செவ்வாய், 13 டிசம்பர், 2016

புயலுக்கு பெயர்

‘வர்தா’ புயல். 192கி.மீ வேகம் வரை கடும் புயல் காற்றுடன் கரையைக் கடந்தது.
 புயல் என்றால் எப்படி இருக்கும், அதன் தாக்கம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்று இளம் தலைமுறையினருக்கு கண் முன்னே காட்டியது.
 இதற்கு முன் இப்படி ஒரு சக்தி வாய்ந்த புயல் 22 வருடத்துக்கு முன் அதாவது 1994-ம் ஆண்டு சென்னையைத் தாக்கியது. அப்போது இந்தியாவில் புயலுக்கு பெயர் வைக்கும் பழக்கம் நடைமுறையில் இல்லாததால் இந்தப் புயல் 1994-ம் ஆண்டு புயல் என்றே வானிலை அறிஞர்களால் சொல்லப்படுகிறது.

புயலுக்குப் பெயர் வைக்கும் பழக்கத்தை முதன் முதலில் ஆரம்பித்தவர்கள் ஆஸ்திரேலியர்கள்தான். 
பெயர் வைக்கும் பழக்கத்தைப் பெருமைக்காகவோ, அல்லது குறியீட்டுக்காகவோ அவர்கள் தொடங்கவில்லை. அரசியலில் தவறான செயல்கள் செய்து பதவியை இழக்கும் அரசியல்வாதிகளைக் கேவலப்படுத்தும் நோக்கத்தோடுதான் முதலில் பெயர் வைக்க ஆரம்பித்தார்கள். 
அதன் பின் சில வருடங்களில் புயலைப்பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்கும், அதன் தொடக்கம் மற்றும் கரையேறும் பகுதிகளைக் கண்டறிவதற்கும் ஒரு அடையாளம் தேவைப்பட்டது. 
இதனால் புயலுக்குப் பெயர் வைக்கும் வழக்கம் அவசியமாகக் கருதப்பட்டது.
இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் (1939-45) கடலில் அடிக்கடி தோன்றும் புயலைக் குறிப்பதற்காக பெண்களின் பெயர்களை குறித்து வந்தனர். 
இந்தப் பழக்கத்தை 50-களில் அமெரிக்காவும் பயன்படுத்தத் தொடங்கியது. ஆனால் அழிவை ஏற்படுத்தும் புயலுக்கு எப்படி பெண்கள் பெயரை பயன்படுத்தலாம் என பெண்கள் நல வாரியம் போராட, பின் 1978-க்குப் பிறகு ஆண்களின் பெயர்களையும் புயலுக்குப் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.
 இப்படி புயல்களுக்கு அவரவர் பெயர் சூட்டுவதைத் தடுக்க சர்வதேச காலநிலை அமைப்பானது (World Meteorological Organisations) புவியியல் ரீதியான பெயர் வைக்கும் பழக்கத்தைக் கொண்டுவந்தது.
 வட இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயலுக்கு பெயர் வைக்கும் பழக்கத்தை கொண்டுவர அந்தந்தக் கடல் ஆதிக்கத்துக்கு உட்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டன. 
அதன்படி வங்காள விரிகுடா, அரபிக்கடல் மற்றும் வட இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கத்தை இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் பின்பற்றி வருகின்றன. 
இந்த நாடுகள் தங்களுக்கு விருப்பமான பெயர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.
தேர்வு செய்யப்பட்ட பெயர் புயலுக்கு வைக்கப்படும். அடுத்தடுத்த பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்தடுத்து உருவாகும் புயல்களுக்கு பெயராக வைக்கப்படும். 
இந்தப் பழக்கம் 2000-ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது. அதன்படி 2004-ம் ஆண்டு தில்லியில் உள்ள சர்வதேச காலநிலை மையமும், இந்திய வானிலை மையமும் புயல்களுக்கான 64 பெயர்களை பட்டியலிட்டுத் தந்தன. 
இதில் இந்தியா பயன்படுத்தும் பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல், லெஹர், மேக், சாகர், வாயு போன்றவையாகும். இவை அனைத்தும் பஞ்சபூதங்களின் பெயரால் அழைக்கப்படுகிறது.


‘வர்தா’ புயல்: தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகிய இந்தப் புயலுக்கு பாகிஸ்தான் ‘வர்தா’ எனப் பெயர் சூட்டியது.
‘நாடா’ புயல்: வங்கக்கடலில் உருவான இந்த புயலுக்கு ஓமன் ‘நாடா’ என பெயர் சூட்டியது. ‘நாடா’ என்றால் ஓமன் மொழியில் ‘ஒன்றும் இல்லை’ என்று அர்த்தமாம்.
‘கெய்லா’ புயல்: 2011-ம் ஆண்டு உருவாகிய முதல் புயலான ‘கெய்லா’ புயலுக்கான பெயரை மாலத்தீவு வைத்தது.
‘தானே’ புயல் : 2011-ம் ஆண்டு இரண்டாவதாக உருவாகிய புயல் இது. இது வங்கக்கடலில் உருவாகி தமிழ்நாட்டையே குறிப்பாக, கடலூர் மற்றும் பாண்டிச்சேரியை சின்னாபின்னமாக்கியது. இந்தப் புயலுக்கான ‘தானே’ என்ற பெயரை 64 பெயர்கள் அடங்கிய பட்டியலில் இருந்துதான் பெறப்பட்டது. அந்தப் பெயரை மியான்மர் தேர்வு செய்தது. 
மியான்மரில் வாழ்ந்த ஜோதிடவியல் நிபுணர் மின் தானே கா - வை குறிப்பிடும் வகையில் ‘தானே புயல்’ என்று பெயரிட்டனர்.
அந்தவகையில் இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் உருவான புயல்களின் பெயர்களும், அதற்குப் பெயர் வைத்த நாடுகளும்:முர்ஜன் - ஓமன், நீலம் - பாகிஸ்தான், மகசென் - இலங்கை, பைலின் - தாய்லாந்து, ஹெலன் - வங்கதேசம், லெகர் - இந்தியா.

புயல் எச்சரிக்கை கூண்டுகள் என்பன புயலினால் ஏற்படும் அபாயம் பற்றியும், அதன் வேகம் பற்றியும் மக்களுக்குத் தெரிவிப்பதற்காக துறைமுகத்தில் ஏற்றப்படும். மக்கள் புயல் எச்சரிக்கைக் கூண்டுகளைப் பார்த்துப் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லவேண்டும்; மேலும் கடலுக்குள் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என்பதே இதன் நோக்கம்.புயல் எச்சரிக்கை கூண்டுகளில் 11 வகையான எச்சரிக்கைக் கொடிகளை ஏற்றுவார்கள். 
 அதனை வைத்து புயலானது சக்தி குறைந்ததா? 
அல்லது அதிக சக்தி மற்றும் அதிக விளைவுகள் ஏற்படுத்தக்கூடியதா? என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டானது ஒரு புயல் உருவாவதற்கான சாத்தியக் கூறு உள்ளது என்பதைத் தெரிவிக்கிறது.
இரண்டாம் எண் எச்சரிக்கைக் கூண்டானது புயல் ஒன்று உருவாகியுள்ளது என எச்சரிக்கை செய்யும்.

மூன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டு திடீர் காற்றோடு மழை பெய்யும் நிலை என துறைமுகத்துக்கு எச்சரிக்கை விடுக்கும். அதனால் துறைமுகத்தில் இருக்கும் படகுகள் மற்றும் கப்பல்கள் பாதுகாப்புடன் நிறுத்தப்படும்.

நான்காம் எண் எச்சரிக்கைக் கூண்டானது துறைமுகம் மற்றும் கடல் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு எச்சரிக்கை செய்வதாகும். இந்தவேளையில் மீனவர்கள் மற்றும் கப்பல்கள் கடலுக்குச் செல்லக்கூடாது.

ஐந்தாம் எண் எச்சரிக்கைக் கூண்டு, துறைமுகத்துக்கு இடது பக்கமாக புயல் கரையைக் கடக்கும் என்பதாகும்.
ஆறாம் எண் எச்சரிக்கைக் கூண்டு துறைமுகத்துக்கு வலது பக்கமாக புயல் கரையைக் கடக்கும் என்பதைக் குறிக்கும்.

ஏழாம் எண் எச்சரிக்கை கூண்டு துறைமுகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு ஆபத்துகள் அதிகம் என்பதைக் குறிக்கும்.

எட்டாம் எண் எச்சரிக்கைக் கூண்டு துறைமுகத்துக்கு இடது புறமாக புயல் கரையைக் கடக்கும்.
ஒன்பதாம் எண் எச்சரிக்கைக் கூண்டு துறைமுகத்துக்கு வலது புறமாக புயல் கரையைக் கடக்கும் என்பதைக் குறிக்கிறது. 

பத்தாம் எண் எச்சரிக்கை கூண்டானது துறைமுகம் மற்றும் சுற்றியுள்ள ஊர்களுக்கு அபாய நிலை என்று எச்சரிக்கும். 

பதினொன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டானது புயலானது பேரழிவினை உண்டாக்கும் என்பதைக் குறிக்கும். இவற்றைத் தெரிந்துகொண்டு மக்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லவும், மீனவர்கள் மற்றும் கப்பல்கள் கடல் பகுதிக்குச் செல்லாமலும், மேலும் பாதுகாப்புப் பணியை துரிதப்படுத்தவும் செய்வார்கள்.
 ‘வர்தா’ புயலுக்கு பத்தாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 ===================================================
ன்று,

டிசம்பர்-13.
  • மோல்ட்டா குடியரசு தினம்(1974)
  • போலந்தில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது(1981)
  • தமிழக எழுத்தாளர் நா.பார்த்தசாரதி இறந்த தினம்(1987)
  •  பாய்ஜீ என்ற சீன ஆற்றின் டால்ஃபின் அரிய இனமாக அறிவிக்கப்பட்டது(2006)

 ‘தீபம்’ நா. பார்த்தசாரதி
1932 டிசம்பர் 18-ல் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி எனும் கிராமத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் நா. பார்த்தசாரதி. முறையாகத் தமிழ் கற்ற இவர், மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து படித்து பண்டிதர் பட்டம் பெற்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மாலை நேர வகுப்பில் சேர்ந்து தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பாரதியார் தமிழாசிரியராகப் பணிபுரிந்த மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்த நா. பார்த்தசாரதி, பின்னர் பத்திரிகை உலகில் நுழைந்தார். கல்கி இதழின் உதவி ஆசிரியராகத் தனது பத்திரிகை வாழ்வைத் தொடங்கினார்.


தீரன், அரவிந்தன், மணிவண் ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் போன்ற புனைப்பெயர்களிலும் எழுதிவந்தார். கல்கி இதழில் இருந்து வெளியில் வந்தபின், ‘தீபம்’ என்ற இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தினார். 1970-கள் மற்றும் 80-களில் இலக்கிய உலகின் பதிவுகளில் ‘தீபம்’ இதழ் மிக முக்கியமானது.
பரவலான வாசகர்களைச் சென்றடைந்த எழுத்தாளராக இருந் தாலும் தனது எழுத்துகளில் சமரசம் செய்து கொள்ளாதவர் நா.பா. இலக்கியத்தை வெறும் பொழுது போக்காக மட்டும் நினைக்காத இவர், சமூக மாற்றத்துக்கு எழுத்தை ஆயுதமாக்குவது என்னும் தனது பற்றுறுதியில் சிறிதும் விட்டுக்கொடுக்கவில்லை. தீவிர இலக்கிய உலகைச் சேர்ந்த பல எழுத்தாளர்களுடன் நெருங்கிய நட்புப் பாராட்டிவந்த நா.பா., அவர்களது படைப்புகளையும் விமர்சனங்களையும் இதர கட்டுரைகளையும் ‘தீபம்’ இதழில் வெளியிட்டார்.

 காத்திரமான இலக்கிய விவாதங்களும் அந்த இதழில் வெளியாகின. சுந்தர ராமசாமியின் ‘ஜே. ஜே: சில குறிப்புகள்’ நாவல் குறித்து கரிச்சான் குஞ்சு எழுதிய விமர்சனக் கட்டுரை அவற்றுள் ஒன்று. சுந்தர ராமசாமி, தி. ஜானகிராமன் போன்ற எழுத்தாளர்களிடம் அவர் நெருங்கிய நட்புடன் இருந்தார்.
சமுதாயப் பிரச்சினைகளை அலசும் எழுத்து அவருடையது. அவரது கதைகளில் வரும் பாத்திரங்கள் லட்சிய வாதம் கொண்டவர்களாக இருப் பார்கள். பரவலான வாசகர்களைச் சென்றடைந்த அவரது சமகால ஜன ரஞ்சக எழுத்தாளர்களின் படைப்புகளை ஒப்பிடும்போது, அவரது படைப்புகளில் இலக்கியத் தன்மை அதிகம் இருப்பதைக் காண முடியும். துருத்திக்கொண்டிருக்கும் செயற்கைத் தன்மையை அவரது படைப்புகளில் பார்க்க முடியாது. ஆபாசம், வன்முறை போன்ற கூறுகளும் அவர் எழுத்தில் இருக்காது. தனது இலக்கியக் கோட்பாடுகளில் அவர் ஒரு போதும் சமரசம் செய்து கொண்டதில்லை.

நா.பா. எழுதிய ‘குறிஞ்சி மலர்’ வாசகர்களிடம் ஏற்படுத்திய பாதிப்பு குறிப்பிடத் தக்கது. வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நாவல் பாத்திரங்களின் பெயர்களை வைக்கும் அளவுக்கு அந்த நாவல் வாசகர்களின் அபிமானத்தைப் பெற்றிருந்தது. சமூக மாற்றங்களை விரும்பும் இளைஞன், சமுதாயத்தை வெறுக்காமல் அதற்குள்ளிருந்தே மாற்றத்தைத் தேடும் இளைஞனின் கதை அது. இந்த நாவலின் காட்சி வடிவமான தொலைக்காட்சித் தொடர், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதில் அரவிந்தனாக நடித்தவர், திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின். லட்சியவாத இளைஞர் பாத்திரத்தில் தோன்றிய ஸ்டாலின், ஒரு நல்ல நடிகராக அடையாளம் காணப்படக் குறிஞ்சி மலர் காரணமாக அமைந்தது. நா. பார்த்தசாரதியின் எழுத்துக்கு ஏராளமான வாசகர்கள், குறிப்பாக வாசகிகள் இருந்தனர். அவர் மீது இன்றைய நவீன எழுத்தாளர்களிடமும் நல்ல மதிப்பு உண்டு.

‘சாயங்கால மேகங்கள்’, ‘நிசப்த சங்கீதம்’, ‘ராணி மங்கம்மாள்’, ‘ஆத்மாவின் ராகங்கள்’, ‘சத்திய வெள்ளம்’ உள்ளிட்ட ஏராளமான நாவல்களை எழுதியிருக்கிறார். 1971-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது, அவர் எழுதிய ‘சமுதாய வீதி’ என்ற நாவலுக்கு வழங்கப்பட்டது. நாடகக் குழுவில் நடிக்க வாய்ப்புத் தேடி சென்னை வரும் இளைஞனின் வாழ்க்கையை அடிப் படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் அது. தமிழ்நாடு அரசு பரிசு, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் பரிசு போன்ற விருதுகளையும் அவர் பெற்றிருக்கிறார்.
ரஷ்யா, பிரிட்டன், போலந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர் லாந்து, இத்தாலி, எகிப்து, குவைத் போன்ற பல நாடுகளுக்குச் சென்ற அனுபவங்களின் அடிப்படையில் பயண நூல்களையும் எழுதியிருக்கிறார். சாகித்ய அகாடமி கமிட்டி உறுப்பினர், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கச் செயலாளர் போன்ற பதவிகளை அவர் வகித்தார்.

அரசியலிலும் நா. பார்த்தசாரதி ஆர்வம் செலுத்தினார். காமராஜர் மீது பேரபிமானம் கொண்டவர் அவர். சுதந்திரா, இந்திரா காங்கிரஸ், ஜனதா போன்ற கட்சித் தலைவர்களுடன் நட்பில் இருந்தார்.
பத்திரிகையாளர், எழுத்தாளர் என்று தனது நாற்பத்தைந்தாவது வயதில் எம்.ஏ. பட்டம் பெற்றவர் நா. பார்த்தசாரதி. ‘பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும்’ எனும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வையும் மேற்கொண்டார். முனைவர் பட்டம் வழங்கப்படுவதற்கு 2 நாட்கள் முன்பு, மாரடைப்பால் கால மானார்.

===================================================
"பான் குவிடிங் ஹால்" 1800 ம் ஆண்டு கட்டத் துவங்கி 1802ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.பான் குவிடிங்என்றால் மகா விருந்து என்று பொருள்.கிரேக்க நாட்டில் உள்ள பெண் தெய்வம் எத்தேனாள் கோயிலை முன்மாதிரியாகக்கொண்டு கிழக்கிந்திய கம்பெனி பொறியாளர் ஜான் கோல்டிங்ஹாம் என்பவர் இந்த விருந்து களி கூடத்தை கட்டினார். கிழக்கிந்திய கம்பெனி வெள்ளையர்களும்,பிரிட்டிஷ் நாட்டில் இருந்து இந்தியா வருபவர்களும் உல்லாசமாக விருந்துண்டு,மது அருந்தி மகிழ்ந்திடவே மகாவிருந்து கூடம் என்ற பான் குவிடிங் ஹால் கட்டப்பட்டது.இதை வடிவமைத்து கட்டிய பொறியாளர் ஜான் கோல்டிங்ஹாம்சிறந்த வானியல் நிபுணருமாவார்.இந்த மகா விருந்து கட்டிடம் 1802ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி திறக்கப்பட்டது.
அதுமுதல் பல விருந்து களியாட்டங்களைக்கண்டு வந்த இந்த ஹால் 1948 ல் ராஜாஜி ஹால் என்று பெயர் மாற்றப்பட்டது.
இந்தியா விடுதலையடைந்ததும் முதலும் ,கடைசியுமாக இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜகோபாலாச்சாரி நினைவாகவே இப்பெயர் மாற்றம் நடந்தது.மிக முக்கியத் தலைவர்கள் இறந்த பின்னர் அவர்கள் உடல் மக்கள் மரியாதைக்காக வைக்கப்படும் இடமாக மக்கள் மனதில் ராஜாஜி ஹால் பதிவாகி விட்டது.
                                                                                                 ===================================================