என்னை பொது இடத்தில் தூக்கிலிடுங்கள்!

2016 நவம்பர் 8ஆம் தேதி இரவு 8 மணிக்கு “கறுப்புப் பணத்தை பிடித்து விடுவோம்; கள்ளப் பணத்தை ஒழித்து விடுவோம்; தீவிரவாத செயல்களுக்கான பணம் தடுக்கப்படும்; லஞ்சம், லாவண்யம் ஒழிக்கப்படும்” என்றெல்லாம் கூறி தான் பாரத பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பினை செய்தார்.
 நாட்டு மக்கள் அனைவரும் கடுமையான பீதிக்குள்ளாயினர். 
என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தனர். 

நவம்பர் 10ஆம் தேதி முதல்ஒவ்வொரு வங்கிக்கிளை முன்பாகவும், அடுத்த நாளிலிருந்து கூடுதலாக ஒவ்வொரு ஏ.டி.எம். முன்பாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் நின்றுதங்கள் சொந்தப் பணத்தை எடுப்பதற்கு பரிதவித்தனர். 

மக்களிடையே கடுமையான கோபமும், கொந்தளிப்பும் எழுந்தது.

நவம்பர் 13ஆம் தேதி கோவாவில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஒருவேண்டுகோள்விடுத்தார். “டிசம்பர் 30 வரை 50 நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்; 

என்னுடைய நோக்கத்திலோ, செயல்பாட்டிலோ ஏதேனும் தவறு இருந்தால் திட்டம் தோல்வி என்றால் என்னை பொது இடத்தில் தூக்கிலிடுங்கள். 

மக்களாகிய நீங்கள்விரும்பிய இந்தியாவை உங்களுக்கு தருகிறேன் என்றுஉறுதியளிக்கிறேன். யாராவது இதனால் இன்னலுக்குள்ளானார்கள் என்றால் அந்தவலியை நானும் உணர்கிறேன். 
இந்த இன்னல்களெல்லாம் வெறும் 50 நாட்கள் வரை தான்.

அதற்கு பிறகு நாட்டை சுத்தமாக்குவதில் நாம் வெற்றிபெறுவோம்”மேலும், “நான்பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவித்த அன்றுகோடிக்கணக்கான சாதாரண மக்கள் நிம்மதியாக உறங்கினார்கள், ஆனால், சில லட்சம் லஞ்சப்பேர் வழிகள் மட்டும் தூக்கம் இழந்த காரணத்தினால் தூக்கமாத்திரை வாங்க வேண்டிய நிலைமைக்குதள்ளப்பட்டனர்”என்று உருக்கமாக உரையாற்றினார்.பெரும்பாலான மக்கள் பிரதமர் சொன்னதை அப்படியே நம்பினார்கள். 

நல்ல மாற்றம் வரும் என்று எதிர்பார்த்தார்கள். லஞ்ச, லாவண்யம் இல்லாமல், கறுப்புப் பணம் ஒழிந்து நாடு சுபிட்சமாகும் என்றுகனவு கண்டார்கள். 

5 லட்சம் கோடி ரூபாய் வரை திரும்பிவராது என்றார்கள்
2016 நவம்பர் 8ஆம் தேதி புழக்கத்தில் இருந்த ரூ.15.44 லட்சம் கோடி மதிப்புள்ள 1000 ரூபாய், 500ரூபாய் நோட்டுக்கள் செல்லா நோட்டுக்கள் என்று அறிவிக்கப்பட்டன. 
இதில் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களின் மதிப்பு 6,86,000 கோடி ரூபாயாகும். ஐநூறு ரூபாய் நோட்டுக்களின் மதிப்பு 8,58,000 கோடி ரூபாயாகும். இது அன்றைய புழக்கத்தில் இருந்த மொத்த நோட்டுக்களின் மதிப்பில் 86 சதவீதமாகும்.

“இந்த 15.44 லட்சம் கோடியில் 5 லட்சம் கோடி ரூபாய் வரை புழக்கத்தில் திரும்பிவராது. அந்த அளவிற்குநாட்டில் கறுப்புப் பணம் நிலவுகிறது. எனவே, இந்த முயற்சியின் காரணமாக மீண்டும் புழக்கத்தில் வராதஅந்த 5 லட்சம் கோடி ரூபாயை மக்கள் நலனுக்கு செலவிடலாம்”என்றெல்லாம் இந்த நடவடிக்கையின் ஆதரவாளர்கள் மக்களிடையே கருத்தை பரப்பினர். 
ஆனால், 2017 ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி 15.28 லட்சம்கோடி ரூபாய் வரை அமைப்புக்குள் வந்து விட்டது.


வெறும் ரூ.16,000 கோடி மட்டுமே புழக்கத்தில் வரவில்லை. 1000 ரூபாய் தாள்களில் திரும்பி வந்த தொகை 6,77,100 கோடிரூபாய். சுமார் 8900 கோடி ரூபாய் திரும்பி வரவில்லை. 500 ரூபாய் தாள்களில் திரும்பி வந்த தொகை 8,50,900 கோடி ரூபாய், 7,100கோடி ரூபாய் வரை திரும்பி வரவில்லை. 
கூட்டுறவு வங்கிகள் மூலமாக மாற்றப்பட்ட சுமார் 8ஆயிரம் கோடி ரூபாய்,நேபாளம், பூட்டான் வழியே வந்த ரூபாய், நீதிமன்றங்களின் கஜானாவில் பழைய நோட்டுக்களாகவே ஒப்படைக்கப்பட்டுள்ள பணம்,2017 மார்ச் வரை ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என்பதை 2016 டிசம்பர் 30-இல் மத்திய அரசின்திடீர் அறிவிப்பால் மாற்ற முடியாமல் மக்களிடமுள்ள பணம் இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால் 16 ஆயிரம்கோடி ரூபாயை தொட்டுவிடும். ஆக 100சதவீதம் மதிப்பிழந்த நோட்டுக்களும் திரும்பி வந்துவிட்டன. அப்படியானால் “5 லட்சம் கோடி கறுப்புப்பணம் திரும்பி வராது” என்ற கூற்று என்னவாயிற்று?

வெறும் 13.1 கோடி ரூபாய் மட்டுமே கள்ளநோட்டுக்கள்
இந்த நடவடிக்கையின் மூலமாக கள்ள நோட்டு ஒழிந்து விடும் என்று கூறினார்கள். 
தற்போது வெளியிடப்பட்டுள்ள ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி பணமதிப்பிழந்த1000 ரூபாய் நோட்டுக்களில் கள்ள நோட்டு சுமார் 8.4 கோடிரூபாய். 
பணமதிப்பிழந்த 500ரூபாய் நோட்டுக்களில் கள்ள நோட்டு சுமார் 4.7 கோடிரூபாய். ஆகவெறும் 13.1 கோடி ரூபாய் மட்டுமே கள்ளநோட்டுக்களாக கண்டறியப்பட்டுள்ளன. 
இதைக் கண்டுபிடிக்கத்தானா இத்தகைய நடவடிக்கை? 
“ரூபாய் நோட்டுக்களை செல்லாதாக்குவதன் மூலமாககள்ள நோட்டை முற்றிலுமாக ஒழிக்க முடியாது.
புதியரூபாய் தாள்களிலும் கள்ள நோட்டுக்கள் உருவாகும்” என்று அப்போதே பல பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டினார்கள். 
தற்போது ரிசர்வ் வங்கியின் அறிக்கைஅதை உறுதி செய்கிறது. புதிய 500 ரூபாய் நோட்டில்199 தாள்களும், புதிய 2,000 ரூபாய் நோட்டில் 638 தாள்களும் கள்ள நோட்டுகளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


முன்னெப்போதையும் விட தற்போது லஞ்ச, லாவண்யம் தலைவிரித்தாடுகிறது என்பது பல குதிரை பேரங்களிலிருந்து தெரிகிறது. 

தற்போது மருத்துவ, பொறியியல் போன்ற உயர் படிப்புகளுக்கு தனியார் கல்லூரிகள் கோடிக்கணக்கான பணத்தை ரூபாய் நோட்டுக்களாகத் தான் கேபிடேஷன் கட்டணம் என்ற பெயரில் பெறுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. தீவிரவாதிகளிடம் கட்டுக்கட்டாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டு இருப்பது பல சம்பவங்களில் வெளிப்பட்டுள்ளது. 

தீவிரவாத சம்பவங்களும் இக்காலகட்டத்தில் அதிகரித்துள்ளது.
நாட்டின் வளர்ச்சி 1 முதல் 2 சதவீதம் வரை பாதிப்பு
ஆக,பிரதமர் மோடி அறிவித்த எந்த நோக்கமும் நிறைவேறவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. மாறாக, “பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி 1 முதல்2 சதவீதம் வரை குறைந்து விட்டது. 

இந்த இழப்பு என்பது பணமதிப்பில் ரூ. 2 லட்சம் கோடியிலிருந்து இரண்டரை லட்சம் கோடி வரை இருக்கும். 
மேலும்புதிய நோட்டுக்களை அச்சடிப்பதற்காக ரிசர்வ் வங்கி செலவிட்ட தொகை சுமார் 8,000 கோடி ரூபாயாகும்.

அதுவல்லாமல் மக்கள் நீண்டவரிசையில் நின்றதன் காரணமாக அவர்களின் இழந்த வருவாய், செல்லா நோட்டுக்களை திரும்பப் பெற்றதன் காரணமாக வங்கிகளுக்கு ஏற்பட்ட செலவினம், வங்கிகளின் எழுத்தர்கள், மேலாளர்கள், மேலதிகாரிகள் ஆகியோர் செலவிட்ட கூடுதல் நேரம், கூடுதல் பணத்திற்குரிசர்வ் வங்கியிடமிருந்து எந்த வட்டியும் பெறாமல் வாடிக்கையாளர்களுக்கு வங்கி கொடுக்க நேரிட்ட தொகை என்று கணக்கு நீண்டுகொண்டே போகிறது” என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் 3.9.2017 ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ இதழுக்கு கொடுத்த பேட்டியில் தெரிவிக்கிறார்.

மேலும் பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் காரணமாக ரிசர்வ் வங்கியின் செலவு அதற்கு முந்தைய ஆண்டை விட 107 சதவீதம் கூடுதலாகி ரூ.31000 கோடியை தொட்டு விட்டது. இதன் விளைவாக ரிசர்வ்வங்கி சென்ற வருடம் மத்திய அரசுக்கு டிவிடெண்டாககொடுத்த 65876 கோடி ரூபாய் இந்த வருடம் 30659கோடி ரூபாயாக குறைந்து விட்டது. 

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு
 என்றும் ஆதரவாக இருந்ததில்லை:
முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்


மத்திய அரசுக்கு 34217 கோடி ரூபாய் நஷ்டம்.இந்த நடவடிக்கையின் காரணமாக லட்சக்கணக்கான சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டு கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்க நேரிட்டது.
டிஜிட்டல் பொருளாதாரம் என்பதும் கானல் நீர்

ரொக்கமில்லா பரிவர்த்தனையை நோக்கிச்செல்வதற்காகத் தான்இந்த நடவடிக்கை என்று பிரதமரும், நிதியமைச்சரும் கூறினார்கள். ஆனால், உண்மை என்ன? 

“2016 நவம்பர் மாதம் ரூ.94 லட்சம் கோடியாகஇருந்த டிஜிட்டல் பரிவர்த்தனை 2017 மார்ச் மாத வாக்கில் ரூ.150 லட்சம் கோடியாக உயர்ந்து, ரொக்கப்பணத் தட்டுப்பாடு தீர்ந்தவுடன், 2017 ஆகஸ்ட் மாதம் ரூ.110 லட்சம் கோடியாக குறைந்து விட்டது” என்று 06.09.2017 தேதியிட்ட மனி கண்ட்ரோல் நியூஸ்பத்திரிகை தெரிவிக்கிறது. டிஜிட்டல் பொருளாதாரத்தினால் பயனடைவது கார்ப்பரேட் நிறுவனங்கள் தாம்;சாதாரண மக்களுக்கு அது பெருத்த நஷ்டத்தையே உண்டாக்கும். 
அரசாங்கம் நிறுவ முற்படும் டிஜிட்டல்பொருளாதாரம் என்பதும் கானல் நீராகவே ஆகியுள்ளது.

ஆனால், இதற்கு மக்கள் கொடுக்க வேண்டியவிலை மிக அதிகமானது. 
மேற்கு உத்தரப்பிரதேசத்தில்புலந்த்சாகர் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் குழந்தையின் பெற்றோர்களிடம் பழைய நோட்டுக்கள்மட்டுமே இருந்த காரணத்தினால் சிகிச்சை மறுக்கப்பட்டு ஒரு குழந்தை இறந்து விட்டது. 

குஜராத்தில் உள்ளசூரத் நகரில் 50 வயதான ஒரு பெண்மணி பழையநோட்டுக்களை வாங்கிக் கொண்டு உணவுப் பொருட்களை தர ரேசன் கடைக்காரர் மறுத்து விட்டதால் தூக்கில்தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டார்.
கர்நாடகாவில் உள்ள சிக்மகளூரில் தனது குடிகார கணவரிடமிருந்து மறைத்து வைத்திருந்த 15,000 ரூபாய் பழையநோட்டுக்களை வங்கியில் மாற்றச் சென்றபோது அதுதிருடப்பட்டதால் 40 வயது பெண்மணி தற்கொலை செய்து கொண்டார். 


கான்பூரில் 2,69,000 ரூபாய் பழையநோட்டுக்களை வைத்திருந்த வயதான பெண்மணி அது செல்லாது என்ற அதிர்ச்சியில் உயிரிழந்தார். அவருடைய உடலுக்கு அருகில் இந்த நோட்டுக்கள் சிதறிக்கிடந்தது காவல்துறை ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 விசாகப்பட்டினத்தில் பழையநோட்டுக்களை வைத்துக் கொண்டு வைத்தியம் பார்க்க மறுக்கப்பட்டதால் 18 மாத குழந்தை ஒரு தனியார் மருத்துவமனையில் இறந்து விட்டது. 

பாபநாசத்தில் வரிசையில் நின்றிருந்த 70 வயது முதியவர் மூச்சுத்திணறல் காரணமாக இறந்து விட்டார். இப்படி நாடெங்கிலும் 112 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

2016 நவம்பர் மாதம் 13ஆம் தேதி போபாலில் ஸ்டேட் வங்கியில் பணி செய்து கொண்டிருந்த ஒருகாசாளர் மாரடைப்பு ஏற்பட்டு வங்கிக் கிளையிலேயே உயிரிழந்தார். 
நவம்பர் 16ஆம் தேதி புனேவில் பணியில் இருந்த ஒரு துணை நிலை ஊழியர் பணிஅழுத்தம் காரணமாக வங்கிக்கிளையிலேயே உயிரிழந்தார். டிசம்பர் 28ஆம் தேதி பெங்களூரில் தன் மீதுஏதோசந்தேகம் வந்துவிட்டது என்று பயந்து ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் காசாளர் தூக்குப்போட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார். 

இவ்வாறாக இக்காலகட்டத்தில் 12 வங்கி ஊழியர்கள்உயிரிழந்துள்ளனர். 
இதற்கெல்லாம் யார்பொறுப்பு? 
இதைப்பற்றிமத்திய அரசாங்கம் கண்டுகொள்ளவே இல்லை.

1,48,000 கணக்குகளை ஆராய்ந்தாலே கறுப்புப்பணத்தை கைப்பற்றலாம்
2017 பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி நிதியமைச்சர் சமர்ப்பித்த பட்ஜெட் உரையில், “பணமதிப்பிழந்த நோட்டுக்கள் 2016 நவம்பர் 8 முதல் டிசம்பர் 30 வரைரூ. 
2 லட்சத்திற்கு மேல் ரூ. 80 லட்சம் வரையிலானதொகை 1.09 கோடி கணக்குகளில் கட்டப்பட்டுள்ளன. இதன் சராசரி ரூ.5.03 லட்சம் ஆகும். 

ரூ.80 லட்சத்திற்கு மேலான தொகை 1.48 லட்சம் கணக்குகளில் கட்டப்பட்டுள்ளன. இதன் சராசரி ரூ.3.31 கோடி ஆகும்” என்றுகூறப்பட்டுள்ளது. அதிகபட்ச தொகை எவ்வளவு கட்டப்பட்டது என்று கூறப்படவில்லை. 
அதாவது ரூ. 80 லட்சம்வரையில் ரூ. 5.48 லட்சம் கோடியும், ரூ.80 லட்சத்திற்குமேல் ரூ.4.89 லட்சம் கோடியும் ஆக மொத்தம் ரூ.10.37லட்சம் கோடி ரூபாய் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளன. இது மொத்தமதிப்பிழந்த பணமானரூ.15.44 லட்சம் கோடியில் மூன்றில் இரண்டு பங்காகும். இதில்80 லட்சம் ரூபாய்க்கு மேல் கட்டியுள்ள 1 லட்சத்து 48 ஆயிரம் கணக்குகளை ஆராய்ந்து, அவர்களை பிடித்தாலே கறுப்புப் பணத்தை கணிசமாக வெளிக்கொணர முடியும். 
சி.பி.கிருஷ்ணன்


ஆனால், மத்திய அரசு இதுவரை இந்த திசைவழியில் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட்டதாகத் தெரியவில்லை.
மோடியின் நோக்கம், செயல்பாடு இரண்டுமே தவறானவை

எனவே, மத்திய அரசாங்கம் உயர்மதிப்புள்ள ரூபாய்நோட்டுக்களை செல்லாததாக அறிவித்தது என்பது மக்களை கடும் துயரத்திற்குள்ளாக்கியதைத் தவிர வேறு எந்தப்பலனையும் தரவில்லை. 

பிரதமர் மோடியின் நோக்கம் மற்றும் செயல்பாடு ஆகிய இரண்டுமேதவறானவை என்பது முழுமையாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

என்ன சாதித்தீர்கள் மோடி அவர்களே? 
உங்களால்நாட்டு மக்களுக்கு விளக்க முடியுமா?
                                                                                                                                                                                           -சி.பி.கிருஷ்ணன்
                                                                                                                                            பொதுச்செயலாளர் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் -
                                                                                                                                                                                                       தமிழ்நாடு
E-mail : cpkrishnan1959@gmail.com
நீட்’ கலந்தாய்வில் மோசடி
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ‘நீட்’ தேர்வு அடிப்படையில் 94 இடங்களுக்கு நடந்தமாணவ சேர்க்கையில் மோசடிஅரங்கேறியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. 
இப்பிரச்சனை தொடர்பாக, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலை மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் வீட்டின் முன்பு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில்ஏற்கெனவே நீட் தேர்வு அடிப்படையில் நடத்தப்பட்ட மருத்துவக் கலந்தாய்வில் வெளிமாநில மாணவர்கள் அதிகம் சேர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
 உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் வழக்குகளும் நடைபெற்றன.
பின்னர் நீதிமன்ற உத்தரவின்அடிப்படையில், மத்தியப் பிரதேச மாநில அரசு ஏற்கனவே நடத்திய மருத்துவக் கலந்தாய்வை ரத்துசெய்தது. புதிதாக மாணவர்களுக்கான ரேங்க் பட்டியலை தயார் செய்து, கலந்தாய்வு நடத்தியது.
ஆனால், இந்த கலந்தாய்விலும் மோசடி நடைபெற்று உள்ளதாகமாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.8 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்த 94 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு மாணவர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்திஉள்ளது. 
மாணவ சேர்க்கைக்கான இடங்கள் ஒதுக்கீட்டில் அன்றுமுழுவதும் காலதாமதம் செய்யப்பட்டுள்ளது. 
கலந்தாய்வுக்கான பட்டியல் 9 மணிக்கு வெளியிடுவதற்கு பதிலாக நண்பகல் 11 மணியளவில் வெளியிடப்பட்டு உள்ளது.
940 மாணவர்களுக்கான மெரிட் லிஸ்ட் வெளியிடுவதிலும் காலதாமதம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் கேள்விஎழுப்பியதைத் தொடர்ந்து, மாநிலகலந்தாய்வு கமிட்டியால் மாலை5:30மணியளவில் பட்டியல்வெளியிடப்பட்டு உள்ளது. 
ஆனால், மாநில அரசின் ஒதுக்கீட்டு இடத்திற்கான மொப்-அப் ரவுண்டு மெரிட் லிஸ்ட்டில் நீட்தேர்வில் அகில இந்திய அளவில் 13-வது இடமும், மாநில அளவில் முதலிடம் பிடிந்த மாணவர் பெயரும் இடம்பெற்று இருந்தது எனமாணவர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
======================================================================================
ன்று,
செப்டம்பர்-13.

  • உலக சாக்லேட் தினம்
  • நியூயார்க் அமெரிக்காவின் தற்காலிக தலைநகராக அறிவிக்கப்பட்டது(1788)
  • ஹனிபல் குட்வின், செலுலாயிட் புகைப்பட சுருளைக் கண்டுபிடித்தார்(1898)
  • ஐதராபாத், இந்திய ஆளுமைக்குள் வந்தது(1948)
========================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?