யானைப் பசிக்கு

சோளப் பொரியா?

இந்த நூற்றாண்டில் கண்டிராத அளவுக்கு வறட்சி கொடுமை தமிழ்நாட்டில்ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவ மழை இரண்டும் பொய்த்து 62 சதவீதமானத்திற்கு அதிகமான மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 
உச்சநீதிமன்றம் தொடர்ந்து உத்தரவிட்ட போதிலும் கர்நாடக அரசுஅவ்வுத்தரவின் அடிப்படையில் கூட காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுத்து விட்டது.
பறிபோன 139 உயிர்பலி.
இக்காரணங்களால் மொத்த தமிழகமே வறட்சியின் கோரப் பிடியில் சிக்கியுள்ளது. 

டெல்டா மாவட்டங்கள் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடிகள் செய்யப்பட்ட நெல், கரும்பு, வாழை, பருத்தி, மக்காச்சோளம்,மெல்பரி, மணிலா, காய்கறிகள் உட்பட அனைத்து பயிர்களும் கருகி அழிந்து 
விட்டன.

தண்ணீரின்றி பல லட்சம் ஏக்கர் நிலங்கள் தரிசாக கிடக்கின்றன. 

விவசாய நெருக்கடியால் இதுவரை அதிர்ச்சி மற்றும் தற்கொலைகளால் 139 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் விவசாயிகள் மரணங்கள் அனுதினமும் தொடர்ந்துகொண்டுள்ளது. 
வேலை, வருமானம் தேடி விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் கிராமங்களை விட்டு நகர்ப்புறங்களை நாடிச் செல்கின்றனர்.
தற்போது ஏற்பட்டுள்ள வறட்சிக்கான நிவாரணம் வழங்கிட வற்புறுத்தி தமிழ்நாடுவிவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் டிசம்பர்28 முதல்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர்காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

வேறுபல சங்கங்களும் பல கட்டப் போராட்டங்களை நடத்தின. அரசியல் கட்சிகளும் அடுக்கடுக்கான கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்தன. இத்தகைய போராட்டத்தின் விளைவாக 30.12.2016 அன்று வேளாண்துறை,உணவுத்துறை, கைத்தறி, வருவாய்த்துறைஅமைச்சர்கள் நமது சங்கத் தலைவர்களுடன்பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 
முடிவில்கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்வரின்கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்போம் என வாக்குறுதி அளித்தார்கள்.

அந்த அடிப்படையில் 10.01.2017 அன்றுதமிழகமுதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வறட்சிநிவாரணம் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். சென்னை மாவட்டம் தவிரதமிழகத்தின் இதர அனைத்து மாவட்டங்களையும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்துள்ளார் என்பதை தவிர முதல்வர் அறிவித்துள்ள வறட்சி நிவாரணம் ஏமாற்றமளிப்பதாக உள்ளது.
வறட்சியால் 33 சதவிகிதத்திற்கும் மேல் பயிர்இழப்பு ஏற்பட்ட நிலங்களுக்கு நெல் மற்றும் இதர பாசனப் பயிர்களுக்கு ரூ.5465ம், மானாவாரி பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.3000, தென்னை போன்ற நீண்ட காலப் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.7287ம், மெல்பரி போன்ற பயிருக்கு ரூ.3000ம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதுபோக பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம்விவசாயிகள் இழப்பீட்டுக்கு ஏற்ப இழப்பீட்டுத்தொகை பெற வாய்ப்பு ஏற்படும் எனவும் கூறியுள்ளார்.

சாதாரணமாக, ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செலவு ரூ.15,000க்கும் அதிகமாகிறது. செலவு செய்த தொகையினை இழந்துள்ளதுடன், ஒரு ஆண்டு முழுவதும் வருமானம் ஏதுமின்றி வாழவேண்டிய நிலையில் விவசாயிகள் சிக்கியுள்ளார்கள். வறுமைப்பிடியில் சிக்கியுள்ளவர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம்உண்மையில் நிவாரணமல்ல. ஏற்பட்டுள்ள இழப்பில் நான்கில் ஒருபங்கை கூட ஈடுசெய்யாது. இந்த நிவாரணத்தை அறிவித்துள்ளதன் மூலம் விவசாயிகளை அரசு அலட்சியப்படுத்தியுள்ளது.

சாகுபடிக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தள்ளுபடி என்பதற்கு மாறாக, மத்திய காலக் கடனாக மாற்றி வழங்கப்படும் எனவும் முதல்வர்அறிவித்துள்ளார். 
அழிந்து போன பயிர்களுக்கு பெறப்பட்ட கடன்களை மத்திய காலக்கடன்களாக ஒத்தி வைப்பது என்ன நியாயம்? 
மூன்றாண்டுகளுக்குள் கடன்களை எப்படி திருப்பிச் செலுத்த இயலும்? 
மத்திய காலக்கடனாக மாற்றப்பட்டால் 10.25 சதவீதமான வட்டியுடன் திருப்பிச் செலுத்த கட்டாயப்படுத்துவது கூடுதல் தண்டனையே தவிர வேறல்ல.
தற்கொலை செய்து கொண்டுள்ள விவசாயிகள் 17 பேருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்குவதாகவும், இதர விவசாயிகளின் மரணங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் மூலம்அறிக்கை பெற்று அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
இருப்பினும் இந்த தற்கொலைகள் மற்றும் அதிர்ச்சி சாவுகள் வேறுபல்வேறு காரணங்களுக்காக ஏற்பட்டுள்ளதாக கூறுவதன் மூலம் விவசாய நெருக்கடிகள் விவசாயிகளை மரணத்தை நோக்கித் தள்ளியுள்ளதை திரையிட்டு மறைப்பதிலேயே அரசு குறியாக இருக்கிறது என்பது தெளிவு.

இதுபோன்று 2013ல் தமிழ்நாடுவறட்சியால் பாதிக்கப்பட்டபோது அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா டெல்டா மாவட்டங்களுக்கென்றும், இதர மாவட்டங்களுக்கென்றும் இரண்டு விதமான வறட்சி நிவாரண அறிவிப்புகளை 20.12.2013 அன்றுவெளியிட்டார். 
அதன்படி டெல்டா மாவட்டங்களில் 1.75 லட்சம் விவசாயிகளுக்கும், 3.61 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு காப்பீட்டுத் தொகையும் சேர்த்து ரூ.15,000 வழங்கப்பட்டது.

ஆனால் நான்காண்டுகளுக்குப் பின்னர்தற்போது வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதை விட குறைத்து, ஏக்கருக்கு ரூ.4,465 மட்டும்வழங்குவது, விவசாயிகளை காப்பாற்றும் அக்கறை அரசுக்கு உள்ளதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
காப்பீட்டுத் தொகை வழங்கப்பட உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். 
ஆனால் அதற்கான உத்தரவாதம் ஏதுமில்லை. கடந்த2015-16ம் ஆண்டு பாதிப்புக்குள்ளான நிலங்களுக்கு இன்று வரை காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு வறட்சிக்கான காப்பீடு விவசாயிகளுக்கு கிடைக்க பலமாதங்கள் தாமதமாகும். 
மேலும் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் காப்பீடு செய்யும் பணி ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி உள்ளிட்ட தனியார் வங்கிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தனியார் வங்கிகள் இழப்புகளை மோசமாக குறைத்துக் கணக்கிட்டு விவசாயிகளுக்கு காப்பீடு வழங்காமல் பார்த்துக் கொள்வதிலேயே அக்கறை காட்டுவார்கள்.
எனவே காப்பீட்டுத் தொகை தாமதமில்லாமல் வழங்கிடவும், முறையான கணக்கீடுகள் மேற்கொள்ளவும் மாநில அரசு தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.

வறட்சியால் மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ள விவசாயத் தொழிலாளர்கள் வேலையும், வருமானமும் இன்றி ஒருநாளைக்கு ஒருவேளை உணவுக்கே திண்டாடுவதோடு எதிர்காலத்தில் பட்டினிச்சாவுகள் ஏற்படும் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளனர். 
இக்கிராமப்புற ஏழைகளுக்கு நிவாரணம் வழங்க மறுப்பது ஏற்புடையதல்ல. குடும்பத்துக்கு ரூ.10,000 நிவாரணம் மற்றும் விலையில்லா அரிசியை 30 கிலோவாக 6 மாதத்துக்குஉயர்த்தி வழங்கிட அரசு முன் வர வேண்டும்.

வறட்சியைப் பயன்படுத்தி சிறிய, பெரியநீர்த்தேக்கங்கள் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், பாசன வடிகால் வாய்க்காலை தூர்வாரகூடுதல் நிதி ஒதுக்கி போர்க்கால அடிப்படையில் பணிகளைத் துவங்கிட வேண்டும். இதன்மூலம் எதிர்காலத்தில் கிடைக்கும் நீரைச் சேமித்துப் பயன்படுத்தவும்- வெள்ளச் சேதத்தைத் தடுக்கவும் முடியும் என வற்புறுத்தப்பட்டு வருகிறது.

இப்பணிக்காக ஊரக வளர்ச்சி மற்றும்ஊராட்சித் துறை மூலம் ரூ.3400 கோடிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. 
அதே சமயம் பொதுப்பணித்துறை மூலம் நீராதாரங்களை மேம்படுத்த ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
பெரும்பகுதியான நீராதாரங்கள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும்போது அப்பணிக்குரூ.25 கோடி ஒதுக்கி இருப்பது கண்துடைப்பாகவே அமையும். நீராதாரங்களை புனரமைப்பதில் அரசு தொடர்ந்து அக்கறையற்ற போக்கையே காட்டுகிறது. மேலும் ஊராட்சித் துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாதபோது ரூ.3400 கோடி ஒதுக்கி பணிகளை தொடங்குவது பெரும் ஊழலுக்கே வழிவகுக்கும்.

மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்பதைத் தவிர வேலைவருமானமின்றி பட்டினியில் வாடும்விவசாயத் தொழிலாளர்களுக்கு எந்த நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை. இத்திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய, மாநில அரசுக்கு அக்கறை இல்லை என்பதே கடந்த கால அனுபவம். 
இப்போதும் பெரும்பகுதியான மாவட்டங்களில் நான்கு மாதங்களாக சம்பளம்வழங்கப்படவில்லை. இதற்கான நிதியினைமத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்கவில்லை.மேலும் தற்போது இத்திட்டத்தில் வேலை பெறுவதற்கு ஆதார் அட்டையை மத்திய அரசு கட்டாயப்படுத்தி வருகிறது.
ரூ.1000, ரூ.500 ரூபாய் தாள்கள் செல்லாததாக்கப்பட்ட பின்னர் இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. 
இந்நிலையில் இத்திட்டப் பணி நாட்களை 150 நாட்களாக உயர்த்துவது என்பது அறிவிப்பாக மட்டும்இருப்பதற்கே வாய்ப்பு உள்ளது. 
இருப்பினும் தற்போதுள்ள மோசமான நிலையிலிருந்து கிராமப்புற ஏழை மக்களைக் காப்பாற்றிட, இத்திட்டத்தினை முறையாக செயல்படுத்திட மத்திய அரசு உரிய நிதி வழங்கிட வேண்டுமென மத்திய அரசை தமிழக அரசு நிர்ப்பந்திக்க வேண்டும்.
ஒட்டுமொத்த வறட்சி நிவாரணம் குறித்துஅரசு மறுபரிசீலனை செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் போதிய நிவாரணங்களை வழங்கிட வேண்டும். 
இவ்வாறு வழங்கப்படும் நிவாரண நிதியினை மாநில அரசு மத்திய அரசிடம் வற்புறுத்திப் பெற வேண்டும் என்பதே கிராமப்புற மக்களின் எதிர்பார்ப்பு.
                                                                                                                               -கே.பாலகிருஷ்ணன்
                                                                                                                                         கட்டுரையாளர் : தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

=======================================================================================
ன்று,
ஜனவரி -13.


  • மிக்கி மவுஸ் கார்டூன் துணுக்குகளாக முதன் முதலாக வெளிவரத் தொடங்கியது(1930)
  • விண்வெளியில் பறந்த முதல் இந்தியரான ராகேஷ் சர்மா பிறந்த தினம்(1949)
  • கானாவில் ராணுவ புரட்சி இடம்பெற்றது(1972)
========================================================================================




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?