ஞாயிறு, 7 மே, 2017

நீட் தேர்வு:விளைவு தெரியுமா?நீட் (National Eligibility cum Entrance Test-NEET) தேர்வு என்பது, பொது மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவப்படிப்பில் சேர்வதற்கு அகில இந்திய அளவில் நடைபெறும் மருத்துவக்கல்விக்கான நுழைவுத் தேர்வாகும். 
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் இத்தேர்வு இந்திய மருத்துவ நுழைவுத் தேர்விற்கு (All India Pre Medical Test (AIPMT)) மாற்றாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது. தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் 01-02-2017 அன்று அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு, நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்க்கு விலக்களிக்க வேண்டி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. இப்போது 95 நாட்களான பிறகும் இதற்குரிய முடிவாக, மத்திய அரசோ, பிரதமரோ இன்று வரை பதிலேதும் தரவில்லை. 
வரும் மே-7இல், இந்த அகில இந்திய நுழைவுத் தேர்வு நடக்க உள்ள சூழலில் இந்தக் குழப்பத்திற்கு மத்திய அரசே முழுப்பொறுப்பேற்க வேண்டும். 
இதனால் இந்த ஆண்டு மருத்துவக் கனவில் இருக்கும் தமிழ்நாட்டு மாணவர், மத்திய அரசின் முடிவுப்படி நீட் தேர்வு நடக்குமா அல்லது மாநில அரசு முடிவின்படி நுழைவுத் தேர்வு இல்லாமலே +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப்படிப்பு கிடைக்குமா எனும் பெரும் குழப்பத்தில் இருக்கின்றனர்.
கிராமங்களில் உள்ள ஏழை மாணவர்களுக்கும் கிராமம் மற்றும் நகரங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மாணவர் மற்றும் சிறுபான்மையோர்க்கும்  உயர் கல்வி தருவதுதானே நல்ல அரசாக இருக்க முடியும்? 
இவர்களைப் புறக்கணித்து விட்டு நகரில் வசதியானவர் மட்டும் வளர்வது சமத்துவமற்ற சமுதாய வளர்ச்சியாக அல்லவா இருக்கும்? 
2004-2005 இல் +2 தேர்வெழுதியவர்கள் சுமார் 5லட்சம் மாணவர். இவர்களில் கிராமப்புற மாணவர்கள் சுமார் 2லட்சம்பேர். 
அந்த ஆண்டிற்குரிய மருத்துவ இடம் 1125. இதில் – நுழை வுத்தேர்வில் தேர்வு பெற்ற கிராமப்புற மாணவர்கள் வெறும் 227பேர்கள் மட்டுமே. அதாவது சுமார் 5 சதவீதம் கிராமப்புற மாணவர்க்கே மருத்துவப் படிப்பு கிடைத்தது. 


இது சமத்துவ சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி. முக்கியமான இந்தக் கருத்தை முன்வைத்து, அன்றைய திமுக தலைமையிலான தமிழக அரசு வாதிட, நீதிமன்றமும் இதனை ஏற்று ‘இனி மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு கூடாது’ என்று நல்ல தீர்ப்பளித்தது.
மீண்டும் நுழைந்தது எப்படி?
அன்றைய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபலின் கருத்தை ஏற்று, ‘நாடு முழுவதற்கும் ஒரே நுழைவுத் தேர்வு நடத்தலாம்’ என்று எம்சிஐ (MEDICAL COUNCIL OF INDIA) எனும் இந்திய மருத்துவக் குழு பரிந்துரைத்தது. 
இதன்படி 2010இல் இருந்த மத்திய காங்கிரஸ் அரசும் பொது நுழைவுத்தேர்வு நடத்தத் திட்டமிட்டது.  இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 115 மனுக்கள் வந்தன. 
மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் இருவர் நுழைவுத் தேர்வுக்கு எதிராக 18-07-2013இல் தீர்ப்பளித்ததால் நுழைவுத் தேர்வு தொலைந்தது. மூன்றாவது நீதிபதியான ஏ.ஆர்.தவே மட்டும் நுழைவுத்தேர்வை ஆதரித்தார்.
எனினும்பெரும்பான்மை கருதி வழக்கு நுழைவுத் தேர்வுக்கு எதிராக வந்தது. இதனால் 2014, 2015ஆம் ஆண்டுகளும் நுழைவுத் தேர்வு இல்லாமல் போனது. தமிழகத்தின் 85 சதவீதம் இடங்களுக்கு +2 மதிப்பெண் அடிப்படையில் இடம் கிடைத்தது. 
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அருந்ததியர் இன, தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்வி படித்து வருகின்றனர். இந்த நிலை இனி தொடராது என்றுதான் நீட் நுழைவுத் தேர்வு வந்திருக்கிறது.
மத்தியில் பாஜக அரசு அமைந்தவுடன், அது நுழைவுத் தேர்வுக்கு ஆதரவு நிலையெடுத்தது. நுழைவுத் தேர்வு வேண்டாமென்ற தீர்ப்புக்கு மறுசீராய்வு மனுப்போட்டது. 
ஏற்கெனவே நுழைவுத் தேர்வுக்கு ஆதரவாக இருந்த நீதிபதி ஏ.ஆர்.தவே தலைமையிலான நீதிபதிகள் குழு நுழைவுத் தேர்வுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து ‘தேசிய நுழைவுத் தேர்வுச் சட்டம்-2016’ ஆகஸ்டு, 2016இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 
வந்தது வினை! உலகம் முழுவதும் ஒரு மாதிரி, இந்தியா மட்டும் வேறுமாதிரியா?! 
மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, மருத்துவம் இரண்டும் அவசரநிலைக் காலத்தில் சத்தமில்லாமல் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டன.
இப்போது அதையும் தாண்டி, மத்தியிலேயே வைத்துக் கொள்வது சர்வாதிகார மல்லவா?அண்ணல் அம்பேத்கர் வகுத்தளித்த அரசியல் சட்டம், இந்தியா முழுவதிலும் உள்ளவேறுபட்ட மொழி பேசுவோர் ஒவ்வொருவருக்குமான உரிமைகளைச் சமஅளவில் வழங்குகிறது.
 இதைத்தான் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்று உலக நாடுகளெல்லாம் வியந்து போற்றுகின்றன. ‘கூட்டாட்சித் தத்துவம்இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்று’ என்பது உண்மையெனில், அனைத்து மாநிலங்களுக்குமான ஒரே முறையான தேர்வு என்பது சரியல்லவே! அதிலும்கல்வி, மருத்துவம் இரண்டையும் மாநிலப் பட்டியலில் வைத்து நிர்வகிப்பதே கடைக்கோடி ஏழைக்குமான உரிமையாகும்.
நீட் தேர்வுக்கு எதிராக ஏற்றப்பட்ட மசோதாவை
 குடியரசுத்தலைவருக்கு அனுப்பாமலேயே
ஏமாற்றியது அதிமுக அரசு
.

சிபிஎஸ்இ, மாணவர்களுக்கும் அநீதியே!
மாநில அரசுப் பள்ளிகளில் படிப்போர்க்கு மட்டும் இது அநீதியான தேர்வு என நினைக்காதீர்கள்! சிபிஎஸ்இ, மாணவர்க்கும் இது அநீதியான தேர்வேதான்! 
எப்படி எனில், மத்தியஅரசு நடத்தும் சிபிஎஸ்இ, படிப்பு தான் உயர்ந்த படிப்பு என்று சொல்லிவிட்டு, அதற்குப் பிறகும் எதற்கு இந்த நுழைவுத் தேர்வு? 
அந்த மதிப்பெண்ணை அப்படியே எடுத்துக் கொண்டு மருத்துவக் கல்விக்குரிய இடங்களை வழங்கவேண்டியது தானே? 
ஆக அவர்களுக்கும் இது அநீதிதான்!
மாநில அரசின் +2தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்தாலே போதும் என்பது போல, சிபிஎஸ்இ, தேர்வாவது போதும் எனச் சொல்லலாமே? 
அந்தத் தரத்திற்கு மாநிலக் கல்விமுறையை ‘உயர்த்த’ அவகாசம் தரலாமே? 
அதுவும் இல்லை, இதுவும் இல்லை யென்று இந்தக் குறுக்குச் சால் எதற்கு? 
எப்படியோ இந்தியப் பள்ளிகளில் படிக்கும் பல லட்சம் மாணவ-மாணவியரை மீண்டும் மீண்டும் தேர்வெழுத வைத்துச் சோர்வடைய வைப்பது யாருக்காக? 
தனியார் பயிற்சி மையம் மற்றும் மருத்துவக் கல்வியில் நுழையப்போகும் பன்னாட்டுக் குழும – கார்ப்பரேட்-முதலாளிகளுக்கான முன்தயாரிப்புத் தானே? 
இதைத்தானே உலக நிதி நிறுவனம் ஏற்கெனவே சொல்லியிருக்கிறது?
இப்போது, ஐஐடி எனும் உயர்தொழிற்கல்வி வாய்ப்பைப் பெற்றுத் தருகிறோம் என்று சொல்லி, பல மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 8ஆம் வகுப்பிலே இருந்தே பணம் கறந்துகொண்டு தனிப்பயிற்சி தருகிறார்களே அதுபோல, இந்த ‘அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு நாங்களே பயிற்சி தரப் போகிறோம்’ என்று, இனி சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் பணம் கறக்கும் அமுதசுரபியாக நுழைவுத் தேர்வும் ஆகப் போவது நிச்சயம்! 
ஆக சிபிஎஸ்இ பள்ளி மாணவர்க்கும் இந்த நுழைவுத் தேர்வால் அநீதிதானே?
நீட் தேர்வு நேர்மையாக நடக்கும் என்பதாவது உண்மையா?
‘மாநிலக் கல்வித்துறையால் நடத்தப்படும் தேர்வுகள் தரமாக இல்லை, நேர்மையாக
இல்லை, நாங்கள் தரமாகவும் நேர்மையாகவும் தேர்வு நடத்தி அதிலிருந்தே தரமான மருத்துவ மாணவரைத் தேர்வு செய்யப் போகிறோம்’ என்று சொல்லும் நுழைவுத் தேர்வு நேர்மையாளர்களுக்குச் சில கேள்விகள்:
l மாநிலத் தேர்வுகள் அதிகபட்சமாக -அதுவும் தமிழ்நாட்டில்- மிகச்சிறந்த கட்டுப்பாடுகளுடன் நடந்துவருவதை நாடே அறியும். 
இதற்கு நேர்மாறாக மார்ச்-2007இல் நடந்த மருத்துவ முதுநிலைப் பட்டப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் முறைகேடு நடந்ததே! 45 மருத்துவர்கள் உட்பட 52பேர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்ததே இது எப்படி?
l மத்தியப் பிரதேச இதே பாஜக அரசின் ‘வியாபம்’ என்று ‘செல்லமாக’ அழைக்கப்படும் அரசுப் பணியாளர் தேர்வில்-குறிப்பாக மருத்துவ நுழைவுத் தேர்வில்- ஆள்மாற்றி அடித்த கூத்து நாடு முழுவதும் சிரித்ததே. பத்தாம் வகுப்புக் கூடப் படிக்காத பல ஆயிரம் பேர் நாடுமுழுவதும் இப்போதும் மருத்துவராக இருப்பதாக வரும் தகவலுக்குப் பதிலென்ன? 
பலகோடி புரண்ட இந்த நுழைவுத் தேர்வு லட்சணத்தில் இந்த ‘அகில இந்திய நுழைவுத் தேர்வு’ நடக்காது என்பதற்கு உத்தரவாதம் உண்டா?
l அண்மையில் மத்தியஅரசு நடத்திய அஞ்சல்துறைத் தேர்வில் தமிழே தெரியாத பீகார் மாணவர்கள் இலக்கண மதிப்பெண்களை அள்ளிக் குவித்த கதைகள் ஊடகங்களில் வந்தனவே! 
இந்தப் பின்னணி என்ன?
l நுழைவுத் தேர்வுக்குப் பரிந்துரை செய்த இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவரே ஊழல் வழக்கில் மாற்றப்பட்டது உண்மையெனில், இவர்கள் நடத்தும் தேர்வு நாடுமுழுவதும் இந்த லட்சணத்தில்தானே நடக்கும்?
மருத்துவக் கல்விக் கட்டணம் குறையுமா?
‘குறையும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை’ என்று வாதிடுகிறார்கள் கல்வியாளர் பிரின்சு கஜேந்திர பாபுவும் மருத்துவர் எழிலனும். அவர்களின் வாதம் சரியாகவே இருக்கிறது. 
இப்போது தனியார் மருத்துவக் கல்லூரியில் ரசீது ஏதுமில்லாமல் சுமார் 1கோடி வரை ஒரு சீட்டு விலை போகிறதெனில், இனி இது அரசு அனுமதியுடனே நடக்கப் போகிறது!
அவ்வளவுதான்! கல்விக்கட்டணத்தை வரையறுக்க இந்தத் தேர்வு எந்த வகையிலும் உதவப்போவதில்லை. சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு முடியாமல், வெறும் தேர்வு முறை மாற்றம் இந்தக் கட்டணக் கொள்ளையைத் தடுக்கும் என்பதை எப்படி நம்புவது?
 மாறாக தனிப்பயிற்சி மையங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எனும் பெயரில் ‘கல்வி வள்ளல்களின் தொந்தி பெருக்கவே இந்த மருத்துவ நுழைவுத்தேர்வு ஊட்டச்சத்தாக மாறப்போகிறது!
மாநில உரிமை பறிப்பால் என்ன ஆகும்?
‘கல்வி, மருத்துவம் இரண்டையும் மாநிலப் பட்டியலிலேயே இடம்பெற வேண்டும்’ என்கிறது  அரசியல் சட்டம்.
 ஆனால், இன்று பத்தாம் வகுப்புப் படிப்புக்கே இரண்டு வினாத்தாளாம்! அதில் மொழித்தாளை மாநில அரசு எடுக்கும், அறிவியல், கணிதத்திற்கான மற்றொரு வினாத்தாளை மத்திய அரசே எடுத்துத் தரும் என அத்துமீறும் எதேச்சதிகார மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையின் முன்னோட்டமே இந்த நீட் தேர்வு!
மாநில கல்வியைப் பறிப்பது மாநில அரசு-மக்களின் உரிமைப் பறிப்பல்லவா?! ‘மாட்டுக்கறி சாப்பிடாதே’ என்பதற்கும், ‘மருத்துவ மாணவர் தேர்வில் மாநில அரசு தலையிடாதே’ என்பதற்கும் வேறுபாடுள்ளதா என்ன? 
இந்தியா முழுதும் இருந்து மாணவர்களை இவர்கள் தேர்வு செய்து தருவார்களாம்! அவர்களுக்கு மாநில அரசு மாநில மக்களின் வரிப்பணத்தில் கல்வி வழங்கவேண்டுமாம்! ‘நீ அரிசி கொண்டுவா! 
நா உமி கொண்டு வர்ரேன். ரெண்டுபேரும் எங்கவீட்டுத் திண்ணையில உக்காந்து ஊதிஊதித் தின்போம்’ என்பது
புரியாதா என்ன?
பட்ட மேற்படிப்புக்கும் ஆபத்து!

MD, MS போலும் மருத்துவப் பட்ட மேற்படிப்பு இடங்களுக்கும் இந்த நீட் தேர்வு இந்த ஆண்டு முதல் நடக்கவிருக்கிறதாம்! இதன் விளைவு என்ன தெரியுமா? 
அகில இந்திய அளவில் முன்னணியில் உள்ள தமிழ்நாட்டில் 1250 இடங்களில் கடந்த 4ஆண்டாக மாநில இடங்கள் 50 சதவீதம் அகிலஇந்திய இடங்கள் 50 சதவீதம் எனவும் சேர்க்கை நடைபெற்று படித்துவருகிறார்கள். இந்த ஆண்டு முதல் அனைத்து இடங்களுக்கும் பட்ட மேற்படிப்பு நீட் தேர்வு நடைபெறுமாம்! இதன் விளைவு? கிராமப்புற மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு மாநில அரசு 50 சதவீதம் இடங்களை ஒதுக்கீடு செய்து வந்தது. 
இதனால், கிராமப்புறங்களில் பணியாற்ற மருத்துவர்கள் உற்சாகமாக முன்வந்தனர். கிராமப்புற ஏழைகளும் இதனால் அரசின் தரமான மருத்துவத்தைப் பெற்று வந்தனர். இனி என்னாகும்?
இதோடு, தமிழகத்தில் பட்ட மேற்படிப்புப் படிக்கும் மருத்துவர்கள் குறிப்பிட்ட ஆண்டுகள் அரசுப்பணியாற்ற வேண்டும் என்ற உறுதி பெறப்பட்டிருந்தது. 
ஆனால் இனி அந்த உறுதி இல்லாததால்,மக்கள் பணத்தில் படித்துவிட்டு, தனியார் மருத்துவ மனை வைப்பதோ, வெளிநாடுகளுக்குப் பறப்பதோ இனி எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் நடக்கும்.  எய்ம்ஸ் எனும் உயர் மருத்துவம் பெறும் மாணவர்களில் பாதிப் பேருக்குமேல் (56சதவீதம்) வெளிநாடு பறந்து விடுகிறார்கள் என்பது இனி தமிழ்நாட்டிலும் நடக்கும். 
மக்கள் பணம் தனியாருக்கு லாபம்! இந்த ஆபத்தை உணர்ந்துதான், தற்போது தமிழக மருத்துவர்கள் ‘பிஜி-நீட்’ தேர்வை எதிர்த்துப் போராடுகின்றனர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஏற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள நடைமுறைப்படியே அதாவது +2தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே – நுழைவுத் தேர்வு இல்லாமலே- மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். 
மருத்துவப் பட்ட மேற்படிப்புப் படிக்க ஏற்கெனவே இருந்த (50-50) எனும் நடைமுறை தொடரவேண்டும் இதற்கான தமிழக அரசின் சட்டமன்றத் தீர்மானத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் தருவதோடு, இந்தியக் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் தரவேண்டும். 
இதனை வலியுறுத்தி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆசிரியர் அமைப்புகள், அறிவியல் இயக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம், பகுத்தறிவாளர் கழகம் உள்ளிட்ட நாற்பது அமைப்புகள் ஒன்றிணைந்து, ‘கல்வி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு’ ஒன்றை ஏற்படுத்தியிருக்கின்றன.
 மாநில நலன் காக்கவும், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட விளிம்புநிலை மக்களின் உரிமையைக் காக்கவும், மறைமுகமாகக்கல்வியை வியாபாரமாக்கும் போக்கை எதிர்த்து முறியடிக்கவும், போராட வேண்டும்.

நா.முத்துநிலவன்

(35 ஆண்டுகள் அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர், எழுத்தாளர், சமூகஆர்வலர்)
============================================================================================
இந்தியா பூர்விகமாகக் கொண்ட  பிரிட்டன் மாணவி ஐன்ஸ்டீனை விட அதிக ஐ.க்யூ புள்ளிகள் பெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

12 வயதான ராஜகெளரி பவார் என்ற அந்த மாணவிக்கு இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியில் கடந்த மாதம் ஐ.க்யூ சோதனை நடத்தப்பட்டது. 


இந்த சோதனையில் அவர் 162 புள்ளிகள் பெற்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

புகழ் பெற்ற விஞ்ஞானிகளான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் ஆகியோரின் ஐ.க்யூ புள்ளிகள் 160 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக 140 ஐ.க்யூ புள்ளிகள் பெறுபவர்கள், ஜூனியசாக கருதப்படுவார்கள். 

18 வயதுக்கு கீழே இவ்வளவு அதிகமாக ஐ.க்யூ உள்ளவர்கள் 1 சதவீதத்தினர் மட்டுமே. 
உலகம் முழுவதும் சுமார் 20,000 பேருக்கு நடத்தப்பட்ட இந்த ஐ.க்யூ சோதனையில், ராஜகெளரி மட்டுமே அதிக புள்ளிகள் பெற்றுள்ளார்.
============================================================================================
ன்று,
மே-07.

  • உலக ஆஸ்துமா நோய் தினம்
  • நார்வே தேசிய தினம்
  • சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் இறந்த தினம்(1539)
  • வங்காள மொழிக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம்(1861)
  • ஐரோப்பிய அமைப்பு உருவாக்கப்பட்டது(1948)
=============================================================================================
1966 ஆம் ஆண்டு, அக்டோபர் 8 ஆம் நாள். ஒட்டிய கன்னத்துடன், தாடியுடன், முகமெல்லாம் சோர்வுடன், ரத்தம் வடிய வடிய நின்று கொண்டிருக்கிறார். 
காலில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்திருக்கின்றன. ராணுவத்தினர் அவரைச் சுற்றி வளைத்து விட்டனர்.

ஒரு பள்ளிக் கூடத்தின் அறையில் அவரை சிறை வைக்கின்றனர். அது ஒரு அசுத்தமான அறை. அறையின் ஒரு ஓரத்தில் படுக்க வைத்திருந்தார்கள். அவரது கைகள் பின்புறம் கட்டப்பட்டிருக்கின்றன. பரட்டைத் தலை. பிய்ந்து போன காலனிகள். அழுக்கேறிய உடைகள்.


அந்த அறைக்குள் நுழைகிறார் ஜீலியா கோர்ட்ஸ். இவர் அந்தப் பள்ளியின் ஆசிரியர்.
சங்கிலியால் கைகள் கட்டப்பட்டுப் படுத்துக் கிடந்த அவ்வீரன் மெல்ல கண் திறக்கிறார்.


'யாரது?'
'தங்களுக்கு உணவு கொண்டு வந்திருக்கிறேன்' - மெதுவாக அச்சத்துடன் பதில் கூறுகிறார் ஆசிரியர்...

இது எந்த இடம்?
பள்ளிக் கூடம்...

இத்தனை மோசமாக இருக்கிறதே. இங்கே எப்படி வகுப்புகள் நடத்துகிறீர்கள்? 
சிரமமாக இல்லையா?

அந்த நிமிடம். அந்த நொடி அப்படியே உறைந்து போகிறார் ஆசிரியர். இவரால் இந்தச் சூழ்நிலையில் எப்படி, இப்படி ஒரு கேள்வியைக் கேட்க முடிகிறது. வார்த்தைகள் இன்றி மலைத்து நிற்கிறார் ஆசிரியர்...

கவலை வேண்டாம். ஒரு வேளை நான் பிழைத்திருந்து, புரட்சியும் வெற்றி பெற்றுவிட்டால், உங்களுக்கு ஒரு நல்ல பள்ளிக் கூடம் கட்டித் தருகிறேன்...

கொண்டு வந்த உணவை, கீழே வைத்துவிட்டு, அழுதபடியே வெளியே ஓடுகிறார் ஆசிரியர்...
நண்பர்களே, 

இவர்தான் சே குவேரா...

மரணத்தின் வாயிலில் நின்ற போதுகூட, மக்கள்,பள்ளிக் கூடம் பற்றிக் கவலைப் பட்டவர்தான் சே குவேரா...
===============================================================================================

ஹெராயின்

ஹெராயின் (diacetylmorphine) மார்பினிலிருந்து பெறப்படும் போதை வஸ்து. 
ஹெராயினின் மூலம் ஜெர்மனி வார்த்தை heroisch. 1898 ஆம் ஆண்டு ஜெர்மனியின் பேயர் பார்மசூட்டிகல் நிறுவனத்தின் மூலம் காசநோய் மருந்தாக சந்தைக்கு வந்தது. அமெரிக்காவில் ஹெராயினின் பயன்பாடு 80%.
* வெள்ளை மற்றும் பழுப்பு, கருப்பு நிறத்தில் பவுடராக கிடைக்கும் ஹெராயினை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 9.2 மில்லியன். ஓபியம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 13.5 மில்லியன். 1874 ஆம் ஆண்டு சி.ஆல்டர் ரைட் என்ற ஆராய்ச்சியாளர்மார்பினிலிருந்து ஹெராயினை பிரித்தெடுத்தார். 

* ஒருநாளுக்கு 3 டோஸ் அடிப்படையில் 150-250 மி.கி ஹெராயின் பயன்படுத்தப்படுகிறது. நரம்பில் ஊசி மூலம் செலுத்திய ஹெராயின் 8 நொடிகளில் மகிழ்ச்சி மனநிலையை உருவாக்குகிறது.

* தினசரி ஹெராயினுக்கான செலவு 200 டாலர்கள். தென்அமெரிக்காவின் ஹெராயின்தான்  உலகம்  முழுவதும்  ஃபேமஸ். ஹெராயின் பயன்பாட்டால் கல்லீரல் செயலிழப்பு, இதயநோய்கள் ஏற்படுகின்றன.  

* டோப், ஹார்ஸ், ஜங்க்,  ஸ்மாக், டார், ஹெச், பாய் ஆகியவை ஹெராயினின் மற்ற பெயர்கள்.

=================================================================================================