ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

சார்லி சாப்ளின்

அவனும், அவனுடைய தாயாரும், கலை அரங்குகளில் பாடல் பாடி நடித்தால்தான், மொத்தக் குடும்பமுமே உயிர்வாழ முடியும் என்ற துயரநிலை. ஒருமுறை அவனது தாயாரால் பாட முடியாமல் போக, அவன் பாடத் தொடங்கினான். அவன் பாடிய பாடலைக் கேட்ட ரசிகர்கள், காசை அள்ளி வீசினர். 

அப்படி வீசப்பட்ட காசுகளை எடுப்பதும், பிறகு பாடுவதுமாக இருந்த அவனது செய்கை, அத்தனை பேரையும் சிரிக்க வைத்தது. 

அந்தச் சிரிப்புக்குப் பின்னால், அவன் அழுது கொண்டிருந்தது யாருக்கும் தெரியாது. 

அந்தச் சிறுவன்தான் பின்னாளில் உலகையே சிரிக்க வைத்த, சார்லி சாப்ளின்

லண்டனில் ஏழைக் குடும்பத்தில் சாப்ளினின் இளைமைக்காலம் இனிமையானதாக இல்லை. 
சிறுவயதிலேயே தந்தையை இழந்து தாயுடன் வளர்ந்தார். அவரது தாயும் மனநிலை பிறழ்வு நோயில் பாதிக்கப்பட்டு இருந்தார். பசியும் வறுமையும் சாப்ளினை வாட்டின. 
பல துன்பங்களைக் கடந்த சாப்ளினுக்கு, 14 வயதில் ஷெர்லாக் ஹோம்ஸ் கதையில் நடிக்க ஒரு சிறு வாய்ப்புக் கிடைத்தது. அதுதான் ஆரம்பம். 
அதன்பிறகு, உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களின் எழுத்துகளை வாசித்து, அவற்றை திரையில் கொண்டு வந்தார்.
ஓரளவு வளர்ந்ததும், அமெரிக்கா சென்று நாடகக் குழுவில் சேர்ந்து புகழ்பெற்றார். அதன்பிறகு, 1914ல் 'டிரெம்ப்' (TRAMP) படத்தில், நாடோடியாக நடித்து ரசிகர்களின் மனதை ஆட்கொண்டார். 
இறுக்கமான கோட், பெரிய சைஸ் பேன்ட், டூத்பிரஷ் மீசை, கிழிந்த தொப்பி, பொருத்தமில்லாத காலணி, வாத்து நடை என, அந்த வேடத்திலேயே தொடர்ந்து 25 ஆண்டுகள் நடித்து, உலக மக்களை மகிழ்வித்தார்.
அவருக்கு 1972ல், சிறப்பு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. நமது இந்திய அரசாங்கம் அவரது தபால் தலையை வெளியிட்டு, மாபெரும் கலைஞனுக்கு மரியாதை செய்தது.

சார்லி சாப்ளினால் 
புகழ்பெற்ற படங்கள்:

டிரெம்ப் (Tramp)

தி கிட் (The Kid)

கோல்ட் ரஷ் (Gold Rush)

சர்க்கஸ் (Circus)

சிட்டி லைட்ஸ் (City Lights)

மாடர்ன் டைம்ஸ் (Modern Times)

தி கிரேட் டிக்டேட்டர் (The Great Dictator) 

சாப்ளின், தன்னுடைய படம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக மிகவும் சிரமம் எடுத்துக்கொள்வார். செலவைப்பற்றி கவலைப்பட மாட்டார்.
 “தி கிட்” படத்தில் ஒரு காட்சிக்காக 50 ஆயிரம் அடி வரைக்கும் படம் எடுத்தார். அதில் 75 அடி தான் படத்தில் இடம் பெற்றது. சார்லி சாப்ளின் நடித்த “கிட்” என்ற புகழ் பெற்ற படத்துக்கு வெளியான விளம்பரம், அனைவரையும் கவர்ந்தது. 
தான் எடுக்கும் பேசாத படம் மக்களைப் பேச வைக்கும் என்ற தன்னம்பிக்கையோடு எடுக்கப்பட்ட படந்தான்,”நீவீtஹ் றீவீரீலீts”. எதிரிகள் சதி செய்ததால், இந்த படம் ஒரே ஒரு தியேட்டரில் மட்டும் திரையிடப்பட்டு, கட்டுக்கடங்கா கூட்டத்தைக் கூட்டி எதிரிகளை பணிய வைத்தது. 1940–ம் ஆண்டு வெளியான” தி கிரேட் டிக்டேட்டர்” என்ற படத்தில் ஹிட்லர் போன்ற ஒரு வேடத்தில் இவர் நடித்தார். இவரது முதல் பேசும் படமே, இது தான். 
இது அடால்ப் ஹிட்லரையும், அவரது பாசிச கொள்கையையும் எதிர்த்து குரல் கொடுத்த படம். இப்படம் அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் புகுவதற்கு ஒரு வருடம் முன்பு அங்கு வெளியிடப்பட்டது. இது உலக அளவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. 
இரண்டாம் உலகப்போரில் கொடும் சர்வாதிகாரியாக உலா வந்த ஹிட்லரை விமர்சித்து, இவர் எடுத்த படம், ஹிட்லரையே கொஞ்சம் யோசிக்க வைத்தது.
images (1)
அந்த படத்தில் ஹிட்லரை கேலி செய்து சாப்ளின் ஆற்றும் உரையில், “நாமெல்லோரும் ஒருவொருக்கொருவர் உதவி செய்துகொள்ளத்தான் வேண்டும். மனிதர்கள் அப்படித்தான். நாம் ஒவ்வொருவரும் அடுத்தவர்களின் மகிழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டுதான் வாழ வேண்டும்., அடுத்தவர்களின் துன்பத்தை ஆதாரமாகக் கொண்டல்ல. 
நாமெல்லோரும் ஒருவருக்கொருவர் வெறுக்கவும், துவேஷம் கொள்ளவும் வேண்டியதில்லை. நான் பேரரசனாக ஆக விரும்பவில்லை. அது என்னுடைய வேலை அல்ல. சர்வாதிகாரிகள் தங்களை விடுவித்துக் கொள்வார்கள். ஆனால், மக்களை அடிமைப்படுத்திவிடுவார்கள்!” என்ற இவரது சவுக்கடி வசனங்கள், போர் விரும்பாத மக்களை அதிகம் கவர்ந்து இழுத்தது. 
சினிமா மீது மோகம் கொண்ட ஹிட்லர், இப்படத்தை இரு முறைப் பார்த்தார். இந்தியாவிலிருந்து வந்த அண்ணல் காந்தியின் அஹிம்சை போராட்டாங்களை பற்றி கேள்விப்பட்டு, அவரை சந்தித்து மகிழ்ந்தார்.
Charlie-Chaplin-silent-movies-11196808-1024-768
ஹிட்லர், ரஷியா மீது பாய்ந்த பொழுது, “ஜனநாயகம் ஆபத்துக்கு உள்ளாகி இருக்கிறது ; எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள். அமெரிக்கா உதவிக்கு போக வேண்டும்” என்றார், சார்லி. தொழிலார்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட அவரின் படங்கள், அரசாங்கங்களை உலுக்கி எடுத்தன. 
தொழிலாளர் நலன், மக்கள் மீதானா அக்கறை யாவும் சாப்ளினைப் பற்றி அமெரிக்க அரசுக்கு பெரும் சந்தேகத்தை கொண்டு வந்தது. அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்து இருந்தாலும், அவர் பிரிட்டன் குடிமகனாகவே இருந்தார். இவர் அமெரிக்க கொள்கைகளுக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், கம்யூனிஸ்ட்-எனவும் அமெரிக்காவால் சந்தேகிக்கப்பட்டார். 
அப்போதைய அமெரிக்க அதிபர், எப்.பி.ஐ-யிடம் இவரை கண்காணிக்குமாறு உத்தரவிட்டு, அமெரிக்காவில் சாப்ளின் வாழும் உரிமையை நீக்க முயற்சித்தார். 1952–ம் ஆண்டில் சாப்ளின் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
 இதனை தெரிந்துகொண்ட அமெரிக்க அரசு, ஐ.என்.எஸ் -உடன் பேச்சுவார்த்தை நடத்தி, சாப்ளின் அமெரிக்கா திரும்பும் அனுமதிச் சீட்டை ரத்து செய்தது. ஆதலால் அவர் ஐரோப்பாவிலேயே தங்கும்படி நேர்ந்தது.
”நான் புரட்சியாளன் இல்லை! மக்களை ஆனந்தப்படுத்துகிற கலைஞன் அவ்வளவே!”என்றார் சாப்ளின். எனினும் அமெரிக்க அரசு அவரை உதாசீனம் செய்தது.
 “அமெரிக்காவில் காலடி வைத்தால் கைது செய்யப்படுவீர்கள்” என்று எச்சரித்தது. எனினும் எதற்கும் அஞ்சாத அந்த மாபெரும் கலைஞர், ஸ்விட்சர்லாந்து நாட்டிற்கு குடிபெயர்ந்து அங்கும் இரண்டு படங்களை இயக்கினார். ஐரோப்பியாவில் இருந்து தயாரித்த முதல் படத்தை அமெரிக்காவில் வெளியிடவே முடியாத அளவுக்கு, அமெரிக்க அரசு முரண்டு பிடித்தது.
சாப்ளின், இருமுறை சிறப்பு ஆஸ்கார் விருதினைப் பெற்றார். 
1967–ல் அவர் இயக்கிய கடைசிப்படம் வெளிவந்தது. 
1922—ல் ஆஸ்கார் விருதுகள் வழங்கியபொழுது, இப்பொழுதுள்ள வாக்களிப்பு முறை இல்லை. எனவே நேரடியாக சாப்ளின் “தி சர்க்கஸ்” திரைப்படத்துக்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குனர் விருதுகளுக்குத் தேர்வானார்.
ஆனால், இவருக்கு விருது வழங்க முடியாதிருந்த நிலையில், இத்திரைப்படத்தை எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்த அவருடைய பன்முகத்தன்மையையும், மேதைமையையும் பாராட்டிச் சிறப்பு விருது அளித்தார்கள். சார்லி சாப்ளின் அமெரிக்காவை விட்டு வெளியேறிய 20 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் ஒரு ஆஸ்கர் விருது அளிக்கப்பட்டது. .

 
சார்லி சாப்ளின் 1977இல் இறந்தார். 
அவரது உடலை அடுத்த ஆண்டே திருட முயற்சித்தனர். அமைதிக்குப் பெயர் பெற்ற ஸ்விட்சர்லாந்தில் அமைதியாக மீளா உறக்கத்தில் இருந்த அவருக்கா இந்த கதி என்று உலகமே அல்லோலகல்லோலப் பட்டது. 
2014இல் இண்டிபெண்டண்ட் பத்திரிகைக்குப் பேட்டி அளித்த அவரது மகன் உலகின் மோசமான சம்பவம் இது என்று விமரிசித்தார்.
உடலைத் திருப்பித் தர பெரும் தொகையை சவத் திருடர்கள் கேட்ட போது சார்லி சாப்ளினின் மனைவி பணம் தர மறுத்து விட்டார்.
சார்லியின் வெறும்  செத்த உடலுக்கு என்ன மதிப்பு ? என்ற அவரது பதிலைக் கேட்டத் திருடர்கள் பணம் கிடைக்கும் என்று வந்தவர்கள் அதிர்ந்து போனார்கள்.
சார்லியின் உடலை தேடிக்கொண்டிருந்த போலீஸார் சார்லி மனைவியின் உதவியுடன் அவரது தொலைபேசி  பேச்சை ஒட்டுக் கேட்டனர். அதன்படி  கிழக்கு ஐரோப்பாவில் பதுங்கி இருந்த இரண்டு பிரேதத் திருடர்களைப் போலீஸார்பிடித்தனர். 
அப்போதுதான் சார்லி சாப்ளினின் உடல் புதைக்கப்பட்ட  கல்லறைக்கு அடுத்த கல்லறையில்தான் அவரது உடல்  மாற்றி புதைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

========================================================================================
ன்று,
ஏப்ரல்-16.
  • சிரியா விடுதலை தினம்(1946)
  • உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் பிறந்த தினம்(1889)
  • இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது(1853)
  • செர்பியப் பேரரசு, டுசான் சில்னி என்பவரால் உருவாக்கப்பட்டது(1346)

=========================================================================================

நன்னாரி 

இந்தியாவில் எங்கும் வளரும் கொடி வகையைச் சேர்ந்தது. 
எதிரடுக்கில் அமைந்த குறுகி நீண்ட இலைகளையுடைய கம்பி போன்ற கொடியினம். 
இந்த வேரின் மேற்புரம் கருமை நிறமாகும். உள்ளே வெண்மை நிறமாகவும், நல்ல மணமுடைய தாகவும், வாயிலிட்டுச் சுவைக்க சிறிது இனிப்புடன் இருக்கும். 
விதை, நாற்றுக்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
சித்த மருத்துவத்தில் இதன் வேர்கள் பயன்படுத்தப்படுகிறது. 
சிறுநீர் நன்றாகப் பிரிய, வியர்வையைப் பெருக்கி உடலில் உஷ்ணத்தைத் தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது. ஒற்றைத் தலைவலிக்கு, செரிமானம், நாட்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற்றிற்கு நல்ல மருந்து.
பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி. பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாள் சாப்பிட நரை மாறும்.
பச்சைவேரை 20 கிராம் சிதைத்து 200 மி.லி. நீரில் ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி 100 மி.லி. வீதம் காலை, மாலை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வேட்டைச்சூடு, கிரந்தி, சொறிசிரங்கு, தாகம், அதிக பசி, மேக நோய் தீரும். பத்தியம் அவசியம்.
வேர் 20 கிராம் அரைலிட்டர் நீரில் போட்டு 200 மி.லி.யாக்கி 100 மி.லி. வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர நாட்பட்ட வாதம், பாரிசவாதம். தொல்நோய்கள், செரியாமை, பித்த குன்மம் தீரும்.
ஆண்மை பெருக நன்னாரி வேர் குடிநீரை இளஞ்சூடாக அருந்தி வரவேண்டும். வியர்வை நாற்றம் நீங்க மிளகு, உப்பு, புளி இவைகளுடன் நன்னாரியின் இலை, பூ, காய், கொடி, வேர் முதலியவற்றுடன் நெய் சேர்த்து வதக்கி 90 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.
நன்னாரி வேர்ப் பட்டையை நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவதோடு நாட்பட்ட இருமலும், கழிசலும் நிற்கும்.
நன்னாரி வேரை வாழையிலையில் வைத்துக் கட்டி எரித்து சாம்பலாக்கி அதனுடன் தேவையான அளவு சீரகமும், சர்க்கரையும் பொடித்துக் கலந்து அருந்திவர சிறுநீரக நோய்கள் அனைத்தும் விலகும்.
நன்னாரி வேர் பொடியுடன் சமளவு கொத்தமல்லியைத் தூள் செய்து சேர்த்து அருந்திவர பித்த சம்பந்த மன கோளாறுகள் நீங்கும். தவிர வயிறு, குடல், இவைகளில் உண்டாகும் நோய்கள் குணமாகும்.
நன்னாரி வேர்ப் பொடியுடன் சோற்றுக் கற்றாழை சோறு சேர்த்து உண்ண விஷக் கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும்.சித்தமருத்துவத்தில் நன்னாரி பல தைலங்களிலும் லேகியங்களிலும் மணமூட்டும் பொருளாகச் சேர்க்கப் படுகிறது.