற்கிறார் என்பதை காட்டிக் கொடுக்கும். இறந்திருந் தால் எந்த ஆஸ்பத்திரியின் சவக்கிடங்கில் கிடத்தப்பட்டுள்ளார் என்பதையும் தெரிவிக்கும். இந்த ஆப்பையும் 93 சதவீத பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்தோடு பயன்படுத்தி வருகிறார்கள் எனத் தெரியவருகிறது.
இது பற்றி சேத்துப்பட்டு காத்தமுத்து கூறும் போது, எங்க அப்பாவுக்கு 73 வயசுங்க. பேங்குல பணம் எடுக்க 10 நாளைக்கு முன்னாடி போனாருங்க. இன்னும் திரும்பி வரலைங்க. எங்க இருக்காருன்னு எங்களால கண்டுபுடிக்க முடியலைங்க. என் பிரண்டு சொல்லித்தான் இந்த ஆப்புல அப்பா போட்டோ போட்டேனுங்க. உடனே எங்க அப்பா டேஷ் பக்தி வீதியில் இருக்கிற பாரத மாதா பேங்க் முன்னாடி நிக்கற வரிசையில 3456 வது ஆளா நிக்கறாருன்னு காட்டிக்கொடுத்துடுச்சுங்க. இப்ப நாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கோமுங்க’’ என்றார்.

ஆப்பு கி எக்சேஞ்ச் கே

கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்கு போலி புரோக்கர்கள், மோசடிப் பேர்வழிகளை நம்பி அதிகம் கமிஷன் கொடுத்து பொதுமக்கள் ஏமாறுவதாக மத்திய அரசிற்கு புகார்கள் வருவதால் யார் யாரிடம் எந்தெந்த நிறுவனங்களிடம் எவ்வளவு கமிஷன் கொடுத்து கறுப்புப் பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்பது போன்ற தகவல்களை பொதுமக்கள் எளிதில் தெரிந்து கொள்வதற்காகவே இந்த ஆப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் சைருண் ஜெட்லி தெரிவித்தார்.
இந்த ஆப்பை பயன்படுத்தி கோயம்புத்தூர் பஜனைலால் சேட்டிடம் 35 சதவீதம் கமிஷன் கொடுத்து பொண்ணு கல்யாணத்திற்காக வைத்திருந்த 10 லட்சம் ரூபாயை வெள்ளையாக்கிக் கொண்டதாக வெள்ளானப்பட்டை வெள்ளைச்சாமி தெரிவித்தார். இதனால் தங்கள் குடும்பமே டேஷ்பக்தி குடும்பமாக மாறிவிட்டதாக பெருமையாக பேசினார். இதுபோல பல ஆப்புகள் மத்திய அரசின் கைவசம் உள்ளதாகவும் தக்க நேரத்தில் பொதுமக்களிடம் சொருகப்படும் என்றும் மத்திய அமைச்சர் வெங்காய பாயுடு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

                                                                                                                                             - மு.ஆனந்தன்
======================================================================================