இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

சனி, 30 டிசம்பர், 2017

டாக்சி தொழில் நுழையும் கார்பரேட்கள்.!

சென்னை, தில்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் மக்களின் நலன் கருதி பஸ், மின்சார இரயில், மெட்ரோ என அரசாங்கத்தால் சேவை வழங்கப்பட்டு வருகிறது. 
இப்படிப்பட்ட சேவை வழங்கினாலும் இந்த பெரு நகரங்களில் நாம் நினைத்த இடத்திற்கு நாம் நினைத்த நேரத்தில் செல்ல ஆட்டோ, டாக்ஸி போன்ற சேவையை நாம் பயன்படுத்துவது உண்டு. 

இன்றைக்கு ஆட்டோவை காட்டிலும் டாக்ஸியின் பயன்பாடு என்பது பல மடங்கு உயர்ந்துள்ளது. 
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 2016ல் டாக்ஸியின் சேவை இந்தியாவில் 60 சதவிகிதமாக இருந்தது. இந்த வளர்ச்சி என்பது கடந்த மூன்று வருடத்தில் ஏற்பட்டது தான்.
 இந்த வளர்ச்சிக்கு காரணம் என்ன? 
டாக்ஸி சேவை வழங்கும் நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தை மதிப்பில் ஏற்றத்துடன் இருப்பதை கண்டு பல நாடுகளில் ஆச்சரியப்படுகின்றனர். 
இதற்கான விடையை நாம் தேடுவதற்கு முன்பு டாக்ஸி என்ற சேவை பற்றிய வரலாற்றை பார்ப்போம்.

டாக்ஸி அல்லது கேப் என்று நாம் இன்று பயன்படுத்தும் சொல்லிற்கான அர்த்தம் 18ஆம் நூற்றாண்டுகளில் காப்ரியோலெட் ( CABRIOLET) எனப்படும் இரண்டு சக்கரங்களுடன் கூடிய குதிரை வண்டி பயன்பாட்டில் இருந்தது.
 அன்றைய காலக் கட்டத்தில் இந்த குதிரை வண்டியை மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு செல்ல பயன்படுத்தி வந்தனர். அப்படி பயன்படுத்துவதற்கு சேவை கட்டணமாக அந்த வண்டியை இயக்குபவர் குறிப்பிட்ட தொகையை வசூலிப்பார்.
 நாளடைவில் சேவை கட்டணத்தை மிக அதிகமாக வசூல் செய்வதாக குற்றச்சாட்டு வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 1891ல் ஜெர்மனைச் சேர்ந்த ப்ரீட்ரிச் வில்ஹெல்ம் குஸ்டாவ் ப்ரூன் என்பவர், முதல் டாக்ஸி மீட்டர் எனப்படும் கருவியை கண்டுபிடித்தார். 
இந்த கருவி மூலம் எவ்வளவு கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளோம் என்பதை கணித்து அதன் அடிப்படையில் சேவை கட்டணத்தை பெறுவார்கள். 
இந்த பெயரே நாளடைவில் கேப் டாக்ஸி, டாக்ஸி, கேப் என பல வகையில் மாறியது. அதன் பிறகு இந்த டாக்ஸி மீட்டர் நவீன தொழில் நுட்பத்துடன் கார்களில் பொருத்தப்பட்டு டாக்ஸி, கேப் என சேவைகளை வழங்கத் தொடங்கியது.

இந்தியாவில் டாக்ஸி என்ற சேவை ஆரம்பத்தில் விமான நிலையங்களில் தொடங்கியது. காரணம் வெளி நாடுகளில் இந்த சேவை என்பது நமது ஊர் ஆட்டோவை போல அனைவராலும் பயன்படுத்தும் வாகனமாக இருந்தது. 


வெளிநாட்டு இந்தியர்கள் மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட இந்த சேவை உள்நாட்டு மக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது. 

டாக்சிகளின் எண்ணிக்கை அதிகமான நிலையில் பெரு நகரங்களில் அவைகளை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கங்கள் செய்யாத நிலையில் எப்போதும் வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தும் நிலை உள்ளது. இந்த நிலையில் தான் ஓலா, உபேர் போன்ற நிறுவனங்கள் பயன்படுத்தி உள்ளன. 

வாகனத்தில் பயணம் செய்பவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே வாகனத்தைவரவழைக்க நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி இன்றைக்கு தொழிலில் ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவானதோடு பெரும் தொழில் நிறுவனங்களாகவும் வளர்ச்சி பெற்றன.
ஓலா, உபேர் நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அந்த நிறுவனங்கள் பயன்படுத்திய வியாபார யுக்தி தான். ஜப்பானின் சாப்ட் பேங்க், டிஎஸ்டி குளோபல், டைகர் குளோபல் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட பல சர்வதேச முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஓலா, உபேர் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளன. 

கூடவே எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளுடன் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு கார் வாங்க கடன் உதவி உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்து தங்கள் நிறுவனத்தில் டாக்ஸி ஓட்டுநர்களை இணைப்பதற்காக பல்வேறு சலுகைகளை அறிவித்தது. அதன் மூலம் இந்த நிறுவனத்தில் பல்லாயிரம் பேர் இணைந்தனர்.

சமீபத்தில் தில்லி அரசாங்கம் ஒரு அறிவிப்பை அறிவித்தது. தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் தனியார் நிறுவனங்கள் டாக்ஸி சேவையை அளிக்க டெண்டர் கோரப்பட்டது. 

இந்த டெண்டரில் பங்கு கொள்பவர் குறைந்தது 66 கார்கள் வைத்திருக்க வேண்டும் எனநிபந்தனை விதித்தது. ஓலா, உபேர் போன்ற பெரு நிறுவனங்களுக்கு சலுகை காட்டவே அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது. இதைப் போல ஆந்திரா சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டு துறைக்கும், ஓலா நிறுவனத்திற்கும் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தில் 2022க்குள் 25,000 பேருக்கு வேலை வாய்ப்பினை ஓலா டாக்ஸி நிறுவனம் ஆந்திர மாநிலத்தில் உருவாக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


இந்த திட்டத்தை கடந்த சில மாதத்திற்கு முன்பாக மாநில முதல் அமைச்சர் சந்திர பாபு நாயுடு கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.இந்தியாவில் தில்லிக்கு அடுத்தபடியான முக்கிய வர்த்தக நகரமான மும்பையில் ஓலா நிறுவனம் பேருந்து சேவை தொடங்க போவதாக அறிவித்தது. 

இந்த அறிவிப்பை அடுத்து ஓலா நிறுவனம் எப்படி பேருந்து சேவையை தொடங்க முடியும் என்று விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறது மும்பை போக்குவரத்துக் கழக நிர்வாகம். குறிப்பிட்ட பாதைகளில் பயணிகளுக்கு சேவையை வழங்க அரசுக்கு மட்டும் தான் சட்டப்படி அனுமதி உள்ளது. ஆனால் சட்டத்தை மீறி ஓலா நிறுவனம் செயல்படுகிறது. 

தற்போது மத்திய அரசாங்கம் மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின் மூலம் ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க ஏற்பாடு செய்து வருகிறது. 
நமது நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் பெருகி வரும் நிலையில் படித்து வேலை கிடைக்காத, படிக்க வசதியில்லாத இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பு அளிக்கும் தொழிலாக சாலைப் போக்குவரத்து தொழில் உள்ளது. 
அதையும் பன்னாட்டு நிறுவனங்கள் வசம் ஒப்படைத்து வாழ்வாதாரத்தை பறிக்க நினைக்கிறது மத்திய அரசு.

பிரான்ஸ் நாட்டில் சமீபத்தில் போராட்டம் நடைபெற்றது. இதற்கான காரணம் உபேர் டாக்ஸி நிறுவனத்தின் செயல்பாடே. தற்போது இந்தியாவில் எப்படி இந்த நிறுவனங்கள் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு உரிய பணத்தை தராமல், பல்வேறு காரணங்களை சொல்லி கிலோ மீட்டர் கட்டணத்தை குறைத்து வியாபாரம் நடத்தி வருவது போல் செயல்பட்டதால் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினர். 

இதை அடுத்து பிரான்ஸ் உள்துறை அமைச்சர் உபேர் நிறுவனத்திற்கு தடை விதித்தார். இதை போல பல நாடுகளில் உபேர் நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகின்றது. இப்போது இந்தியாவில் ஒவ்வொரு பகுதிகளிலும் ஓலா, உபேர் நிறுவனங்களுக்கான எதிர்ப்பு குரல் வலுத்து வருகிறது. 
சென்னை நகரம் இதில் முன்னிலையில் இருக்கின்றது. 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்நிறுவனங்களுக்கு எதிராக 30,000 தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். 
அதன் தொடர்ச்சியாக ஜனவரி 3ஆம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. 

மத்திய, மாநில அரசுகள் உரிய காலத்தில் தலையிடாவிட்டால் நாடு தழுவிய அளவில் மிக பெரிய போராட்டமாக மாறும் என்பதற்கு மற்ற நாடுகளில் நடந்ததே முன் உதாரணம்.
                                                                                                                                                     -பாரதி
நன்றி:தீக்கதிர்,

===================================================================================================================================

கந்து வட்டி வங்கிகள்,
இதுவரை இந்திய மாநில வங்கி( எஸ்.பி.ஐ.), வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களில் குறைந்த அளவு இருப்பு இல்லாதவர்களிடமிருந்து,  அபராதமாக மொத்தம் ரூ.1,771 கோடிகளை  வசூல் செய்துள்ளது.
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையாக ரூ.5,000 வைத்திருக்க வேண்டும் என்றும் அவ்வாறு வைத்திருக்க தவறினால் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது. 
இதன்படி பெருநகரங்களில் இருப்பவர்கள் குறைந்தபட்ச தொகையாக ரூ.5000-மும், 
நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.3000-மும், 
புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் ரூ.2000-மும், 
கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.1000-மும் வைத்திருக்க வேண்டும். 
இந்நடைமுறையை கடந்த  ஏப்ரல் 1 (முட்டாள்கள் தினம் )முதல் கொண்டுவந்தது .
அதன்படி  இருப்புப் பணம் வைத்திராத  பொதுமக்களின் வங்கி கணக்குகளில் இருந்து அபராதம் என்ற பெயரில் இதுவரை 1,771.77 கோடி ரூபாயை எஸ்.பி.ஐ., தன்னிசையாக எடுத்திருப்பதாக நிதித்துறை மக்களவையில் அறிவித்துள்ளது.
3000 கூட  இருப்பில் வைக்க இயலாதவர்களிடமிருந்து பணத்தை கறாராக கந்து வட்டிக்காரன் போல்  வசூலிக்கும் இந்த  வங்கிகள்தான்  30000கோடிகள் கடன் விஜய் மல்லையாவிடம் மண்டியிட்டு நிற்கின்றன.
=======================================================================================
ன்று,
டிசம்பர்-30.
விக்ரம் சாராபாய்


  • சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது(1922)

  • சுபாஷ் சந்திர போஸ், அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலை கொடியை ஏற்றினார்(1943)

  • உலகின் முதல் வண்ண தொலைக்காட்சி பெட்டி விற்பனைக்கு விடப்பட்டது(1953)

  • 'இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை' என அழைக்கப்படும், விக்ரம் சாராபாய்,காலமானார் (1971)
========================================================================================
                                                சாமிகளிலும் அம்பானிகள் உண்டு.