புதன், 2 மே, 2018

கேள்விக்கு பதில் என்ன?

மோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா? 
சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56"பலூன் தற்போது கவர்சியைத்தவிர வேலைக்காகாது என்று மக்கள் தெரிந்து கொண்டதால் காற்று இறங்கிக்கொண்டு இருக்கிறது.
ஊடகங்கள் தொடர்ந்து மோடி மாயை பலூனை  காற்று ஊதி பெரிதாக்கிக்கொண்டிருந்தாலும் மக்கள் அவநம்பிக்கை போட்ட ஓட்டை வழியே காற்று ஊடங்களின் உழைப்பு வீணாகிக்கொண்டுதான் உள்ளது.
வரும் 2019 தேர்தலுக்கான செமி ஃபைனல் இது என்று பரபரப்பை கூட்டுகிறார்கள். மோடி டெல்லியை விட்டுக் கிளைம்பி விட்டார், பெங்களூர் அடைந்து விட்டார், இதோ விமானத்திலிருந்து இறங்குகிறார் என மோடியின் அசைவுகளை எல்லாம் மாற்றி மாற்றி காண்பிக்கிறார்கள். ஊடகங்கள் பச்சையாக காவி மயமாகி விட்டது. தனிநபர் வழிபாட்டை மக்களுக்குள் செலுத்துவதே அவைகளின் ஊடக தர்மமாய் இருக்கிறது.
 இப்படிபட்ட ஊடகங்கள் தூக்கிப்பிடித்தலில் பாஜகவின்  56 இஞ்ச் வேங்கை களத்தில் இறங்குகிறது.
மோடி என்ன பேசப் போகிறார், மக்களை தன் பேச்சால் எப்படி ஈர்க்கப் போகிறார், தேர்தல் முடிவுகளில் எவ்வாறு செல்வாக்கு செலுத்தப் போகிறர் என ஆள் ஆளுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகளில் மண்டை உடைத்துக்கொண்டு இருக்கிறார்கள். 
கர்நாடகா முதல்வர் சீதாராமையா பெங்களூரில் மோடி கால் வைப்பதற்கு முன்பே அவருக்கான அஜெண்டாவைத் தீர்மானித்து விட்டார். 

“எங்கள் கர்நாடகா உங்களை வரவேற்கிறது. தேர்தல் பிரச்சாரம் செய்ய தாங்கள் வருவதாக அறிகிறேன் எனச் சொல்லி சில கேள்விகளை அவரிடம் கேட்டு இருக்கிறார். அதற்கு மோடி தனது பிரச்சாரத்தில் பதில் சொல்வாரென எதிர்பார்ப்பதாக"
 சொல்லி இருக்கிறார்.
1. எல்லோருக்கும் 15 லட்சம் தருவதாக சொல்லி இருந்தீர்கள். 
பிறகு தேர்தலுக்காக சும்மா சொன்னது என்றீர்கள். வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்குறுதி கொடுத்தீர்கள். பிறகு பக்கோடா விற்கச் சொன்னீர்கள். 
கருப்புப் பணத்தை பிடிக்கப் போகிறோம் என்று நீங்கள் சாமானிய மக்கள் அனைவரையும் துன்புறுத்தினீர்கள். எதையும் பிடிக்கவில்லை. 
இப்போது இங்கு வந்து ‘வளர்ச்சி’ என்னும் லாலிபாப் கொடுக்கப் போகிறீர்களா?
2. கார்ப்பரேட்களுக்கு 2 லட்சத்து 71 ஆயிரம் கோடி தள்ளுபடி வழங்கி இருக்கிறீர்கள். 
விவசாயிகளுக்கு உங்கள் வெறும் பேச்சை மட்டுமே வழங்கிக் கொண்டு இருக்கிறீர்கள். 
விவசாயிகளின் பிரச்சினையை முக்கியமாகக் கருதி என்ன செய்து இருக்கிறீர்கள்?
3. ஊழல் கறை படிந்த எடியூரப்பாவோடு கர்நாடகாவில் பொதுக் கூட்டங்களில் நீங்கள் சேர்ந்து கலந்து கொள்ள விரும்பாததாக ஊடகங்களில் முன்பு சொல்லப்பட்டன. 
இப்போது அந்த எடியூரப்பாதான் கர்நாடகா பிஜேபியின் முகமாக இருக்கிறார்.
 பொதுக் கூட்டங்களில் அவர்தான் பிஜேபியின் முதல்வர் வேட்பளர் என அறிவிக்கப் போகிறீர்களா?
4. ஜனார்த்தன ரெட்டி குடும்பத்தாருக்கு தேர்தலில் 8 சீட்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 
அவர்களையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஊழலுக்கு எதிராக என்ன பேசப் போகிறீர்கள்?
5. கர்நாடகாவில் பாலியல் வல்லுறவு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, சட்டசபையில் ஆபாச படம் பார்த்தவர்களுக்கு தேர்தலில் சீட்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. 
16 வயது பெண்ணை வல்லுறவு செய்த உங்கள் கட்சி எம்.எல்.ஏவை காப்பாற்ற உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முயற்சிக்கிறார். 
ஜம்மு கஷ்மீரில் 8 வயது பெண்குழந்தையை வல்லுறவு செய்து கொன்றவர்களை உங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள். 
இதுதான் நிலைமைகளய் இருக்க கர்நாடாகவில் ‘பெண்களை வல்லுறவு செய்வதை’ அரசியலாக்க வேண்டாம் என உங்கள் கட்சிக்காரார்கள் ஆர்ப்பாட்டமாக விளம்பரம் செய்து கொண்டு இருப்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்?

என்பதுதான் சித்தராமையாவின் மோடிக்கான கேள்விகள்.
இது அவரிடம் மட்டுமல்ல இந்தியாவை நேசிக்கும் ஒவ்வொரு இந்திய குடிமகனின் உள்ளத்தில் இருக்கும் கேள்விகள்தான்.
இப்படி கேள்விகளை எழுப்பினால் தான் தேசவிரோத இந்தியனாகிவிடுவோம் என்றே வாய் திறக்காமல் இருக்கிறார்கள்.
புதுச்சேரி சபாநாயகரை(காங்கிரஸ்) கண்டிக்கலாம்,தமிழ்நாடு சபாநாயகரை (அடிமைகள்) மதித்துதான் தீர்ப்புகளை வழங்க முடியும் .அதுவும் ஒரே தலைமை நீதிபதியால்.
இங்கு கோவங்கள்தான் கைது செய்யப்படுவார்கள்.எச்சை களும் சேகர்களும் கண்டுகொள்ளப்படாமாட்டார்கள்.அதுதானே ராமராஜ்ஜிய நியதி.
இவைகளுக்கெல்லாம் மோடியின் வாய் ஒன்றும் திறக்கப் போவதில்லை. 
அவரது மனசாட்சி படுத்த படுக்கையாகி விடும்.சம்பந்தமில்லா விடயங்களை உரத்தக்குரலில் மக்கள் எழுப்பும் கேள்விகள் விழாவண்ணம் மோடி பேசுவார்.தன்னை தரக்குறைவாக விமர்சிப்பதாக அழுவார்,நாடகமாடுவார்.மக்கள் கோபத்தை திசை திரும்புவார்.
ஆனால் இந்தக் கேள்விகள் அனைத்தும் #GoBackModi என விடாமல் மோடியை விரட்டப் போகின்றன.
பா.ஜ.க. தனது பொய்ப்பிரச்சாரத்துக்காக உருவாக்கி வைத்திருக்கும் போலியான ட்விட்டர், முகநூல் கணக்குகளின் எண்ணிக்கை பாகிஸ்தான் ஜனத்தொகையைக் காட்டிலும் அதிகும் என்று ஒரு செய்தி வந்திருக்கிறது.

அப்படியானால், பாகிஸ்தான் ஜனத்தொகை எவ்வளவு இருக்கும் என்பது தெரிந்தால்தான் அதன் பிரமாண்டம் புரியும். பாகிஸ்தானின் மக்கள்தொகை 20 கோடியே 77 லட்சத்திற்கும் அதிகம். இவ்வளவு போலிக் கணக்குகளை வைத்துக்கொண்டு பா.ஜ.க.வின் ஐ.டி.விங் எவ்வளவு பொய்ச் செய்திகளைப் பரப்ப முடியும் என்பதை நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது.

Modi

பா.ஜ.க.வுக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டு வலுப்பெற்றுவரும்போது அதை திசைதிருப்ப போலியான செய்திகளை பரப்புவதே இந்த போலிக்கணக்குகளின் வேலை.

ஆனால், அத்தனை முயற்சிகளையும் முறியடித்து, பா.ஜ.க. மற்றும் மோடியின் பொய்முகத்தை அம்பலப்படுத்துவதில் எதிர்க்கட்சிகளின் உண்மையான கணக்குகள் வெற்றிபெற்றிருக்கின்றன.

சமீபகாலமாக பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகளையும், பித்தலாட்டங்களையும் தொடர்ந்து பிரச்சாரம் செய்வதில் எதிர்க்கட்சியினரின் கணக்குகள் தீவிரம் காட்டுகின்றன. பா.ஜ.க.வால் உண்மைபோல பதியவைக்கப்பட்ட பொய்களை தோலுரிப்பதில் கவனமாக இருக்கின்றன.

இந்திய வரலாற்றில் இதுவரை கேள்விப்படா பல விஷயங்களை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பதிவாளர்கள் வரிசைப்படுத்துகிறார்கள். அந்த உண்மைகளை பா.ஜ.க.வால் மறுக்கவே முடியாது. சுடும் அந்த உண்மைகளை நாமும் இங்கே வரிசைப்படுத்துவோம்.

1.இந்திய வரலாற்றில் இதற்கு முன்பு எப்போதேனும், கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தந்தையை போலிஸ் நிலையத்திலேயே ஒரு எம்.எல்.ஏ. கொலை செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா?2.இந்திய வரலாற்றில் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதுண்டா? தேர்தல் ஆணையரான பிறகு அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டை மாநில அரசு திரும்பப்பெற்றதுண்டா?

3.இந்திய வரலாற்றில் பிரதமரின் கல்வித்தகுதியை எப்போதாவது ரகசியமாக மறைத்து வைத்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
4.இந்திய வரலாற்றில் தலைமை நீதிபதியே தனது வழக்கில் நீதிபதியாக இருந்ததை கேட்டிருக்கிறீர்களா?

5.இந்திய வரலாற்றில் எம்.எல்.ஏ. ஒருவரால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள், அந்த மாநில முதல்வரின் வீட்டுமுன் தற்கொலைக்கு முயன்றதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

6.இந்திய வரலாற்றில் ரூபாய் நோட்டு கிடைக்காமல் திண்டாடியதாக எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

7.இந்திய வரலாற்றில் தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன் பா.ஜ.க.வின் ஐ.டி.விங் தலைவர் தேதிகளை அறிவித்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

8.இந்திய வரலாற்றில் ரூபாய் நோட்டுக்களை பெறுவதற்காக நீண்ட வரிசையில் மக்களைக் காக்கவைத்த நிகழ்வை கேள்விப்பட்டதுண்டா?

Yogi

9.இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை வெளியிடுவதற்கு முன்பு, தீர்ப்பு நகலை சட்டத்துறை அமைச்சர் வாங்கிய நிகழ்வை கேள்விப்பட்டதுண்டா?

10.இந்திய வரலாற்றில் ராணுவ வீரர்கள் தங்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்று புகார் செய்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

11.இந்திய வரலாற்றில் கற்பழிப்புக் குற்றச்சாட்டுக்கு ஆளான குற்றவாளியை பாதுகாக்க மாநில அமைச்சர்களே ஊர்வலம் நடத்தியதை கேட்டிருக்கிறீர்களா?

12.இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிராக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூடி செய்தியாளர்களைச் சந்தித்து புகார் கூறியதை கேட்டிருக்கிறீர்களா?

13.இந்திய வரலாற்றில் சாலைகளில் கிடந்த பசு சாணத்தை திண்ணும்படி தாழ்த்தப்பட்ட மக்களை கட்டாயப்படுத்திய சம்பவத்தை கேள்விப்பட்டதுண்டா?

14.இந்திய வரலாற்றில் மதக்கலவரத்தில் ஈடுபட்ட ஒரு குற்றவாளியை பாதுகாக்க, நீதிமன்றக்கூண்டில் ஏறி, தேசியக் கட்சியின் தலைவர் ஒருவர் சாட்சியம் அளித்திருக்கிறாரா?

இந்த 14 கேள்விகள் இப்போது பரபரப்பாக உலா வருகின்றன. சமூக வலைத்தளங்களில் பரவும் இந்தக் கேள்விகள் அனைத்தும் பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்திய சரித்திரத்தில் இடம்பெற்றவை. அனைத்து நிகழ்வுகளிலும் பா.ஜ.க. அரசுக்கும், பாஜக ஆட்களுக்கும் தொடர்பு உண்டு.

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் இந்தக் கேள்விகள் நல்ல பலனைக் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

சித்தராமய்யாவின் தேர்தல் பிரச்சார உத்திகள் பா.ஜ.க.வை திணறடிக்கின்றன என்கிறார்கள்.


======================================================================================
ன்று,

மே-02.
 • இத்தாலி ஓவியர் லியானர்டோ டா வின்சி இறந்த தினம்(1519)

 • இந்திய திரைப்பட இயக்குனர் சத்யஜித் ரே  பிறந்த தினம்(1921)

 • உலகின் முதலாவது ஜெட் விமானம், லண்டன்-ஜோகன்னஸ்பர்க் இடையே பறந்தது(1952)
=======================================================================================

‘இந்தியத் திரையுலக மேதை’ எனப் புகழப்படும் சத்யஜித் ரே ஒரு ஓவியர், இயக்குனர், எழுத்தாளர், இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்ற பன்முகம் கொண்ட சகலகலா வல்லவராக விளங்கியவர். 
உலக அளவில் சிறந்த இயக்குனராக தன்னை வெளிபடுத்தி, உலக அளவில் சிறந்த படங்கள் மற்றும் திரைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் புகழ்பெற்ற “ஆஸ்கார் விருதினை” இந்தியாவிற்குப் பெற்றுத் தந்த முதல் மனிதர். இவருடைய படைப்புகளான ‘பதேர் பாஞ்சாலி’, ‘அபராஜிதோ’, ‘அபுர் சன்ஸார்’ போன்றவை உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களாக அமைந்தன. 
இந்தியாவின் உயரிய விருதுகளான “பாரத் ரத்னா”, “பத்ம ஸ்ரீ”, “பத்ம பூஷன்”, “பத்ம விபூஷன்” என மேலும் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். 
ஒரு ஓவியராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, திரைப்படத்துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து, மாபெரும் கலைஞனாக விளங்கிய சத்யஜித் ரேயின் வாழ்க்கை வரலாற்றை விரிவாகக் காண்போம்.
குழந்தைசத்யஜித்  ரே.


பிறப்பு: மே 2, 1921
கொல்கத்தா, மேற்கு வங்கம்
இறப்பு: ஏப்ரல் 23, 1992
சத்யஜித் ரே அவர்கள், 1921  ஆம் ஆண்டு மே மாதம் 2  ஆம் நாள், இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள கொல்கத்தாவில் சுகுமார் ராய் என்பவருக்கும், சுப்ரபாவுக்கும் மகனாக பிறந்தார். அவருடைய தாத்தாவான உபேந்திரா கிஷோர் ரே ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர், ஓவியர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார்.
சத்யஜித் ரேவிற்கு இரண்டு வயதே இருக்கும் பொழுது, அவருடைய தந்தையான சுகுமார் ராய் கல-அசர் என்னும் நோயினால் பாதிக்கப்பட்டு 1923 ஆம் ஆண்டு காலமானார். சிறுவயதிலேயே தன்னுடைய தந்தையை இழந்ததால், ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்ட சத்யஜித் ரே, தன் தாத்தாவால் உருவாக்கப்பட்ட பத்திரிக்கை நிருவவனத்தை விற்றுவிட்டு, தன் தாய்மாமன் வீட்டிற்குச் சென்று தங்கினர். கொல்கத்தாவிலுள்ள ஒரு அரசாங்கப் பள்ளியில் சேர்ந்து பள்ளிப்படிப்பைத் தொடங்கிய அவர், ப்ரெசிடென்சி கல்லூரியில் (கொல்கத்தா பல்கலைக்கழகம்) பொருளாதாரத் துறையில் பி.ஏ படிப்பை முடித்தார். 
தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தப்பிறகு, தாயின் அறிவுறுத்தலின் பேரில் “சாந்திநிகேதன் பல்கலைக்கழகத்தில்” சேர்ந்து ஓவியக்கலை பயின்றார். அங்கு வரைகலை வண்ணம் தீட்டுதல், சிலை செதுக்குதல், சிறிய வகையிலான ஓவியம் தீட்டுதல் என பல்வேறு கலைகளில் சிறப்பு பெற்று விளங்கினார்.
தன்னுடைய ஓவியப் படிப்பை முடித்த பிறகு, டி.ஜெ கெய்மர் என்னும் பிரிட்டிஷ் விளம்பரக் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். மேலும் ஒரு சில நிறுவனங்களில் வேலைபார்த்த ரேவுக்கு பல புத்தகங்களுக்கு அட்டைப்படம் வரைந்து கொடுக்கும் வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றது. 
ஜிம் கார்பட்டின் புத்தகங்கள் மற்றும் ஜவகர்லால் நேருவால் எழுதப்பட்ட “டிஸ்கவரி ஆஃப் இந்தியா”, பூபதி பூஷன் பாந்தோபாத்யாவின் பதேர் பாஞ்சாலி நாவல் போன்ற புகழ்பெற்ற புத்தகங்களுக்கு அட்டைப்படம் வரைந்து புகழ்பெற்றார். அதுமட்டுமல்லாமல், பதேர் பாஞ்சாலி கதை ரேவின் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் கொண்டுவந்தது. பிறகு, இயக்குனரான சித்தானந்த தாஸ் குப்தாவுடன் இணைந்து கொல்கத்தாவில் திரைப்பட சங்கமொன்றையும் துவங்கினார். 1949 ஆம் ஆண்டு பிஜோய தாஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பிறகு, இவர்களுக்கு சந்தீப் என்ற மகன் பிறந்தான்.
பிரஞ்சு மொழித் திரைப்பட இயக்குனர் ரெனுவார் தன்னுடைய “ரிவர்” என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக கொல்கத்தா வந்தபொழுது, அவருடைய படப்பிடிப்பை பார்க்கும் வாய்ப்பு ரேவுக்குக் கிடைத்தது மட்டுமல்லாமல், அவரோடு பழக்கமும் ஏற்பட்டது. நீண்ட காலமாக தன்னுடைய மனதில் இருந்த பதேர் பாஞ்சாலி கதையை அவரிடம் கூறி ஆலோசனையும் பெற்றார். 
பிறகு 1950 ஆம் ஆண்டு டி.ஜெ கெய்மர் அலுவலக வேலைப் பணிக்காக லண்டனுக்கு சென்றார். மூன்று மாத காலம் லண்டனில் பணிசெய்த ரே சுமார் எண்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை பார்த்தார். ‘விக்டோரியோ டி சிக்காவின் பைசைகிள் தீவ்ஸ்’ என்ற திரைப்படம் அவரை மிகவும் கவர்ந்தது. இறுதியாக, பணி முடிந்து இந்தியா திரும்பிய அவருக்கு தன்னுடைய மனதில் திரைக் காவியமாக சுழன்றுகொண்டிருந்த “பதேர் பாஞ்சாலியை” இயக்கத் துணிந்தார்.

பதேர் பாஞ்சாலி திரைப்படத்தை வணிக நோக்கமல்லா ஒரு கலைப்படைப்பாக உருவாக்க எண்ணி பலபேரிடம் உதவி கோரினார் ஆனால், கதை சரியில்லை என்று பல காரணங்களை கூறி அனைவரும் மறுத்ததால், தானே இயக்க முடிவுசெய்தார். தன்னுடைய மனைவியின் நகையை விற்று, படப்பிடிப்பை தொடங்கிய ரே அவர்கள் நிதிப் பற்றாக்குறையால் பெரிதும் சிரமப்பட்டார். மீண்டும் பலபேரிடம் நிதி உதவி கோரியும், பணம் கிடைக்காத சூழ்நிலையில் வங்காள முதலமைச்சராக இருந்த பி.சி ராயிடம் விளக்கமாக எடுத்துக் கூறி நிதியுதவி அளிக்க வேண்டினார். 
ஆனால், அதுவும் தோல்வியில் முடிந்தது. பிறகு தில்லிக்கு சென்ற அவர், நேருவிடம் தன்னுடைய நிலைமையை விளக்கிக் கூறினார். நேருவின் உதவியால் மேற்குவங்க  முதல்வர் ஜோதிபாசு  தலையிட்டால் நிதியுதவி அளிக்க வங்கதேச அரசு முன்வந்தது. 
இவ்வாறாகப் பல பிரச்சனைகளுக்கும், போராட்டங்களுக்கும் இடையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், 1955 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. சர்வதேச திரைப்பட விழாவில் மிகச்சிறந்த திரைப்படமாகவும் தேர்வுசெய்யப்பட்டது. டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கை மற்றும் உலகப் புகழ்பெற்ற சினிமா விமர்சகரான லிண்ட்சே ஆண்டர்சன் போன்றவர்கள் இத்திரைப்படத்தை உலகிலேயே தலைச்சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என மிகவும் புகழ்ந்துப் பாராட்டினர். 

உலகளவில் ஒரு சிறந்த இயக்குனராக “பதேர் பாஞ்சாலி” திரைப்படம் சத்யஜித் ரேவை வெளிக்காட்டியது.
தன்னுடைய “பதேர் பாஞ்சாலி” திரைப்படத்திற்கு பிறகு, அவர் மேற்கொண்ட எல்லாப் படைப்புகளும் உலக அளவில் அவருக்கு பேரையும், புகழையும் பெற்றுத்தந்தது. 1958 ஆம் ஆண்டு “அபராஜிதோ” மற்றும் 1959 ஆம் ஆண்டு “அபுர் சன்சார்” என்ற இரண்டு திரைப்படத்தை உருவாக்கினார். 
இதில் “அபராஜிதோ” திரைப்படம் வெனிஸ் நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் “தங்க சிங்கம்” விருது வென்றது மட்டுமல்லாமல், உலகத் தரமிக்க இயக்குனர் வரிசையில் சத்யஜித் ரேவும் ஒருவரானார். பிறகு 1959 ஆம் ஆண்டு வெளிவந்த அபு வரிசையில், மூன்றாவது படமான “அபுர்சன்சார்” திரைப்படம் விமர்சகர்களால் மிகச் சிறந்த படம் என புகழ்பெற்றது.
இவர் இயக்குனராக மட்டும் தன்னுடைய கவனத்தை செலுத்தாமல், தன்னுடைய தாத்தாவால் தொடங்கப்பட்ட “சந்தோஸ்” என்ற சிறுவருக்கான இதழையும் புதுப்பித்து சிறுகதைகள், ஓவியங்கள், உளவியல் கதைகள், தேவதை கதைகள், மாயாஜால கதைகள், அறிவியல் தொழில்நுட்பக் கலைகள் என சிறுவர்களை ஈர்க்கும் வண்ணம் தன்னுடைய படைப்புகளை வெளியிட்டார். 
பிராவோ ப்ரபோசர் ஷோங்கு,  ப்ஹடிக் சந்த், தி அட்வென்ச்சர் ஆப் பெலுடா, மிஸ்டரி ஆப் தி பிங்க் பியர்ல், பெலுடா லாஸ்ட் கேஸ், நைட் ஆப் த இண்டிகோ, ட்வென்டி ஸ்டோரிஸ் போன்ற கட்டுரைகள் புகழ் பெற்றவையாகும்.
1964 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சாருலதா’ திரைப்படம் அவருக்கு மிகப் பெரிய புகழை தேடித்தந்தது. இத்திரைப்படத்தில் சௌமித்ர சாட்டர்ஜீ, மாதபி முகர்ஜீ மற்றும் பலர் நடித்திருந்தனர். ரேயின் முந்தைய திரைப்படங்களில் இருந்து இத்திரைப்படம் சற்று வித்தியாசப்படுத்திக் காட்டியது. 
1964 ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான ‘வெள்ளிக் கரடி விருதினை’ வென்றது மட்டுமல்லாமல், 1965 ஆம் ஆண்டு ‘தேசிய திரைப்பட விருதான வெண்தாமரை விருதினையும்’ வென்றது.
ரே இயக்கிய படங்கள்.

‘பரஷ் பதர்’ (1958),  ‘தேவி’ (1960), ‘தீன் கன்யா’ (1961), ‘கஞ்சன்யங்கா’ (1962), ‘அபிஜன்’ (1962), ’மஹாநகர்’ (1963), ‘சாருலதா’ (1964), ‘மஹாபுருஷ்’ (1965), ‘காப்புருஷ்’ (1965),  ‘நாயக்’ (1966), ‘சிரியாக்கானா’ (1967), ‘கூப்பி கைன் பாகா பைன்’ (1968), ‘அரான்யர் டின் ராத்ரி’ (1970), ‘சிக்கிம்’ (1971), ‘சீமபத்தா’ (1971), ‘த இன்னார் ஐ’ (1972), ‘ப்ரதித்வந்தி’ (1972), ‘அஷானி சங்கத்’ (1973), ‘சோனார் கெல்லா’ (1974), ‘ஜன ஆரண்ய’ (1976), ‘பாலா’ (1976), ‘ஷத்ரன்ஜ் கெ கிலாடி’ (1977), ‘ஜொய் பாபா பெலுநாத்’ (1978), ‘காரே பைரே’ (1984), ‘சுகுமார் ராய்’ (1987), ‘ஞானஷத்ரு’ (1989), ‘ஷாக புரொஷகா’ (1990), ‘அகந்துக்’ (1991) போன்ற அனைத்து திரைப்படங்களும் அவரது தரத்திலிருந்து சற்றும் குறையாமல் அவருடைய ரசிகர்களை மிகவும் ஈர்த்தது.
உலக அளவில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் திரைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான “ஆஸ்கார்” விருதை” 1991 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற விழாவில், ஆஸ்கார் குழு சிறந்த இயக்குனருக்காக “ஆஸ்கார்” விருதை” சத்யஜித் ரேவுக்கு அறிவித்தது. 
உலகின் தலைசிறந்த விருதாக கருதப்படும் இந்த விருதை, நேரில் பெற விரும்பினார். ஆனால், உடல்நலக் குறைவால் ரே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதனால், இரண்டு பேர் கொண்ட ஆஸ்கார் குழு அவர் இருந்த மருத்துவமனைக்கு நேரில் வந்து ஆஸ்கார் விருதினை அவரிடம் ஒப்படைத்தது.
 • 1958 ஆம் ஆண்டு இந்திய அரசால் “பத்ம ஸ்ரீ” விருது வழங்கப்பட்டது.
 • 1956 ஆம் ஆண்டு பதேர் பாஞ்சாலி திரைப்படத்திற்காக ‘இரண்டு தேசிய விருது’ வழங்கப்பட்டது.
 • 1959 ஆம் ஆண்டு “ஜல்சாகர்” திரைப்படத்திற்காக ‘இரண்டு தேசிய விருதுகள்’ வழங்கப்பட்டது.
 • 1960 ஆம் ஆண்டு “அபுர் சன்ஸார்”, மற்றும் 1962ல் “தீன் கன்யா”, போன்ற திரைப்படத்திற்காக ‘தேசிய விருது’ வழங்கப்பட்டது.
 • 1963ஆம் ஆண்டு “அபிஜன்” திரைப்படத்திற்காக ‘இரண்டு தேசிய விருது’ வழங்கப்பட்டது.
 • 1965 ஆம் ஆண்டு இந்திய அரசால் “பத்ம பூஷன்” விருது வழங்கப்பட்டது.

 • 1965 ஆம் ஆண்டு “சாருலதா”, 1967ல் “நாயக்”, 1968ல் “சிரியாக்கானா” போன்ற திரைப்படங்களுக்காக ‘தேசிய விருது’ வழங்கப்பட்டது.
 • 1969 ஆம் ஆண்டு “கூப்பி கைன் பாகா பைன்” திரைப்படத்திற்காக ‘இரண்டு தேசிய விருது’ வழங்கப்பட்டது.
 • 1971 ஆம் ஆண்டு “ப்ரதித்வந்தி” திரைப்படத்திற்காக ‘நான்கு தேசிய விருதுகள்’ வழங்கப்பட்டது.
 • 1972 ஆம் ஆண்டு மற்றும் 1973 ஆம் ஆண்டு “அஷானி சங்கத்” திரைப்படத்திற்காக ‘இரண்டு தேசிய விருது’ வழங்கப்பட்டது.
 • 1975 ஆம் ஆண்டு “சோனார் கெல்லா” திரைப்படத்திற்காக ‘மூன்று தேசிய விருதுகள்’ வழங்கப்பட்டது.
 • 1976 ஆம் ஆண்டு இந்திய அரசால் “பத்ம விபூஷன்” விருது வழங்கப்பட்டது.
 • 1976 – ஆம் ஆண்டு “ஜன ஆரண்ய”, 1981ல் “ஹைரக் ராஜர் தேஷே”, 1982ல் சத்காதி, 1985ல் “காரே பைரே”, 1990ல் “ஞானஷத்ரு”, போன்ற திரைப்படங்களுக்காக ‘தேசிய விருது’ வழங்கப்பட்டது.
 • 1985 ஆம் ஆண்டு இந்திய அரசால் “தாதாசாகேப் பால்கே” விருது வழங்கப்பட்டது.
 • 1991 ஆம் ஆண்டு சிறந்த இயக்குனருக்காக “ஆஸ்கார் விருது”.
 • 1992 ஆம் ஆண்டு “அகந்துக்” திரைப்படத்திற்காக தேசிய விருதுகள் வழங்கப்பட்டது.
 • 1992 ஆம் ஆண்டு இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத் ரத்னா” விருது வழங்கப்பட்டது.
 • கலைத்துறைக்கு அவர் ஆற்றிய சேவையை பாராட்டி, லண்டன் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு ‘கௌரவ டாக்டர் பட்டத்தினை’ வழங்கியுள்ளது.
இதைத் தவிர ‘இரண்டு ஃபிலிம்பேர் விருதுகள்’, ‘மாநில அரசின் விருதுகள்’, ‘பல வெளிநாட்டு விருதுகள்’ என மேலும் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
இப்படி உலக அளவில் இந்திய நாட்டிற்கு பெருமையைத் தேடித்தந்த சத்யஜித் ரே அவர்கள், தன்னுடைய இறுதி காலத்தில் இருதய நோயால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி தன்னுடைய 70 வது வயதில் காலமானார்.
சுமார் முப்பது திரைப்படங்களுக்கு மேல் இயக்கிய ரே அவர்களின் எல்லா திரைப்படங்களும் உலக அரங்கில் பரிசும், பாராட்டும் பெற்றது மட்டுமல்லாமல், தனக்கென்று தனி முத்திரையை பெற்றதோடு, இந்தியத் திரைப்படங்களுக்கு கௌரவத்தையும் தேடித்தந்தது எனலாம். 
கலை சார்ந்த, மனித இயல்புகள் சார்ந்த அற்புதமான காட்சியமைப்புகளுடன் உருவான அவருடைய எல்லாப் படைப்புகளும் இன்றளவும் காலத்தை வென்று நிற்கின்றன. இந்தியத் திரைப்பட வரலாற்றில் மிக அற்புதமான திரைப்படங்களை இயக்கி, உலக சினிமாவின் மகத்தான அம்சங்களை இந்திய சினிமாவிற்கு கற்றுக் கொடுத்தார் ரே .