இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

செவ்வாய், 21 மார்ச், 2017

பணக்கட்டுகள் கன்ட்டெயினர்....!

சென்னைத் துறைமுகத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் பணக்கட்டுகள் கன்ட்டெயினர் லாரிகள் மூலம் கடத்தப்பட்டுள்ளது என்று கிடைத்த தகவலையடுத்து,வருவாய்ப் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டதால் சென்னைத் துறைமுகத்தில் பரபரப்பு நிலவியது. 
இதனிடையே, சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்ய, கன்ட்டெயினர் லாரியில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் கடத்தப்பட்டது என்றும், அது சென்னைத் துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டது என்றும் தகவல் கசிந்துள்ளது.
 வரும் ஏப்ரல் 12-ம் தேதி சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தல் வேலைகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளன. வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் வாக்குச் சேகரிப்பு, பிரசார திட்டங்கள் என்று களத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. 
அ.தி.மு.கவில்  இரட்டை இலை எந்த அணிக்குச் செல்லும் என்ற பரபரப்பு விவாதம் நடந்து வரும் நிலையில் தி.மு.க. மிக லாகவமாக வாக்குச் சேகரிப்பில் வேகம் கூட்டியுள்ளது. பா.ஜனதா, தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் வாக்காளர்களை வளைக்க உத்திகளை வகுத்து வருகின்றன. 
இந்த நிலையில், சென்னைத் துறைமுகம் பகுதியில் கன்ட்டெயினர் லாரிகள் மூலம் பணம் இறங்கியுள்ளது என்ற தகவல் அரசியல் கட்சிகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இன்டர்ஸ்டேட் கன்ட்டெயினர் ஓனர்ஸ் அஸோஸியேஷன் பிரதிநிதி ஒருவர் நம்மைத் தொடர்புகொண்டு பேசினார். அவர் கூறுகையில்,"நேற்று இரவு எட்டு மணிமுதல் சென்னைத் துறைமுகம் உள்ளே கன்ட்டெயினர் லாரிகள் செல்ல முடியவில்லை. அதேபோல உள்ளே இருந்தும் எந்த லாரியும் வெளியே வரவில்லை. துறைமுகத்தில் என்ன நடக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. எந்த அதிகாரியையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. 
இதனால் நடுவழியிலேயே இரவு முழுக்க 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன்ட்டெயினர் லாரிகள் அப்படியே நிற்கின்றன. ஓட்டுநர்கள் மிகுந்த அவதிப்படுகிறார்கள். சென்னையின் புறநகர்ப் பகுதிகளான ரெட்ஹில்ஸ், மதுரவாயல் பகுதிகளிலும், பொன்னேரி பகுதிகளிலும் லாரிகள், துறைமுகம் செல்ல இயலாமல் 20 கிலோமீட்டர் தூரம் வரை அப்படியே நிற்கின்றன. 
வழக்கமாக ரெய்டுகள் நடந்தால் ஒரு சில மணி நேரத்தில் எங்களுக்கு முழுத் தகவல் கிடைத்துவிடும். லாரிகளும் உள்ளே செல்லவும், வெளியே வரவும் இயலும். ஆனால் இன்று 24 மணி நேரம் ஆகியும் தகவல் ஒன்றும் தெரியவில்லை. 
அநேகமாக, செம்மரக்கடத்தல், போதைப் பொருட்கள் கடத்தல், சந்தன மரக்கடத்தல், ஹவாலா பணம் கடத்தல்  என்று பெரிய அளவில் சட்டவிரோத நடவடிக்கைகள் துறைமுகத்தில் நடந்துள்ளதாகக் கூறப்பட்டால்தான் இதுபோன்ற காத்திருப்புகள் நிகழும். அதனால் துறைமுகத்தில் ஏதோ பெரிய அளவுக்கு நடந்துள்ளது என்று நினைக்கிறோம். அதனால்தான் டி.ஆர்.ஐ. சோதனை நடந்துள்ளது" என்றார். 

         கள்ளநோட்டு
சென்னை காசிமேடு பகுதியில் துறைமுகம் செல்லக் காத்திருக்கும் கன்ட்டெயினர் லாரி ஓட்டுநர் முத்துசாமியிடம் விசாரித்தோம். அவர் கூறுகையில், "சார், நேற்று இரவிலிருந்து இங்கேயேதான் நிற்கிறோம். உள்ளே எந்த லாரியும் போகலை. 
உத்திரமேரூரில் இருந்து வந்துள்ளோம். 
துறைமுகத்தில் துணிகள் பார்சல்களை ஏற்றிச் செல்ல வந்துள்ளோம். என்ன ஆச்சு என்று எங்க ஓனருக்குப் பதில் சொல்ல முடியல. அநேகமாக, இங்க தேர்தல் நடக்குது என்பதால் வெளிநாடு அல்லது பக்கத்துத் துறைமுகங்களில் இருந்து கணக்கில் வராத பணம் எதாவது கொண்டு வந்திருப்பாங்க அதனால்கூட இப்படி நீண்ட நேரம் சோதனை நடக்கலாம்" என்றார்.
சென்னை காவல் ஆணையர்  ஜார்ஜ், இதுவரையில் கன்டெய்னரில் பணம் வந்ததாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஆனாலும் விம்கோநகர்-துறைமுகத்தில் இந்த நிமிடம் வரையில் ஒவ்வொருகன்டெய்னராக போய்க் கொண்டுதான் இருக்கிறது.ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வழக்கத்தைவிட அதிக பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது, கன்டெய்னர் பணம்.
 நாட்டின் முதல் குடிமகனில் இருந்து கடைசிக் குடிமகன் வரையில், ஒரே அளவுகோலில்தான் நீதி பரிபாலனம் செய்யும்  நீதிமன்றம் இயங்குகிறது. அதேவேளையில், நீதிமன்ற அவமதிப்பு என்கிற விஷயமும் மிகச் சாதாரணமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. கோர்ட் அவமதிப்பை அதிக அளவில் செய்வது, உயரிய பொறுப்பில் இருப்பவர்களே என்பதுதான் வேதனையான தகவலும்கூட.சென்னை போலீஸ் கமிஷனராக மூன்றாவது முறை பொறுப்பில் இருக்கும் ஜார்ஜ், இரண்டாவது முறையாக நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தைச் செய்தது, அனைத்துத் தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் பதவியானது, மிகவும் உயரிய பதவி. சமூக விரோதிகளை ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஜாமீனில் விடாமல் சிறையில் அடைக்கும் அதிகாரம் கொண்ட பதவி இது. பெருநகரங்களில் போலீஸ் கமிஷனராக இருப்பவர்கள் மாஜிஸ்திரேட் அந்தஸ்து கொண்டவர்கள்.
மற்ற  மாவட்டங்களில் காவத் கண்காணிப்பாளர்களாகப் பதவியில் இருப்பவர்கள், மாவட்ட ஆட்சியரின் அனுமதியைப் பெற்றே, ஒருவரை ஓராண்டு வரை சிறையில் அடைக்க முடியும்.
                        சென்னை உயர்நீதி மன்றம்  
சென்னை போன்ற பெருநகரங்களில் சாராயம், கடத்தல், ரவுடித்தனம் உள்ளிட்ட கொடுங்குற்றச் செயல்களில் ஈடுபடுகிறவர்களை போலீஸ் கமிஷனரே ஓராண்டுக்கு சிறையில் அடைத்துவிட முடியும். அத்தனை அதிகார சக்தி படைத்த போலீஸ் கமிஷனரே, கோர்ட்டுக்கு மரியாதை கொடுக்காமல் கண்ணாமூச்சு ஆடிய விவகாரம்தான் இப்போது கோர்ட்டின் கண்டனத்தில் வந்து நிற்கிறது. 
சென்னை மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் அண்ணாமலைக்குச் சொந்தமான பல வீடுகளுக்கு, சொத்து வரியாக சொற்பத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில், ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த பொன் தங்கவேலு என்பவர் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘'இந்த வழக்கு, பொதுநல வழக்கின் தன்மையில் உள்ளது'' என்று கூறி தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வின் விசாரணைக்குப் பரிந்துரை செய்தார். 
மேலும், ''மனுதாரர் பொன் தங்கவேலுவுக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அவருக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்'’ என்று சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்குக் கடந்த ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி உத்தரவிட்டார். 
நீதிபதி உத்தரவுப்படி பொன் தங்கவேலுவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படாததால், அவர், உயர் நீதிமன்றத்தில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கைத் தாக்கல்செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்'' என்றும் உத்தரவிட்டார். 
கமிஷனர் தரப்பிலிருந்து அவர், எப்போது  கோர்ட்டில் ஆஜராவார் என்பது குறித்து எந்தத் தகவலும் சொல்லப்படவில்லை. இதற்குக் கண்டனம் தெரிவித்த நீதிபதி கிருபாகரன், ''உயர் நீதிமன்றம் என்ன பாவபூமியா... இந்த வழக்கில் ஆஜராவதில் போலீஸ் கமிஷனருக்கு என்ன கெளரவப் பிரச்னை உள்ளது... அவர், எப்போது ஆஜராவார் என்பதை மட்டும் கேட்டுத் தெரிவிக்க வேண்டும்'’ என்று அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிட்டார். 
மறுபடியும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் வெங்கட்ரமணி ஆஜராகி, ‘'போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், வருகிற 22-ம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு கோர்ட்டில் ஆஜராவார்’' என்று கூறினார். இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி கிருபாகரன், வழக்கு விசாரணையை மார்ச் 22-ம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டார். 
 மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவுசெய்த வழக்குகளில்,   குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் எத்தனை? எத்தனை வழக்குகள் எப்ஐஆர். பதிவுசெய்யப்பட்ட நிலையிலேயே உள்ளது? என்று விபரத்தை  அறிக்கையாக  ஹைகோர்ட் தலைமைப் பதிவாளரிடம் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நீதிபதி வைத்தியநாதன்,  மற்றொரு கோர்ட் அவமதிப்பு வழக்கில், உத்தரவிட்டிருந்தார். 
அந்த உத்தரவின்படி போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ், மார்ச்-20-ம் தேதி (இன்று)  காலையில் நேரில் ஆஜராக வேண்டும். அதுகுறித்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் ஆஜராகவில்லை.  கமிஷனர் ஜார்ஜ் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் கோவிந்தராஜ், ஹைகோர்ட்டின் உத்தரவுப்படி, மத்திய குற்றப்பிரிவு வழக்குகளின் விவரங்கள்கொண்ட அறிக்கை,  ஹைகோர்ட்டில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுவிட்டது என்றார்.
அப்போது நீதிபதி வைத்தியநாதன், ‘போலீஸ் கமி‌ஷனரை நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டும் அவர் ஏன் இன்று ஆஜராகவில்லை? அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்பட்டது? சென்ற முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது,  இந்த கோர்ட் கேட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. அதனால், அவரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டது. 
ஆனால், ஹைகோர்ட் பதிவுத்துறை வெளியிட்டுள்ள வழக்கு விசாரணை விவரப் பட்டியலில், அறிக்கை தாக்கல்செய்யப்பட்டுவிட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது? இது எப்படி நடந்தது? ஐகோர்ட் பதிவுத்துறை யாருடைய அனுமதியின் பெயரில் அவ்வாறு குறிப்பிட்டது?’ என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.
அப்போது அரசு வழக்கறிஞர்  கோவிந்தராஜ், ‘இந்த ஹைகோர்ட் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை ஓட்டேரி போலீஸார், போலீஸ் கமி‌ஷனரின் கவனத்துக்குக் கொண்டுவரவில்லை. அதனால், காலதாமதம் ஆனது. ஹைகோர்ட்டின் உத்தரவை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணம் போலீஸ் கமி‌ஷனரிடம் இல்லை. உத்தரவின் விவரம் தெரிந்தவுடன், கடந்த வெள்ளிக்கிழமை காலையில் ஹைகோர்ட் பதிவுத்துறையில் அந்த அறிக்கை தாக்கல்செய்யப்பட்டுவிட்டது’ என்றார்.
‘ஓட்டேரி போலீஸார் தகவல் தெரிவிக்கவில்லை என்றால், அந்த அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக கோர்ட்டில் ஆஜராகாமல் இருப்பதா?’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அரசு வழக்கறிஞர்  கோவிந்தராஜ், ‘ஓட்டேரி போலீஸார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது’ என்றார். இதையடுத்து, ‘இந்த வழக்கில் போலீஸ் கமி‌ஷனர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டும், அவர் ஆஜராகவில்லை. 
எனவே, இந்த வழக்கு விசாரணையின்போது வருகிற 27-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும்’ என்று  நீதிபதி உத்தரவிட்டார்.
கன்டெயினர்
 ''கோர்ட் உத்தரவைக் கிடப்பில்போடுவது காவல் ஆணையர் ஜார்ஜுக்கு ஒன்றும் புதிதல்ல'' என்று போலீஸ் தரப்பிலேயே சொல்லப்படுகிறது. 
அதற்கு உதாரணமாக அவர்கள் மேற்கோள் காட்டுவது, ஸ்ரீதர் என்பவர் 2013-ம் ஆண்டு தொடக்கத்தில் தாக்கல்செய்த வழக்கைத்தான். அதில் என்ன நடந்தது? ஶ்ரீதர் என்பவர் தாக்கல்செய்த மனுவை விசாரித்த அன்றைய உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி, ‘'சென்னை போலீஸ் கமிஷனர்களாக இருந்தவர்கள் நடைமுறையில் வைத்திருந்த பொதுமக்களைச் சந்தித்து குறைகேட்கும் முறையையே மாற்றியவர், இந்த கமிஷனர் ஜார்ஜ்தான். 
சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஒன்றும் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் மன்னர் அல்ல. அவர், இந்தக் கோர்ட்டில் ஆஜராகி உரிய விளக்கம் சொல்ல வேண்டும். அரசு மற்றும் காவல் துறைக்கு கரும்புள்ளி ஏற்படும் வகையில் காவல் ஆணையர்  ஜார்ஜ் செயல்பட்டு வருகிறார்'' என்று கண்டனம் தெரிவித்தார். அப்போதும் கமிஷனர் ஜார்ஜ் கோர்ட்டில் ஆஜராகவில்லை. 
பின்னர் உரிய விளக்கத்தை அவர் சார்பில் கோர்ட்டில் கொடுத்து அது ஏற்கப்பட்டுவிட்டது என்று கூறப்பட்டது. இந்த விவகாரத்துக்குப் பதில், இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும் என்ற நிலையிருக்க, தேர்தல் ஆணையத்துக்கு தி.மு.க அனுப்பிய கடிதமும் போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்குச் சிக்கலை உண்டாக்கியிருக்கிறது.'
'தேர்தல் ஆணையத்துக்கு தி.மு.க அனுப்பியிருக்கும் புகார் கடிதத்தில், "சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்கும் வேளையில், போலீஸ் கமிஷனராக இருக்கும் ஜார்ஜ் மற்றும் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரி பத்மஜாதேவி ஆகியோரை இடமாற்றம் செய்ய வேண்டும். 
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரியாக கடந்த பொதுத் தேர்தலின்போதும் பத்மஜாதேவிதான் இருந்தார்.
 அவரே மறுபடியும் இங்கு தேர்தல் அதிகாரியாக இருப்பது உள்நோக்கம் கொண்டது" என்று குறிப்பிட்டிருந்தது. தி.மு.க-வின் கோரிக்கையைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம், பத்மஜாதேவியை இடமாற்றம் செய்ததோடு, புதிய தேர்தல் அதிகாரியாக பிரவீன் நாயரை நியமித்தது. சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் இடமாற்றம் குறித்து தேர்தல் ஆணையம் எந்தப் பதிலும் இதுவரையில் சொல்லவில்லை. 

கடந்த பொதுத்தேர்தலின்போது, சென்னைப் போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ், இதே தி.மு.க-வின் கோரிக்கையால்தான் இடமாற்றம் செய்யப்பட்டார். 
சென்னை போலீஸ் கமிஷனராக அப்போது, அசுதோஷ்சுக்லா பொறுப்பேற்றார். ''போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் இடமாற்றம் நடந்தால்தான் தேர்தல் நியாயமாக நடக்கும்'' என்று தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. 
இந்த நிலையில்தான், கடந்த 17-ம் தேதி இரவு சென்னைத் துறைமுகம் வழியாக கன்டெய்னர்களில் பணம் வந்ததாகத் தகவல் வெளியானது. 
தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படை கண்காணிப்பு அதிகாரிகள், கடலோரக் காவல் படை போலீஸார், குற்றப்பிரிவு மற்றும் சட்டம் - ஒழுங்குப் பிரிவு போலீசார் தீவிர (?) கண்காணிப்பில் இருந்தபோதும் கன்டெய்னர்களில் பணம் வந்தது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
திருவொற்றியூர் - ஆர்.கே.நகர் சந்திப்பில் உள்ள விம்கோ நகர் யார்டு மற்றும் சென்னை துறைமுகப் பகுதிகளில் அதிகாரிகள், தீவிரசோதனையில் ஈடுபட்டு உள்ளனர். 
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி மக்களிடம் பேசியபோது, "கடந்த பொதுத்தேர்தலின்போதும் இப்படித்தான் கன்டெய்னரில் பணம் வந்ததாகப் பேசிக்கொண்டார்கள். நாங்கள், வேலைக்குப் போய்விட்டு வீட்டுக்குக்கூட வரமுடியவில்லை. எங்கள் கைப்பைகளை வாங்கி, டிபன் பாக்ஸையெல்லாம் திறந்துகாட்டச் சொல்லி போலீஸார் சோதனைசெய்தார்கள். 
ஆர்.கே.நகர் தொகுதியில் ஏதோ 144 தடை உத்தரவு போட்டதுபோலதான் பல நாட்களைப் பயத்துடன் கழித்தோம். இடைத் தேர்தல் வந்தபோதும் அதையேதான் அனுபவித்தோம். இப்போது என்னென்ன சோதனைகளைச் சந்திக்கப்போகிறோமோ" என்கின்றனர். 
தி.மு.க-வினரோ, கன்டெய்னரில் பணம் வந்த விதத்தையும், அது யாருக்கு வந்தது என்ற ரகசியத்தையும் கண்டறியும் முனைப்புடன் தொகுதியில் வேகம் காட்டுகின்றனர்.
"வழக்கு தொடர்பாக விளக்கம் கேட்டு நீதிமன்ற   நீதியரசர்கள் அழைப்பதும், அதற்கு ஏதாவது மாற்று ஏற்பாடுசெய்து  கோர்ட்டில் கால் வைக்கவே மாட்டேன் என்பதுபோல உறுதியாய் நிற்பதும் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தொடர்ந்து செய்துவருகிற ஒன்றாகவே ஆகிவிட்டது. 
கமிஷனர் வரும்போதும், போகும்போதும் கமிஷனர் அலுவலகம் உள்ள வேப்பேரியில் போக்குவரத்தை நிறுத்துவது, எட்டுமாடி அலுவலகத்தை விட்டு கீழே இறங்காமல் எல்லாவற்றையும் கண்காணிப்புக் கேமரா மூலமாகவே சரி செய்யலாம் என்று நினைப்பது எந்த விதத்திலும் சரியல்ல... சென்னை போன்ற பெருநகரங்களில் பணியாற்றும் அதிகாரிகள் இவ்வளவு 'விறைப்பு' காட்டுவது மக்கள் பாதுகாப்புக்கு ஏற்றதும் அல்ல" என்கின்றனர் சில காக்கிகள். 

                                                                                                      - ந.பா.சேதுராமன்(விகடன்)
=======================================================================================
ன்று,
மார்ச்-21.  • உலக  காடுகள் தினம்
  • உலக  இலக்கிய தினம்
  • பஹாய் காலண்டர் அறிமுகப்படுத்தப்பட்டது(1844)
  • டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள், கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றப்பட்டது(1917)
=========================================================================================

"மோடி அண்ணாச்சி ஹேப்பி."?


வ்வொரு வருடமும், உலகத்தில் எந்த நாட்டு மக்கள் அதிக மகிழ்சியாக வாழ்ந்து வருகிறார்கள் என்று "உலக மகிழ்வுக்கான அறிக்கை"(வேர்ல்டு ஹேப்பினஸ் ரிப்போர்ட்) பட்டியலிட்டு வருகிறது. 
மக்களின் வாழ்வாதாரம், ஆரோக்கியம், அரசியல்,  மற்றும் தனிப்பட்ட வாழக்கை என அனைத்திலும் மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் நாடு எது? என்ற அடிப்படைத் தகுதிகளோடு கணக்கிடப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் இந்த வருடம் நார்வே முதல் இடத்தையும், டென்மார்க் இரண்டாவது இடத்தையும், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஃபின்லாந்து ஆகிய நாடுகள் முறையே மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தையும் பெற்றிருக்கின்றன. 
இந்த வகையில், இந்தியா 122-வது இடத்தையும், பாகிஸ்தான் 80 வது இடத்தையும், நேபாளம் 99-வது இடத்தையும், ஸ்ரீலங்கா 110 வது இடத்தையும் பெற்றிருக்கின்றன.
சென்ற வருட கணக்கின்படி நார்வே நான்காவது இடத்திலும், இந்தியா 118 வது இடத்திலும் இருந்தது. 155 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பின்படி நார்வே அரசு தனது மக்களை மகிழ்சியாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தியதால், நான்காம் இடத்திலிருந்து முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
 மக்கள் மகிழ்ச்சியாக வாழவில்லை என்ற காரணத்தினால், சென்ற ஆண்டு 118-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு  122 வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக மோடி அரசு மார்தட்டிக்கொள்ளலாம்.
========================================================================================