இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

சனி, 5 மே, 2018

நோபல் பரிசு யாருக்கும் இல்லை


75 ஆண்டுகளுக்கு பின் நிறுத்தம் ஏன் ?

உலகிலேயே மிகவும் மதிப்பு மிக்க விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு 2018-ம் ஆண்டு யாருக்கும் வழங்கப்படாது என்று பரிசு வழங்கும் தி சுவீடன் அகாடமி அறிவித்துள்ளது.பாலியல் புகார்கள், நிதி மோசடிகள் காரணமாக இந்த ஆண்டு விருது வழங்குவதும், தேர்வு செய்யப்படுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் விருது வழங்கும் அமைப்பு அறிவித்துள்ளது.கடந்த 75 ஆண்டுகளில் முதல் முறையாக நோபல் பரிசு விருதுகள் அறிவிக்கப்படாமலும், தேர்வு செய்யப்படாமலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து நோபல் பரிசு வழங்கும் சுவீடன் அகாடமியின் நிரந்தர செயலாளர் ஆன்டர்ஸ் ஆல்ஸன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:நோபல் பரிசு வழங்கும் சுவீடன் அகாடமியில் உள்ள உறுப்பினர்கள் பலரும் தற்போது நிலவும் சிக்கல், பிரச்சனைகள் குறித்து அறிந்திருப்பார்கள் என நம்புகிறேன். நீண்டகால நோக்கில் சில மாற்றங்களைச் சேர்க்க கோரிக்கை எழுந்துள்ளது.புதிய நோபல் பரிசு பெறுபவர்களை அறிவிக்கும் முன் மக்களிடம் இழந்த நம்பிக்கையை நாங்கள் மீட்டெடுப்பது மிகவும் அவசியமாகிறது. பொதுமக்களின், நோபல் அறக்கட்டளையின், எதிர்கால பரிசு பெறுபவர்கள், கடந்த காலத்தில் பரிசு பெற்றவர்கள் ஆகியோரின் மரியாதையை கேள்விக் குறியாக்கி இருக்கிறது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
18 பேர் கொண்ட நோபல் பரிசு தேர்வாளர்கள் குழுவில் இருக்கும் உறுப்பினரும், கவிஞருமான காத்தீரனா பிராஸ்டென்சனின் கணவர் ஜீன் கிளாட் அர்னால்ட் ஒரு புகைப்படக்கலைஞர். பிரெஞ்சு நாட்டவரான இவர் மீது 18 பாலியல் புகார்கள் எழுந்தன. மேலும், நோபல்பரிசு அறிவிக்கும் முன்பே அவர்களின் பெயர்களை வெளியிட்டதாகப் புகார்களும் எழுந்தன. இதுகுறித்து சுவீடன் நாளேடுகளில் கடந்த நவம்பர் மாதமே செய்தி வெளியானது.ஆனால், இதை அர்னால்ட் மறுத்தார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று காத்தரீனா பிராஸ்டென்சன் பதவி விலகக் கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், அவர் மறுக்கவே, எதிர்ப்புத் தெரிவித்து உறுப்பினர்கள் குழுவில் உள்ள 3 பேர் பதவியை ராஜினாமா செய்தனர்.கடந்த மாதம் 12-ம் தேதி இந்தப் புகார்கள் அனைத்தும் வெளியே பகிரங்கமானதால், கடும் எதிர்ப்புக் கிளம்பியது, தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் எழுந்தன. இதன் காரணமாக அகாடமியின் நிரந்தர செயலாளர் சாரா டேனியஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால், நோபல் பரிசு அகாடமிக்கு எதிராக சுவீடன் முழுக்க பெரும் போராட்டம் வெடித்தது.இதன் காரணமாக 2018-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் 2019-ம் ஆண்டுடன் சேர்த்து நோபல் பரிசு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரியப் பெருமை
நோபல் பரிசை உருவாக்கிய ஆல்பர்ட் நோபல் மரணத்துக்குப் பின்பு அவரின் பெயரில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ‘மனித இனத்தின் முன்னேற்றத்துக்குப் பங்களித்தவர்களுக்கும் இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் பரிசு வழங்கயப்படுகிறது.இதற்காக நோபல் தனது சொத்துக்களைத் தானமாக அளித்தார். கடந்த 1901 முதல் இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.1905-ம் ஆண்டு சுவீடனில் இருந்து நார்வே பிரிந்தது. அதனால், அமைதிக்கான பரிசை மட்டும் நார்வே வழங்க ஏற்பாடானது. 1968-ல் சுவீடன் மத்திய வங்கி ஒரு பெரும் தொகையை நோபல் அறக்கட்டளைக்கு அளித்து, நோபலின் பெயரில் பொருளாதார அறிவியலுக்கான பரிசை ஏற்படுத்தியது.ஒவ்வொரு ஆண்டும் 200 பேர் இந்த நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்படுகின்றனர். அவர்களின் பெயர்கள் அனைத்தும் 18 பேர் கொண்ட நோபல் பரிசுக்குழுவால் ஒவ்வொரு பிப்ரவரி மாதமும் ஆலோசிக்கப்பட்டு மே மாதம் பரிசுகள் அறிவிக்கப்படும். அந்தவகையில் இந்த மாதம் பரிசுகள் அறிவிக்கப்பட வேண்டும். ஆனால், பாலியல் சர்ச்சை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது.
இதற்கு முன் நிறுத்திவைக்கப்பட்டதா?
நோபல் பரிசு வழங்கத் தொடங்கியதில் இருந்து பாலியல், நிதிமோசடி ஆகிய காரணங்களால் இதுவரை நிறுத்தப்பட்டதில்லை. ஆனால், முதலாம், 2-ம் உலகப்போரின் போது பரிசுகள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 1914, 1918, 1935, 1940, 1941, 1942 மற்றும் 1943 ஆகிய ஆண்டுகளில் நோபல் பரிசு வழங்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
=============================================================================
மூ
லதனத்தைத் திரட்டு.. மூலதனத்தைத் திரட்டு.. மோசேவும் தீர்க்கதரிசிகளும் இதுதான். மூலதனத் திரட்டலுக்காகவே மூலதனத் திரட்டல்; உற்பத்திக்காகவே உற்பத்தி” - இவை மார்க்ஸின் ‘மூலதனம்’ நூலின் முதல் பாகத்திலுள்ள புகழ்பெற்ற வரிகள். யூத தீர்க்கதரிசி மோசே மூலம் கர்த்தர் பிறப்பித்த கட்டளைகளுக்கு யூதர்கள் பணிந்து போக வேண்டும் என்பதுபோல, சந்தையின் கட்டளைகளுக்கு முதலாளிகள் பணிந்துபோக வேண்டியுள்ளது. அவர்கள் முதலாளிய உற்பத்தியை நீடித்துவைத்திருக்க வேண்டுமானால், தொழிலாளிகளை இடைவிடாது சுரண்டி, அவர்கள் உருவாக்கும் உபரி-மதிப்பை மூலதனமாக்க வேண்டும்; இந்த மூலதனத்தைத் தொடர்ந்து பெருக்கிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் சந்தையில் நீடித்திருக்க முடியும்.
விவசாயிகளின் உடைமைகளைப் பறிப்பதையும் காலனி நாடுகளின் செல்வங்களைக் கொள்ளையடிப்பதையும் தனது ஆதிமூலதனத் திரட்டலுக்கான முதன்மையான வழிமுறைகளாகக் கொண்டிருந்த மேலைநாட்டு முதலாளி வர்க்கங்களுக்கு அந்த நாடுகளின் அரசுகளும் துணையாகவும் பாதுகாப்பாகவும் அமைந்தன. அத்தகைய ‘ஆதி மூலதனத் திரட்டல்’, அதே பாதுகாப்புடன் இன்று வேறு நாடுகளிலும் தொடர்வதைப் பார்க்கிறோம். வளர்ச்சியடைந்த, வளருகின்ற நாடுகளின் முதலாளி வர்க்கங்கள் வளர்முக அல்லது குறை வளர்ச்சி நாடுகளின் நிலங்களை, கனிம வளங்களை, இயற்கைச் செல்வங்களைக் கொள்ளையடிப்பதையும் இந்தியாவில் கடற்கரைப் பகுதிகள், கனிமங்கள், மூலவளங்கள், தரிசு நிலங்கள், வேளாண் நிலங்கள், நன்னீர் முதலியன ஒடிஷா, சத்தீஸ்கர், குஜராத், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரம், தமிழ்நாடு முதலிய மாநிலங்களில் கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு அரசு உதவியுடன் தாரைவார்த்துத் தரப்படுவதை யும் பார்த்துவருகிறோம்.
இந்த ‘ஒளிரும் பொருளாதார வளர்ச்சி’ பற்றிய உண்மைகளை 2017 ஜூலையில் பிரெஞ்சுப் பொருளியல் அறிஞர்கள் லூக்காஸ் சான்செவும் தாமஸ் பிக்கெட்டியும் (இவர்கள் மார்க்சியவாதிகள் அல்லர்) வெளியிட்ட அறிக்கையும் கடந்த ஜனவரியில் ஆக்ஸ்ஃபாம் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை யும் கூறுகின்றன: 2017-ல் இந்தியாவில் உருவாக்கப்பட்ட மொத்த வருமானத்தில் 73%-ஐ மக்கள்தொகையில் ஒரே ஒரு சதவீதமாக உள்ள பெருஞ்செல்வர்கள் உடைமையாகக் கொண்டிருந்தனர். 2016-ல் இந்த ஒரு விழுக்காட்டினர் நமது நாட்டின் செல்வத்தில் 58%-ஐக் கொண்டிருந்தனர். ஒரே ஆண்டில் இதில் ரூ.20.9 லட்சம் கோடி ( 2017-18ம் ஆண்டுக் கான மத்திய அரசாங்கத்தின் வரவு - செலவுத் திட்டத் தொகைக்கு ஈடானது) அதிகரிப்பு ஏற்பட்டது. 67 கோடி ஏழை இந்தியர்களின் வருமானம் 2017-ல் 1%தான் அதிகரித்தது.
இயற்கைக்கும் மானுடப் பிறவிகளுக்கும் பெரும் கேடுகளை உருவாக்கும் முதலாளியப் பொருளுற்பத்தியின் விளைவுகளைப் பற்றி மார்க்ஸ் கூறுகிறார்:
“மனிதர்கள் மீண்டும் குகைகளில் வாழச் செல்கின்றனர். ஆனால், இக்குகை இப்போது நாகரிகத்தால் சுவாசித்து வெளியேற்றப்பட்ட நாசகரமான நச்சுக் காற்றால் மாசுபட்டுள்ளது. அவர்கள் அங்கு இன்றோ, நாளையோ என்ற நிச்சயமின்மையுடன்தான் தங்கியிருக்க முடியும். வெளிச்சத்தில் வாழ்வதை எஸ்கலஸின் நாடகத் தலைவனான புரோமதி யஸ் மாபெரும் பேறுகளில் ஒன்றாகக் கருதினான். அதனைக் கொண்டே காட்டுமிராண்டியை மானுடப் பிறவி யாக மாற்றினான். ஆனால் (வெளிச்சம்) உழைப்பாளியைப் பொறுத்தவரை கிட்டாத ஒன்றாகிவிட்டது. ஒளி, காற்று முதலிய மிகமிகச் சாதாரணமான விலங்குக்கும் தேவையான தூய பொருட்கள் மனிதர்களுக்குரிய தேவை யாக இப்போது இருப்பதில்லை. அழுக்கு - மனிதர்களின் இந்தச் சகதி நீரும் அழுகலும் - நாகரிகத்தின் சாக்கடை நீர் (இதை அதன் நேரடியான பொருளில்தான் கூறுகிறோம்) - அவர்களுக்குரிய வாழ்வின் அடிப்படைக் கூறுகளாக உருவாகியுள்ளன.”
முதலாளிய சமுதாயத்தில் நிகழும் உற்பத்தியையும் நுகர்வையும் பற்றி மார்க்ஸ் எழுதுகிறார்: “பண்படுத்தப்படாத தேவையை மானுடத் தேவையாக மாற்றுவது என்பது (முதலாளியத்)தனிச் சொத்துடைமை அறியாத ஒன்று. கொடுங்கோலரசனைக் கேடுகெட்ட முறையில் நேருக்கு நேர் புகழ்பாடியோ, இன்பக் கேளிக்கைக்கான அவனது மங்கிச் சோர்ந்த ஆற்றலைத் தூண்டிவிடுவதற்காகக் கீழ்த் தரமான வழிமுறையைப் பயன்படுத்தியோ தனக்குச் சலுகை தேடிக்கொள்கிற நபும்சகனைக் காட்டிலும் கேவல மான முகஸ்துதியையும் கீழ்த்தரமான வழிமுறைகளையும் தொழிற்துறை முதலாளி என்னும் நபும்சகன் பயன்படுத்தித் தனக்குச் சில செப்புக் காசுகளைக் கைப்பற்றிக்கொள்கிறான். கிறிஸ்தவ நெறிக்கிணங்கத் தன்னால் நேசிக்கப்படும் அண்டை அயலாரின் பைகளில் உள்ள தங்கப் பறவைகளை மந்திரம் போட்டு வரவழைக்கிறான். மற்றவனின் கீழ்த்தரமான ஆசைகளைப் பூர்த்திசெய்யும் சேவை புரிகிறான். மற்றவனுக்கும் அவனது தேவைகளுக்கும் இடையே வேசித் தரகன் போல் நிற்கிறான். மற்றவனிடத்தில் உள்ள நசிவு இச்சைகளைத் தூண்டிவிடுகிறான். மற்றவனது பலவீனங் கள் ஒவ்வொன்றுக்காகவும் காத்திருக்கிறான். ஒவ்வொரு (முதலாளிய) உற்பத்திப் பொருளும் மற்றவனது வாழ்க்கையையே தந்திரமாகக் கைப்பற்றிவிடுவதற்கான தூண்டிலாகும். (மனிதர்களின்) உண்மையான, உள்ளுறைந்த தேவை ஒவ்வொன்றும் பூச்சியைக் கோந்துப் புட்டியில் சிக்கவைப்பது போன்ற பலவீனமாகிவிடுகிறது.”
மார்க்ஸ் கூறுகிறார்: “நுகர்வு, மானுடச் செயலாகவே இருக்க வேண்டும். நமது உணர்வுகள், உடல் தேவைகள், நமது அழகியல் உணர்வுகள் ஆகிய அனைத்தும் உள்ளடங் கிய செயலாகவே இருக்க வேண்டும். திட்டவட்டமான, உணர்வுபூர்வமான மதிப்பீடு வழங்குகிற மனிதர்கள் என்ற முறையில் நாம் ஈடுபடுகிற செயலாக இருக்க வேண்டும். நுகர்வு, அர்த்தமுள்ள மானுடவகைப்பட்ட, ஆக்கபூர்வமான அனுபவமாக இருக்க வேண்டும். நமது (முதலாளிய) கலாச்சாரத்திலோ, நுகர்வு என்பது செயற்கையாகத் தூண்டிவிடப்பட்ட அதீதக் கற்பனைகளை நனவாக்குவதாகவே உள்ளது.” நுகர்வு, ஓர் இலக்குக்கான வழிமுறையாக இருப்பதற்குப் பதிலாக அது தன்னளவிலேயே ஓர் இலக்காகிவிடுகிறது. முதலாளிய உற்பத்தியின் ஒட்டுமொத்தமான முழக்கம்: ‘வாங்கு, வாங்கிக்கொண்டே இரு. எதையாவது வாங்கு, வாங்காமல் வாழாதே’.
பழங்குடி மக்கள், ஏதோவொரு மரம், கல் போன்ற பொருளுக்குத் தெய்வீகத்தன்மை இருப்பதாகக் கருதுவதை மானுடவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மார்க்ஸ் இந்தக் கருத்தை, சரக்கு ஏதோ தெய்வீகத்தன்மையை, மாயாஜாலத் தன்மையைப் பெற்றிருப்பதைப் போலத் தோற்றமளிப்பதை விளக்குவதற்குப் பயன்படுத்துகிறார்: ஒரு சரக்கு அதன் பயன் - மதிப்போடு பிணைக்கப்பட்டிருக்கும் வரை அது சர்வசாதாரணமான பொருளாக உள்ளது. எடுத்துக்காட்டாக மரத் துண்டு, மானுட உழைப்பால் மேஜையாக மாற்றப்படும்போது, அதன் பயன் - மதிப்பு (எழுதுவதற்கோ, சாப்பிடுவதற்கோ பயன்படுத்தப்படக்கூடிய, புலன்களுக்குப் பிடிபடு கிற பொருள்) என்பது தெளிவாகப் புலப்படுகிறது. ஆனால், அதே மேஜை எப்போது (விற்பனைச்) சரக்காக மாறுகிறதோ, அதாவது எப்போது அது, சரக்குகளை ஒன்றோடொன்று பரிவர்த்தனை செய்வதற்கான பொதுவான ஊடகமாக உள்ள பணத்துடன் (அதை வாங்கவோ விற்பதற்கோ தேவையான பணத்துடன்) பிணைக்கப்படுகிறதோ, அப்போது அது அதை உருவாக்கிய உழைப்பாளியின் கைகளிலிருந்து, மானுட உழைப்பின் விளைபொருள் என்ற உண்மையிலிருந்து துண்டிக்கப்படுகிறது. அந்த மேஜையின் மதிப்பு, அதற்குள்ளேயே நிரந்தரமாக இருக்கக்கூடிய ஒன்று என்று கருது கிறோமேயன்றி, அதை உருவாக்குவதற்குச் செலவிடப்பட்ட உண்மையான மானுட உழைப்பின் அளவுதான் அந்த மேஜையின் மதிப்பு ஆகும் என்று பார்ப்பதில்லை. மனித உழைப்பின் பண்புகள் சரக்குகளின் பண்புகளாக, இந்த சரக்குகள் சமூகரீதியாகவும் இயல்பாகவும் பெற்றிருக்கின்ற தன்மைகளாகக் காட்சியளிக்கின்றன.
மனிதர்களுக்கு இடையிலான சமூக உறவுகள் பொருட் களுக்கு இடையிலான உறவுகள் எனும் விசித்திர வடிவத்தை மேற்கொள்கின்றன. இதற்குக் காரணம், சரக்குகளின் உண்மையான உற்பத்தியாளர்கள் பெரிதும் கண் களுக்குப் புலப்படாதவர்களாகவே இருக்கிறார்கள். பரிவர்த்தனைச் செயல்பாட்டால் சரக்குகளுக்கு இடையே ஏற்படுத்தப்படும் உறவுகளின் மூலமாகவே நாம் உழைப்பாளிகளின் உற்பத்திப் பொருட்களை, சேவைகளை அணுகுகிறோம். அவர்களது உழைப்பிலிருந்து லாபத்தைக் கறக்கும் நிறுவனங்களுடன் நாம் கொள்ளும் பணப் பரிவர்த்தனை மூலமாகவே அந்த உழைப்பாளிகள் தங்கள் உழைப்பால் உற்பத்திசெய்த பொருட்களைப் பெறுகிறோம். பணப் பரிவர்த்தனை மூலமாக மட்டுமே நாம் இந்தப் பொருட்களுடன் உறவு கொள்வதால், சரக்குகளுக்குள் பொதிந்துள்ள ரகசியத்தை, மர்மத்தை, அதாவது மானுட உழைப்பை மறந்துவிடு கிறோம். உலகிலுள்ள சரக்குகள் எல்லாவற்றையும் ஒன்றோடொன்று பரிவர்த்தனை செய்வதற்கான பொது அளவையாகப் பயன்படுத்தப்படும் பணமும் இப்போது தெய்வீகத்தன்மை பெற்றுவிடுகிறது (தங்கமும் வெள்ளியும் ‘மூல விக்கிரகங்கள்’; உலோக நாணயங்களும் காகிதப் பணமும் ‘உற்சவ மூர்த்திகள்’.) சரக்குகளின் புழக்கத்துக்கான ஊடகம் தான் பணம்; ஆனால் நாம் வாழும் தலைகீழ் உலகத்தில், சரக்குகளின் புழக்கத்தை உருவாக்குவதே பணத்தின் நடமாட்டம்தான் என்ற தோற்றம் உருவாகிறது. மானுட உழைப்பின் நேரடி அவதாரம் என்று மார்க்ஸால் வர்ணிக்கப்பட்ட பணம், மானுடர்களை ஆளுகை செய்கிற, அவர்களை அச்சுறுத்துகிற அல்லது ‘கடாட்சம்’ தருகின்ற கடவுளாகிறது.
வாங்குவதற்குப் பணம் தேவையாதலால், பணம் அனைத்து வல்லமையும் பெற்ற சக்தியாகிறது. மார்க்ஸ் கூறுகிறார் : “பொருட்களைப் பெறுவதற்கான மானுட முறை, நான் எதைப் பெறுகிறேனோ அதற்குப் பொருத்தமான பண்புவகை முயற்சியைச் செய்வதாகும். உணவும் உடையும் பெறுவதற்கான அடிப்படை, நான் உயிருள்ளவனாக இருக்கிறேன் என்பதும், புத்தகங்களையும் ஓவியங்களையும் பெறுவதற்கான அடிப்படை, நான் அவற்றைப் புரிந்துகொள் கிறேன், அவற்றைப் பயன்படுத்தும் ஆற்றல் உள்ளவனாக இருக்கிறேன் என்பதுமாகும்.” ஆனால், முதலாளியச் சமுதாயத்தில் பொதுவாக பணத்துக்குள்ள ஆற்றலின் அளவே தனிமனிதர்களின் ஆற்றலின் அளவாக அமைகின்றது: “நான் அவலட்சணமானவன். ஆனால், என்னால் பெண்களில் மிக அழகானவளை விலைக்கு வாங்கிக்கொள்ள முடியும். எனவே, நான் அவலட்சணமானவனல்லன். ஏனெனில், அவலட்சணம் விளைவிக்கும் அருவருப்பைப் பணம் நீக்கிவிடுகின்றது. நான்… கால்கள் அற்றவன். ஆனால், பணம் எனக்கு இருபத்துநான்கு பாதங்களை வழங்குகிறது. எனவே நான் பாதங்கள் அற்றவனல்லன். நான் மோசமானவன், நேர்மையற்றவன், பழிபாவங்களுக்கு அஞ்சாதவன், மடையன். ஆனால் பணம் மரியாதைக்குரிய ஒன்று. எனவே, அதை உடையவனும் மரியாதைக்கு உரியவனாகின்றான்.”
மார்க்ஸின் அவதானிப்புகள் யாவும் உலகிலுள்ள எல்லா முதலாளிய நாடுகளுக்கும் பொருந்தும். மனித உழைப்புக்குரிய அதே மதிப்பை இயற்கைக்கும் வழங்கிவந்த மார்க்ஸ், தமது கடைசிக் கால எழுத்துகளில், அவர் தொடக்கத்தில் நம்பிக்கை வைத்திருந்த முதலாளி


 நவீனத் தொழில்நுட்பங்கள் மீது சந்தேகம் எழுப்பத் தொடங்கினார்.
இயற்கையை மானுட சமுதாயத்துக்குப் பயன்படுத்துவதற்கு வரம்புகள் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் பருவநிலை மாற்றங்களைப் பற்றி அறிந்திருந்தார். ஒரு தலைமுறையைச் சேர்ந்த மனிதர்கள், தாங்கள் எதிர்கொண்டு தங்களுக்காகப் பயன் படுத்தும் இயற்கையை மேலும் வளப்படுத்தி, அடுத்த தலைமுறையினருக்கு ஒப்படைக்க வேண்டும் என்று ‘மூலதனம்’ நூலின் மூன்றாம் பாகத்தில் எழுதினார். நமக்குள்ள ஒரே வாழிடமாக உள்ள இந்த புவிக் கோளம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அழிவின் விளிம்பை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், சமுதாயத்தை எப்படி மறுவார்ப்பு செய்ய வேண்டும் என்பதுதான் பிரச்சினை. ஜெர்மானியப் புரட்சியாளர் ரோஸா லுக்ஸம்பர்க் நூறாண்டுகளுக்கு முன் எழுப்பிய கேள்விக்கு இன்று நாம் பதில் கண்டாக வேண்டியுள்ளது : ‘சோஷலிஸமா, காட்டுமிராண்டி நிலையா?’
                                                                                                                                                    - எஸ்.வி.ராஜதுரை,