உங்கள் டிஜிட்டல் பணத்தில் இடி விழட்டும்!


500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபோது, இதற்கான காரணங்களாக மூன்றை பிரதமர் மோடி குறிப்பிட்டார். 
கறுப்புப் பண ஒழிப்பு, கள்ளப் பண ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு என்ற மூன்றுதான் அது. ஆனால் இந்த மூன்றும் ஒழிந்ததாகத் தெரியவில்லை. அவற்றை ஒழிக்கும் நோக்கமும் மோடி வகையறாவுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. 
ஆனால் ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததற்காக யாரும் கவலைப்பட வேண்டாம், டிஜிட்டல் இந்தியா தனது வேலையை காட்டத் துவங்கிவிட்டது.
இனிமேல் ரொக்கமில்லாத பொருளாதாரம் வரப்போகிறது. அனைவரையும் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறோம் என்று மோடி கும்பல் குதித்து கும்மாளம் போடுகிறது.ஆங்காங்கே மூடிக்கிடக்கும் ஏடிஎம் மையங்கள் பணத்தின் கல்லறை போலவே காட்சியளிக்கின்றன. 
அங்கு காவலுக்கு இருந்தவர்களுக்கும் வேலை போய்விட்டது. வங்கி வாசல்களில் திருவிழாக் கூட்டம். தன்னுடைய பணத்தை எடுக்கப் போனவருக்கு காவல்துறையினரின் தடியடி தாராளமாகக் கிடைக்கிறது. ஏதோ, நாசிக் அச்சகத்தில் நுழைந்துவிட்ட கொள்ளைக்காரர்கள் போலவே பணம் எடுக்கப் போனவர்கள் பார்க்கப்படுகிறார்கள்.
வங்கியில் வாரத்திற்கு ரூ.24 ஆயிரம் எடுத்துக் கொள்ளலாம் என்றார்கள். முன்பு திரைப்படக் கொட்டகையில் முட்டி மோதி டிக்கெட் எடுக்கப் போகும்போது, ஹவுஸ்புல் என்று முகத்தில் குத்துவது போல, தற்போது வங்கியில் காசாளர் பக்கத்தில் சென்றவுடன் அவர் பணம் இருப்பு இல்லை என்று பரிதாபமாகக் கூறுகிறார். 
ஒரு திரைப்படத்தில் வழக்கறிஞர் வடிவேலுவின் சிஷ்யகோடிகள் ஜாமீன் வாங்க மீன் கடைக்குப் போய் தேடியதாகவும், கடைசியில் ஜாமீன் எந்த மீன் கடையிலும் கிடைக்கவில்லை என்றும் கூற, அல்வா வாசு கெத்தாக கடலிலேயே இல்லையாம் என்பார்.
அது மாதிரி ரிசர்வ் வங்கியிலேயே பணம் இல்லை என்கிறார்கள்.மறுபுறத்தில், ரொக்கம் இல்லாத இந்தியா என்று மோடி கும்பல் செய்யும் அலப்பரைக்கு அளவே இல்லை . பத்திரிகைகளிலும் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ரொக்கமில்லாத இந்தியாவுக்காக விளம்பரம் செய்யப்படுகிறது.
உங்கள் மொபைல்தான் உங்கள் வங்கி, உங்கள் ஏடிஎம் என்று வெறுப்பேற்றுகிறார்கள். ஒரு ஆட்டோக்காரர் சவாரி முடிந்து நூறு ரூபாய் கேட்டாராம். அதற்கு வாடிக்கையாளர் என்னிடம் பணம் இல்லை. உங்கள் செல்பேசி எண்ணைக் கொடுங்கள்.
அதற்கு அனுப்பி விடுகிறேன் என்கிறார்.உடனே பணம் அவரது கைக்கு போய்விட்டதாம். இருவரும் கைதட்டி சிரிக்கிறார்கள்.மோடி செய்த வேலையால், பிழைப்பு கெட்டு பரிதவிக்கும் ஆட்டோ தொழிலாளர்களை கிண்டல் செய்யும் வேலை இது. 
அதுபோல, அயன் செய்த சலவைத் தொழிலாளி ஒருவரின் செல்போனை வாங்கி அயன் செய்த காசை அதில் செலுத்திவிட்டாராம் துணி தேய்க்கக் கொடுத்தவர். 

அவர் என்ன பத்தாயிரம் கோடி ரூபாய்க்கா அயன் செய்திருக்கப் போகிறார். 
இருபது, முப்பது ரூபாய்க்கு மொபைல் பேங்கில் பணம் கட்டுகிறார்களாம். 
இப்படி விளம்பரம் செய்பவர்களை படுக்க வைத்து அயன் செய்தால் கூட ஆத்திரம் தீராது என்கிறார் ஒரு சலவைத் தொழிலாளி. 
என்னிடம் அயன் பாக்சுக்கு கரி வாங்கவே காசு இல்லை, இவர்களுக்கு நக்கலைப் பார்த்தீர்களா என்கிறார் அவர்.
இதனுடைய உச்சகட்டம் ஒன்று இருக்கிறது. 
செருப்பு தைக்கிற தொழிலாளியிடம் செருப்பை சீர்செய்து விட்டு அவரிடம் மொபைல் போன் இருக்கிறதா என்று கேட்க, அவர் என்னிடம் இல்லை, கிராமத்தில் உள்ள என் மனைவியிடம் இருக்கிறது. 
அவரது கணக்கில் போட்டு விடுங்கள் என்கிறார். 
உடனே இவர், ஆஹா, முடிந்தது வேலை என்கிறார். 
அநேகமாக அந்தத் தொழிலாளியின் வீட்டிற்கு வருமானவரித்துறை சோதனைக்குப் போனாலும் போகலாம். அங்கே நான்கைந்து பிய்ந்த செருப்புகள் தான் இருக்கும். 
வீடுகளை விட கோயில்கள் வேகமாக மாறி விடுகின்றன. பல கோயில்களில் இப்பொழுது உண்டியலுக்குப் பதிலாக ஸ்வைப்பிங் மிஷின் வைத்து விட்டார்கள் . 
கடவுள் பெயரைச் சொல்லி ஒரே இழு, அவ்வளவுதான். காணிக்கைக்கு அர்ச்சகரும் ஒரு மிஷின் வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
இந்திய மக்கள் வாழ்வில், பிறப்பு துவங்கி இறப்பு வரை பணம் காசு இருந்து கொண்டே இருக்கும். பிறந்த குழந்தைக்கு நூறு , இருநூறு கொடுத்து பெரியவர்கள் வாழ்த்துவார்கள். இனிமேல் அந்தக் குழந்தையின் கையில் ஒரு ஸ்வைப்பிங் மிஷினை கொடுத்துவிட வேண்டியதுதான். 
குழந்தையை கன்னத்தில் கிள்ளி விட்டு, மிஷினில் ஒரு இழு இழுத்தால் போதும்.
இறந்த பிணத்தின் நெற்றியில் எப்படி காசு வைப்பது என்றுதான் தெரியவில்லை. அதனால் என்ன? 
பிணத்தின் நெற்றியிலும் ஒரு ஸ்வைப்பிங் மிஷினை வைத்து விட வேண்டியதுதான். டிஜிட்டல் இந்தியா உயிர்ப்போடும் ஒளிரும். 
எங்கள் வீட்டிற்கு கீரை விற்க வரும் பாட்டியிடம் இனி காசு செல்லாது, எப்போது மிஷின் வாங்கப்போகிறாய் என்று கேட்டேன்.
அதற்கு அவர் எடைக்கல் வாங்க காசு இல்லாமல், கப்பிக்கல்லை வைத்து சமாளிக்கிறேன். இதில் மிஷினுக்கு எங்கே போவது? என்றார். 
மோடியின் டிஜிட்டல் பணம் எத்தனை பேரின் வாழ்க்கையை தொலைத்துக்கட்ட இருக்கிறதோ தெரியவில்லை. மதுரையில், ஒரு பெட்ரோல் பங்க்கில் 1980 ரூபாய்க்கு டீசல் போட்டுவிட்டு, பணம் இல்லை. ஸ்வைப்பிங் மிஷின் இருக்கிறதா? என்று கேட்டேன்.
 அவர் ஆர்வமாக இருக்கிறது என்றார். கார்டை வைத்து இழுத்தேன். ரசீது வரவில்லை. அவர் சர்வர் கிடைக்கவில்லை. எனவே மறுபடியும் இழுங்கள் என்றார். இப்படி பத்து, பதினைந்து முறை இழுத்த பிறகும் ரசீது வரவில்லை. ஆனால் உங்களுடைய கணக்கில் பணம் எடுக்கப்பட்டு விட்டது என்ற எஸ்எம்எஸ் வந்துவிட்டது.
ஆனால் எங்களுக்கு பணம் வரவில்லை என்கிறார் அவர். என்னிடமிருந்து பணம் எடுத்துவிட்டார்கள் என்கிறேன் நான். கடைசி வரை அவர். ஒப்புக்கொள்ளவேயில்லை. 
வேறு வழியின்றி இன்னொரு கார்டை வைத்து இழுக்க வேண்டியதாயிற்று.சரி, என்னுடைய பணத்திற்கு என்ன வழி என்று கேட்டால், கவலைப்படாதீர்கள், ஒரு உத்தமனுடைய காசை தவறாக எடுத்துவிட்டோமே என்று மிஷினே வருத்தப்பட்டு, கண்ணீர் விட்டு, உங்களுடைய கணக்கில் மீண்டும் போட்டுவிடும் என்று மோடி போல 24 மணிநேரம் கெடு கொடுத்தார். 
நானும் செல்போனை ஆவலாக பார்த்துக் கொண்டே இருந்தேன். ஐந்து நாட்களாகியும் மிஷின் மனம்இறங்கவில்லை. மீண்டும் சென்று கேட்டதற்கு, கஸ்டமர் கேர் எண்ணிற்கு போன் செய்யுங்கள், உடனே சரி செய்துவிடுவார்கள் என்றார்.
அந்த எண்ணிற்கு போன் செய்தால், பெரும்பாலும் கிடைப்பதில்லை. அது 24 மணிநேர சேவை, எனவே இரவு 12 மணிக்கு மேல் விழித்திருந்து போன் செய்து பாருங்கள். 
உங்கள் நேரம் நன்றாக இருந்தால், கிடைக்கும் என்றார் நண்பர் ஒருவர். அப்படி நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு போன் செய்தால், அதற்கு ஒன்றை அழுத்தவும், இதற்கு இரண்டை அழுத்தவும் என்று ஒரு அசரீரி குரல் கேட்கிறது. எல்லாவற்றையும் அழுத்தி முடித்துவிட்டு பார்த்தால், நீங்கள் தவறு செய்து விட்டீர்கள். எனவே முதலிலிருந்து முயற்சி செய்யுங்கள் என்கிறது அசரீரி. 
எது தவறு என்று தெரியவில்லை. டீசல் போட்டது தேசத் துரோக குற்றமா? 
அல்லது மிஷினில் கார்டை நுழைத்தது குற்றமா? 
அல்லது இந்த தேசத்தில் பிறந்ததே குற்றமா? 
என்று தெரியவில்லை.மறுபடியும் பலவற்றையும் அழுத்தி, அழுத்தி பார்த்ததில் விடியற்காலம் 5.30 மணியளவில் லைன் கிடைத்தது.
சம்பந்தப்பட்ட அலுவலர் பிசியாக இருக்கிறார். நீங்கள் இரண்டரை நிமிடம் காத்திருக்க வேண்டும் என்றது மீண்டும் அசரீரி. விக்கிரமாதித்தன் வேதாளம் கதை கெட்டது போங்கள், காத்திருந்தால் உரி உரி உரி என்று ஏதோ ஒரு புரியாத ஹிந்திப் பாடல். 
கடைசிவரை அலுவலரும் லைனுக்கு வரவில்லை. உரிப்பதும் நிற்கவில்லை. கஸ்டமர் கேர் லைனை பிடிப்பது சாத்தியமில்லை என்று முடிவான பிறகு , நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று ஒரு கடிதம் எழுதிக் கொடுங்கள் எப்படியும் உங்களது இறுதிச் சடங்கிற்கு அந்தப் பணம் கிடைத்து விடும் என்று தைரியமூட்டுகிறார் வங்கியில் பணியாற்றும் நண்பர் ஒருவர். அந்த 1980 ரூபாய் பணம் இப்போது என்னிடமும் இல்லை.
பெட்ரோல் பல்க்கிடமும் இல்லை. என் வங்கிக் கணக்கிலும் இல்லை. ஆனால், டிஜிட்டல் வடிவில் எங்கோ இருக்கிறது. மாயாவாதம் பேசிய ஆதிசங்கரரே வந்தால்கூட, இந்தப் புதிருக்கு விடை காண முடியாது. இப்படி இன்னும் எத்தனை பேரின் குடியை கெடுக்க முடிவு செய்திருக்கிறார்களோ தெரியவில்லை. 
ஒரு பையன் ஊரே மூக்கில் விரலை வைக்கிற மாதிரி, ஒரு வேலை செய்யப் போகிறேன் என்று சவடால் அடித்துக் கொண்டு திரிந்தானாம். 
கடைசியில், ஒரு குச்சியை எடுத்து சாக்கடையை கிளறிவிட்டானாம்.
அந்த வழியாகச் சென்றவர்கள் வீச்சம் தாங்கமுடியாமல் விரலால் மூக்கைப் பொத்திக் கொண்டேபோனார்களாம். பார்த்தீர்களா என் பெருமையை என்றானாம் அந்த சிறுவன். 
மோடி செய்த வேலையும் அப்படித்தான் இருக்கிறது. 
ஆனாலும், தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்து, டிஜிட்டல் பணம் என்று மாயாஜாலம் காட்டிக் கொண்டே யிருக்கிறார்கள் ஆளவந்தார்கள். 
உங்கள் டிஜிட்டல் பணத்தில் இடி விழட்டும் என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.
                                                                                                                                   - மதுக்கூர்இராமலிங்கம் 
-நன்றி:தீக்கதிர்,

டிஜிட்டல் பண பரிமாற்றத்தில் 6.15 லட்சம் மோசடி நடந்துள்ளதாக பேடிஎம் நிறுவனம் சிபிஐயில் புகார் அளித்துள்ளது.
டிஜிட்டல் பண பரிமாற்றம் நடத்தினால் நாட்டில் ஊழல் குறையும். கறுப்புப்பணம், கள்ளப்பணம் குறையும் என்று மோடி வகையறாக்கள் நாடு முழுவதும் கூறி வருகின்றனர். ஆனால் மோடியின் 500 மற்றும் 1000ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகியும் நாட்டில் ஏடிஎம் மற்றும் வங்கிகளில் மக்கள் கூட்டம் குறைந்த பாடு இல்லை. 
இதைத்தவிர்ப்பதற்கு நாட்டு மக்கள் அனைவரும் டிஜிட்டல் பண பரிமாற்றத்திற்கு மாறுங்கள் என்று  மோடி கூறினார். ரூபாய் நோட்டு திரும்பப் பெரும் அறிவிப்பைத் தொடர்ந்து பேடிஎம் என்ற தனியார் நிறுவனத்தின் விளம்பரங்கள் மோடியின் படத்துடன் வெளியானது.
இந்நிலையில் மோடியின் கள்ளப்பண ஒழிப்புக்கு தீர்வாக கூறப்பட்ட டிஜிட்டல் பணபரிமாற்றம் முற்றிலும் பாதுகாப்பானது அல்ல என்பதை பேடிஎம் நிறுவனமே ஒத்துக்கொள்ளும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
மோடியின் அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 21000கோடி பண பரிவர்த்தனை பேடிஎம் மூலம் நடந்துள்ளது. இந்நிலையில் பேடிஎம் நிறுவன பரிமாற்றம் மூலம் பொருட்களை வாங்கிய 48 வாடிக்கையாளர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 
கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை 6.15 லட்சம் பணம் மோசடியான முறையில் ஏமாற்றப்பட்டுள்ளதாக பேடிஎம்நிறுவனத்தின் பேரில் 48 வாடிக்கையாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
அவர்களில் 15 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சிபிஐ விசாரணையை துவங்கி உள்ளது.
=====================================================================================
ன்று,

டிசம்பர்-20.
  • உலக  மனித ஒருமைப்பாட்டு தினம்
  • சோவியத்தின் ரகசிய காவல்துறையான  "சேக்கா" அமைப்பு (1917)
  • கார்டிஃப், வேல்சின் தலைநகராக அறிவிப்பு (1955)
  • போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான ஐ.நா., உடன்படிக்கைகையெழுத்தானது(1988)

====================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?