மறக்க முடியுமா டிசம்பர் 5யை!
ஆம்! ஒரு மாமனிதர் மறைந்த நாள்!
இந்திய அளவில் மட்டுமல்ல! இவர் ஒரு உலகமறிந்த முக்கியஸ்தர் என்னும் நிலைக்கு தன் உழைப்பாளும், தன் “ஆளுமைத்தன்மை”யாலும் முன்னுக்கு வந்தவர்!
இவர் ஒரு பிராமண சமூகத்தை சேர்ந்தவர் என்பது ஊரறிந்த விஷயம். ஆனால் இவர் பாடுபட்டதோ அடித்தட்டு மக்களுக்காக!
இவர் பிராமணர் என்பதால் மட்டுமே இவரை நம் தலைவர் கலைஞர் அவர்கள் புறந்தள்ளியவர் அல்ல! அவருடைய தைரியத்துக்கு எப்போதுமே மதிப்பும் மரியாதையும் கொடுப்பவர்!
இந்தியாவின் இரும்பு மனுஷி என புகழப்பட்ட அன்னை இந்திராவே இவருக்கு “பச்சா” தான்!
அதனால் தான் இவருக்கு அந்த “இரும்பு” பட்டம் வந்து தானாக ஒட்டிக்கொண்டது!
இவர் ஒருவரை எதிர்த்தால் கடுமையாக எதிர்ப்பார்!
தன் கருத்துகள் தான் நியாயம் என வாதிடுவார்!
அத்தனை ஒரு உறுதியான குணம் கொண்டவர்!
இவர் உயிரோடு இருக்கும் வரை நம் செயல்தலைவர் அவர்கள் துணை முதல்வர் அளவுக்கு மட்டுமே வந்தார்!
இதோ அவர் மறைவுக்கு பின்னர் நம் செயல்தலைவர் அவர்கள் முதல்வராகவும் வர இருக்கின்றார். நம் செயல்தலைவர் அவர்கள் முதல்வராக அமரும் காட்சியை இவர் உயிரோடு இருந்து காண கொடுத்து வைக்கவில்லையே என்னும் வருத்தம் எனக்கு மட்டுமல்ல நம் செயல்தலைவருக்கும் கூட இருக்கலாம் என்றே நினைக்கின்றேன்.
நம் செயல்தலைவர் அவர்கள் முதல்வராக அமரும் போது தன்னை அரசியலில் புடம் போட்ட இவரிடம் நேரிடையாக ஆசி வாங்கி பின்னரே முதல்வர் இருக்கையில் அமர்வார்.
ஆனால் காலம் செய்த கோலம் டிசம்பர் 5ல் இவரை இயற்கை அழைத்துக்கொண்டதே!
இத்தனைக்கும் இவர் ஏறாத நீதிமன்ற படிகளே இல்லை!
பார்க்காத வாய்தா இல்லை!
அரசு வழக்கறிஞர் முதல் நீதிபதிகள் வரை இவருக்கு பிடிக்கவில்லை எனில் உடனே மாற்ற வேண்டும் என பிடிவாதம் செய்யும் போர்க்குணம் இவருடையது!
எத்தனை வழக்குகள், எத்தனை குற்றங்கள், எத்தனை வாய்தாக்கள், எத்தனை சிறைதண்டனைகள், எத்தனை எதிர்ப்புகள், எத்தனை போராட்டங்கள் இவரது வாழ்வில்!
அத்தனை வழக்குகளையும் தன் உயர்வின் படிக்கட்டுகளாக மாற்றி அதில் ஏறி பயணம் செய்தவர் இவர்!
நக்கீரன் கோபால் முதல் வீரப்பன் வரை இவருக்கு கொள்ளை பிரியம்! விடவே மாட்டார்!
சமீபத்தில் ஒரு பேட்டியில் டி டி வி தினகரன் கூட சொன்னாரே.... நான் செய்தது குற்றம் எனில் தூக்கிலா போடுவாங்க.
ஜெயில் தானே... இருபது வருஷமானாலும் திரும்பி வந்து இதற்கு காரணமானவர்களை அரசியலில் கால் ஊன்ற விடமாட்டேன் என தெனாவெட்டாக சொன்னாரே... அந்த தைரியத்தை தினகரனுக்கு கொடுத்ததே இவர் தான்!
நீதிமன்றங்களில் எத்தனை குற்றமாக இருந்தாலும் “கொலை” அதாவது “தூக்கு” மட்டும் கூடாது என பிடிவாதமாக கடைசி வரை போராடினார்!
அவர் தான் நம் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி திரு. வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள்!
தன் 100 வது வயதில், 2014ல் டிசம்பர் 5ல் இதே நாளில் நம்மை விட்டு மறைந்தார்!
இவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் போது அளித்த ஒரு தீர்ப்பினால் தான் இந்திரா அம்மையார் "அவசரகால பிரகடனம்" அறிவிக்க முடிந்தது.
//"On June 12th, 1975, Justice Jagmohanlal Sinha of the Allahabad High Court, found the Prime Minister guilty on the charge of misuse of government machinery for her election campaign. The court declared her election "null and void" and unseated her from the Lok Sabha." But on June 24th 1975 Justice VR Krishna Iyer granted Indira Gandhi “conditional stay”, which lead to opposition and subsequently the declaration of emergency.//
நீதியரசர் கிருஷ்ணய்யர் அந்த தீர்ப்பை அளித்திராவிட்டால் ..... அவசரகால நிலையும் இந்தியாவுக்கு வந்திருக்காது.
அதன் காரணமாக "மிசா"வில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட இந்திய தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.
நம் செயல்தலைவரும் தன் 22ம் வயதில் மிசா சட்டத்தால் கைதாகி சுமார் ஒரு வருடம் காராக்கிரகத்தில் அடைக்கப்பட்டிருக்க மாட்டார்.
நம் செயல்தலைவரை செதுக்கிய நாட்கள்... உடலளவில் மட்டுமல்ல அரசியலளவிலும் செதுக்கிய நாட்கள் அவை.
அதன் பின்னர் தான் நம் செயல்தலைவர் அவர்கள் அரசியல் வாழ்வில் பிரகாசிக்க தொடங்கினார்.
அதன் காரணமாகவே கட்சியின் அடிமட்ட பொறுப்புகள், பின்னர் பொதுக்குழு உறுப்பினர், மாநில இளைஞர் அணி செயலாளர், சட்ட மன்ற உறுப்பினர், சென்னை மாநகர சிறப்பான மேயர், அமைச்சர், துணை முதல்வர், அது போல கட்சியிலும் இன்றைக்கு பொருளாளர், செயல்தலைவர் இதோ எதிர்காலத்தில் தமிழக முதல்வர் என தமிழகத்துக்கு நன்மை பயக்கப்போகும் அளவில் மிளிர போகின்றார்.
அதன் காரணமாக தமிழகமும் ஜொலிக்கப் போகின்றது.
இதற்கெல்லாம் அடிப்படை புள்ளியை வைத்த நீதியரசர் திரு. வி ஆர் கிருஷ்ணய்யர் அவர்கள் ஆன்மா ஆண்டவன் காலடியில் அமைதி பெறட்டும்!
நீதியரசர் திரு.வி ஆர் கிருஷ்ணய்யர் மறக்க முடியுமா இந்த டிசம்பர் 5ம் தேதியைஅவர்களுக்கு மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலிகள்!
நன்றி:அபி அப்பா,
1915 நவம்பர் 15-ம் தேதி கேரள மாநிலம் பாலக்காட்டில் வி.ஆர். கிருஷ்ணய்யர்பிறந்தார். தலைச்சேரி பேஷல் மிஷன் ஆரம்ப பள்ளி, பாலக்காடு விக்டோரியா கல்லூரி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற அவர் இறுதியாக சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை நிறைவு செய்தார்.
1937 முதல் வழக்கறிஞரான தனது தந்தை வி.வி.ராமா அய்யருடன் இணைந்து தலைச்சேரி நீதிமன்றங் களில் வாதாடினார். சிறுவயது முதலே கம்யூனிச கொள்கைகளில் ஈர்க்கப்பட்ட அவர், தொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பான வழக்குகளில் அதிக அளவில் ஆஜரானார்.
1952-ல் அவர் மெட்ராஸ் மாகாண சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார். அதன்பின்னர் 1957-ல் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையிலான கேரள அரசில் சட்டம், நீதித்துறை, உள்துறை, நீர்ப்பாசனம், மின்சாரம், சிறை, சமூகநலம் உள்ளிட்ட துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார்.
1959 முதல் மீண்டும் வழக்கறிஞர் பணியில் ஈடுபட்டார். 1965 சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். இதன்பின்னர் முழுநேர மாக வழக்கறிஞர் தொழிலில் இறங்கினார்.
1968 ஜூலை 2-ம் தேதி கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். 1973 ஜூலை 17-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 1980 நவம்பர் 14-ம் தேதி அவர் பதவியில் இருந்து ஒய்வுபெற்றார்.
அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணி யாற்றியபோது வரலாற்று சிறப்புமிக்க பல தீர்ப்புகளை வழங்கினார்.
கடந்த 1975-ம் ஆண்டில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் ரேபரேலி தேர்தல் தொடர்பான வழக்கு வி.ஆர். கிருஷ்ணய்யர்முன்பு வந்தது. இந்திரா பிரதமராக தொடரலாம் ஆனால் அவர் நாடாளுமன்றத்தில் வாக்களிக்க முடியாது என்று தீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்பில் 6 மாதங்களில் மீண்டும் தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் இந்திரா காந்திக்கு ஏற்பட்டது. இதன்தொடர்ச்சியாகத்தான் 1975 ஜூன் 24-ம் தேதி நெருக்கடி நிலையை இந்திரா அறிவித்தது நினைவுகூரத்தக்கது.
வி.ஆர்.கிருஷ்ணய்யரின் சேவையைப் பாராட்டி 1999-ம் ஆண்டு அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. 2009-ம் ஆண்டில் கேரள சட்ட சீர்த்திருத்த ஆணையத்தின் தலைவராக பணியாற்றினார். சுமார் 70-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
ஓய்வு காலத்தில் பல்வேறு சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வந்தார். மரண தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தார்.
2014 நவம்பர் 15-ம் தேதி அவர் தனது 100-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அப்போது பிரதமர், குடியரசுத் தலைவர் உள்பட பல்வேறு தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். கொச்சி முதல் டெல்லி வரை அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் 2014 நவம்பர் 24-ம் தேதி அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கடந்த இரு வாரங்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் மறைந்தார்
| உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யரின் 99-வது பிறந்த நாளையொட்டி, எழுத்தாளரும், மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான ச.பாலமுருகன் எழுதி, 'தி இந்து' நாளிதழில் நவம்பர் 15,2013-ல் எழுதிய கட்டுரை இது. |
நாட்டின் கடைக்கோடி சாமானிய ஏழைகளுக்கும் சட்டம், நீதியின் வெளிச்சம் சென்றடைய வேண்டும் என்பதை நோக்கித்தான் அவரின் செயல்பாடுகள்.
நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் வழக்குரைஞர், கைதி, சட்டமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர், உயர் நீதிமன்ற நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதி, மனித உரிமைச் செயல்பாட்டாளர் எனப் பல வடிவங்களைக் கடந்துவந்தவர். இந்தப் பயணம் நெடுகிலும் ஏழை மக்களுக்கான சமூக நீதி மீதான கரிசனத்தினை வெளிப்படுத்தினார்.
அன்றைய சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியான கேரளத்தின் பாலக்காட்டில் அவர் பிறந்தார். அவரின் குடும்பம் கேரளத்தின் குயிலாண்டிக்கு இடம்பெயர்ந்தது. புகழ்வாய்ந்த ஒரு வழக்குரைஞரின் மகனாக வளர்ந்த அவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பின் சென்னை சட்டக் கல்லூரியிலும் கல்வியை முடித்தார்.
பிறகு, வழக்குரைஞராக மலபார், கூர்க் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்தார். அந்தக் காலகட்டத்தில் பொதுவுடைமை மற்றும் தொழிற்சங்க இயக்கத்தவருக்கு அவர் தொடர்ந்து வாதாடிவந்தார். இதனால் ஒரு சமயம் நீதிபதி ஒருவர்கூட அவரைத் தனியே அழைத்து “கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஆஜராகி ஏன் பெயரைக் கெடுத்துக்கொள்கிறீர்கள்,
உங்களை போலீஸார் உளவு பார்ப்பார்கள்” என்று எச்சரிக்கையும் செய்தார். நாடு விடுதலை அடைந்த சமயம், பொதுவுடைமை இயக்கம் தடைசெய்யப்பட்டிருந்தது. கிருஷ்ணய்யர் தொடர்ந்து கம்யூனிஸ்ட்டுகளின் மீது போடப்பட்ட வழக்குகளில் வாதிட்டதால், காவல் துறையினர் கோபத்துடன் இருந்தனர்.
தலைமறைவு கம்யூனிஸ்ட்டுகளுடன் தொடர்பிருப்பதாகப் பாதுகாப்புச் சட்டத்தில் 1948 மே மாதத்தில் வழக்குப் பதிவுசெய்து, காவல் துறை அவரைக் கைதுசெய்து கண்ணனூர் சிறையில் அடைத்தது. சிறையின் அவலங்களையும், கைதிகளின் நிலையையும் அவர் நேரடியாக உணர இது உதவியது.
பொதுவுடைமை இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட்டு, அவர்கள் 1952 தேர்த லில் போட்டியிட்டபோது, வி.ஆர். கிருஷ்ணய்யர் குத்து பரம்பா சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாக நின்று, பொதுவுடைமை இயக்கத்தின் ஆதரவில் வெற்றிபெற்று, சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
மலபார் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த போதும், ஒட்டுமொத்த சென்னை மாகாணப் பிரச்சினைகளுக்காக அவர் குரலெழுப்பினார்.
பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரத்தின் ராயலசீமா மக்களுக்குக் கஞ்சித் தொட்டி நிர்வகிப்பது குறித்தும், மலபார் நெசவாளர்களின் நிலைகுறித்தும் சட்டமன்றத்தில் அவர் குரலெழுப்பினார். பஞ்சத்தையும் வறுமையையும் மக்கள் எதிர்கொண்ட நிலையில், அன்றைய முதல்வர் ராஜாஜி, அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் சலுகை அறிவித்தார்.
அரசு ஊழியர்களைக் கைக்குள் வைத்துக்கொள்ள சலுகை அறிவிக்கும் ஆங்கிலேய அரசின் தொடர்ச்சியாக சுதேசி அரசும் இருப்பதை, வி.ஆர். கிருஷ்ணய்யர் 1952 ஜூலையில் சட்டமன்றத்தில் நிகழ்த்திய உரை சுட்டிக்காட்டியது.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்பு, கேரள மாநிலத்தில் 1957-ல் அவர் தலைச்சேரி சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1957 முதல் 1959 வரை ஆட்சிபுரிந்த ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையிலான முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தில் அவர் அமைச்சராகவும், சட்டம், சிறை நிர்வாகம், உள்துறை, மின்சாரம் மற்றும் நீர்ப்பாசனம், சமூக நலத் துறை அமைச்சராகவும் பதவிவகித்தார்.
இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் காமராஜர் முதல்வராக இருந்தார்.
பாசனத் துறை அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம், கோவை மாவட்ட விவசாயிகளின் பாசனத்துக்கும், மக்களின் குடிநீர்த் தேவைக்கும் ஒரு திட்டத்தை முன்மொழிந்தார். கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளைக் கிழக்குப்புறமாகத் திருப்பிவிட்டுத் தமிழகமும் கேரளமும் சேர்ந்து பயன்பெறுவதற்கான பரம்பிக்குளம் திட்டம்தான் இது.
கேரள முதல்வர் நம்பூதிரிபாடும் வி.ஆர். கிருஷ்ணய்யரும் இதற்குச் சம்மதித்தனர்.
ஆனால், கேரளத்தின் அப்போதைய எதிர்க்கட்சியான காங்கிரஸ் வி.ஆர். கிருஷ்ணய்யர் தமிழர் என்பதால், தமிழகத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறிப் பிரச்சினையை ஏற்படுத்தினர்.
காமராஜர் தலையீட்டால் பிரச்சினை பெரிதாகாமல் திட்டம் நிறைவேறியது.
இந்தக் காலகட்டத்தில் கேரளாவில், சிறியதும் பெரியதுமான நீர்ப்பாசனத் திட்டங்கள் பலவற்றைத் தொலைநோக்குப் பார்வையோடு வி.ஆர். கிருஷ்ணய்யர் திட்டமிட்டார்.
‘உழைப்பு தானத் திட்டம்’ என்ற பெயரில், இன்றைய நூறு நாள் வேலைத் திட்டம் போல, தினம் ரூ 50 கூலி தரும் திட்டம் செயல்பட ஆலோசனை வழங்கினார்.
மேலும், சட்ட அமைச்சர் என்ற அளவில், வரதட்சிணை ஒழிப்புச் சட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக அவர் அறிமுகம் செய்தார். சிறை சீர்திருத்தம் உள்ளிட்ட ஜனநாயகச் செயல்பாடுகள் பலவும் மேற்கொள்ளப்பட்டன. சிறைக் கைதிகள் கண்ணியத்தோடு நடத்தப்பட, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
1959-ல் அவர் பங்கேற்றிருந்த மந்திரி சபை நேருவால் கலைக்கப்பட்டது. அதன் பின் 1960-ல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.
ஏழு வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார். அந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதையும் வாக்களிக்கும் வயதே வராதவர்களை வைத்துக் கள்ள ஓட்டுகள் போடப்பட்டிருப்பதையும் அறிந்து, அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்செய்தார். இரண்டரை ஆண்டுகள் கழித்து, இறுதியில், ஐந்து வாக்கு வித்தியாசத்தில் கிருஷ்ணய்யர் வெற்றிபெற்றதாக நீதிமன்றம் அறிவித்தது.
மீண்டும் சட்டமன்றம் சென்றார். இந்தச் சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து முக்கியத் தலைவர்கள் பிரிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவங்கியதும், கட்சி பிளவுபட்ட சூழலில் 1965-ல் தேர்தலைச் சந்தித்து வி.ஆர். கிருஷ்ணய்யர் தோல்வியடைந்தார்.
அதன் பின்பு, அரசியலிலிருந்து விலகி உயர் நீதிமன்ற வழக்குரைஞராகப் பணிபுரிய ஆரம்பித்தார். 1968-ல் உயர் நீதிமன்ற நீதிபதியாக வி.ஆர். கிருஷ்ணய்யர் பொறுப்பேற்றார். உயர் நீதிமன்ற நீதிபதிகள் நடந்து வரும்போது செங்கோல் ஏந்தி 'உஸ்’என்று ஒலி எழுப்பி, ஊழியர் ஒருவர் நீதிபதிக்கு முன்னே வரும் பழக்கம் இன்னமும் நடைமுறையில் உள்ளது.
ஆங்கிலேய நீதிபதிகள், இந்தியர்களைக் காட்டிலும் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று காட்டுவதற்காகப் பின்பற்றிய அந்த வழக்கம் ஜனநாயக சமூகத்துக்கு ஏற்றதல்ல என்று வி.ஆர். கிருஷ்ணய்யர் அதை மறுத்தார்.
1971-ல் மத்திய சட்ட கமிஷன் உறுப்பினராக அவர் தேர்வுசெய்யப்பட்டார். பின் 1973-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்தில் அவருடைய தீர்ப்புகள் தனித்துவம் வாய்ந்தவை. வெறும் சட்டவாதமாக மட்டும் வழக்குகளைப் பார்க்காமல் அவற்றின் பின்னால் உள்ள சமூக, அரசியல், ஜனநாயகப் பிரச்சினைகளை அவர் தனது தீர்ப்புகளில் விரிவாக எடுத்துரைத்தார்.
1975-ல், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் ரேபரேலி தேர்தல் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் முன் வந்தது.
இந்திரா காந்தி பிரதமராகத் தொடரலாம் என்றும் ஆனால், நாடாளுமன்றத்தில் அவர் வாக்களிக்க முடியாது என்றும் தீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்பால் ஆறு மாதத்தில் மீண்டும் தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் இந்திரா காந்திக்கு உருவானது.
இதன் தொடர்ச்சியாகத்தான், 1975 ஜூன் 24-ம் தேதி நெருக்கடி நிலையை அவர் அறிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தில் கிருஷ்ணய்யர் வழங்கிய பல தீர்ப்புகள் ஏழைகளுக்கு அனுசரணையாக இருந்தன. இக்காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் சாமானிய மக்கள் எழுதிய கடிதங்கள்கூட சில சமயம் வழக்குகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.
மரண தண்டனையை வி. ஆர். கிருஷ்ணய்யர் முற்றிலுமாக எதிர்த்தார். அதை, தண்டனை வடிவமாகக் கருத முடியாது என்பதில் உறுதியுடன் நின்றார்.
மேலும், இலவசச் சட்ட உதவி முறைக்கு அவர் உயிர்கொடுத்தார். 1980 நவம்பர் 14 வரை உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றார்.
ஓய்வுக்குப் பின்பும், தொடர்ந்து மனித உரிமைகளுக்காகவும் கண்ணியத்துக்காகவும், முகம் அறியாத அனைவருக்காகவும் அவர் குரல்கொடுத்துக்கொண்டிருந்தார்.
வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில், கர்நாடக - தமிழக அதிரடிப்படையினர் நிகழ்த்திய மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, 1996-ல் ‘பழங்குடி மக்கள் சங்கம்’ சார்பில் நாங்கள் மனுத் தாக்கல் செய்தோம்.
வழக்கை எப்படி நடத்துவதென்ற விதி இல்லை என்று, மாவட்ட மனித நீதிமன்றத்துக்கே அந்த மனு திருப்பி அனுப்பப்பட்டது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், வி.ஆர். கிருஷ்ணய்யருக்கு நாங்கள் எழுதிய கடிதத்துக்கு அவர் எடுத்த நடவடிக்கையால், உயர் நீதிமன்றம் அதை வழக்காக எடுத்துக்கொண்டது. அதிரடிப்படை யின் அத்துமீறல்களை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த அந்த வழக்கு உதவியது.
பழங்குடியினருக்காக நாட்டின் முக்கியமான மனிதர்கள் ஆதரவு தர முன்வந்தது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை உருவாக்கியது. அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு, 1999-ம் ஆண்டு மனித உரிமை ஆர்வலர்கள் சென்றது,
அரச வன்முறையை அம்பலப்படுத்த உதவியது.
இந்தப் பின்னணியில் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அதுகுறித்து தேசிய மனித உரிமை ஆணையத்துக்குக் கடிதம் எழுதினார்.
அதிரடிப்படையின் அத்துமீறல்களை விசாரிப்பதற்கு, ஓய்வு பெற்ற நீதிபதி சதாசிவா தலைமையில் குழு அமைக்கப்படுவதற்கு அந்தக் கடிதம் உதவியது.
நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர், சமூகத்துக்குத் தொடர்ந்து நம்பிக்கைகளை விதைத்துக்கொண்டே இருக்கிறார். மூத்த தலைமுறையினர், முக்கியமாகச் செய்ய வேண்டிய அரும் பணி இது. அவரை நினைவுகொள்வோம்.