வியாழன், 29 டிசம்பர், 2016

இது ‘மூக்கைப் பிடிக்கும்’ பிரச்னைதான்.

ஆனாலும், எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான பிரச்னை. சமீபகாலமாக பல திரைப்படங்களில் ‘வாயு விடுவதை’ காமெடி காட்சியாக்கி சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். உண்மையில் ‘வாயு பிரிதல்’ என்பது சிரிக்கக் கூடிய பிரச்னையா? 
இல்லை, சிலருக்கு இது சீரியஸான பிரச்னை!சென்ற தலைமுறை வரை டாக்டரிடம் வந்து மருந்து கேட்காத அளவுக்கு சாதாரணமாக  இருந்த ‘வாயு’ பிரச்னை,
 ‘நாகரிக உணவுப் பழக்கம்’ என்ற பெயரில் துரித உணவுகளையும் பாக்கெட் உணவுகளையும் சாப்பிட ஆரம்பித்ததால், பலரையும் வருத்தி எடுக்கும் பிரச்னையாக வளர்ந்துவிட்டது.
உலகில் ‘வாயு’ விடாத மனிதர் இல்லை. நம்மை அறியாமல் கண்ணை இமைப்பது போல், இந்த  ‘வாயு விடுதலும்’ இயல்பாக நிகழ்கிற உடலியல் விஷயமே! 
சுருக்கமாகச் சொன்னால், குடலில் உணவு செரிமானம் ஆகிறபோது விளையும் ஒரு கழிவுப் பொருள்தான் ‘வாயு’. சின்ன வித்தியாசம்... மற்ற கழிவுகளை அடக்கிக் கொள்ளலாம். இதை அடக்க முடியாது.‘வாயு’ பற்றி நமக்கு இருக்கும் புரிதல் ரொம்பவும் குறைச்சல். 
தவறான நம்பிக்கைகள்தான் அதிகம். 
அதனால்தான் முதுகுவலி, முழங்கால் வலி, இடுப்புவலி எனப் பல்வேறு வலிகளுக்கும் வாயுதான் காரணம் என்று முடிவு கட்டுகிறோம். என்னிடம் சிகிச்சை பெற கிராமத்து மூதாட்டி ஒருவர் வந்தார். ‘‘உடம்பெல்லாம் வாயு சுத்துது, டாக்டர். வலி தாங்க முடியலே!” என்றார். “அப்படியெல்லாம் வாயு சுத்த வாய்ப்பு இல்லையே!” என்றேன். 
“நீங்க ‘டிகிரி’ (ஸ்டெதாஸ்கோப்) வைச்சுப் பாருங்க. அப்போதான் தெரியும்!” என்று சவால் விட்டார்.

நான் ஸ்டெதாஸ்கோப்பை அவர் நெஞ்சில் வைத்தேன். உடனே  ‘ஆவ்வ்’ என்று பெரிய ஏப்பம் விட்டார். வயிற்றில் வைத்தேன். அப்போதும் ஏப்பம் விட்டார். முதுகைப் பரிசோதித்தேன். 

மீண்டும் ஒரு ஏப்பம்! 
அடுத்து அவரது கால்களைப் பரிசோதித்தேன். 
இப்போதும் ஏப்பம் வந்தது.
“பார்த்தீங்களா டாக்டர்? நீங்க தொடுற இடமெல்லாம் வாயுதான். அதனாலதான் இப்படி ஏப்பம் ஏப்பமா வெளியேறுது!” என்றார் அவர். 
“ஏப்பம் விட்டால் வாயு வெளியேறும். வாயு வெளியேறி விட்டால் வலி குறையும்” என்று அவர் நம்புவதால், மனரீதியாக அவராகவே ஏப்பத்தை வரவழைத்துக்கொள்கிறாரே ஒழிய, உண்மையில் அவருக்கு ஏப்பம் ஏற்படுவதில்லை. 
அதிலும் முதுகிலிருந்தும் முழங்காலில் இருந்தும் வாயு வெளியேறுவதில்லை!

நமது உடல் அமைப்பின்படி, மூச்சுப் பாதை, உணவுப் பாதை இந்த இரண்டு இடங்களில் மட்டுமே வாயு இருக்க முடியும். மூதாட்டி போல் பலரும் நம்புகிற மாதிரி முடி முதல் அடி வரை வாயு சுற்றுவதில்லை. அப்படிச் சுற்றினால், அது உயிருக்கே ஆபத்து!

 எப்படி என்பதைச் சொல்கிறேன்...மூச்சுப் பாதை மற்றும் உணவுப் பாதையைத் தாண்டி வாயு கசிந்தால், உடலை விட்டு வெளியில் போக அதற்கு வழி கிடையாது. அப்போது அருகில் உள்ள உறுப்புகளைத்தான் அது அழுத்தும். அப்படி இதயத்தையோ, நுரையீரலையோ அழுத்துகிறது என்றால், அது மரணத்தில்தான் முடியும்! நெஞ்சில்/வயிற்றில் குண்டு துளைத்தவர்கள் இறப்பதற்கு இது ஒரு காரணம்.

அஜீரணம், அடிக்கடி ஏப்பம் வருதல், வாயு பிரிதல், வயிற்று இரைச்சல், வயிற்று உப்புசம் ஆகிய அறிகுறிகளுடன் காணப்படும் உணவுப் பாதைப் பிரச்னையை ‘வாயுத் தொல்லை’ (Flatulence) என்கிறோம். 

நாம் அவசர அவசரமாகச் சாப்பிடும்போது, பேசிக்கொண்டே சாப்பிடும்போது, காபி, டீ மற்றும் பாட்டில் பானங்களை உறிஞ்சிக் குடிக்கும்போது நம்மை அறியாமலேயே காற்றையும் சேர்த்து விழுங்கி விடுகிறோம். 
இந்தக் காற்றில் 80 சதவீதம் இரைப்பையில் இருந்து ஏப்பமாக வெளியேறுகிறது. மீதி சிறுகுடல், பெருங்குடலைத் தாண்டிச் சென்று ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது.

அடுத்து, இரைப்பைக்கு வரும் உணவை அமிலம் சிதைக்கும்போதும், குடலில் உணவு செரிக்கப்படும்போதும் அங்கு சாதாரணமாகவே குடியிருக்கின்ற நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் நொதித்தல் எனும் செயல்முறை மூலம் பல ரசாயன மாற்றங்களை நிகழ்த்துகின்றன. 

அப்போது ஹைட்ரஜன், கார்பன்-டை-ஆக்சைடு, நைட்ரஜன், ஆக்சிஜன், மீத்தேன் எனப் பலதரப்பட்ட வாயுக்கள் உற்பத்தியாகின்றன. உதாரணமாக, உணவில் உள்ள மாவுச்சத்தும், புரதச்சத்தும் நொதிவடையும்போது ஹைட்ரஜன் உருவாகிறது.
 இரைப்பையில் அமிலம் சமநிலைப்படும்போது கார்பன்-டை-ஆக்சைடு உற்பத்தியாகிறது.

சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். இப்படித் தினமும் சுமார் 2 லிட்டர் வாயு நம் உடலில் உற்பத்தியாகிறது. இது வயிற்றில் தங்கினால் வயிறு உப்பிவிடும். அப்படியே வெளியேறினால் சுற்றுச்சூழல் கெட்டுவிடும். இதைத் தவிர்க்க உடல் செய்துகொண்ட ஏற்பாடுதான்  ‘வாயு பிரிதல்’! 

குடலில் உருவாகும் வாயுவில் அதிகபட்ச அளவு ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, சுவாசப் பாதை வழியாக வெளியேறுகிறது. 
மீதிதான் ஆசன வாய் வழியாக வெளியேறுகிறது.
சாதாரணமாக நமது குடலில் சுமார் 200 மி.லி. வாயுதான் இருக்க முடியும். இது வெளியேறுவது உடலுக்கு நல்லதுதான். ஆனால், கெட்ட வாடை கொண்ட வாயு வெளியேறினால், உடலுக்குள் கோளாறு இருப்பதாகவே அர்த்தம். எப்படி? 
சாதாரணமாக மேலே சொன்ன வாயுக்கள் உருவாகும்போது துர்நாற்றம் இருக்காது. ஆனால், குடலில் சில என்சைம்கள் பற்றாக்குறை ஏற்படும்போது, புரத உணவு சரியாக செரிக்கப்படுவதில்லை. 
அப்போது அம்மோனியா, ஹைட்ரஜன் சல்ஃபைடு, மெர்க்காப்டான் என புதிய வாயுக்கள் உருவாகும்.

இவைதான் கெட்ட வாடைக்குக் காரணகர்த்தாக்கள். இவர்கள் வெளியேறும்போதுதான் அக்கம்பக்கம் இருப்பவர்கள் மூக்கைப் பிடிக்கும் நிலைமை உருவாகிறது. 

பலருக்கு சத்தமில்லாமல் வாயு வெளியேறுகிறது; சிலருக்கு சத்தம் வருகிறது. என்ன காரணம்? 
பொதுவாக ஹைட்ரஜனும் மீத்தேனும் குறைந்த அளவில் ஆக்சிஜனுடன் கலந்தால் ‘புஸ்வாணம்’ மாதிரி சத்தம் கேட்கும். இந்தக் கலவையின் அளவு  அதிகமாகிவிட்டால் ‘அணுகுண்டு வெடி’யைப் போன்ற சத்தமும் கேட்கலாம்.

இது எல்லோரும் எதிர்பார்க்கிற கேள்வி. நாளொன்றுக்கு சராசரியாக 15 முறை வாயு வெளியேறினால் கவலைப்படத் தேவையில்லை. 

இந்த அளவு அதிகரித்தால் அல்லது வயிற்றில் வலி, கடுமையான இரைச்சல், உப்புசம், புளித்த ஏப்பம் போன்றவை சேர்ந்துகொண்டால் என்ன காரணம் என்று அறிய வேண்டும்.

புரதம் மிகுந்த பயறுகளையும் ஸ்டார்ச் நிறைந்த கிழங்குகளையும் அதிகமாகச் சாப்பிடுவது முதல் காரணம். அஜீரணம் அடுத்த காரணம். குடல் நோய்கள் மூன்றாவது காரணம். பொதுவாக, உணவுமுறையை சரி செய்தாலே பலருக்கும் இது சரியாகிவிடும். 

உணவுச் செரிமானத்துக்குத் தேவையான என்சைம்கள் குறைந்து, அஜீரணம் ஆகி, வாயுத் தொல்லை கொடுத்தால் என்சைம் கலந்த டானிக்குகள் உதவும். 
சில பேர் டாக்டரிடம் வரும்போது, “பால் குடிச்சாலே வயித்துக்கு ஆகலே டாக்டர். வயிறு ‘கடாபுடா’ன்னு இரையுது. அடிக்கடி வாயு பிரியுது” என்று கவலைப்படுவார்கள்.

இதற்குக் காரணம், இவர்களுக்கு ‘லேக்டேஸ்’ எனும் என்சைம் குறைவாகச் சுரக்கும். பாலில் உள்ள ‘லேக்டோஸ்’ எனும் சர்க்கரை செரிக்காமலேயே பெருங்குடலுக்குச் சென்றுவிடும். இதனால் வாயு நிறைய உற்பத்தியாகும். இவர்கள் சோயா பாலைக் குடித்து வாயுவை அரெஸ்ட் செய்யலாம். வாயுவை அதிகப்படுத்தும் நோய்கள் என்று ஒரு லிஸ்ட் இருக்கிறது. 

அதில் மலச்சிக்கல், குடல்புழுக்கள், அமீபியாசிஸ், குடல் காசநோய், புற்றுநோய், குடலடைப்பு, குடல் எரிச்சல் நோய் (Irritable Bowel Syndrome), கணைய நோய், கல்லீரல் நோய், பித்தப்பை நோய் ஆகியவை வி.ஐ.பி.க்கள். 
சிலருக்கு ஆன்டிபயாடிக்குகள், பேதி மாத்திரைகள் போன்றவற்றாலும் வாயுத் தொல்லை அதிகரிப்பது வழக்கம்.

தொப்பை இருப்பவர்களுக்கு, ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கிறவர்களுக்கு,  டென்ஷன் பேர்வழிகளுக்கு மற்றவர்களைவிட வாயு உற்பத்தி அதிகமாகவே இருக்கும். 

வயதானவர்களுக்கு உடற்பயிற்சி இல்லை, உடலியக்கம் குறைவு, போதுமான தண்ணீர் குடிக்கவில்லை போன்ற காரணங்களால் வாயுத் தொல்லை ரொம்பவே படுத்தி எடுக்கிறது.

வாயுவுக்குக் காரணம் உணவா, நோயா என்று டாக்டரிடம் பரிசோதித்துக்கொண்டால் இதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். காரணம் உணவென்றால், டாக்டர் யோசனைப்படி உணவுமுறையை மாற்றிக்கொண்டாலே பிரச்னை கட்டுக்குள் வந்துவிடும்.

 நோய்தான் காரணம் என்றால், அது சரியாகும் வரை சிகிச்சை பெற வேண்டும். அடிக்கடி கெட்ட வாடையுடன் வாயு பிரிந்தால் வயிற்றை அல்ட்ரா சவுண்ட் மற்றும் கொலனோஸ்கோப்பி டெஸ்ட் செய்துகொள்வது நல்லது. வாயு பிரச்னைக்கு இப்போது நல்ல மருந்துகள் உள்ளன; சீக்கிரத்தில் குணப்படுத்திவிடலாம்.
சிலர் “எனக்கு வாயுவே பிரியாது” என்று பெருமைப்படுவார்கள். 
அதுதான் ஆரோக்கியம் என்று நினைத்துக்கொள்வார்கள். உண்மையில் அது ஆபத்தானது. காரணம் தெரியுமா? காசநோய், புற்றுநோய், சொருகல் நோய் போன்றவை குடலைத் தாக்கினால், அங்கு வீக்கம் ஏற்பட்டு அடைப்பு உண்டாகும். வாயு வெளியேற முடியாமல் அங்கு மாட்டிக்கொள்ளும். 
இது ரொம்பவும் சீரீயஸான பிரச்னை!
 உடனே கவனிக்க வேண்டும்.

வாயுவைக் கட்டுப்படுத்த!

* கிழங்குகளையும் பயறுகளையும் குறைத்துக்கொள்ளுங்கள்.
* ஆவியில் அவித்த உணவுகளை உண்ணுங்கள்.
* வறுத்தது, பொரித்தது, ஃபாஸ்ட்ஃபுட், பாக்கெட் ஃபுட், ஸ்நாக்ஸ்
* அடிக்கடி வேண்டாம்.
* பாட்டில் பானங்களை மறந்துவிடுங்கள்.
* உடற்பயிற்சி செய்ய மறக்காதீர்கள்.
* தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.
* வெற்றிலை-பாக்கு, பான் பராக், மது, புகை வேண்டாம்.
* டாக்டர் சொல்லாமல் அல்சருக்கும், பேதிக்கும் மாத்திரை, மருந்து சாப்பிடாதீர்கள்.
வாயு உண்டாக்குபவை.
மொச்சை, பட்டாணி, பயறு, பீன்ஸ், சோயாபீன்ஸ், முட்டைக்கோஸ், வெங்காயம், காலிஃபிளவர், முந்திரி, வாழைக்காய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சாக்லெட், கேக், பிஸ்கட், பாப்கார்ன், சிப்ஸ், நூடுல்ஸ், செயற்கைப் பழச்சாறுகள், மென்பானங்கள், மசாலா மிகுந்த உணவுகள், முட்டை, பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகள், வினிகர், பீர்... இவற்றுடன் எந்த உணவைச் சாப்பிட்டால் உங்களுக்கு வாயு அதிகரிப்பதாகத் தோன்றுகிறதோ, அதையும் குறைத்துக்கொள்ளுங்கள்.

                                                                                          
                                                                                                                                           மருத்துவர்.கு.கணேசன்,
நன்றி:தினகரன்,  
=====================================================================================
ன்று,
டிசம்பர்-29.

  • தாமஸ் ஆல்வா எடிசன் வானொலிக்கான காப்புரிமம் பெற்றார்(1891)
  • உலகின் மிகப் பெரிய செப்பினாலான புத்தர் சிலை ஹாங்காங்கில் அமைக்கப்பட்டது(1993)
  • மங்கோலியா, கிங் வம்சத்திடம் இருந்து விடுதலை பெற்றது(1911)
  • ஐரிய சுதந்திர நாடு, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி அயர்லாந்து குடியரசு எனப் பெயரை மாற்றியது(1937)
======================================================================================