செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

20 ஆண்டுகால கதை,

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் 20 ஆண்டுகால கதை விவரம்.

1996

ஜூன் 14ஆம் தேதி, 1991-1996 ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சொத்துச் சேர்த்ததாக அப்போதைய ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடர்ந்தார். ஜூன் 31ம் தேதி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை டி.ஜி.பி., லத்திகா சரணிடம் இவ்வவழக்கை விசாரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இஅவரது விசாரணையின் அடிப்படையில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் ஜாமீனில் வெளி வந்தார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.1997

ஜூன் 4ஆம் தேதி ஊழல் தடுப்புச் சட்டத்தில் ஜெயலலிதா மீது வழக்குத் தொடரப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அக்டோபர் 1ஆம் தேதி, தமிழக ஆளுநர் தொடர்ந்த மனுக்களை நீதிமன்றம் நிராகரித்தது.

2000

ஆகஸ்டு மாதம் வழக்கின் விசாரணை தொடங்கியது. 250 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

2001

மூன்று அரசு வழக்கறிஞர்கள் ராஜினாமா செய்தனர். விசாரணை அதிகாரி, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆகியோர் மாற்றப்பட்டனர். இந்த காலகட்டத்தில் ஜெயலலிதா தமிழக முதல்வராகப் இருந்தார்.

2002
நவம்பர் மாதம் மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கியது. 76 சாட்சிகள் குறுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டனர். ஜெயலலிதாவுக்கான கேள்விகள், அவரது வீட்டுக்கே அனுப்பப்பட்டன.

2003

குறுக்கு விசாரணையின் போது 76 சாட்சிகளில் 64 பேர் பிறழ்சாட்சிகளாக மாறினார்கள். பிப்ரவரி மாதம் வரை விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கின் மீதான விசாரணை வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்று திமுக பொதுச்செயலர் அன்பழகன், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதில், சுப்பிரமணியன் சாமியும் இணைந்தார். அதன்படி, நவம்பர் 18ஆம் தேதி, கர்நாடகாவிற்கு இந்த வழக்கின் விசாரணை மாற்றப்பட்டது. கர்நாடக அரசு சார்பில் புதிய நீதிபதியும் அரசு வழக்கறிஞரும் நியமிக்கப்பட்டனர்.2005

அரசு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யா நியமிக்கப்பட்டார். அவர் இவ்வழக்கின் விசாரிணையை மீண்டும் தொடங்கிய போது, தனக்கான கேள்விகளை வீட்டுக்கு அனுப்பும் படியும், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்கவும் ஜெயலலிதா கோரினார். இதற்கு நீதிமன்றம், காணொளிக் காட்சி மூலமும் எழுத்து மூலமாகவும் ஜெயலலிதா விளக்கமளிக்கலாம் என்று அனுமதித்தது.

செப்டம்பரில் அரசு தரப்பில் 259 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. அது பற்றி விளக்கமளிக்க ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அக்டோபரில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது, 567 கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். பின், நவம்பரில் மீண்டும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி 192 கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.2012

ஆகஸ்டில், இந்த வழக்கை விசாரித்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யாவுக்கு கர்நாடக அரசின் அட்டர்னி ஜெனரல் பதவி வழங்கப்பட்டது. இதனால், அவர் அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்யதார்.

2013

பிப்ரவரியில், இவ்வழக்கை விசாரிக்கும் புதிய சிறப்பு வழக்கறிஞராகப் பவானி சிங் பொறுப்பேற்றார். செப்டம்பரில், இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பாலகிருஷ்ணா பணிஓய்வு பெற்றார். புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் டி குன்ஹா நியமிக்கப்பட்டார்.

2014

செப்டம்பர் 27ஆம் தேதி, ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் மீதான குற்றச்சாட்டை உறுதிசெய்து பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பு வழங்கினார். ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும் மூவருக்கும் தலா ரூ.10 கோடியும் அபாரதம் விதிக்கப்பட்டது. நால்வரும் உடனடியாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.

செப்டம்பர் 29ஆம் தேதி, பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், இவ்வழக்கில் அளிக்கப்பட்ட தண்டனையிலிருந்து ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கவும் கோரப்பட்டது.

செப்டம்பர் 30ஆம் தேதி, ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை உடனடியாக விசாரிக்க கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, அக்டோபர் 1ஆம் தேதி ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரிக்கப்படும் அறிவிக்கப்பட்டது.

அக்டோபர் 1ஆம் தேதி, ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மற்றும் மேல்முறையீட்டு மனுவை உடனடியாக விசாரிக்க விடுமுறைக்கால நீதிபதி ரத்னகலா மறுத்தார். அக்டோபர் 7ஆம் தேதி, ஜெயலலிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்தது. இதனால், ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம், அக்டோபர் 18ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியது.

2015
பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் மீதான விசாரணை ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் தரப்பில் ஏறத்தாழ 400 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வமான வாதம் தாக்கல் செய்யப்பட்டது.

மே 11ஆம் தேதி கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி பெங்களூர் சிற்ப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்துசெய்து ஜெயலலிதா, வி.கே.சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வரையும் முழுமையாக விடுதலை செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து, மே 23ஆம் தேதி, ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்றார்.

ஜூன் மாதம், கர்நாடக உயர்நீதிமன்ற அளித்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது.

2016

மே 23, ஆம் தேதி ஜெயலலிதா தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் முதல்வரானார்.

ஜூன் மாதம், உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கின் மீதான வாத-பிரதிவாதங்கள் அனைத்தும் நிறைவடைந்தன. வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

2017

கர்நாடக அரசின் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு நீண்டகாலமாக தாமதிக்கப்பட்டு வருவதை நினைவூட்டும் விதமாக உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு பதிலளித்த, உச்சநீதிமன்றம் இன்னும் ஒரு வாரம் பொறுத்திருக்குமாறு பிப்ரவரி 6ஆம் தேதி தெரிவித்தது.

பிப்ரவரி 12 ஆம் தேதி உச்சநீதிமன்றம் விதித்த ஒரு வார கெடு நிறைவு பெறுவதைத் தொடர்ந்து, தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவ்வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவரான அமித்வா ராய் விடுப்பில் சென்றதால், செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 14ஆம் தேதி) தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்ப்பு எழுந்தது.

பிப்ரவரி 13: முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை (பிப்ரவரி 14 ஆம் தேதி) காலை 10.30 மணிக்கு இறுதித்தீர்ப்பு வெளியாகும் என்று உச்சநீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. பினாகி சந்திர கோஷ், அமித்வா ராய் ஆகிய நீதிபதிகள் அடங்கி அமர்வு இத்தீர்ப்பை வழங்குகிறது.என்று அறிவிக்கப்பட்டது. 

பிப்ரவரி 14, முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் நான்கு பேரும் குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டது.
இவ்வழக்கில் இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே சாதனை படைக்கும் விதமாக ஜெயலலிதா 113 முறை வாய்தா வாங்கி வாய்தா ராணி என்ற பட்டமும் பெற்றார்.