இழக்கத் தயாரில்லை.

நகைக் கொள்ளையர்களை தேடி தமிழக தனிப்படையினர், ராஜஸ்தான் சென்ற போது சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்.

பல்வேறு அராஜகமான செயல்பாடுகளால் மக்களின் ஓட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்த தமிழக காவல்துறை மீது தற்போது மீண்டும் ஒரு கரிசனத்தை ஏற்படுத்தியுள்ளது பெரிய பாண்டியனின் மரணம். அதே சமயம் அலட்சியம், சரியான அணுகுமுறை மற்றும் செயல்பாடின்மை, முறையான திட்டமிடல் இன்மை போன்ற அடுக்கடுக்கான சர்ச்சைகளும், மர்மங்களும், பல்லேறு விமர்சனங்களும் தமிழக காவல்துறை மீது எழுந்துள்ளது.

 கூடிய விரைவில் முழு விசாரணையின் மூலம் ராஜஸ்தானில் நடந்த உண்மையான நிலவரம் என்ன, பெரியபாண்டியன் யாரால்,எப்படி சுட்டுக் கொல்லப்பட்டார் போன்றவை தெரியவரும் என்று வழக்கம் போல் இந்த விஷயத்திலும் நம்புவோம். 

காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன்(48), நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா சாலைபுதூரைச் சேர்ந்தவர். 
விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், ஆவடி வசந்தம் நகரில் மனைவி பானுரேகா, மகன்கள் ரூபன், ராகுல் ஆகியோருடன் வசித்து வந்தார். 

1992இல் பெரியபாண்டியன் போலீசாக வேலைக்கு சேர்ந்தார். 
2000ல்தேர்வு எழுதி எஸ்.ஐ.ஆக பணியாற்றியவர், 2014இல் பதவி உயர்வுபெற்று அமைந்தகரை குற்றப்பிரிவுஇன்ஸ்பெக்டரானார். கடந்தஅக்டோபரில் மதுரவாயலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். 

கடந்த நவம்பர் 16இல் கொளத்தூர் பகுதியில் உள்ள ஒரு நகைமற்றும் அடகு கடையில் நடந்தகொள்ளை வழக்கில் வடமாநில கொள்ளையர்களை பிடிக்க மதுரவாயல் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், கொளத்தூர் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமையில் தலைமைக் காவலர்கள் அம்புரோஸ், குருமூர்த்தி மற்றும் முதல்நிலை காவலர் சுதர்சன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. 

இந்த தனிப்படை, ராஜஸ்தான் மாநிலத்தில் முகாமிட்டு கொள்ளைச் சம்பவத்திற்கு சதித் தீட்டம் தீட்டிய முக்கியக் குற்றவாளிகள் நாதுராம், தினேஷ் சவுத்ரியின் உறவினர்கள் 4 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தது.

இவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கடந்த டிசம்பர் 8இல் முக்கிய கொள்ளையர்கள் பதுங்கி இருப்பதாக சொல்லப்பட்ட ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம்ஜெயத்ராம் தாலுகா ராம்புராகலன் கிராமத்தில் உள்ள பாழடைந்த செங்கல் சூளை பகுதிக்கு தனிப்படை விரைந்தது. 

சம்பவத்தன்று அதிகாலை 2மணிக்கு கொள்ளையர்கள் பதுங்கி இருந்த இடத்திற்கு தனிப்படை சென்றது. அங்கு இருதரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார். 

மற்றொருஆய்வாளர் முனிசேகர் படுகாயமடைந்தார். முரண்பட்ட தகவல்கள்இந்த சம்பவம் குறித்து சென்னைபோலீசார் கூறும்போது, பதுங்கி இருந்த கொள்ளையர்களை பிடிக்கமுயன்ற போது அவர்கள் சரமாரியாக சுட்டதில் பெரியபாண்டியன் உயிரிழந்ததாக சொல்லப்பட்டது. 

அதே நேரத்தில் நாதுராமை துப்பாக்கி முனையில் பிடித்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் அவரை வேனில் ஏற்ற முயன்ற போது திடீரெனஅவரது துப்பாக்கியைப் பறித்துநாதுராம் சுட்டதில் பெரியபாண்டியன் இறந்தார் என்றும் கூறப்பட்டது.

ராஜஸ்தான் போலீசார் கூறுகையில், கொள்ளையர் பதுங்கி இருந்தவீட்டுக்கு வெளியே இருந்த நாதுராமின் ஆட்கள் துப்பாக்கியால் சுட்டனர்; இருதரப்புக்கும் சண்டை நடந்தது; இதில் பெரியபாண்டியன் இறந்தார் என்றனர். 

பெரியபாண்டியன் மட்டும் 9எம்.எம் ரக துப்பாக்கிஎடுத்து சென்றுள்ளார். மற்றவர்கள் அவருக்கு துணையாக சென்றுள்ளனர் என்றும் பெரியபாண்டியன் மரணம் குறித்து வெவ்வேறு முரண்பட்ட தகவல்கள் வெளிவந்தன.

கொள்ளையர்களைப் பிடிப்பதில் போலீசார் அலட்சியமாக செயல்பட்டு உள்ளனர்; உள்ளூர் போலீசாரின் உதவியை நாடவில்லை; இந்தி சரளமாக பேசக்கூடியவர்கள், துப்பாக்கிச் சுடுதலில்நன்கு பயிற்சி பெற்றவர்கள் தனிப்படையில் இல்லை; குறைந்தளவு போலீசார் சென்று உள்ளனர்; தமிழகம் போல் இல்லை- ராஜஸ்தான் போன்றசில வடமாநிலங்களில் காவல்துறையினர் மீது கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு நடத்துவது சகஜமான விஷயம்;

 அஜாக்கிரதையே இச்சம்பவத்திற்கு காரணம் எனவும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரியபாண்டியன் மனைவி பானுரேகா கூறுகையில் ‘‘கொள்ளையர்களை பிடிப்பதில் சிரமம்இருந்தால் வந்துவிடுங்கள் என்றேன்.

கொள்ளையர்களை பிடித்து விட்டுதான் வருவேன் என்று அவர் சொன்னார். அன்று காலை போன் வரவில்லை.
அப்போதே ஏதோ தவறுநடந்திருப்பதாக எனக்குத் தோன்றியது’’ என்கிறார்.

மூத்த மகன் ரூபன் கூறுகையில், ‘‘அப்பா எப்போதும் வேலையே முக்கியம் என இருப்பார். 
குடும்பத்துடன் புகைப்படம் கூட எடுத்து கொள்ளவில்லை. விவசாயம் என்றால் அவருக்கு உயிர். ஊராட்சிஒன்றிய பள்ளி கட்ட குழந்தைகளுக்காக 15 சென்ட் நிலத்தை தானமாக வழங்கியவர். நான் ஒருமுறை காவல்துறை அதிகாரியாக ஆக வேண்டும் என்றேன். 

அதற்கு அப்பா,நல்லா படித்து வேறு வேலைக்குப் போ’’ எனச் சொன்னார்’’ என்று நினைவு கூர்கிறார். 
21 குண்டுகள் முழங்க...சென்னையில் இருந்து வியாழனன்று மாலை 6 மணிக்கு விமானம்மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டஅவரது உடல், ஆம்புலன்ஸ் மூலம்அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள சாலைப்புதூருக்கு கொண்டுசெல்லப்பட்டது. 

வழிநெடுகிலும் கண்ணீர். 
அவரது மூவிருந்தாளி கிராமமே கதறி அழுதது. 

பெரியபாண்டியன் உடலை பார்த்ததும் அவரது மனைவி மற்றும் மகன்கள்கதறி அழுதனர். அவரது உறவினர்களும் சுற்று வட்டார கிராமமக்கள் என ஆயிரக்கணக்கானோர் அஞ்சலிசெலுத்தினர். 
கண்ணீர் மல்க அஞ்சலிசெலுத்தினார்கள்.அனைத்து கட்சித் தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.

இதன்பிறகு அவரது உடல் வீட்டில் இருந்து காவல் துறை அணிவகுப்புடன் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. 

அவரது தோட்டத்தில் 21 குண்டுகள் முழங்கஅரசு மரியாதையுடன் வெள்ளியன்று அதிகாலை 1.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

பெரியபாண்டியன் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழக் கூடாது .

வேறு மாநிலத்திற்கு அதுவும் கொள்ளையடிப்பதை தொழிலாகக் கொண்டவர்கள் உள்ள பகுதிக்கு செல்லும் போது அப்பகுதி காவல் துறையினரை அழைத்து போவதுதான் முறை.பாதுகாப்பும்.
அவர்கள் மூலம் ரகசியம் வெளியாகிவிடும் என எண்ணுவது நமக்கு ஆபத்து தான்.

அதைத்தான் பெரிய பாண்டியன்  படுகொலை உணர்த்துகிறது.
 கொஞ்சம் இருக்கும் நேர்மையான  காவல் அதிகாரி களையும் இழக்க தமிழகம்  தயாராக இல்லை.

======================================================================================
ன்று,
டிசம்பர் -16.
  • தாய்லாந்து ஐநா.,வில் இணைந்தது(1946)
  • நேபாள அரசியலமைப்பு சட்ட தினம்(1962)
  • பஹ்ரைன் தேசிய தினம்(1971)
  • கசக்கிஸ்தான் விடுதலை தினம்(1991)
======================================================================================
‘பெங்களூரு கண்ணாடிதான் வேண்டும்’ 


40,00,00,000 கோடிகள்  மதிப்பிலான நிலக்கரி ஊழல், அரசு நில ஒதுக்கீட்டு ஊழல்களில் மாட்டி, பாஜக கட்சியின் யோக்கியதையை தன்பங்குக்கு ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர். 

பின்னர் ஒருவழியாக அந்த வழக்குகளிலிருந்து தப்பினார். இப்போது, மீண்டும் கர்நாடக முதல்வர் கனவில் மிதந்து கொண்டிருக்கிறார். 

அதற்கு முதலில் கர்நாடகத்தில் பாஜக வெற்றிபெற வேண்டும். 
அதுவே நடக்குமா? என்று தெரியவில்லை.

ஆனால், முதல்வர் பதவிக்கு பாஜக-வில் வேறுயாரும் தனக்குப் போட்டியாக வந்துவிடக் கூடாது என்று இப்போதே முந்திக்கொண்டு புத்திசாலித்தனமாக பிரச்சாரத்தையும் தொடங்கி நடத்தி வருகிறார். அந்த பிரச்சாரத்திற்கு ‘மாற்றத்திற்கான யாத்திரை’ என்று பெயரும் சூட்டியுள்ளார். 

இரண்டு நாட்களுக்கு முன்பு எடியூரப்பா ரெய்ச்சூருக்கு சென்றபோது, அவரது மூக்குக் கண்ணாடிகாணாமல் போய் விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் எடியூரப்பா மிகுந்த அப்செட் ஆகிவிட்டாராம். 

கண்ணாடிதானே... ரெய்ச்சூரில்இருக்கும் ஏதாவது ஒரு கடையில் வாங்கிக் கொள்ளலாம் என்று அங்கிருந்த பாஜக-வினர் சமாதானப்படுத்தி இருக்கிறார்கள். 

ஆனால், ஏனோ எடியூரப்பா ‘வைதேகி காத்திருந்தாள்’ சினிமா பட ‘பெட்ரோமாக்ஸ் லைட்’ காமெடிபோல, ‘பெங்களூரு கண்ணாடிதான் வேண்டும்’ என்று நட்சத்திரஹோட்டல் ஒன்றுக்குள் உட்கார்ந்துகொண்டு அடம் பிடித்துள்ளார். 

அத்துடன் பெங்களூருவில்தான் அது கிடைக்கும் என்று சொல்லி, உடனடியாக வாங்கி வாருங்கள் என்று கூறியுள்ளார். 
அது எப்படி உடனே வாங்கிவர முடியும் என்றதற்கு, அதுதான் ஹெலிகாப்டர் இருக்கிறதே எடுத்துக் கொண்டு ஓடுங்கள் என்று உத்தரவிட்டுள்ளார்.

அவரது உதவியாளர் சந்தோஷூம் உடனடியாக ஹெலிகாப்டரில் பெங்களூருக்கு போய் கண்ணாடி வாங்கிக் கொண்டுவந்து தந்த பிறகே எடியூரப்பா அமைதி அடைந்துள்ளார். 

ஆனால் பாஜக-வினர் கொந்தளித்து விட்டனர்.எடியூரப்பாவின் ஆடம்பரத்தைக் கண்டு ஆவேசம் கொண்ட பாஜக-வினரே , சமூகவலைத்தளங்களில் ‘புறாவுக்குப் போரா? 
ஒரு கண்ணாடி வாங்க ஹெலிகாப்டரா?’ என்று எடியூரப்பாவின் ‘ஹெலிகாப்டர் கண்ணாடி’ கதையை விலாவாரியாக எழுதித் தள்ளிவிட்டனர். 

அதைப் பிடித்துக் கொண்ட எதிர்க்கட்சியினரும், எடியூரப்பா முதல்வராவதே சந்தேகம்; ஆனால் அதற்குள்ளாகவே இவ்வளவு ஆட்டம், ஆடம்பரம் என்றால், ஒருவேளை முதல்வராகி விட்டால் எப்படியெல்லாம் ஆட்டம் போடுவார்? என்று விமர்சனங்களால் துளைத்து எடுத்து விட்டனர். 

ஆனால், எடியூரப்பா யாருக்கும் பதில் சொல்லாமல் கமுக்கமாகி விட்டார்.
========================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?