இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

ஞாயிறு, 11 ஜூன், 2017

பிளாஸ்டிக் அரிசி வதந்தியா

நேற்று பிளாஸ்டிக் அரசி பற்றிய இடுகையை படித்திருப்பீர்கள்.
நமக்கு கிடைத்த தகவல்கள் அடிப்படையில் அப்படி ஒரு இடுகை இயல்பான சமூக எதிர்ப்பில் பதிவிட்டோம்.

இப்போது அதே பிளாஸ்டிக் அரிசியை பற்றி மாற்று தளத்தில் ஒரு மாறுபட்ட கருத்துடன் கட்டுரை வெளியாகியுள்ளது.

அது பிளாஸ்டிக் அரிசி என்பதே போய் புனைவு என்கிறது.
மரவள்ளி,சர்க்கரை வெள்ளைக் கிழங்குகளினால் தயாரிக்கப்பட்ட வியட்நாமிய உணவுப் பொருள் தான் இன்று பல்வேறு வடிவங்களில் பிளாஸ்டிக் என்ற பெயர் கொண்டு உலகை பயமுறுத்துகிறது என்கிறது அக்கட்டுரை.

பிளாஸ்டிக் அரிசியின் ஒரு பக்கத்தை பார்த்த நாம் இப்போது அதன் வரலாறாகக் கூறப்படும் இப்பக்கத்தையும் பார்த்து விடுவோம்.
ஆனால் உண்மையில் இது பிளாஸ்டிக் அரிசியின் உண்மையான மறுபக்கமா என்பதில் எந்த உறுதியும் இல்லை.

காரணம் உலக கார்ப்பரேட்கள் தங்கள் லாபத்துக்காக எந்த அளவும் செல்வார்கள்.அவர்களுக்கு லாபம் எள்ளளவும் குறைந்து விடாமல் நாம அரசியல்வியாதிகள் பார்த்துக்கொள்வார்கள் என்பது நாம் உணர்ந்த கண் கூடான மெய்.

மக்கள் குடங்களை தூக்கிக்கொண்டு குடிநீருக்கு மைல் கணக்கில் அலைந்து 20 ரூபாய்க்கு ஒரு குடம் குடி நீர்  வாங்கும் அவலத்தில் கூட கோககோலா,பெப்சி மென்பானங்கள் தயாரிப்புக்கு ஆற்று நீரை லிட்டர் 10 பைசா என்று வாரி வழங்கும் அரசு நிர்வாகத்தின் கீழ் வாழ்கிறோம்.

எதிர்த்து வழக்கு தொடுத்தால் "ஒப்பந்தப்படி தண்ணீர் கோலாக்களுக்கு கொடு" என்று சட்டம் தீர்ப்பை வழங்குகிற நாடு இது.

மக்களை ,மனசாட்சியை பார்க்கும் வழக்கம் சட்டத்துக்கு  இல்லை.

 ஆயிரக்கணக்கில் போக்குவரத்து தொழிலாளர்களின் உழைப்பின் வந்த பணத்தை எங்கே கொண்டு போய் தொலைத்தார்கள் என்று  சொல்லாத அவலமான அரசு,நிர்வாகம்.

17 ஆயிரம் கோடி ரூபாய்கள் தொழிலார் ஓய்வுக்கால சேமிப்பை கொடுக்காமல் பல ஒய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளி,அவர்கள் பலமுறை போராடியும்  பணத்தை தர ம் அறுக்கும் அரசு.

அது தொடர்பாக பலமுறை போராட்டம் நடத்த போதும் வாயை திறக்காத சட்டம் ,வேலை நிறுத்தம் ஒட்டு மொத்தமாக தமிழகத்தை உலுக்கியதும் வேலைக்கு திரும்பாவிட்டால் "எஸ்மா "என்கிறது.

அப்படி கூறிய சட்டம் தொழிலாளர்களை கண்டிக்கிறதே ஒழிய அவர்கள் வாழ்நாள் சேமிப்பை,ஓய்வூதிய பணத்தை 17000கோடிகளை முறைகேடாக செலவிட்ட அரசை,நிர்வாகத்தை பற்றி ஒரு எழுத்தைக்கூட தீர்ப்பில் எழுதவில்லை.

நீதி தேவதை கண்ணை கருப்புத்துணியால் மறைத்தது யார் என்ற வேற்றுமை தீர்ப்பில் வரக்கூடாது என்பதை உணர்த்த்தான்.உண்மை நிலை என்ன,மனசாட்சி குருவது என்ன  என்பதை பார்க்காமல் சட்டப்புத்தகத்தை மட்டுமே பார் என்பதற்காக அல்ல.
சரி .எங்கோ போய் விட்டோம்.

பிளாஸ்டிக் அரிசி வரலாறாக கூறப்படுவதை பார்ப்போம்.
"ப்ளாஸ்டிக் அரிசி, முட்டை & பால் ஆகியவை வதந்திகளே . . . . . . . !


ப்ளாஸ்டிக் அரிசி, முட்டை, பால் ஆகியவை வதந்திகளே என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதற்காக கேள்விக்குறியுடனான தலைப்பை போடுவதும் கூட அவசியமில்லாமல் ஒரு வதந்தியை உயிரோடு வைத்திருக்கும்.
ப்ளாஸ்டிக் அரிசி, ப்ளாஸ்டிக் முட்டை, ப்ளாஸ்டிக் பால் என்று பலவிதமான வதந்திகள் நம்மை ஆட்கொள்கின்றன. உண்மைதானா? நாம் உணவை வாங்கிவருகின்ற ப்ளாஸ்டிக் கவரைப் போன்றதுதானா நாம் சாப்பிடும் உணவும்? …
பலருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கும் இந்த செய்தி உத்திரபிரதேச ஊடகங்களால் ஒளிபரப்பப்பட்டு இன்று நாடு முழுவதும் பரபரப்பாகியுள்ளன. இதைப் போன்ற செய்திகள் பல முறை வந்து போயிருக்கின்றன. ப்ளாஸ்டிக் முட்டை என்ற வதந்தி காரணமாக முட்டைக் கடை உடைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்திலேயே நடந்திருக்கிறது. உலகத்தில் எங்கேயாவது இப்படி ஒரு அரிசி, முட்டை, பால் உண்டா? பாதிக்கப்பட்ட செய்திகள் உண்டா?
இதுபற்றிய தேடலில் ஸ்னோப்ஸ் இணையதளம் ஈடுபட்டது. முழுமையான ஆய்வு விபரங்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
2011 ஆம் ஆண்டில் இந்த வந்தந்தி சமூக வலைத்தளங்களில் பரவியது. முதல் முதலாக இப்படியொரு செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் அமெரிக்க இணையதளமான “ரா ஸ்டோரி” மற்றும் “மேரி சூ” ஆகியவற்றில் வெளியாகின. அந்த இரண்டு செய்தியிலும் எந்த உறுதியான தகவல்களும் இல்லை.
சிங்கப்பூர் ஊடகம் ஒன்றில் வியட்நாமில் ப்ளாஸ்டிக் அரிசி பயன்படுத்தப்படுவதாக ஒரு செய்தியை வெளியிட்டது. அந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பல முறை பகிரப்பட்டது. சாப்பிடக்கூடிய ‘உருளைக் கிழங்கு மற்றும் சர்க்கரைக் கிழங்கு’ ஆகியவற்றைப் பயன்படுத்தி அரிசிபோல் செய்யப்பட்ட ஒரு ’ப்ளாஸ்டிக்’ (!) அரிசி என்று செய்தியில் குறிப்பிட்டிருப்பதைக் கூட கவனிக்காமல் ‘ப்ளாஸ்டிக்’ அரிசி என்ற பெயரோடே பலமுறை பகிரப்பட்டது. அந்த செய்திகளில் ‘ஒரு சைனீஸ் உணவக உரிமையாளர்’ குறிப்பிட்டார் என்று பொதுவான பதங்கள் பயன்படுத்தப்பட்டன.
ஓராண்டுக்கு பிறகு, மீண்டும் யாரோ ஒருவர் அந்த செய்தியை பேஸ்புக் தளத்தில் போட, அது மீண்டும் பரவலாகியது.
போலி அரிசி என்று வீடியோக்களும் பகிரப்பட்டன. பின் அவற்றின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய முடியாமல் யூ-டியூப் தளத்திலிருந்து நீக்கப்பட்டன. இதுபோன்ற செய்திகளில் பல வீடியோக்கள் திரித்து பயன்படுத்தப்பட்டன. தெரியாத மொழியில் ஒருவர் பேசுவதைக் காட்டும்போது, மக்கள் கேள்வியற்று நம்பி பகிர்ந்தார்கள். விக்கிப்பீடியாவிலும் கூட அதற்கென பக்கம் உருவாக்கப்பட்டது. ஆனால், ஆதாரமாக கொடுத்த எந்தத் தகவல்களிலும் உண்மையில்லை. அடிப்படையில்லை.
2015 ஆம் ஆண்டில் வேறு வகையான செய்திகள் பரவின. ஒரு பெண், தான் வாங்கிய அரிசி குறித்து காவல்துறையில் புகார் கொடுத்ததாகவும், காவல்துறையினர் விசாரித்ததாகவும் அந்த செய்தி தெரிவித்தது. ஆய்வகத்திற்கு அனுப்பியபோது அந்த அரிசியில் ப்ளாஸ்டிக் எதுவும் இல்லை என்பது உறுதியானது.
அரிசியைப்போன்று ப்ளாஸ்டிக்கை மிக நுண்ணியமாக செய்ய எவ்வளவு பொருளாதாரம் செலவாகும்? மேலும் ஒரு கிலோ அரிசியை விட ஒரு கிலோ ப்ளாஸ்டிக் விலை அதிகம் என்பது அனைவரும் அறிந்த. விலை குறைவான பொருளில் விலை அதிகமான பொருளை கலப்படம் செய்ய என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது???
பிறகு ஏன் அரிசியின் மீது வீண் பழி சுமத்தப்படுகிறது?? அரிசியின் மீது களங்கத்தை ஏற்படுத்தினால் மக்கள் கோதுமை, மைதா பக்கம் திரும்புவர் இவையெல்லாம் நம்மிடம் விளைபவை அல்ல . மேலும் கோதுமை மைதாவில் உள்ள தீங்குகள் எண்ணற்றவை
மேற்கு உலகம் க்ளூடனை மெல்ல மெல்ல தவிர்த்து வருகிறது .
நாமோ க்ளூடனுடன் உள்ள கோதுமையை உணவாக எடுத்து வருகிறோம் இந்த நிலையில் முழு நேரமும் கோதுமைக்கு நாம் மாறினால் பல தொற்றா நோய்களும்
ஆட்டோ இம்யூன் வியாதிகளும் நமக்கு வரும் வாய்ப்பு அதிகரிக்கும். நம் அரிசி கோதுமையை விட பல மடங்கு சிறந்தது. ஆகவே வீண் புரளிகளை நம்ப வேண்டாம்
சோய்ப் அக்தராக மாறி சோற்றை பந்தாக்கி எழும்புகிறதா என்று போட்டுப்பார்க்கிறீர்களா??
சில ஹைப்ரிட் வெரைட்டி அரிசிகள் ஜவ்வரிசியின் தன்மையோடு இருப்பதால் பந்து போன்று எழும்புகிறது
கவலை வேண்டாம்
நாம் பேலியோவில் அரசியே வேண்டாம் என்று பரப்புரை செய்கிறோம்
ஆனால் காரணமேயின்றி அரிசி மீது பரப்பப்படும் பொய் வதந்திகளை என்னவென்று பார்த்துக்கொண்டு இருப்பது ??

பொதுவாக இந்தச் செய்திகள் பரப்பப்பட ஒரு காரணம் இருக்கிறது.

சீன இறக்குமதிகள் அதிகரிக்கும் காரணத்தால், தங்கள் சொந்த கலாச்சாரம் பாதிக்கப்படுவதை உணரும் ஒரு சமூகம் – வதந்திகளின் வழியே எதிர்வினையாற்றுவதாகச் சொல்லலாம்.

மற்றபடி சிங்கப்பூர் இதழ் தொடங்கி  நைஜீரியா இப்போது இந்தியா வரையில் 7 ஆண்டுகளாக வெற்றிகரமாக, மைய ஊடகங்களிலும் அவ்வப்போது இடம்பிடித்து பயணித்துக் கொண்டிருக்கிறது இந்த செய்தி.

அடிப்படை ஏதாவது இருக்கிறதா என்ற தேடலில், ஒரு இடத்தில் கூட அதனை உறுதி செய்ய முடியவில்லை. 

சீனா,வியட்னாம் நாடுகளில் குருணை,மரவள்ளிக்கிழங்கு,சர்க்கரை வள்ளிக்கிழ்ங்கு போன்றவற்றுடன் தாயாரிக்கப்பட்டு அரிசி கிடைக்காத காலங்களில் உருவாக்கப்படடதுதான் இன்று நம்மை எல்லாம் அச்சுறுத்தும் பிளாச்டிக் அரிசி.
சமைத்தவுடன் மட்டும் திங்க முடியும் ,பின்னர் மிக விரைப்பாக ஆகிவிடும்.அதானல்தான் அரிசி முன்னால் பிளாஸ்டிக் ஒட்டிக்கொண்டது.மற்றபடி மைசூர் பாகு க்கும் மைசூருக்கும் உள்ள சம்பந்தம்தான்.


பிளாஸ்டிக்கால் உருவான‌ அரிசியை முதலில் சமைக்க முடியுமா?இளகி விடும்.
இந்த பிளாஸ்டிக் அரிசி பயம் இப்போது ஏன் அதிகமாக பரப்பப்படுகிறது என்று யோசிக்கிறீர்களா?
மூளையை கசக்க வேண்டாம்.

தினகரனில் இன்று ""பதஞ்சலி அரிசி அனைத்திலும் நல்லது"என்ற பதஞ்சலி அரிசி அறிமுகம் விளம்பரத்தை பாருங்கள்.
இப்போது பிளாஸ்டிக் அரிசி என்ற பயத்தை கிளப்பி விட்டு குளிர் காய்வது யார் என்று தெரிகிறதா?

– சிந்தன்.ரா
===========================================================================================
ன்று,

ஜூன்-11.
  • நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது(1901)

  • தமிழறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் இறந்த தினம்(1995)

  • ஆன்டானியோ மெயூச்சி, தொலைபேசியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் என அறிவிக்கப்பட்டது(2002)
============================================================================================
பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1933 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10-ஆம் நாள் சேலம் மாவட்டம் சமுத்திரம் என்ற ஊரில் பிறந்தார். 
இவருடைய இயற்பெயர் இராசமாணிக்கம். இவருடைய பெற்றோர் துரைச்சாமியார்-குஞ்சம்மாள் ஆவர்.

தொடக்க கல்வியை சேலத்திலும், ஆத்தூரில் பயின்ற இவர், பட்டப்படிப்பை சேலத்தில் பயின்றார். பயின்ற காலத்திலேயே பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் விளங்கினார். பெருஞ்சித்திரனார் கல்லூரியில் பயிலும்போது கமலம் என்னும் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். 


இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவராக கருதப்படும் இவர், தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர்.


தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரணாக காத்து அவர்களை வளர்தெடுத்தவரும் இவர்தான். 
தமிழரசன் போன்ற தமிழ் தேசிய தலைவர்களுக்கு ஆதி காரணமாய் விளங்கியவரும் இவரே.

20 முறை சிறை சென்றும், இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் தமிழீழ போராட்டம் வரை இவரது செயல்பாடுகள் தமிழர்கள் நடுவில் வியந்து போற்றபடுகிறது. 


1995- ஜுன் 11அன்று  மரணம் அடைந்தார்.
 இன்று தமிழ் தேசிய தந்தையாக தமிழர்களால் போற்றப் படுகிறார்.
============================================================================================