"'ந மோ" வின் கொடுங்கோன்மை
பிரதமர் நரேந்திர மோடி, 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது புத்திசாலித்தனமான செய்கையும் கிடையாது.
மனிதாபிமானமுள்ள செய்கையும் கிடையாது.
மோடியின் இந்நடவடிக்கையானது, கொடுங்கோன்மைமிக்கதும் எதேச்சதிகாரமானதும் ஆகும்.
கறுப்புப்பணத்தைக் கையாண்டிட இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறுவதானது, அனைத்து இந்தியர்களும் சிரிக்கத்தக்க ஓர் நடவடிக்கையாகும்.
முட்டாள்தனமான காரியம் செய்த பெரியவர்கள் அதை கடைசிவரை சரி என்றாக்க பலவற்றை செய்வார்கள் அதுதான் இந்தியாவில் மோடி மூலமாக நடக்கிறது.
தான் சமைத்த முயலுக்கு மூன்றே கால்தான் என்பது இதுதான்
நவம்பர் 8 அன்று தொலைக்காட்சியில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி தோன்றி, இவ்வாறு 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளார்.
புழக்கத்திலிருந்த ரூபாய் நோட்டுகளில் 86 சதவீத அளவிற்கு மதிப்புள்ள நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன் மூலம், ரொக்க நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள பிரதமர், இதனைச் சரிசெய்திட, ‘50 நாட்கள்’ ஆகும் என்றும், ‘ஊழல்’ மற்றும் ‘வரி ஏய்ப்பு’ ஆகியவற்றிற்கு எதிரான யுத்தத்தை மேற்கொண்டிருப்பதால் அதுவரைக்கும் கஷ்டத்தைத் தாங்கிக் கொள்ளுங்கள் என்றும் மக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மொத்தம் உள்ள கறுப்புப்பண அளவில் வெறும் 6 சதவீத அளவிற்குத்தான் நாட்டிற்குள் பணப் புழக்கத்தில் கறுப்புப்பணம் இருந்து வருகிறது.
நிச்சயமாக அது 10 சதவீதத்திற்குள்தான் இருந்திடும்.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததானது, சாதனை என்று பார்த்தோமானால் மிகமிகச்சிறிய அளவிற்குத்தான், ஆனால் இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய அளவில் சீர்குலைவினை ஏற்படுத்தி இருக்கிறது.
கறுப்புப்பணத்தைக் கருவறுக்க ஏதாவது செய்ய வேண்டும்தான்; ஆனால் அது புத்திசாலித்தனமாகவும், மனிதாபிமானத்துடனும் இருந்திட வேண்டும்.புதிய நோட்டுகள் இன்னமும் புழக்கத்திற்கு வராததால், வங்கிகள் ரூபாய் நோட்டுகள் இல்லாமல் திண்டாடுகின்றன.
ஏடிஎம் மிஷின்கள் புதிய நோட்டுகளை வைக்கக்கூடிய அளவிற்கு இன்னமும் மாற்றியமைக்கப்படாமல் மூடிக் கிடக்கின்றன.
கிராமப்புறங்கள் முறையான வங்கிச் செயல்பாடு இல்லாமல் துண்டித்துவிடப்பட்டுள்ளன.இதைக் கொடுங்கோன்மை என்று சொல்வேன்.
கொடுங்கோன்மை என்று சொல்வது ஏனென்றால், இது கரன்சி மீதான நம்பகத்தன்மையையே தகர்த்தெறிந்துவிட்டது என்பதால்தான். ரூபாய் நோட்டுகள் என்பவை பிராமிசரி நோட்டுகளாகும்.
அதாவது அரசாங்கம் மக்களுக்கு உறுதிமொழி கொடுக்கும் மதிப்பு மிக்க தாள்கள் ஆகும்.
எந்தவொரு அரசாங்கமும் அதனை மதித்திடவில்லை என்றால் அது மக்களுக்கு அளித்த உறுதிமொழியை மீறிய செயலாகும்.
திடீரென்று மக்களைப் பார்த்து அரசாங்கம் உனக்கு இந்த நோட்டுக்கு ரூபாய் தர மாட்டேன் என்று சொல்கிறது என்றால் அது கொடுங்கோன்மை இல்லாமல் வேறென்ன?
நான் ஒன்றும் முதலாளித்துவத்தின் விசிறி அல்ல.
அமர்த்தியாசென் |
முதலாளித்துவத்திற்கும் நம்பகத்தன்மைதான் திறவுகோலாகும்.
இந்த நடவடிக்கையானது அத்தகைய நம்பகத்தன்மைக்கு எதிரான ஒன்றாகும்.
முதலாளித்துவத்திற்குக் கூட மிகவும் அடிப்படையாக உள்ள பொருளாதாரத்தையே கீழறுத்திடும் அபாயம் இந்த நடவடிக்கையில் மறைந்திருக்கிறது. இவ்வாறான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழவில்லை என்றால், இன்று இதனை செய்த அரசாங்கம் நாளை இதனையே வங்கியில் உள்ள நோட்டுகளுக்கும் செய்ய முடியும்.
ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் எதுவும் செல்லாது என்று கூறமுடியும். என்னுடைய சங்கடம் என்னவென்றால், இந்த நடவடிக்கையின் காரணமாக சட்டத்திற்கு உட்பட்டு நடந்துவருகிற பிரஜைகளும், வெள்ளைப் பணம் வைத்திருக்கிற சாமானிய மக்களும் கடும் துன்பங்களை அனுபவிக்கத் தள்ளப்பட்டிருப்பதுதான்.
அரசாங்கத்துடன் ஒத்துப்போகாதவர்கள் எல்லாம் தேசத்துரோகிகள் என்று கூறுவதற்கு 31 சதவீத மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த பாஜக உரிமம் பெற்றதாகக் கூற முடியாது.
-டாக்டர் அமர்த்தியாசென் என்டிடிவிக்கு அளித்துள்ள பேட்டி
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
இன்று,
டிசம்பர்-04.
- இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் பிறந்த தினம்
- இந்திய கடற்படை தினம்
- உலகின் முதலாவது வார இதழான தி அப்சர்வர்- முதல் இதழ் வெளிவந்தது(1791)
- இந்தியாவில் உடன்கட்டை ஏறும் முறையை ஒழிக்க கவர்னர் வில்லியம் பெண்டிங் பிரபுவால் சட்டம் நிறைவேற்றப்பட்டது(1829)
கருவாட்டுப் பானை காவலுக்கு உரிமை கோரும் பூனைகள்
‘‘தேவை இன்னுமொரு துல்லியத் தாக்குதல்’’ என்கிற தலைப்பில் ஏ. சூர்யபிரகாஷ் என்பவர் தினமணி நாளிதழில் டிசம்பர் 2 அன்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
இவர்பிரஸார் பாரதி அமைப்பின் தலைவர்.
பிரதமர் மோடி கறுப்பு பணத்திற்கு எதிராக துல்லியத் தாக்குதலை நடத்திவிட்டாராம்,
இதனால் பதுக்கல் காரர்களை விட அவரது அரசியல் எதிரிகள்தான் அதிகமாக அதிர்ச்சி யடைந்து விட்டார்களாம், மக்கள் எல்லாம் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள்செல்லாது என்பதை ஆதரிக்கி றார்களாம், குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களின் தட்டுப்பாட்டால்தான் எதிர்க்கட்சிகள் அரசியல் நடத்த முடிகிறதாம், இதற்கு அரசு அதிகாரிகள் பிரதமரோடு இணைந்து செயல்படாதது தான் காரணமாம், இவை எல்லாவற்றிற்கும் சர்வரோகநிவாரணி தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் நிர்வாக மேலாண்மை நிபுணர்களை அரசு நிர்வாகத்தில் கொண்டு வர வேண்டுமாம்.
அப்படி கொண்டு வந்தால் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடுமாம், இதற்கெல்லாம் தீர்வாக மந்தமான அரசு நிர்வாகத்தின் மீது பிரதமர் துல்லியத் தாக்குதலை நடத்த வேண்டுமென இந்தியாவே எதிர்பார்க்கிறதாம்.
செல்லாக் காசு பிரச்சனையை பொறுத்தமட்டில் அரசின் எந்த பகுதியினர் பிரதமரோடு ஒத்துழைக்கவில்லை என்று சூர்ய பிரகாஷ் எந்த இடத்திலும் தெரிவிக்கவில்லை.
பிரதமர் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., பாஜக வகையறாக்கள் சொல்வது உண்மையானால் நவம்பர் 8ந் தேதி மாலை 6 மணி வரை அவரது அமைச்சரவை சகாக்களுக்கும், ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கும் கூட அவரது ‘துல்லியத் தாக்குதல்’ திட்டம் தெரிந்திருக்க வாய்ப் பில்லை.
அப்படியொரு நிலையில் அதற்கு முந்தைய ஒத்துழைப்பை பற்றி இவர் பேசியிருக்க மாட்டார் என்று நம்பலாம். ஆனால் நவம்பர் 8-ந்தேதிக்கு பிறகு எந்த இடத்திலும் பிரதமரோ, நிதியமைச்சரோ, அரசு பொறுப்பில் உள்ள யாருமோ, ரிசர்வ் வங்கி கவர்னரோ அரசுத்துறையின் எந்தப் பகுதியைப் பற்றியும் கேள்வி எழுப்பவில்லை.
இன்னும் சொல்லப் போனால் இந்த துறையில் சம்பந்தப் பட்ட வங்கி ஊழியர்கள் விடுப்பு எடுக்காமல் ஒவ்வொரு நாளும் நள்ளிரவுக்கு மேல் பணி செய்தும் மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இன்னொன்று சிறு தொகை நோட்டுக்கள் புதிதாக எங்குமிருந்தும் முளைத்து விடாது.
ஏற்கனவே உள்ள ஒட்டுமொத்த புழக்கத்தில் உள்ள 14 லட்சம் கோடி ரூபாயில் 2 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே சிறு தொகையிலான நோட்டுக்களின் புழக்கம்.
மாறாக, அரசாங்கம் 500 ரூபாய் நோட்டுக்களை உடனடியாக கொடுக்க ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அதைஅச்சடிப்பது ரிசர்வ் வங்கியின் பொறுப்பு. அந்த ரிசர்வ் வங்கிக்கு தலைமை தாங்குபவர் ரிசர்வ் வங்கியில் பொறுப் பேற்பதற்கு முன்பு எந்த அரசு அலுவலகத்திலும் வேலை செய்தவர் அல்ல.
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் அம்பானியின் சகலபாடி. தனியார் நிறுவனங்களில் மட்டுமே பணிபுரிந்தவர்.
அவர் மேற்பார்வையில் நடந்த துல்லியத் தாக்குதலில் தான் புதிய 500 ரூபாய் நோட்டு புதுவிதமான ஆயிரம் ஓட்டைகளோடு வெளியிடப்பட்டது. இப்படியிருந்தாலும் செல்லும், அப்படியிருந்தாலும் செல்லும் என்று உலகத்தில் எந்த புத்திசாலியும் ரூபாய் நோட்டின் இரண்டு வடிவங்களை அங்கீகரித்திருக்க மாட்டார்கள். தனியார் மேலாண்மை நிபுணரின் லட்சணம் இது தான்.
வேலியில் போன ஓணான்கள்
இந்த சூர்ய பிரகாஷ் பிரஸார் பாரதியை தலைமை தாங்குகிறவர். இதற்கு முன்னதாக இவர் எந்த அரசு பொறுப்பையும் வகித்தவர் அல்ல. மாறாக, பல்வேறு பத்திரிகைகளில் இருந்து கொண்டு சங்பரிவார் அமைப்புகளுக்கு நான் ஆர்.எஸ்.எஸ்.காரனும் அல்ல, பாஜககாரனும் அல்ல ஆனாலும் அவர்களை ஆதரிக்கிறேன் என்ற முகமூடியை அணிந்து கொண்டு வலம் வந்த தங்களுக்கு தாங்களே அறிவாளிகள் என்று பட்டப்பெயர் சூட்டிக் கொண்ட மகானுபாவர்களில் ஒருவர்.
இவர் தில்லியிலிருந்து செயல்படும் ஆர்.எஸ்.எஸ்.சின் துணை அமைப்பான விவேகானந்தா இண்டர்நேஷனல் பவுண்டேசன் என்கிற அமைப்பில் செயல்பட்டவர்.
இது ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் கூடாரம். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மைச் செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா, கூடுதல் முதன்மைச் செயலாளர் பி.கே. மிஸ்ரா, நம்மூர் ஆடிட்டர் குருமூர்த்தி இவர்கள் எல்லோரும் விவேகானந்தா இண்டர்நேஷனல் பவுண்டேசனின் உறுப்பினர்கள். இவர்கள் தான் இந்த தேசத்தை வழிநடத்தும் முக்கியமான இடங்களில் உள்ளவர்கள். இவர்கள் தேசத்தை வழிநடத்தும் லட்சணத்தை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ரிசர்வ் வங்கி இயக்குநர்களில் பெரும்பாலானவர்கள் தனியார் நிறுவனங்களில் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள். இவர் கள் எந்த லட்சணத்தில் அரசுக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்பது சூர்ய பிரகாசுக்கே வெளிச்சம்.
உர்ஜித் பட்டேல் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்.
இன்னொரு இயக்குநரான நசிகேட் மோர் 1987லிருந்து 2007 வரை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்காக பணிபுரிந்தவர். இன்னொரு இயக்குநர் நடராஜன் சந்திரசேகரன் 28 ஆண்டு காலம் டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்தவர். இன்னொரு இயக்குநரான பாரத் நரோத்தம் தோஷி மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத்தில் பணிபுரிந்தவர். இந்த திறமையாளர்கள் எல்லாம் சேர்ந்து தான் தோற்றத்தில் மாறுபாடு கொண்ட, மையில் மாறுபாடு கொண்ட 500 ரூபாய் நோட்டை அச்சடித்து வெளியிட்ட ரிசர்வ் வங்கியின் நிர்வாகத்தில் வீற்றிருக்கும் தனியார் நிறுவன மேலாண்மை வல்லுநர்கள்.
மத்திய வங்கியில் பொறுப்பிலிருக்கும் இவர்களின் லட்சணமே இப்படியென்றால், இவர் எந்த தனியார் துறை மேலாளர்களை பற்றி குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை.
இவர்களின் திறமை இந்த லட்சணம் என்றால் இவர்களின் யோக்கியாம்சம் அதைவிட பிரமாதம். தமிழகத்தில் தனியார் வங்கிகளுக்கும், பொதுத்துறை வங்கிகளுக்கும் 9971 கிளைகள் உள்ளன. இவற்றில் சுமார் 9000 கிளைகள் பொதுத்துறை வங்கி கிளைகள்.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு 402 கிளைகளும்,
ஆக்சிஸ் வங்கிக்கு 200 கிளைகளும்,
ஹெச்.டி.எப்.சி. வங்கிக்கு 270 கிளைகளும் உள்ளன.
இந்த மூன்று வங்கிகளுக்கும் சேர்த்து கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதிக்கு பிறகு ரூபாய் நோட்டுக்கள் ரூபாய் 6100 கோடி ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்டுள்ளது.
இதர 9000க்கும் அதிகமான கிளைகளை கொண்ட அனைத்து வங்கிகளுக்கும் சேர்ந்து 7800 கோடி ரூபாய் வழங்கப் பட்டுள்ளது.
அதாவது இந்த தனியார் வங்கி கிளைகள் ஒவ்வொன்றிற்கும் சராசரியாக 7 1/2 கோடி ரூபாயும், பொதுத் துறை வங்கி ஒவ்வொரு கிளைக்கும் 85 லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
இந்த பூனைகளைத் தான் மீனுக்கு காவல் வைக்க வேண்டுமென்று இன்னொரு பூனையான சூர்ய பிரகாஷ் வேண்டுகோள் வைக்கிறார்.
மக்கள் வாழ்வின் மீது துல்லியத் தாக்குதல் தொடுப்பதற்கான ஐந்தாம்படை அரசு நிர்வாகத்திற்குள் வலுவாக புகுந்திருப்பதன் வெளிப்பாடே இது.
அரசிடம் பணம் வாங்கிக் கொண்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் தான் மேலானவர்கள் என்று சொல்லும் சூர்ய பிரகாஷ், பிரஸார் பாரதியில் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்து செழிக்க வைத்தார் என்று அவர் தான் சொல்ல வேண்டும். பிரஸார் பாரதி போர்டில் உள்ள அசோக் டாண்டன், அனுப் ஜலோட்டா, சசிசேகர், சுனில் அலாக் ஆகியோர் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவியவர்கள் பல்வேறு தொழில் நடத்திக் கொண்டிருந்தவர்கள். இவர்க ளும் சூர்ய பிரகாசும் சேர்ந்து பிரஸார் பாரதியில் என்ன நட்டு வைத்திருக் கிறார்கள் என்பதை முதலில் உலகுக்கு சொல்லட்டும். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு மக்கள் நலனுக்கு எதிரானவர்களையெல்லாம் அரசு நிர்வாகத்தில் கொண்டு வர வேண்டும் என்று பேசுவதற்கு மரத்துப் போன மனதால் மட்டுமே முடியும். இந்த அரசாங்கம் ஆட்சிப்பொறுப் பிற்கு வந்த பிறகு பல்வேறு நிறுவனங் களை தனக்கு வேண்டிய நபர்களைக் கொண்டு தான் நிரப்பிக் கொண்டிருக்கிறது.
அதன் பலனையும் இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் இந்தியா அனுபவித்துக் கொண்டிருக்கிறது. உதாரணமாக, சிம்லாவில் உள்ள இந் தியன் இன்ஸ்டியூட் ஆப் அட்வான்ஸ்ட் ஸ்டடீஸ் (iனேயைn iளேவவைரவந டிக யனஎயnஉநன ளவரனநைள) என்கிற புகழ்பெற்ற நிறுவனத்திற்கு ஒரு பதிப்பகத்தை மட்டுமே வைத்திருக்கக் கூடிய சந்திரகலா பாடியா என்பவர் நியமிக்கப்பட்டார்.
நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் தலைவராக ஆர்.எஸ்.எஸ்.சின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான பாஞ்ச சன்யத்தின் முன்னாள் ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். விஸ்வேஸ்வரய்யா நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி நாக்பூரின் தலைவராக விஸ்ரம் ராமச்சந்திர ஜம்தார் என்கிற ஆர்.எஸ்.எஸ்.சின் பிரச்சாரகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்படி சூர்ய பிரகாஷ் போன்றவர்களின் கூட்டம் தான் இன்றைய தினம் அரசு நிறுவனங்க ளின் எல்லா பொறுப்பிலும் ஆக்கிர மித்துக் கொண்டிருக்கிறது.
இவர்கள் தனியார்மயத்தை தூக்கிப் பிடிக்க வந்த அதன் உண்மையான விசுவாசிகள். இதுஒருபுறமிருக்க, இந்த கட்டுரையில் சூர்ய பிரகாஷ் இந்தியா இது வரையிலும் காணாத தலைவர் நரேந்திர மோடி என்று எதற்கோ மாரடித்திருக்கி றார். சூர்ய பிரகாஷ் ‘பெரிய’ அறிவாளி.
அவருக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்காது.
க. கனகராஜ் |
திருக்கிறதா?
2. மோடி பதவியேற்பதற்கு முன்பாக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதல பாதாளத்தில் விழுந்து விட்டதாகவும், தான் வந்து அதல பாதாளத்தில் இருக்கும் ரூபாயை அலேக்காக தூக்கி அந்தரத்தில் வைத்து விடுவதாக பேசினார். அப்போது டாலருக்கு நிகரான ரூபா யின் மதிப்பு ரூ. 58.88 பைசா. இப்போது ரூ. 68.75 பைசா. இது தான் திறமையா?
3. மோடி பொறுப்பேற்ற போது சின்ன அரசாங்கம், பெரிய ஆளுகை (மினிமம் கவர்மெண்ட், மேக்சிமம் கவர்னன்ஸ்) என்று தன்னுடைய அமைச்சரவையில் 45 பேர் தான் என்று பீற்றிக் கொண் டார். இப்போது அவருடைய அமைச் சரவையில் அவரையும் சேர்த்து 78 பேர் கள் இருக்கிறார்கள். இந்தியாவின் வரலாற்றில் மிகப் பெரிய அமைச்சரவையில் இதுவும் ஒன்று. ஒருவர் இன்னும் நியமிக்கலாம் என்று விருப்பப்பட்டால் கூட நான்கு பேரைத் தான் நியமிக்க முடியும். இது தான் நேர்மையா?
4. லோக்பால் என்று ஒன்றை வைத்துக் கொண்டு வித்தை காட்டியே ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று வரையிலும் அதை நியமிக்கவில்லை என்பது ஏமாற்று இல்லையா?. இதை நீதிமன்றம் கடுமையாக கண்டிக்கவில்லையா?.
5.பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கும் போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் பொழுதெல்லாம் பெட்ரோல் - டீசல் விலை குறையும் என்று சொல்லிவிட்டு, கலால் வரியை 11 முறை ஏற்றி குறைந்த விலையின் பலனை மக்கள் அனுபவிக்க முடியாமல் செய்த பெருமைக்குரியவர் யார்?. இது ஏமாற்று இல்லையா?.
வேறு எந்த நாட்டிலும் இல்லாதவாறு விமான எரிபொருளுக்கான விலையை விட பெட்ரோல் - டீசல் விலை அதிகமாக இருப்பது இந்தியாவில் தானே. இது ஏழைகளுக்கான அரசா?
6. கறுப்பு பணத்தை மீட்க வந்த தேவதூதர் போல மோடி பீற்றித் திரிகிறார். அவரது தொண்டர் அடிப்பொடியாழ்வார்கள் இதன் மீது பாசுரங்களாக பாடித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
90 சதவிகிதம் கறுப்பு பணம் வெளிநாட்டில் இருக்கிறது என்று பேசியவர் மோடி தானே!
அவரது அரசைத் தானே உச்சநீதிமன்றம் உங்களை நம்பினால் எங்கள் காலத்திற்குள் கறுப்பு பணத்தை ஒழிக்க முடியாது என்று கண்டனம் தெரிவித்தது.
500, 1000 ரூபாய் நோட்டுக் கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு புது நோட்டுக்களை கள்ளத்தனமாக பெற்றவர்களும் (சேலம் அருண் குமார்), பழைய நோட்டுக்களை திருட்டுத் தனமாக கடத்தியவர்களும் (மராட்டிய அமைச்சர்), புதிய கள்ள நோட்டுக்களை அச்சடித்தவர்களும் (பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டத்தோடு சம்பந்தப் பட்ட அபினவ் வர்மா, விஷாக வர்மா), பிரதமரால் உந்தப்பட்டவர்கள் என்றால் எந்த சுவரில் முட்டிக் கொண்டு அழுவது.
இவர் கறுப்பு பணத்தை மீட்பார் என்று நம்புவது ஏமாளித் தனமாகவே இருக்கும்.
7. அனைவருக்குமான பொதுவிநியோக திட்டம் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லிவிட்டு கடைசியாக அப்படியொரு திட்டத்தை அமல்படுத்திக் கொண்டிருந்த தமிழகம் மற்றும் கேரள அரசுகளை நிர்ப்பந்தித்து இலக்கு தீர்மானித்த பொதுவிநியோக திட்டத்திற்கு கட்டாயப்படுத்திய பெருமை மோடிக்கு உண்டு. இப்படி ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டே போக முடியும். எந்த வகையிலும் நேர்மைக்கு சொந்தமில்லாத, உறுதிப்பாட்டிற்கு சம்பந்தமில்லாத, மக்களைப் பற்றி கவலைப்படாத ஒருவரை இந்தியா கண்டிராத தலைவர் என்று ஒருவர் சொல்வது நிச்சயமாக கூலிக்கு மாரடிப்பதுதான்.
- க. கனகராஜ்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
மோடி ஸ்டைலில் திருட்டை ஒழிப்பது எப்படி?
ஒரு நாட்டை ஒரு மன்னன் ஆண்டுவந்தான். அவனுடைய நிர்வாக திறமையின்மை காரணமாக அடிக்கடி களவு சம்பவங்கள் நடந்து வந்தது. மக்கள் அனைவரும் மன்னனிடம் முறையிட்டனர்.
அரசனோ நாட்டுமக்கள் அனைவரையும் வரிசையில் நிறுத்துமாறு அமைச்சர்களுக்கு உத்தரவிட்டான். அதே போல அனைவரையும் வரிசையில் நிறுத்திய போது ஒவ்வொருவருக்கும் நூறு கசையடி கொடுக்குமாறு ஆணையிட்டான்.
செய்வதறியாத மக்கள் ஏனென்று வினவிய போது "எப்படியும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இந்த கூட்டத்தில் தான் இருப்பார்கள். அவர்களுக்கும் தண்டனை கிடைத்துவிடுமல்லவா" என்று கொக்கரித்தான்.
பொதுமக்கள் "தவறு செய்யாத எங்களுக்கு எதற்கு தண்டனை? என்று கேட்ட போது "நாட்டின் நன்மைக்காக நூறு கசையடியை கூட தாங்க முடியாதா" என்று அங்கலாய்த்தான்.
இது எப்படி இருக்கு மோடிஜி?