இந்திய தேசத்தின் கவனம் திசைதிருப்பப்பட்டுள்ளது?

ரூபாய் நோட்டு பிரச்சனையால் ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் கவனமும் திசைதிருப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றமும் அவ்வப்போது போர் குறித்த கூச்சல்களும் எழுந்து கொண்டிருக்கின்றன. 
மறுபுறம், அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், இந்தியாவை அமெரிக்காவின் மிக மிக நெருங்கிய ராணுவ கூட்டாளி என்ற அந்தஸ்து வழங்கும் விதத்திலான அடுத்தடுத்த ராணுவ உடன்பாடுகள் கையெழுத்தாகியுள்ளன. இந்திய அரசியல் கட்சிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே இதை குறிப்பாக சுட்டிக்காட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 
இந்தியா - பாகிஸ்தான் உறவில் 1999-ல் கார்கில் போரின் போது நிலவிய சூழலிலிருந்து மாறுபட்ட அசாதாரணமான சூழலே சமீப மாதங்களாக நிலவுகிறது.இத்தகைய அசாதாரணமான சூழ்நிலை குறித்து முன்னாள்தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் எழுதியுள்ள நூலில், ‘‘அணு வல்லரசு நாடுகளில் அணு ஆயுத கட்டுப்பாடு அரசியல் தலைமையிடம் மட்டுமே உள்ளது. 
ஆனால் பாகிஸ்தானில் மட்டும் அணு ஆயுத கட்டுப்பாடு ராணுவத்தின் வசம் உள்ளது. 
இது ஆபத்தானது. 
அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தமாட்டோம் என்ற கொள்கையை இந்தியா உறுதியுடன் கடைப்பிடித்து வருகிறது’’ என்றுதெரிவித்துள்ளதோடு, ‘‘இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதலை நடத்த பாகிஸ்தான் சில தந்திரங்களை கையாளக்கூடும். அதற்கு பதிலடியாக இந்தியா நடத்தும் அணு ஆயுத தாக்குதல் எல்லை வரம்புகளைத் தூண்டிய தாக இருக்கும்’’ என்றும் கூறியுள்ளார்.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக பிரண்ட்லைன் (அக்டோபர் 28, 2016) ஏட்டில் வெளிவந்துள்ள செய்தியைப் பார்ப்போம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் புகுந்து நடத்திய துல்லியமானத் தாக்குதலுக்குப் பின்னர் நமது பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரின் பொறுப்பற்ற பேச்சுக்கள் தொடர்ந்தன. பாகிஸ்தான் ஆழ்ந்த மயக்க நிலையில் இருப்பதாகக் கூறியதும், பின்னர் இந்திய ராணுவத்தை அனுமனோடு ஒப்பிட்டு பேசியதும் மிகவும் மட்டரகமான அதே நேரத்தில் பாகிஸ்தானை வம்புக்கிழுக்கும் ஏளனமான கிண்டலுமாகும். 
இங்கே, இப்படியென்றால்... பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியதோ மிகவும் பைத்தியக்காரத்தனமானது. ‘‘எங்கள் மீது இந்தியா போரை திணித்தால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மாட்டோம்’’ என அவர் மிரட்டல் விடுத்தார்’.
இதைக் குறிப்பிட்டு இந்திய ராணுவத்தின் மூத்த உயர் அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையை ‘துரிதப்படுத்த’ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த துரிதப்படுத்த வேண்டும் எனும் வார்த்தைக்குள் ஒளிந்துள்ள அர்த்தம் ஆழ்ந்த பொருளுடையது. 
ஆக இந்தியா வுக்கும், பாகிஸ்தானுக்குமிடையே போர் மூண்டால் இரண்டு அணு ஆயுத வல்லமை கொண்ட இரண்டு சக்திகளுக்கிடை யேயான போர் என்பதும், தேவைப்பட்டால் அணு ஆயுதங்களை பிரயோகிக்க வேண்டும் என ‘விரும்பும்’ சக்திகள் இரண்டு பக்கங்களிலும் உள்ளனர் என்பதும் தான் இப்போதுள்ளஅசாதாரணமான சூழலின் மையமான அம்சமாகும்,

அதிர வைக்கும் வலைப் பின்னல்
வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும் பாகிஸ்தானுடன் போரிட்டுவிட்டால் நாம் எதிர்கொள்ளும் பயங்கரவாத சக்திகளை அழித்துவிட முடியுமா? ஏற்கனவே இதுபோன்ற போர்களின் உலக அனுபவம் என்ன?சோவியத் யூனியன் பின்னடைவிற்குப் பின்னர் அமெரிக்காவின் ஒரு துருவ ஆதிக்கம் மேலோங்கியது. 
நாடுகடந்த அதன் அத்துமீறல் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் பயங்கரவாத குழுக்களை வளர்த்துவிட்டன. குறிப்பாக 2001ல் நியூயார்க் இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கா அறிவித்த பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற அறைகூவலும், அதன் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் பயங்கரவாதத்தை சர்வதேச நிகழ்வுப் போக்காக மாற்றிவிட்டது.
அது ஏற்கனவே இராக்கில் ஜிகாதிகளையும், ஆப்கனில் தலிபான்களின் வாரிசுகளாக அல்கொய்தா மற்றும் லஷ்கர்- இ -தொய்பாவையும், லெபனான் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளையும் வளர்த்துவிட்டது. இந்த இயக்கங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனித்த அமைப்புகள் போலத் தோன்றினாலும், அவை ஒன்றுக்கொன்று வலைப்பின்னல் போன்ற நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளன.
அவை தமது ஒத்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள உள்ளூர் குழுக்களுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டு பரஸ்பர உதவிகள் செய்துக் கொள்கின்றன.
இந்த அடிப்படையில் தான் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. உதாரணமாக உரி ராணுவ முகாமில் தாக்குதல் நடத்திய ஜெய்ஸ்-இ-முகம்மது, அதன் தாய் அமைப்பான ஜெய்ஸ்-இ-ஜாங்வியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த ஜெய்ஸ்-இ-ஜாங்வி அமைப்பு, ஆப்கானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பாவுடன் நெருக்கமான தொடர்பில் உள்ளது. இது தவிர தெற்காசியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளை விரிவுபடுத்த சிரியாவின் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு மேற்கொண்டு வரும் முயற்சிகள் பற்றி வாஷிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பயங்கரவாத எதிர்ப்புத் துறை சார்ந்த வல்லுநர் அமர்நாத் அமர்சிங் கூறியதாக தி இந்து (ஆங்கிலம் அக்டோபர்-29, 2016) நாளிதழில் வெளிவந்துள்ள செய்தியில், ‘‘ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் தெற்காசியாவில் தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் நோக்கில், ஏற்கனவே உள்ளூரில் செயல்படும் ஜிகாதி குழுக்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. 
 குறிப்பாக பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பாவுடனும், வங்கதேசத்தில் செயல்படும் ஜமாத்-உல்-முஜாகிதீனுடனும் தொடர்பில் உள்ளது. சமீபத்தில் பாகிஸ்தானின் குவெட்டா நகரில் தற்கொலைப் படைத் தாக்குதலில் 60 காவலர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இத்தகைய தொடர்பிற்கு பின்பு தான் நடைபெற்றுள்ளது என்றும், இதனை மேற்கண்ட பயங்கரவாதக் குழுக்களின் ஆன்லைன் உரையாடல் மூலம் தான் கண்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் இந்தியாவில் நடைபெற்ற உரி தாக்குதலில் ஐ.எஸ் அமைப்பின் கைங்கர்யம் எதுவுமில்லை என்றும், ஆனால் அதை நோக்கிய ‘காய்நகர்த்தல்கள்’ படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விபரங்கள் நமக்கு உணர்த்தும் செய்தி என்ன?
பயங்கரவாதம் வெறும் பாகிஸ்தானோடு மட்டும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்பதும், உலகளாவிய தொடர்புகளுடனும், தெற்காசியப் பிராந்தியத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கும் பங்கம் விளைவிக்கும் பிரச்சனையாக உருவெடுத்து வருகின்றது என்பதையே உணர்த்துகின்றது. 
அப்படியானால் இந்தியாவில் நடைபெறும் ஊடுருவல் முயற்சிகள் மற்றும் அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தரும் நாடு என்ற வகையில் சர்வதேச சமூகத்தின் மத்தியில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் ராஜீய ரீதியான நடவடிக்கை எடுக்கும் அதே வேளையில் பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் பரஸ்பரம் நல்லுறவு மற்றும் ஒத்துழைப்பின் மூலமாக மட்டுமே பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் மற்றும் ஒழிக்கும் நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும்.
இந்நிலையில் தான் சார்க் அமைப்பு முக்கியத்துவம் பெறுகின்றது. ஆனால் சார்க் மாநாட்டில் பங்கேற்பதில்லை என்று இந்தியா நிலைப்பாடு எடுத்தது. சமீப காலமாக சார்க் போன்ற அமைப்புகளை குறிவைத்து அமெரிக்க ஏகாதிபத்தியம் பல்வேறு சதிராட்டங்களை நடத்தி வருகிறது.
 உலக அரங்கில் வளர்முக நாடுகளின் ஒற்றுமையை சீர்குலைப்பதே இதன் அடிப்படை நோக்கமாகும்.
 சீரழிக்கப்படும் இந்தியாவின் ஆயுத பலம்


பாகிஸ்தானோடு போருக்கான செயல்திட்டத்தை முழுவீச்சுடன் பாஜக அரசு முன்னெடுக்கும் நடவடிக்கையின் உந்து சக்தி எது?
அந்நிய மற்றும் உள்ளூரில் ஆயுத தயாரிப்பில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைங்கர்யம் இதன் பின்னணியில் உள்ளது.
மத்திய அரசு ஆயுத தயாரிப்பில் முன்பு 49 சதவீதமும், தற்சமயம் 100 சதவீதம் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி வழங்கிய பின்னணியில் ஆயுத தயாரிப்பில் கூட்டு சேர்ந்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்களைப் பற்றியும், அதற்கு முன் பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களைப் பற்றியும் அலசுவது அவசியம்.
இந்தியாவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் 41 நிறுவனங்கள் செயல்படுகின்றன. பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்நிறுவனமானது பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி, மேம்பாடு உற்பத்தி, பரிசோதனை, சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதாவது நிலம், வான் மற்றும் கடல் மார்க்கத்திலுள்ள அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் உற்பத்தி செய்யும் ஒருங்கிணைந்த நிறுவனமாகும். 
18வது நூற்றாண்டிலேயே துவங்கப்பட்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம் 1,64,000 பணியாளர்களைக் கொண்டு உலக அளவில், ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டு வரும் முன்னணியான 50 நிறுவனங்களின் பட்டியலுக்குள் இடம் பெற்றுள்ளது.
 2011-12 ஆண்டைய இதன் மொத்த விற்பனை மதிப்பு 2.7 பில்லியன் டாலர். (16,246 கோடிகளாகும்)அடுத்ததாக பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் எட்டு பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவைகளின் வருடாந்திர உற்பத்தி மதிப்பு 33000 கோடிகளாகும்.
இவற்றில் நேரடியாக 72000 பேர் பணிபுரிகின்றனர். 
இதில் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட்டின் வருடாந்திர உற்பத்தி மதிப்பு ரூ.15000 கோடிகளாகும். 
இதில் சற்றேரக்குறைய 33000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிறுவனத்தின் 40 சதவீதத்திற்கும் அதிகமான வருவாய், சர்வதேச அளவில் விமானத்தின் என்ஜின்கள், உதிரி பாகங்கள் மற்றும் இதரப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கின்றது. இது தவிர ஆசியாவின் இரண்டாவது ஆயுத உற்பத்தி நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் 3300 கோடி முதலீட்டைக் கொண்டு செயல்படுகிறது.
இந்நிறுவனத்தில் 10000 பேரும், 5500 கோடி முதலீட்டைக் கொண்டு செயல்பட்டு வரும் கடற்படை சார்ந்த தளவாட உற்பத்தி நிறுவனத்தில் 13000 பேரும் பணிபுரிந்து வருகின்றனர். 
 இதுதவிர போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிப்பில் ஈடுபடும் மலாகான் டாக் லிமிடெட், கப்பல் கட்டும் நிறுவனமான கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் லிட் உள்ளிட்ட இன்னும் ஏராளமான நிறுவனங்கள் திறம்பட செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்களாகும்.
 அடுத்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமானது நாடு முழுவதும் 52 ஆய்வுக் கூடங்களைக் கொண்டுள்ளது. 
இதன் நோக்கம் ராணுவத் தொழில்நுட்ப மேம்பாட்டை சகல பிரிவுகளிலும் கொண்டு செல்லுதல், குறிப்பாக ஆகாய விமானங்கள், ஆயுத தயாரிப்பு, மின்னணு கருவிகள், நிலத்தினை அகழ்ந்தெடுக்கும் இயந்திரங்கள், ராணுவ விஞ்ஞானம், ஏவுகணைகள், தளவாடப் பொருட்கள் மற்றும் கடல்சார் உள்ளிட்ட அனைத்து வகையிலான உற்பத்தி ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறது. 
இந்நிறுவனமானது வல்லுநர்களாக விளங்கும் 5000 விஞ்ஞானிகளையும், இதன் துணைப் பிரிவாக செயல்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணியகம் எனப்படும் நிறுவனத்தின் கீழ் தொழில்நுட்பம் மற்றும் தனிப்பட்ட ஆராய்ச்சிக்காக 25000 இதர விஞ்ஞானிகளையும் கொண்டு செயல்படுகிறது. 
 இதன் வருடாந்திர வரவு, செலவானது 15000 கோடிக்கும் அதிகமாகும்.
 நமது ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறை சிறந்த கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ளது என்பதையே இது தெளிவாக்குகிறது
கார்ப்பரேட்களின் பிடியில் இந்திய பாதுகாப்பு
நமது பாதுகாப்பு மற்றும் ராணுவ கட்டமைப்புகள் வலுவான பொதுத்துறை அடித்தளத்தை கொண்டுள்ள இத்தகைய சூழ்நிலையில் தான், பாஜக அரசு தற்சமயம் ஆயுத உற்பத்தியில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டை அனுமதித்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் நீண்டகாலம் இத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் உள்ள பெரும் கார்ப்பரேட்டுகளும் கால்பதித்துள்ளனர்.
இதில் டாடா நிறுவனமானது 14 ஆயுத உற்பத்தி தொடர்பான நிறுவனங்களுடன் 1700 கோடி முதலீடைக்கொண்டு செயல்பட்டு வருகிறது.
இதன் உற்பத்தியில் 40 சதவீதமானது நமது ராணுவத்திற்கு கடந்த 3 ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் உலகிலேயே மிகப்பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனமான அமெரிக்காவைச் சேர்ந்த லாக்ஹீட் மார்ட்டினுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
மிகப்பெரிய கட்டுமான நிறுவனமாகிய எல் அண்ட் டி, ராணுவம் மற்றும் அணு ஆயுதம் தொடர்பான உபகரணங்கள் தயாரிப்பு மற்றும் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் கட்டுமானத்திலும் கால்பதித்துள்ளதோடு, 5000 கோடி முதலீட்டை செலுத்தியுள்ளது. 
சமீபத்தில் மத்திய அரசு இந்நிறுவனத்திற்கு 6 நீர்மூழ்கி கப்பல்களை கட்டுவதற்காக ரூ.50000 கோடி மதிப்பிலான ஆர்டரை வழங்கிட உத்தேசித்துள்ளது. இதுதவிர 25000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு மின்னணுப் பொருட்கள் உற்பத்திக்கும், 3000 கோடி மதிப்பிலான இயந்திர துப்பாக்கிகளுக்கான ஆர்டர் வழங்கிடவும் முடிவு செய்துள்ளது.
இதே போல் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் இங்கிலாந்தின் மிகப்பெரிய (உலகிலேயே நான்காவது பெரிய நிறுவனம்) ராணுவத் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ்-டன் கூட்டு சேர்ந்துள்ளது. இவை வாகனங்கள், கடல்சார் உபகரணங்கள், கண்காணிப்புக் கருவிகள் மற்றும் ஆயுதங்கள் தயாரிப்பிலும் இறங்கியுள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் டெக்னாலஜிஸ் மற்றும் ரிலையன்ஸ் செக்யூரிட்டி சொலுயூசன்ஸ் எனும் நிறுவனத்தை 2011-ம் ஆண்டு துவங்கியது. இது 2012 முதல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தஸால்ட் ஏவியேசனுடன் கூட்டு ராணுவத் தயாரிப்பில் ஈடுபடுவதோடு, உள்நாட்டு பாதுகாப்பு சார்ந்த நிறுவனமாகவும் கால் பதித்துள்ளது.
இந்நிறுவனம் ஆயுத வடிவமைப்புகளுக்கான அனுமதி, பாதுகாப்புக் கருவிகளின் உற்பத்தி மற்றும் வளர்ச்சி, ராணுவ விமானங்கள் மற்றும் பயணிகள் விமானங்கள் தயாரிப்பிலும் ஈடுபடத் துவங்கியுள்ளது. 
இதற்காகவே உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுவனமான அமெரிக்காவைச் சேர்ந்த போயிங்குடனும் கூட்டு சேர்ந்துள்ளது. மேலும் இத்துறையில் அடுத்த 3 ஆண்டுகளில் 1 லட்சம் கோடி முதலீட்டையும், 2000 பொறியாளர்களையும் இறக்கிடத் திட்டமிட்டுள்ளது.
முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி ரிலையன்ஸ் இன்பிராஸ்ட்ரக்சர் நிறுவனம் 2015ம் ஆண்டு பிபாவ் டிபென்ஸ் என்ற பெயரில் ரூ.2083 கோடி முதலீட்டில் இத்துறையில் களமிறங்கியுள்ளது.
இதுதவிர அசோக் லேலண்ட் நிறுவனம் சுவீடனைச் சேர்ந்த சாப் நிறுவனத்துடன் இணைந்து ராணுவ கவச வாகனங்கள் மற்றும் ஏவுகணைகள் செலுத்தும் ரகங்களைச் சேர்ந்தவைகளைத் தயாரிக்கவும், மற்றொரு கார்ப்பரேட்டான பாரத் ஃபோர்ஜ் நிறுவனமானது இஸ்ரேலின் எல்பிட் நிறுவனத்துடன் சேர்ந்து அதிநவீன இயந்திர துப்பாக்கிகள் மற்றும் இலகுரக வாகனங்களைத் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
மேற்கண்ட விபரங்கள் இந்தியாவின் ராணுவம் பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட உற்பத்தி சந்தையைக் கைப்பற்றக் களமிறங்கியுள்ள அந்நிய கார்ப்பரேட் பகாசுர நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் அசுரத்தனமான லாபத்தை வேட்டையாடக் காத்திருக்கின்றன என்பதைத் தெளிவாக்குகிறது. 
 ஆட்டத்தின் சூத்திரதாரி யார்?
மத்திய அரசு கடந்த 2015-16ம்ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டின் மொத்த செலவு தொகை ரூ.17.7 லட்சம் கோடிகளாகும். இதில் பாதுகாப்புத்துறைக்கு மட்டும் ஒதுக்கிய தொகை ரூ.3.1 லட்சம்கோடிகளாகும். இது மொத்த பட்ஜெட்டில் 17 சதவீதமாகும். 
அதே நேரத்தில் சுகாதாரத்திற்காக 32000 கோடியும், மனிதவள மேம்பாட்டில் கல்வி உள்ளிட்ட அம்சங்களுக்காக 69000 கோடியும், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு 33700 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ள தொகையோடு ஒப்பிடும்போதுதான் இத்தொகையின் பிரம்மாண்டம் புரியும். 
அதாவது மொத்த பட்ஜெட் செலவினத்தில் 6ல் 1பங்கு இதற்காக ஒதுக்கப்படுகின்றது. 
இதில் 94,588 கோடிகளை ஆயுதங்கள் மற்றும் தளவா டங்களுக்காக ஒதுக்கியுள்ளது. இதனை 2020-க்குள் 1,25,000 கோடிகளாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இத்தகையப் பின்னணியில் தான் பாஜக அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர்பாரிக்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பாதுகாப்புத்துறை அமைச்சராக தான் பொறுப்பேற்ற பிறகு ரூ.2.2 லட்சம் கோடிமதிப்பிலான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன என்றும், மேலும் ரூ.50000 கோடிமதிப்பிலான ஒப்பந்தங்களை பாதுகாப்புத்துறை யில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறினார். இந்தப் பின்னணியில் தான் மூன்று மெகா ஒப்பந்தங்கள் அந்நிய நிறுவனங்களுடன் மத்தியஅரசு மேற்கொண்டுள்ளது. 
அதில் ஒன்று பிரான்சிடமிருந்து ரூ.59000 கோடியில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம். இது கடந்த ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி கையெழுத் தானது. 
தஸால்ட் ஏவியேசன் எனப்படும் பிரெஞ்சு நாட்டின் மிகப்பெரிய ஆயுத தயாரிப்புநிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் மேற்கொண்டு ள்ளது. இந்நிறுவனத்துடன் தான் முகேஷ் அம்பானி நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல ரஷ்யாவிடமிருந்து ரூ.39000 கோடிக்கு அதிநவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க முடிவு செய்துள்ளது. இந்த ஒப்பந் தம் பிரிக்ஸ் மாநாட்டிற்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் இந்தியா வந்த போது கையெழுத்தாகியுள்ளது. இதுபோலவே சுவீடன் நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுவனமான சாப் உடன், கிரிப்பின் ஜெட் தயாரிப்புக்கான ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட உள்ளது. 
ஆனால், இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியா - பாகிஸ்தானிடையே நிலவும் பதற்ற மான சூழலும், போருக்கான முஸ்தீபின் காரண மாக அதிகளவில் லாபமடையப் போவது அமெரிக்க ஆயுத தயாரிப்பு நிறுவனங்களே என்றுஅமெரிக்க - இந்திய வர்த்தக் கழகத்தின் தலைவர்முகேஷ் அகி தெரிவித்துள்ளார்.
அவர் தி இந்து(ஆங்கிலம் அக்-1, 2016) நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இந்தியா தற்சமயம் பாதுகாப்பு மற்றும் ராணுவத்திற்காக மேற்கொள்ளும் செலவானது, அமெரிக்க ஆயுத தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஓர் வரப்பிரசாதமாகும் என்றும், குறிப்பாக லாக்ஹீட்மார்ட்டின், போயிங், ரேய்தான் ஆகிய நிறு வனங்கள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள ஏற்கனவே தயாராகிவிட்டன என்றும், இந்தியாவிலும் டாடா மற்றும் ரிலையன்ஸ் குரூப் நிறுவனங்கள் இத்துறையில் தடம்பதித்திருப்பது, புதிய உத்வேகத்தைக் கொடுத் துள்ளது எனவும் கூறியுள்ளார்.
ஆக, பாகிஸ்தானுடனான போருக்கான ஆட்டத்தின் சூத்திரதாரி அமெரிக்க கார்ப்பரேட் ஆயுத நிறுவனங்களும், இதன் பின்னணியில் இருப்பது பென்டகனின் ராணுவ அதிகார வர்க்கமும்தான்.
இதன் ஒரு பகுதியாகவே, ஆசிய-பசிபிக்பிராந்தியத்தில் பதற்ற நிலைமை உண்டாக்குவதி லும், அதனை நீடித்திருக்க செய்வதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம்; பல பத்தாண்டுகளாக தொடர்ந்து முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
சீனாவைக் கட்டுப்படுத்துவது என்ற வியூகத்திற்கு நம்பகமான கூட்டாளியாக இன்று இந்தியா கிடைத்துள்ள பின்னணியில் ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவை திருகுமையமாகவும், தெற்காசியா பிராந்தியத்தில் காஷ்மீரத்தை திருகு மையமாகவும் கொண்டு நிரந்தரமான பதற்றம் நிறைந்த பகுதியாக- அதாவது மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவைப் போல் மாற்ற நினைக்கிறது. 
அந்த வியூகத்தின் முன்னோட்டமே பாகிஸ்தான் மீது இந்தியா தொடுக்க வேண்டும் என்ற வெறிக் கூச்சல்கள்.
                                                                                                                       -  எம்.பாலசுப்பிரமணியன்      
                                 இந்திய மக்களுக்கு ஏடிஎம் முன் வரிசையில் நிற்கவே வாழ்நாள் போதவில்லை.
=====================================================================================
ன்று,
டிசம்பர்-11.


  • மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்(1882)

  • இந்திய குடியரசுத் தலைவர்  பிரணாப் முகர்ஜி பிறந்த தினம்(1935)

  • யூனிசெப் நிறுவனம் அமைக்கப்பட்டது(1946)


======================================================================================
கல்வியாளரும், நீர்வளத் துறை வல்லுநருமான முனைவர் வா.செ.குழந்தைசாமி (வயது 87) சனிக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு இரங்கல் தெரிவித்துள்ளது.கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:கரூர் மாவட்டம் வாங்க லாம்பாளையத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த வா.செ.குழந்தைசாமி, காரக்பூர் ஐஐடியில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்.
ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் உயர் கல்வி முடித்து, நீர்வளத்துறையில் முனைவர் பட்டம்பெற்றார். தமிழகத் தொழில் நுட்பக் கல்வி இயக்குநர், நீர்வளத்துறை பேராசிரியர் போன்ற பொறுப்புகளிலும் சென்னை அண்ணா, மதுரை காமராசர், இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மொத்தம் 15 ஆண்டுகள் துணைவேந்தராகவும் செயல்பட் டுள்ளார்.

யுனெஸ்கோ நீர்வளத் துறைத் திட்டக் குழு உறுப்பினராக செயல்பட்டார். நீர்வளத் துறையில் ’குழந்தைசாமி மாதிரியம்’ என்ற கண்டு பிடிப்பை மேற்கொண்டார்.தமிழகத்தில் பிறந்து, தனது அறிவாற்றலால் சிறந்த கல்வியாளராக உயர்ந்து நம் அனை வருக்கும் சிறப்பு சேர்த்தவர் குழந்தைசாமி. நீரியல், நீர்வளம், கல்வி போன்றவை தொடர்பாக நூற்றுக்கும்மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
தமிழ் இலக்கிய ஆர்வமும், படைப்பாற்றலும் மிக்க வர். குலோத்துங்கன் என்ற பெயரில் பல கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழில் 10 கவிதைத் தொகுப்புகள், 12 உரைநடை நூல்கள்,ஆங்கிலத்தில் 6 உரைநடை நூல்கள், ஒரு கவிதை நூலும் வெளிவந்துள்ளன. இவரது அனைத்து கவிதைகளின் தொகுப்பு ‘குலோத்துங் கன் கவிதைகள்’ என்ற தலைப்பில் 2002ல் வெளிவந்தது.தமிழக அரசின் திருவள்ளுவர் விருது, தமிழ் இலக்கிய பங்களிப்புக் காக சாகித்ய அகாடமி விருது, கல்வி, அறிவியல் துறை பங்களிப்புக்காக பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருது பெற்றவர்.
தமிழில் அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைப் படைத்தல், தமிழ் மொழியை நவீனப்படுத்துதல், தமிழ் கற்பதை எளிமையாக்குதல் ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண் டவர். இவர் எழுதிய நூல்கள் பல பல்கலைக்கழகங்களில் பாட நூல் களாகவும், இவரது கட்டுரைகள். கவிதைகள் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, பல்கலைக்கழக வகுப்புகளில் பாடமாகவும் இடம் பெற்றுள்ளன.தமிழ் எழுத்துச் சீரமைப்பில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார், கடந்த 35 ஆண்டுகளாக வரி வடிவ சீரமைப்பைப் பற்றி முழு ஈடுபாட்டுடன் எழுதியும், பேசியும்வந்தார்.
தமிழ் இணையப் பல்கலைக் கழக நிறுவனத் தலைவரான இவர், தற்போது தமிழ் மெய்நிகர்ப் பல்கலைக்கழக சமூகத்தின் தலைவராகவும், சென்னை தமிழ் அகாடமிதலைவராகவும், உலகத் தமிழ் ஆய்வுக்கழகத் துணைத் தலைவ ராகவும், தமிழ் மொழி மேம்பாட்டு வாரியத் தலைவராகவும் பல பொறுப்புகளை வகித்த முனைவர் வா.செ.குழந்தைசாமியின் மறைவுபேரிழப்பாகும்.அவரது குடும்பத்தாருக்கும், அவரது மறைவால் வாடும் அனை வருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 "எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது.  எனக்கென்று உறவினர் கிடையாது. எனக்கு சுயநலம் அறவே கிடையாது"
                                                                                                                               செல்வி ஜெயலலிதா 
 



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?