தொட்டதெல்லாம் பொன்னாக்கும் ஷா ,



மத்திய ஆட்சி அதிகாரத்தை வைத்துள்ளபாஜக, பத்திரிகையாளர்களை மிரட்டலாம், துன்புறுத்தலாம்; அதன்மூலம் உண்மையை மறைத்து விடலாம் என்று நினைத்தால் அதுமுடியாது என்று அமித் ஷா மகனின் ரூ. 80 கோடி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் ரோஹிணி சிங் கூறியுள்ளார்.

‘தி வயர்’ இணையதளத்தில் பத்திரிகையாளர் ரோஹிணி சிங், The Golden Touch of Jay Amit Shah என்ற தலைப்பில் ஒருகட்டுரை எழுதினார். 

அதில், ‘ மோடி பிரதமராக பதவியேற்றபின், அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவின் ‘டெம்பிள் எண்டர்பிரைசஸ்’ நிறுவனம் ரூ. 50 ஆயிரம் லாபத்தில் இருந்துரூ. 80 கோடியாக உயர்ந்துள்ளது என்பதை அம்பலப்படுத்தி இருந்தார்.

2012-13 ஆம் ஆண்டில் 6 ஆயிரத்து 230 நஷ்டத்தையும், 2013-14 ஆம் ஆண்டில் 1 ஆயிரத்து 724 ரூபாய் நஷ்டம் கண்டிருந்த டெம்பிள் எண்டர்பிரைசஸ் நிறுவனம், 2014-15 ஆம் ஆண்டில் 50 ஆயிரம் வருவாயில் ரூ.18 ஆயிரத்து 728-ஐ நிகர லாபமாக காட்டியது. 

ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த அடுத்தஒரே ஆண்டில்- அதாவது 2015-16-ஆம்ஆண்டில் டெம்பிள் நிறுவனத்தின் வர்த்தகம்ரூ. 80 கோடியே 50 லட்சத்திற்கு (16 ஆயிரம்மடங்கு) உயர்ந்தது என்பதை புள்ளி விவரங்களுடன் தந்திருந்தார்.


இந்தக் கட்டுரை இந்திய அளவில் அரசியலில் புயலை கிளப்பியது. 
இது தொடர்பாக பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும், அமித் ஷா பதவி விலக வேண்டும், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

ஆனால், மாநிலங்களவை உறுப்பினர் பரிமல் நாத்வானியின் உறவினர் ராஜேஷ் கண்ட்வாலா நடத்தி வரும் KIFS நிதி நிறுவனம் எந்தப் பாதுகாப்பு ஆவணங்களையும் பெறாமல், ஜெய் ஷா நிறுவனத்துக்கு ரூ. 15 கோடியே 78 லட்சம் கடன் வழங்கியதாககூறி, குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு இறங்கியது.

எங்கள்குடும்ப சொத்துகளை அடமானம் வைத்தே கடன் பெற்றேன் என்று ஜெய் ஷா கூறிய நிலையில், விதிகளின்படியே ஜெய் ஷா கடன் பெற்றுள்ளதாகவும், தவறான செய்தி வெளியிட்ட தனியார் இணையதள செய்தி நிறுவனத்திடம் ரூ. 100 கோடி கேட்டு மான நஷ்டவழக்கு தொடரப்படும் என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மிரட்டினார்.அதன்படியே ‘தி வயர்’ இணையதளத்தின் ஊடக ஆசிரியர், உரிமையாளர், கட்டுரையாளர் உள்ளிட்ட ஏழு பேர் மீது, அகமதாபாத் நீதிமன்றத்தில் ஜெய் ஷா அவதூறு வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு புதனன்று விசாரணைக்கு வரவுள்ளது.இந்நிலையில் ஜெய் ஷாவின் ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் ரோஹிணி சிங் தன் முகநூல் பக்கத்தில், பதிவுஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் மிரட்டலால்உண்மையை மறைக்க முடியாது என்று கூறியுள்ளார். “உண்மையை வெளிக்கொண்டு வருவதுதான் என்னுடைய பணி. ஆட்சி பீடத்தில்உள்ளவர்களைக் கேள்வி கேட்பது மட்டுமேபத்திரிகையாளரின் பணி. 

2011-ஆம் ஆண்டுராபர்ட் வதேராவுக்கும் டி.எல்.எப்-க்கும் இடையே நடந்த உடன்பாடுகள் குறித்து செய்தி வெளியிட்டபோது எந்தவொரு பின்னடைவையும் நான் சந்திக்கவில்லை.

இப்போது நான் சந்திக்கின்ற பிரச்சனைகள் ஏராளம். 
அப்போது இப்படியான எந்தச் சிக்கலையும் நான் எதிர்கொள்ளவில்லை. தற்போது என்னுடைய போன் அழைப்புகளை எல்லாம் மூத்த பா.ஜ.க தலைவர் ஒருவர் பதிவு செய்து வருகிறார்.
அதிகாரத்தை வைத்து மிரட்டவும் துன்புறுத்தவும் தான் முடியும். 

உண்மைகளை மறைத்துவிட முடியாது. 
‘மற்றவர்களால் அடக்கப்படும் போது அதையும் மீறி வெளிவருவது மட்டுமே செய்தி, மற்றவை எல்லாம்வெறும் விளம்பரங்கள்தான்’ என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன. சராசரிபத்திரிகையாளர்கள் போல செய்தி எழுதுவதைக் காட்டிலும், நான் பத்திரிகையாளர் வேலையிலிருந்தே விலகிவிடலாம். 
என்னிடம் இல்லாத பல பண்புகளை இருப்பது போலசித்தரித்து வருகிறார்கள். 
நான் ஒரு தைரியசாலி என்பதற்காக எல்லாம் இப்படிப்பட்ட செய்திகளை எழுதுவதில்லை.”இவ்வாறு ரோகிணி சிங் கூறியுள்ளார்.

ஊழலுக்கெதிரான உத்தமர் போல பிரதமர் மோடி போட்டு வந்த வேடம் கலைந்துவிட்டது. 
பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய் அமித் நடத்திவரும் நிறுவனத்தின் வருமானம் கடந்த மூன்றாண்டுகளில் 16 ஆயிரம் மடங்கு அதிகரித்திருப்பதாக இணையதள ஏடாகிய ’தி ஒயர்’ வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு எடுத்த பல்வேறு எதிர்மறையான நடவடிக்கைகளால் பல சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் திவாலாகிவிட்டன. அல்லது அந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்றவற்றை பல நிறுவனங்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 

ஆனால் அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே மோடி அரசின் நடவடிக்கைகளை பயன்படுத்திக் கொண்டு தங்களது வருவாயை பெருக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த பட்டியலில் அமித்ஷாவின் மகனின் நிறுவனத்தையும் சேர்க்க மோடி முடிவு செய்துவிட்டார் போலிருக்கிறது. 
ஜெய் அமித் ஷா நடத்திவரும் நிறுவனமான டெம்பிள் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் அடுத்தடுத்து இழப்பை சந்தித்து வந்தநிலையில், 2015- 16இல் அதன் வணிக வருவாய் 80 கோடியே 50 லட்சம்.
இது கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது 16 ஆயிரம் மடங்கு அதிகம் என்றுமதிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த நிறுவனத்திற்கு பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் தாராளமாக நிதியுதவி, கடன் உதவி செய்துள்ளன. இதில் வேடிக்கை என்னவென்றால் அமோக லாபத்தை சம்பாதித்த அந்த நிறுவனம் கடந்தாண்டு தனது வர்த்தகத்தை நிறுத்திக் கொள்வதாக கூறியுள்ளது. 

அதற்கு இழப்பு என்று காரணம் காட்டியுள்ளது. சலுகைசார் முதலாளித்துவம் அதாவது அதிகாரத்தில் இருப்பவர்கள் அதிகாரிகளின் துணையோடு நடத்தியுள்ள மிகப்பெரிய மோசடியின் வெளிப்பாடுதான் இது. இந்த மோசடி குறித்து விசாரணைக்கு உத்தரவிடாமல் ஊழலை வெளியே கொண்டு வந்த தி ஒயர் இணையதள ஏடுமீது வழக்குப் போடப்போவதாக அமித்ஷாவின்மகன் மிரட்டியுள்ளார். 

பாஜகவினரின் ஊழல்கள் அடுத்தடுத்து அம்பலமானாலும் மோடி மவுனம் ஒன்றையே பதிலாக தந்து வருகிறார்.
வியாபம் ஊழல், லலித்மோடிக்கு சலுகை வழங்கியது உட்பட கடந்த காலத்தில் பல மோசடிகள் அம்பலமாகின. 
மோடியின் ஆசியோடு, ஸ்டேட் வங்கியின் பணத்தை சூறையாடி ஆஸ்திரேலியாவில் அதானி வாங்கிய சுரங்கம் செயல்படுவதை கண்டித்து அந்நாட்டு மக்கள் போராடுகின்றனர். 

அந்த நாட்டின் முதலாளிகளால் நடத்த முடியாத சுரங்கத்தை மோடியின் பைனான்சியர் அதானி வாங்கியபோதே பெரும் சர்ச்சை எழுந்தது.மோடியின் ஆட்சி ஊழலுக்கு அப்பாற்பட்டது அல்ல. ஊழல் பெருச்சாளிகளின் தொகுப்புதான் இந்த ஆட்சி. 
இவர்கள் மோசடி ஒவ்வொன்றாக வெளிவரத் துவங்கியுள்ளது. 


இதை திசைதிருப்பகலவரங்களை தூண்டிவிடுவதே அவர்களது வழக்கமான பாணி. மதச்சார்பற்ற சக்திகள் இதுகுறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 பண மதிப்பிழப்பு அதில்  இந்திய பொருளாதாரம் தள்ளாடிக்கொண்டிருக்கையிலேயே ,  ஜிஎஸ்டி அமல்,பெட்ரோல் விலை அதியுயர்வு   போன்ற நிச்சயமற்ற செயல்பாடுகளால் இந்திய பொருளாதாரம் மந்தமடைந்துள்ளது. 
இதனால் தெற்காசிய நாடுகளின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய பொருளாதாரம் மற்றும் தெற்காசிய பொருளாதாரம் குறித்து உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
அதில், 2017 ல் 7 சதவீதமாக உள்ள பொருளாதார சரிவு, 2018 ல் 7.3 சதவீதம் வரை இருக்கும். ஆகையால் நீடித்த வளர்ச்சி பெற வறுமை ஒழிப்பு பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவின் வளர்ச்சி விகித மந்தநிலை, தெற்காசிய வளர்ச்சி விகிதத்தை பாதிக்கும். 

இதன் விளைவாக பொருளாதார வளர்ச்சியில் தெற்காசியா, கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளை விட இரண்டு இடங்கள் பின்தங்கி உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 2016 ல் 7.1 சதவீதமாக இருந்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைவு, 2017 ம் ஆண்டின் முதல் காலாண்டிலேயே 5.7 சதவீதத்தை எட்டி உள்ளது. 

பணமதிப்பிழப்பு,ஜிஎஸ்டி, பெட்ரோல் உட்ப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலையுயர்வு ,விவசாயம் முடக்கம் போன்றவற்றால் 2018 ம் ஆண்டு  இந்தியாவின் பொருளாதாரம்  மிக  வெகுவாக பாதிக்கப்படும்  வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
========================================================================================
ன்று,
அக்டொபர்-11.


  • உலக பெண் குழந்தைகள் தினம்
  • ஜான் ஸ்டீவன்ஸ் கண்டுபிடித்த முதலாவது நீராவிப் படகு சேவை நியூயார்க்கிற்கும் நியூஜெர்சிக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்டது(1811)
  • தமிழ்ப் புதின முன்னோடி மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த தினம்(1826)
  • ஆஸ்திரேலியாவின் மிகப் பழமையான சிட்னி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1852)
  • நாசா முதல் முறையாக 3 விண்வெளி வீரர்களை அப்பல்லோ 7 விண்கலத்தில் விண்ணுக்கு ஏவியது(1968)
=========================================================================================
கொசுப் பொருளாதாரம் ரூ.25 ஆயிரம் கோடி 

முன்பெல்லாம் காலையில் வானொலி, தொலைக்காட்சியில் பெயர்ப்பட்டியல் வாசித்து, பிறந்தநாள் வாழ்த்துக் கூறுவார்கள். 
இப்போதெல்லாம், பெயர்ப்பட்டியல் வாசித்து, டெங்குவால் பலியானதாக அறிவிக்கிறார்கள். அமைச்சர் ஜெயக்குமாரோ, இறந்தவர்கள் எண்ணிக்கையைச் சொல்லி மக்களை பயமுறுத்தக்கூடாது என்கிறார். அதாவது, மக்கள் பயம் கொள்ளுமளவுக்கு அதிக எண்ணிக்கையில் இறந்திருக்கிறார்கள் என்பதுதான் அவரது சொற்களிலிருந்து புரிந்து கொள்ள வேண்டிய செய்தி. 
இதில், வதந்தி பரப்பினால் நடவடிக்கை என்று அச்சுறுத்தல் வேறு... அதாவது, டெங்குவால் இறந்துவிட்டார்கள் என்ற உண்மையைச் சொல்லக்கூடாது என்பதுதான் இதன் உண்மைப்பொருள். பூனை கண்ணை மூடிக்கொண்டால்உலகம் இருண்டு விடும் என்று கருதியது போல, செய்திகளைச் சொல்லாவிட்டால் மக்களுக்குத் தெரியாது என்று தமிழகத்தின்புத்திசாலி அமைச்சர்கள் எண்ணிக்கொள்கிறார்கள்.
மக்கள் ஒவ்வொருவரும், தங்கள் உறவில், அடுத்த வீட்டில், அடுத்த தெருவில்என்று டெங்கு மரணங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 
டெங்கு என்று அரசுஒப்புக்கொள்ள மறுத்தாலும் மருத்துவமனைகளில் குவிந்து கொண்டிருக்கிறார்கள். நோயைப் பரப்புபவை கொசுக்கள்தான். 
தண்ணீரைத் தெர்மகோல் போட்டு மூடியதுபோல, கொசுக்களை எதைப்போட்டு மூடுவது என்று சிந்திக்காமல், உருப்படியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்காவிட்டால், நாள்தோறும் இரட்டை இலக்கத்தில்வாசிக்கப்படும் டெங்கு உயிர்ப்பலி எண்ணிக்கை, விரைவில் மூன்றிலக்கத்தைத் தொட்டுவிடும். 
நீர் தேங்கியிருக்கும் பகுதிகளைச் சுத்தம் செய்து, நீர் தேங்காத வண்ணம்செய்வது, வணிக நிறுவனங்கள், வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களையும் சோதனை செய்து, கொசுக்களுக்கான வாழிடங்களை இல்லாமல் செய்வது ஆகியவைதான் உடனடியாகச் செய்யவேண்டியவை. இதெல்லாம் நடைமுறைக்குச் சாத்தியமா? 
ஆனால், சாத்தியமா இல்லையா என்பது உண்மையான பிரச்சனை அல்ல. அதைத் தீர்மானிப்பது கொசுப் பொருளாதாரமே! 
2015-16 நிதியாண்டின் கணக்குப்படி, இந்தியாவில் வீட்டுப் பயன்பாட்டுப் பூச்சிக்கொல்லிகளின் விற்பனை ரூ.4,300 கோடி. இதில் பெரும்பகுதியாக கொசு விரட்டிகளே உள்ளன. இந்த விற்பனை ஆண்டுக்கு 15லிருந்து 17 சதவீதம் வரை வளர்ச்சியடைந்து வருகிறது. 
கோத்ரெஜ் நிறுவனம் வெறும் ரூ.1 விலையில் குட் நைட் ஃபாஸ்ட் கார்ட் என்ற எரியும் அட்டையை அறிமுகப்படுத்தியது.

ஓராண்டு நிறைவு பெறுவதற்குள் இதன் விற்பனை ரூ.100 கோடியைக் கடந்தது என்பதிலிருந்து கொசுவிரட்டிகளின் சந்தை எவ்வளவு பெரியது என்று புரிந்துகொள்ள முடியும். பகலிலும் கடிக்கும் கொசுக்களை விரட்ட,‘காலையில் எழுந்ததும் குட் நைட்(கொசு விரட்டி) சொல்லுங்கள்’ என்று கோத்ரெஜ்நிறுவனம் செய்த விளம்பரம், இரவு மட்டுமின்றி, நாள் முழுவதும் கொசுவிரட்டிகளைச் சார்ந்தே மக்கள் இருக்க வேண்டிய நிலையைத்தெளிவாக விளக்குகிறது.
ஆனால், கொசுக்களைச் சுற்றியுள்ள வியாபாரத்தில் இந்தக் கொசு விரட்டிகளின் பங்கு மிகச் சிறியதே. கொசுக்களைச் சார்ந்து இந்திய மருத்துவச் சந்தைக்குக் கிடைக்கும் வருமானம் ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடிகள் (பிசினஸ்டுடே, 2016 மே 22 இதழ்). 
இதுவும் 2015-16 நிதியாண்டின் கணக்குத்தான். ஒவ்வோராண்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்தியாவில் டெங்குவால் பலியாகின்றனர். 2013ல் மட்டும், இந்தியாவில், மருத்துவமனைகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி, வீட்டிலிருந்து சிகிச்சை பெற்றவர்களை மருத்துவமனைகளுக்குக் கொண்டு வருதல் உள்ளிட்ட செலவுகளுக்கு ரூ.1,900 கோடி, மற்றும் பிற செலவுகள் சேர்த்து ரூ.10 ஆயிரம் கோடி டெங்கு சிகிச்சைகளுக்காக செலவானதாக, அமெரிக்காவின் பிரேண்டீஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டொனால்ட் எஸ் ஷெப்பர்ட் தெரிவிக்கிறார். 
இந்தியாவில் காச நோய்க்கான சிகிச்சையில் ஒரு நாளுக்கான மருந்துக்கு மட்டும் சராசரியாக ரூ.226லிருந்து ரூ.264 வரை செலவாகும் நிலையில், டெங்குக்கு இது ஒரு நாளுக்கு ரூ. 452 (2016 நிலவரம்) ஆக உள்ளது. 
முன்பெல்லாம் ரத்த அழுத்தம், சர்க்கரைவியாதி, மாரடைப்பு முதலான வியாதிகளை, பணக்கார வியாதி என்பார்கள். தற்போது, மருத்துவமனைகளைப் பணக்காரர்களாக்கும் வியாதியாக டெங்கு உள்ளது.
இந்தியாவில் ஒவ்வோராண்டும், 60 ஆயிரத்திலிருந்து 2 லட்சம் பேர்வரை மலேரியாவால் பலியாவதாக, பப்ளிக் ஹெல்த் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா என்றஅமைப்பைச் சேர்ந்த மனீஷ் காக்கர் கூறுகிறார். இத்தனைபேரும், சிகிச்சை மேற்கொண்டு, அதற்குச் செலவு செய்துவிட்டுத்தான் செத்துப் போயிருப்பார்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. மேலும், இறந்தவர்களே 2 லட்சம் பேர்என்றால், சிகிச்சை பெற்றவர்கள் எண்ணிக்கைஇதைப்போலப் பலமடங்கு இருக்கும் என்பதும் சொல்லாமலே புரிகிற செய்திதான். 
ஆக, கொசுவிரட்டி, கொல்லி ஆகியவற்றைத் தயாரிப்பவர்களுக்கு மட்டுமின்றி, மருத்துவமனைகள், மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் ஆகிய அனைத்திற்கும் பணம் காய்க்கும் மரமாகக் கொசு விளங்குகிறது. 
இந்த நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகிய அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களாக இருக்கிற நிலையில், அவற்றின் நலனா, மக்களின் உயிரா என்ற கேள்விக்கு, அவற்றின் நலனே என்று மத்திய, மாநில அரசுகள் உறுதியாக முடிவெடுக்கின்றன.
அதனால்தான், ஸ்வச் பாரத், விழிப்புணர்வு என்று விளம்பரங்களுக்குச் செலவும், மக்களிடமிருந்து வரியும் வாங்கினாலும் சுத்தமும் ஆகவில்லை, கொசுவும் ஒழியவில்லை. ஒருபுறம் கொசுக்கள் உற்பத்தியாகாவண்ணம் நம் ஊரை நாமே பேணுவதும், மறுபுறம், மக்கள் நலனில் அக்கறை கொள்ளுமளவுக்கு அரசுகளை எதிர்த்த மாபெரும் இயக்கங்களைச் நடத்துவதும்தான் இந்தக் கொசுப் பொருளாதாரத்தை ஒழிப்பதற்கான வழியாகும்!


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?