'சாரணரு"ம் ...,"சாகா"வினரும்

சாரணர் இயக்கத் தலைவர் தேர்தலில் மதவெறி ஆர்எஸ்எஸ் நபரான எச்.ராஜா, வெற்றிபெற எந்தவாய்ப்பும் இல்லை என்பதுஏற்கெனவே தெரிந்ததுதான் என்ற போதிலும்அவருக்கு 52 வாக்குகள் கிடைத்திருப்பதில் தில்லுமுல்லு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதுபற்றிய விபரம் வருமாறு:பள்ளிக் கல்வித்துறையின் கீழ் தமிழ்நாடுபாரத சாரண, சாரணியர் இயக்கம் உள்ளது.நாட்டுப்பற்று, இறைப்பற்று, கருணைஉள்ளிட்டவற்றை அடிப்படையாககொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சாரணர் பயிற்சி அளிக்கப்படுகிறது. 


சிறப்பாகசெயல்பட்ட மாணவர்களுக்கு ஆளுநர்,குடியரசுத் தலைவர் விருது வழங்கி கவுரவிப்பர். 
இந்த விருதுபெற்றவர்களுக்கு காவல், ரயில்வே, ராணுவம் உள்ளிட்ட மத்திய அரசு துறை வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும்.

தமிழகத்தில் 95 சதவீத அனைத்து வகைப் பள்ளிகள் சாரண, சாரணியர் இயக்கத்தில்பதிவு செய்தாலும், 80 சதவீத பள்ளிகளில் இந்த இயக்கம் செயல்படாமல் முடங்கி யுள்ளது.
இது சாரணர் இயக்க நிர்வாகத்திலும் எதிரொலித்தது. 

பல ஆண்டுகளாக சாரண, சாரணியர் தேர்தல் நடத்தவில்லை. இந்நிலையில், செயற்குழு, பொதுக்குழு விதிகளில் மாற்றம் செய்தபின் செப்டம்பர் 16 சனியன்று தேர்தல் நடந்தது.தலைவர் பதவிக்கு முன்னாள் கல்வி இயக்குநர் மணி, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா போட்டியிட்டனர். 
எச்.ராஜா போட்டி யிட்டதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தாலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை யைப் போர்த்தி காரியம் சாதிக்க முயன்றது பாஜக. 

இந்நிலையில் நடைபெற்ற தேர்தலில் 286 வாக்குகள் பதிவாகின. மணி 232 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 
52 வாக்குகள் பெற்று எச்.ராஜா தோல்வி அடைந்தார். 
2 வாக்குகள் செல்லாதவை.
இப்போது எச்.ராஜாவுக்கு வாக்குகளே கிடைக்க வாய்ப்பில்லாத நிலையில் 52 வாக்குகள் பெற்றது எப்படி என்கிற கேள்வி எழுந்துள்ளது. 
இதுகுறித்து விசாரிக்கையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. 
சாரண, சாரணியர் இயக்க செயற்குழுவை கூட்டாமல் பல்வேறு மாவட்டங்களில் முன்னாள் நிர்வாகிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வாக்காளர் பட்டியலில் கல்வித்துறைக்கு சம்பந்தமே இல்லாத பாஜகவின் ஆதரவாளர்களான புதியவர்களை நியமித்து அவசர அவசரமாக வாக்காளர் பட்டியலில் இணைத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இதன் ஒருபகுதியாக கோவை சாரண, சாரணியர் இயக்க நிர்வாகிகள் 4 பேர் அதிரடியாக நீக்கப்பட்டு கல்வித்துறைக்கு சம்பந்தம் இல்லாத 4 புதியவர்களை நியமிக்க வைத்து, எச்.ராஜாவுக்கு வாக்களிக்க வைத்ததாக தெரியவந்துள்ளது. 

செயற்குழு முடிவின்படி தேர்வான சாரண, சாரணியர் இயக்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 5 ஆண்டு. கல்வித்துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், சாரணர் பயிற்சி ஆசிரியர்கள் போன்றோரே நிர்வாகிகளாக இருக்க வேண்டும் என்று விதியுள்ளது. 
மாவட்ட சிஇஓ, சாரணர் இயக்க முதன்மை ஆணையராக செயல்படுவார்.


கோவை மாவட்டத்தில் 21.11.2014ஆம் ஆண்டு முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி மாவட்ட ஆணையாளர்(சாரணர்), தலைமையில் நடந்த செயற்குழு வில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன், மாவட்ட ஆணையாளர் (சாரணியர்), தற்போது உள்ள மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் (பொ) கீதா, சாரண ஆசிரியர் பிரதிநிதி (சாரணர்) சிவநாராயணன், சாரண ஆசிரியர் பிரதிநிதி (சாரணியர்) அருணாதேவி நியமிக்கப்பட்டனர். 

இவர்களின் கீழ் மாவட்டத்தில் 120 பள்ளிகளில் இருந்து 1,500 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். நடப்பாண்டு 52 பேர் விருது பெற்றுள்ளனர். 
கோவை சிஇஓ கணேஷ்மூர்த்தியின் கீழ் இவர்கள் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில், தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியானது. கணேஷ்மூர்த்தி நீங்கலாக, பாலகிருஷ்ணன், கீதா, சிவநாராயணன், அருணாதேவி ஆகிய 4 பேர் நீக்கப்பட்டனர். 

பதவிக்காலம் 3 ஆண்டுகள் கூட நிறைவடையவில்லை;
செயற்குழுவை கூட்டவில்லை என்பது உள்ளிட்ட விதிமீறலுடன் நீக்கப்பட்டதைக் கண்டு அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோவை பாரத சாரண, சாரணியர் இயக்கத்தினர், மாநில நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. 

இதுகுறித்து சாரண, சாரணியர் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், கல்வித்துறைக்கு சம்பந்தம்இல்லாத சீனிவாசன், சாரணர் மாவட்ட ஆணையாளர்(இவர் மீது ஏற்கனவே பள்ளி மாணவிகளை துன்புறுத்தியதாக குற்றச்சாட்டுஎழுந்து பல்வேறு ஊடகங்களில் வெளி வந்துள்ளது), நந்தினிரங்கசாமி சாரணியர் மாவட்ட ஆணையாளர், சதாசிவம் மாவட்ட சாரண பிரதிநிதி, மைதிலி மாவட்ட சாரணியர் பிரதிநிதியாக தேர்வானதாக வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.

சாரணர் 

மேலும் வாக்காளர் பட்டியலில் சிலர் பரத நாட்டியம் கற்றுக்கொடுப்பவர்களும், கட்டிடத் துறையைசேர்ந்தவர்களும் அடங்கும். 
மேலும், சென்னை என்சிசி இணை இயக்குநராக இருந்த முன்னாள் கல்வி அதிகாரி தர்மராஜ் என்பவர் பாஜக நிர்வாகிகளுக்கு பரிச்சயமானவர். 

அந்த அதிகாரி அதிமுகவின் முக்கிய புள்ளிகளுடன் இணைந்து, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பாஜக தேசிய செயலாளரை வெற்றிபெற வைக்கும் நோக்கில் சென்னை, கோவை, திருப்பூர், திருவாரூர், நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் முன்னாள் நிர்வாகிகளை நீக்கிவிட்டு, அவர்களுக்கு ஆதரவானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாகவே, எச்.ராஜாவுக்கு 52 வாக்குகள் கிடைத்துள்ளன.

தற்போதுநீக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பாக முன்னாள் கல்வி அலுவலரின் ஆதரவாளர் களுக்கும், தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்கத்தினருக்கும் மறைமுகமாக கடும் மோதல்கள் நடந்துள்ளது. மாநில நிர்வாகிகளுக்கு பாஜக, அதிமுகவினர் அழுத்தத்தை தந்ததாகவும் கூறப்படுகிறது. 
சாகாவினர் 


நீக்கம் செய்யப்படாத நிர்வாகிகள் ஆதரவுடனே மணி வெற்றி பெற்றதாகவும், அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவின் ஆதரவாளர்களை நியமித்துவிட்டு தேர்தலைச் சந்திக்கலாம் என்று அவர்கள் எண்ணியிருந்த நிலையில் திடீரென தேர்தலை நடத்தியது எச்.ராஜா முகாமிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அதன் விளைவாகவே தேர்தலை தள்ளிவைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு பாஜகவினர் தேர்தல் நடைபெறும் இடத்தில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் நடைபெற்றது எனவும் கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
                                                                                                                                                                                                        -அ.ர.பாபு
=========================================================================================
ன்று,
செப்டம்பர்-18.
உலக மூங்கில் தினம்
  • உலக  தண்ணீர் கண்காணிப்பு தினம்
  • சிலி விடுதலை தினம்(1810)
  • நியூயார்க் டைம்ஸ் இதழ் முதன் முதலில் வெளியிடப்பட்டது(1851)
  • இந்திய உளவுத்துறை நிறுவனமான ரா அமைப்பு உருவாக்கப்பட்டது(1968)
==========================================================================================
உலகச் சந்தைக்குள் உயர் கல்வி நிறுவனங்கள்


நாட்டின் உயர் கல்வி நிறுவனங்களைப் படிப்படியாக முற்றிலும் வணிக நிறுவனங்களாக மாற்றுகிற ஏற்பாடு ஒன்று கடந்த ஓராண்டுகாலமாக ஓசையின்றி நடந்து வருகிறது.
 நாட்டின் பல்கலைக்கழகங்களை உலகத்தரத்துக்கு உயர்த்துவது என்று அதற்கு முகமூடி மாட்டப்பட்டுள்ளது. நரேந்திர மோடி அரசு தனது பட்ஜெட்டில், 10 அரசுப் பல்கலைக்கழகங்களும் 10 தனியார் பல்கலைக்கழகங்களும் ‘மேல்நிலைக் கல்வி நிறுவனங்கள்’ என அங்கீகரிக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

இதன் மூலம் உலகின் 100 சிறந்த பல்கலைக்கழகங்களில் இவையும் இடம் பெறும் என்றும் அரசு கூறியது. சென்ற ஆண்டு இதற்கான வழிகாட்டல்களுடன் முன்வரைவு ஒன்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது.கல்வியிலும் மாணவர்களின் வாய்ப்பு களிலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அந்த முன்வரைவு குறித்து மக்கள் கவனத்திற்கு அரசு கொண்டுவரவே இல்லை. 

கல்வியாளர்களும் அமைப்புகளும் தங்கள் கருத்துகளைச் சொல்வதற்குப் போதிய கால அவகாசமும் தரப்படவில்லை.

இப்போதோ,மேற்படி மேல்நிலைத் தகுதிக்காக விண்ணப் பிக்கக்கூடிய ஒரு கல்வி நிறுவனம் ஒரு கோடி ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும், அந்தக் கல்வி நிறுவன அறக்கட்டளை உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் 3,000 கோடி ரூபாய் சொத்து இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது! 

ஏற்கெனவே இது ரூ.8,000 கோடியாக இருந்தது, சிலர் அது சாத்தியமல்ல என்று சொன்னதைத் தொடர்ந்து இப்போது 3,000 கோடியாக்கப்பட்டிருக்கிறது.இது தனியார் மயமாக்கலையும் தாண்டி முற்றிலும் கார்ப்பரேட்மயமாக்குகிற சதியேயாகும். 

அம்பானிகளும் அதானிகளும்தான் கல்வி வள்ளல்களாகவும் உலா வருவார்கள். இத்தகைய நிறுவனங்களில் சமூக நீதி சிறுமைப்படுத்தப்படும், இடஒதுக்கீடு கொள்கை, மாநிலங்களின் விகிதங்கள் புறக்கணிக்கப்படும். ஆசிரியர்களிலும் மாணவர்களிலும் மூன்றிலொரு பங்கினர் வெளிநாட்டவர்களாக இருக்க அனுமதிக்கப்படும்.

‘மேல்நிலை’ ஆக்கப்படும் அரசு நிறுவனங்கள் கூட, உலகச் சந்தைக்கேற்ப கட்டணங்களை நிர்ணயிக்க வழிசெய்யப்படும். இந்தியாவின் ஏழைக்குடும்பங்களையும் ஒதுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களையும் சேர்ந்தமாணவர்களுக்கு இந்நிறுவனங்களின் கதவுகள் மூடப்படும். 

உலகப்புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் தங்களுடைய கல்வித்தரம், ஆசிரியர்களின் சுதந்திரம், மாணவர்கள் எதைப் பற்றியும் விவாதிக்கிற சூழல் போன்றவற்றை உறுதிப்படுத்திய தால்தான் அந்தப் புகழைப் பெற்றனவேயன்றி, சொத்தின் அடிப்படையில் ‘உலகத் தர நிறுவனம்’ என்று அரசுகளால் அறிவிக்கப்பட்ட தால் அல்ல. 
=========================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?