ஜெயா தொலைக்காட்சி உரிமையாளர் ?

செப்டம்பர் 27, 2014 தமிழகத்தின் வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றிலேயே மறக்க முடியாததோர் நாள். 
அன்றுதான், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, வி.என். சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய நால்வரையும் ஊழல் வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் ஜான் டி குன்ஹா சிறைக்கு அனுப்பினார். 
நால்வருக்கும் நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 1991 - 1996 ம் ஆண்டில் ஜெ முதலமைச்சராக இருந்த போது 66.65 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்த வழக்கில் விதிக்கப் பட்ட தண்டனை இது. 
செப்டம்பர் 27 ல் சிறைக்கு அனுப்பபட்ட நால்வரும், அக்டோபர் 17 ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை அடுத்து, 18 ம் தேதி விடுதலையாகி சென்னை வந்தனர். 
நால்வரும் 22 நாட்கள் சிறையிலிருந்த இந்த காலகட்டத்தில் நடந்த முக்கியமானதோர் நிகழ்வுதான் தற்போது வெளியில் வந்திருக்கிறது. அதுதான் ஜெயா டிவியை சசிகலா தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
அதாவது இந்த 22 நாட்களில் ஜெயா டிவி யின் 75 சதவிகித பங்குகள் சசிகலா பெயருக்கு மாறியிருக்கின்றன. 
கார்ப்பரேட் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சகத்தில் Ministry of Corporate Affairs இது சம்மந்தமாக தாக்கல் செய்யப் பட்டிருக்கும் தஸ்தாவேஜீகள் அல்லது ஆவணங்களில் இருந்து இந்த விவரங்கள் தெரிய வந்திருக்கின்றன. செப்டம்பர் 27 ம் தேதி நால்வரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். அக்டோபர் 1 ம் தேதி மாவிஸ் சாட்காம் Mavis Satcom என்ற கம்பெனி தன்னுடைய பங்கு பரிவர்த்தனையில் பெரியதோர் மாற்றத்துக்கு அங்கீகாரம் கோரியும், அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றக் கோரியும் நோட்டீஸ் வெளியிட்டது. (For a Board Resolution to approve transfer of shares). 
மாவிஸ் சாட்காம்தான் ஜெயா டிவி யை நடத்திக் கொண்டிருக்கிறது. 
அக்டோபர் 10 ம் தேதி 6,59,200 பங்குகள், அதாவது மாவிஸ் சாட்காம் நிறுவனத்தின் பங்குகளில் சுமார் 75.8 சதவிகித பங்குகள், வெங்கடேஷ் மற்றும் மருதப்ப பழனிவேலு என்ற இரண்டு இயக்குநர்களிடமிருந்து சசிகலாவுக்கு மாற்றப்பட்ட (transfer) முடிவுக்கு இந்த நிறுவனத்தின் Board அங்கீகாரம் கொடுக்கிறது. 
அக்டோபர் 10 ம் தேதி நடைபெற்ற Board Meeting ன் நடவடிக்கைகள் அதாவது Minutes பற்றி இதனது மேனேஜிங் டைரக்டர் பிரபா சிவகுமார் கையெழுத்திட்ட குறிப்பு இவ்வாறு கூறுகிறது: 'நிறுவனத்தின் தலைவர் Board க்கு கொடுத்திருக்கும் தகவலில் நிறுவனத்தின் பங்குதாரர்கள் தங்களது பங்குகளை மாற்றிக் கொடுக்கும், மனுக்களை Form நிறுவனத்திற்கு கொடுத்திருக்கிறார்கள். 
இந்த மனுக்களை தீர ஆராய்ந்த Board இந்த பங்குகளை மாற்றிக் கொடுக்கும் நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்குவதென்று முடிவு செய்கிறது. The Board after due deliberation passed the following resolution: Resolved that the approval be and hereby given to the undernoted transfers'. இதன்படி ஜெயா டிவி 1999 ல் ஆரம்பிக்கப் பட்ட காலத்திலிருந்து இயக்குநராக இருந்த வெங்கடேஷ் 2,19, 400 பங்குகளையும், 2006 ல் இயக்குநராக சேர்ந்த பழனிவேலு 4,39,900 பங்குகளையும் சசிகலாவுக்கு மாற்றிக் கொடுத்து விட்டார்கள். 
இதன்மூலம் நிறுவனத்தில் சசிகலாவின் பங்குகள் 7.01, 260 ஆக உயர்ந்து விட்டது. இது கிட்டதட்ட மொத்த பங்குகளில் 80.76 சத விகிதமாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த பங்கு பரிவர்த்தனையின் மொத்த ரூபாய் மதிப்பு என்னவென்று குறிப்பிடப் படவில்லை. 
இதில் சுவாரஸ்யமான மற்றோர் விஷயம் செப்டம்பர் 2013 வரையில் இந்த நிறுவனத்தில் சசிகலாவுக்கு எந்த பங்குகளும் இல்லை. ஆனால் 2013 - 14 கால கட்டத்தில் அப்போது இயக்குநர்களாக இருந்த மூவரிடமிருந்து 42, 860 பங்குகளை சசிகலா வாங்கியிருக்கிறார். 
இதில் முக்கியமான விஷயம் சிறையில் இருந்த காலகட்டத்தில் ஒருவரது பெயரில் இதுபோன்று ஒரு நிறுவனத்தின் பங்குகளை அதுவும் 75 சத விகித பங்குகளை மாற்ற முடியுமா என்பதுதான். இதில் சட்டப்படி தவறு இல்லையென்று கம்பெனி விவகாரங்கள் மற்றும் பங்கு பரிவர்த்தனைகளை நன்கறிந்தவர்கள் சிலர் கூறுகின்றனர்.
 'சிறையில் இருக்கும் ஒரு நபர் ஒரு நிறுவனத்தின் பங்குதாரராக ஆக முடியாதென்று கம்பெனிகள் மற்றும் பங்கு பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் எந்த சட்டப் பிரிவும் தெளிவாக எதனையும் குறிப்பிடவில்லை. ஆகவே சசிகலா சிறையில் இருந்த காலகட்டத்தில் அவருக்கு மாற்றிக் கொடுக்கப் பட்ட பங்குகள் விவகாரத்தில் சட்ட முறைகேடுகள் ஏதும் நடந்தது என்று நாம் சொல்லி விட முடியாது,' என்று கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த கம்பெணி விவகாரங்கள் மற்றும் ஷேர் மார்கெட் பற்றி நன்கறிந்த முதலீட்டு ஆலோசகர் ஒருவர். 
மற்றோர் பங்கு முதலீட்டு ஆலோசகர் சொல்லுவது சற்று வித்தியாசமாக இருக்கிறது. 'இதுபோன்ற பங்கு பரிவர்த்தனைகளில் குறிப்பிட்ட ஆவணங்களில் பங்குகளை விற்பவர்களும், வாங்குபவர்களும், (அதாவது யார் பெயரில் பங்குகள் மாற்றப் படுகிறதோ அவர்களும்) கையெழுத்திட்டிருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாவிஸ் சாட்காம், பங்குகள் மாற்றப் படுவதற்கான transfer Board ன் தீர்மானத்துக்கான நோட்டீஸை அக்டோபர் 1 ம் தேதிதான் கொடுக்கிறது. 
இதற்கு அங்கீகாரம் கொடுத்த அறிவிப்பு அக்டோபர் 10 ம் தேதி இயக்குநர் பிரபா சிவகுமார் கொடுத்த அறிக்கையில் இருக்கிறது. 
அப்படியென்றால் தன் பெயரில் பங்குகள் மாற்றப் பட்டதற்கான ஆவணங்களில் ச சிகலா எப்போது கையெழுத்துப் போட்டார்? 
அவர் செப்டம்பர் 27 ம் தேதிக்கு முன்பே கூட கையெழுத்து போட்டிருக்கலாம். நமக்குத் தெரியாது. அந்த உண்மை தெரியாமல் நாம் எதுவும் சொல்ல முடியாது'. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், 2013 வரையில் மாவிஸ் சாட்காமில் எந்த பங்குகளையும் வைத்துக் கொண்டிராத சசிகலா 2014 அக்டோபரில் திடீரென்று 80 சதவிகித பங்குகளுக்கு எப்படி அதிபதியானார் என்பதுதான். 
சட்டப்படி சசிகலா செய்ததில் எந்த தவறும் இல்லை என்பது உண்மையாகவே இருக்க கூடும்தான். ஆனால் அஇஅதிமுக வின் ஊதுகுழலாகவும், பிரச்சார பீரங்கியாகவும் இருக்கும் ஜெயா டிவி எப்படி நன்கு திட்டமிட்ட முறையில் சசிகலா வின் கட்டுப்பாட்டுக்குள போனது என்பதுதான் முக்கியமான விஷயம். 
அதுவும் ஜெயலலிதாவும், சசிகலா வும் சிறையில் இருந்த காலகட்டத்தில் இந்த முக்கியமான சம்பவம் நடந்தேறியிருப்பதுதான் கவனிக்கத்தக்கது. 
                                                                                                                                          - ஆர்.மணி

=====================================================================================
ன்று,
டிசம்பர்-21.
  • உலகின் முதல் குறுக்கெழுத்துப் போட்டி நியூயார்க் வேர்ல்ட் பத்திரிக்கையில் வெளியானது(1913)
  • சந்திரனுக்கு மனிதனை ஏற்றிச்சென்ற விண்கலமான அப்பல்லோ 8 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது(1968)
  • பெத்லகேம் நகரம், இஸ்ரேலிடம் இருந்து பாலஸ்தீனத்திடம் ஒப்படைக்கப்பட்டது(1995)
  • நார்வேயின் முதல் தேசிய பூங்காவாக ராண்டன் பூங்கா அறிவிக்கப்பட்டது(1962)

======================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?