இன்னும் 700 நாட்கள் அபாயம்?
நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்று 3 வருடங்கள் முடிந்துவிட்டன.
ஆயிரம் நாட்கள் கடந்து விட்டது.
நாட்களை சொல்வதற்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது.
அமெரிக்க குடிமக்கள் ஒரு ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்து விட்டு, 70 நாட்களே முடிந்த நிலையில் இவருடைய பதவிக்காலம் சீக்கிரம் முடிய வேண்டுமே என்றுகையைப் பிசைந்து கொண்டிருப்பதைப் போலவே இந்திய மக்களும் இருக்கிறார்கள்.
இதேபோன்ற பேச்சுக்களை பிரதமர் வேட்பாளராக இருந்த போதே நரேந்திர மோடி பேசினார்.
"அலெக்சாண்டர் கங்கை நதிக்கரையில் தோற்கடிக்கப்பட்டார்.
திருச்சியிலிருந்து வஉசி வேதாரண்யத்திற்கு உப்பு காய்ச்ச சென்றார்.
பெண்களை அதிகாரப்படுத்துவதில் குஜராத் முன்னணியில் இருக்கிறது.
சியாமா பிரசாத் முகர்ஜியின் அஸ்தியை நான்தான் எடுத்து வந்தேன்.
பட்டேலின் இறுதி நிகழ்ச்சியில் ஜவஹர்லால் நேரு கலந்து கொள்ளவில்லை" என்றெல்லாம் தப்பும் தவறுமாக எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக, பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.
இந்திய இடதுசாரிகளும், அறிவுசார் சமூகமும் நரேந்திரமோடி இந்திய அரசியலில் மிகப்பெரிய பேரழிவை உருவாக்கக்கூடும் என்றே எச்சரித்தார்கள். ஆயினும் கூட, முந்தைய ஐக்கிய முற்போக்குகூட்டணி அரசு மீதிருந்த கோபம், நரேந்திர மோடியின் வாக்கு சாதுர்யம், இந்திய பெருமுதலாளிகளின் அரவணைப்பு, கார்ப்பரேட் ஊடகங்களின் ஜால்ரா சத்தம், ஆர்எஸ்எஸ் என்கிற பாஜகவின் தாய் அமைப்பின் தந்திரங்கள், இவை அனைத்துமாக நரேந்திர மோடியை ஆட்சிக்கட்டிலில் ஏற்றி விட்டன.
தேர்தல் ஆரம்பித்த பிறகு, ஒருவாரம் கழித்துதான் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
அதுமட்டுமன்றி, பிரச்சார பொதுக்கூட்டங்களிலும் தேர்தல் அறிக்கையிலும் பாரதிய ஜனதா கட்சி பலவாக்குறுதிகளை அள்ளி வீசியது. அமைதியும்,நிம்மதியும், வளமும் இந்திய நாட்டில் கோலோச்சும் என்பது போலவும், எல்லோரும் எல்லாமும் பெற்ற நாடாக மாறி விடும் என்பதுபோலவும், அவர் வெற்றி பெற்று விட்டால் அண்டை நாடுகள் எல்லாம் இந்தியாவை கண்டு அஞ்சி நடக்கும் என்றும் உலக நாடுகளே கூட நரேந்திர மோடி மகுடாபிசேகம் செய்து கொள்ள இருப்பதை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பது போலவும் பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டன.
சொல்வார் செய்யமாட்டார்
வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை எல்லாம் மீட்டெடுத்து ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் கொடுப்பதாக சொன்னார். லோக் பால் சட்டத்தை கொண்டு வந்து இந்தியாவில் ஊழலை ஒழித்து விடப்போவதாக சபதம் செய்தார். விளைபொருளுக்கு ஒன்றரை மடங்கு விலை தருவேன், அதன் மூலம் தற்கொலைகளை தடுத்து நிறுத்தி விடுவேன்என்று தம்பட்டம் அடித்தார்.
அனைவருக்குமான பொதுவிநியோக முறையை அமல்படுத்துவேன், சர்வதேச சந்தையில் கச்சாஎண்ணெய் விலை குறைந்தால் பெட்ரோலிய பொருட்களின் விலை தானாக குறையும்வகையில் விலை நிர்ணயத்தை அரசு கைவிடுகிறது . இதன் மூலம் விலை குறைப்புஏற்படும் போதெல்லாம் பெட்ரோலியப்பொருட்களை பயன்படுத்துவோர் பயன் பெறுவார்கள்.
குறைந்த அரசாங்கம் கூடுதலானசேவை, பொதுத்துறைகளை வலுப்படுத்துவோம், ஆதார் அவசியமற்றது, அட்டூழியமானது, தாவுத் இப்ராஹிமை புறங்கையை கட்டிஇழுத்து வரமுடியாதா? நீதிபதிகளின் பணிஇடங்கள் காலியாக இருப்பதை நாங்கள் வந்தால் நிரப்பி விடுவோம் என்றெல்லாம் அவர்ஆவேசமாக பேசினார்.
ஆனால், 3 ஆண்டுகள்கழித்து விட்டபிறகு, இவையெல்லாம் யாரோ கொடுத்த வாக்குறுதி போலவும், தனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போலவும் ஊர் சுற்றி திரிகிறார்.
நரேந்திர மோடி வாக்குகளைப் பெறுவதற்காக பேசி விட்டு, இப்போது பம்மித்திரியும் அவரது உத்தரவாதங்கள். கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை என்பது திருக்குறள். ஒரு சொல் திறம்பினாலே கற்பு கெட்டவன் என்கிறது இந்த மூத்தோர் சொல்.
சொன்ன சொல் ஒவ்வொன்றையும் காப்பாற்ற முயற்சி எடுக்காத அல்லது கண்டு கொள்ளாத மோடிக்கு இந்த தமிழ் வார்த்தைக்கு சொந்தக்காரர்கள் என்ன பெயர் வைப்பார்கள் என்று தெரியவில்லை.
பொய் விதைத்து துயரம் அறுவடை செய்பவர்
தேர்தல் பிரச்சாரத்தின் போது இவர் பலரோடு டீ குடித்துக் கொண்டு அலைந்தார். அதில் முக்கியமான ஒன்று விவசாயம் பொய்த்ததால் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினரோடு இவர் குடித்த டீ. விதவைப்பெண்களையும், தந்தையை இழந்து எதிர்காலம் என்னவென்று புரியாத கலங்கிநின்ற குழந்தைகளையும் வைத்துக் கொண்டுதான் வந்தால் விவசாயத்தை மீட்டு எடுத்துவிடுவேன் என்று கூறினார்.
அவர்கள் கட்சியின்தேர்தல் அறிக்கை விவசாயத்தை மீட்டெடுக்க விவசாயிகளுக்கு வாழ்வளிக்க 3 முக்கியமான வாக்குறுதிகளை எழுத்துப்பூர்வமாக அளித்திருக்கிறது. ஒன்று, விளைபொருளுக்கு உற்பத்திசெலவைப்போல ஒன்றரை மடங்கு விலைகொடுப்போம். இரண்டாவது அனைத்து இடுபொருட்களும் (விதை, களைக்கொல்லி , பூச்சிக்கொல்லி உள்ளிட்ட) குறைந்த விலையில் தரப்படும்.
மூன்றாவதாக, விவசாயத்திற்குஅரசு நிதி ஒதுக்கீடு மற்றும் பொதுச்செலவினங்கள் அதிகரிக்கப்படும் என்றது.
இந்த மூன்றில் எதையேனும் முயற்சித்தாரா?
முயற்சித்து முடியாமல் போனதால் கைவிட்டு விட்டாரா?
இல்லை.
மாறாக, இது எதையும் அவர் அமல்படுத்த முனையவில்லை. 2015ஆம்ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு வருகிறது. வழக்கைத் தொடர்ந்தவர் விளைபொருளுக்கு ஒன்றரை மடங்கு விலை தருவதாக சொன்னீர்களே இன்னும் தரவில்லையே அதை தர வேண்டும்என்று உச்சநீதிமன்றம் மூலமாக முறையிடுகிறார்.
பாஜகவின் மோடி அரசு உச்சநீதிமன்றத்தில் ஒன்றரை மடங்கு விலை சாத்தியமேயில்லை என்று சாதித்தது. இத்தனைக்கும் அதை அமல்படுத்தி அது சாத்தியமற்று போனது என்று சொல்லி இருந்தால் கூடபிரச்சனையில்லை. இதன் பொருள் என்னவெனில், அது சும்மா தேர்தலுக்காக சொன்னது, அதையெல்லாம் தூக்கிக் கொண்டு நீதிமன்றம் வரலாமா என்ற எகத்தாளம்தான் அதற்குள் இருந்தது.
வேலையற்ற வேலை
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் 10ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி தான் இருந்தது என்று குறிப்பிட்டு இந்தக்காலத்தில் ஏற்பட்ட வேலைஇழப்பையும் கருத்தில் கொண்டு எதிர்வரும் காலத்தில் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்குவேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்று பேசினார்கள். வேலை வாய்ப்புக்கு காத்திருந்த இளைஞர்கள் வேலைக்காக ஏங்கி வந்த பட்டதாரிகள் மத்தியில் இந்த வார்த்தை ஒரு மந்திரம் போல பற்றிக் கொண்டது.
தாங்கள் சந்திக்கிற பிரச்சனைகள் , அவமானங்கள் இவற்றிலிருந்து வெளியேற இத்தனை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டால் அது தங்கள் வாழ்வில் ஒளியேற்றுவதாக அமையும் என்றுநினைத்தார்கள்.
ஆனால், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆயிரம் நாட்களை கடந்துவிட்ட பிறகு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்பது பற்றி எந்த வார்த்தையும் பேசவில்லை. அதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. 2016ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒட்டு மொத்த வேலை வாய்ப்பு வெறும் 2,31,000,இது இந்தியா முழுவதற்குமான கணக்கு, கடந்தஆண்டும் கிட்டத்தட்ட இதே நிலைதான்.
அதற்கு முந்தைய ஆண்டு இதே நிலைதான் என்றாலும், அதற்கு மோடியை குறைசொல்லிவிட முடியாது.
2 கோடி எங்கே, 2 லட்சம்எங்கே?
2009ஆம் ஆண்டு 10 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன.
இவர் வேலையை உருவாக்குவோம் என்றார், இப்போது வேலையற்றவர்களை உருவாக்கி கொண்டிருக்கிறார்.
கட்டெறும்பு வளர்ந்து கழுதையான கதை
பாஜக தேர்தல் அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்ட ஒரு அம்சம் குறைந்த அரசுநிறைவான சேவை, ஆரம்பத்தில் அவர்கள் பதவி ஏற்றபோது மொத்தம் 45 அமைச்சர்கள் மட்டுமேஇருந்தார்கள்.
பத்திரிகைகளும், பாஜகவினரும் ஆஹா, எங்கள் பிரதமர் அரிச்சந்திரர் சொன்னதுபோல செய்து விட்டார், வெறும் 45 பேர்தான் அமைச்சர்கள் என்றெல்லாம் கொண்டாடித் திரிந்தார்கள். கொஞ்சம் காலம் ஆனது. இப்போது மத்திய அமைச்சர்கள் எண்ணிக்கை 78. அதிகபட்சமாக 82 அமைச்சர்கள் இருக்கலாம். சமீப காலத்தில் ஐக்கியமுற்போக்குகூட்டணி அரசாங்கம் இதேஎண்ணிக்கையில் மைச்சர்களை வைத்திருந்தார்கள்.
அதற்கடுத்து இதுதான் பெரிய மந்திரி சபை. இவர்களின் குறைவான அரசாங்கம் என்பதன் லட்சணம் இதுதான்.
பொதுவிநியோக முறை
உணவு பாதுகாப்புச் சட்டம் 2013ஆம் ஆண்டு அமலுக்கு வந்து விட்டது. 2014ஆம் ஆண்டு தேர்தல் சில கட்டங்கள் நடந்துவிட்ட பிறகுதான் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்த தேர்தல்அறிக்கையில் அனைவருக்குமான பொதுவிநியோக திட்டம்தான் தங்கள் கொள்கை என்றது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு சிறப்பான பொதுவிநியோக திட்டங்கள் நடந்த கேரளா, தமிழ்நாடு அரசாங்கங்களை நிர்ப்பந்தித்து உணவு பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டுமென்று ஏற்றுக் கொள்ள வைத்துவிட்டார்கள்.
தமிழகத்தில்50 சதவீதத்திற்கும் மேல் ரேசன் பொருட்கள் கிடையாது என்று அறிவித்து விட்டார்கள். இந்த அரசு ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் பொதுவிநியோக முறையில் அதை மேம்படுத்த எடுத்த ஏதாவது ஒரு நடவடிக்கையை கூற முடியுமா?
எல்லைப் பாதுகாப்பு
மோடிக்கு 56 அங்குலம் மார்பு, அந்நியதேசமெல்லாம் பயந்து போகும். இந்தியாவின் மீது கைவைக்க எவனுக்கும் துணிவிருக்காது என்றெல்லாம் பேசினார்கள். ஏதோ அடியாட்கள்தான் உலகத்திலேயே சிறந்த ஆட்சியாளர்கள் என பொதுபுத்தியை கட்டமைத்தார்கள்.
இந்தியாவின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 3 முறை ஓராண்டுகாலத்திற்குள் ராணுவத்தளங்களின் மீது தாக்குதல் நடத்தியது இப்போதுதான் என்பதைஅவர்கள் உணர்ந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.
பதான்கோட்டில் 7 பேர், உரியில் 17 பேர், நக்ரோட்டாவில் 7 பேர் என 31 பேர் 3ராணுவ தளத்தில் நடைபெற்ற தாக்குதல்களில் மட்டும் கொல்லப்பட்டவர்கள். இது தவிர்த்து எல்லையில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதும் 8 வருட காலத்தில் 2016இல் தான் மிக அதிகம்.82 பேர் கொல்லப்பட்டார்கள்.
வெட்டிப்பேச்சும்வெற்றுக்கூச்சலும் வெற்றிகளைத் தந்துவிடாதுஎன்பதற்கான உதாரணம் மோடி அரசு.உள்நாட்டிற்குள் ஏதேனும் ஒருபிரச்சனைஎன்று எவரேனும் சொல்ல ஆரம்பித்தால் எல்லையில் ராணுவம் இக்கட்டான நிலையில்இருக்கிறது அவர்கள்எல்லாம் எவ்வளவு சிரமத்தில் இருக்கிறார்கள்என்று கதைப்பார்கள்.
ஆனால், எல்லையிலிருந்த ராணுவ வீரரொருவர்தங்களுக்கு சாப்பாடு என்ற பெயரில் திரவம் தருவார்கள். அடியிலிருந்து அள்ளினால் அதுகூட்டு, கலக்கிவிட்டு அள்ளினால் அது சாம்பார்,தெளிய வைத்து ஊற்றிக்கொண்டால் அது ரசம்என்று சொல்லி இருந்ததை பார்த்ததும் இவர்கள்பொங்கி எழுந்தார்கள். ஏதோ சரி செய்யப்போகிறார்கள் என்று நினைத்தால் அப்படி சொன்னவரை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்கள்.
குடிநீருக்கும் ஆபத்து
இவர்கள் எந்தஅளவு மக்கள் விரோதிகள் என்பதற்கு தேசிய நீர்க்கொள்கை சட்டமுன்வரைவு 2016 ஒரு நல்ல உதாரணம். இனிமேல் தண்ணீர் பொதுப்பண்டமல்லவாம், அது வியாபாரப்பண்டமாம். குடிநீர் கூட வறுமைக்கோட்டிற்கு கீழிருந்து உயர் பணக்காரர்கள், நடுத்தர வகுப்பினர் என்று வகை வைத்துதான் தருவார்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒருவிலை. கொடுக்கப்படும் தண்ணீரை சுத்திகரிப்பதற்கான செலவையும், அதாவது கொடுக்கப்பட்ட நல்ல தண்ணீரை நாம் பயன்படுத்திய பிறகு அதை,சுத்திகரிப்பதற்கான செலவையும் சேர்த்து வாங்கிக் கொள்வார்கள். இப்படித்தான் இருக்கிறது இவர்களின் நீர்க்கொள்கை.
எதைத்தான் விட்டு வைத்தார்கள்?
ஆதாரை ஆபத்து என்றவர்கள் இப்போதுகட்டாயமாக்கி நிர்ப்பந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக தமிழகத்தில் மட்டும்13 லட்சம் ரேசன் கார்டுகளுக்கு பொருள் வழங்குவது நிறுத்தப்பட்டு விட்டது. பெட்ரோலிய பொருட்களின் விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தால் இங்கும் குறையும் என்று பேசினார்கள்.
ஆனால்விலை குறைந்த போதெல்லாம் கலால் வரியைஉயர்த்தி பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை 2 மடங்குக்கு அதிகமாக்கி விட்டார்கள்.கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பொதுமக்களுக்கு விலைகுறையாத ஒருவிநோதவித்தையை இவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நேரடி மானியம் கொடுத்தால் இன்னும் விலைகுறையும், ஏழைகளுக்கெல்லாம் நிறைய கிடைக்கப் போகிறது என்று பேசினார்கள்.
இதோ, அவர்கள் ஆட்சிக்கு வந்து 3ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், ஆட்சிக்குவந்தபோது 399 ரூபாயாக இருந்த சமையல்எரிவாயு சிலிண்டர் விலை ஏறத்தாழ இரட்டிப்பாக 785 ரூபாயாக மாறி விட்டது. ஆனால்,ஏழை, எளிய மக்கள் பெற்றுக்கொண்டிருக்கும் மானியம் மட்டும் 141 ரூபாயில் நிலை பெற்றிருக்கிறது.
அடுத்து சொன்னார்கள்-வங்கிகளில் கடன் வாங்கி விட்டு அதை திருப்பிகட்டாமல் இருக்கும் தொகை பெருத்துக் கிடக்கிறது. நாங்கள் வந்தால் அதை குறைத்து விடுவோம் என்று பேசினார்கள். குறைக்காதது மட்டுமல்ல, மாறாக, பெரு முதலாளிகளான கடன்காரர்களிடமிருந்து வசூலிக்கும் தொகை குறைந்திருக்கிறது.
2014 மார்ச் கணக்கின்படி இந்தத்தொகை 1,73,800 கோடி.
அந்த ஆண்டு 32,000 கோடி ரூபாய் மீண்டும் பெறப்பட்டது.
இது 18.4சதவிகிதம்.
2016ஆம் ஆண்டு ஆட்சி இத்தகைய வராக்கடன் 2,21,400 கோடி.
இதில் 22,800 கோடி மட்டுமேவந்திருக்கிறது.
இது 10.3 சதவிகிதம். இதுதான் இவர்கள் வேகமாக செயல்படும் லட்சணம்.
சு.கனகராஜ் |
இப்படி ஒவ்வொரு துறையிலும் ஏற்கெனவே இருந்ததை விட இந்தியா கீழேபோயிருக்கிறது.
ஆனால், இந்தியா வளர்ந்திருப்பதாக கூலிக்கு ஆள் வைத்து பிரகடனம் செய்கிறார்கள். ஊடகங்களை விலைக்கு வாங்கியும், விளம்பரம் கொடுத்தும் அப்படி பேச வைக்கிறார்கள். இப்படித்தான் இவர்களது முன்னோர் வாஜ்பாய் காலத்தில் இந்தியா ஒளிர்கிறது என்று தம்பட்டம் அடித்தார்கள்.
இருண்டு கொண்டிருந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் தேர்தல் நேரத்தில் அந்த அரசாங்கத்தை ஒழிப்பதுதான் இந்தியாவை ஒளியூட்ட ஒரே வழி என்று முடிவுக்கு வந்தார்கள். இப்போதும் அப்படித்தான் இருக்கிறது.
ஆனாலும்,
வேறு வழியில்லை.
இன்னும் 700 நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
ஆனால் மாட்டிறைசிக்காக மாடுகளை விற்க கூடாது என்ற தடை மோடியால் தற்போது விதிக்கப்பட்டுள்ளது.இத்தடை இந்தியா முழுக்க அதிர்ச்சியை எழுப்பியுள்ளது.மக்களால் எதிர்க்கப்படுகிறது.
ஆனால் மூன்றாண்டுகளில் எந்த ஆணியையுமே புடுங்கத மோடியின் ஆர்.எஸ்.எஸ், அரசு தனது உணராண்டு தோல்வியை மறைக்கவே இப்படி ஆணைகளை பிறப்பித்து மக்களிடம் பதட்டத்தை உருவாக்கி அதேநிலையில் மத வெறியை தூண்டி குளிர்காயவும்,அடுத்த தேர்தலை சந்திக்கவும் தயாராகிவருகிறது.
இது இந்தியாவை குப்புறத்தள்ளி குழி பறிக்கும் வேலை.ஆனால் ஆர்.எஸ்.எஸ்.குழுமத்துக்கு அது அகண்ட பாரதம் அமைக்கும் தனி வழி.
===========================================================================================
இன்று,மே-28.
- ஆர்மீனியா குடியரசு தினம்
- நேபாள குடியரசு தினம்
- தமிழ் மருத்துவ ஆய்வாளர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் இறந்த தினம்(1884)
- கிரீசில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது(1952)