பிடல் காஸ்ட்ரோ
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராளியும், புரட்சியாளருமான சே குவேராவின் உயிர்த் தோழர், க்யூபப் புரட்சியாளர் ஃபிடெல் காஸ்ட்ரோ ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி 1926ம் ஆண்டு கியூபாவில் ஒரு செல்வ செழிப்பான விவசாய தந்தைக்கு பிறந்தவர்தான் பிடல் காஸ்ட்ரோ. இவர் என்ன தான் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கியூப மக்களின் அடிமை நிலையை கண்டு தனது வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு கியூபாவின் மக்களுக்காக அமெரிக்கா என்னும் மிகப்பெரிய ஏகாதிபத்திய நாட்டை எதிர்த்து போராட ஆரம்பித்தார்.
அமெரிக்கா, அதுவென்ன அவ்வளவு சாதாரண வார்த்தையா? உலகில் உள்ள பெருமுதலாளிகள் அனைவருக்கும் ஒரு மந்திரச் சொல்லாக இருப்பது தான் அமெரிக்கா. இருபதாம் நூற்றாண்டின் வல்லரசு நாடாக திகழ்ந்த அமெரிக்கா உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடிவு செய்தது. ஆனால் கியூபாவில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியவில்லை. அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்தான் பிடல் காஸ்ட்ரோ.
அமெரிக்காவும் பிடல் காஸ்ட்ரோவும்:
அமெரிக்கா தனது ஏகாதிபத்திய கொள்கையின் மூலம் கியூபாவிலும் அதனுடைய கொடியை நாட்டியிருந்தது. ஆனால் அமெரிக்காவால் அங்கு நெடுங்காலம் நிலைத்து நிற்கமுடியவில்லை. அமெரிக்காவின் பல பெரு முதலாளிகள் கியூபாவில் கால்பதித்து கியூபா நாட்டு அரசின் துணையுடன் அங்கு தொழில் செய்து கியூபா நாட்டு மக்களையும் அதன் செல்வத்தையும் சுரண்டிக்கொண்டிருந்தனர்.
இதனைக் கண்டு கொதித்தெழுந்த பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசிற்கு எதிராக போராட்டத்தில் குதித்தார். அவர் தனது போராட்டத்தை முன்னெடுத்து செல்ல தேர்ந்தெடுத்த கொள்கைதான் கம்யூனிசம். பிடல் காஸ்ட்ரோ கல்லூரி படிக்கும்பொழுதே கம்யூனிச கட்சியில் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றார்.
அவரது தொடர் போராட்டத்தின் விளைவாக 1959ம் ஆண்டு புல்ஜென்சியோ பாட்டிட்ஸ்டாவின் ஆட்சியை வீழ்த்தி தலைமை அமைச்சராக பொறுப்பேற்றார். 1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும் 1976 முதல் 2008ம் ஆண்டு வரை கியூபாவின் ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.
இவர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் நேரடி மோதல்கள் வெடித்தது. முதலில் காஸ்ட்ரோவை அமெரிக்கா தனது பக்கம் இழுக்க நினைத்து திட்டங்களை தீட்டியது. ஆனால் அதனுடைய திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. கியூபாவின் வளங்கள் அனைத்தும் கியூபா மக்களுக்கே சொந்தம் என காஸ்ட்ரோ அறிவித்தார். மேலும் கியூபாவில் உள்ள தொழிற்சாலைகள் அனைத்தையும் பொதுவுடைமையாக அறிவித்தார் காஸ்ட்ரோ அதனால் கடும் கோபம் கொண்ட அமெரிக்கா கியூபாவின் மீது பொருளாதார தடை விதித்தது.
26,ஜனவரி1959 டைம் இதழ் அட்டையில் காஸ்ட்ரோ |
இதனால் அமெரிக்க நிறுவனக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டன. எனவே காஸ்ட்ரோவை கொலை செய்ய அமெரிக்காவின் சிஐஏ அமைப்பு தீவிரமாக செயல்பட்டது. ஒருமுறை இரண்டு முறை அல்ல மொத்தம் 638 முறை பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய திட்டமிட்டு அமெரிக்கா தோல்வியை தழுவியது.
பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய அமெரிக்கா சதி திட்டம் தீட்டியதை பிரிடிஷ் ஊடகமான Channel 4 ஆவணப்படமாக வெளியிட்டது. அந்த ஆவணப்படத்திற்கு “பிடல் காஸ்ட்ரோவை கொல்ல 638 வழிகள்” என்ற தலைப்பையே வைத்தது. அதில் முக்கியமானவை, பிடல் காஸ்ட்ரோவுக்கு விஷம் கொடுப்பது, ரசாயனம் தெளிப்பது, குண்டு போடுவது, துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, சுருட்டில் விஷம் தடவுவது, விபத்து ஏற்படுத்துவது, விஷ மாத்திரை கொடுப்பது என பல முயற்சிகளை மேற்கொண்டது. பிடல் காஸ்ட்ரோவை கியூபாவில் உள்ள மாஃபியா கும்பலை வைத்து கொல்ல அமெரிக்கா முடிவு செய்தது. ஆனால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
( இந்த திட்டங்கள் குறித்த செய்திகள் எல்லாம் சிஐஏ வின் தணிக்கை பிரிவில் இடம்பெற்றுள்ளது. )
பிடல் காஸ்ட்ரோவை கொல்ல மேற்கொண்ட சூழ்ச்சிகள்:
இந்த ஆவணங்களின்படி, காஸ்ட்ரோவைக் கொலை செய்ய வேண்டும் என்பது சி.ஐ.ஏ.வின் நோக்கமாக முதலில் இருக்கவில்லை. மக்களிடம் அவருக்குள்ள நற்பெயரைக் களங்கப்படுத்தும் முயற்சியே முதலில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
உதாரணமாக தாடிக்காரர், விலங்குகளின் முடியைத் தாடியாகக் கொண்டவர் என்பது மாதிரியான கேலி வார்த்தைகளை அதிகமாகக் கசிய விட்டிருக்கிறார்கள். 1960ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் வரை குறிப்பாக அந்த ஆண்டின் பிற்பகுதியில் காஸ்ட்ரோவின் பேச்சுக்களைத் திரிக்கும் வேலையில் சி.ஐ.ஏ. இறங்கியிருக்கிறது.
தனது திட்டங்களையும், செயலையும் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த அவ்வப்போது ரேடியோவில் காஸ்ட்ரோ உரையாற்றுவார். அப்போது அவர் பேசும் மைக்கில் ரசாயன பவுடரைத் தெளிக்கலாமா என்று யோசித்ததாக உயரதிகாரிக்கு அனுப்பிய செய்திக் குறிப்பில் ஒரு சி.ஐ.ஏ. அதிகாரி குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அது யோசனையுடன் நின்றுவிட்டது.
அதேபோல் உரை நிகழ்த்துவதற்கு முன் சுருட்டுப் பிடிப்பது காஸ்ட்ரோவின் வழக்கம். அப்போது அவருக்கு விஷ சுருட்டு கொடுக்கலாமா என்றும் முயற்சி செய்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் உச்சமாக காஸ்ட்ரோ அணியும் சூவுக்குள் நச்சு ரசாயனத்தைத் தெளிக்கலாமா என ஒரு சி.ஐ.ஏ. ஏஜென்ட் யோசித்திருக்கிறார். குறிப்பாக வெளிநாடுகளுக்கு காஸ்ட்ரோ சுற்றுப்பயணம் செய்யும்போது, ஹோட்டல் சிப்பந்தி மூலம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முயற்சி நடந்துள்ளது. ஆனால், இதுவும் நிறைவேறவில்லை.
இதன் தொடர்ச்சியாக விபத்து மூலமாக கியூபாவில் உள்ள முக்கியமான மூன்று தலைவர்களை அழிக்க முடியுமா என 1960களில் சி.ஐ.ஏ. முயற்சி செய்துள்ளது. முன்னோட்டமாக காஸ்ட்ரோவை கொல்ல திட்டம் வகுக்கப்பட்டது. கடன் தொல்லையால் அவதிப்பட்ட ஒரு கியூப குடிமகனை இந்தத் திட்டத்துக்கு தேர்ந்தெடுத்தார்கள். பல கட்ட மூளைச்சலவைக்குப் பின் குடும்பச் சூழ்நிலைக்காக கார் மூலம் விபத்து ஏற்படுத்த அந்த கியூபன் ஒப்புக் கொண்டான். ஆனால், இந்தத் திட்டம் செயல் வடிவம் பெறவில்லை.
காஸ்ட்ரோ-சே குவெரா. |
இதுதவிர, காஸ்ட்ரோவுக்கு விஷ மாத்திரை கொடுக்கலாமா என்றும் கூட சி.ஐ.ஏ. பரிசீலித்திருக்கிறது. ஆனால், இந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. 1963 ஆம் ஆண்டு தொடக்கத்தில் டாஸ்க் போர்ஸ் மூலமாக காஸ்ட்ரோவை அழிக்க முடியுமா என சி.ஐ.ஏ. உயர்மட்ட குழு விவாதித்திருக்கிறது.
இதற்கெல்லாம் முடி சூட்டுவது போல ஒரு முயற்சியை சிஐஏ தீட்டியது, அதுதான் பிடல் காஸ்ட்ரோவின் காதலியை வைத்தே பிடல் காஸ்ட்ரோவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தது. அதற்கு பிடல் காஸ்ட்ரோவின் காதலியும் சம்மதம் தெரிவித்தார். பிடல் காஸ்ட்ரோவுடன் இருக்கும்போது அவரது காதலி பிடல் காஸ்ட்ரோ பயன்படுத்து நறுமணப் பொருளில் பயங்கர நச்சு கலந்த விஷத்தை கலந்து வைத்து அவரை கொலை செய்ய முடிவு செய்தார். தனது காதலியின் சூழ்ச்சியை அறிந்த பிடல் காஸ்ட்ரோ அவரை அழைத்து தனது துப்பாக்கியை அவரிடம் கொடுத்து அவரை சுட சொன்னார். ஆனால் பிடல் காஸ்ட்ரோவின் காதலியோ மனம் உருகி அழுது தன்னால் பிடல் காஸ்ட்ரோவை கொல்ல முடியாது என கூறினார்.
இப்படி பல முறை அமெரிக்காவின் சிஐஏ பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய முயற்சி செய்தாலும் இன்று வரை அவரை யாராலும் ஒன்று செய்ய முடியவில்லை.
அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பிடல் காஸ்ட்ரோ இன்று தனது 90வது வயதில் மறைந்தார். இவர் தனது அதிபர் பதிவியிலிருந்து விலகினாலும் தனது நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் தொடர்ந்து உழைத்துக்கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காஸ்ட்ரோவின் கடைசி உருக்கமான உரை:
கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஃபிடெல் காஸ்ட்ரோவின் சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ ஏற்றுக்கொள்வார் என அந்நாடு இந்த வருடம் ஏப்ரல் 19-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அப்போது பிடெல் காஸ்ட்ரோ நிகழ்த்திய உரையே மக்கள் முன் நிகழ்த்திய கடைசியான உரை.அதில் பிடெல் காஸ்ட்ரோ
“நெருக்கடியான காலகட்டங்களின்போது எந்தவொரு பகுதி மக்களையும் அணிதிரட்டுவதும், அவர்களுக்குத் தலைமையேற்பதும் மிகக் கடுமையான காரியம். ஆனால் அப்படி மக்களை அணிதிரட்டாமல் மாற்றங்கள் சாத்தியமில்லை. நான் ஏன் ஒரு சோசலிஸ்ட் ஆனேன்?. இன்னும் சரியாக கேட்க வேண்டும் என்றால், நான் ஏன் கம்யூனிஸ்ட் ஆனேன்?
ஏழைகளைச் சுரண்டுவதை தங்களது உரிமையாக எடுத்துக் கொண்டவர்களாலும், உழைப்பு, திறமை மற்றும் ஒட்டுமொத்த மனித சக்தியால் உருவாக்கப்படும் அனைத்து பொருட்செல்வத்தையும் முற்றாக அபகரித்துக் கொள்வது தங்களது உரிமையாக எடுத்துக் கொண்டவர்களால் வரலாறு நெடுகிலும் கம்யூனிஸ்ட் என்ற வார்த்தை மிகவும் கீழ்த்தரமானதாக சித்தரிக்கப்பட்டு வந்துள்ளது.
கம்யூனிச சித்தாந்தம் என்பது சிறுமைப்படுத்தப்பட்டு வந்துள்ளது. வரலாறு நெடுகிலும் மனிதர்கள், இந்த இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்ற மனநிலையிலேயே இருந்து வந்திருக்கிறார்கள்.
நாம் அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் நான் எளிமையாகச் சொல்கிறேன். நான் ஏதும் அறியாதவனும் அல்ல, எல்லாம் தெரிந்தவனும் அல்ல; நான் பொருளாதாரம் படித்துக் கொண்டிருந்த போது நானாகவே எனது சித்தாந்தத்தைப் பெற்றுவிடவில்லை. நான் சட்டம் மற்றும் அரசியல் அறிவியல் மாணவனாக இருந்தபோது தனியாக பாடம் நடத்தும் ஆசிரியரைப் பெற்றிருக்கவில்லை.
பெரும் கடல் போன்ற பாடமான அரசியல் அறிவியலுக்கு ஆசிரியரைப் பெற்றிருக்கவில்லை.
நான் 20 வயது இளைஞனாக இருந்தபோது விளையாட்டிலும், மலையேறுவதிலும் ஆர்வத்துடன் இருந்தேன். அந்த சமயத்தில் மார்க்சியம் - லெனினியம் குறித்து கற்பிக்கவும், படிக்கவும் உதவி செய்வதற்கு எந்த ஆசிரியரும் இல்லை; அந்த சமயத்தில் நான் மார்க்சிய, லெனினியக் கோட்பாடுகளைப் பற்றி லேசாக அறிந்திருந்தேன். அவ்வளவு தான். அதற்கு மேல் அதையும் நான் தெரிந்திருக்கவில்லை.
சோவியத் ஒன்றியத்தின் மீது முழுமையான நம்பிக்கை மட்டுமே என்னை உற்சாகமூட்டியது. மாமேதை லெனினின் பணிகள், சோவியத் புரட்சியின் 70 ஆண்டுகள் கழித்து மீறப்பட்டன. ரஷ்யப்புரட்சியைப் போன்று இன்னொரு புரட்சி நடப்பதற்கு 70 ஆண்டுகாலம் காத்திருக்கத் தேவைப்படாது என்று கருதுகிறேன்.
காலனி ஆதிக்கத்திற்கு எதிராகவும், ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் நடைபெற்ற மிகப்பிரம்மாண்டமான போராட்டத்தின் விளைவாக எழுந்த சோவியத் புரட்சியைப் போன்றதொரு பிரம்மாண்டமான சமூகப் புரட்சியை இந்த மனித குலம் அவசியம் பார்க்க வேண்டியுள்ளது.
இன்றைக்கு பூமியின் தலைக்கு மேலே மிகமிகப்பெரிய ஆபத்து தொங்கிக் கொண்டிருக்கிறது; நவீன ஆயுதங்களின் பேரழிவு சக்தியிடமிருந்து அந்த ஆபத்து வந்துகொண்டிருக்கிறது; அந்த ஆயுதங்கள் இந்த புவிக்கோளத்தின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கக் காத்திருக்கின்றன; புவியின் மீது மனிதகுலம் வாழ்வதை சாத்தியமற்றதாக மாற்றிடக் காத்திருக்கின்றன.
டைனோசர்கள் மறைந்ததைப் போல, இன்றைய உயிரினங்களும் மறைந்துபோகும் ஆபத்து காத்திருக்கிறது. ஒன்று, மிக அறிவார்ந்த வாழ்க்கையின் புதிய வடிவங்கள் எதிர்காலத்தில் உருவாகலாம்; அல்லது சூரியனின் வெப்பம், மெல்ல மெல்ல அதிகரித்து, சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்துக் கோள்களையும் துணைக்கோள்களையும் அது உருக்கி அழித்துவிடலாம். இதை பெருவாரியான விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கிறார்கள்.
அவர்களது கோட்பாடுகளில் சில உண்மையாக இருக்குமானால் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு அதனுடைய வீச்சு புரியாமல் கூட இருக்கலாம் அதை உணர்ந்து, இன்னும் கற்றுக்கொண்டு எதார்த்தத்திற்கு நம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
புவிக்கோளத்தின் உயிரினங்கள், காலவெளியில் இன்னும் நீண்ட காலத்திற்கு உயிர்வாழுமானால், எதிர்காலச் சந்ததியினர், நாம் அறிந்துகொண்டு பங்காற்றியதைவிட இன்னும் அதிகமாக அறிந்துகொண்டு செயலாற்றுவார்கள்.ஆனால், அவர்கள் முதலில் மிகப்பெரிய பிரச்சனை ஒன்றைத் தீர்த்தாக வேண்டும்.
உண்மையில் கோடிக்கணக்கான மனிதர்களுக்கு தேவைப்படுவதைவிட, மிக மிகக் குறைவான குடிநீரும், இயற்கை வளங்களுமே உள்ளது.
இந்நிலையில் தவிர்க்க முடியாத வகையில் துன்ப துயரங்களுக்குள் சிக்கியிருக்கும் மக்களுக்கு - எப்படி உணவளிப்பது என்பதைப் பற்றி அவர்கள் யோசித்தாக வேண்டும். நீங்கள் ஆச்சரியப்படலாம், எனது இந்தப் பேச்சில் அரசியல் எங்கே போனது என்று யோசிக்கலாம். நான் இதையெல்லாம் சொல்வதற்கு வருத்தப்படுகிறேன்;
ஆனால் இன்றைக்கு அரசியல் என்பது நான் கூறிய இந்த வார்த்தைகளில்தான் அடங்கியிருக்கிறது.
மனிதர்கள் மேலும் மேலும் இந்த உண்மைகளைப் பற்றி கவலைப்பட வேண்டும். இன்னும் ஆதாம் - ஏவாள் காலத்திய மூடநம்பிக்கைகளில் ஆழ்ந்து கிடக்கக்கூடாது. எந்தவிதமான தொழில்நுட்பமும் சென்றடையாத, பசியோடு காத்திருக்கும் கோடிக்கணக்கான ஆப்பிரிக்க மக்களுக்கு யார் உணவளிப்பது? மழை இல்லை, அணைகள் இல்லை, நிலத்தடி நீர் இல்லை; முற்றிலும் மணலால் மூடப்பட்ட அந்தப் பிரதேசத்தின் மக்களுக்கு யார் உணவு தருவது?
இந்தப் பிரச்சனைகள் அனைத்திலும் நாம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி, அடித்து நொறுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த அடிப்படை அம்சங்களின் மீது இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை எனக் கருதுகிறேன். விரைவில் எனக்கு 90 வயது ஆகப்போகிறது. 90 வயது குறித்து எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த ஒரு கருத்தும் இல்லை. அதில் பெரிதாக மகிழ்ச்சியடைவதற்கும் ஒன்றும் இல்லை.
நானும் விரைவில் எல்லோரையும் போலவே மரிக்கப்போகிறேன். நாம் எல்லோருமே அந்த நிலையை எட்டுவோம்.
ஆனால் கியூபக் கம்யூனிஸ்ட்டுகளின் சிந்தனைகள் என்றென்றும் ஒரு புவிக்கோளத்தின் அழியாத சின்னமாக மிளிரும்; மனிதகுலத்தின் மாண்புகளைக் காப்பதற்காக அந்தச் சிந்தனைகள் செயலாற்றிக் கொண்டே இருக்கும்.
மனித குலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் பொருட்களையும், கலாச்சாரச் செல்வங்களையும் அது உற்பத்தி செய்துகொண்டே இருக்கும்.அந்த மகத்தான பொன்னுலகத்தைப் பெறுவதற்காக நாம் ஓய்வின்றி போராடுவது அவசியம்.
லத்தீன் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள எனது சகோதரர்களே, கியூப மக்களும், கியூப மக்களின் சிந்தனைகளும் மகத்தான வெற்றி பெறுவது என்பது உறுதி. இத்தகையதொரு மாநாட்டு அரங்கில் நான் உரையாற்றுவது இதுவே கடைசியாக இருக்கலாம். தொடர்ந்து முன்னேறுவோம்; அந்தப் பாதையை மிகச்சரியானதாக இருக்குமாறு செப்பனிடுவோம்; அதற்காக நாம் ஏற்றுக்கொண்ட சித்தாந்தத்தின் மீது அதிகபட்ச விசுவாசத்துடனும் மிக உயர்ந்த ஒன்றுபட்ட சக்தியுடனும் முன்னேறுவோம். நம்முடைய இந்தப் பயணம் எவராலும் தடுக்க முடியாதது.” -என்றார்.
வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் ஃபிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கையில் இருந்து சில முக்கிய துளிகள்.
1926 : கியுபாவின் தென் கிழக்கு மாநிலமான ஓரியண்ட் மாகாணத்தில் பிறப்பு.
1953: பட்டிஸ்டா அரசுக்கு எதிராக நடத்தி தோல்வியில் முடிந்த கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய பிறகு சிறை வைப்பு
1955: பொது மன்னிப்பின் கீழ் சிறையிலிருந்து வி்டுதலை.
1956: செ குவெராவுடன் இணைந்து அரசுக்கு எதிராக கெரில்லாப் போர் தொடக்கம்
1956: செ குவெராவுடன் இணைந்து அரசுக்கு எதிராக கெரில்லாப் போர் தொடக்கம்
1959: பட்டிஸ்டா அரசை தோற்கடித்து, கியுபாவின் பிரதமராகப் பதவியேற்பு
1961: கியுபாவிலிருந்து வெளியேறி நாடுகடந்த நிலையில் இருந்தவர்களால், அமெரிக்க உளவு நிறுவனமான, சி.ஐ.ஏவின் உதவியுடன் நடந்த ‘ பன்றிகள் குடா’ ( Bay of Pigs) ஆக்ரமிப்பு தோற்கடிப்பு.
1962: சோவியத் ஒன்றியத்தின் ஏவுகணைகளை கியுபாவில் நிலைநிறுத்துவதற்கு உடன்பட்டதன் மூலம், அமெரிக்காவுடன் போர் மூள வைத்திருக்கக்கூடிய `கியூபா ஏவுகணை நெருக்கடி`தூண்டப்பட்டது.
1976: கியுபாவின் தேசிய நாடாளுமன்றத்துக்குத் தேர்வு
1992: அமெரிக்காவுடன் கியூபா அகதிகள் தொடர்பில் ஒப்பந்தம் எட்டப்படுகிறது.
2008: கியூப அதிபர் பதவியிலி்ருந்து உடல் நலக் குறைவு காரணமாக காஸ்ட்ரோ பதவி விலகல்.
2016:நவம்பர் 25 பெடல் காஸ்ட்ரோ மறைவு.
2016:நவம்பர் 25 பெடல் காஸ்ட்ரோ மறைவு.
========================================================================================
இன்று,
நவம்பர்-27.
- போலந்து அரசியலைப்பு உருவாக்கப்பட்டது(1815)
- பாரிசில் ஆல்பிரட் நோபல், நோபல் பரிசு திட்டத்தை தெரிவித்தார்(1895)
- ரத்மலானை விமான நிலையத்திற்கு முதலாவது விமானம் மதராசில் இருந்து வந்திறங்கியது(1935)
- கின்னஸ் உலக சாதனை புத்தகத்தை ஆரம்பித்த ரொஸ் மாக்வேர்ட்டர் இறந்த தினம்(1975)
=========================================================================================
யோக்கிய சிகாமணிகள்:-
ரூ. 500 மற்றும் 1000 தடைக்கு முன்பு பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க வினர் தம்மிடம் இருந்த கருப்புப் பணத்தை வைத்து சொத்துக்களை குவித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
இதுகுறித்து செய்தி நிறுவனம் செய்த ஆய்வில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பீகாரின் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான சஞ்சீவ் சவ்ராசியா என்பவர், இது குறித்து கூறுகையில், “இது போன்ற நிலங்கள் எல்லா இடங்களிலும் வாங்கப்பட்டுள்ளது.
பீகாரோடு சேர்த்து பிற இடங்களிலும் வாங்கப்பட்டுள்ளது. இதற்கான பணம் கட்சியில் இருந்து வருகிறது. இந்த இடங்கள் கட்சி அலுவலகங்களை கட்டவும் இன்ன பிற தேவைகளுக்காகவும் வாங்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் நவம்பர் முதல் வாரத்தில் வாங்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.
சவ்ரேசியாவின் கூற்றுப்படி பணம் செல்லாததாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர் பா.ஜ.க தங்களது பணத்தை பல கட்டங்களாக நிலமாக மாற்றியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் 250 சதுர அடியில் இருந்து அரை ஏக்கர் வரையிலான நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன.
இந்த நிலங்களின் மதிப்பு 8 லட்சத்தில் இருந்து 1.16 கோடி வரை உள்ளது என்று கூறப்படுகிறது. இதில் மிகவும் விலை அதிகாமாக ஒரு சதுர அடிக்கு 1,100 ரூபாய் கொடுக்கப்பட்டும் நிலம் வாங்கப்பட்டுள்ளது.
இந்த நிலங்களை வாங்குவதற்கான பணம் ரொக்கமாக கொடுக்கப்பட்டதா அல்லது காசோலை மூலம் கொடுக்கப்பட்டதா என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியதற்கு பல வகைகளில் இந்த பணம் அனுப்பப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது போன்று வாங்கப்பட்ட நிலங்களில் சில பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா வின் பெயரிலும் வாங்கப்பட்டதையும் அந்த செய்தி நிறுவனம் கண்டறிந்துள்ளது
இதற்கிடையே இவ்விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார், இது குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
========================================================================================