வில்லா கட்டும் வில்லன்.
ஜக்கி வாசுதேவ் கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் 122 அடி உயர சிவன் சிலையை நிறுவி அதை திறப்பதற்கு பிரதமர் மோடியை வரவழைத்ததும், எதிர்ப்புகளை மீறி அதில் பிரதமர் கலந்து கொண்டதும் பல்வேறு மட்டங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் ஈஷா மையம் குறித்தோ, ஜக்கி வாசுதேவ் குறித்தோ எவ்விதமான விமர்சனங்களையும் எழுப்ப முடியாது. அந்த அளவுக்கு அவரது ஆதரவாளர்கள் பரவலாக பெருகி இருந்தனர். ஆனால், இன்று ஈஷா மையத்தின் சுற்றுச் சூழல் மாசுபடுத்தலுக்கு எதிராக பலத்த குரல்கள் எழுந்துள்ளதை பார்க்க முடிகிறது. ஈஷா மையத்துக்கு வரும் அனைவரையும் மூளைச்சலவை செய்து, அவர்களை அடிமைகளாக மாற்றும் வல்லமை பெற்ற ஜக்கி வாசுதேவுக்கு எதிராக இத்தனை குரல்கள் எழுந்திருப்பதே ஒரு வியப்பான விஷயம்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக நண்பரின் அறிவுரையின்படி, ஈஷா மையத்தின் ஒரு வார கால யோகா பயிற்சி வகுப்புக்கு செல்ல நேர்ந்தது. முக்கிய நபர்கள் பலர், அந்த பயிற்சி நன்மை பயக்கும் என்றனர். பயிற்சிக்கான கட்டணமாக 750 ரூபாய் பெற்றனர் என்று நினைவு. அந்த கட்டணம் விருப்பக் கட்டணம் அல்ல. கட்டணம் செலுத்தினால்தான் பயிற்சியில் பங்கு கொள்ள முடியும். கட்டணம் செலுத்தியவுடன் அவர்கள் அளித்த ரசீதில், நன்கொடை என்று இருந்தது. வருமான வரிச் சட்டம் பிரிவு 80 Gயின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டது என்றும் இருந்தது. இதுவே பெரும் நெருடலாக இருந்தது. நன்கொடை என்பது நாமாக விரும்பி அளிப்பது. கட்டாயமாக வசூலித்து விட்டு அதற்கு நன்கொடை என்று ரசீது அளித்தால் அது மோசடி இல்லையா ? இப்படிப்பட்ட மோசடியை தெரிந்தே அரங்கேற்றி வரும் ஜக்கி வாசுதேவைத்தான் இவ்வுலகை வாழவைக்க வந்த வள்ளல் என்று புகழ்கின்றனர். ஈஷா யோக மையம் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 80ஜி வரி விலக்கை துஷ்பிரயோகம் செய்து, அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தி வருவதால், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் இந்த சலுகையை ரத்து செய்ய வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு முறையிடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அவர்கள் சொல்லிக் கொடுத்த யோகா பயிற்சிகள் பயனுள்ளவைதான். ஆனால், பயிற்சியின் கடைசி நாளில் அவர்கள் தங்கள் உண்மை முகத்தை காட்டத் தொடங்கினர். உருத்திராட்ச மாலை அணிந்தால் அது மனதை ஒருமுகப்படுத்தும் என்றனர். ஒரு உருத்திராட்ச மாலையின் விலை 1500 ரூபாய் என்றனர். அதன் பிறகு ஜக்கியின் உரைகள் அடங்கிய டிவிடிக்கள், அவர் படங்கள், கடவுள் படங்கள் போன்றவை பல நூறு ரூபாய்க்கு விற்கப்பட்டன. அத்தனை விற்பனைக்கும் நன்கொடை என்றே ரசீது அளிக்கப்பட்டது.
இதன் பிறகே ஜக்கி குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று தோன்றியது. உடனடியாக கோவை சென்று, வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஜக்கி ஆசிரமத்துக்கு சென்றேன். ஆசிரமத்தினுள்ளே தியான லிங்கம் என்ற குடில் இருந்தது. அதனுள் பலரும் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தனர். அங்கே கண்ட பலரும், மொட்டை அடித்துக் கொண்டு சன்னியாசம் ஏற்றவர்களாக இருந்தனர். பல லட்ச ரூபாய் சம்பளம் தரும் பதவிகளை துறந்து குடும்பத்தை துறந்து சன்னியாசம் ஏற்பது அவரவர் விருப்பம். அதில் நாம் தலையிட முடியாது. ஆனால், வயதான பெற்றோரை, கணவரை, மனைவியை, குழந்தைகளை நட்டாற்றில் விட்டு விட்டு, இருக்கும் பணத்தையெல்லாம் ஜக்கியிடம் அளித்து விட்டு சன்னியாசம் என்று ஒரு ஆசிரமத்தில் குடியிருப்பது சரியான காரியமாகப் படவில்லை. தன் மகளும், மகனும் துறவறம் பூண்டு சென்று விட்டனர். அவர்களை பார்த்தே வருடக்கணக்காக ஆகிறது என்று பெற்றோர்கள் கண்ணீரோடு பேசுவதை பார்க்கையில், அவர்களின் துறவறம் எப்படி அறம் சார்ந்த காரியமாகும் ? இப்படிப்பட்ட அயோக்கியத்தனமான துறவறங்களை ஊக்குவித்து விட்டு, தன் மகளுக்கு மட்டும் சிறப்பாக திருமணம் செய்து வைக்கும் ஜக்கியின் நடத்தை விமர்சனத்துக்கு உட்பட்டதா இல்லையா ?
ஜக்கியின் தந்திரங்கள் எளிமையானவை, ஆனால் வலிமையானவை. சமுதாயத்தில் பிரபலமாக உள்ள அரசியல் தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் போன்றவர்களுக்கு நேர்முகம் கொடுத்து, அதை ஊடகங்களில் பிரபலமாக்கி, அதன் மூலம் சாமான்ய மக்களை தன் பக்கம் இழுத்து அடிமையாக்குவதே இவரது தந்திரம்.
சில ஆண்டுகளுக்கு முன்னால், திமுக ஆட்சியில் இருந்தபோது, முதல்வர் கருணாநிதி தலைமையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மரம் நடும் விழா நடைபெற்றது. கருணாநிதியிடம் ஜக்கி வாசுதேவை அறிமுகப்படுத்தியவர் நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ். அந்த நெருக்கத்தின் அடிப்படையில், திமுக ஆட்சியில் பல சலுகைகளை பெற்றுள்ளார் ஜக்கி. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நண்பர் ஒருவர், அதில் ஈர்க்கப்பட்டு, ஜக்கியின் மவுண்ட் கைலாஷ் யாத்திரைக்கு பணம் கட்டினார். அதற்கான கட்டணம் 1.5 லட்சம் ரூபாய். அந்த யாத்திரையில் அவரோடு பயணித்தவர்கள் மொத்தம் 600 பேர். யாத்திரை சென்று வந்த பிறகு ஒரு ட்ராவல் ஏஜென்சியில் கைலாஷ் யாத்திரைக்கு எவ்வளவு ஆகும் என்று விசாரித்தபோது, வெறும் 42 ஆயிரம் என்று தெரிவித்திருக்கிறார்கள். 600 பேருக்கு எவ்வளவு ஆகும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இது மட்டும் அல்ல. ஈஷா யோக பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வந்த தாக்கத்தில் அந்த நண்பர், ஈஷாவில் சொல்லிக் கொடுக்கும் யோகா பயிற்சிகளை வீடியோ வடிவில் உருவாக்கி ஒரு இணையதளத்தில் ஏற்றியிருக்கிறார். அந்த வீடியோவை உடனடியாக நீக்குங்கள் என்று ஈஷா தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்பு வந்துள்ளது. நண்பர் மறுத்ததும், அவர்களே புகார் அனுப்பி அந்த இணையதளத்தையே முடக்கியுள்ளனர்.
யோகா பயிற்சியை சொல்லிக் கொடுக்கிறோம் என்றால், அதை இப்படி ரகசியமாக மறைத்து வைக்க வேண்டிய அவசியம் என்ன ? ஈஷா மையத்துக்கு பணம் கட்டித்தான் யோகா கலையை கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் அது வியாபாரம் இல்லாமல் வேறு என்ன ?
ஈஷா நிறுவனத்தால் 12 நிறுவனங்கள், கம்பெனி பதிவாளரிடம் பதிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பல கட்டுமான நிறுவனங்கள். இந்த 12 நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் ஈஷாவின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் செயல்பட்டு வருகின்றன.
ஈஷாவில் இந்தியாவைச் சேர்ந்த பெரும் பெரும் செல்வந்தர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் முக்கிய பிரமுகர்களை தங்க வைக்க தற்போது உள்ள ஈஷா மையத்திற்கு உள்ளாகவே குளிர்சாதன வசதியோடு கூடிய குடில்கள் அமைந்துள்ளன. ஆனால் ஈஷா மையத்துக்கு வரும் பிரமுகர்களை வசதியோடு தங்கவைத்து, அவர்களிடமிருந்து டாலர்களை உருவுவதற்கு தற்போது உள்ள இடங்கள் போதுமானதாக இல்லை. இதனால்தான் வில்லா போன்ற வீடுகளை ஈஷா மையத்துக்கு அருகாமையிலேயே கட்டவதற்கு திட்டமிடப்பட்டது. ஏற்கனவே ஈஷா மையக் கட்டிடங்கள் அனைத்துக்கும் அனுமதி இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த மனு தவிர, கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு பொதுநல வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பதில் மனுவில், ஈஷா மையத்தில் கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களும் இன்று வரை எவ்வித அனுமதியும் இல்லாமல்தான் கட்டப்பட்டுள்ளன என்பதை அரசே ஒப்புக் கொண்டுள்ளது. இந்த நிலையில் புதிதாக வில்லாக்கள் கட்டுவதற்கு விவசாய விளை நிலைங்களை அழித்து, யானைகள் வழித்தடத்தில் புதிய கட்டுமானங்களை செய்தால், அதற்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பது ஜக்கிக்கு நன்றாகவே தெரியும்.
அதனால்தான், க்ருஷி லேன்ட் ஃபார்ம் டெவலப்பர்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட் என்ற கட்டுமான நிறுவனத்தை உருவாக்கி, அதனை வழக்கம் போல கோவையில் பதிவு செய்யாமல், டெல்லி பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார் ஜக்கி. இதன் இயக்குநர்களாக உலகளவில் பிரபலமான சத்தியபால் டிசைனர்ஸ் என்ற ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் உரிமையாளரான புனீத் நந்தா என்பவரும், ஏபிஎன் மற்றும் இராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாண்ட் வங்கிகளின் முன்னால் துணைத்தலைவரான மெளமித சென் சர்மா என்ற பெண்மனியும் உள்ளனர்.
க்ருஷி கட்டுமான நிறுவனத்துக்கும் ஈஷா நிறுவனத்துக்கும் தொடர்பு இல்லை என்பது போல நிரூபிக்கவே தனியாக வேறு பெயரில் கட்டுமான நிறுவனம் தொடங்கப்பட்டாலும், க்ருஷி நிறுவனத்தின் இயக்குநர்களாக இருப்பவர்கள் இருவரும் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக ஈஷாவின் தீவிர ஆதரவாளர்கள். இதில் மெளமித சென் சர்மா தனது வேலையினை உதறிவிட்டு தற்போது ஈஷா யோகா மையத்திலேயே வசித்து வருகின்றார். இவருக்கு தொண்டாமுத்தூர் சட்ட மன்ற தொகுதியில் வாக்காளர் அடையாள அட்டையும் உள்ளது. புனீத் நந்தா தனது முகநூல் மற்றும் வலைப்பக்கத்தில் தன்னை ஈஷா மையத்தில் 2006 முதல் தன்னார்வலராக பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கிருஷி லேண்ட் பார்ம் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிட் நிறுவனம் டெல்லியில் பதிவு செய்யப்பட்டாலும் இதனை பதிவு செய்தவர்கள் திருப்பூர் வேலம்பளையம் சுவர்ணபுரி அவன்யூவில் உள்ள சத்குரு இல்லத்தில் இயங்கிவரும் ஒரு கணக்கு தணிக்கையாளரால் பதிவு செய்யப்பட்டது.
இந்த வில்லா வகையிலான வீடுகளை கட்டுவதற்கு அனுமதி கேட்டபோது, வனப்பகுதி மற்றும் மலைத்தள பாதுகாப்புக் குழு அனுமதி வேண்டும் என்று அனுமதி தராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி, வீடு கட்டுவதற்கான உரிமையை வழங்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்துள்ளது. அந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த வனத்துறை, இவர்கள் கட்டுமானத்துக்கு அனுமதி கோரும் இடம், யானைகளின் வழித்தடம் என்று பதில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்கள் கட்டுமானம் செய்ய அனுமதி கோரும் இடத்துக்கு வெகு அருகில்தான் ஆதியோகி சிவன் சிலை அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈஷா நிறுவனம் 3 லட்சம் சதுர அடிக்கும் மேற்பட்ட கட்டிடங்களை நகர் ஊரமைப்புத் துறையிடமோ, மலைத்தள பாதுகாப்புக் குழுமத்திடமோ அனுமதி பெறாமல் கட்டு வந்தது குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சட்டத்தை ஏமாற்றவே க்ருஷி என்ற பெயரில் இந்த கட்டுமானங்களை செய்து வருகிறது.
ஈஷா நிறுவனம் மீதான முக்கிய குற்றச்சாட்டே யானைகள் வழித்தடத்தை அடைத்து, கட்டுமானம் செய்து வருகிறார்கள் என்பதுதான். இந்த நிலையில் தற்போது அதே பகுதியில் விவசாய நிலங்களை அழித்து, அடுக்குமாடி வீடுகள் மற்றும் வில்லாக்களை கட்ட இவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.
ஈஷா நிறுவனம், சட்டத்தை மதிக்காமல், இயற்கையை அழித்து கட்டுமானம் செய்து வருவதும், அரசு அதிகாரிகள் துணையோடு, இக்கட்டுமானங்கள் தங்கு தடையில்லாமல் நடைபெற்று வருவதும் ஆவணங்களோடு நீதிமன்றத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், வேறு பெயரில் இதே போன்ற சட்டவிரோத கட்டுமானத்தை நடத்துவதற்கு ஈஷா நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.
இது தவிர, டீசர்ட் முதல் ஊறுகாய் வரை, நேரடியாகவும் இணையம் மூலமாகவும் லட்சக்கணக்கில் வியாபாரம் செய்து வருகிறது ஈஷா. இந்த வியாபாரத்தின் மூலம் வரும் அனைத்து வருமானமும் நன்கொடை என்று வரவு வைக்கப்பட்டு, வாட் வரி, வருமான வரி என்று கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக மோசடியின் மொத்த உருவமாக ஈஷா நிறுவனம் திகழ்ந்து வருகிறது என்பதே பட்டவர்த்தனமான உண்மை.
2013ல் இது தொடர்பாக வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் அப்போதே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று 112 அடி உயர சிலை உருவாகியிருக்காது. சட்டத்தை மதிக்காமல் மதத்தின் பெயரால் சாமியார் ஒருவன் அயோக்கியத்தனம் செய்து வருகிறான். ஆனால் அதை தடுத்து நிறுத்த வேண்டிய நீதிமன்றமோ மீளா உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது. இந்த ஆழ்ந்த உறக்கத்தினால்தான், ஜக்கி வாசுதேவ் போன்ற பலப்பல மோசடி சாமியார்கள் மேலும் மேலும் உருவாகி வருகின்றனர்.
இப்போதாவது நீதிமன்றம் தலையிட்டு, ஈஷா நிறுவனத்தின் சட்டவிரோத செயல்களை தடுத்து நிறுத்தத் தவறினால், நீதிமன்றமும், ஈஷாவுக்கு துணை போவதாகவே கருத முடியும்.
======================================================================================
இன்று,
மார்ச்-02.
- டெக்சாஸ், குடியரசு மெக்சிக்கோவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது(1836)
- இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு இறந்த தினம்(1949)
- மொராக்கோ பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது(1956)
- யாஹூ நிறுவனம் தொடங்கப்பட்டது(1995)
- =======================================================================================