சனி, 15 ஜூலை, 2017

வேறு வழியைப்பாருங்கள்

சில மாதங்களாக உலக ஊடகங்களில் அதிகமாக அடிப்பட்ட பெண் பெயரை கமல்ஹாசன் குறிப்பிட்டதால்தான் களங்கமாகி விட்டதா?

அந்த பாவனாவே குற்றசாட்டை தைரியமாக காவல்துறையில் கொடுத்திருக்கும் போது அனைத்து ஊடகங்களிலும் பாவனா கடத்தல்,திலீப் என பெயர்கள் வரும் போது கமல் கூறினால் தவறா ?

கமலுக்கு பாவனா பெயரை உச்சரிக்க வாய் பூட்டு போட மகளிர் ஆணையத்துக்கு வானளாவிய அதிகாரம் உள்ளதா என்ன?


இப்போது வழக்கு நீதிமன்றத்தில் நடக்கப் போகிறது வழக்குரைஞர் பாவனா பெயரை சொல்லாமல் வாதாட வேண்டுமா?

விபரங்களை வெளியிடும் நாளிதழ்கள் ஒரு அபலை அல்லது நிர்பயா என்று  பாவனா பெயரின்றி என்றுதான் செய்திகளை வெளியிட வேண்டுமா? 

அதுகுறித்து திருமதி லலிதா  குமாரமங்கலம் தெரிவிப்பாரா?
தனது அதிகார எல்லையை மகளிர் ஆணையம் தாண்டுகிறது.அதுவும் அறிவுப்பூர்வமின்றி.


இந்திய ஜனநாயக சங்கத்தினரை கமல்ஹாசன் சந்தித்தபோது தெரிவித்த கருத்துகளின் பின்விளைவுகள் தானிவை எனத்தெரிகிறது.
கமல்ஹாசனின் அந்த பேச்சு ஊடகங்கள் தங்கள் மோடி விசுவாசத்தில் வெளியிடவில்லை என்றாலும்,போட்டுக்கொடுக்க வேண்டிய இடத்தில் போட்டு கொடுத்து ஊடக தர்மத்தை "கவர்" செய்து விட்டார்கள் என்றுதான் தெரிநிறது.
அந்த கருத்துக்கள்"  "

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக கமலை கைது செய்ய சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் தங்கள் உருவாக்கிய சங்கத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல கமல் கைதை வாய்ப்பாக பயன் படுத்துவார்கள் என்றுதான் தெரிகிறது.
 பிக் பாஸ் என்று இந்தியாவில் அறியப்பட்ட நிகழ்சசியின் உண்மைப்பெயர் பிக் பிரதர் அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளில் தொலைக்காட்சிகளில் வெற்றிக்கொடி நாட்டி இந்தியாவில்  பிக் பாஸ்கால் என பதித்து இந்தியில் ஷாருக்கான் உட்பட்ட வர்களால் நடத்தப்பட்டு தென்னிந்தியாவிலும் ஆந்திராவில் நடத்த்தப்படுகிறது.

இதன் வடிவமைப்பு சட்டத்த்திட்டங்கள் எல்லாம் அமெரிக்க நிறுவனத்தின் கையில்தான்.
நிகழ்ச்சியை மொழி மாற்றி நடத்துவது மட்டுமே ஸ்டார் தொலைக்காட்சி  வசம் .தமிழில் அதன் விஜய் தொலைக்காட்சி  மூலம் நடக்கிறது .
இதில் கமல் ஹாசன் அல்ல பிக்பாஸ் .விஜய் தொலைக்காட்சிதான்.
கமல் வேரும் நிகழ்ச்சி தொகுப்பாளர் மட்டுமே.வார நிகழ்வுகளை மக்களுக்கு சுவையாக  சனி  ஞ் யிறுகளில்  மட்டும்   தொகுத்து கூற வருவார்.அதற்குத்தான் அவருக்கு ஊதியம்.மற்றபடி நீ அப்படி செய்,நீ அப்படி பேசு என்று சொல்பவரில்லை அவர்.

வெளிநாட்டில் பிக் பிரதர்  நடத்தப்பட்டபோது அதில் கலந்து கொண்ட இந்திய நடிகை சில்பா செட்டி வெள்ளைக்கார நடிகையால் கருவாச்சி என்று இனவெறியோடு திட்டி அடிதடி வந்து மன்னிப்பு கேட்ட நிகழ்வெல்லாம் நடந்துள்ளது.

காமிராக்கள் கண்காணிக்கிறது என்பதையும் மறந்து அல்லது மீறி மனிதன் உள்  மனவக்கிரங்கள் இந்நிகழ்ச்சியில் வெளிப்பட்டு விடும்.அதுதான் இந்நிகழ்ச்சியின் அடிப்படையே கூட.
வெளியே பிரபலங்களாக அலையும் பலர் உள்ளே எப்படி என்பதை இந்த 100 நாள் தகவல் தொடர்பில்லா வாழ்க்கை வெளிக்கொண்டுவந்து விடும்.
இதில் என்ன கலாச்சாரம் கெட்டுப்போகிறது.


அந்த 15 பேர்களும் இந்த சமூகத்தில் வாழ்பவர்கள்தான்.அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை,கலாச்சாரம் நமக்கு  எப்படி அதிர்ச்சி தருகிறது  என்பதுதான்  பிக் பாஸ் .
இதை கண்டிப்பாக பாருங்கள் என்று ஆணை ஏதும் இல்லையே.பிடிக்காதவர்கள் சானலை மாற்றி போய் கொண்டே இருக்க வேண்டியதுதானே.
மிட்நைட் மசாலா ,தராத கலாச்சார சீரழிவா?

தந்தையுடன் மது அருந்துவது,தந்தையை பெயர் சொல்லி சிலசமயங்களில் வாடா ,போடா என்றழைக்கும் தனுஷ்,சந்தானம் படங்களை இவர்கள் பார்த்ததே இல்லையா?நகைசுவை என அவை ஏதாவது ஒரு சானலில் கட்டப்பட்டுக்கொண்டுதானே இருக்கிறது.அதற்கெல்லாம் ஏன் இவர்கள் பொங்கவில்லை.
கமல்ஹாசனை சீண்டினால் தங்களுக்கு பெயர் கிடைக்கும்,தற்போதைய ஆள்வோர் ஆதரவும் கிடைக்கு என்ற நோக்கம் மட்டுமே இந்த கலாச்சார காவலர்களுக்கு.இவர்களுக்கும்,பசு காவலர்களுக்கு இரண்டு வித்தியாசங்கள் கூட இல்லை.

கமல் ஹாசன் இதை போன்ற எதிர்ப்புகளைப்பார்க்காதவர் அல்ல.
வளரும் காலத்திலேயே "சட்டம் என் கையில்"இதழ் முத்தம் செய்து தமிழ்நாட்டில் அதிர்வை உண்டாக்கியவர்.பல எதிர்ப்புகளை சந்தித்தவர்.ஆனால் அப்படத்தில் அவரின் மனைவி வெளிநாட்டு பிரெஞ்ச்  பெண்.அவர்கள் கலாச்சாரம் அப்படி.

அதற்கு குதித்தவர்கள்  இன்று "எங்கெங்கோ முத்தமிடுகிறார்கள் ,பம்பரம் விடுகிறார்கள்,ஆம்லெட் போடுகிறார்களே ".என்ன செய்கிறார்கள்.

தொலைக்காட்சியில் கர்நாடக சங்கீதம்  மட்டுமல்ல மிட்நைட் மசாலாக்களும் உள்ளது.இரவு அந்தரங்க ,பாலியல் தொடர்பான நிகழ்ச்சிகளும் உள்ளன.அவை எல்லாம் கலாச்சாரத்தை கெடுப்பவைதான்.ஆனால் யாருக்கு எது தேவையோ அதை பார்க்க வேண்டியதுதான்.

உங்களை யாரும் பிக் பாஸ் தான் பார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் மனுவை தூக்கிக்கொண்டு காவல்துறை அதிகாரியை பார்க்க போங்கள்.

இந்த நிகழ்ச்சிக்காக கமல்ஹாசனை கைது  செய்  என்பதும்,கைது செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதும் சற்று அதிகப்படி.

ஆனால் இன்று கமல்ஹாசன் மீது மத்திய ,மாநில ஆட்சியாளர்களுக்கு கூட உள்ளே தள்ளும்  எண்ணம் இருந்தாலும் இதை வைத்து கைது செய்ய சட்டம் இடம் தராது.

வேறு வழியைப்பாருங்கள்.
==========================================================================================
பணம் பந்தியிலே.
டெல்லி  காவல்துறையினர் தினகரன் மீதான லஞ்ச மோசடி வழக்கில் இருந்து அவரை கழட்டி விட்டு விடுவார்கள் என்றே தெரிகிறது.இன்றைய நிலவரம் அதுதான்.
தினகரனிடம் இரட்டை இல்லை சின்னம் தேர்தல் ஆணையத்திடம் பெற்றுத்தர கையூட்டு வாங்கிய  சுகேஷ் சந்திரா மீது குற்றசாட்டுகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.அதில் இந்த கையூட்டு,தினகரன் என்ற  விபரங்களே இல்லை.
வி.பி.ஐ  என போலி ஆவணங்களை உண்மை ஆவணங்கள் போல் பயன்படுத்தியது போன்ற குற்றங்களுக்காக மட்டுமே உள்ளன.இரட்டை இல்லை சின்ன லஞ்சம் விபரங்கள் இல்லை. ஐ.பி.சி., எனப்படும் இந்திய குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், சுகேஷ் சந்திரா மீது குற்றச் சாட்டுகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. 

இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆயுள் சிறை தண்டனைவிதிக்க முடியும். 
இது தொடர்பாக டெல்லி காவல்துறையை கேட்டால் "சசிகலா அக்கா மகன் தினகரன், அவருடைய நண்பர் மல்லி கார்ஜுனா, ஹவாலா புரோக்கர்கள் நாது சிங், லலித் குமார் ஆகியோர் தற்போது, ஜாமினில் வெளியே உள்ளனர். அவர்கள் தொடர்பான  ஆவணங்களை சேகரித்து வருகிறோம். கிடைத்ததும் அதனடிப்படையில் குற்ற சாட்டுகளை பதிவு செய்வோம் " என்கின்றனர்.
அப்படி என்றால் இதனடிப்படையில் தினகரனை கைது செய்தனர்?வலுவான ஆதாரம் இல்லாமலா அவரை கைது செய்தனர்?அது தவறு அல்லவா?
இவைகளை எல்லாம் வைத்துப்பார்த்தால் இது அரசியல் சதுரங்க வேட்டை .
தினகரன் ஆட்சியை கைப்பற்றி விடக்  கூடாது என்பதற்காக செய்யப்பட்ட ராஜதந்திர கைதோ என்ற  ஐயம் வருகிறது.
இரட்டை இல்லை சின்னத்திற்கு தேர்தல் ஆணையத்துக்கு கோடிகளில் கையூட்டு என்றால் தரகர், தினகரனை கைது செய்தவர்கள் கையூட்டு பெற காத்திருந்த தேர்தல் ஆணைய  அலுவலர்கள் பற்றி இதுவரை இம்மி அளவு கூட தகவல்களை வெளியிடவில்லை, சுட்டு விரல்  நீட்டி யாரையும் இனம் காட்டவில்லை,குற்றப்பத்திரிகை யில் பெயர் இடம் பெறவே இல்லை.
என்ன நடைமுறை இது.என்னவகையான சட்டம் இவை.
சுகேஷ் சந்திரா         ,தினகரன்

கையூட்டு கொடுப்பவர் கைது.அதை கொண்டு சென்று கொடுத்த தரகர் கைது.ஆனால் கையூட்டு பெற்றவர்கள் மட்டும் அதிகாரத்தில் அட்டகாசம் செய்கிறார்கள்.அவர்கள் யாரென்றே காவல்துறை இனம்காட்டவில்லை.மறந்து விட்டதா?அல்லது மறைக்கப்படுகிறார்களா?
தேர்தல் ஆணையம் கூட இதுவரை இது தொடர்பாக தனது ஆணையத்துக்குள் எந்த விசாரணையையும் துவக்கியதாக தகவல்களே இல்லை.
இனியும் தினகரன் தங்கள் இசைக்கு தில்லானா ஆடவில்லை என்றால் மட்டுமே குற்ற பத்திரிகையில் அவர் பெயர் இடம் பெறும் என எச்சரிக்கப்பட்டிருக்கலாமோ?
பணம் பத்தும் செய்யும் என்பார்கள் ஆனால் இந்தியாவில் பணமும் அதிகாரமும் இணைந்தால் அடுத்த நொடி இந்தியா புரோக்கர்கள் மூலம் ரியல் எஸ்டேட் காரர்கள் மூலம் மனைகளாக விற்கப்பட்டு விடும்.அந்த அபாயம் நெருங்கி விட்டது.
சித்தி சசிகலா பரப்பன சிறையை பணம்கொடுத்து போயஸ் தோட்டமாக்கி விட்டார்.
அவர் அக்கா மகன் தினகரன் பணம் கொடுத்து ..டெல்லியை தமிழ்நாடாக்கி விட்டாரோ ?
=================================================================== ==============================

ன்று,
ஜூலை-15.
 மறைமலை அடிகள்

  • தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்த மறைமலை அடிகள் பிறந்த தினம்(1876)

  • பெருந்தலைவர்  கு.காமராஜர் பிறந்த தினம்(1903)

  • இரண்டு வருட உருவாக்கத்திற்கு பின் அமெரிக்காவின் போயிங் 707 விமானம் பறக்கவிடப்பட்டது(1954)

  • மொசில்லா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(2003)

பெருந்தலைவர்

,கர்மவீரர் என தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கு.காமராஜர், விருதுநகரில்1903 ஜூலை 15ல் பிறந்தார்.  
, தந்தை குமாரசாமி - தாயார் சிவகாமி அம்மாள்.

8ம் வகுப்பு வரை படித்த அவர், தன் 16வது வயதில் காங்கிரசின் உறுப்பினரானார். 
இளம் வயதிலேயே தந்தையை இழந்த காமராஜர் தாயார் அரவணைப்பிலேயே வளர்ந்தார். சிவகாமி அம்மையார் காமராஜரை காமாட்சி என்றுதான் அன்போடு அழைப்பாராம்.
சுதந்திர போராட்டங்களில் பங்கேற்ற அவர், பலமுறை கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். 
சுதந்திரத்திற்கு பின், காங்கிரசில் முன்னணி தலைவராக திகழ்ந்த இவர், 1954 - 57, 1957 - 62, 1962 - 63 என, மூன்று முறை, தமிழக முதல்வராக இருந்தார். 
இவரது ஆட்சிக் காலத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு, இலவச மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அணைகள் பல கட்டினார். 
1967ல் நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில், விருதுநகர் தொகுதியில், தி.மு.க.,வின் சீனிவாசன் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார்.
 ௧௯௬௯ல் நடந்த நாகர்கோவில் லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். 
1975, அக்., 2 ல் காலமானார். 
1976ல், இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 
=================================================================================================