தமிழகத்தைக் காக்க அதிமுகவை அழி !

சொத்துக் குவிப்பு வழக்கின் முதல் குற்றவாளி மா.மி இ.தெ பு.த ஜெயலலிதா, 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டு விட்டார். ஏ-1 சந்தனப்பேழையில் உறங்கும் நிலையில் ஏ. -2 வான சசிகலா, அதிமுக-வின் பொதுச்செயலர் ஆகி விட்டார். ஏ-3 யான இளவரசிக்கும் “சின்ன சின்னம்மா” என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுவிட்டன. ஏ-4 ஆன அம்மாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஏற்கனவே சின்ன எம்ஜியார் என்பதால் அவரைப் பற்றித் தனியே சொல்ல வேண்டியதில்லை.
சரியாக இருபது ஆண்டுகளுக்கு முன்னால், 1996 ஜுலையில், ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளான வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொமு ஆகிய அமைப்புகள் நடத்திய “விநோதகன் மருத்துவமனையைக் கைப்பற்றும் போராட்டம்” இப்போது நினைவுக்கு வருகிறது. 1996 தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, ஊழல் வழக்கு பதிவு செய்து ஜெயலலிதாவின் சொத்துகளைப் பறிமுதல் செய்யப் போவதாகக் கூறியது. ஜெயா சசி கும்பலை தண்டிப்பதோ அவர்களுடைய திருட்டுச் சொத்துக்களை பறிமுதல் செய்வதோ, சட்டபூர்வமான வழியில் சாத்தியமில்லை என்ற அரசியல் உண்மையை எடுத்துக் காட்டியது அந்தப் போராட்டம்.
அந்த காலகட்டத்தில் நாடு முழுவதும்  ஓட்டுக்கட்சிகளில் செல்வாக்கு செலுத்த தொடங்கியிருந்த புதிய வகை கிரிமினல் கும்பல்களை, திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் – என்று அடையாளப்படுத்தியிருந்தோம். கள்ளச் சாராயப் பேர்வழிகள், ஒயின்ஷாப் ஓனர்கள், கந்து வட்டிக்காரர்கள், லாட்டரி சீட்டு வியாபாரிகள், கட்டைப் பஞ்சாயத்து ரவுடிகள் உள்ளிட்ட ஒரு கூட்டம் திபுதிபுவென்று அரசியலில் நுழையத் தொடங்கியிருந்த காலம் அது. ஒவ்வொரு ஊரிலும் ஓட்டுக்கட்சிகளில் இருந்த இத்தகைய நபர்களை பெயர் சொல்லி அடையாளப்படுத்தி, அவர்களுடைய மக்கள் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி, தமிழகம் முழுவதும்  மேற்கொள்ளப்பட்ட இயக்கத்தின் தொடர்ச்சியாக அமைந்ததே அந்தப் போராட்டம்.
இன்று “சிங்கப்பூருக்கு அருகில் தீவு வாங்கியிருக்கிறார், இந்தோனேசியாவில சுரங்கம் வாங்கியிருக்கிறார், துபாயில் வணிக வளாகம் வாங்கியிருக்கிறார்” என்றெல்லாம் கண்டுபிடித்திருக்கிறார்களே, அந்த நத்தம் விசுவநாதன் முதல் புதுக்கோட்டை ராமச்சந்திரன் வரையிலானோர் அன்றைய ஒயின் ஷாப் ஓனர்கள் அல்லது கள்ளச் சாராய வியாபாரிகளே. இப்படிப்பட்ட கொள்ளைக் கூட்டத்தையே ஒரு கட்சி என்ற பெயரில் நடத்திக் காட்டிய பெருமை ஜெயலலிதாவையே சாரும்.
admk-1212-600-15-1481775039
அந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் ஓட்டுக்கட்சிகளில் செல்வாக்கு செலுத்த தொடங்கியிருந்த புதிய வகை கிரிமினல் கும்பல்களை, திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் – என்று அடையாளப்படுத்தியிருந்தோம்.
இதன் விளைவாகத்தான், 1991 முதல் 1996 வரையிலான முதல் தவணை ஆட்சியில் ஜெயா – சசி கும்பலும், அமைச்சர்களும் ஆடிய ஆட்டத்தைக் கண்டு ஆத்திரமுற்ற மக்கள், ஜெயலலிதாவை பர்கூர் தொகுதியில் தோற்கடித்தனர். தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற அவரது அமைச்சர்களை ஊருக்குள்ளேயே நுழைய விடாமல் அடித்து விரட்டினர். வேறு வழியின்றி, சசிகலாவை போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றி, வளர்ப்பு மகனை தகுதி நீக்கம் செய்து தன்னை உத்தமியாக காட்டிக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் ஜெயலலிதா. இது இருபது ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை.
இன்று, சேகர் ரெட்டியிடம் தங்க கட்டிகளும் 2000 ரூபாய் நோட்டுக் கட்டுகளும் கைப்பற்றப்படுகின்றன. தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் வீட்டிலும் தலைமைச் செயலகத்திலும் ரெய்டு நடக்கிறது. முதலமைச்சரான பன்னீர், சேகர் ரெட்டியுடன் திருப்பதியில் மொட்டை போட்ட புகைப்படம் வெளியாகிறது. இவை எதைப்பற்றியும் கவலையின்றி ஒரு மொட்டைத் தமிழர் கூட்டம் அம்மா சமாதியில் அழுதுவிட்டு உரிய தொகையைப் பெற்றுக் கொண்டு, வண்டியேறி ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் வந்திறங்கி, சின்னம்மா வாழ்க என்று ஜெயா டிவி காமெராவின் முன் டான்ஸ் ஆடிவிட்டு, டாஸ்மாக் பாரில் இளைப்பாறுகிறது. இருபது ஆண்டுகளில் தமிழ்ச் சமூகத்தையும் அரசியலையும் ஜெயலலிதா கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் இடம் இதுதான்.
000
நாடாளுமன்ற அரசியல் சீரழிவின் வரைவிலக்கணமாக இருபது ஆண்டுகளுக்கு முன் இனங்காணப்பட்ட திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் இன்று நாடாளுமன்ற ஜனநாயகத்தின் காவலர்கள்  ஆகிவிட்டார்கள். அதாவது இந்த அரசமைப்பின் “கற்பை” அழிப்பவர்களாக அன்று அடையாளம் காணப்பட்டவர்கள்தான் இன்று அதன் சட்டபூர்வமான கணவன்மார்கள்.
“ராம மோகன ராவ் ஊழல் தடுப்புத்துறையின் கண்காணிப்பு ஆணையராக என்ன தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட்டார்?” என்று பத்திரிகைகள் இன்று அதிசயித்துக் கொள்கின்றன. “81 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்” என்று, 2010 ஆம் ஆண்டிலேயே, அன்றைய ஊழல் தடுப்பு பிரிவின் இயக்குநரான உமாசங்கரால் குற்றம் சாட்டப்பட்டவர் ராம மோகன ராவ். ஒரு தேர்ந்த ஊழல் பேர்வழியை ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையராக நியமித்ததன் மூலம் “நேர்மை” என்ற விழுமியத்தையே எள்ளி நகையாடியவர் ஜெயலலிதா.
Slider
ஒரு தேர்ந்த ஊழல் பேர்வழியை ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையராக நியமித்ததன் மூலம் “நேர்மை” என்ற விழுமியத்தையே எள்ளி நகையாடியவர் ஜெயலலிதா.
இது ஜெயலலிதா என்ற வக்கிரமான ஆளுமையைப் புரிந்து கொள்வதற்கான எடுத்துக்காட்டு மட்டுமல்ல; இந்த அரசின் கட்டுமான உறுப்புகளே எப்படி வக்கரித்துப்போய் தமது எதிர்நிலை சக்திகளாக மாறி நிற்கின்றன என்ற உண்மையைப் புரிந்து கொள்வதற்கான எளிய சான்றும் கூட. சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதற்கானவை என்று கூறப்படும் எல்லா விதமான அதிகார அமைப்புகளிலும் குற்றவாளிகள்தான் கோலோச்சுகிறார்கள் என்பதை நிரூபிக்கும் சான்று இது.
ராம் மோகன் ராவின் கீழ் துறைச்செயலாளர்களாகவும், மாவட்ட ஆட்சியர்களாகவும் பணியாற்றிய கொள்ளைக் கூட்டத்தின் தளபதிகளும், கஞ்சா விற்பனை, கள்ளச்சாராயம், ஹவாலா, சிட்பண்டு மோசடி உள்ளிட்ட எல்லா வகை கிரிமினல் நடவடிக்கைகளையம் ஒருங்கிணைத்து நடத்திய போலீசு துறையும், குமாரசாமி, தத்து, சதாசிவம் போன்றோரடங்கிய  நீதித்துறையும், ஆற்று மணற்கொள்ளையை ஒருங்கிணைத்த பொதுப்பணித்துறையும், துணை வேந்தர் பதவிகளை ஏலம் விட்ட கல்வித்துறையும் அடங்கியதுதான் இந்த அரசமைப்பு. இதனை நிரூபிக்கின்ற உண்மைகள் அன்றாடம் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. இருந்த போதிலும் இந்த அரசமைப்பை சீர்திருத்திவிட முடியும் என்ற சட்டவாத மாயையில் படுத்து சுகம் காண்பவர்களை எந்த உண்மையாலும் எழுப்ப முடிவதில்லை.
“சொத்துக் குவிப்பு வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதா இறந்து விட்டதால், மற்ற மூன்று குற்றவாளிகளை தண்டிக்க முடியுமா?” என்று கேள்வியை ஊடகங்கள் கிளப்புகின்றன. “முதல் குற்றவாளி இறந்து விட்டாலும், கூட்டுக் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது” என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள ஒரு தீர்ப்பை ஆதாரமாக காட்டுகிறார்கள் சட்ட வல்லுநர்கள். சசிகலா தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதற்கு சட்ட வல்லுநர்கள் எதை ஆதாரமாக காட்டுகிறார்களோ, அதே ஆதாரத்தின் அடிப்படையில் சசிகலாவை அடுத்த முதல்வராக்க வேண்டும் என்கிறார்கள் அதிமுக அடிமைகள்.
“சின்னம்மா அப்ரூவர் ஆகியிருந்தால், அம்மாவும் இருந்திருக்க மாட்டார், அ.தி.மு.க வும் இருந்திருக்காது” என்று வெளிப்படையாக பொதுக்குழுவில் பேசியிருக்கிறார் வளர்மதி. “விசுவாசமான கூட்டுக் குற்றவாளி” என்பதுதான், இன்று அம்மாவுக்கு அடுத்தபடி முதல்வராவதற்கு சசிகலா பெற்றிருக்கும் முதன்மையான தகுதி.
Vituthalai
“தங்களிடமிருந்து திருடப்பட்ட சொத்து, திருடியின் மருமகளுக்கு சேருவது நியாயமா, திருடியின் தோழிக்கு சேருவது நியாயமா?” என்று டீக்கடை பெஞ்சுகளில் விவாதம் நடத்துகிறார்கள் தமிழர்கள்.
ஏ-1 இறந்து விட்டதால், ஏ-2 தான் முதல்வர் என்கிறது அதிமுக. உச்ச நீதிமன்றம் தண்டனை வழங்கப்போகிறதோ இல்லையோ, அதிமுக பொதுக்குழு சின்னம்மாவுக்கு பதவியை வழங்கிவிட்டது. குற்றம் பதவிக்கான தகுதியாகிவிட்டது. போதாக்குறைக்கு பொன்னையன் சசிகலாவின் வாரிசுரிமையை வேறு கோணத்திலிருந்து விளக்குகிறார். தனது ஸ்ரீராம் சிட் பண்டு பணத்திற்கு வாரிசாக சசியைத்தான் அம்மா குறிப்பிட்டிருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டி, தனக்குப் பின்னர் முதல்வர் பதவிக்கு அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவர் சசிகலாதான் என்பதை ஆணித்தரமாக நிறுவுகிறார். முதல்வர் பதவியை சிட் பண்டு பணத்தோடு ஒப்பிட்டுக் காட்டியிருக்கிறாரே, இதைவிடக் கூர்மையாக இந்த அரசியலை யாரேனும் விளக்க இயலுமா?
“பெரியண்ணி ஜானகிக்கு ராமாவரம் தோட்டம், சின்னண்ணிக்கு தமிழகமே போயசு தோட்டம்” என்று 1992 இல் ஒலித்தது ம.க.இ.க வின் இருண்டகாலம் ஒலிப்பேழைப் பாடல். “என்னுடைய அத்தை வளர்த்த கட்சி” என்று உரிமை கொண்டாடுகிறார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. அத்தை தி.மு.க என்றாலும் அ.தி.மு.க தானே!  “கொடநாடு எஸ்டேட், ஐதராபாத் திராட்சைத் தோட்டம் உள்ளிட்ட ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு நியாயமான வாரிசு சசியா தீபாவா?” என்ற பட்டிமன்ற ஆராய்ச்சியைக் கிளப்புகின்றன ஊடகங்கள். “தங்களிடமிருந்து திருடப்பட்ட சொத்து, திருடியின் மருமகளுக்கு சேருவது நியாயமா, திருடியின் தோழிக்கு சேருவது நியாயமா?” என்று டீக்கடை பெஞ்சுகளில் விவாதம் நடத்துகிறார்கள் தமிழர்கள். வடிவேலுவின் தராசுத் திருட்டு நகைச்சுவைக் காட்சிக்கு சிரிக்க முடிந்தது. அதைவிடக் கேடுகெட்ட நிலைக்குத் தாழ்ந்து விட்டது தமிழ்ச் சமூகம். சிரிக்கவா முடியும்?
000
ம்மாவின் மறைவால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடம் நிரப்பப்பட்டு விட்டது. சசிகலா பொதுச்செயலாளராக பதவி ஏற்றுவிட்டார். தூய வெள்ளை ஆடை தரித்த அட்டைகளின் சட்டைப்பையில் அம்மாவுடன் சின்னம்மாவின் படம். வெள்ளை என்பதும் திருடர்களின் உடையாகிவிட்டது. எவ்வளவு கருப்போ அவ்வளவு வெள்ளை.
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நால்வர் குழுவை ஜெ அமைத்திருந்தாலும், பேச்சுவார்த்தையை சசிகலாதான் நடத்துவாராம். ஒரு மூத்த கம்யூனிஸ்டு கட்சி தலைவர் கூறியதாக ஆங்கில இந்து நாளேடு எழுதியிருக்கிறது. அந்த மூத்த தலைவர் தா.பா வா, டி.கே.ரங்கராசனா தெரியவில்லை. ஏன் முக்காடு போட்டுக் கொள்ளவேண்டும்? அடுத்த கூட்டணிக்கு சின்னம்மாவுடன்தானே பேச்சுவார்த்தை! இனி வெட்கப்பட என்ன இருக்கிறது?
jaya1
முதலமைச்சரான பன்னீர், சேகர் ரெட்டியுடன் திருப்பதியில் மொட்டை போட்ட புகைப்படம் வெளியாகிறது. இவை எதைப்பற்றியும் கவலையின்றி ஒரு மொட்டைத் தமிழர் கூட்டம் அம்மா சமாதியில் அழுதுவிட்டு உரிய தொகையைப் பெற்றுக் கொண்டு, வண்டியேறி ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் வந்திறங்கி, சின்னம்மா வாழ்க என்று ஜெயா டிவி காமெராவின் முன் டான்ஸ் ஆடிவிட்டு, டாஸ்மாக் பாரில் இளைப்பாறுகிறது.
அதிமுக என்ற கொள்ளைக் கூட்டத்தை நடத்திச் செல்வதற்கு என்ன தெரியவேண்டுமோ அது சசிகலாவுக்குத் தெரியும். நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை, கல்வி, போக்குவரத்து, பத்திரப்பதிவு, மதுவிலக்கு, வணிகவரி, உள்ளாட்சி, வேளாண்மை, சுகாதாரம், தொழில் என்று ஒவ்வொரு துறை அமைச்சரின் அன்றாட வசூல் எவ்வளவு, அதில் தோட்டத்துக்கு சேர வேண்டிய தொகை எவ்வளவு என்பது சசிகலாவுக்குத் தெரியும். அதை வேவு பார்த்து சொல்வதற்கு உளவுத்துறை அதிகாரிகளைப் பயன்படுத்த தெரியும். ஏமாற்றுகின்ற அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவதற்கும், மிரட்டுவதற்கும், பதவியைப் பறிப்பதற்கும் தெரியும்.
சாதிக்காரர்களை நியமித்து போலீசு துறையை கட்டுப்படுத்துவது எப்படி, மற்ற ஆதிக்க சாதி அமைச்சர்கள் அதிகாரிகளை கண்காணிப்பது எப்படி, சமாளிப்பது எப்படி, மற்ற கட்சிகளில் கைக்கூலிகளை உருவாக்குவது எப்படி என்பது உள்ளிட்ட நிர்வாகக் கலைகள் தெரியும்.  தேர்தல் கமிசன் அதிகாரிகள் முதல் நீதியரசர்கள் வரை அனைவரையும் விலைக்கு வாங்கும் வழிமுறைகள் தெரியும். ஒரு கிரிமினல் மஃபியாக் கும்பலின் தலைவிக்கு என்னவெல்லாம் தெரிய வேண்டுமோ அத்தனையும் தெரியும்.
வழக்கமாக, ஒரு கிரிமினல் மஃபியா கும்பல் என்பது, கொலை, கொள்ளை, போதை மருந்து வியாபாரம், கட்டைப் பஞ்சாயத்து, வழிப்பறி உள்ளிட்ட கிரிமினல் குற்றங்களை செய்வதற்கான சமூக விரோதிகளையும் ரவுடிகளையும் ஒரு வலைப்பின்னலாக உருவாக்கிப் பராமரிக்கிறது. ஜெ – சசி கும்பலோ, அரசு எந்திரத்தையே அத்தகைய மஃபியாவாக மாற்றியிருக்கிறது. ஜெயலலிதாவுக்கு ராம மோகன் ராவும் பிற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியர்களும் போலீசு அதிகாரிகளும் துணைவேந்தர்களும் காட்டும் விசுவாசம் என்பது கொள்ளையில் அவர்கள் பெறுகின்ற பங்குடன் நேரடித் தொடர்புள்ளது.
ஷீலா பாலகிருஷ்ணன் என்ற ஓய்வு பெற்ற அதிகாரியை ஆலோசகர் என்ற சட்டவிரோதப் பதவியில் ஜெ வைத்துக் கொண்டிருந்ததற்கும், ராம மோகன ராவுக்கு முறைகேடாகப் பதவி உயர்வளித்து தலைமைச் செயலர் ஆக்கியதற்கும், இன்று சசிகலா முதல்வராக வேண்டுமென்று வெளிப்படையாகவே துணைவேந்தர்கள் காவடி எடுப்பதற்கும் இதுதான் காரணம்.
000
jaya2
பாப்பாத்தி ஜெயாவை காப்பாத்தி விடுவதற்குத்தான் வாஜ்பாயி முதல் மோடி வரை அனைவரும் முயன்றார்கள்.
ற்று மணல் கொள்ளை பற்றி பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறும் விவரங்களைப் பாருங்கள். 2003-04 ஆம் ஆண்டில் 3639 கோடியாக இருந்த டாஸ்மாக் வருவாய் 2013-14 இல் 23,401 கோடியாக அதிகரித்துள்ளது என்றும், அதே நேரத்தில் 2003-04 இல் 150 கோடியாக இருந்த மணல் வருவாய் 2013-14 இல் 133.37 கோடியாக குறைந்துள்ளது என்றும் எடுத்துக்காட்டுகிறார் ராமதாஸ். நாளொன்றுக்கு 8300 லாரி மணல்தான் விற்கப்படுவதாக அரசு கணக்கு. உண்மையில் ஒரு லட்சம்  லாரி மணல் அள்ளப்படுகிறது என்றும், கடந்த 13 ஆண்டுகளில் 4.75 லட்சம் கோடி ரூபாய் இதில் வருமானம் கிடைத்துள்ளது என்றும் குற்றம் சாட்டுகிறார் ராமதாஸ். ஆற்று மணலை அரசாங்கமே விற்கலாம் என்று ஆலோசனையைச் சொன்னவர் ராம மோகனராவ். அமல் படுத்தியவர்கள் ஆறுமுகசாமி, படிக்காசு, சேகர் ரெட்டி, புதுக்கோட்டை ராமச்சந்திரன், பன்னீரின் பினாமி பாஸ்கர் என்ற பெரியதொரு கூட்டம்.
தமிழகத்திலுள்ள சாராய ஆலைகளிலிருந்து மாதத்திற்கு 80 லட்சம் பெட்டிகள் சாராயமும்,  ஒரு கோடி பீர் பாட்டில்களும் கொள்முதல் செய்யப்படுவதாகவும், சாராயப் பெட்டிக்கு 60 ரூபாயும்,  பீர் பெட்டிக்கு 35 ரூபாயும் பிரிமியர்  சாராயத்துக்கு பெட்டி ஒன்றுக்கு 10 ரூபாயும் கமிசன் என்றும் கணக்கு சொல்கிறது நக்கீரன். இதில், போயசுக்கு 60 % பல்வேறு அதிகாரிகளுக்கு 35% மந்திரிக்கு 5 % பங்கு வைக்கப்படுவதாக கூறுகிறது.
10,000 கோடி மதிப்புள்ள பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் சேகர் ரெட்டிக்குத் தரப்பட்டிருப்பதாகவும், அதில் 2500 கோடி போயசுக்குத் தரப்பட்டிருப்பதாகவும் கூறுகிறது ஜுவி. அரசுப் பயன்பாட்டுக்கான மென்பொருட்கள், இலவச லேப்டாப், மருத்துவ மனை உள்ளிட்ட இடங்களின் கான்டிராக்ட் ஊழியர் பணிகள் அனைத்தும் ராம மோகன ராவின் மகன் விவேக்கிற்கு தரப்பட்டிருக்கின்றன.
இன்றைக்கு சேகர் ரெட்டி, பிரேம் ரெட்டி, ராம மோகன ராவ், விவேக், ரோசய்யா, வெங்கய்யா நாயுடு ஆகியவர்கள் தெரிகிறார்கள்.  இதற்கு முன்னர் சாராய முதலை சுப்பிராமி ரெட்டி, சந்திரபாபு நாயுடு, சரத் பவார், விஜய் மல்லையா போன்றோருடன் ஜெ சசி கும்பல் கள்ளத் தொடர்பு வைத்திருந்தது. கோவை கன்டெயினர் உள்ளிட்ட கள்ளப்பணங்களைத் தற்காலிகமாகப் பதுக்கி வைப்பதற்கான இடமாக ஆந்திரமும் தெலுங்கானாவும்தான் ஜெ வுக்குப் பயன்பட்டிருக்கின்றன. செல்லாத நோட்டை மாற்றுவதற்கு திருப்பதி உண்டியலை சேகர் ரெட்டி பயன்படுத்தியிருப்பதால், இவர்களுக்கு ஏழுமலையானின் ஆசியும் உண்டு என்று தெரியவருகிறது.

இன்றைக்கு சேகர் ரெட்டி, பிரேம் ரெட்டி, ராம மோகன ராவ், விவேக், ரோசய்யா, வெங்கய்யா நாயுடு ஆகியவர்கள் தெரிகிறார்கள். இதற்கு முன்னர் சாராய முதலை சுப்பிராமி ரெட்டி, சந்திரபாபு நாயுடு, சரத் பவார், விஜய் மல்லையா போன்றோருடன் ஜெ சசி கும்பல் கள்ளத் தொடர்பு வைத்திருந்தது.
பரஸ்மால் லோதா என்ற கல்கத்தா மார்வாடியின் மூலம் துபாயில் ஒரு வணிக வளாகம், இந்தோனேசியாவில் சுரங்கம், தாய்லாந்தில் தனித்தீவு உள்ளிட்ட சுமார் 30,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை நத்தம் விசுவநாதன் மட்டுமே வாங்க முடிந்திருக்கிறது என்றால் மன்னார்குடி மஃபியா அடித்திருக்கக்கூடிய கொள்ளையின் அளவை கற்பனையும் செய்து பார்க்க இயலவில்லை.
“ஜெயா ஆட்சியில் ஊழல் நடந்தது” என்று கூறுவது தவறு. பொதுச்சொத்தையும் கருவூலத்தையும் கொள்ளையிடுவதற்காகத்தான் ஆட்சியே நடந்தது. லேப் டாப் முதடல் சத்துணவு வரையிலான அனைத்தும் இந்தக் கும்பலின் கொள்ளையை மையப்படுத்தியே திட்டமிடப்பட்டன.
சேகர் ரெட்டி மூலம் ஒரு வேட்பாளருக்கு 4 கோடி ரூபாய் வீதம் 197 வேட்பாளர்களுக்கு கடந்த தேர்தலில் பணம் விநியோகிக்கப் பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் ராமதாஸ். இது மிகவும் குறைவான மதிப்பீடு என்பதுதான் சென்ற சட்டமன்றத்தேர்தல் காட்டும் உண்மை. இருந்த போதிலும், கரூர் அன்புநாதன் சுதந்திரமாகத் திரிகிறான். கோவை கன்டெயினர் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை. சேகர் ரெட்டிக்கும் எதுவும் நடந்துவிடப் போவதில்லை. வருமான வரித்துறை சோதனைகள் எனப்படுபவை என்றைக்குமே வசூலுக்காக நடத்தப்படும் நாடகங்கள்தான்.
இன்று கருப்புப் பணத்தை ஒழிப்பதாக காட்டுவதற்கு மோடி நடத்தி வரும் நாடகத்தில் இது இன்னுமொரு காட்சி.  திருடனிடம் பிடுங்கித் தின்னும் கிரைம் பிராஞ்சு போலீசைப் போல, இவர்களிடமிருந்து முடிந்த வரை கறப்பதற்கு நடத்தப்படும் வேட்டை. இது மோடிக்கு கிடைத்திருக்கும் இரண்டாவது கன்டெயினர்.
anna-square
தமிழகத்தின் முகத்தின் மீது நெளிந்து கொண்டிருக்கும் அதிமுக என்ற விஷப்பூரானை நம் சொந்தக் கரங்களால் நசுக்கி அழிப்பதொன்றுதான், தமிழகம் பிழைப்பதற்கு வழி.
மற்றபடி பாப்பாத்தி ஜெயாவை காப்பாத்தி விடுவதற்குத்தான் வாஜ்பாயி முதல் மோடி வரை அனைவரும் முயன்றார்கள். வாஜ்பாயி காலத்தில் தம்பிதுரையை மத்திய சட்ட அமைச்சராக நியமித்தது முதல் மோடி ஆட்சியில் வருமானவரித்துறை வழக்கிலிருந்து ஜெயாவை விடுவித்தது வரை இதற்கு சான்றுகள் பல. நாலும் மூணும் எட்டு என்று குமாரசாமி அளித்த தீர்ப்பை பாஜக வினர் கொண்டாடியதையும், தண்டிக்கப்பட்ட குற்றவாளியாக ஜெயா இருந்தபோதே போயசு தோட்டத்துக்கு நிதியமைச்சர் விஜயம் செய்ததையும் நாடறியும். திராவிட இயக்கத்தை உள்ளிருந்து அழித்த தன்னுடைய இயற்கையான கூட்டாளியான ஜெயலலிதாவின் செயற்கரிய சாதனையை பார்ப்பன பாசிசக் கும்பல் ஒருபோதும் மறந்து விடாது.
“சுயமரியாதையும் கவுரவமும் இழந்த கையேந்திகளாகவும் அடிமைகளாகவும் தமிழ்ச் சமுதாயத்தைச் சீரழிப்பது என்கிற பார்ப்பனப் பாசிசக் கும்பலின் கனவுத் திட்டத்தையே, தனது தனிப்பட்ட இலட்சியமாகக் கொண்டிருக்கும் ஒரு சதிகாரியின் பிடியில் சிக்கியிருக்கிறது தமிழகம். ஆற்றுமணல் கொள்ளை, தாதுமணற்கொள்ளை, கிரானைட் கொள்ளை, தண்ணீர்க் கொள்ளை, ரியல் எஸ்டேட் என்று இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் கிரிமினல் கும்பல்கள், அதிகார வர்க்க கிரிமினல்கள், பன்னாட்டு நிறுவனங்கள் சார்ந்த தரகுக் கும்பல்கள் தமிழகத்தைத் தமது வேட்டைக்காடாக்கிக் கொண்டிருக்கின்றன. பிழைப்புவாத அடிமைகளின் கும்பலாகத் தோன்றிய அ.தி.மு.க. என்ற கட்சியோ, மேற்சொன்ன தொழில்கள் அனைத்திலும் ஊடுருவியிருக்கும் தொழில்முறை கிரிமினல் மாஃபியாவாக வளர்ந்திருக்கிறது”
என்று நவம்பர் 2014 இல் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.
இப்போது மஃபியாவின் தலைமைப் பதவியை உடன்பிறவா சகோதரி கைப்பற்றியிருக்கிறார். கொள்ளைக் கூட்டத்தின் உள் முரண்பாடுகள் காரணமாக அதிமுக கும்பல் தமக்குள் மோதிக் கொண்டு அழியவும் கூடும். அதனை எதிர்பார்த்துக் காத்திருக்கக் கூடாது. தமிழகத்தின் முகத்தின் மீது நெளிந்து கொண்டிருக்கும் அதிமுக என்ற விஷப்பூரானை நம் சொந்தக் கரங்களால் நசுக்கி அழிப்பதொன்றுதான், தமிழகம் பிழைப்பதற்கு வழி.                                                                                                                                                                                                                                                                          - சூரியன்,
  • புதிய ஜனநாயகம், ஜனவரி – 2017-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?