கண்டவர் விண்டிலர்.விண்டவர் கண்டிலர்.
‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, அவரைப் பார்த்ததாக கூறியது அத்தனையும் பொய்’ என்று அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.சி. வீரமணி ஆகியோர்கூறியிருந்தனர்.
இது விவாதங்களை கிளப்பிவந்த நிலையில், ‘அனைத்துஅமைச்சர்களும் அப்பல்லோவில் ஜெயலலிதாவைப் பார்த்தோம்’ என்று மற்றொரு அமைச்சரான செல்லூர் ராஜூ கூறியுள்ளது, பலரையும் தலையிலடித்துக் கொள்ளச் செய்துள்ளது.
தமிழக மக்களை வைத்து, அமைச்சர்கள் லாவணிப் பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால், கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம்தேதி இரவு 10.15 மணியளவில், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதில், காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைந்ததன் காரணமாகஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிரக் கண்காணிப்பில் இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது.அவரது உடல் நிலைகுறித்து தினம்தோறும் அமைச்சர்கள், அரசுத் துறையினர், மருத்துவமனை நிர்வாகம் ஊடகங்களுக்கு தகவல்களை அளித்துக் கொண்டிருந்தனர். ஜெயலலிதா டிவி பார்த்தார். இட்லி சாப்பிட்டார் என்றெல்லாம் அப்பல்லோ வாசலில் நின்று பேட்டி கொடுத்தனர்.
காவிரி விவகாரம் தொடர்பாகமுதல்வர்கள் கூட்டத்தை செப்டம்பர் 29-ஆம் தேதி மத்திய அரசுகூட்டியிருந்த நிலையில், அதுதொடர்பாக மருத்துவமனையிலேயே தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் 1 மணி நேரம் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியதாக தமிழக அரசே செய்திக் குறிப்பு வெளியிட்டது.
திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கான வேட்பாளர் படிவம் மற்றும் சின்னம் ஒதுக்கும்படிவத்தில் அவரே கைரேகை வைத்தார் என்றும் அதிமுகவினர் கூறினர்.
தமிழக ஆளுநர் வித்யா சாகர்ராவ், மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதாவை, நேரில் வந்து பார்த்துச் சென்றனர்.
ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் விரைவில் குணமடைவார் என்று நம்புவதாகவும் தெரிவித்தனர்.
லண்டன் டாக்டர் ஜான் ரிச்சர்ட்பீலே உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்களும், எய்ம்ஸ் மருத்துவர்களும் வரவழைக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 70 நாட்களாகியும் அவர் விரைவில் வீடு திரும்புவார்என்று திரும்பத் திரும்ப கூறப்பட்டு வந்தாலும், சிகிச்சை தொடரவே செய்தது.
ஆனால், திடீரென டிசம்பர் 4-ஆம் தேதி ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் முதன்முறையாக அறிவித்தது.
அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறிய அப்பல்லோ நிர்வாகம், எக்மோ எனும் செயற்கை நுரையீரல் மூலமே ஜெயலலிதாவின் சுவாசம் நடைபெறுவதாக தெரிவித்தது.
பின்னர், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.35 மணியளவில் ஜெயலலிதா இறந்து விட்டார் என்று 12.10 மணிக்கு அப்பல்லோ நிர்வாகம் அறிவித்தது.
நன்றாக குணமடைந்து வந்தார் என்று கூறப்பட்ட ஜெயலலிதா திடீரென மரணமடைந்தது, அதிமுக-வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மரணத்தில் மர்மம் இருப்பதாக பரவலாக கருத்துக்கள் வெளிப்பட்டன. இதுதொடர்பாக சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.
ஆனால், அந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. முதல்வர் பதவி பறிக்கப்பட்டதற்கு பின், ஓ. பன்னீர்செல்வம் முதன்முறையாக ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் கிளப்பினர். ஜெயலலிதா மரணம்தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி மூலம் விசாரணை நடத்தி,மக்களின் சந்தேகத்தைப் போக்கவேண்டும் என்றார்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கச் சொல்லும் ஓ. பன்னீர்செல்வம், அவர் முதல்வராக இருந்தபோது, அதுபற்றி பேசாதது ஏன்? என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள் கேள்வி எழுப்பினர்.
பதவி பறிபோனதால் ஓ. பன்னீர்செல்வம் இவ்வாறு பேசுவதாக சாடினர். அப்படி விசாரித்தால், முதலில் ஓ.பன்னீர்செல்வத்தைத்தான் விசாரிக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் குறிப்பிட்டார்.
ஆனால், கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்குப் பின், இவர்கள்அனைவருமே பல்டி அடித்தனர்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாகநீதி விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீரென்று அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து கடந்தவாரம் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ஜெயலலிதாவை சசிகலா குடும்பத்தினர்தான் கொன்று விட்டார்கள் என்று புதிய குற்றச்சாட்டையும் முன் வைத்தார்.
மதுரை பொதுக்கூட்டத்தில் தனது குற்றச்சாட்டை மீண்டும்உறுதிப்படுத்திய அவர், ஜெயலலிதாவை பார்ப்பதற்கு அமைச்சர்களைக் கூட சசிகலாகுடும்பத்தினர் அனுமதிக்கவில்லை; அவர் இட்லி சப்பிட்டார்,சட்னி சாப்பிட்டார் என்று அப்போதுநாங்கள் கூறியதெல்லாம் பொய்;அதற்காக மக்களிடம் மன்னிப்புக்கேட்கிறோம் என்று அடுத்தடுத்து குண்டுகளைப் போட்டார்.
அமைச்சர் கே.சி. வீரமணி, அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோரும் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதையே கூறினர். “எந்த அமைச்சர்களும் ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்க்கவில்லை, ஆளுநர் வந்துபார்க்கும்போது கூட ஜெயலலிதாவுக்கு சுயநினைவு இல்லை; ஜெயலலிதா கட்டை விரலை உயர்த்திக்காட்டியதாக ஆளுநர் கூறியவை அனைத்தும் பொய்” என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் ஒருபுறத்தில் பரபரப்பைக் கிளப்பினர்.
இவ்வாறு போய்க் கொண்டிருந்த நிலையில் செவ்வாயன்று காலை கீழ்ப்பாக்கத்தில் விழா ஒன்றில் கலந்துகொள்ள வந்த அமைச்சர் செல்லூர் ராஜூவிடம், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கே.சி. வீரமணி கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டி, நீங்கள்ஜெயலலிதாவைப் பார்த்தீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை நான் உட்பட அனைத்து அமைச்சர்களும் பார்த்தோம்” என்று அதிரடியாக கூறி செல்லூர் ராஜூ அதிர்ச்சி அளித்தார். அவர் கூறிய அடுத்த சிலமணி நேரத்தில் தில்லியில் பேட்டியளித்த தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபிலும், தீவிர சிகிச்சை பிரிவு இரண்டாவது வார்டுக்கு மாற்றும்போதுநான் ஜெயலலிதாவைபார்த்தேன்என்று கூறி பரபரப்பைகிளப்பினார்.
தலைமுடியைப் பிய்த்துக்கொள்ளும் வகையிலான அமைச்சர்களின் முன்னுக்குப்்பின் முரணான பேட்டிகள் செய்தியாளர்களையே குழப்பத்தில் தள்ளியது.
அமைச்சர்கள் சொல்வதில் எது உண்மை? எதுபொய் நாட்டு மக்களும் குழம்பிப்போயினர்.ஜெயலலிதாவைப் பார்க்கவே இல்லை என்று தற்போது திண்டுக்கல் சீனிவாசன் கூறுகிறார்.
ஆனால், அவர்தான் முன்பு“திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வெற்றியை ஜெயலலிதா இனிப்பு வழங்கி எங்களுடன் கொண்டாடினார்” என்று பொதுக்கூட்ட மேடையில் கூறினார். அதுவும் தனது மனைவி மற்றும் குழந்தைகள் மேல் சத்தியம் செய்து நம்புங்கள் என்றார். தற்போது ஜெயலலிதாவை பார்க்கவே இல்லை என்று கூறுகிறார்.
செல்லூர் ராஜூவோ “நான் மட்டுமல்ல; அமைச்சர்கள் அத்தனை பேருமே ஜெயலலிதாவைப் பார்த்தோம்” என்று கூறுகிறார்.
மாற்றி மாற்றிப் பேசுவதன் மூலம் உண்மையில் இவர்கள்என்ன செய்ய நினைக்கிறார்கள்? ஆட்சியைக் கலைக்கத் துடிக்கும்சசிகலா - டிடிவி தினகரன் தரப்பைவிசாரணை ஆணையம் மூலம் மிரட்ட முயற்சிக்கிறார்களா?
மாநிலம் சந்திக்கும் பிரச்சனைகளைத் திசைத் திருப்பி மக்களுக்கு வேடிக்கை காட்ட முயற்சிக்கிறார்களா?
என தமிழகமக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.
தினகரன் தரப்பு மிரள்கிறதா என்றால், ஓய்வுபெற்ற நீதிபதிவிசாரணையெல்லாம் போதாது; சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுங்கள் என்று டிடிவி தினகரன்ஆதரவாளரும் பதவி பறிக்கப்பட்ட எம்எல்ஏ-வுமான வெற்றிவேல் தைரியம் காட்டுகிறார்.
தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் சிபிஐ விசாரணை கேட்டு அறிக்கை விடும் நிலையில், “தற்போது சிபிஐ விசாரணை கேட்பவர்கள் அடுத்து எப்பிஐ விசாரணை கேட்பார்களா?” என்று சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் பதுங்குகிறார்.
நீதிவிசாரணை தேவை என்று சொன்னார்கள் அதை அமைத்துவிட்டோம் என்கிறார்.
ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தஓ.பன்னீர்செல்வமும், ஜெயலலிதா மரணத்தில் தனக்கு தனிப்பட்ட முறையில் சந்தேகம் எதுவும் இல்லை என்றுதான் கூறினார். மூத்த அமைச்சர்களில் ஒருவரான ஓ.எஸ். மணியனும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை என்றே கூறினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமிஇப்போதுவரை எதுவும் பேசியதாக தெரியவில்லை.உண்மையில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறதுஎன்று கூறியவர் ஓ. பன்னீர்செல்வம்தான். விசாரணைக் கமிஷன்அமைந்தால் மட்டும்தான் அதிமுகவில் மீண்டும் இணைவேன் என்று நிபந்தனையும் விதித்தார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி விசாரிக்க வேண்டும் என்ற அளவிற்குப் போனார்.
அதற்கு உறுதிமொழி கொடுத்துத்தான் எடப்பாடியும் ஓ. பன்னீர்செல்வத்தை உடன் சேர்த்துக் கொண்டார்.
ஆனால்40 நாட்களுக்கு மேலாகியும் எடப்பாடியோ - ஓ. பன்னீர்செல்வமோ இருவருமே வாய் திறக்கவில்லை.
திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்டத்தில் உளறிக்கொட்டியதும்- அதனடிப்படையில் எதிர்க்கட்சிகள் கொடுத்த நெருக்கடியே- தற்போது ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் விசாரணைஎன்ற கண்துடைப்பு ஆணையத்தை எடப்பாடி அமைப்பதற்கு காரணமாகி இருக்கிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், இவ்விஷயத்தில் தங்கள் தரப்பு நிலையை விளக்க வேண்டும். ஜெயலலிதா மறைவின்போது இவர்களும் அமைச்சர்கள்தான்.
அவர்கள் ஜெயலலிதாவை பார்த்தார்களா?
அதற்கு ஏதேனும் அனுமதி மறுக்கப்பட்டதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
செப்டம்பர்-27.
- உலக சுற்றுலா தினம்
ஹர்கிஷன்சிங் சுர்ஜித் - மெக்சிகோ,ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது(1821)
- உலகின் முதலாவது பயணிகள் ரயில் இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது(1825)
- இந்திய விடுதலை போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம்(1907)
- கூகுள் சர்ச் என்ஜின் ஆரம்பிக்கப்பட்டது(1998)
- தோழர்.ஹர்கிஷன்சிங் சுர்ஜித் நினைவு தினம் (2008)
========================================================================================