காதல் மன்னன் அனுமன்!

கேரளாவில் அக்டோபர் 3ம் தேதி அமித்ஷா தலைமையில் தலையில் பாஜகவினர் ‘ஜனரக்க்ஷா’ யாத்திரைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். 
பாதயாத்திரை முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது திட்டமிட்டு வெறுப்பை உமிழும் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். பாஜகவின் மதவெறி அரசியலை கேரளமக்கள் ஏற்றுக்கொள்ளாததால் அவர்கள் எதிர்பார்த்த அளவு கூட்டம் கூடவில்லை. 
இதை மக்களிடம் மறைக்க பாஜக வழக்கம் போல் போட்டோ ஷாப் வேலையில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது.
சில நாட்களுக்கு முன் கேரள மாநிலம் கொச்சி நகரில் உள்ள ஒரு செல்போன் கடையை திறந்து வைக்க நடிகை சன்னி லியோன் வந்தார். 
அவரைக் காண ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். 
இந்த படத்தை தற்போது அமித்ஷா  கும்பல், போட்டோ ஷாப்பில் வைத்து சன்னி லியோனுக்கு வந்த கூட்டத்திற்கு நடுவே அமித்ஷா படத்தை வைத்து அமித்ஷா யாத்திரையின் போது திரண்ட கூட்டம் என சமூக வலைத்தளங்களில் போலி போட்டோக்களை உலாவ விட்டு வருகின்றனர். 
இந்த போலித் தனம் தற்போது அம்பலமாகியிருக்கிறது.சமூக வலைத்தளங்களில் தற்போது இதன் மீது காரித் துப்பல் வேலைதான்  நடந்து வருகிறது .
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜனுக்கு வழங்கப்படலாம் என ஒரு கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது.

2013 ஆம் ஆண்டு முதல் கடந்த செப்டம்பர் மாதம் வரை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஆளுநராக  இருந்தவர் ரகுராம் ராஜன். 


அவர் கவர்னராக இருந்த போது எடுக்கப்பட்ட பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் அனைவராலும் பாராட்டப்பட்டது.இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு வெற்றியாளர்களை நோபல் பரிசு கமிட்டி அறிவித்து வருகிறது. 
தற்போது, பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற வாய்ப்புள்ளவர்கள் பற்றி கிளாரிவேட் அனாலிட்டிக்ஸ் என்ற கருத்து கணிப்பு நிறுவனம் பட்டியல் வெளியிட்டுள்ளது. 
6 பேர் கொண்ட அந்தப் பட்டியலில் ரகுராம் ராஜனின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

நாளை பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ள நிலையில், ரகுராம் ராஜன் நோபல் பரிசு பெற பலரும் விரும்புகின்றனர்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 காதல் மன்னன்  அனுமன்!

கம்போடிய ராமாயணத்தில்
தமிழ் மொழியில் உள்ள இதிகாசங்களில் மிக முக்கியமானவை இராமாயணமும், மகாபாரதமும் ஆகும். இதில் ராமாயணம் முதன் முதலில் வடமொழியில் வால்மீகி என்பவரால் எழுதப்பட்டது. 
அதைத் தழுவி கம்பர் தமிழில் இராமாயணத்தை இயற்றினார். 
இதுகம்ப ராமாயணம் என்று அழைக்கப்படுகிறது. 

இதைத் தவிர்த்துஇராமாயணம் மலாய், லாவோ, கெமர் மொழியிலும் எழுதப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இப்படி பல ராமாயணங்கள் இருக்கும் போது கம்போடிய நாட்டிலும் ஒரு ராமாயணக் கதை உலவி வந்துள்ளது. 
இந்தக் கதை புத்தகத்தின் தலைப்பு பிராகா ரீம், பிராகா லீக் ஆகும். இந்த புத்தகத்தை சிட்னியில் வாழும் மாத்தளை சோமு என்பவர் தமிழில் மொழி பெயர்த்து கம்போடிய இராமாயணம் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார்.

இந்தப் புத்தகம் இராமாயணம் தொடர்பான மற்றொரு பார்வைக்கு நம்மை அழைத்துச் சொல்கிறது. கம்பன் இராமாயணத்தின் கதை மாந்தர்கள் அனைவரும் இந்தக் கதையில் வந்தாலும்பல் வேறுபட்ட காட்சிகள் கம்போடிய இராமாயணத்தில் இடம்பெற்றுள்ளன. 

கம்போடிய இராமாயணத்தில் எருமை மாடுகளின்மன்னனாக ஹெம்பியன் என்பவன் இருந்ததாக கூறப்படுகிறது. 
இவனுடைய மகன் பெண் எருமை மாடு ஒன்றுடன் உறவு கொண்டான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால் கம்ப ராமாயணத்தில் இது போன்ற ஒருவன் இருந்ததாகவே கூறப்படவில்லை. 
இராவணனின் தங்கை சூர்ப்பனகை ராமன் மீது காதல் கொண்டு மூக்கு அறுபட்டாள் என்று கம்ப ராமாயணம் கூறுகிறது. 
ஆனால் கம்போடிய ராமாயணம் சூர்ப்பனகை விதவை என்றும் அதன்பிறகு தான் ராமனின் மீது ஆசைப்பட்டு மூக்கை இழந்தாள் என்றும் கூறுகிறது.

அனுமன் இலங்கை சென்ற போது இராவணனின் சகோதரன் பிபயிட்டின் மகள் புன்காய் மீது காதல் கொள்கிறான் என்றும்,அதனால் அவள் கர்ப்பமாகிறாள் என்றும் கம்போடிய ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இதைத் தவிர்த்து அனுமன் பல பெண்களை திருமணம் செய்தான் என்றும் வைப்பாட்டிகளை வைத்திருந்தான் என்றும் கம்போடிய ராமாயணம் கூறுகிறது. 

ஆனால் அனுமன் பிரம்மச்சரியம் பின்பற்றினான் என்று கம்ப ராமாயணமும், வால் மீகி ராமாயணமும் கூறுகிறது.இப்படி மற்ற ராமாயணங்களில் இடம் பெறாத சுவாரஸ்யமான ஒரு சில காட்சிகள் இந்த ராமாயணத்தில் இடம் பெற்றுள்ளன. 
மற்றபடி அனைத்துக் காட்சிகளும் வடமொழி ராமாயணத்தை தழுவி எழுதப்பட்டது போல்தான் உள்ளது. மேலும் இந்த ராமாயணம் சிறு சிறு கதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

 73 பக்கங்களைகொண்ட சிறு நூலாக இருந்தாலும் ராமாயணம் பற்றி நாம் அறியாதகருத்துகளை மட்டும் தொகுத்து மொழிபெயர்த்துள்ளார்  மாத்தளை சோமு.
=========================================================================================
ன்று,
அக்டொபர்-08.


  • இந்திய விமானப் படை தினம்

  • இந்திய விமானப்படை நிறுவப்பட்டது(1932)

  • ஜெர்மனி, மேற்கு போலந்தை இணைத்துக் கொண்டது(1939)

  • மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தினம்(1959)
==========================================================================================
'வறுமை நிலைக்கு பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே!' - 

திருடாதே என்ற படத்தில் இடம்பெற்ற 'திருடாதே... பாப்பா திருடாதே 'என்ற பாடலில் இடம்பெறும் இந்த பாடலை கேட்கும் யாருக்கும் மனதில் ஒரு ஆழமான தன்னம்பிக்கை உயர்ந்து நிற்கும். 
இப்படி காலத்தால் அழிக்கமுடியாத பாடல்களை எழுதிய பொதுவுடைமைக் கவி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பிறந்தநாள் இன்று.
குட்டி ஆடு தப்பிவந்தா குள்ளநரிக்கு சொந்தம்
தட்டுக்கெட்ட மனிதருக்கு கண்டதெல்லாம் சொந்தம் என்ற தீர்க்க தரிசன வரிகளுக்கு சொந்தக்காரர் அவர்.
மகாகவி பாரதியாருக்குப் பிறகு,  சமூக அக்கறை மிகுந்த தனது பாடல்களால் மக்களின் மனதில் வெள்ளமெனப் பாய்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் கிராமத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர். 
தனது வறுமையின் பொருட்டு விவசாயம், வியாபாரம், நாடக நடிப்பு, டிரைவிங், உப்பளத்தொழில் என எண்ணற்ற தொழில்களையும் வேலைகளையும் செய்தவர். பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் கற்றவர். அவரது குயில் இதழில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார். 

வறுமை மிகுந்த சூழலில்,  பெரும் முயற்சிக்குப் பிறகு தனது 25வது வயதில் 'படித்த பெண்' என்ற திரைப்படத்திற்காக முதல் பாடலை எழுதினார். அடுத்தடுத்த வருடங்களில் தனது அபாரமான கவிதை ஆற்றலால் திரையிசைப்பாடல் உலகில் அழுத்தமாக காலூன்றினார். அவரது கவிதைக்கொடி,  புகழ்காற்றில் படபடத்தது.

பொதுவுடமைக் கருத்தியலை தீவிரமாக நம்பியவர். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அரசியல் விழிப்புணர்வு கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல திரையிசையைப் பயன்படுத்தினார். 
இளைஞர்களுக்கு மட்டுமின்றி,  சிறுவர்களுக்கும் தனது கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என்று விரும்பியவர். சினிமாவின் கதை சிச்சுவேஷன்களைப் பயன்படுத்தி, சிறுவர்களுக்காக பல பாடல்களை எழுதினார். 
அவற்றில் ・சின்னப்பயலே... சின்னப்பயலே சேதி கேளடா・ திருடாதே பாப்பா... திருடாதே・ தூங்காதே தம்பி... தூங்காதே・போன்ற பாடல்கள் மிகப் பிரபலமானவை.
தத்துவம், அரசியல், காதல், நகைச்சுவை, சோகம் என பல உணர்வுத்தளங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். 

இவரை முழுக்கப்பயன் படுத்தி தன்னை ஏழைகள் மனதில்  நிறுத்தி அரசியலில் உயர்ந்தவர்தான் நடிகர் எம்.ஜி.ஆர்.
187 பாடல்களை மட்டுமே எழுதியிருந்த சூழலில்,  தனது 29 வயதிலேயே காற்றில் கலந்தார். 
பட்டுக்கோட்டையைப் பொறுத்தவரை பாடல்களின் எண்ணிக்கை ஒரு பொருட்டே அல்ல. 
அவரது வரிகள் ஒவ்வொன்றும் காலத்தில் எதிர் நீச்சல் போடுபவை. மனிதன் பூமியில் வாழ்கின்ற காலம் வரைக்கும் நிலைத்து நிற்பவை. எல்லா காலங்களுக்கும் பொருந்திப் போகிறவை.         

உதாரணமாக சமீபத்தில், வங்கிகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு விஜய்மல்லையா உல்லாசப் பயணத்திலிருப்பதையும், டிராக்டருக்கு தவணை கட்டவில்லையென ஒரு விவசாயி போலீசால் தாக்கப்பட்டதையும் ஒப்பிட்டு பார்ப்போம். கீழே பட்டுக்கோட்டையின் வரிகள்:  

பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது - ஒரு 
பஞ்சையத்தான் எல்லாம் சேர்ந்து திருடனென்றே ஒதைக்குது!    
(பொறக்கும்போது பொறந்த குணம் போக போக மாறுது...)
எத்தனை ஆண்டுகள் கழித்தும் அவரது பாடல்,  இன்றைய சமூகத்தை தோலுரிப்பதாக உள்ளது...இதுதான் பட்டுக்கோட்டையார். அதுவும் இந்த தேர்தல் நேரத்தில் நாம் அனைவரும் கேட்க வேண்டிய மற்றொரு பாடல்: 

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா- இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா- தம்பி
தெரிந்து நடந்துகொள்ளடா- இதயம்
திருந்த மருந்து சொல்லடா!- இப்படி பாடல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
சைனஸ் தொல்லைக்காக ஆபரேஷன் செய்தபோது, டாக்டர்கள் தவறான இடத்தில் ஆபரேஷன் செய்துவிட, அதன் பக்கவிளைவாக முகம் வீங்கி சிகிச்சை பலனின்றி,  தமது 29 வயதில் 08.10.1959 ல் பட்டுக்கோட்டையார் இயற்கை எய்தினார். 

ஒரு முறை ஜனசக்தி பத்திரிக்கை ஆசிரியர், கவிஞர். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திடம், "பெரிய கவிஞர்களான கம்பன், இளங்கோ, பாரதி போன்றவர்களே பெயரை சிறிதாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். 
நீங்கள் ஏன் இவ்வளவு பெரிய பெயரை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டாராம். அதற்கு பட்டுக்கோட்டை, " அவர்கள் பெரிய கவிஞர்கள்.
 நான் சின்னக் கவிஞன் பெயராவது பெரிதாக இருக்கட்டுமே...?!" என்றாராம். 

தன்னடக்கமாக அவர் அப்படிச் சொல்லியிருந்தாலும்,  மானுட சமூகத்தின் மீது அவர் கொண்ட நேசத்தாலும் அக்கறையாலும், மாபெரும் கவிஞராகவே மக்களின் இதயத்தில் என்றென்றும் நிறைந்திருப்பார்.
பட்டுக்கோட்டையின் பாடல்களை நாட்டுடமையாக்கி,  அரசு தனக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது. இவரையும் இவரது பாடல்களையும் நாம், நம் குழந்தைகளுக்கும் இந்த தலைமுறை இளைஞர்களுக்கும் அறிமுகப்படுத்துவதின் வாயிலாக பெருமை தேடிக்கொள்வோம். 
அவரது பாடல்களை கேட்பதின் வாயிலாகவும் நினைவுக்கூறுவதின் வாயிலாகவும் இன்றைய நாளை நீங்கள் மகத்துவமானதாக மாற்றலாம்.
                                                                                                      - மாயன்(விகடன்தளம்) 
======================================================================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?