செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

“ஹைட்ரோ கார்பன் "

 பல்லாயிரம் கார்ப்பரேட்டுகள் வந்தாலும் நெற்பயிரும் வயல்வெளியும்தான் நாட்டின் முதுகெலும்பு என்பதை உணர்ந்தவரா நீங்கள்? 
அப்படியென்றால் நீங்கள் நெடுவாசல் பற்றி அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். பல வருடகாலமாக தண்ணீரில்லாமல் பொய்த்துக் கிடக்கும் வறண்ட டெல்டா விவசாய மாவட்டங்களான தஞ்சைக்கும் புதுக்கோட்டைக்கும் நடுவே இருக்கிறது இந்த கிராமம். 
வறட்சிகளில் தப்பிப் பிழைத்து இதன் பசுமை மட்டும் அப்படியே எஞ்சி இருக்கிறது. இந்த கிராமத்தைச் சுற்றி இருக்கும் பல ஏக்கர் பரப்பிலான தென்னந்தோப்புகளில் இருந்துதான் சென்னைக்கு பல மூட்டைத் தேங்காய்கள் தினமும் இறக்குமதி செய்யப்படுகின்றன.
சகமனிதர்களைக் காப்பாற்றவே நேரமில்லாத நமக்கு நெடுவாசலின் பசுமையும் அது ஏன் காப்பாற்றப்பட வேண்டும் என்பதும் தேவையற்றதாக இருக்கலாம். 
ஆன்லைனில் காலம் தள்ளும் கார்ப்பரேட் குடிமகன்களுக்கு தமிழகத்தின் நெற்களஞ்சியம் எது என்று தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சுமார் 6000 பேர் வசிக்கும் அந்த நெடுவாசல் நிலங்களில் ஒவ்வொரு ஏக்கரும் தற்போது குறைந்தபட்சம் நான்கு மூட்டை விகிதம் நெல் தருகின்றன. நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் வருடாந்திர ஜீவனாம்சத்திற்கு போதுமானது அது. ஏற்கெனவே மக்களுக்கு நல்ல முறையில் பயன்பட்டு வரும் வேளாண் நிலத்தில்தான் தற்போது இயற்கை எரிவாயுக்களை நிலத்தின் ஆழத்திலிருந்து உறிஞ்சி எடுப்பதற்காக மத்திய அரசு தற்போது தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. திட்டத்தின் பெயர் “ஹைட்ரோ கார்பன் திட்டம்”.
நிலத்தின் ஆழங்களில் இருந்து இயற்கை எரிவாயுவை ஏன் எடுக்க வேண்டும். இயற்கை நமக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கும் வளங்களை நல்ல முறையில் மக்களுக்கான பயன்பாட்டுக்காக உபயோகப்படுத்திக் கொள்வதற்கு என்கிறது மத்திய அரசு. மக்களுக்கு ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் விவசாய மற்றும் வேளாண் நிலங்களை தொழில்துறைகளுக்காக சிதைப்பதுதான் வளங்களைப் பயன்படுத்துவதா?
தனியார் நிறுவனங்கள் போட்டிருக்கும் ஆழ்துளாய் குழாய்கள்
மீத்தேன் திட்டத்துக்கு முன்பே துவக்கப்பட்டதா ஹைட்ரோகார்பன் திட்டம்?
நெடுவாசல், முடப்புலிக்காடு, குருவக்கரம்பை, ஆலங்குடி என புதுக்கோட்டை மாவட்டத்தின் கீழ் மட்டும் ஐம்பது கிராம பஞ்சாயத்துகள் இருக்கின்றன. இந்த கிராமங்களில் ஒவ்வொன்றிலும் மக்களுக்குப் போதிய விவரங்கள் எதுவுமே தெரிவிக்கப்படாமல் பல வருடங்களுக்கு முன்பே சிறு வயல்களைக் கையகப்படுத்தும் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து பத்திரத்தில் கைநாட்டு பெற்றுக் கொண்டு தனதாக்கிக் கொண்டுள்ளது அரசு. கைநாட்டு பெறப்பட்ட பத்திரங்களின் நகல் கூட இன்னும் குறிப்பிட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. ஆனால் பெறப்பட்ட நிலத்தில் 2009-ல் மண்ணில் எண்ணெய் அல்லது எரிவாயு இருக்கிறதா என்று ஆழ்துளாய் பம்புகளை ஆங்காங்கே பொருத்திப் பரிசோதனை செய்துள்ளது. இதற்கிடையேதான் மீத்தேன் திட்டம் கையெழுத்தானதும். அதனால் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கிடப்பில் போட்டிருந்தது அரசு. மீத்தேன் திட்டம் திரும்பப்பெறப்பட்ட சூழலில் தற்போது ஹைட்ரோகார்பன் திட்டம் மீண்டும் செயலாக்கத்துக்கு வந்துள்ளது.
ஹைட்ரோகார்பன் திட்டம் 
நிலத்தின் கீழ் இருக்கும் ஹைட்ரஜன் மற்றும் கார்பன் வாயுக்களின் கூட்டுப்பொருள். இது ஆக்ஸிஜனுடன் சேரும்போது பெரும் இயந்திரங்களை இயக்குவதற்கான ஆற்றலைப் பெறுகிறது. பெட்ரோல், டீசல், நாப்தா, நிலக்கரி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அனைத்து எரிபொருள் வகைகளும் இந்த ஹைட்ரோகார்பனில் அடக்கம்.

நெடுவாசல் பகுதியில் தற்போது அரசால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அந்த நான்கு ஏக்கர் நிலத்தில் இந்த ஹைட்ரோகார்பன்களை எடுப்பதற்குதான் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.
நெடுவாசல் தவிர இந்தியாவில் 30 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
 குறிப்பாக அதானி வெல்ஸ்பன் எக்ஸ்ப்ளோரேஷன், ஜெம் லெபாரட்டரீஸ் உள்ளிட்ட பெரும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
நெடுவாசலில் தனது ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ள ஜெம் லெபாரட்டரீஸ் கர்நாடகாவைச் சேர்ந்த கோடீஸ்வர பாரதிய ஜனதா எம்.பி சித்தேஸ்வராவிற்கு சொந்தமானது என்பது கூடுதல் தகவல். அடுத்த 15 ஆண்டுகளில் நாற்பது மில்லியன் டன் எண்ணெய், 22 பில்லியன் கண மீட்டர் எரிவாயுவை உறிஞ்சி எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அ
தாவது பசுமையின் கடைசி மிச்சம் வரை உறிஞ்சி எடுத்துச் செல்ல இவர்களுக்கு பதினைந்து வருடகாலம் தேவைப்படுகிறது. இப்படி எண்ணைய், எரிவாயுவை பூமியில் இருந்து உறிஞ்சி எடுக்க தனியார் நிறுவனங்கள் அரசுக்கு ரூ.9,600 கோடி தருவார்கள்.
ஹைட்ரோகார்பன் திட்டம் பாதுகாப்பற்றது?
நெடுவாசல் பகுதி மக்களில் சுமார் 1000 பேர் வரை எண்ணெய் தொழிற்சாலைகள் மற்றும் கிணறுகள் அதிகம் இருக்கும் அரேபிய நாடுகளில்தான் பணியாற்றி வருகின்றனர். 
தொடர்ந்து 45 நாட்கள் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளில் வேலை செய்துவிட்டு அடுத்த 45 நாட்கள் அவர்களுக்கான ஓய்வு தரப்படுகிறது. அந்த நாட்களில் கிணறுகளும் இயங்காது. 
அதாவது தொடர்ந்து அதுபோன்ற கிணறுகளின் பக்கம் வேலை செய்வது மனித உயிருக்கே ஆபத்தானது என்பதால் இந்த ஓய்வு தரப்படுகிறது. வேலை செய்பவர்களுக்கே ஆபத்தினை காரணம் காட்டி ஓய்வு தரப்படும் நிலையில் தற்போது நெடுவாசல் பகுதியில் குடியிருப்புகள் அருகே தொடர்ந்து பதினைந்து வருடங்கள் எரிவாயுக்களை உறிஞ்சி எடுப்பது எவ்வளவு ஆபத்தினை விளைவிக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.

அமெரிக்காவின் மிஸ்ஸிஸ்பி மற்றும் மிஸ்ஸோரி நீர்படுகைகளின் கரையோரம் வசிக்கும் அமெரிக்க வாழ் பழங்குடியின மக்கள் கடந்த வருடத் தொடக்கத்தில் போராட்டத்தில் களமிறங்கினர். 
அந்த பகுதிகளில், டகோடா பைப்லைன் நிறுவனம் இயற்கை எரிவாயு எடுக்கும் முயற்சிகளுக்கு எதிரான போராட்டம். அந்தத் திட்டம் மிஸ்ஸோரி மற்றும் மிஸ்ஸிஸ்பியின் மொத்த நீரையும் வீணாக்கிவிடும் என்று அவர்கள் கூறினார்கள். இந்த இரு ஆறுகளும் அமெரிக்காவின் 41 மாகாணங்களின் குடிநீர் வாழ்வாதாரத்திற்கானது. கனடாவின் இரு மாகாணங்களும் இதனால் பயனடைகின்றன. 
எரிவாயு எடுப்பதால் நீர் மாசுபடுவதுடன், தாங்கள் பாதிப்படுவோம் என்பதை தெளிவாக உணர்ந்திருந்தார்கள் அந்த பழங்குடிகள். அமெரிக்கா கண்ட நீண்டகாலப் போராட்டங்களில் இதுவும் ஒன்று. போராட்டம் இன்றும் தொடர்ந்தபடி இருக்கிறது.
தொழில்துறையில் பலவகையில் முன்னேற்றம் அடைந்துள்ள அமெரிக்க மக்களே, நிலத்தில் இருந்து எரிவாயு எடுப்பதற்கு எதிரான போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர். கடலில் சிந்திய எண்ணெயை வாளி வைத்து அள்ளிக்கொண்டிருக்கும் தொழில்நுட்பம் உடைய நாம் எப்படி நெடுவாசல் பகுதி மக்கள் மற்றும் அவர்களது நிலங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யப்போகிறோம் என்று அரசு சிந்தித்தா?
காவிரி டெல்ட்டாவிலே வர காத்திருக்கும் பேரழிவு திட்டமான மீத்தேன் ஆகட்டும் , சிறிது காலங்களுக்கு முன்பு நமக்கு பரிச்சியமான ஷேல் காஸ் எனப்படும் இயற்கை எரிவாயு ஆகட்டும், இப்பொழுது புதிதாக வரும் "ஹைட்ரோ கார்பன்" திட்டமும் எல்லாமே ஒரே பொருளை உணர்த்தும் வேறு வேறு பெயர்கள். உதாரணமாக இன்று உணவிற்கு பயனாகும் அரிசி வகைகள் நிறைய இருந்தாலும் அவை அனைத்துமே நெல் பயிரில் இருந்துதான் உருவாகிறது. 

பொது சொல் "அரிசி" அதில் பல்வேறு வகைகள். 
அதே போல பொது சொல் "ஹைட்ரோ கார்பன்" எனும் "நீர்கரிம வாயுக்கள்" அதன் வகைகள் மீதேன், ஈதேன் , ப்ரோபேன் , பியூட்டேன். எடுக்கும் இடம் மற்றும் பிரித்தெடுக்கும் முறையில் ஷேல் காஸ் , டைட் காஸ் , என்றும் பிரித்தறியலாம். பொருள் மிக எளிமையானது அனைத்தும் "நீர்கரிம வாயுக்கள்" என்பதை மட்டுமே நினைவில் கொள்ளுங்கள்.
முதலில் இயற்கை எரிவாயு என்று நரிமணத்தில் வந்தார்கள். 

பின்பு நிலக்கரி என்று சொல்லி நெய்வேலி , ஜெயம்கொண்டத்தில் நிலத்தை பறித்தார்கள்.பின்பு வந்தவர்கள் மீத்தேன், ஷேல் காஸ் என்று வேறு வேறு பெயர்களில் முகமூடி அணிந்து வந்தார்கள். இப்பொழுது ஹைட்ரோ கார்பன் என்று சொல்லி வருகிறார்கள். இவை எல்லாமே ஒரே பெயரை மாற்றி மாற்றி சொல்லி நம்மை ஏமாற்றும் தந்திரம்.
பொதுவாகவே இயற்கை எரிவாயு என்பது நீர்கரிம வாயுக்கள் (Hydrocarbon gases) அனைத்தும் அடங்கியுள்ள ஒரு வாயுக்கலவை . 

இதில் பல்வேறு வகைகள் அவற்றின் இயல்பை பொறுத்து வேறுபடுத்தப்படுகின்றன. பூமியின் அடியில் இருந்து வெளியாகும் இயற்கை எரிவாயுவில் மீதேன், ஈதேன் , ப்ரோபேன் , பியூட்டேன், கார்பன் டை ஆக்சைடு , ஆக்சிஜன் , நைட்ரஜன் , ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் அரிதாக கிடைக்கும் வாயுக்களும் கலந்திருக்கும் . இவற்றை பின்னர் தேவைகேற்ப்ப பிரித்தெடுக்க முடியும் நீர்கரிம வாயுகள் என்பது ஹைட்ரஜன் மற்றும் கார்பன் அணுக்களை மட்டுமே கொண்டுள்ள வாயுக்களின் தொகுதி.இவற்றில் முதலில் இருப்பது மீத்தேன் (CH4) ஒரு கார்பன் அணுவும் நான்கு ஹைட்ரஜன் அணுக்களையும் கொண்டது .கார்பன், ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்த எண்ணிக்கை அதிகமாகும் பொழுது அவற்றின் இயல்பும் மாறுகிறது .
 இவை வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
இது மட்டும் அல்லாமால் , இயற்கை எரிவாயு கிணறுகள் அடிப்படையில் மூன்று விதமாக பிரிக்கலாம். இவை எடுக்கும் எரிபொருளின் அடிப்படையில் வேறுபடுத்தப்படுபவை. முதலாவதாக கச்சா எண்ணெய் மட்டுமே எடுக்கக் கூடிய கிணறுகள் (Crude oil wells) . 
இவற்றில் முதன்மை எரிபொருள் கச்சா எண்ணெய் மட்டுமே ஆனாலும் இவற்றில் இயற்கை எரிவாயுவும் கிடைக்கும் இவை கச்சா எண்ணையில் கலந்து அல்லது தனியாகவே வெளியேறும் .இந்த வகை எரிவாயுகளை கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் நிலைக்கு முன்பேப் பிரித்தெடுப்பது அவசியம். இரண்டாவதாக இயற்கை எரிவாயு மட்டுமே எடுப்பதற்காக தோண்டப்படும் எரிவாயு கிணறுகள் (Dry gas wells) . 
இந்த வகை கிணறுகளில் எரிவாயு மட்டுமே கிடைக்கும் இதனுடன் சில வாயுக்கள் வெளியேறினாலும் அவை சுத்திகரிப்பு நிலையங்களில் முற்றிலுமாக பிரித்தெடுக்கப்படும் .மூன்றாவதாக திரவநிலையில் மாற்றமடைந்து வெளிப்படும் எரிவாயுவை சேகரிக்கும் கிணறுகள் (Condensate wells/). இந்த வகை கிணறுகளில் இயற்கை எரிவாயு மட்டுமல்லாமல் திரவதுளிகள் போன்றும் எரிவாயு வெளிப்படும் இந்தவகை எரிவாயுவும் தனியாக சேகரிக்கப்படும் . 
இவை வாயு நிலையில் இருந்து திரவநிலைக்கு இயல்பிலேயே மாறி இயற்கையில் கிடைக்கும் எரிவாயுக்கள் .
இன்று புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் "ஹைட்ரோ கார்பன்" எனும் "நீர்கரிம வாயுக்கள்" எடுக்க மக்களுடைய ஒப்புதல் இல்லாமலே ,மத்தியில் நடக்கும் கொடுங்கோலாட்சி மூலம் அனுமதி பெற்றிருக்கும் நிறுவனம் Gem Laboratory Pvt.Ltd. 

இது மல்லிகார்ஜூனப்பா சித்தேஸ்வரா எனும் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவரின் நிறுவனம். அவர் 2004 & 2009 ல் MP யாக தேர்ந்தெடுக்க பட்டவர்.
நமக்கு தண்ணீர் கொடுக்காத ஓர் மாநிலத்தை சேர்ந்த நிறுவனத்துக்கு நமக்கு சம்பந்தமே இல்லாத இந்திய அரசு நம்மில் யாரை கேட்டு நம் விவசாய நிலத்தில் துளை போட அனுமதி கொடுத்தது?. 

ஒரு நாட்டுக்காக ஒரு மாநிலம் தியாகம் செய்யலாம் என்று பாஜக தலைவர் இலை.கணேசன் திருவாய் மலர்ந்துள்ளார்.
இந்தியா நலனுக்காக தமிழ் நாடும்,தமிழர்களும்தான் தியாகம் செய்யவேண்டுமா.அப்படி தியாகம் செய்வதால் அவர்களுக்கு என்ன கிடைக்கும்.?
தமிழர்கள் இதுவரை செய்த காவிரி  நீர்,மேகதாது ,முல்லைப்பெரியாறு,,சிறுவாணி தியாகம் போதாதா?
இப்படி ஒரு மாநிலம் முழுக்க தியாகம் செய்துதான் இந்தியா வாழ வேண்டும் என்றால் மோடி எதற்காக இந்தியாவின் பிரதமராக ஆடசி செய்கிறார்?
பாஜகவுக்கு வாக்களிக்காததற்காகத்தான் இந்த பலி வாங்கும் திட்டங்களோ?
அப்படி தியாகம் செய்துகொண்டு தமிழ்நாட்டில் உள்ள மக்கள் இந்தியாவில் என்ன ரோமத்துக்கு வாழவேண்டும்?
இந்தியர்கள் என்று சொல்லி வாழ்வதில் என்ன கிடைக்கிறது.?
தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா? 
மொத்தத்தில் தமிழ் நாட்டில் உள்ளவர்கள் மனிதர்களே இல்லையா?
தமிழனல்லாத இந்த இல.கணேசனை இனி ...?
======================================================================================
ன்று,
பிப்ரவரி-28.


  • இந்திய தேசிய அறிவியல் தினம்
  • எகிப்தின் விடுதலையை யூ.கே., அங்கீகரித்தது(1922)
  • வொலஸ் கரோதேர்ஸ் என்பவரால் நைலான் கண்டுபிடிக்கப்பட்டது(1935)
  • இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் ராஜேந்திர பிரசாத் இறந்த தினம்(1963)
  • முதல் வளைகுடா போர் முடிவு பெற்றது(1991)

டாக்டர் ராஜேந்திர பிரசாத், பீஹார் மாநிலம், சிவான் எனும் இடத்தில், மகாவீர சாகி - கமலேசுவரி தேவி தம்பதிக்கு மகனாக, 1884 டிச., 3ல் பிறந்தார். 
பொருளியலில் முதுகலை பட்டமும், சட்டத் துறையில் முனைவர் பட்டமும் பெற்றவர்.'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் பங்கேற்றதால், 1942ல் கைது செய்யப்பட்டார். 
மூன்றாண்டு சிறைவாசத்திற்கு பின், 1945 ஜூன், 15ல் விடுதலையானார். 
1946ல் இந்திய அரசியலமைப்பு அவையின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், 1947ல் காங்கிரஸ் தலைவராக பதவியேற்றார்.
விடுதலைப்பெற்ற  இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவராக  1950ல் பதவியேற்றார். 
1952, 1957 ஆகிய ஆண்டுகளில், இருமுறை குடியரசுத்தலைவராக பதவியேற்ற, ஒருவர்  ராஜேந்திர பிரசாத். 
அவருக்கு, நாட்டின் உயரிய விருதான, 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது. அவர், 1963 பிப்., 28ல் காலமானார். 
  • ======================================================================================