தீக்"கதிர்"

கடந்த 10 ஆண்டுகளில் கோடை காலத்தில் இந்தியாவின் நிலை குறித்த புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இதில் பல இடங்களில் தீ எரிவது புள்ளிகளாக காட்சி அளிக்கின்றன.

இந்த தீ புள்ளிகள் கடும் கோடை வெயில், அதனால் கருங்கார்பன் துகள்கள், புவி வெப்பமயமாதல் அதிகரிப்பால் ஏற்படும் மாசுபாட்டை குறிப்பதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தீ புள்ளிகள் அதிக வெப்பத்தால் ஏற்படும் காட்டுத்தீயை குறிப்பதாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது. 

நாசா வெளியிட்டுள்ள புகைப்படத்தின்படி, மத்திய இந்திய மாநிலங்களான உ.பி., ம.பி., மகாராஷ்டிரா, சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களிலேயே அதிக தீ புள்ளிகள் காணப்படுகின்றன. தென் மாநிலங்கள் சிலவற்றில் குறைந்த அளவு தீப்புள்ளிகள் காணப்படுகின்றன.


கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு, ஏற்படும் இந்த காட்டுத்தீயால் வெளியாகும் புகையால் காற்று மாசுபாடு அதிகரிக்கிறது. வேலைக்கு போதிய ஆட்கள் கிடைக்காததாலும், 
விளை பொருட்களுக்கு ஏற்ப விலை கிடைக்காததால் பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் விவசாயிகளே
 விளை நிலத்திற்கு தீ வைத்த சம்பவங்கள் அதிகம் நடந்ததாலும் இந்த தீ புள்ளிகள் அதிகமாக காணப்படுவதாலும் இப்படி நடக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
புதுயுகம் பிறக்கட்டும்.

“மேதினம் என்பது, உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற சர்வதேச ஒருமைப்பாட்டை பிரகடனப்படுத்துவதோடு நின்றுவிடக்கூடாது. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள உழைக்கும் வர்க்கம் தனது திட்டவட்டமான புரட்சிக் கடமைகளுக்கு தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் நாளாக அமைய வேண்டும்” என்று தோழர் லெனின் கூறினார்.
தொழிலாளர்களின் புனித நாளாக மேதினத்தை குறிப்பிடுவது மட்டுமல்ல; அந்தந்த நாடுகளின் ஜீவாதாரமான தேசிய அரசியல் கோரிக்கைகளுக்கான போராட்டத்துடன் மேதினம் இணைக்கப்பட வேண்டும் என்றும் தோழர் லெனின் கூறுகிறார்.
10 மணிநேரமும் 8 மணிநேரமும்
ஞாயிறு தோன்றி மறையும் நேரம் வரை மட்டுமல்ல அதற்கும் மேல் வெள்ளி நிலவு நடுவானைத் தொடும் வரையிலும் வேலை செய்ய வேண்டும் என்ற முதலாளிகளின் வெறிக் கூச்சலுக்கும், கொலைவெறித் தாக்குதலுக்கும் மத்தியில் எழுந்தது தான் அதிக கூலி வேண்டும், நியாயமான வேலை நேரமாக குறைக்க வேண்டும் என்ற முழக்கம்.
1806 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத்தில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். போராட்டத்திற்கு தலைமையேற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்ற போது நாளொன்றுக்கு 19 முதல் 20 மணி நேரம் வேலை வாங்கப்பட்ட தகவல்கள் வெளியானது.
1820 முதல் 1830 களில் பிலடெல்பியா நகர இயந்திர தொழிலாளர் சங்கம் தான் முதன் முதலில் 10 மணி நேர வேலை என்ற கோஷத்தை முன் வைத்தது. அதே நகரில் 1827ல் கட்டிட தொழிலாளர்கள் சங்கம் இந்த கோரிக்கைக்காக வேலைநிறுத்தத்தை நடத்தியது. இதன்பின்பு தான் 10 மணி நேர வேலை என்ற கோரிக்கை அனைத்து தரப்பினராலும் பிரதானமாக பார்க்கப்பட்டது.
நியூயார்க் நகரில் ரொட்டி தொழிலாளர்கள் இதே காலத்தில் சுமார் 20 மணி நேரம் எகிப்திய அடிமைகளை விட கேவலமான முறையில் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டனர். 1837ல் வேன்பியுரன் தலைமையிலான அரசாங்கம் பத்து மணி நேர வேலைநாள் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இது போராடிய தொழிலாளர்களின் மத்தியில் புதிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுத்தது. பல தொழிற்சாலைகளில் இக்கோரிக்கை வெற்றியடைய, தொழிலாளர்கள் உடனே 8 மணி நேர வேலை கோஷத்தை முன் வைத்தனர்.
8 மணி நேர வேலைக்கான கோஷத்தை முன் வைத்து வளரும் நாடுகளில் போராட்டங்கள் வெடித்தன. ஆஸ்திரேலியாவில் கட்டிட தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்ற கோரிக்கையை முன் வைத்து 1858ல் போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றனர்.
1866ல் தேசிய தொழிற்சங்கத்தின் முதல் மகாநாடு “அமெரிக்கா முழுமைக்கும் 8 மணி நேர வேலைநாள் என்பதை சட்டமாக அறிவிக்க வேண்டும். அப்போது தான் முதலாளித்துவ அடிமைத்தனத்தில் இருந்து நாட்டின் உழைப்பு சக்தியை விடுவிக்க முடியும். இந்த மாபெரும் பலனை அடைய நாம் நம்முடைய சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டிப் போராட தீர்மானிக்கிறோம்” என தீர்மானத்தை நிறைவேற்றியது.
இந்த 8 மணி நேர இயக்கத்தைப் பற்றி மாமேதை காரல் மார்க்ஸ் கூறும் போது “அமெரிக்க ஐக்கிய குடியரசின் ஒரு பகுதியை அடிமைத்தனம் பிடித்திருக்கும் வரையில் எந்த விதமான சுயேச்சையான தொழிலாளர் இயக்கமும் முடக்கப்பட்டே இருந்தது. தொழிலாளர்களில் ஒரு பகுதி கறுப்பு இனத்தவர் என முத்திரையிடப்பட்டிருக்கும் வரையில் வெள்ளைத் தொழிலாளர்கள் தங்களுக்குத் தாங்களே விடுதலையை தேடிக் கொள்ள முடியாது” எனவே அனைத்து பகுதி தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என மார்க்ஸ் முழக்கமிட்டார்.
அதனால் தான் இரண்டாவது கம்யூனிஸ்ட் அகிலம், 1889ல் நடைபெற்ற போது “மே முதல் நாள் என்பது தொழிலாளர்கள் தங்கள் அரசியல் மற்றும் தொழிற்சங்கத்தின் மூலம் கொடுக்க வேண்டிய முக்கிய அரசியல் கோரிக்கை 8 மணி நேர வேலைக்கான போர்க் குரலாக ஒலிக்க வேண்டிய தினம் என்று அறிவிக்கப்பட்டது”.

சிகாகோவில்
இதற்கு முன்பு 1884 சிகாகோ நகரில் நடைபெற்ற தொழிலாளர் மாநாட்டில் 1886 மே முதல் நாளை 8 மணி நேர வேலைக்கான தினமாக அறிவிக்க தயாரிப்பு பணிகளை துவக்கிடுவது என்ற அறைகூவலுக்கு இணங்க அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. அந்த மூன்றாண்டுகளும் போராட்டக் களமாக காட்சி அளித்தது.
வேலை நிறுத்தங்கள் குறித்து இந்தியாவில் கார்ப்பரேட் முதலாளிகளும், ஊடகங்களும் தவறான பிரச்சாரத்தை பரப்பி வருகின்றன. 1881ல் 500 வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. 1886ல் 11562 ஆக உயர்ந்தது. வேலைநிறுத்தத்தின் மையமாக சிகாகோ நகரமும், இதர பகுதிகளில் குறிப்பாக நியூயார்க், பால்டிமோர், வாஷிங்டன், மில்வாக்கி, சின்சிநாட்டி, செயிண்ட் லூயிஸ், பிட்ஸ்பர்க், டெட்ராய்ட் ஆகிய நகரங்களில் அதிக அளவில் பங்கேற்றது.
1886 மே 1ஆம் தேதியன்று சிகாகோ நகரம் தனது வரலாற்றில் “ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் கருவிகளை கீழே வைத்துவிட்டு தெருவுக்கு இறங்கி தங்களது மாபெரும் வர்க்க ஒற்றுமையை காட்டிய காட்சியை கண்டது.
1887 நவம்பர் 11ம் தேதி இந்தப் போராட்டத்தின் முன்னணி வீரர்களான ஆல்பர்ட் பார்ஸன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், ஜார்ஜ் எங்கல், அடால்ஃப் பிஸ்ஸர் ஆகிய நால்வரும் தூக்கிலிடப்பட்டனர். முதலாளித்துவ நீதிமன்றம் தொழிலாளி வர்க்க தலைவர்கள் நால்வரின் உயிரை பலி கொண்டது. “ எங்களது வார்த்தைகளைவிட எங்களது மௌனம் அதிகமாகப் பேசும் காலம் கண்டிப்பாக வரும் ” என்று ஆகஸ்ட் ஸ்பைஸின் இறுதி வார்த்தைகளை உதிர்த்தார். பல தொழிலாளர்கள் காவல்துறையின் துப்பாக்கி சூட்டிற்கு தங்களது உயிரையும், குருதியையும் தந்தனர். போர்க்குணமிக்க, புரட்சிகரமான தியாகத்தின் பாரம்பரியமான தினமாக மேதினத்தை உலகம் முழுவதும் அனுஷ்டித்து வருகிறது,
மேதினம் குறித்து மாமேதை ஏங்கல்ஸ் கூறும் போது “உழைக்கும் வர்க்கத்தின் பிரதான விருப்பம் சமூக மாற்றத்தின் மூலம் வர்க்கப் பாகுபாடுகளை அழித்தொழிப்பது, மற்றும் உலகம் முழுவதும் எல்லா மக்களுக்கும் அமைதியை ஏற்படுத்துவது ஆகும். மேதின ஆர்ப்பாட்டங்கள் எட்டு மணி நேர வேலை நாளுக்காக மட்டுமல்லாமல் மேற்கூறிய விஷயங்களுக்கும் பயன்பட வேண்டும்”.
புரட்சியின் ஆயுதமாக
ரஷ்யப் புரட்சி இயக்கம் மேதினத்தை பெரும் ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டது. மேதினத்தை லெனின் ஓர் ஆர்ப்பாட்ட, போராட்ட தினமாக ரஷ்ய தொழிலாளர்களுக்கு தன்னுடைய ஆரம்ப கால ரஷ்ய புரட்சி இயக்க நடவடிக்கையின் போதே அறியச் செய்தார். “ ரஷ்ய மக்களின் அரசியல் விடுதலைக்கான அடக்க முடியாத போராட்டத்திற்கும் பாட்டாளி வர்க்க மேம்பாட்டிற்கும், சோஷலிசத்திற்கான வெளிப்படையான போராட்டத்திற்கும் மக்களை அணி திரளச் செய்வதற்கான ஒரு சந்தர்ப்பம் ஆகும்” என்றார்.
இன்றைய இந்தியாவின் ஆட்சியாளர்கள் ஏகாதிபத்திய ஆதரவு, ஏகபோக ஆதரவு, நிலபிரபுத்துவ ஆதரவுக் கொள்கைகளோடு, உழைக்கும் மக்களின் மீது கடுமையான தாக்குதலை தொடுத்து வருகிறது. தொழிற்சங்க உரிமைகளை முடக்கும் நடவடிக்கைகளில் படிப்படியாக ஈடுபட்டு வருகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் சேவகர்களாக ஆளும் வர்க்கம் இருந்து வருகிறது.
இந்தியாவில் ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை தருவேன் என்று சொன்ன மோடியின் ஆட்சியில், இன்று ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு கூட வேலை தரவில்லை. என்பது மட்டுமல்ல அணிதிரட்டப்பட்ட – அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களில் கூட ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் நிரந்தரமற்ற ஊழியர்களாக – அத்துக்கூலிகளாக பணியாற்றி வருகிறார்கள். வேலை என்பது நிரந்தரமற்ற நிலையில் 8 மணி நேர வேலை என்பதை தொழிலாளர்களே ஓவர்டைம் வேலை செய்ய மனரீதியாக ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். வரலாற்றின் சக்கரத்தை திருப்பினால் இதே நிலை ஒரு நூற்றாண்டுக்கு முன்னும் இருந்தது.
இந்தியாவில் நாளொன்றுக்கு சுமார் 84 கோடி மக்கள் வெறும் 20 ரூபாய் வருமானத்தில் வாழ்ந்து வரும் நேரத்தில் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்கள் 50 சதவீதத்திற்கும் மேல் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இந்தியாவின் டாப் டென் பணக்காரர்கள் எல்லாம் உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் 10 இடங்களுக்கு போட்டி போட்டு வளர்ந்து கொண்டு இருக்கின்றனர்.

எனவே தான் மேதின முழக்கங்களில் கூட 8 மணி நேர வேலைநாளுக்கான கோரிக்கை மட்டுமல்லாது “உலகத் தொழிலாளர் ஒற்றுமை, எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஓட்டுரிமை, கூட்டம் கூடும் உரிமை, பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றை சட்டப்பூர்வமாக்குவது. சட்டவழியில் மக்களுக்கான அரசை தேர்ந்தெடுப்பதும், மக்களுக்காக செயல்படுவதை உறுதி செய்வதும், விவசாயிகளுக்கு சமுதாயத்தின் மற்ற பகுதியினருடன் முழுமையான சம அந்தஸ்து வழங்கப்படுவதை சட்டப்பூர்வமாக்குவது. நாட்டுப்புறத்தில் உள்ள அடிமைத்தனங்கள் ஒழிக்கப்பட வேண்டும், ஏகாதிபத்திய போர் மற்றும் காலனி ஆதிக்க எதிர்ப்பு, தெருக்களில் ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமை, வெளிநாட்டினராக இருந்தாலும் சம வேலைக்கு சம ஊதியம், அரசியல் மற்றும் பொருளாதார ஸ்தாபனம் கட்டும் உரிமை போன்றவையும் இணைக்கப்பட வேண்டும்” என சுருங்கச் சொன்னால் மிகுந்து வரும் ஜனநாயக புரட்சியின் கோரிக்கைகள் மேதினத்தில் எழுப்பப்பட வேண்டும் என்றார் லெனின்.
ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு அவர் சொன்ன அம்சங்கள் இன்றும் அப்படியே உலகமய சூழலுக்கு பின்னால் இந்திய தொழிலாளி வர்க்கமும் கடைப்பிடிக்க வேண்டிய கோஷங்களாக உள்ளது என்றால் மிகையாகாது.
இரண்டாவது உலக யுத்த காலத்தில் அதற்கு எதிரான யுத்த எதிர்ப்பு வேலைநிறுத்தத்தை 1939 அக்டோபர் 2ம் தேதி அன்றைய பம்பாயில் 90000 தொழிலாளர்கள் பங்கேற்போடு கம்யூனிஸ்டுகள் தலைதாங்கி நடத்தி காட்டினார்கள். உலக தொழிலாளர்கள் இயக்கத்திலேயே இரண்டாம் உலக யுத்தத்திற்கு எதிராக நடைபெற்ற முதல் யுத்த எதிர்ப்பு வேலைநிறுத்தமாகும். இப்படி அன்றிலிருந்து உலக சமாதானத்தை வலியுறுத்தி சர்வதேச தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற முழக்கத்தின் படைப்பிரிவாக இந்திய மண்ணிலும் செங்கொடியின் புதல்வர்கள் மேதினத்தை உழைக்கும் மக்களின் உரிமை பிரகடன நாளாக நடத்தி வருகிறார்கள்.
இதோ நம் கண் முன்னே தொழிலாளி, விவசாயி, விவசாயத் தொழிலாளி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாதர்கள், மாணவர்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், தலித்துகள் மற்றும் பழங்குடியின மக்களின் போராட்டங்கள் வீரியத்தோடு பரந்து விரிந்து நடைபெற்று வருகிறது. நம்பிக்கை விதைக்கிறது. மகாராஷ்டிரா விவசாயிகளும், குஜராத்தில் தலித்துகளும், கர்நாடக ஆஷா தொழிலாளர்களும், தமிழகத்தின் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டங்களும், 18 கோடி இந்திய தொழிலாளிகளின் வேலைநிறுத்தமும் வர்க்க ஒற்றுமையை பறைசாற்றிய சமீபத்திய உதாரணங்கள். அடிப்படை வர்க்கங்களின் கோபவேச கனல் முன்னிலும் வேகமாக சுழற்றி அடித்து கிளம்பியுள்ளது. இந்த பிரிவினரின் கோரிக்கை முழக்கங்கள் எல்லாம் ஒன்றிணையும் திருநாளாக மேதின திருவிழா மாறட்டும்.

-செ.முத்துக்கண்ணன்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------








இந்தியாவிலேயே" மே"தினத்தை 
தொழிலாளர் தினத்தை 
கொண்டாட்ட நாளாக அறிவித்து 
பொது விடுமுறை 
அளித்தவர் கலைஞர்தான் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?