சனி, 23 செப்டம்பர், 2017

ஆன்ம விசாரணை.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்பொதுக் கூட்டத்தில் பேசும்போது  '' டிடிவி தினகரன் ஆர்.கே நகரில்  வாக்கு சேகரிக்கும்போது சசிகலா படத்தை போடாதது ஏன்?. 

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது  நாங்கள் யாரும் நேரில் பார்க்கவில்லை. எங்களை பார்க்க சசிகலா குடும்பம் விடவில்லை. 
ஜெயலலிதாவை பார்த்ததாக, அவர் இட்லி சாப்பிட்டதாக  நாங்கள் எல்லோரும் அப்போது பொய்தான்  சொன்னோம்,

அதற்கு இப்போது உங்களிடம் மன்னிப்பு கேட்கிறோம். ஜெயலலிதாவை சந்திக்கவிடாமல் செய்த மர்மம் என்ன எனத்தெரியவில்லை, அனைத்தும் விசாரணை கமிஷனில் தெரியவரும்'' 

என்று வாக்குமூலம் கூறியுள்ளார்.
இதிலிருந்தே அதிமுக அமைச்சர்கள்,தலைவர்கள் அனைவருக்கும் ஜெயலலிதா மர்ம மரணத்தில் பங்குள்ளது.

சசிகலாவை  மட்டும் குற்றம்சாட்டுவது எப்படி சரியாகும்?அவரையும் ,அவர்குடும்பத்தினர்களை   மட்டும் 
விசாரணைக்குழு விசாரிப்பது சரிவராது.

பன்னிர்செல்வம்,பழனிசாமி உட்பட்ட ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்,அல்வா தந்தார்,காவிரி கலந்தாலோசித்தார்,கைநாட்டு வைத்தார் .என்று பேட்டி  அனைவருமே விசாரிக்க வேண்டியவர்கள். குற்றத்தில் பங்காளிகள் தான்.

குற்றம் செய்தவர் மட்டுமல்ல,அதற்கு துணையாக நின்றவர்களும் , அக்குற்றத்தை மறைக்க துணை போனவர்களும் குற்றவாளிகள்தான் என்கிறது சட்டம்.

"ஜெயலலிதாவை சந்திக்கவிடாமல் செய்த மர்மம் என்ன எனத்தெரியவில்லை"என்று  கேள்வி எழுப்புகிறவர்கள் அன்று அப்போலோவுக்கு வெளியே இட்லி,அல்வா கதைகளை சொல்லி பேட்டி எதற்காக கொடுக்கவேண்டும்.

உள்ளபடி ஜெயலலிதாவை பார்க்க முடியவில்லை.மருத்துவர்கள் அவர் நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போயிருக்கலாமே.

இப்போது ஆன்மாவுடன் பேசுகிறவர்கள் அன்று ஏன் பேசமுடியவில்லை.?
விசாரணைக்குழுவினர் அதிமுகவினர் சொல்லும் ஜெ ஆன்மாவையும் சாவு தொடர்பாக விசாரிப்பது உண்மை வெளிவர உதவும் என்று தெரிகிறது.
=========================================================================================
தொடரும் ஊடக கொலைகள்.!

ஊடகத்தின் ஆளுங்கட்சிகளுக்கு ஆதரவாக வெளிப்படையாகவே ஊடக தர்மத்தை  கொலை செய்து வருகிறார்கள்.
அதிலும் விதிவிலக்காக நடுநிலையுடன் சமூக  செயல்படும்,எழுதும் ஊடகவினர் இந்தியா முழுக்க கொலையாகி வருகின்றனர்.
ஒட்டு மொத்த ஊடகவினரும் நடுநிலையுடன் ,சமூக பொறுப்புடன் இருந்தால்,செயல்பட்டால்,செய்திகளை தந்தால் இது போன்ற கொலைகள் இராது.

கர்நாடக மாநிலத்தில் முற்போக்குப் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட இரண்டே வாரங்களில் திரிபுராவில் தொலைக்காட்சிச் செய்தியாளரான 29 வயது சாந்தனு பௌமிக் செப்.20 அன்று அநியாயமாகக் கொல்லப்பட்டார். 


இதற்கு முன் மகாராஷ்டிராவில் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கர்நாடகத்தில் எம்.எம்.கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். 

பௌமிக்இரும்புத் தடிகளாலும் உருட்டுக்கட்டைகளாலும்தாக்கிக் கொல்லப்பட்டார். 
அவர் களத்தில் செய்திசேகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நேரத்திலேயே இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது.

பழங்குடி மக்களை இதர பிரிவு மக்களுக்கு எதிரான பகைமை அடிப்படையில் திரட்ட முயல்கிற திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி (ஐபிஎப்டி) என்ற, சங் பரிவார ஆசிர்வாதம் பெற்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வன்முறைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.

அடுத்த ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் சூழலில், மதவாத, இனவாத அடிப்படையில் பதற்றத்தை ஏற்படுத்துகிற உள்நோக்கத்துடன் அண்மை நாட்களாக வன்முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

இவ்வாறு தேர்தலுக்கு முன் பதற்றச்சூழலை ஏற்படுத்துவது, அதை வாக்கு வங்கிக்கான முதலீடாக்குவது என்ற உத்தி சங் பரிவாரத்திற்கு கைவந்த கலை.சம்பவ நாளன்று, தலைநகர் அகர்தலாவுக்கு அருகில் உள்ள மண்டாய் பகுதியில் ஐபிஎப்டி அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டனர். 

அந்தநிகழ்வுகளைப் பதிவு செய்துவிட்டு வீடு திரும்பியபௌமிக், வன்முறை தொடர்கிறது என்ற தகவல்கிடைத்ததையடுத்து மறுபடியும் அங்கே சென்றார்.

காட்சிகளை ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தபோது அவரது கைப்பேசியையும் அடையாள அட்டையையும் கைப்பற்றிய ஒரு கும்பல் பின்னர் அவரைக் கடுமையாகத் தாக்கிக் கொன்றிருக்கிறது. 
முன்பு இந்திய மாணவர்சங்கத்திலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திலும் செயல்பட்ட பௌமிக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரும் கூட. 

முழுநேர ஊடகவியலாளராக அவர் பணியாற்றிய ‘தின் ராத்’ தொலைக்காட்சியும் கூட முற்போக்கான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிற நிறுவனம்தான்.மக்களை மோதவிடும் அமைப்பின் செயல்பாடுகளை ஒரு ஊடகவியலாளராகப் பதிவு செய்துவந்த, பல உண்மைகளைத் தெரிந்துவைத்திருந்த பௌமிக் மீது ஏற்கெனவே இருந்து வந்த ஆத்திரத்தின் பின்னணியில்தான் கொலைநடந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டை நிராகரித்துவிட முடியாது.


ஆனால், மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது கொலைப்பழியை சுமத்த பாஜக வின் மாநில தலைமை முயல்கிறது. ஆயினும், தலைமையின்ஆணைப்படி ஐபிஎப்டி அமைப்புக்கு ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது பற்றி பாஜகமாநில பொருளாளர் எழுதியதாகக் கூறப்படும்கடிதத்தை மார்க்சிஸ்ட் கட்சி வெளியிட்டிருக்கிறது. 

கொலை தொடர்பாக ஐபிஎப்டி அமைப்பைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மக்களிடையே பதற்றத்தையும் பகைமையையும் ஏற்படுத்தி அரசியல் அறுவடை நடத்தும் பாஜகவின் உத்தி திரிபுராவில் எடுபடாது. 

கருத்தியல் தளத்தில் இயங்குவோரைத் தாக்கி, மாற்றுச் சிந்தனைகளை முடக்கும்சதிகள் தொடர்வதை நாடு அனுமதிக்காது.
=========================================================================================
ன்று,
செப்டம்பர்-23.
  • நெப்டியூன் கோள் கண்டுபிடிக்கப்பட்டது(1846)
  • ஹேர்மன் ஹொலரித், கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார்(1884)
  • நின்டெண்டோ கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது(1889)
  • சவுதி அரேபியா தேசிய தினம்(1932)
==========================================================================================

கொய்யாப்பழம்

வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏற்றுமதியாகி, நம் ஊர்களில் விற்கும் கண்ணைக் கவரும் ஆப்பிள் பழங்களைவிட நமது நாட்டுக் கொய்யாவில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. 
இதில் உள்ள சத்துக்களை நாம் அறிந்தால், ஆப்பிளை விட கொய்யா பழத்திற்குத்தான் அதிக முக்கியத்துவம் தருவோம் என்கின்றனர் மருத்துவர்கள்.

* கொய்யாவில் உள்ள வைட்டமின் ‘சி’ சத்து ஆரஞ்சு பழத்தில் உள்ளதை விட நான்கு மடங்கு அதிகம் உள்ளது. வைட்டமின் ‘சி’ உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், நமது உடலை கிருமிகள் தாக்காமல், நோய் எதிர்ப்பு சக்தியினை அளிக்கிறது. அதிக நார்ச்சத்தும், குறைந்த சர்க்கரை அளவும் கொண்டது.* இதில் ஃபோலிக் ஆசிட்டும், வைட்டமின் பி9ம் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் கொய்யாப்பழத்தை தினமும் உண்ணுதல் நலம்.

* நன்றாக பழுத்த கொய்யாப் பழத்துடன் மிளகு, எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வை நீக்குவதுடன், பித்தம் நீங்கும்.

* கொய்யாப் பழத்துடன் சப்போட்டா பழத்தையும் சேர்த்து தேன் கலந்து சாப்பிட்டால் உடல் வலு பெறுவதோடு ரத்தம் சுத்தமாகும்.

* மதிய உணவுக்குப் பிறகு கொய்யாப்பழம் சாப்பிட்டால் நன்றாக ஜீரணம் ஆவதோடு, மலச்சிக்கல் நீங்கும். வயிற்றுப்புண் குணமாகும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சக்தியும், வயிற்றுப்போக்கு, மூட்டுவலி, அரிப்பு, மூலநோய், சிறுநீரகக் கோளாறு உள்பட பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றலும் அதற்கு உண்டு.

* சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு கொய்யா. நார்ச்சத்தும், குறைந்த சர்க்கரை அளவும் கொண்ட கொய்யாவை சர்க்கரை நோயாளிகளும் எடுத்துக் கொள்ளலாம்.

* கொய்யாப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் கொய்யாவில் அதிக அமிலத்தன்மை இருப்பதால் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றில் பல தொந்தரவுகளை ஏற்படுத்தும்.

* கொய்யா இலைகளை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து, தலையில் பற்று போட்டால் கடுமையான தலைவலி, ஒற்றைத் தலைவலி நீங்கும். இலைகளை அரைத்து தண்ணீரில் கலந்து பருகினால் வயிற்றுவலி, தொண்டைப்புண் போன்ற நோய்கள் குணமாகும்.