கலக்கல் நாட் குறிப்பு.
சேகர்ரெட்டியின் டைரி சிக்கிவிட்டது.
ஓபிஎஸ் என்று அழைக்கப்படுகிற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அவரது பினாமிகளும் தமிழகத்தின் அமைச்சர் பெருமக்களும் சேகர் ரெட்டியிடமிருந்து எவ்வளவு வாங்கினார்கள் என்பது பற்றிய குறிப்புக்களை அம்பலப்படுத்தியிருக்கிறது அந்த டைரி.தமிழக அரசியல் களத்தில் - குறிப்பாக அதிமுகவில் எத்தனை செல்வாக்கு படைத்த நபராக மணல் மாஃபியா சேகர் ரெட்டி வலம் வந்திருக்கிறார் என்பதை அந்த டைரிக் குறிப்புகளை வெளியிட்டதன் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள் தி வீக் பத்திரிகையின் சென்னை செய்தியாளர் லட்சுமி சுப்ரமணியன் மற்றும் டைம்ஸ் நவ் செய்திச் சேனலின் செய்தியாளர் சபீர் அகமது ஆகியோர்.
தேனி மாவட்டத்தின் பெரியகுளத்தில் அமைந்துள்ள ரோஸி கேன்டீனிலிருந்து தனது செய்திக்கான ஆய்வை துவக்குகிறார் செய்தியாளர் லட்சுமி.
“இது ஓபிஎஸ் ஐயாவின் கேன்டீன். அவர் ஒரு நல்ல மனிதர்; தனது கடும் உழைப்பின் காரணமாக உயர்ந்திருக்கிறார்” என்று அங்கிருப்பவர்கள் கூறியது முதல் ஓபிஎஸ்சுக்கு கோடிக்கணக்கில் தான் வாரி வழங்கியதாக டைரியில் சேகர் ரெட்டி குறிப்பிட்டிருப்பது வரை விரிவாக பதிவு செய்திருக்கிறார். “நல்ல மனிதர்” அப்பட்டமாக அம்பலமாகியிருக்கிறார்.
இந்த டைரி சேகர் ரெட்டியிடமிருந்து வருமான வரித்துறையால் ஒரு சோதனையின்போது கைப்பற்றப் பட்டது. தொழில் அதிபர் என்ற பெயரில் வலம் வந்த சுரங்க மாஃபியா கும்பல் தலைவனான சேகர் ரெட்டி, ஓபிஎஸ்சுக்கு மட்டுமல்ல, தமிழக அதிமுக அமைச்சரவையின் சரிபாதி அமைச்சர்களுக்கு லட்சக்கணக்கில்அள்ளிக்கொடுத்திருப்பதை டைரிக் குறிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
டைரியின் ஐந்து பக்கங்கள் முக்கியமானவை. 2016 ஏப்ரலுக்கும் நவம்பருக்கும் இடையில் ஓபிஎஸ் உள்பட அதிமுகவின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அவர்கள் சார்ந்த பினாமிகளுக்கு மொத்தம் ரூ.48 கோடி அளவிற்கு சேகர் ரெட்டி வழங்கி யிருக்கிறார் என்பது அந்தப் பக்கங்களின் மூலம் தெரிய வருகிறது.
“தர்ம யுத்தம்” நடத்திய ஓபிஎஸ் பெயர் இந்த லஞ்சப் பட்டியலில் அதிகமான முறை இடம்பெற்றிருக்கிறது.இந்த டைரி குறிப்புகளை வருமான வரித்துறை ஒருபக்கம் விசாரித்துக் கொண்டிருக்கிறது.
எனினும் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.
ஆனால் தமிழகத்தின்ஆளும் வர்க்கத்திற்கும் மாஃபியா கும்பல்களுக்கும் இடையே உள்ள தொடர்பை இந்த ரகசிய டைரி வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இந்த டைரி குறித்து சேகர் ரெட்டியிடம் கேட்டபோது, எதிர்பார்த்தபடியே, அவர் மறுத்தார். “நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்? நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்? முதலில் இந்த டைரி யாருடையது என்று சொல்லுங்கள்... எனக்கு டைரி எழுதும் பழக்கம் எதுவும் இல்லை...” என ஆவேசப்பட்டார்.
கடந்த ஆண்டு பணமதிப்பு நீக்கத்திற்கு பிறகு கறுப்புப் பண விவகாரம் எழுந்தபோது பரபரப்புச் செய்திகளுக்குள் வந்தவர் சேகர் ரெட்டி. 2016 டிசம்பர் 9 அன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சேகர் ரெட்டியின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
பழைய ரூபாய் நோட்டுக்கள் 96.89 கோடி அளவிற்கு கைப்பற்றினார்கள்.
அதில் யாருக்கும் கிடைக்காத புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மட்டும் ரூ.9 கோடிக்கும் மேலாக சிக்கின. இதுதவிர, 100 கிலோவுக்கும் அதிகமாக தங்கம் கைப்பற்றப் பட்டது.
இதையடுத்து விசாரணைகளுக்குப் பிறகு 2017 மார்ச்சில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் ரெட்டி கைது செய்யப்பட்டார். பண மோசடி வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டன.
தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
சேகர் ரெட்டியைத் தொடர்ந்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகனராவ்வின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
தலைமைச் செயலக அலுவலக அறையிலேயே சோதனை நடந்த போது, அடுத்த அறையில் முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் கமுக்கமாக வீற்றிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
இத்தகைய பின்னணியில், ஊடகங்களின் கையில் சிக்கியுள்ள சேகர் ரெட்டியின் டைரி, ஓபிஎஸ் பெயரைக் குறிப்பிட்டும் அமைச்சர்கள் சிலரைக் குறிப்பிட்டும் தெளிவான விவரங்களை தந்துள்ளது. ஓபிஎஸ் பெயரில் ஐந்து முறை பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
அவரது செயலாளர் ரமேஷ் பெயரிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ‘பெரியவர்’ என்ற பெயரிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
பெரியவர் என்பது ஓபிஎஸ்சை குறிக்கிறது என அர்த்தம் கொள்ள முடியும்.
அதுகுறித்து டைரியில் உள்ள விபரம் வருமாறு:
n ஓபிஎஸ் ரமேஷ் - ரூ.50 லட்சம் - 14.7.2016
n ஓபிஎஸ் ரமேஷ் - ரூ.25 லட்சம் - 20.7.2016
n எம்.பெரியவர் /ரமேஷ் - ரூ.3.5 கோடி - 31.8.2016
n ஓபிஎஸ் ரமேஷ் - ரூ.3.7 லட்சம் - 28.10.2016.
n ஓபிஎஸ் வழக்கறிஞர் - ரூ.3.7 லட்சம் - 28.10.2016
n ஓபிஎஸ் ரமேஷ் கார்டன் செலவுகள் - ரூ.20 லட்சம் - 29.10.2016
n பெரியவர் எம். - ரூ.25லட்சம் - நவம்பர் 2016
இப்படியாக விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இது தவிர வழக்கறிஞர் காசி என்பவர் பெயரில் ரூ.1 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் மருமகன் பெயர் காசிநாதன் என்பதும் அவர் வழக்கறிஞர் என்பதும் கவனிக்கத்தக்கது.
சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டபோது, ஊடகங்களில், சேகர்ரெட்டியும் அன்றைய முதலமைச்சர் ஓபிஎஸ்சும் திருப்பதியில் மொட்டைத் தலைகளோடு சிரித்துக் கொண்டே காட்சியளித்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அப்போது ஓபிஎஸ்சுக்கும் சேகர் ரெட்டிக்கும் என்ன தொடர்பு என்று கேட்டபோது, “நான் திருப்பதி தேவஸ்தான வாரியத்தில் உறுப்பினராக இருந்தேன். அந்த சமயம் ஓபிஎஸ் திருப்பதி கோவிலுக்கு விஜயம் செய்தார். வாரிய உறுப்பினர் என்ற முறையில் அவரை அழைத்துச் சென்று கோவிலை சுற்றிக்காட்டினேன். அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அதைத் தவிர அவருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று சேகர் ரெட்டி பதில் அளித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
யார் அந்த அமைச்சர்கள்?
சேகர் ரெட்டியின் டைரியில் ஏராளமான தனிநபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அத்தனை பேருக்கும் தங்கமும், வெள்ளியுமாக ஏராளமான பரிசுப் பொருட்களை அவர் வழங்கியிருப்பது குறித்து வைக்கப்பட்டிருக்கிறது.
தனிநபர்கள் தவிர, “எம்” என்று ஆங்கிலத்தில் எழுதி வட்டமிடப்பட்டு பல பெயர்கள் இடம்பெற்றுள்ளன. எம் என்பது மினிஸ்டர் எனக் குறிக்கிறது. தமிழக அமைச்சர்கள் என்று பொருள் கொள்ள முடியும். அந்த அடிப்படையில் பல அமைச்சர்கள் அவரிடமிருந்து பணம் வாங்கியிருக்கிறார்கள். 2016 நவம்பரில் 2 இடங்களில் “எச்எம்” என்றும் “ஹெல்த்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கரை குறிக்கிறது என வருமான வரித்துறை சந்தேகப்படுகிறது. இதன் பின்னணியில்தான் 2017 ஏப்ரலில் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள், அலுவலகங்கள், குவாரிகள் என அனைத்திலும் அதிரடி சோதனை நடத்தியது. ஹெல்த் என்ற பெயரில் ரூ.5 கோடியும், எச்.எம். என்ற பெயரில் ரூ.1கோடியும் கொடுத்ததாக சேகர் ரெட்டி குறிப்பிட்டிருக்கிறார்.
டைரியில் எம் என்று குறிப்பிடப்பட்டு இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த நபர்களது பெயர்கள் வருமாறு:
n எம் - தங்கமணி தினேஷ், இபி - ரூ.50லட்சம் - 17.4.2016
n எம் - தங்கமணி - ரூ.50 லட்சம் - 17.6.2016
n எம் - ரெவின்யூ பிஎஸ்ஓ - ரூ.25 ஆயிரம் - 22.6.2016
n எம் - சுற்றுச்சூழல் பிஏ ரூ.2லட்சம் - 30.8.2016
n எம் - ரெவின்யூ எக்ஸ் பிஎஸ்ஓ பெருமாள் - ரூ.10 ஆயிரம் - 28.10.2016
n எம் - ஐ/ரமேஷ் - ரூ. 1கோடி - 31.10.2016 (இது தொழில்துறை அமைச்சர் எம்சி சம்பத்தை குறிக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது)
n கிருஷ்ணசாமி எம்எல்ஏ - ரூ.5 லட்சம் - 21.6.2016 (இவர் புதிய தமிழகக் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி என்று சந்தேகிக்கப்படுகிறது)
n எம். திண்டுக்கல் லோக்கல் - ரூ. 5லட்சம் - 27.6.2016 (இவர் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் என்று சந்தேகிக்கப்படுகிறது)
இதர குறிப்புகள்
இவை தவிர மன்னார்குடி மகாதேவன் என்ற பெயரில் 28.6.2016ல் ரூ.10லட்சம் குறிக்கப்பட்டுள்ளது. இவர் சசிகலாவின் உறவினர் ஆவார். இந்த ஆண்டு ஏப்ரல் 15 அன்று இவர் இறந்துவிட்டார்.
மற்றொரு பெயராக “பிஓஓ”(POO) என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு ரூ.1.5 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்த பூங்குன்றனின் பெயராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதவிர கார்டன் என்று குறிப்பிடப்பட்டுள்ள இடம் போயஸ் கார்டனாக இருக்கும் எனத் தெரிகிறது. இவை தவிர இன்னும் ஏராளமான விபரங்கள் சேகர் ரெட்டியின் ரகசிய டைரியில் இடம்பெற்றுள்ளன.
தமிழக அரசியல், பல்வேறு புயல்களில் சிக்கியுள்ள நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக அக்கட்சியை கைப்பற்றியிருக்கும் ஓபிஎஸ் மற்றும் அவரது
சக அமைச்சர்களுக்கும் சேகர் ரெட்டிக்கும் இடையிலான தொடர்புகளை அம்பலப்
படுத்தியிருக்கும் இந்த ரகசிய டைரி தமிழக அரசியலை கலக்கவுள்ள அடுத்த புயலாக கிளம்பியிருக்கிறது.
=======================================================================================
டிசம்பர்-12.
- பாரதியார் பிறந்த தினம்(1882)
- முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி பிறந்த தினம்(1935)
- யூனிசெப் நிறுவனம் அமைக்கப்பட்டது(1946)
- கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி இறந்த தினம்(2004)